திரை உலக வாழ்வை பற்றி பானுமதி


bhanumathi

ஒரு ஓசி போஸ்ட் போட்டுக் கொள்கிறேன். தன் திரை உலக வாழ்வை பற்றி பானுமதி விகடனில் சொன்னது. நன்றி, விகடன்!

பானுமதி நடித்த படங்களில் எனக்கு மிகவும் பிடித்தது அன்னை. அதைப் பற்றி எழுதியதை இங்கே காணலாம்.

நான் நடிக்க வந்து 46 வருஷம் ஆகுது. எங்கப்பாவோட இன்ட்ரஸ்ட், எனக்கிருந்த மியூசிக் இன்ட்ரஸ்டாலதான் நான் சினிமாவுக்கே வந்தேன்.

நான் 39, 40-ல்தான் இந்த சினிமா ஃபீல்டுக்கு வந்தேன். முதல் படம் வரவிக்ரம் தெலுங்குல. அப்போ எங்கப்பாவோட நண்பர் சி.புல்லய்யா, எங்காப்பாகிட்ட வந்து என்னை நடிக்கக் கூப்பிட்டார். அந்தப் படத்துல நிறையப் பாட்டு இருக்குன்னு சொன்னார். எங்கப்பா சங்கீதப் பைத்தியம். கச்சேரி பண்ணா ஒரு ஊர்லதான் கேக்க முடியும். ஆனா, சினிமாவில் பாடினா, எல்லோரும் கேக்க முடியுமேனு சினிமாவில் நடிக்கறதுக்கு என்னை கல்கத்தாவுக்கு அழைச்சுக்கிட்டுப் போனாரு.

அப்போ நான் அழுதேன். ஏன்னா, அந்தக் காலத்தில சினிமாவில் நடிக்கறவங்களை சொஸைட்டில கொஞ்சம் கேவலமா பார்ப்பாங்க. இப்போ மாதிரி இல்ல. இப்போ எல்லோருமே சினிமாவில நடிக்கலாம்னு இருக்கு. அப்போ சினிமாவில் நடிச்சா கல்யாணம் ஆகறது கூட கஷ்டம்னு இருந்தது. எங்கப்பா சொன்னாரு – “எந்த ஃபீல்டுதான் ஒழுங்கா இருக்கு? எந்த ஃபீல்டா இருந்தாலும் நாம நடந்துக்கற முறைலதான் இருக்கு. உன்னை நான் என் கண் இமை மாதிரி காப்பாத்துவேன்”னு சேலன்ஞ் பண்ணினாரு. எங்கப்பாவுக்கு ரொம்ப வில் பவர்! அதுதான் பின்னால எனக்கு வந்தது. அவர் போட்ட அந்த உறுதியான அஸ்திவாரத்தினாலதான் என்னால் எல்.ஐ.சி. பில்டிங் அளவுக்கு வாழ்க்கையிலே உயர முடிஞ்சுது.

அந்தக் காலத்துல, லவ் ஸீன்னா ஹீரோவும் ஹீரோயினும் கையைப் புடிச்சுக்கிட்டு ஹாய்யா நடப்பாங்க. தோள்ல சாஞ்சுக்குவாங்க. இதுக்கு மேல லவ் ஸீன்ஸ் எப்படி எடுக்கணும்னு அப்ப தெரியாது. படத்துக்காக அக்ரிமென்ட் போடும் போதே “ஹீரோ என் கையைப் பிடிக்கக்கூடாது. தோள்ல சாயக்கூடாது”ன்னெல்லாம் எங்கப்பா கண்டிஷன் போட்டாரு. இப்போ எடுக்கற லவ் ஸீன் எல்லாம் பாத்தா, கண்ணு சுத்தறது. (ஆர்வி: இது 85, 86-ஆம் வருஷத்தில்)

ஆடம்பரங்களோ, சினிமா ஸ்டார்ங்கிற ஜிகுபிகுவோ எனக்குப் பிடிக்கவே பிடிக்காது. எங்கப்பா எனக்குக் கொடுத்த ட்ரெயினிங் அந்த மாதிரி! என்னை நான் ஒரு நடுத்தர குடும்பத்துப் பெண்ணாத்தான் எப்போதும் நினைச்சுக்கறேன். அதானாலதான் இன்னும் எங்க வீடு மத்த வீடுகள் மாதிரி சாதாரணமாத்தான் இருக்கும். ஒரு சினிமா ஸ்டார் வீடுங்கற மாதிரி ஒரு ஆடம்பர அமைப்பைப் பார்க்க முடியாது. இதை நான் பெருமையாவே சொல்லிக்கறேன்.

41-ல மெட்ராஸூக்கு வந் தோம். பக்திமாலானு ஒரு படம். வட நாட்டுக்காரர் ஒருத்தர் எடுத்தாரு. அதுல மீராபாய் மாதிரி கேரக்டர். அந்தப் படத்துக்காகத்தான் நான் மொதல்ல டான்ஸ் கத்துக்க வேண்டி வந்தது. அதுவரைக்கும் எனக்கு டான்ஸே தெரியாது. அந்தப் படத்துல நான் டான்ஸ் நல்லா பண்ணலை. அதானலயே அந்தப் படத்தைப் பார்க்க எனக்கே பிடிக்காது.

