தில்லானா மோகனாம்பாளில் நாதசுரம் வாசித்த எம்.பி.என். பொன்னுசாமி, சேதுராமன் சகோதரர்கள்


நன்றி, விகடன்!

தில்லானா மோகனாம்பாள் படத்தில் வருகின்ற நலம்தானா? என்னும் பாடலும், அந்த நடன கீதத்துக்கு ஏற்ப நலமாக ஒலிக்கும் நாதசுர இசையும் எல்லோரையும் ஈர்த்துக்கொண்டிருக்கின்றன. நமக்கெல்லாம் அந்த இனிய இசையை வழங்கியவர்கள், நாதசுரக் கலைஞர்களான திருவாளர்கள் மதுரை எம்.பி.என்.சேதுராமன், எம்.பி.என். பொன்னுசாமி சகோதரர்கள் ஆவர்.

பம்பாய், டெல்லி போன்ற பெரிய நகரங்களிலும், தமிழகத்தின் பல இடங்களிலும் நாதசுர இசையினால் பலருடைய இதயங்களைக் குளிர்விக்கும் இவர்கள் ராஷ்டிரபதி பவனிலும் இசை மழை பொழிந்திருக்கிறார்கள். ராமேஸ்வரத்தில் முன்னாள் ராஷ்டிரபதி டாக்டர் ராதாகிருஷ்ணனும் இவர்கள் வாசிக்கக் கேட்டு மகிழ்ந்திருக்கிறார். திரு.காமராஜர் இந்தச் சகோதரர்களின் இனிமையான நாதசுர வாசிப்பைக் கேட்டு மகிழ்ந்து இவர்களுக்கு அளித்த தங்க மெடலை, மத்திய உள்துறை அமைச்சர் திரு.சவானிடம் யுத்த நிதிக்காக மனமுவந்து கொடுத்துத் தங்கள் மனமும் தங்கமென அறிவித்திருக்கிறார்கள்.

தில்லானா மோகனாம்பாள் படத்தில் ஒப்பந்தம் செய்யப்படுவதற்கு முன், இயக்குநர் ஏ.பி.என், திரை இசைத்திலகம் கே.வி.மகாதேவன் இருவர் முன்னிலையில் முதலில் வாசித்திருக்கிறார்கள்.

அடுத்த நாள், இன்னொரு முக்கியஸ்தர் முன்னிலையிலும் வாசிக்க வேண்டியிருந்தது. ஒரு மணியல்ல, இரண்டு மணியல்ல, மூன்று மணி நேரத்துக்கு மேல் அவர்களின் நாதசுர இசையைக் கேட்டுக் களித்த பிறகே படத்துக்கு ஒப்பந்தம் செய்ய முடிவு செய்தாராம் அந்த முக்கியஸ்தர்.

அவர் வேறு யாருமல்ல. தில்லானா மோகனாம்பாளில் நாதசுர கலைஞராகத் தோன்றி, நாதசுரக் கலைஞர்களே வியக்கும் வண்ணம் முகபாவங்களுடன் அற்புதமாக வாசித்த பிறவிப் பெரும் நடிகர் சிவாஜி கணேசன்தான்.

நாதசுர வித்துவான்கள் நாங்களா, அவரா என்று வியக்கும் வண்ணம் சிக்கல் சண்முக சுந்தரம் வெளுத்து வாங்கிவிட்டார் என வாய்க்கு வாய் நடிகர் திலகத்தை மெச்சிப் பூரிக்கிறார்கள் நாதசுர சகோதரர்கள்.

ஏ.பி.நாகராஜன் பற்றிக் கேட்ட போது “அவர் எங்களின் உற்ற நண்பர். அவரை எங்கள் குடும்பமே தெய்வமாக வணங்கி வருகிறது. தில்லானா மோகனாம்பாள் வெளியாவதற்கு முன் எனக்கு ஓர் ஆபரேஷன் நடந்தது. அச்சமயம் அதற்கான செலவுத் தொகை பூராவையும் கொடுத்து, என் உயிரையே மீட்டுக் கொடுத்த இரக்க உள்ளம் படைத்தவர் ஏ.பி.என்.” என்றார் சேதுராமன்.

ஆர்வி: நலம்தானா பாட்டை இங்கே கேட்கலாம்

ராமன் தேடிய சீதை – என் விமர்சனம்


ராமன் தேடிய சீதை எம்ஜிஆரின் அறுவைப் படங்களில் ஒன்று. 1972-இல் வந்தது. எம்ஜிஆர் தவிர அசோகன், நம்பியார், ஜெயலலிதா, நாகேஷ், வி.எஸ். ராகவன், வி.கே. ராமசாமி ஞாபகம் இருக்கிறது. எம்ஜிஆருக்கு எம்எஸ்வியோடு ஏதோ சண்டை போலிருக்கிறது. அதனால் ஷங்கர் கணேஷ் இசை. யார் இயக்கம் என்று நினைவில்லை. அனேகமாக ப. நீலகண்டனாக இருக்கும்.

விகடன் விமர்சனத்தில் சொன்ன மாதிரி எம்ஜிஆருக்கு கொஞ்சம் வித்தியாசமான கதைதான். அவர் இங்கே ஒரு யூத் – காதலை தேடுகிறார். வயது அவருக்கு ஒரு காம்ப்ளெக்ஸ் ஆக ஆரம்பித்துவிட்டது என்று நினைக்கிறேன். சுருள் முடி விக், எக்கச்சக்க மேக்கப், மஞ்சள் கலர் பாண்ட், சிவப்பு கலர் சட்டை என்று ஆரம்பித்துவிட்டார்.

ஒரு முதிய தம்பதியினர் எம்ஜிஆருக்கு ஒரு லட்சிய மனைவி எப்படி இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆறு குணங்கள் கொண்டவளாம் ஒரு பாவைதான் லட்சிய மனைவி. எனக்கு ஞாபகம் இருப்பது படுக்கையில் எப்படி இருக்க வேண்டும் என்ற ஒரே குணம்தான். என் மனைவி male chauvinist pig என்று கத்துவது கேட்கலாம். அந்த பெண்ணை – ஜெவை – சுலபமாக கண்டுபிடிக்கும் எம்ஜிஆர் அவர் இறந்துவிட்டார் என்று நினைத்து அவரை தேடி அலைகிறார். நடுவில் நம்பியார், அசோகன், சித்தப்பா வி.கே.ராமசாமி, போலி ஜெயலலிதா எல்லாரும் அவரை ஏமாற்ற முயற்சிக்கிறார்கள். வாத்தியாரா ஏமாறுபவர்? மூக்கை துடைத்துக் கொண்டு, பல சண்டைகள் போட்டு எல்லா உண்மைகளையும் கண்டுபிடித்து ஜெவுடன் சேர்ந்து சுபம்!

ஷங்கர் கணேஷின் இசை அவர்கள் தரத்துக்கு above average, எம்ஜிஆரின் தரத்துக்கு below average. திருவளர்செல்வியோ நல்ல பாட்டு.

வேறு பாட்டு எதுவும் ஞாபகம் இல்லை.

படம் தீவிர எம்ஜிஆர் ரசிகர்களுக்காக. பத்துக்கு 4 மார்க் கொடுக்கலாம். C- grade.

ராமன் தேடிய சீதை (Raman Thedia Seethai)


ramanthediyaseethai
விகடன் பொக்கிஷம் சினிமா விமர்சனம் – 30-4-1972-இல் வந்தது. நன்றி, விகடன்!

ராமன் தேடிய சீதையில் தயாரிப்பாளர்கள் தேடி எடுத்திருக்கிற கதையம்சம் சுவையானது.

ஒரு லட்சிய மனைவியின் ஆறு குணங்கள் என்னென்ன என்று நிறைந்த வாழ்வு வாழும் ஒரு முதிய தம்பதியர் மூலம் அறிந்து, அந்தப் பெண்ணைத் தேடி மணந்துகொள்கிறான் கதாநாயகன். அந்த முயற்சியில் அவனுக்கு ஏற்படும் அனுபவங்கள்தாம் இப்படத்தின் கதை.

பாம்பாட்டி நடனம் முதல் காபரே வரை விதவிதமான நடனங்களை ஆடிக்கொண்டே இருக்கிறார் ஜெயலலிதா. ஆடை களையும் நடனத்தைக்கூட அவர் விட்டுவைக்கவில்லை. ஒரு நடனக் காட்சியில் அவருடைய ஆடை, கதாநாயகரான எம்.ஜி.ஆரே முகத்தைச் சுழித்துக்கொள்ளும் அளவு விரசத்தின் எல்லையைத் தொட்டுவிட்டாலும், அவர் நடனங்கள் கண்களுக்கு ரசமாகவே இருக்கின்றன.

எம்.ஜி.ஆருக்கு இந்தப் படத்தில் சற்று மாறுதலான பாத்திரம். ஏதாவது ஒரு பிரச்னையிலோ, போராட்டத்திலோ ஈடுபட்டு படம் முழுவதும் சீரியஸாக இல்லாமல் இருப்பதே அந்த மாறுதல்! லட்சிய மனைவி வேட்டையில் ஈடுபட்டிருக்கிறார் அல்லவா? அதனால்தானோ என்னவோ, ஆரம்பம் முதல் இறுதி வரை உற்சாகமாகவும் உல்லாசமாகவும் மாப்பிள்ளை மாதிரி தோன்றி, சிறப்பாக நடிக்கிறார். அசோகனுடன் அவர் போடும் சண்டை மயிர்க்கூச்செறிய வைக்கிறது.

எம்.ஜி.ஆரின் கன்னம் அதிர்ஷ்டம் செய்தது. அவர் கன்னத்தில் பாம்பு கொத்திய விஷத்தை ஜெயலலிதா தன் வாயினால் உறிஞ்சி எடுக்கிறார்! (சென்ஸார் விஷயத்தில் எல்லாரும் இப்படிச் சாமர்த்தியமாக இருக்கத் தெரிந்து கொண்டிருந்தால், கோஸ்லா கமிட்டிக்கு வேலையே இருந்திருக்காதே!)

ஆரம்பத்திலேயே, ஒரு சில நிமிட சந்திப்பின்போதே சீதை யைத் தன் லட்சியப் பெண்ணாகத் தேர்ந்தெடுத்துவிட்ட பின் கதையில் சுவாரசியம் ஏற்படுமா? அதேபோல் சீதை இறந்துவிட்டாள் என்று கேள்விப்பட்டதும் கதாநாயகன் வேறு பெண்ணைத் தேடிப் புறப்படுவதும் உயர்வாக இல்லை.

இந்தக் குறைகளெல்லாம் ஆழமாகச் சிந்திக்க ஆரம்பித்தால்தான் தோன்றும். ஆனால், படம் பார்க்கும்போது அப்படியெல்லாம் நம்மைச் சிந்திக்கவிடாமல் கலகலவென்று பொழுதுபோக்குச் சம்பவங்களால் நம் கவனத்தைத் திருப்பிவிடுகிறார்கள்!