1954-இல் தமிழ் சினிமா


இந்த வருஷம் 34 படங்கள் வந்திருக்கின்றனவாம். நான் பார்த்தவை அந்த நாள், இல்லற ஜோதி, கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி, கூண்டுக் கிளி, தூக்குத் தூக்கி, பெண், மலைக் கள்ளன், மனோகரா, ரத்தக் கண்ணீர் ஆகிய 9 படங்கள்தான்.

அந்த நாள் 1954-இன் சிறந்த படம் மட்டும் இல்லை, அது தமிழ் சினிமாவின், இல்லை இந்திய சினிமாவின் மிக சிறந்த படங்களில் ஒன்று. ராஷோமொன் வந்திராவிட்டால் அதை உலக அளவிலேயே குறிப்பிட்டு சொல்லலாம். அதைப் பற்றி பதிவுகளை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம். அதைப் பற்றி ஏற்கனவே எழுதி விட்டதால் இந்த வருஷத்துக்கு வேறு படத்தை பற்றி எழுதலாம் என்று இருக்கிறேன்.

இல்லற ஜோதி சுமாரான படம். எங்களுக்கு cult favorite ஆனா அசோகன் இந்த படத்தில்தான் அறிமுகம் ஆகி இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நடு நடுவே நாடகங்கள், பத்மினி நடனம் இதை வைத்து ஓட்டுவார்கள்.

கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி அந்த காலத்து காமெடி. கொஞ்சம் சிரிக்கலாம்.

கூண்டுக் கிளி ஒரு முக்கியமான முயற்சி. எம்ஜிஆரும் சிவாஜியும் சேர்ந்து நடித்த படம் என்பதற்காக அல்ல. அது கீழ் மத்திய தர வாழ்க்கையை ஓரளவு உண்மையாக சித்தரிக்க முயற்சி செய்தது. எதார்த்தமான படங்கள் தமிழில் மிக குறைவு. இது ஒரு pioneering attempt. வெற்றி பெற்றிருந்தால் எதார்த்தமான படங்கள் மேலும் வந்திருக்கக் கூடும்.

தூக்கு தூக்கி புகழ் பெற்ற நாடகம். ஜி. ராமநாதன் அற்புதமாக இசை அமைத்திருந்தார். டி.எம்.எஸ். தமிழ் சினிமாவில் இந்த படத்துக்கு பிறகுதான் காலூன்றினார். சிவாஜி அருமையாக நடனம் ஆடி இருப்பார். கதையோ, நடிப்போ பிரமாதம் என்று சொல்ல முடியாது. இந்த நாடகம்/சினிமா ஏன் வெற்றி அடைந்தது என்று புரிந்து கொள்ள அந்த காலத்தில் பிறந்திருக்க வேண்டும்.

பெண் ஒரு charming படம். அதன் விமர்சனம் இங்கே.

மலைக் கள்ளன் எம்ஜிஆரை உச்சத்துக்கு கொண்டு போன படங்களில் முக்கியமான ஒன்று. அதற்கு முன் சர்வாதிகாரி, மந்திரி குமாரி, மர்ம யோகி போன்ற படங்கள் வெற்றி அடைந்திருந்தாலும், அவர் ஒரு மாஸ் ஹீரோ ஆனது இந்த படத்துக்கு பிறகுதான். கதையில் அவர் செய்யும் சாகசங்கள் அந்த காலத்து ரசிகர்களை கவர்ந்தன. மலைகளுக்கு நடுவில் உள்ள கயிற்று பாதை பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆனால் படத்தை இப்போது ரசிக்க முடிவதில்லை. எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே பாட்டை கேட்டு விட்டு போக வேண்டியதுதான். (நாமக்கல் கவிஞர் எழுதிய இந்த நாவலும் பெருவெற்றி பெற்றது. ஹிந்தியிலும் ஆசாத் என்று திலிப் குமார், மீனா குமாரி நடித்து வந்த இந்த படம் சக்கைப்போடு போட்டது)

மனோகரா வசனங்களின் உச்சம். கலைஞரின் உச்சமாக இதையும் பராசக்தியையும்தான் நான் கருதுகிறேன். சிவாஜிக்கு இது ஒரு உச்சம். பம்மல் சம்பந்த முதலியாரின் எழுத்துக்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டுவிட்டனவாம். யாராவது அவர் எழுதியதை புத்தகமாக போடுங்கள் அப்பா!

எம்.ஆர். ராதா நினைவு கூரப்ப்படும்போதெல்லாம் ரத்தக் கண்ணீர் நினவு கூரப்படும். அவருடைய signature film. அவருடைய ஸ்டைலில் வசனம் பேசி கலக்குவார் – ராகுவும் சுக்ரனும் நாளைக்கு ஒன்றாக வருகிறார்கள், நாளைக்கு நல்ல முகூர்த்தம் என்று சொல்லும் ஜோசியரிடம், அவங்களை அடுத்த வாரம் வர சொல்லேன், எனக்கு நாளைக்கு வேலை இருக்கு என்ற மாதிரி பிச்சு உதறுவார். அவருக்கு வரவேற்பு கூட்டம் நடக்கும்போது அவர் பேசுவது கலக்கல். ஆனால் கலை ரீதியாக படம் எனக்கு ரசிக்கவில்லை. இந்த படத்தின் பலம் எம்.ஆர். ராதா பேசும் வசனங்கள்தான். அந்த காலத்தில் தொழு நோயாளியை நாடக மேடையிலும், சினிமாவிலும் காட்டுவது பலருக்கும் ஒரு ஷாக்காக இருந்திருக்க வேண்டும். அதனால் இந்த நாடகம்/சினிமா பெரிதும் பேசப்பட்டிருக்க வேண்டும்.

இவற்றை தவிர எதிர்பாராதது (சிவாஜி, பத்மினி, நாகையா, ஸ்ரீதர்), சார்லி சாப்ளின் நடித்த City Lights படத்தை உல்டா செய்து டி.ஆர். ராமச்சந்திரன் நடித்த ராஜி என் கண்மணி (மல்லிகைபூ ஜாதி ரோஜா என்ற பாட்டுக்காகவே) பார்க்க ஆசை. ஸ்ரீதர் எழுதி, டி.கே.எஸ். சகோதரர்கள் நடித்த ரத்த பாசம் (ஹிந்தியில் அசோக் குமார், கிஷோர் குமார் நடித்து பாய் பாய் என்று வந்தது) பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறேன்.

நான் பாருங்கள் என்று சிபாரிசு செய்வது அந்த நாள், கூண்டுக் கிளி, தூக்கு தூக்கி (பாட்டுகளுக்காக), பெண், மனோகரா ஆகியவைதான். இவற்றில் மனோகரா பற்றி எழுதலாம் என்றிருக்கிறேன்.

இந்த வருஷம் பற்றி முரளிகண்ணன் எழுதிய சிறப்பான கட்டுரையை இங்கே காணலாம்.