அதுக்கப்புறம் கிருஷ்ண ப்ரேமம். அதை ராமகிருஷ்ண ப்ரேமம்னுகூடச் சொல்லலாம். ஏன்னா, அதிலதான் என் கணவரா வரப்போறவர் அசோசியேட் டைரக்டரா இருந்தாரு. அப்போ என் கல்யாணப் பேச்சு வந்தது. நான் அவரைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு என் சிஸ்டர் மூலமா சொன்னேன். அவர் பேசறது எந்த மொழி, என்ன சாதின்னு கூட எனக்குச் சரியாத் தெரியாது.

எங்கப்பா கல்யாணத்துக்கு சம்மதிச்சுட்டாரு. 1943-ல டவுன்ல, வெங்கடேஸ்வரா கல்யாண மண்டபத்துல எங்க கல்யாணம் நடந்தது. அதுக்கப்புறம் சினிமாவில் நடிக்கக் கூடாதுன்னு ரெண்டு பேருமா சேர்ந்து முடிவெடுத்தோம்.

கல்யாணத்துக்குப் பிறகு ஆறு மாசம் வீட்டுலேயே சமைச்சுக்கிட்டிருந்தேன். பி.என்.ரெட்டி வந்து சொர்க்க சீமாவில் நடிக்கக் கூப்பிட்டாரு. என் கணவர் அனுப்பமாட்டேன்னு சொன்ன பிறகும் அவரை கம்ப்பெல் பண்ணி, சம்மதிக்க வெச்சு, என்னை நடிக்க வெச்சாரு.

படவுலகிலே எனக்குக் கோபக்காரி, ரொம்ப ஸ்ட்ரிக்டுன்னு பட்டப் பேரு உண்டு. எல்லா ஹீரோவும் என்கிட்ட நெருங்கப் பயப்படுவாங்க. ஏன், எம்.ஜி.ஆர்., சிவாஜி கூட என்கிட்ட ஒரு மரியாதையோட தூரத்திலதான் இருப்பாங்க. அப்பத்தான் மொதல் தடவையா எம்.ஜி.ஆர். என்னை அம்மானு கூப்பிட ஆரம்பிச்சாரு. அதிலேர்ந்து நான் என்னை விடப் பெரியவங்களுக்கும் அம்மா ஆயிட்டேன். 30 வயசிலியே! சரி, இதுவும் ரொம்ப சௌகரியமா போச்சுனு நெனைச்சுக்கிட்டேன். அதுக்கப்புறம் சிவாஜியும் என்னை அம்மானு கூப்பிட ஆரம்பிச்சாரு.

நான் அலிபாபாவும் 40 திருடர்களும் படத்துல நடிக்கும்போது, சிவாஜி ஷூட்டிங்குக்கு வந்திருந்தாரு. அப்போ, இந்தம்மாவோட ஒரு படம் நான் ஆக்ட் பண்ணா நல்லாயிருக்குமேனு காமிராமேன் டபிள்யூ.ஆர். சுப்பாராவ்கிட்ட சொன்னாரு. உடனே கள்வனின் காதலி புக் ஆச்சு. எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரங்காராவ்னு என் கூட நடிச்சவங்கள்லாம் நல்ல ஆர்டிஸ்ட்டா இருந்தாங்க.

58-லே எனக்குக் கலைமாமணி பட்டம் கொடுக்கணும்னு வந்தாங்க. அப்ப நான் அதனோட மதிப்பு தெரியாம, அதெல்லாம் வயசானவங்களுக்குதான் கொடுப்பாங்கனு சொல்லி, அந்த விழாவுக்குப் போகலை. ஆனா, அப்ப அப்படி செஞ்சதுக்கு இப்போ கூட ஃபீல் பண்றேன். அந்தம்மாவுக்கு இன்னும் கலைமாமணி பட்டம் கொடுக்கலையானு எம்.ஜி.ஆர். இப்போ கேட்டாராம். உடனே, ஒரு டைரக்டரா எனக்குக் கலைமாமணி பட்டம் கொடுத்துட்டாங்க. சரி, சரி என்னை மன்னிச்சுக்குங்கோ. இதுக்கு மேலே நான் இன்னிக்குப் பேசக் கூடாது. உபவாசம்!

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

7 Responses to திரை உலக வாழ்வை பற்றி பானுமதி

 1. krishnamoorthi says:

  உபவாசம் இருந்த நாளிலேயே இப்படிப் பேசியிருந்தார்னா, வெளுத்துக் கட்டும் நாட்களில் எல்லாம் எவ்வளவு பேசியிருப்பார்னு தோணுது இல்ல:-)

  அநேகத் திறமையும், அதற்கு மேல் தலைக்கனமும் கொண்டிருந்த, பன்முகத் திறமை கொண்ட கலைஞர்!

 2. RV says:

  கிருஷ்ணமூர்த்தி,

  பானுமதி தலைக் கனம் பிடித்தவர் என்று ஒரு இமேஜ் இருப்பது உண்மைதான். எனக்கென்னவோ அவரது தன்னம்பிக்கை தவறாக பார்க்கப்படுவதாகத்தான் தோன்றுகிறது. ஒரு பெண், அதுவும் ஐம்பது வருஷங்களுக்கு முன்னால், தன்னம்பிக்கையோடு இருந்தால் அது திமிராகத்தான் பார்க்கப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன்.

 3. எனக்கு மிகவும் பிடிச்சவங்க பானுமதி.
  நடிகையா மட்டுமில்லை ஒரு எழுத்தாளராவும் புகழ் பெற்றவங்க இவுங்க.

  இவுங்களோட ‘மாமியார் கதைகள்’ படிச்சுப்பாருங்க.

  இன்றைய வலைப்பதிவுகளின் முன்னோடி:-)))

 4. RV says:

  துளசி,

  மாமியார் கதைகளை நினைவுபடுத்தியதற்கு நன்றி! நகைச்சுவை இழையோடும். சூப்பர் டூப்பர் என்றெல்லாம் சொல்ல மாட்டேன், ஆனால் இத்தனை துறைகளில் சாதித்தது பெரிய அதிசயம்தான்!

 5. surya says:

  ஐம்பது வருஷங்களுக்கு முன்னால், தன்னம்பிக்கையோடு இருந்தால் அது திமிராகத்தான் பார்க்கப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன்.. Yes RV..

  நடிப்பு மட்டுமல்லாது பன்முக திறமை கொண்டவர்.

  இசை, இயக்கம், பின்னணி என்று அந்த காலத்திலேயே கலக்கியவர்.

  BR = திரையுலக அஷ்டாவதானி.

  பதிவிற்கு நன்றி.

  இதையும் படிங்க:

  http://www.nilacharal.com/tamil/thirai/tamil_bhanumathy_208.html

 6. surya says:

  மொத்த தமிழ் திரையுலகமுமே (தமிழகமுமே?!) ‘ராமச்சந்திரன்’ என்ற பெயரை உச்சரிக்க பயந்து, சுருக்கமான ‘எம்.ஜி.ஆர்.’ என்பதையும் உச்சரிக்க யோசித்து, ‘புரட்சித் தலைவர்’, ‘பொன்மனச் செம்மல்’ என்றெல்லாம் விளித்துக் கொண்டிருந்த போது, “என்ன மிஸ்டர் ராமச்சந்திரன்.. நல்லா இருக்கீங்களா?” என்ற கணீர் குரலுடன் குசலம் விசாரிக்கும் தைரியமான பெண்மணி என்ற பெயரெடுத்தவர்.

  “நடிக்க வந்திராவிட்டால் என்னவாக ஆகியிருப்பீர்கள்?” என்று பொதுவாக கேட்கப்படும் கேள்விகளுக்கு, “பி.ஈ.படிச்சிட்டு டாக்டராயிருப்பேன்” என்று பீலா விடும் நடிகைகளுக்கு மத்தியில், உண்மையிலேயே விஷய ஞானம் கொண்டவர். துடுக்கத்தனமானவர். ‘கொஞ்சம் முன்கோபியாக இருப்பாரோ?’ என்று யோசிக்கத்தூண்டும்படியான தோற்றம், குரல். ஆனால் மென்மையானவர் என்கிறார்கள் அருகிலிருந்து பழகியவர்கள். அவர் இருக்கும் இடத்தில் கலகலப்புக்கு பஞ்சமிருக்காது என்றும் கூறுகிறார்கள்.

  திரையுலகில் புகழ் பெற்றவராக இருந்தாலும் எந்தவிதமான கிசுகிசுவுக்கும் சிறிதளவும் இடம் தராதவர்.

  எம்.ஜி.ஆருடன் பல படங்களில் இணைந்து நடித்தவர். எம்.ஜி.ஆரின் ச்கோதரியைப் போல உரிமை எடுத்துக் கொண்டு சமயங்களில் எம்.ஜி.ஆருக்கே ஆலோசனைகளை வழங்கியவர் என்றும் கூறுகிறார்கள். எம்.ஜி.ஆரின் நினைவு தினத்தன்றே மறைந்திருக்கிறார்

  நன்றி: மாயவரத்தானின் வலைப்பூ..

 7. surya says:

  அன்னையும் அறிவாளியும் மறக்க முடியாத படங்கள்.

  அனைத்து தம்பதியினரும் பார்க்க வேண்டிய திரைப்ப்டம் அறிவாளி.

  தூள் கிளப்புவார்கள் சிவாஜியும், பானுமதியும்.

  அறிவாளி படம் பற்றி எழுதி இருக்கீர்களா RV / BAGS ????????

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: