தில்லானா மோகனாம்பாள் – என் விமர்சனம்


அந்த காலத்தில் இந்த படத்தை பற்றி என்ன நினைத்தார்கள் என்று தெரிந்து கொள்ள விரும்பினால் விகடன் விமர்சனம் இங்கே

மோகனாம்பாளை நான் நாலைந்து முறை பார்த்திருக்கிறேன். முதல் முறை பார்த்தபோது சிவாஜியின் நடிப்புக்கு கண்மூடித்தனமான ரசிகனாக இருந்த காலம். அவர் தும்மினாலும் என்ன நடிப்பு என்றுதான் சொல்லுவேன். அப்போது சிவாஜி நன்றாக நடித்திருந்தார், ஆனால் அவரை மனோரமாவும் நாகேஷும் தூக்கி சாப்பிட்டுவிட்டார்கள் என்று தோன்றியது. பாலையா நடிப்பு பிடித்திருந்தது. பாட்டுக்கள் பிடித்திருந்தன. மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன பாட்டில் பத்மினியின் மூக்குத்தி டாலடிக்கும் காட்சி அற்புதமாகத் தோன்றியது.

யாரையும் கண்மூடித்தனமாக ரசிக்கும் காலகட்டம் போனதும் இந்த படத்தை மீண்டும் ஒரு முறை பார்க்க நேர்ந்தது. ஏற்கனவே இருந்த நல்ல அபிப்ராயம் எல்லாம் நொறுங்கிவிட்டன. மெலோட்ராமாவை பிழிந்து எடுப்பார்கள். அதுவும் அந்த நலம்தானா பாட்டு வரும்போது ஏண்டா எல்லாரும் இப்படி கொலை வெறி பிடிச்சு அலயறீங்க என்று கத்த வேண்டும் போலிருந்தது. சிவாஜியே மோசம்; ஆனால் பத்மினி! இதுக்குத்தான் அமெரிக்காவிலிருந்து வந்து ரசிகர்களை இப்படி ஒரேயடியாக ஒழிக்க வேண்டுமா? நாகேஷ் இவர்களுக்கு மாறாக அலட்டிக்கொள்ளாமல் நடித்திருப்பதால்தான் முன்னாலும் அவர் நடிப்பு பிடித்திருக்க வேண்டும் என்று உணர்ந்தேன். மனோரமாவுக்கு ஓவர் த டாப் ரோல்தான். ஆனாலும் அவர் நன்றாகத்தான் நடித்திருந்தார். கொடுமை என்னவென்றால் இந்த படத்தை என் அம்மாவோடு பார்த்தேன். என் அம்மாவுக்கு இது ஒரு டாப் டென் திரைப்படம். நிமிஷத்துக்கு நிமிஷம் சிவாஜி என்னமா நடிக்கிறார், பத்மினி எப்படி கலக்கறா, என்றெல்லாம் கமென்ட் விட்டுக் கொண்டே இருந்தார். எனக்கோ சிவாஜியின் சொதப்பலையும் மிஞ்சிய பத்மினி என்றுதான் ஒன் லைன் விமர்சனம் மனதில் ஓடிக் கொண்டே இருக்கிறது. இன்றைக்கு ஒரு ஐம்பது வயதுக்கு கீழ்ப்பட்டவர்களுக்கு இந்த படம் பிடிக்க வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன். என் மனைவி பார்த்தாலே ஓடி விடுவாள்.

அதற்கு ஒரு preparation வேண்டும். தி. மோகனாம்பாளை விகடனில் வாராவாரம் படித்தவர்கள் ரியாக்ஷன் வேறு மாதிரிதான் இருக்கும். நான் அந்த நாவலை வாங்கிப் படித்தேன். படு சுமாரான நாவல். இல்லை இது எப்போது படமாக வரப்போகிறது என்று எதிர்பார்த்து எதிர்ப்பார்த்து பார்த்தவர்களின் ரியாக்ஷன் வேறு மாதிரிதான் இருக்கும். எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்த்தால் இந்த படம் பிடிப்பது கஷ்டம்.

கடைசியாக இரண்டு மூன்று வருஷம் முன்னால் மீண்டும் இந்த படத்தை டிவியில் பார்த்தேன். பத்மினி இமாலய சொதப்பல் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. நாகேஷ் எல்லாரையும் தூக்கி சாப்பிட்டுவிட்டார் என்பதிலும் எந்த மாற்றமும் இல்லை. பாலையா, மனோரமா குறிப்பிடும்படி நடித்திருந்தார்கள் என்பதிலும் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் சிவாஜியின் நடிப்பை பற்றிய எண்ணம் மீண்டும் ஒரு முறை மாறியது. சிக்கல் ஷண்முக சுந்தரம் ஒரு அப்பாவி, வெட்டி பந்தா நிறைய உள்ளவன். அவன் எப்படி நடந்து கொள்வான்? அவன் வாழ்க்கையில் அண்டர்ப்ளே என்பது ஏது? எல்லாவற்றுக்கும் உணர்ச்சிவசப்படத்தான் படுவான். சிவாஜி கொந்தளிப்பதில் என்ன ஆச்சரியம்? அதுதான் அந்த காரக்டர்! (ஆனால் நலம்தானா மெலோட்ராமாவை கசக்கி பிழிவது என்பதில் எந்த மாற்றமும் இல்லை)

1968-இல் வந்த படம். சிவாஜி, பத்மினி, நாகேஷ், மனோரமா, பாலையா நடித்தது. தங்கவேலு, டி.ஆர். ராமச்சந்திரன், நம்பியார், சி.கே. சரஸ்வதி, சுகுமாரி, நாகையா, ஏ.வி.எம். ராஜன், சாரங்கபாணி, பாலாஜி, செந்தாமரை மாதிரி நிறைய பேர் வந்து போவார்கள். கே.வி. மகாதேவன் இசை. எம்.பி.என். பொன்னுசாமி/சேதுராமன் சகோதரர்கள் நாதஸ்வரம். கொத்தமங்கலம் சுப்புவின் மூலக்கதை. ஏ.பி. நாகராஜன் இயக்கம்.

ஏ.பி.என். நாகேஷ், பத்மினி ஆகியோருக்காக காத்திருந்து எடுத்த படமாம்.

கதை தெரிந்ததுதான். கோபக்கார, ஆனால் வித்தைக்கார நாதஸ்வர வித்வான் சிக்கல் ஷண்முக சுந்தரம். அழகர் மலையில் புது ஆட்டக்காரி மோகனாவோடு முதல் சந்திப்பிலேயே சண்டை, சவால். ஆனால் மோகனாவின் ஆட்டத்தை சிக்கலார் மறைந்திருந்து பார்க்கும் மர்மத்தை மோகனா புரிந்து கொள்கிறாள். தாசி குலத்தில் பிறந்த மோகனாவை ஏழை ஷண்முக சுந்தரத்திடம் ஒப்படைக்க அவள் அம்மாவுக்கு மனதில்லை. அவளுக்கு சவடால் வைத்தி துணை. மோகனாவை தவறாக புரிந்து கொண்டு ஜில் ஜில் ரமாமணியுடன் மலேயாவுக்கு போக திட்டமிடும் சிக்கலாரை மோகனா சவாலை நினைவூட்டி நிறுத்தி விடுகிறாள். சவால் போட்டியின்போது ஷண்முக சுந்தரத்துக்கு கத்திக்குத்து, நாதஸ்வரத்தை தூக்க முடியவில்லை. குணமாகி வந்த பிறகும் காதலர்கள் ஒன்று சேர மோகனாவின் அம்மா தடையாக இருக்கிறாள். சவடால் வைத்தியின் சதியால் மீண்டும் ஷண்முக சுந்தரம் மோகனாவை தவறாக புரிந்துகொள்ள, மோகனா தற்கொலைக்கு முயற்சி செய்ய, அம்மா மனம் மாறி காதலர்கள் ஒன்று சேர்ந்து சுபம்!

நடிப்பை பற்றி பேசியாயிற்று. இசை! அற்புதம்!

பாண்டியன் நானிருக்க அற்புதமான டப்பாங்குத்து. குத்துன்னா இது! அதுவும் அஜக்தா, மஜக்தா, சதக் சதக் சதக்தா என்று வார்த்தை பிரயோகம் அபாரம்! ராகிங் காலத்தில் இந்த பாட்டை பாடினால் சில சீனியர்கள் விட்டுவிடுவார்கள்!

மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன நல்ல பாட்டு. அழகாக படமாக்கப்பட்டிருக்கும். அதுவும் பாலையா மேலே விழும் கையை ஒதுக்குவதும், பிறகு அது சிவாஜி கை என்று தெரிந்து பயந்து ஓடுவதும் அருமை!

நலம்தானா பாட்டாக கேட்க நன்றாக இருக்கிறது. ஆனால் அந்த பாட்டை கேட்கும்போதெல்லாம் பத்மினி ஏன் இப்படி கொலை வெறி பிடிச்சு அலைஞ்சாங்க என்றுதான் கேள்வி எழுகிறது.

சிவாஜி இங்கிலிஷ் நோட்ஸ் வாசிப்பது நன்றாக வந்திருக்கும்.

எல்லா பாட்டுகளையும், நாதஸ்வர இசையையும் இங்கே கேட்கலாம்.

எனக்கு பாட்டு கேட்கத்தான் தெரியும். சிவாஜி நிஜ நாதஸ்வர வித்வான் போல அழகாக வாசித்திருப்பார் என்று சொல்வார்கள். கேட்டுக்கொள்ள வேண்டியதுதான். கிடைத்த ஒரு யூட்யூப் க்ளிப் கீழே.

மொத்தத்தில் மெலோட்ராமாவை ஓரளவாவது சகித்துக் கொள்வீர்கள் என்றால் நாகேஷ், சிவாஜியின் நடிப்பு, அருமையான இசை, நல்ல பாட்டுக்கள் ஆகியவற்றுக்காக பாருங்கள். பத்மினி நடிக்கும் காட்சிகளில் தம் கிம் அடிக்க போய்விடுங்கள். பத்துக்கு 6.5 மார்க். B- grade.

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

17 Responses to தில்லானா மோகனாம்பாள் – என் விமர்சனம்

 1. சுபாஷ் says:

  அப்பாவிற்கு மிகவும் பிடித்த படம்.
  விமர்சனத்திற்கு நன்றிகள் RV.

 2. 🙂

  இந்த திரைப்படத்தைப்பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து நிலவும் என்று உங்கள் விமர்சனம் படித்தபின்புதான் அறிய முடிகிறது.

  நாகேஷைப்பற்றிய உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. சிவாஜியின் நடிப்பு எனக்குத்தெரிந்து இந்த படத்தில் மிகச்சிறப்பாக அமைந்திருக்கும். அதுவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பத்மினியுடன் கோபமாக சவால் விட்டு திரும்பும் காட்சிகள், மனோரமாவுடன் பேசும் வசனங்கள் ஒரு சோறு பதம்.

  பத்மினியின் நடிப்பும் அவருக்கிணையானதுதான். ஆனால் சிவாஜியை நாதஸ்வரம் வாசிக்க சொல்லி கேட்டு ரசிக்கும் காட்சியில் மனோரமா கலக்கிவிடுவார் :-))

  நான் அடிக்கடி பார்க்கும் படத்தில் இதுவும் ஒன்று.

  பகிர்விற்கு நன்றி நண்பரே!

 3. நித்தில் says:

  அப்பா பாலையாவை மிகவும் ரசிப்பார்கள். பத்மினியின் நடனம் மிகவும் ரசிக்கப்பட்டதாம். கதை நடக்குமிடம் திருவாரூர், நாகை என்பதாலும் நாங்களும் அதே பகுதியை சேர்ந்தவகள் என்பதாலும் அப்பாவிற்கு இந்த படம் எப்பவுமே ஸ்பெஷல்தான்.

 4. அருமை நண்பன் ஆர்வீக்கு

  மிக அருமையான இந்த நாதஸ்வரக் கட்டத்தை பதவிட்டமைக்கு ஸ்பெஸல் தாங்ஸ்!!!

  • RV says:

   சென்ஷி, நித்தில், தங்க முகுந்தன்,

   தி. மோகனாம்பாள் பதிவு மறுமொழிகளுக்கு நன்றி!

   நித்தில், அனேகமாக பல பெற்றோர்கள் ரசிக்கும் படம் இது. ஆனால் எழுபதுகளில் பிறந்தவர்களுக்கு அனேகமாக பிடிப்பதில்லை. இதுதான் ஜெனேரஷன் கேப் என்பதோ?

   சென்ஷி, உங்களுக்கு பிடித்த படம் என்று தெரிகிறது. அப்படி இருந்தும் என் மாறுபட்ட கருத்துகளை சகித்துக் கொண்டிருக்கிறீர்கள். நன்றி!

   தங்க முகுந்தன், நாதஸ்வர இசையை ரசித்தது பற்றி சந்தோசம். இந்த படத்தில் இசை மிக அருமையானது. ஆனால் பாதி பேர் சிவாஜி, நாகேஷ், பத்மினி பற்றிதான் பேசுகிறார்கள்.

 5. Das says:

  ஆர் வீ

  தாங்கள் நாகேஷ் பற்றி எழுதியதை வழி மொழிகிறேன் . ஆனால் கணேசனைப் பற்றி அபிப்பிராயம் மாற்றியது ஏன்? எனது பார்வையில் பத்மினியும் கணேசனும் சுமார். நாகேஷும் வடிவும் டாப்! அதுவும் நாகேஷின் தஞ்சை வட்டார வழக்கில் (“சட்டையை அவிழ்த்திட்டு வாசிக்கிறது!”) பேசுவது மிகவும் நேர்த்தி!! ஒன்றை கவனித்தீர்களா ? தஞ்சையை களனாக கொண்டு வரும் திரைப்படங்கள் அபூர்வம்.

  • RV says:

   தாஸ்,

   தி. மோகனாம்பாளில் சிவாஜியின் நடிப்பை பற்றி கருத்துக்கள் மாறுவதற்கு கால கட்டம்தான் காரணம். பன்னிரண்டு வயதில் சிவாஜி என்றால் நடிப்பு, நடிப்பு என்றால் சிவாஜி என்ற எண்ணம் இருந்தது. இருபத்தைந்து வயதிலோ மிகை நடிப்பை கண்டாலே இது என்ன செயற்கைத்தனமாக என்று தோன்றியது. இப்போதோ காரக்டருக்கேற்ப நடித்திருக்கிறார் என்று தோன்றுகிறது.

   ரா. தே. சீதையில் அசோகன் என்ன செய்தார் என்று சுத்தமாக நினைவில்லை. அவர் பாணியில்தான் நடித்திருப்பார் என்று நினைக்கிறேன்.

 6. surya says:

  Dear RV, The selection of artist will be very much predominant by APN.

  நாகேஷ் தவிர எவனாலும் அந்த மாதிரி நடிக்கவே முடியாது.

  பத்து முறையாவது பார்த்திருப்பேன்.

  இப்போவும் பார்க்க தூண்டும் படம்.

  பதிவிற்கு நன்றி.

  தற்போதுள்ள இயக்குநர் ஷங்கரும் சிறு வேடங்களுக்கு கூட அந்த மாதிரி ஆட்களையே தேர்வு செய்வார்.

  இந்தியன் – Govt officers.

  Jeans – Radhika, Nazar, Geetha etc..,

  அந்நியன் – சொக்கன் 65 …

 7. SUREஷ் says:

  இந்தப்படத்தை நீங்கள் எப்படி ஓவர் ஆக்டிங் வகையறா ஆக்குகிறீர்கள் என்று தெரியவில்லை..

  அந்தக் காதாபாத்திரங்கள் அப்படித்தான்.

  • RV says:

   சுரேஷ்,

   தி. மோகனாம்பாள் பற்றிய மறுமொழிக்கு நன்றி!

   இல்லை, எனக்கு பத்மினி ஓவர் ஆக்ட் செய்து சொதப்பிவிட்டதாகத்தான் படுகிறது. நீங்கள் சொன்ன சுட்டியை font பிரச்சினையால் படிக்க முடியவில்லை.

 8. K.V.Rudra says:

  தரமான படம், திறமான இசை,ஆவலுடன் எதையும் அணுகினால் அற்புதமாகத்தான் இருக்கும், தேவை தீர்க்கப்பட்டால் …………………..

 9. Pingback: சினிமாவாக வந்த தமிழ் நாவல்கள், சிறுகதைகள் « சிலிகான் ஷெல்ஃப்

 10. Pingback: சினிமாவாக வந்த தமிழ் நாவல்கள், சிறுகதைகள் | சிலிகான் ஷெல்ஃப்

 11. Pingback: கொத்தமங்கலம் சுப்பு | சிலிகான் ஷெல்ஃப்

 12. Udaikumar says:

  எத்தனை ஆண்டுகள் கழிந்த பின்பும் ஒவ்வொரு காட்சியையும் அனுபவித்து ரசித்து பார்க்கலாம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: