பராசக்தி – நீதிமன்ற வசனம்


பராசக்தியை பற்றி எழுதிக் கொண்டே போகலாம். அதனால்தான் எதை எழுதுவது எதை விடுவது என்று தெரியாமல் எனக்கு தாமதம் ஆகி கொண்டே போகிறது. அது எனக்கு உண்மையிலேயே பிடித்த படங்களில் ஒன்று. சிவாஜியும் கலைஞரும் தமிழ் சினிமாவை அதற்கு முன் காணாத உயரங்களுக்கு கொண்டு போனார்கள். அது ஒரு மைல் கல். திராவிட இயக்க படங்களின் உச்ச கட்டம் அதுதான்.

இன்று பார்ப்பவர்களுக்கு அந்த தாக்கம் ஏற்படாதுதான் – அது ஓரளவு சினிமாத்தனமாக கூட தோன்றலாம். ஆனால் வாழ்க்கை எப்போதும் அசோகமித்திரன் கதை போல் subtle ஆகவே செல்வது இல்லை.

முதலில் அந்த நீதிமன்ற வசனத்துடன் ஆரம்பிக்கிறேன். இதற்கு ஒரு வீடியோ கிடைக்க மாட்டேன் என்கிறதே! கிடைத்துவிட்டது! (Opens in a separate browser.)

sivaji_parasakthi

இந்த நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளைச் சந்தித்து இருக்கிறது. புதுமையான பல மனிதர்களைக் கண்டிருக்கிறது. ஆகவே இவ்வழக்கு விசித்திரமல்ல, வழக்காடும் நான் புதுமையான மனிதனுமல்ல. வாழ்க்கைப் பாதையிலே சர்வ சாதாரணமாகக் காணக்கூடிய ஜீவன்தான்.

கோவிலிலே குழப்பம் விளைவித்தேன். பூசாரியைத் தாக்கினேன். குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம். நீங்கள் எதிர்பார்ப்பீர்கள், நான் இதையெல்லாம் மறுக்கப்போகிறேன் என்று. இல்லை நிச்சயமாக இல்லை. கோவிலிலே குழப்பம் விளைவித்தேன். கோவில் கூடாது என்பதற்காக அல்ல. கோவில் கொடியவர்களின் கூடாரமாய் இருக்கக்கூடாது என்பதற்காக. பூசாரியைத் தாக்கினேன். அவன் பக்தன் என்பதற்காக அல்ல. பக்தி பகல் வேஷமாகி விட்டதைக் கண்டிப்பதற்காக.

உனக்கேன் இவ்வளவு அக்கறை, உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை, என்று கேட்பீர்கள். நானே பாதிக்கப்பட்டேன். சுயநிலம் என்பீர்கள். என் சுயநிலத்தில் பொதுநலம் கலந்திருக்கிறது. ஆகாரத்திற்காக அழுக்கைச் சாப்பிட்டு தடாகத்தைச் சுத்தப்படுத்துகிறதே மீன் – அதைப் போல.

என்னைக் குற்றவாளி, குற்றவாளி என்கிறார்களே, இந்தக் குற்றவாளியின் வாழ்க்கைப் பாதையிலே கொஞ்ச தூரம் பின்னோக்கி நிடந்து பார்த்தால் அவன் கடந்து வந்துள்ள காட்டாறுகள் எவ்வளவு என்று கணக்கு பார்க்க முடியும். பாட்டொலிக்கும் குயில்கள் இல்லை என் பாதையில், படமெடுத்தாடும் பாம்புகள் நெளிந்திருக்கின்றன. தென்றலைத் தீண்டியதில்லை நான். ஆனால் தீயைத் தாண்டியிருக்கிறேன். கேளுங்கள் என் கதையை! நீதிபதி அவர்களே! தீர்ப்பு எழுதுவதற்கு முன் தயவு செய்து கேளுங்கள்.

தமிழ்நாட்டிலே இத்திருவிடத்திலே பிறந்தவன் நான். பிறக்க ஒரு நாடு பிழைக்க ஒரு நாடு. தமிழர்களின் தலையெழுத்துக்கு நானென்ன விதிவிலக்கா? ரங்கூன்! அது உயிரை வளர்த்தது. என்னை உயர்ந்தவன் ஆக்கியது. திருமணக் கோலத்தில் இருந்த என் தங்கையைக் காண வந்தேன். மோசடி வழக்கிலே ஈடுபட்டு இதோ குற்றவாளிக் கூண்டிலே உங்கள் முன் நிற்கிறாளே இந்த ஜாலக்காரி ஜூலி, இவள் வலையில் விழுந்தவர்களில் நானும் ஒருவன். பணப் பெட்டியைப் பறிகொடுத்தேன். பசியால் மெலிந்தேன் நலிந்தேன், கடைசியில் பைத்தியமாக மாறினேன்.

காண வந்த தங்கையைக் கண்டேன். கண்ணற்ற ஓவியமாக. ஆம் கைம்பெண்ணாக, தங்கையின் பெயரோ கல்யாணி. மங்களகரமான பெயர். ஆனால் கழுத்திலே மாங்கல்யமில்லை. செழித்து வளர்ந்த குடும்பம் சீரழிந்துவிட்டது. கையில் பிள்ளை. கண்களிலே நீர். கல்யாணி அலைந்தாள். கல்யாணிக்காக நான் அலைந்தேன்.

கல்யாணிக்குக் கருணை காட்டினர் பலர். அவர்களிலே காளையர் சிலர் அவளுடைய காதலைக் கேட்டனர். கொலை வழக்கிலே ஈடுபட்டு உங்கள் முன் நிற்கிறானே இக்கொடியவன் வேணு, இவன் பகட்டால் என் தங்கையைக் கற்பழிக்க முயன்றான். நான் தடுத்திராவிட்டால் கல்யாணி அப்போதே தற்கொலை செய்து கொண்டிருப்பாள்.

கடவுள் பக்தர்களும் கல்யாணிக்குக் கருணை காட்ட முன்வந்தார்கள். பிரதி உபகாரமாக அவள் கடைக்கண் பார்வையைக் கேட்டனர். அதில் தலையானவன் இந்தப் பூசாரி. கல்யாணியின் கற்பைக் காணிக்கையாகக் கேட்டிருக்கிறான் – பராசக்தியின் பெயரால், உலக மாதாவின் பெயரால். கல்யாணி உலகத்தில் புழுவாகத் துடித்தபடியாவது உயிரோடு இருந்திருப்பாள். அவளைத் தற்கொலை செய்து கொள்ளத் தூண்டியது இந்த பூசாரிதான். தன் குழந்தையை இரக்கமற்ற உலகத்தில் விட்டுச் செல்ல அவள் விரும்பவில்லை. தன் குழந்தை ஆதரவற்றுத் துடித்துச் சாவதைக் காண அவள் விரும்பவில்லை. அவளே கொன்றுவிட்டாள். விருப்பமானவர்களைக் கொல்வது விந்தையல்ல. உலக உத்தமர் காந்தி, அஹிம்சா மூர்த்தி ஜீவகாருண்ய சீலர், அவரே நோயால் துடித்துக் கொண்டிருந்த கன்று குட்டியைக் கொன்றுவிடச் சொல்லியிருக்கிறார், அது கஷ்டப்படுவதைக் காணச் சகிக்காமல். அந்த முறையைத்தான் கையாண்டிருக்கிறாள் கல்யாணி. இது எப்படி குற்றமாகும்?

என் தங்கை விட்டுக் கொடுத்திருந்தால், கோடீஸ்வரன் பள்ளியறையிலே ஒரு நாள் – மானத்தை விலை கூறியிருந்தால், மாளிகை வாசியின் மடியிலே ஒரு நாள் – இப்படி ஓட்டியிருக்கலாம் நாட்களை. இதைத்தானா இந்த நீதிமன்றம் விரும்புகிறது?

பகட்டு என் தங்கையை மிரட்டியது. பயந்து ஓடினாள். பணம் என் தங்கையைத் துரத்தியது. மீண்டும் ஓடினாள். பக்தி என் தங்கையை பயமுறுத்தியது. ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள். அந்த ஓட்டத்தைத் தடுத்திருக்கவேண்டும். வாட்டத்தைப் போக்கியிருக்கவேண்டும். இன்று சட்டத்தை நீட்டுவோர். செய்தார்களா? வாழவிட்டார்களா என் கல்யாணியை?

அரசு வக்கீல்: குற்றவாளி யார் யார் வழக்கிற்கோ வக்கீலாக மாறுகிறார்.

குணசேகரன்: யார் வழக்கிற்குமில்லை. அதுவும் என் வழக்குதான். என் தங்கையின் வழக்கு. தங்கையின் மானத்தை அழிக்க எண்ணிய மாபாவிக்கு புத்தி புகட்ட அண்ணன் ஓடுவதில் என்ன தவறு? கல்யாணி தற்கொலை செய்துகொள்ள முயன்றது ஒரு குற்றம். குழந்தையைக் கொன்றது ஒரு குற்றம். நான் பூசாரியைத் தாக்கியது ஒரு குற்றம். இத்தனைக் குற்றங்களுக்கும் யார் காரணம்? கல்யாணியைக் கஞ்சிக்கில்லாமல் அலையவிட்டது யார் குற்றம்? விதியின் குற்றமா? அல்லது விதியின் பெயரைச் சொல்லி வயிறு வளர்க்கும் வீணர்களின் குற்றமா? பணம் பறிக்கும் கொள்ளைக் கூட்டத்தை வளரவிட்டது யார் குற்றம்? பஞ்சத்தின் குற்றமா? அல்லது பஞ்சத்தை மஞ்சத்திற்கு வரவழைக்கும் வஞ்சகர்களின் குற்றமா? கடவுள் பெயரால் காம லீலைகள் நடத்தும் போலிப் பூசாரிகளை நாட்டிலே நடமாட விட்டது யார் குற்றம்? கடவுளின் குற்றமா? அல்லது கடவுளின் பெயரைச் சொல்லி காலட்சேபம் நடத்தும் கயவர்களின் குற்றமா? இக்குற்றங்கள் களையப்படும் வரை குணசேகரன்களும் கல்யாணிகளும் குறையப்போவதில்லை. இதுதான் எங்கள் வாழ்க்கை ஏட்டில் எந்தப் பக்கம் புரட்டினாலும் காணப்படும் பாடம், பகுத்தறிவு, பயனுள்ள அரசியல் தத்துவம்

ஏ.வி.எம். செட்டியார் சொன்னது போல கலைஞர் அண்ணாவையே மிஞ்சி விட்டார். இதையும் மிஞ்சிய வசனங்கள் உள்ள படம் மனோகராதான்.

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

10 Responses to பராசக்தி – நீதிமன்ற வசனம்

 1. yaathirigan says:

  wow.. thnx for the dialogues in the post 🙂

 2. Bags says:

  ஒரு லிங்க் கிடைத்தது. ஆனால் வேலை செய்யவில்லை. முயன்று கொண்டிருக்கிறேன்

 3. மணிவண்ணன் says:

  ராமன் எத்தனை ராமனடி படத்தில் சிவாஜி பேசிய வசனம். வைத்திருங்கள் ராமன் எத்தனை ராமனடி பட விமர்சனம் எழுதும் போது (எழுதினால்) உதவும்:-)

  ”சிவாஜி தாழ்ந்த ஜாதி! அரசியலே அறியாதவன்! ஹ§ம்! யார்? தானும் நாடும் ஒன்றெனக் கண்டு தன்னையே தந்த மன்னன் சிவாஜி தாழ்ந்த ஜாதியா? மன்னர் குலத்தில் பிறக்காதவன், பரம்பரை உரிமை இல்லாதவன், மானம் காக்கும் குடியானவன், மகுடம் தாங்க முடியாதா? தார்தாரியார் தந்த புரவியில் அமர்ந்து ஆர்த்தெழுந்த சிவாஜியைக் கண்டு நாட்டுக்குடைய நல்லவனென்றும் போர்ப்பாட்டு முழக்கும் மன்னவனென்றும், ஆரத்தியெடுத்த மக்களேங்கே? ஓரத்தில் நின்று வெற்றி வரட்டும் அதன் சுகத்தை அனுபவிப்போம் என்று காத்திருந்த இந்த ஆணவக்காரர்கள் எங்கே? உறையிருந்த வாளெடுத்து ஒவ்வொரு முறையும், மராட்டியம் என்றே முழங்கி இரையெடுக்கத் துடித்த வேங்கை போல் எங்கே பகைவர் எங்கே பகைவர் என்று தேடி கறை படியாத என் அன்னை நாட்டை காப்பேன்! காப்பேன்! என சூளுரைத்து இந்த நாடு என் சொந்த நாடு. இந்த மக்கள் என் சொந்த மக்கள், உயிரினும் இனிய என் மக்களுக்காக ஓடினேன். பகைவரைத் தேடினேன். வாள் கொண்டு சாடினேன். வெற்றியை நாடினேன். பகைத் தேடி வெல்ல மட்டும் உரிமை உண்டாம். முடி சூட்டிக் கொள்ள மட்டும் தடை செய்வாராம்.
  அரசியலை நான் அறியாதவனா? ஹ… அரசு வித்தைகள் புரியாதவனா? ஹ… ஹ… எவனோ வந்தவன் சொன்ன வாய்ப்புரை கேட்டு நொந்து போக நான் நோயாளி அல்ல! என்னை விட்டொருவன் இந்த தரணியாளும் தகுதியை அடைந்துவிட்டானா? ஏமாந்த மக்களிடம் ஏற்றம் கொண்டு நாமேதான் நாடொன்று தலைதூக்கித் திரியும் அந்த புல்லுருவிகள் எனது முடியைத் தடுக்கிறார்களா அல்லது தங்கள் முடிவைத் தெடுகிறார்களா?
  அதோ போர்ணா! கொட்டிய முரசும், கூவிய படையும் எட்டிய பரியும் எழுந்து நடந்து கோட்டை மதிலை சுற்றி வளைத்து வேட்டையாடி வெற்றி படைத்து, வாழ்க சிவாஜி வாழ்கவென்று வாழ்த்துரை கூறி வழங்கியபோது, ஓஹோ என்று எதிரொலித்ததே இந்தக் கோட்டைத்தான்.
  அதோ புரந்தர்! போகாதீர்கள்! படை பலம் அதிகம்! கோட்டை முன்னால் தடைகளும் அதிகம். ஒற்றன் தடுத்தான் ஒருநாள் என்னை! இடுப்பொடிந்தோரெல்லாம் இல்லத்திருங்கள்; கோழைகள் விலக வீரர்கள் வரட்டும். ஏறு முன்னேறு என எக்காளமிட்டு பகைவர் தலைகளை கனியென கொய்து முரசும் ஒலித்து நான் முழக்கிய கோட்டை இதுதான். புரந்தர்! இதுதான்!
  அதோ ராஜகிரி! ஆடுவார் ஆட்டமும், பாடுவார் பாட்டுமாய் அந்நியர் களித்திருக்க யாரது மண்ணிலே யாரது நாடகம் பார்ப்போம் என்று நான் படையெடுக்க, என்னடா முடியும் உன்னால் என்று எதிரிகள் கொக்கரிக்க, இதுவும் முடியும்… இன்னமும் முடியும் என்று நான் வாளெடுக்க பெட்டையர் கூட்டம் உள்ளம் கலங்க மராட்டிய மண்டல மக்கள் களிக்க நான் கட்டுக்காத்த கோட்டை இதுதான்.
  அதோ கல்யாண்! கண்ணீர்விட்டு கதறிய பெண்கள், ஐயோ என்று அலறிய குழந்தைகள், முடிவறியாது தவித்த முதியோர் கொடியோர் கையில் சிக்கிக் கிடந்தனர்! பகைவர் பொடிப் பொடியாக போர்க்கலம் ஏந்தி மராட்டியக் கொடியை நான் ஏற்றிய கோட்டை இதுதான். என்னையா கேட்டார்கள்; நீ யாரென்று! எவன் இந்த மண்ணனுக்கு சொந்தக்காரனோ! எவனது நெற்றியில் எப்போதும் ரத்தத் திலகம் திகழ்ந்து கொண்டேயிருக்குமோ, அவனைப் பார்த்து வாழ வந்த வஞ்சகக் கூட்டம் கேலி பேசுகிறதாம்! தாழ்ந்த ஜாதி… அரசியலை அறியாதவன் என்று! இதுதான் முடிவென்றால்… இல்லையெனக்கு முடியென்றால், நான் காத்த கோட்டைகள் வேண்டுமோ? கொத்தளங்கள் வேண்டுமோ? வெற்றி பாட்டு வேண்டுமோ? பரவசம் வேண்டுமோ? கரையான் புற்றென்ன கருநாகங்களுக்கு சொந்தமோ? அடிபடட்டும் கோட்டைகள்! இடியட்டும் மதில் சுவர்கள்!ÕÕ

 4. RV says:

  மணிவண்ணன்,

  வசனத்துக்கு நன்றி! பயன்படும். 🙂

  ராமன் எத்தனை ராமனடி எனக்கு ஓரளவு பிடிக்கும் – அதில் சினிமாவை புத்திசாலித்தனமாக புகுத்தி இருப்பார்கள். ஆனால் அதிலும் வழக்கம் போல சிவாஜி தியாக சுடராக நடிப்பார். உலகில் உள்ள எல்லா கஷ்டங்களும் அவர் தலையில்தான் விடியும். கடைசியில் பாம்பு கடிப்பதாக காட்டாதது ஒன்றுதான் பாக்கி. நல்ல பாட்டுகள் – சித்திரை மாதம் பவுர்ணமி நேரம் என் ஃபேவரித்

 5. ஞாநி says:

  ராமன் எத்தனை ராமனடியில் வரும் நாடகம் சிவாஜி கணட இந்து ராஜ்யம் அல்லது சந்திரமோகன் என்ற அண்ணாவின் நாடகத்தை அடிப்படையாக்க் கொண்டது. இதில் சிவாஜியாக நடித்துத்தான் கணேசனுக்கு சிவாஜி என்ற பட்டப்பெயர் ( பெரியாரிடம்) கிடைத்தது.இந்த நடகத்தை எங்கள் பரீக்‌ஷா குழுவின் சார்பில் 90களில் நிகழ்த்தியிருக்கிறோம். ( இது பற்றிய விவரங்கள் தீம்தரிகிடவில் நான் எழுதிய கட்டுரையில் உள்ளன).

  ஆர்.வி. உங்கள் வயது என்ன ? ஒரு கியூரியாசிட்டிதான். நான் பிறக்காத 1953ல் படம் பார்த்ததாக எழுதிக் கொண்டிருக்கிறீர்களே ?

  அன்புடன் ஞாநி.

 6. RV says:

  அன்புள்ள ஞானி,

  உங்களை போன்றவர்கள் இந்த ப்ளாகை பார்த்தது மிக சந்தோஷமாக இருக்கிறது. எனக்கு 43 வயது. எங்கள் அறிமுக பக்கம் இங்கே – https://awardakodukkaranga.wordpress.com/about/

  1953-இல் வந்த படத்தை 1953-இலேயே பார்க்க வேண்டும் என்பதில்லையே? எனக்கு பழைய பாட்டு பைத்தியம் அதிகம். அதனால் 1975-க்கு பின்னால் வந்தது எல்லாம் புது படம் என்று நினைக்கிறேன். 🙂

  நீங்கள் நாகேஷ் பற்றி ஓ பக்கங்களில் எழுதியதை இந்த ப்ளாகில் மறு பதிவு செய்திருந்தேன். மறு பதிவு செய்த பிறகுதான் உங்கள் இணைய முகவரி தெரிய வந்தது. உங்கள் சைட்டுக்கு வந்து உங்களின் அனுமதியை கேட்டிருந்தேன். நீங்கள் பார்த்தீர்களா என்று தெரியவில்லை. நிறைய நாட்கள் ஆகி விட்டாலும் நீங்கள் சொன்னால் அந்த பதிவை நீக்க வேண்டித்தான் இருக்கும். நீங்கள் அனுமதித்தால் நன்றாக இருக்கும். பதிவு இங்கே.
  https://awardakodukkaranga.wordpress.com/2009/02/09/நாகேஷ்-பற்றி-ஓ-பக்கங்களி/

 7. m g gandhi says:

  The above all took my school days when we mono act those .

  Gandhi M G

 8. Jayakumar AROCKIASAMY says:

  Thank you so much. If the dialogue is written with full stop, comma, semi colon, colon, exclamation marks,… it would be fine.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: