1955-இல் தமிழ் சினிமா


ஜுரம் வந்து இந்த சீரிஸில் ஒரு இடைவெளி ஏற்பட்டுவிட்டது. மீண்டும் தொடர்கிறேன்.

1955-இல் 34 படங்கள் வந்திருக்கின்றன. நான் பார்த்தவை கணவனே கண் கண்ட தெய்வம், குலேபகாவலி, மாமன் மகள், மிஸ்ஸியம்மா இவைதான். பார்க்க விரும்புபவை கள்வனின் காதலி, டவுன் பஸ், டாக்டர் சாவித்ரி (வாதம் வம்பு செய்யக் கூடாது பாட்டுக்காக), மகேஸ்வரி, மங்கையர் திலகம், பெண்ணின் பெருமை, முதல் தேதி, கோமதியின் காதலன்.

சிவாஜிக்கு நிறைய படங்கள் – உலகம் பல விதம், கள்வனின் காதலி, காவேரி, கோடீஸ்வரன், மங்கையர் திலகம், பெண்ணின் பெருமை, முதல் தேதி. எம்ஜிஆருக்கு குலேபகாவலி மட்டும்தான் போல. ஜெமினி பெரிய ஹீரோவாக ஆரம்பித்துவிட்டார். மாமன் மகள், பெண்ணின் பெருமை, கணவனே கண் கண்ட தெய்வம், குண சுந்தரி, மகேஸ்வரி, நீதிபதி ஆகிய படங்கள் அவருக்கு.

கள்வனின் காதலி சுவாரசியமாக செல்லும் ஒரு நாவல். எப்படி படம் ஆக்கி இருக்கிறார்கள் என்று பார்க்க ஆவல். சிவாஜி, பானுமதி, சாரங்கபாணி நடித்தது. வெய்யிற்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு என்ற அருமையான பாட்டு உண்டு. யாராவது MP3 இருந்தால் சொல்லுங்கள்.

டவுன் பஸ் பற்றி ஒன்றும் தெரியாது – ஆனால் நல்ல பாட்டுகள் நிறைய உண்டு. கே.வி. மஹாதேவன் இசை. சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா, பொன்னான வாழ்வே மண்ணாகிப் போனால் ஆகிய பாட்டுகளை இங்கே கேட்கலாம்.

டாக்டர் சாவித்ரி பற்றியும் எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் அதில் என்.எஸ்.கே. பாடும் வாதம் வம்பு செய்யக் கூடாது பாட்டு எனக்கு பிடிக்கும். அதிலும் இரண்டு வரிகள்:
அம்பது ரூபா சம்பளக்காரன் பொண்டாட்டி – தினம்
ஒம்பது முறை காப்பி குடிப்பது அநீதி!

சின்ன வயதில் விழுந்து விழுந்து சிரிப்போம். யாராவது MP3 இருந்தால் சொல்லுங்கள்.

மகேஸ்வரி தெலுங்கில் மல்லேஸ்வரி என்று வெளிவந்தது. தெலுங்கில் இது ஒரு க்ளாசிக் படம். எனக்கு தெரிந்த ஒரு தெலுங்கு மாமியால் தெலுங்கில் இந்த படம் பார்த்து ரசித்திருக்கிறேன். கிருஷ்ண தேவராயர் இரவில் நகர்வலம் போகும்போது ஒரு காதலி தன் காதலனிடம் தான் ராணியாக வாழ வேண்டும் என்று சொல்வதை கேட்கிறார். உடனே தான் மணந்து கொள்வதாக அந்த பெண்ணை அந்தப்புரத்துக்கு அழைத்து வந்துவிடுகிறார். காதலனை பிரிந்து தவிக்கும் காதலியாக சாவித்ரி, ராஜாவாக என்.டி.ஆர்., காதலனாக ஏ.என்.ஆர். நடித்த படம். தமிழில் ஏ.என்.ஆருக்கு பதில் ஜெமினி.

மங்கையர் திலகம் சிவாஜி படம் என்பதைத் தவிர வேறு ஒன்றும் தெரியாது. இருந்தாலும் பார்க்க வேண்டும் என்று ஒரு ஆசை. பெண்ணின் பெருமையும் அப்படித்தான். முதல் தேதி சிவாஜி படம். ஒன்ணிலிருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம் கொண்டாட்டம் என்ற என்.எஸ்.கே. பாட்டு பிரபலம். யாராவது MP3 இருந்தால் சொல்லுங்கள்.

கோமதியின் காதலன் தேவன் எழுதிய நாவல். எப்படி படமாக்கி இருக்கிறார்கள் என்று பார்க்க ஆவல்.

கணவனே கண் கண்ட தெய்வம் நல்ல பாட்டுகள் – உன்னை கண் தேடுதே, அன்பில் மலர்ந்த நல் ரோஜா, எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவது ஏனோ– நிறைய உடையது. பாட்டுகளை இங்கே கேட்கலாம். அஞ்சலி தேவி மாய மந்திரம் நிறைந்த ஒரு சீரிஸ் படங்களை – மணாளனே மங்கையின் பாக்யம், மங்கையர் உள்ளம் மங்காத செல்வம் மாதிரி – ஜெமினி ஹீரோ, தன் கணவர் ஆதி நாராயண ராவ் இசை, மாயாஜால காட்சிகள் இவற்றை வைத்து எடுத்தார். இதுதான் முதல் என்று நினைக்கிறேன். இந்த படங்களை இன்று பார்ப்பது கஷ்டம்.

குலேபகாவலி எம்ஜிஆரை இன்னும் மேலே ஏற்றியது. சொக்கா போட்ட நவாபு, மயக்கும் மாலை பொழுதே நீ போ போ போன்ற இனிமையான பாடல்களை கொண்டது. பாட்டுகளை இங்கே கேட்கலாம். ஏதோ அரேபிய கர்ண பரம்பரை கதை போல தெரிகிறது. குல்-எ-பகாவலி என்றால் ஹிந்தியில் பூந்தோட்ட சொந்தக்காரி என்று பொருளோ?

மாமன் மகள் ஜெமினி, சந்திரபாபு நடித்தது. ஜெமினிக்கு வெற்றிப்படம் என்று நினைக்கிறேன். மரண கடிப் படம். கோவா மாம்பழமே என்று சந்திரபாபு பாடும் ஒரு பாட்டு கொஞ்சம் சுமாராக இருக்கும்.

இந்த வருஷம் வந்த படங்களில் எனக்கு பிடித்தது மிஸ்ஸியம்மாதான். அதை பற்றி அடுத்த பதிவில்.

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

2 Responses to 1955-இல் தமிழ் சினிமா

  1. Das says:

    ஆர் வி

    என்னிடம் “வெய்யிற்கேற்ற நிழலுண்டு” பாடலின் mp3 உள்ளது, தங்கள் மின்-முகவரி கிடைத்தால் அனுப்புகிறேன். தங்கள் கூறிய காரணத்திற்காகவே எனக்கும் அந்த இரண்டு படங்கள் “கள்வனின் காதலி” (அமரர் கல்கி கதையை முடிக்கும் போது எழுதியிருப்பார் – கள்வனின் காதலி நாளடைவில் கடவுளின் காதலி ஆனார்), மற்றும் கோமதியின் காதலன் (தேவனுக்காகவே))

  2. RV says:

    நன்றி, தாஸ்! முகவரி rv dot subbu at gmail dot com

பின்னூட்டமொன்றை இடுக