சொல்லத்தான் நினைக்கிறேன் – விகடன் விமர்சனம்


சொல்லத்தான் நினைக்கிறேன் படம் வந்த போது(30-12-73) விகடனில் வந்த விமர்சனம். நன்றி விகடன்!

கதையாகவும் நாடகமாகவும் வந்து ஒருமுகமான பாராட்டைப் பெற்ற ஒரு கதையைப் படமாக்கும்போது பிரச்னைகள் உண்டு. அவற்றைக் கடந்து பாராட்டுக்குரிய படமாக அதைப் பரிமளிக்கச் செய்யமுடியுமா? பாலசந்தரால் அது முடியும் என்பதற்கு அருமையான உதாரணம் – சொல்லத்தான் நினைக்கிறேன்.

மணியனின் கதையை மணி மணியான உத்திகளைக் கையாண்டு மனங்கவரும் குடும்பச் சித்திரமாகப் படைத்துத் தந்திருக்கிறார் பாலசந்தர். ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் நுழைந்து, அன்றாட நிகழ்ச்சிகளைக் கண்கூடாகப் பார்ப்பது போன்ற உணர்ச்சி ஒவ்வோர் அடியிலும் இழைந்திருக்கிறது.

திருமணத்திற்குக் காத்திருக்கும் மூன்று பெண்களின் சுபாவமும் மூன்று விதம். மூத்தவள் வாத்தியாரம்மாவும் சரி, அடுப்படியை அடைக்கலமாகக் கொண்ட இரண்டாவது பெண்ணும் சரி, கடைக்குட்டியான கல்லூரி மாணவியும் சரி… ஆசையை வளர்த்துக் கொண்டிருப்பதில் ஒரே ரகம்தான். வீட்டில் தங்குவதற்கு இடம் கொடுத்த மானேஜரின் மனத்திலும் இடம் பிடிக்கத் துடிக்கிறார்கள். இவர்களில் யாராவது நடிக்கிறார்கள் என்று சொல்லமுடியுமா? அக்கம்பக்கத்தில் சந்தித்து உரையாடுகிறோமே, அப்படிப்பட்ட இயல்பான ஆத்மாக்களாகத்தான் இவர்களைப் பார்க்கிறோம். அவ்வளவு ஜீவனுள்ள பாத்திர சிருஷ்டிகள்!

மானேஜரின் பார்வையைத் தன் பக்கம் திருப்புவதற்காக அலைமோதும் ஆவலுடன், பாத்திரத்தை ணங்கென்று வைத்து வித்யா ஒலி எழுப்புவதும், குச்சியால் தட்டித் தட்டி சத்தம் எழுப்பி சிவகுமாரை அழைப்பதும் புதுமையான உத்தியல்லவா? தான் சமையலில் எக்ஸ்பர்ட் என்பதைக் காட்டிக்கொள்வதற்காக மட்டுமின்றி, தன் மனக் கோலத்தையும் ஜாடையாகப் புலப்படுத்துவது போல் சிவகுமாருக்குப் பிடித்தமான பாகற்காய்ப் பொரியலை வித்யா தன் தங்கையின் மூலம் கொடுத்தனுப்ப, அதைக் கொடுத்துவிட்டு வந்து அக்காவை அவள் டீஸ் பண்ணும் நளினம் இருக்கிறதே..!

பேசும்போது திக்குகிற பெண்ணைப் பாடச் சொன்னால்..? பெண் பார்க்க வந்தவர்களின் முன் சுபா பாடும்போது திக்கித் திணற, மீரா பாடிய பாடலைக் கேட்கக் கண்ணன் வரவில்லையோ? என்று குரல் கொடுத்து வித்யா துணைக்குப் பாட வரும் போது கண்களில் நீர் மல்குகிறதே!

நூறு அடிக்கு மேல் இருட்டையே படமாகக் காட்டிய உத்தியையும், வாணி ஜெயராமின் ஸ்வீட் ஸிக்ஸ்டீன் பாட்டையும், முதலில் மூணு வார்த்தை பேசி பிறகு இரண்டு வார்த்தை பேசும் சுப்பையாவின் குணசித்திரத்தையும் ரசிக்காமல் இருக்க முடியுமா?

நடிப்பில் வித்யா எங்கோ உயரப் போய் நிற்கிறார். படுசுட்டியான கடைக் குட்டிப் பெண் ஜெயசித்ரா தமக்கைகளுடன் போட்டி போடுகிறார்; காதலில் மட்டுமல்ல, நடிப்பிலும்!

மானேஜர் சிவகுமார் ஜென்டில்மேன் என்று வித்யாவிடம் மட்டுமல்ல, எல்லோரிடமும் பெயரெடுக்கும்படி கம்பீரமாக வருகிறார். கண்ணியமான பாத்திரத்தை நயம்படச் செய்திருக்கிறார்.

கவர்ச்சியான இன்னொரு பாத்திரம் கமல். இந்தத் தலைமுறையைச் சேர்ந்த இளைஞன் தட்டிக் கேட்க ஆள் இல்லாவிட்டால் என்னென்ன செய்வான் என்பதற்கு உதாரணம். லவ் டாலர் போட்டுக்கொண்டு யூ டோண்ட் நோ பாட்டுப் பாடிக்கொண்டு மது அருந்துவது, இளம்பெண்களைக் குறி வைத்து வீழ்த்துவது என அருமையான பாத்திரத்தை லாகவமாக ஏற்று நடித்து சபாஷ் பெறுகிறார் இளம் நடிகர் கமலஹாசன்.

ஒவ்வொரு சிறு அசைவுக்கும், உணர்ச்சிக்கும், பாவத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து சினிமா பார்க்கிறோம் என்ற உணர்வே நமக்கு ஏற்படாத வண்ணம் மிக இயற்கையாகப் படம் அமைய வேண்டும் என்று பாடுபட்டிருக்கும் டைரக்டர் பாலசந்தர் ஏன் சிலவற்றைக் கவனிக்காமல் விட்டுவிட்டார் என்பதை எண்ணும்போது, கொஞ்சம் வியப்பாக இருக்கிறது.

உதாரணமாக, படத்தில் சர்ச்சைக்குரிய கட்டமான மூன்றாவது பெண் புஷ்பா கற்பைப் பணயம் வைக்கும் முக்கியமான காட்சியை எடுத்துக் கொள்வோம். கமலஹாசனைத் திருத்துகிறேன் என்று முதலில் சவால் விட்ட புஷ்பா, அந்த சவாலைக் காப்பாற்றவே ஒரு புதிய உறவை அவனிடம் ஏற்படுத்திக்கொண்டு மேலும் அவன் தவறு செய்யாமல் தடுத்திருக்கலாம்; அவனைத் திருத்தும் ஒரே காரணத்திற்காகத் தன்னை அவள் இழந்திருக்கலாம்; அல்லது, ஜெயசுதாவின் திருமண வாழ்க்கை உடைந்துவிடப் போகிறது என்று தெரிந்ததனால், இப்போது நடப்பது போலவே தன்னை அவனுக்குத் அர்ப்பணித்து அவனை மாற்ற முயற்சித்திருக்கலாம். இப்படியெல்லாம் நேரிடையாக இதைச் சொல்லியிருந் தால், சர்ச்சைக்கே இடம் இருந்திருக்காதே! அதை விட்டுவிட்டு ஒரு மணி நேரத்தைக் கடத்துவதற்காக என்றும், விமானம் போய்விட வேண்டும் என்பதற்காகவும் அவள் தன்னை இழக்கத் தீர்மானித்தாள் என்றெல்லாம் சம்பவங்களை ஜோடித்து, அதன்பிறகு ‘நேரமும் போச்சு, என் பெண்மையும் போச்சு, விமானமும் போச்சு’ என்று அவளை ஏன் அழ வைக்கவேண்டும்? சொல்லவேண்டியதை தைரியமாகச் சொல்லாமல் ஏன் தயங்குகிறார் டைரக்டர்?

இறுதியில், ஒன்றை மட்டும் கண்டிப்பாகச் சொல்லத்தான் நினைக்கிறோம். இது பாலசந்தர் படைத்துள்ள மிக இனிய குடும்பச் சித்திரம். முற்றிலும் புதுமையான திரை விருந்து!

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

6 Responses to சொல்லத்தான் நினைக்கிறேன் – விகடன் விமர்சனம்

 1. இதன் மூலக்கதை (இலவு காத்த கிளி?) விகடனில் சமீபத்தில் 1961-ல் வந்தபோது படித்திருக்கிறேன். கதைப்படி சிவகுமார் சுபாவைத்தான் மணக்கிறார். சினிமாவில் அதை மாற்றினார்கள்.

  சினிமாவில் மிகவும் ரசித்த காட்சி என்னவென்றால், சிவகுமார் வீட்டுக்கு இவர்கள் குடிவந்ததும், சமையற்கார வீரப்பன் எல்லோருக்கும் பால் அருந்த கொடுத்து விட்டு, சுபாவைப் பார்த்து, “நீங்கதானே மூத்த பெண்” என கேட்க, அவரும் எப்படி அதை வீரப்பன் தெரிந்து கொண்டார் என ஆவலாக கேட்க, வீரப்பனோ சாவகாசமாக, “இல்லே, மூத்தது மோழைன்னு சொல்லுவாங்க” எனச் சொல்வார். ஜெயசித்திரா வாயில் விட்ட பாலை அப்படியே ஒருவித சத்ததுடன் ஸ்ப்ரேயுடன் வெளியிட்டு, புரையேறி சிரிப்பார்.

  கதை ஒரு தமிழ் புத்தாண்டில் (ஏப்ரல் 14-தான்) ஆரம்பித்து அடுத்த புத்தாண்டில் நிறைவு பெருகிறது.

  கதை விகடனில் வெளியான அடுத்த நாள் திருவல்லிக்கேணியில் உள்ள அயனாவரம் கூட்டுறவு பால்பண்ணை பூத்தில் காரசாரமாக விவாதிக்கப்பட்டது. விவாதத்தை மட்டுறுத்தியவர் பால் பூத்தின் பொறுப்பை ஏற்றிருந்த ஒரு பெண்மணி. யார், யாரை, யார் யாரால் முறையே காதலிக்கிறார்கள் அல்லது காதலிக்கப்படுகிறார்கள் என்ற வாதங்கள் நடந்து, கடைசியில் அப்பெண்மணி பட்டிமன்ற மட்டுறுத்துனர் என்னும் ஹோதாவில் அளித்த தீர்ப்பு என்னவென்றால், “இதுக்குத்தான் பொட்டச்சிங்களை படிக்க வைக்கக் கூடாது” என்பதாகும்.

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

 2. சொல்லத்தான் நினைக்கிறேன் சில நினைவுகள்:-

  //படத்தில் சர்ச்சைக்குரிய கட்டமான மூன்றாவது பெண் புஷ்பா கற்பைப் பணயம் வைக்கும்//

  இது பற்றி குமுதத்தில் ஒரு விவாதம் வந்தது. அதில் ஒருவர் “கற்பு என்ன கமர்கெட்டா கடிச்சுக்
  கொடுப்பதற்கு”என்று எழுதியிருந்தார்.

  சுப்பையாவின் நடிப்பில் ஒரு அசட்டுத்தனம் தட்டும்.இதிலும் உண்டு.பாலசந்தர் படங்களில்
  ஏதாவது ஒரு கேரக்டர் ஒரு வினோதமான வார்த்தைகளை அடிக்கடி சொல்லுவார்கள்.
  சவுண்ட் விடுவார்கள்.”படா பட்” மாதிரி இதில் ஜெய சித்ரா “டொட்டொடய்ய்ங்” என்பார். அற்புதமான நடிப்பு.

  MSVவின் அற்புதமான பாட்டு “சொல்லத்தான் நினைக்கிறேன்”.மறக்க முடியாது.

 3. surya says:

  அருமையான படம். எஸ்.வி. சுப்பையாவின் நடிப்பு பற்றி ஒன்றும் சொல்லவில்லையே..

  எனக்கு நினைவுக்கு வருவது மூன்றே எழுத்து அவர் சொல்லும்… மூன்றே எழுத்து…

  எழுந்து போங்கடா முண்டங்களா..

  அனைவரின் நடிப்பும் அருமை…

 4. மணிவண்ணன் says:

  தயாரிப்பாளர், நடிகர் பாலாஜி மரணம் அடைந்த்டுவிட்டார். அவருக்கு அஞ்சலி செலுத்துவோம். ஒரு பதிவு ஆரம்பியுங்கள், எமக்குத் தெரிந்த தகவல்களை பதிக்கலாம். அண்மையில் ஜெயா ரிவி யில் திரும்பிப்பார்க்கின்றேன் என்னும் நிகழ்ச்சியில் பங்கு பற்றியிருந்தார்.
  – மணிவண்ணன்

 5. RV says:

  டோண்டு, ரவிசங்கர், சூர்யா,

  சொல்லத்தான் நினைக்கிறேன் பதிவுக்கு மறுமொழி அளித்ததற்கு நன்றி!

  டோண்டு சார், சிவகுமார் பாத்திரம் சுபா பாத்திரத்தை மணப்பது என்றால் இலவு காத்த கிளி என்ற தலைப்புக்கு பொருந்தவில்லையே? இலவு காத்த கிளி என்றால் எந்த பெண்ணையும் மணக்காமல் அல்லவா இருக்க வேண்டும்?

  ரவிசங்கர், // கற்பு என்ன கமர்கெட்டா கடிச்சுக் கொடுப்பதற்கு? // நல்ல ஞாபக சக்தி சார் உங்களுக்கு!

 6. Ramachandran Usha(உஷா) says:

  மணியன் எழுதிய தொடர் நாவல் பெயர் இலவு காத்த கிளி யேதான். வாசித்து இருக்கிறேன்,
  லேசான மாறுதல்களுடன் படமாக்கியதாய் நினைவு. ஆனால் டோண்டு சார் சொன்னாமாதிரி முடிவு இல்லை என்றும் நினைக்கிறேன். உறுதியாய் சொல்ல முடியவில்லை.
  எம்.எஸ்.வி பாடி சகிக்கிறாமாதிரி இருக்கும் ஓரே உருப்படியான பாடல் “சொல்லத்தான் நினைக்கிறேன்” சினிமாவில் நினைவு வருவது ஸ்ரீவித்யாவின் அழகான கண்கள் மட்டுமே !

RV க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: