நாகேஷ் பற்றி கமல்


விகடனுக்கு நன்றி! 

நாகேஷ்…

தமிழ் சினிமாவின் நகைச்சுவை ஜாம்பவான் களில் முக்கியமான பெயர்!எல்லோரையும் திகட்டத் திகட்டச் சிரிக்கவைத்த நாகேஷ், ஜனவரி 31-ம் தேதி மாரடைப்பால் காலமாகி, அத்தனை பேரையும் கண்ணீர் சிந்தவைத்துவிட்டார்.

ஒரு காமெடியன் ஹீரோவாகி, ‘சர்வர் சுந்தரம்’, ‘எதிர்நீச்சல்’, ‘நீர்க்குமிழி’, ‘அனுபவி ராஜா அனுபவி’ என்று தொடர்ந்து ஜெயித்த முதல் நடிகர் நாகேஷ்!

தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற ஹீரோக்களுக்காகப் படப்பிடிப்பில் நெடுநேரம் காத்திருந்த நகைச்சுவை நடிகர்களுக்கிடையே… அந்த மாபெரும் ஜாம்பவான்களே நாகேஷின் நேரத்துக்காகக் காத்திருந்த சந்தர்ப்பங்களும் உண்டு.

கடந்த சில நாட்களாக உடல் நலமில்லாமல் அடையாறில் உள்ள தன்னுடைய கடைசிமகன்ராஜேஷ் பாபு வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார் நாகேஷ். மறைவுச் செய்தி கேட்டு, அவருடைய உடலுக்கு ரஜினி யுடன் அஞ்சலி செலுத்த வந்த கமல்… நெடுநேரம் நாகேஷின் வீட்டிலேயே சோகம் அப்பிய முகத்தோடு காணப்பட்டார்.

கமலிடம் சிறிதுநேரம் பேசியபோது நாகேஷ் பற்றிய தன் நினைவலைகளைப் பகிர்ந்துகொண்டார்.

”நடிப்பைப் பொறுத்தவரை என்னுடைய ஆதர்சபுருஷர்களின் பட்டியலில் சிவாஜி, நாகேஷ் இருவரும் முக்கியமானவர்கள். சிவாஜியின் இறப்பு எனக்குள் எந்தளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதோ… அதே போல், நாகேஷின் மரணமும் என்னை நிலைகுலைய வைத்திருக்கிறது. நாகேஷை ‘வாடா… போடா’ என்று வாஞ்சையாக அழைக்கும் உரிமை படைத்த ஒரே நபர் கவிஞர் வாலி. அவரிடம் கேட்டால், ‘நாகேஷ் நினைத்தால் என்னைப் போல் பாடலை எளிதாக எழுதிவிடுவான்’ என்கிறார். நாகேஷை நாயகனாக்கி அழகுபார்த்த என் குருநாதர் பாலசந்தரிடம் பேசினால், ‘திரைப்படத்தை இயக்குவது நாகேஷ§க்கு கம்பசூத்திரமல்ல’ என்று புகழ்கிறார். பல்துறையில் உள்ள வித்தகர்களாலும் நாகேஷின் புத்திசாலித்தனம் பிரமிக்கப்படுகிறது.

பொதுவாக என்னுடைய அலுவலகத்தில் யாருடைய போட்டோவையும் மாட்டி வைக்கும் பழக்கமில்லை. குறிப்பாக, நான் யாருடனாவது சேர்ந்திருக்கும் படங்கள் இருப்பதில்லை, நாகேஷ§டன் நான் சேர்ந்து நிற்கும் ஒரேயரு புகைப்படத்தைத் தவிர! அந்த போட்டோவில் நாகேஷ் என்கிற மகாகலைஞனை அணுஅணுவாக ரசித்து சிலாகித்து நிற்கும் ரசிகன் மனோபாவத்தோடு தான் நான் நிற்கிறேன். திரையுலகில் நாகேஷின் நடிப்பை ரசிப்பவர்கள் அனை வரும் ஒருங்கிணைந்து ‘ஃபேன் கிளப்’ ஒன்று ஆரம்பித்திருந்தால், அதற்கு அன்று முதல் இன்று வரை நான்தான் தலைவராக இருந்திருப்பேன். இதில் மாற்றுக் கருத்து இல்லை.

நகைச்சுவை என்பது நாகேஷின் ரத்தத்தில் கலந்தது. ஒரு படப்பிடிப்பின் இடைவேளை யில், மதிய உணவின்போது சிக்கன் லெக் பீஸை தட்டில் வேகமாகத் தட்டினேன். அதைப் பார்த்த நாகேஷ், ‘ஏம்ப்பா, அதான் ஏற்கெனவே கோழி செத்துடுச்சே… அதையேன் மறுபடியும் மறுபடியும் அடிச்சு சாகடிக்கிறே…’ என்று சொல்ல… யூனிட்டே கொல்லென்று சிரித்தது. அது மாதிரி இன்னொரு முறை பாழடைந்த வீடு ஒன்றில் ஷ¨ட்டிங். மோட்டு வளையத்தில் ஒட்டடை அதிகமாக இருந்தது. அதைப் பார்த்த ஒருவர், ‘அந்த ஒட்டடைய அடிங்கப்பா…’ என்று சொல்ல… அங்கிருந்த நாகேஷ், ‘ஒட்டடைய அடிச்சா… பாவம் அது விழுந்துடும்…’ என்றார். ‘அடிச்சா கீழ விழத்தானே செய் யும்’ என்று அந்த நபர் பதிலுரைக்க… ‘ஒட்டடைய சொல்லலை. வீடே விழுந் துடும்… ஏன்னா, வீட்டுல ஒட்டடை ஒட்டிக்கிட்டு இல்லை. வீடே ஒட்டடை பலத் துலதான் விழாம இருக்கு…’ என்று துளிகூட சிரிக்காமல் சொல்லி, அந்த இடத்தையே கலகலப்பாக்கினார்.

அடிக்கடி நகைச்சுவைக் கதை சொல்வதிலும் அவர் வல்லவர். ‘ஆறு வயதுச் சிறு வனுடைய அப்பா இறந்து விடுகிறார். அவருடைய திவசத்தின்போது மகன் சோற்றைப் பிண்டமாகப் பிடித்து வைக்கிறான். அதைப் பார்த்த அவன் அம்மா ‘ஐயோ, என்மகன் என்ன அழகா பிண்டத்தைப் பிடிச்சு வைக்கிறான். இதைப் பார்க்கறதுக்கு அவங்க அப்பா இல்லியே…’ என்று புலம்பினார்’ என்று சொன்னார் நாகேஷ். நான் தயாரித்த ‘மகளிர் மட்டும்’ படத்தில் ‘உயிரோட்டம்’ மிகுந்த பிணமாக பிரமாதமாக நடித்திருப்பார் நாகேஷ். இதோ, இங்கே கண்ணாடிப் பெட்டிக்குள் பிரேதமாகக் கிடத்தப்பட்டிருக்கிறார். இதுவும் படப்பிடிப்பில் நடக்கும் ஒரு காட்சியாக இருக்கக்கூடாதா என்று மனசு அடித்துக்கொள்கிறது…” என்றார் கலங்கிய விழிகளுடன் கமல்.

”ஆடி அடங்கும் வாழ்க்கையடா!” என்று பாடிய நாகேஷை, கண்ணாடிப் பெட்டிக்குள் நெருங்கிப் பார்த்தோம். கமல் உணர்வு நமக்குள்ளும் அப்படியே வியாபித்தது.

பொதுவாக சினிமா நடிகர்கள் சொந்த வாழ்க்கையில் சரிவை சந்தித்தால், அதிலிருந்து மீள்வது அபூர்வம். உதாரணத்துக்கு, எம்.கே. தியாகராஜ பாகவதர், என்.எஸ். கிருஷ்ணன் ஆகியோர் லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் சிக்கிய பிறகு, தங்கள் கலை உலக செல்வாக்கை முற்றிலும் இழந்தனர். ஆனால், இதேபோல தன் உறவினர் ஒருவரின் கொலை வழக்கில் சிக்கினார் நாகேஷ். ஆனால், அதற்கெல்லாம் அவர் கிஞ்சித்தும் துவளவில்லை. அதிலிருந்து முற்றிலும் மீண்டு, முன்பைக் காட்டிலும் நிறைய படங்களில் உத்வேகத்துடன் நடித்து, கடைசிவரையில் மாறாப் புகழுடன் வாழ்ந்து காட்டினார்.

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

6 Responses to நாகேஷ் பற்றி கமல்

 1. மனதை உருக்கும் கட்டுரை. நகைச்சுவை நாயகன் நாகேஷ் அவரகளின் ஒலியஞ்சலி நீங்களூம் கேட்டு தங்கள் அஞ்சலியை செலுத்துங்கள். >> கோவை ரவி

 2. valaipookkal says:

  Hi

  We have just added your blog link to Tamil Blogs Directory – http://www.valaipookkal.com.

  Please check your blog post link here

  If you haven’t registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

  Sincerely Yours

  Valaipookkal Team

 3. மணிவண்ணன் says:

  நன்றி குமுதம்:

  இரும்பு மனசுக்காரர் நாகேஷ் – கலங்கும் கே. பாலசந்தர்

  தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத நடிகர்களில் நாகேஷும் ஒருவர். கலைவாணர் என்.எஸ்.கே. மற்றும் சந்திரபாபுவிற்குப் பிறகு நகைச்சுவை நடிப்பில் கொடிகட்டிப் பறந்தவர் நாகேஷ் என்றால் அது மிகையல்ல. எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களில் தொடங்கிய அவரது கலைப் பயணம், பல பரிமாணங்களைக் கடந்துள்ளது. அவரது `தருமி’ வேடத்தை யாரால் மறக்க முடியும்? பிற்காலத்தில் குணச்சித்திர வேடங்களிலும் வெளுத்துக் கட்டினார்.

  நகைச்சுவை நடிகராக வலம் வந்த நாகேஷை, ஹீரோவாகப் போட்டு பல்வேறு நாடகங்களையும் படங்களையும் இயக்கியவர் இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர். நாகேஷின் குருநாதராகவும் நல்ல நண்பராகவும் திகழ்ந்த அவரிடம், நாகேஷ் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளச் சொன்னோம். தழுதழுத்த குரலில் ஆரம்பித்தார் கே.பி.

  “இறந்தவர்களுக்கு, இருப்பவர்கள் செய்யும் சடங்குகளுள் ஒன்று வாய்க்கரிசி போடுவது. அதைச் செய்து அவரை மயானத்தில் தனியே விட்டுவிட்டு வந்து அசை போட்டுப் பார்க்கிறேன்.

  ஆரம்ப காலம் தொடங்கி, அண்மையில் பதினைந்து நாட்களுக்கு முன்பு போய் பார்த்துப் பேசிவிட்டு வந்த சம்பவம் வரை ஒவ்வொரு விஷயமும் நினைவுக்கு வந்து நெஞ்சை அடைக்கிறது. ஆத்மார்த்தமாகப் பழகும் அந்த நண்பரை இழந்து மனமொடிந்து போயிருக்கிறேன்.

  நான் பத்திரிகைப் பேட்டிக்காகவோ அல்லது ஒப்புக்காகவோ சொல்லவில்லை. நடிப்பில் சிவாஜிக்குப் பிறகு பேர் சொல்லும் பிள்ளையாக இருந்தவர் நாகேஷ். அதிலும் குணச்சித்திரமாகவும் காமெடியாகவும் இணைந்து நடிக்கும் நடிகர், இனிமேல் பிறந்தால் கூட அதிசயம் என்றுதான் சொல்ல வேண்டும். காமெடி டிராக்கில் மட்டும் ஓடிக் கொண்டிருந்த அவரை குணச்சித்திர நடிகனாக்கியது பற்றி நினைத்தால் பல சம்பவங்களைக் கூறத் தோன்றுகிறது.

  சின்னச் சின்ன கம்பெனிகள் நடத்தி வந்த சில நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த நாகேஷ் பற்றி நண்பர்கள் சிலர் என்னிடம் சிலாக்கியமாகச் சொன்னார்கள். நானும் அரசுப் பணியில் இருந்தபடியே நாடகங்கள் எழுதி இயக்கிக் கொண்டிருந்தபடியால், இயல்பாக ஏற்பட்ட ஆர்வத்தில் நண்பர்கள் கூறிய நாடகத்தையும் நாகேஷையும் பார்க்கப் போனேன்.

  அப்படிப் போன ஒரு நாடகத்தில் நாகேஷின் ஆரம்பக் காட்சியே எனக்கு பிரமிப்பு ஏற்படுத்திவிட்டது. அதாவது யாரோ விரட்டி வருவதுபோல பாவனை செய்தபடி, நீளமான சோபா ஒன்றை அனாயாசமாக தாண்டிக் குதித்தபடி வசனம் பேசுவார். அப்போது அவருடைய அங்கஅசைவுகளும் வசன உச்சரிப்புகளும் என்னைப் பெரிதும் கவர்ந்துவிட்டது. நாடகம் முடிந்ததும் தனியே பார்த்துப் பாராட்டிவிட்டு, `இப்படி நடிப்பது ரிஸ்க் இல்லையா? அடிபட்டால் என்னாகும்?’ என்று அக்கறையுடன் கேட்டேன். அதற்கு நாகேஷ், `அடிபடலாம். அதற்கு பயந்து மெனக்கெடாமல் இருக்கக் கூடாது. ஆல் இன் கேம். அதிலும் நாடகத்திற்கு மற்ற தொழிலில் காட்டும் திறமை மற்றும் அக்கறையைவிட நூறு சதவிகிதம் அதிகம் காட்டினால்தான் ஜெயிக்க முடியும்!’ என்று விளக்கம் சொன்னார்.

  அவருடைய நாடகத்தைப் பார்க்கப் போன காலகட்டத்தில் நான் `மேஜர் சந்திரகாந்த்’ நாடகம் நடத்திக் கொண்டிருந்தேன். அதைப் பார்க்க வந்த நாகேஷ், என் நாடகத்தை வெகுவாகப் பாராட்டிவிட்டு, மெதுவாக தனக்கும் என் குழுவில் இடம் வேண்டும் என்று கேட்டார். சின்னச் சின்ன கம்பெனிகளில் நடிக்கும் தனக்கு என் அங்கீகாரமும் ஆதரவும் வேண்டும் என்று வெளிப்படையாகப் பேசினார். குறைந்தபட்சம் `மேஜர் சந்திரகாந்த்’ நாடகத்தில் ஒரு கேரக்டர் கொடுக்க வேண்டும் எனவும் கேட்டார்.

  நான் அவரிடம் `உங்களுக்கான ஒரு ஸ்கிரிப்ட்டைத் தயார் செய்து, அதன் மூலம் உங்களை எங்கள் குழுவில் சேர்க்கிறேன்’ என்றதும், சரி என்று போனவர், மறுநாளே என் அலுவலகம் வந்து தனக்கான ஸ்கிரிப்ட் தயாரா எனக் கேட்டார். இவ்வளவிற்கும் சினிமாவில் தலைகாட்டி பிரபல-மாகிவிட்ட அவர், நிஜமாகவே நாடகங்களில் நடிக்க அதுவும் என் நாடகங்களில் நடிக்கக் காட்டிய ஆர்வம் என்னைப் பெரிதும் ஈர்த்தது.

  அதன் விளைவாக தீவிரமாக யோசித்தபோது, நாகேஷின் முகத்தில் இருந்த அம்மைத் தழும்புகளையும் அதனால் நாயகன் படும் மன உளைச்சல்களையும் வைத்து ஒரு கதை பண்ணலாமா என்று நாகேஷிடமே கேட்டேன். இந்த கதைக்களம் அவருக்குப் பிடித்துப் போய்விட்டது. உடனே என்னை அடுத்தடுத்து சந்தித்து ஒரு வகையில் நெருக்கடி கொடுத்து தனக்கான அந்த முழுக் கதையையும் உருவாக்க வைத்துவிட்டார். அதுதான் `சர்வர் சுந்தரம்.’

  அந்தக் கதை தயாரானதும் தினமும் ரிகர்சல் பார்க்க சின்சியராக ஸ்பாட்டுக்கு வந்துவிடுவார். நான் ஏற்கெனவே சொன்ன மாதிரி சினிமாவில் பிஸியான நிலையிலும் அவருடைய நாடக ஆர்வம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. குறுகிய காலத்தில் மெனக்கெட்டுத் தயாரித்த `சர்வர் சுந்தரம்’ நாடகத்தை அரங்கேற்றும் நாளன்று என்னை விட டென்ஷனாக இருந்த நாகேஷ் மெதுவாக, `பாலு, இந்த நாடகத்தோட முதல் டயலாக் தவிர மற்றதெல்லாம் மறந்துடுத்தே’ என்றார். ஆனால் நாடகம் தொடங்கியதும் மடமடவென்று டயலாக்குகளை வீசி அசத்திவிட்டார். குறிப்பாக நாயகிக்கு பொக்கே கொடுத்துவிட்டு, பதிலுக்கு குப்பைக் கூடையை எடுத்துப் போகிறேன் என்று கூறியபோது, ஆடியன்ஸ் தட்டிய கைதட்டல்கள் இன்னமும் காதுகளில் ஒலிக்கிறது.

  அந்த நாடகத்தின் காட்சி அமைப்புகள் சிறப்பாக இருந்தாலும் நாகேஷின் நடிப்பும் மெருகேற்றியதால் கிடைத்த பாராட்டு ஒவ்வொரு காட்சியிலும் பிரதிபலித்தது. இந்த நாடகம் நடக்கவிருந்த ஓரிரு நாளில் எம்.ஜி.ஆர். படங்களில் நடிக்க கால்ஷீட் கொடுத்திருந்தார். அவரிடம் நாடகம் பற்றிக்கூறி அனுமதி வாங்கி வந்து நடித்துவிடும் போக்கும் என்னைக் கவர்ந்தது.

  `சர்வர் சுந்தரம்’ நன்றாக போய்க்கொண்டிருந்தாலும் `மேஜர் சந்திரகாந்த்’ நாடகத்திலும் தான் பங்குபெற வேண்டும் என்று தொடர்ந்து அடம் பிடித்து வந்தார். அதனால் ஒரு காட்சியில் பேப்பர் போடும் பையன் கேரக்டர் கொடுத்தேன். அதில் வந்தவரை ஆடியன்ஸ் பார்த்து `ஹே, நாகேஷ்’ என்று கத்தினார்கள்.

  இதெல்லாம் நடப்பதற்கு முன்பு நானும், நாகேஷும் இணைந்து ஒரு நாடகத்தில் நடித்தோம். முதலாளியாக நானும் வேலைக்காரராக அவரும் நடிக்கும்போது, திடீரென்று இஷ்டத்துக்கு வசனம் பேசி என்னைத் திகைக்க வைத்துவிட்டார். அதிலிருந்து என் நாடகங்களில் இப்படி அதிரடியாக புதிய வசனம் எதுவும் பேசக்கூடாது என்று வாய்ப்பூட்டு போட்டுவிட்டேன்.

  பிறகு, நான் எழுதிய `நீர்க்குமிழி’ நாடகத்தில் நாகேஷ் புகுந்து கலக்கினார். காமெடியனாக வந்த நாகேஷ், இந்நாடகத்தின் மூலம் பார்வையாளர்களை அழ வைத்துவிட்டார். பலமுறை நானே அவரது நடிப்பைப் பார்த்துக் கண்கலங்கியுள்ளேன்.

  அந்த நாடகத்தில் பல பரிமாணங்களைக் காட்டி அசத்திய நாகேஷை மனதில் வைத்து `எதிர்நீச்சல்’ நாடகம் எழுதினேன். அதுபற்றி எதுவும் நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

  இப்படிப் போன காலகட்டத்தில் `நீர்க்குமிழி’ நாடகத்தைப் படமாக்கினோம். நாடகத்தில் நடித்தவர்களையே பெரும்பாலும் போட்டு குறைந்த பட்ஜெட்டில் தயாரான அப்படம் நிறைவான வருவாயும், பேரும் கொடுத்தது. குறிப்பாக இப்படம் பற்றி ஏவி.எம். செட்டியாரும், பாரதிராஜாவும் பிரமிப்புடன் பேசினார்கள்.

  அதேசமயம் புதிய நாடகமாக `நவக்கிரகம்’ எழுதினேன். அதுதான் என் கடைசி நாடகமாகிவிட்டது. காரணம், நான் உள்பட நாடகத்தில் பங்கேற்ற அனைவரும் சினிமாவில் பிஸியாகிவிட்டதால் நாடகத்திற்குத் தேவையான நேரத்தை எங்களால் ஒதுக்க முடியாமல் போனதுதான்.

  ஆனால், சினிமாவில் தனிக் கொடி நாட்டி வெற்றிப் பாதையில் போய்க் கொண்டிருந்த எங்கள் நட்புக்கு யாரோ திருஷ்டி போட்டுவிட்டார்கள். பல ரூபங்களில் வந்த பிரச்னைகளால் பிரிந்துவிட்டோம்.

  நாகேஷ் வீட்டில் நடந்த ஒரு துயரச் சம்பவத்தால் தனிமையில் வாழ ஆரம்பித்த நாகேஷை வைத்து `வெள்ளிவிழா’ என்ற படத்திற்கு கால்ஷீட் வாங்கினேன். எனக்குக் கொடுத்த கால்ஷீட் தினத்தன்று எனக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு எம்.ஜி.ஆர். படமொன்றில் நடிக்கப் போயிருந்தார். அந்த விஷயம் தெரிந்து விசாரித்தபோது, அவர் என்னைப் பற்றிக் கூறிய வார்த்தைகள் காயத்தையும், ஆறாத வடுவையும் எனக்குள் ஏற்படுத்திவிட்டது. அதில் கோபமடைந்த நான், நாகேஷின் தொடர்பை அறவே துண்டித்துவிட்டு அவருக்காக உருவாக்கிய கேரக்டரில் புதுமுகம் ஒருவரை அறிமுகப்படுத்தினேன். அவர்தான் தேங்காய் சீனிவாசன்.

  இந்த `வெள்ளிவிழா’ பட ஷூட்டிங்கின் போது எனக்கு ஹார்ட்-அட்டாக் வந்து நினைவைத் துறந்து பல நாட்கள் ஆஸ்பத்திரியில் இருந்தேன். அப்போது தினமும் நாகேஷ் வந்து என்னைப் பார்த்துவிட்டுப் போவாராம். பின்னாளில் என் மனைவி சொல்லித் தெரிந்துகொண்ட விஷயமிது.

  ஆனாலும் வருத்தம் குறையாத நிலையில், நாகேஷ் உறவே இல்லாமல் ஏழெட்டுப் படங்கள் எடுத்து அதில் பல ஹிட் ஆகின. பட வெற்றிவிழா சிலவற்றில் நாகேஷைப் பார்த்துப் பேச ஆரம்பித்த பிறகு சமரசம் ஆகிவிட்டோம்.

  அடுத்து `அபூர்வ ராகங்கள்’ படம் எடுக்கும்போது அதில் கண்டிப்பாக தனக்கு ஒரு ரோல் வேண்டும் என்று உரிமையுடன் கேட்டார் நாகேஷ். அவருக்காகவே டாக்டர் ரோலை உருவாக்கினேன். பிறகு அடுத்தடுத்து எங்கள் நெருக்கம் பலப்பட்டு விட்டது. அதே சமயம் நாகேஷ் பற்றி இன்னொரு விஷயத்தையும் கூற விரும்புகிறேன். என் நாடகங்கள் தொடங்கி கேள்விப்பட்ட அனைத்து நாடகங்களையும், சினிமாக்களையும் பற்றி விலாவாரியாக மணிக்கணக்கில் பேசும் நாகேஷ், தன் குடும்ப விஷயங்களைப் பற்றி ஒருபோதும் பேசியதில்லை. அந்த வகையில் நாகேஷ் இரும்பு மனசுக்காரர் என்றுதான் சொல்வேன். மொத்தத்தில் நாகேஷ் மறைவு நடிப்பிற்கு இழப்பு!” என்று கூறி கண்களைத் துடைத்துக்-கொண்டார் கே.பி.

 4. Das says:

  RV,

  Another tribute from “The Hindu” http://www.hindu.com/fr/2009/02/06/stories/2009020651030300.htm

  When I read about his dedication, his father’s advice about one is fit for the food (s)he consumes brings tears to me.

 5. Surya says:

  Thanx for all the info and post about Nagesh..

  No one can replace him.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: