ஸ்லம்டாக் மில்லியனர் (Slumdog Millionaire)


யூனியன் சிட்டி செஞ்சுரி தியேட்டரில் பத்து டாலர் கொடுத்து பார்த்த படம். யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்று எல்லாரையும் அழைக்கிறேன்.

நேற்று டிவியில் ஒன்றும் இல்லாமல் கோல்டன் க்ளோப் விருதுகளை பார்த்தோம். திடீரென்று ரஹ்மானுக்கு விருது. ஷா ருக் கான் ஒரு நிமிஷம் வந்து பேசினார். அனில் கபூர் பின்னால் தெரிகிறார். சிறந்த படம், இயக்குனர், திரைக்கதை, இசை விருதுகளை தட்டி சென்றது. (தெரியாதவர்களுக்காக: அமேரிக்காவில் கோல்டன் க்ளோப் ஆஸ்காருக்கு முன்னோடியாக கருதப்படுகிறது. இங்கு விருது பெறும் படங்கள் பலவும் ஆஸ்காரையும் தட்டி செல்லவது வழக்கம்). நம்மூர்க்காராருக்கு விருது கிடைக்கிறதே என்று ஒரு குஷி. வியாபார ரீதியான வெற்றி ஆஸ்காரில் உதவும், அதனால் எல்லாரும் பாருங்கள்!

2008இல், டான்னி பாயில் இயக்கி, தேவ் படேல், அனில் கபூர், இர்ஃபான் கான், பல தெரியாத முகங்கள் நடித்து, ரஹ்மான் இசையில் வந்த படம். டான்னி பாயில் இயக்கிய பிற படங்கள் என்ன என்று தேட வேண்டும்.

கொஞ்சம் நம்ப முடியாத கதைதான். ஹூ வாண்ட்ஸ் டு பீ எ மில்லியனர் மாதிரி ஒரு நிகழ்ச்சியில் பங்கு பெறும் ஒரு இளைஞனுக்கு எல்லா கேள்விகளுக்கும் பதில் தெரிகிறது – எப்படி தெரிகிறது என்பதுதான் கதை. இதற்கு மேல் கதையை விளக்கினால் சுவாரசியம் போய்விடும்.

திரைக்கதை அருமையாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. எல்லாருமே நன்றாக நடித்திருக்கிறார்கள், குறிப்பாக அந்த சிறுவர்கள், அனில் கபூர். ரஹ்மானின் இசை எனக்கு ஒன்றும் பிரமாதமாக தெரியவில்லை – தமிழில் பாட்டு கேட்டு கேட்டு பழகி விட்டேன், பின்னணி இசை எல்லாம் எனக்கு கேட்பதே இல்லை.

சில காட்சிகள் பிரமாதம். திடீரென்று நீல வண்ண ராமனாக ஒரு சிறுவன் தோன்றுவது; ஜாக் ஹாப்ஸ் என்ற விடையை தேவ் படேல் தேர்ந்தெடுப்பது; சத்ய மேவ ஜெயதே கேள்விக்கு தேவ் பார்ப்பவர்களின் உதவியை நாடுவது; கால் சென்டரில் ஸ்காட்லாந்து பற்றி உளறுவது, இவை எல்லாமே அருமை.

அநாதை விடுதி நடத்துபவராக வருபவர் உண்மையிலேயே வயிற்றில் புளியை கரைக்கிறார்.

இது ஹிந்தியில் இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். சேரி சிறுவர்கள் ஆங்கிலத்தில் பேசாவிட்டால் அமேரிக்காவில் ஓட்ட முடியாதுதான், ஆனால் எனக்கு அது கொஞ்சம் நிரடியது.

நல்ல படம், 10க்கு 7.5 மார்க், B grade.

இறக்கி வைக்கப்பட்ட ஸ்ரீதர்


ஸ்ரீதரை பற்றி எழுத எனக்கு இனி எதுவும் மிச்சமில்லை. எப்போதாவது சுமைதாங்கி பார்த்தால் அதை பற்றி எழுதுகிறேன்.