நாகேஷ் பற்றி ஓ பக்கங்களில் ஞானி


ஞானியின் அருமையான கட்டுரை. ((நன்றி மணிவண்ணன்)

// அவர் நான்கு வருடங்கள் முன்னால் ஒரு பத்திரிகை நடத்திய பாராட்டு விழாவிலும், தனக்கு எந்த அரசாங்க தேசிய விருதும் கிடைக்காத வேதனையையும் சொன்னார். நாகேஷுக்கு இனிமேல் தாதா சாகிப் பால்கே விருது கொடுத்தால் கூடப் பயனில்லை. அவர் பங்களிப்பை அரசு கௌரவிக்கிறது என்று தெரிந்துகொள்ள அவர் இல்லாத போது என்ன செய்து என்ன பயன்? //

// சிவாஜி, நாகேஷ் இருவரையும் அவர்களுடைய கடைசி நாட்களில் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள நாம் தவறிவிட்டோம். //

குறிப்பாக மேலே கோட் செய்யப்பட்டிருக்கும் இரண்டு விஷயங்கள் நூற்றுக்கு நூறு உண்மை.

நன்றி: குமுதம் ஓ பக்கங்கள் ஞானி

கலைவாணர் முதல் கஞ்சா கருப்பு வரை தமிழ் சினிமா பெற்ற நகைச்சுவை நடிக-நடிகையர் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே ரசிகர்கள் நிச்சயம் இருப்பார்கள். ஆனால் அவர்கள் அத்தனை பேருக்குமே பிடித்த நகைச்சுவை நடிகராக இருப்பவர் நாகேஷ் ஒருவர்தான்.

என் வாழ்க்கையில் நாகேஷ் இரு முக்கியமான தருணங்களில் (அவரையறியாமலே) இடம் பெற்றார். பள்ளிக்கூட நாட்களிலும் கல்லூரி நாட்களிலும் நான் அவரைப் போலவே ஒல்லியானவனாக இருந்தேன். அப்போதெல்லாம் எல்லா நாடகங்களிலும் நான் நகைச்சுவை நடிகன்தான். பள்ளியில் எனக்கு நாடகம் கற்றுத் தந்த ஆசிரியர்கள் வசனம் பேசவும் மேடையில் ஓடியாடவும் கற்றுத் தந்த ஒவ்வொரு அசைவிலும் உச்சரிப்பிலும் நாகேஷ்தான் இருந்தார்.

எப்படி சிவாஜிதான் நாடக ஹீரோக்களுக்கு ரோல் மாடலோ அதே போல காமெடியன்களின் ஆதர்சம் நாகேஷ்தான். கல்லூரியில் ஒரு நாடகத்தில் முழு நீள நகைச்சுவை பாத்திரமொன்றை எனக்கு முதலில் கொடுத்து விட்டு பின்னர் அதில் வெளியிலிருந்து தொழில்முறை நடிகர் ஒருவரைப் போட்டார் என் ஆசிரியர். நான் வருத்தப்படக் கூடாது என்பதற்காக நாடக ஆரம்பத்தில் மூன்று நிமிடம் வருகிறமாதிரி ஒரு `சோலோ’ நகைச்சுவை சமையற்காரப் பாத்திரம் ஒன்றை எனக்காக எழுதிக் கொடுத்தார். அதை நடிக்கும் போது, அதிர்ச்சியான ஒரு போன் காலை கேட்டு நான் ஓடி வந்து சோபா முதுகின் மீது குறுக்காக விழுந்து கை கால்களை ஆட்டியபடி பேலன்ஸ் செய்து கைதட்டல் வாங்கினேன். அதற்கு ரோல் மாடல் நாகேஷ்தான்.

இதை விட சிக்கலான பல `ஸ்லேப்ஸ்டிக் காமெடி’ உடல் அசைவுகளை நாகேஷ் செய்திருக்கிறார். ஒவ்வொன்றுக்கும் கடும் உழைப்பும் பயிற்சியும் தேவை. காமெடி நடிகர்களுக்குத் தேவையான சர்க்கஸ் உடல்மொழி, வேகம், நடனத் திறமை, வசன உச்சரிப்பின் நேரக் கச்சிதம் என்று எல்லாவற்றுக்கும் நாகேஷின் படங்கள்தான் இலக்கணப் புத்தகங்கள். நாகேஷுக்கு முன்னரும் சரி, பின்னரும் சரி, தமிழ்த் திரையில் இதர நகைச்சுவை நடிகர்கள் எல்லாரிடமும் ஓர் ஒற்றைத் தொனி (`மொனாட்டனி ஸ்டைல்’) இருக்கிறது, நாகேஷிடம் மட்டும்தான் வெரைட்டி உண்டு.

எனக்கு இன்றும் பெரிய ஆச்சரியம், மேடை நிகழ்ச்சிகளில் எந்த மிமிக்ரி கலைஞரும் நாகேஷ் குரலை மட்டும் மிமிக்ரி செய்வது இல்லை என்பதுதான். ஒரு விதத்தில் இதற்கு அவருடைய வெரைட்டியும் காரணமாக இருக்கலாம்.

ஒரு நடிகராக நாகேஷுடைய தன்னம்பிக்கை ஒவ்வொரு நடிகனுக்குமான பாடம். எந்த வகைப் பாத்திரமாக இருந்தாலும், தன்னால் அதைச் செய்துவிட முடியும் என்று அவர் நம்பி உழைத்ததால்தான், அவருடைய பட வரிசையைப் படிக்கும்போது பிரமிப்பாக இருக்கிறது. சர்வர் சுந்தரம் படத்தில் வசீகரமான தோற்றம் உடைய ஹீரோ நடிகர் முத்துராமன் இருந்தபோதும், சினிமாவில் ஹீரோவாக ஜெயித்த நடிகன் பாத்திரத்தை முத்துராமனுக்கு நிகரான தோற்றப் பொலிவு இல்லாத நாகேஷ் ஏற்று நடித்து வெற்றி பெற்றிருப்பது, நடிப்புத் திறமைக்கு மட்டுமே கிடைத்த வெற்றி.

வெவ்வேறு ஜாதிகள் அதையொட்டிய பழக்க வழக்கங்கள் உள்ள தமிழ்ச் சமூகத்தில், மிகச் சில நடிகர்களுக்கு மட்டுமே எந்த ஜாதிப்பாத்திரத்துக்கும் பொருந்திப் போகும் உடல்மொழியும் நடிப்பாற்றலும் உண்டு. அதில் முதன்மையானவர் நாகேஷ். அதனால்தான் தூத்துக்குடியின் ஏழைத் தொழிலாளியாகவும், தஞ்சாவூரின் சவடால் புரோக்கராகவும் அவரை ஏற்க முடிந்தது. வாழ்க்கையிலும் ஜாதிக்கு அப்பாற்பட்டவராக அவர் கலப்புத்திருமணம் செய்தவராகவும் தன் பிள்ளைகளுக்கும் கலப்புத்திருமணங்கள் செய்தவராகவும் விளங்கினார்.

நாகேஷ் என் வாழ்க்கையில் இரண்டாவது முறை இடம் பிடித்தபோது அவருடைய இன்னொரு பரிமாணத்தை நான் தெரிந்துகொண்டேன். எழுத்தாளர் அறந்தை நாராயணனின் நாவலை நான் டெலிவிஷன் தொடரக இயக்கியபோது, அந்தத் தொடரை அறிமுகம் செய்து பேசும்படி நாகேஷை நானும் அறந்தையும் அணுகினோம். முதலில் அறந்தையின் நாவலைப் படித்துப் பார்க்க வேண்டும் என்றார். கொடுத்தோம். படித்தபின் என் உதவி இயக்குநரை அனுப்பிவைக்கச் சொன்னார். அவரை ஒரு கொயர் நோட்டுப் புத்தகத்துடன் வரச் சொன்னார். அதன்படி கணேஷ் சென்றதும், நாகேஷ் டிக்டேட் செய்ய ஆரம்பித்தார். கணேஷ் எழுத எழுத நோட்புக் தீர்ந்து போய்விட்டது.

எனக்கும் அறந்தைக்கும் ஒரே குழப்பம். டி.வி தொடரை அறிமுகம் செய்து பேசவேண்டியது சில நிமிடம்தான். எதற்காக இவ்வளவு நீளமாக உரை தயாரித்திருக்கிறார்? இதைப் பதிவு செய்து எப்படி ஒளிபரப்புவது ? உதவி இயக்குநர் கணேஷ் சொன்னார்: இந்த முன்னுரையை பிரிண்ட் பண்றதுக்கு முன்னே என்கிட்ட ப்ரூஃப் கொண்டு வந்து காட்டுன்னு சொல்லியிருக்கார் சார். டி.வி.யில் தோன்றி அறிமுகம் செய்யவேன்டும் என்று நாங்கள் கேட்டதை அவர் புத்தகத்துக்கு முன்னுரை என்று எடுத்துக் கொண்டு விட்டதே தவறுக்குக் காரணம். (மறுபடியும் நாகேஷை தொல்லை செய்யவேண்டாம் என்று அறந்தை சொன்னதால், பின்னர் அந்த டி.வி. அறிமுகத்தை நடிகை ஸ்ரீவித்யா செய்தார்.)

அப்போது நாகேஷ் டிக்டேட் செய்த `முன்னுரை’ அவருடைய எழுத்தாற்றல் பரிமாணத்தைக் காட்டியது. விண்ணிலிருந்து மண்ணுக்கு என்ற கதையில் தலைப்பை வைத்துக் கொண்டு ஒரே தத்துவ மழைதான். தத்துவமாகப் பேசுவது, எழுதுவது அவருக்கு மிகவும் பிடிக்கும். ஆரம்ப காலங்களில் சினிமாவில் அவருடைய நகைச்சுவைப் பகுதிகளை எழுதுவதில் அவரும் பங்கேற்றிருக்கிறார். நிறைய படிக்கிற பழக்கமும் உடையவர்.

ஒரு நகைச்சுவை நடிகன் மிக சீரியஸான ஒரு எழுத்தாளன் பாத்திரத்தை நடித்தால் எப்படியிருக்கும் என்ற பரிசோதனையைக் கூட அவர் விட்டு வைக்கவில்லை. ஜெயகாந்தனின் சாயல் உள்ள எழுத்தாளர் பாத்திரத்தை `சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தில் நாகேஷ் செய்திருப்பது மிக சுவாரஸ்யமானது.

தத்துவங்கள் பேசுவது , விரக்தியும் நம்பிக்கையும் கலந்த நகைச்சுவை தொனிக்கப் பேசுவது எல்லாம் நாகேஷின் மேடை முத்திரைகள். வாழ்க்கையில் அவர் சந்தித்த வறுமை, பணம் சம்பாதித்த பிறகும் சந்தித்த பிரச்சினைகள், ஏமாற்றங்கள் எல்லாவற்றையும் மீறி அவர் நடிப்பில் தோய்ந்தவராக இருந்தார். நானும் அறந்தையும் அவரை எங்கள்டி.வி.தொடரை அறிமுகம் செய்துவைக்க அழைக்க ஒரு பின்னணி இருந்தது.

அறந்தையின் நாவல், கொடி கட்டிப் பறந்து பெரும் புகழும் பணமும் சம்பாதித்து பலரால் ஏமாற்றப்பட்டு வாய்ப்புகள் போய் நொடித்துப் போய் போதைப் பழக்கத்துக்கு ஆளான ஒரு நடிகையின் கதை. மரணத்தை எட்டிப் பார்த்து விட்டு அவள் திரும்பி வந்து புது வாழ்க்கையைத் தொடங்குவதுதான் கதை.

அதுதான் அந்த நடிகைக்கும் நாகேஷுக்கும் இருந்த ஒற்றுமை. அவரும் மரணத்தை தொட்டுப் பார்த்துவிட்டுத் திரும்பி வந்து பல வருடம் மறுபடியும் நகைச்சுவை செங்கோலைக் கையில் பிடித்தவர். தூக்கம் இல்லாமல், இரவு பகல் பார்க்காமல் படப்பிடிப்பில் கலந்துகொண்டு தன் உடலைக் கடுமையாக வருத்திக் கொண்ட நாகேஷுக்கு அந்தக் கட்டத்தில் மது மட்டுமே ஆறுதலாக இருந்தது. அப்போதுதான் அவர் மயங்கி விழுந்து வாரக்கணக்கில் நினைவின்றி மருத்துவமனையில் இருந்தார்.

அப்போது சில மாலைப் பத்திரிகைகள் கொடூரமாக நடந்துகொண்டன. மருத்துவர்கள் நாகேஷ் உயிருக்கு இன்னும் இரண்டு மணி நேரம்தான் கெடு வைத்திருக்கிறார்கள் என்ற ரீதியில் தலைப்புச் செய்திகளை தினமும் கொட்டை எழுத்தில் போட்டு பரபரப்பாக விற்றார்கள். மரணத்தின் பிடியிலிருந்து மீண்டு வந்த நாகேஷ் அத்தனை பேப்பர்களையும் பின்னர் படித்துவிட்டு வருத்தப்பட்டதாக அறந்தை சொன்னார். “இவங்களை யெல்லாம் ஏமாத்திட்டேன் போலருக்கே” என்று சிரித்துக் கொண்டே தன் வேதனையைச் சொல்ல நாகேஷால்தான் முடியும்.

அப்படி சிரித்துக் கொண்டேதான் அவர் நான்கு வருடங்கள் முன்னால் ஒரு பத்திரிகை நடத்திய பாராட்டு விழாவிலும், தனக்கு எந்த அரசாங்க தேசிய விருதும் கிடைக்காத வேதனையையும் சொன்னார். நாகேஷுக்கு இனிமேல் தாதா சாகிப் பால்கே விருது கொடுத்தால் கூடப் பயனில்லை. அவர் பங்களிப்பை அரசு கௌரவிக்கிறது என்று தெரிந்துகொள்ள அவர் இல்லாத போது என்ன செய்து என்ன பயன் ?

சிவாஜி, நாகேஷ் இருவரையும் அவர்களுடைய கடைசி நாட்களில் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள நாம் தவறிவிட்டோம். இருவரும் இளம் நடிகர்களுக்கு வகுப்புகள் எடுத்திருக்க வேன்டியவர்கள். டெல்லி முன்வந்தபோதும் கூட நம் அரசுகள் சென்னையில் நாடகப் பள்ளியை ஏற்படுத்தத் தவறிவிட்டன. திரைப்படக் கல்லூரியில் நடிப்புப் பாடமே கிடையாது. வர்த்தக சபை, நடிகர் சங்கம், இயக்குநர் சங்கம் முதலான துறை சார்ந்த அமைப்புகளுக்கு வேறு எத்தனையோ வேலைகள் பாவம்.

சிவாஜி, நாகேஷ், இயக்குநர் ஸ்ரீதர் என்று பலரிடம் கற்றுக் கொள்ள இளம் தலைமுறைப் படைப்பாளிகளுக்கு எவ்வளவோ இருக்கிறது. வாய்ப்பை பறிகொடுத்துவிட்டோம்.

இன்னும் சிலர் இன்னும் உயிரோடு இருக்கிறார்கள். காக்கா ராதா கிருஷ்ணன், மனோரமா, கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், கே.பாலசந்தர், எஸ்.எஸ்.ராஜேந்திரன், எம்.என்.ராஜம், சௌகார் ஜானகி, எம்.எஸ்.விஸ்வநாதன், பி.சுசீலா, பி.பி.ஸ்ரீனிவாஸ், சிவகுமார், பாரதி ராஜா, பாலு மகேந்திரா…. என்று கொஞ்சம் நீளமான பட்டியலை சினிமாவின் எல்லா தொழில்நுட்பப் பிரிவுகளிலிருந்தும் போடலாம்.

இவர்களெல்லாம் அவரவர் துறை சார்ந்து மாதம் ஒரு முறை ஒரு வகுப்பை சினிமாவின் அந்தந்தப் பிரிவின் இளைய தலைமுறைக்கு எடுப்பதற்கான ஏற்பாட்டை முறையாக ஸ்தாபனரீதியில் ஏற்பாடு செய்ய முடிந்தால், நூறாண்டு காணப் போகும் தமிழ் சினிமாவின் வரலாற்று அனுபவப் பிழிவு அடுத்த நூறு ஆண்டுக்கான வேரில் ஊற்றிய நீராக அமையும். நாகேஷுக்கு, சிவாஜிக்கு, ஸ்ரீதருக்கு அதுதான் அசல் மரியாதை..

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

One Response to நாகேஷ் பற்றி ஓ பக்கங்களில் ஞானி

  1. bmurali80 says:

    ஆர்.வி-
    ஞானியின் கட்டுரைகளை அப்படியே வெளியிடக் கூடாது என்று அவரது தளத்தில் எழுதப்பட்டுள்ள விதி. நீங்க எதுக்கும் அனுமதி பெறுவது நலம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: