மைக்கேல் ஜாக்‌ஸன் (1958-2009)


mj

60, 70களில் ராக், பாப் உலகத்தின் மன்னனாக ஜொலித்த எல்விஸ் ப்ரெஸ்லி மறைவின் பிறகு வெறுமையை உணர்ந்தது ரசிகர் கூட்டம். அப்பொழுது அவர்களுக்குத் தெரிந்தது எல்லாம் ”இனி பாப் உலகத்திற்கு மன்னர் கிடையாது” என்பதுதான். ”இனி இது போன்று ஒருவர் பிறக்கமாட்டார்” என்று பல விசிறிகள் சோகமானார்கள். அவர்களுக்குத் தெரியாதது பாப் உலக்த்திற்கு அடுத்த மன்னர் ஏற்கனவே அவதரித்துவிட்டார் என்பதுதான். அந்த மன்னர் MJ எனப்படும் மைக்கேல் ஜாக்‌ஸன்.

எனக்கு மைக்கேல் பற்றி முதன் முதலாகத் தெரியவந்தது அவருடைய ”திரில்லர்” (Thriller) ஆல்பம் வெளிவந்த புதிதில் தான்.

அந்தச் சம்பவம் நேற்று நடந்த மாதிரி எனக்குத் தெளிவாக நினைவிருக்கிறது. சேலம் அரசுப் பொறியியல் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த கால்ம். (பழைய) பஸ் ஸ்டாண்டில் வருடத்திற்கு ஒரு முறை எக்ஸிபிஷன் போட்டுவிடுவார்கள். நாங்களும் போவோம். அப்படித்தான் 1983ல் நான் நண்பர்களுடன் போனேன். ஒரு இடத்தில் ஒரு டிவியில் மைக்கேல் வித்தியாசமாகவும், விசித்திரமாகவும் “It’s close to midnight and something evil lurking in the dark” என்று கதறிக்கொண்டே ஆடிக்கொண்டிருந்தார். அப்படியே அசந்து போய்ப் பார்த்துக்கொண்டிருந்தேன். அன்றிலிருந்து மைக்கேலுக்கு மேலும் ஒரு ரசிகர் கிடைத்தார்.

மைக்கேலின் தனித் தன்மை அவருடைய சிக்கலான டான்ஸ் மூவ்மண்ட்ஸ். அதனால் தான் அவர் மிக மிகப் பிரபலமானார். பில்லி ஜீன் என்ற பாடலில் அவருடைய அனைத்து டான்ஸ் திறமைகளும் வெளிப்படும். அது நமது கண்களுக்கு பெரிய விருந்து.

Billy Jean – Another version (கட்டாயம் பாருங்கள்)

ஸ்பெய்ன் நாட்டைச் சேர்ந்த பில் பெய்லியின் பேக் ஸ்லைடை மைக்கேல் பிரபலம் அடையச் செய்தார். மூன்வாக்கர் என்று பெயர் பெற்ற இந்த நடன அமைப்பு மைக்கேல் ஆடும் பொழுது மயங்காதவர் மிகக் குறைவே. இந்தப் பாடலில் டர்ன் வாக், 4 கார்னர் வாக், ஃப்லோட் வாக், ரோபோ வாக் அனைத்தும் ஆடி பிரமிக்க வைப்பார். மனிதர்களை திகைக்கவைக்கும் ஃபுட்வொர்க்கை கொண்டிருக்கிறார்.

இவரது பாடல்களில் இன்னொரு சிறபபு அமசம் அனேகப் பாடல்களில் ஒரு தீம் வைத்து விடுவார். மிக பாப்புலரான் “Beat It” (என் மனைவியின் ஃபேவரைட்) எனப்படும் பாடலில் காங்க்ஸ்டர்களை வைத்து ஒரு கதை சொல்லியிருப்பார்.

திரில்லர் பாடலில் ”Night of the Living Dead” திரைப்படம் போன்று ஒரு காட்சியமைப்பு. எனக்குப் பிடித்த இன்னொரு மெலடியான பாடல் “Say, Say, Say” என்ற பால் மெக்கார்ட்னியுடன் அமைந்தப் பாடல். பிதாமகன் படத்தில் நடிகர் சூர்யா மருந்து விற்று எமாற்றுவது போல் பாலும், மைக்கேலும் ஊர் ஊராக சென்று எமாற்றுவார்கள். இனிமையான பாடல்.

டிரம்ஸ் இசையில் வித்தியாசமான அவுட் டோர் செட்டிங்கில்  “They don’t care about us”  கேட்க், பார்க்கவேண்டிய ஒன்று.

மைக்கேல் ப்ராடிஜி என்று சொல்வது எள்ளளவும் மிகையாகாது. மோ டவுன் ரிக்கார்ட்ஸுடன் சேர்ந்து “ஜேக்ஸ்ன் 5” ட்ரூப் மூலமாக வழங்கிய “I will be there” (Acapella தான் கிடைத்தது – accompanimentடுடன் கிடைத்தால் update  செய்கிறேன் ) என்ற பாடலில் அந்த வயதிலேயே அவருக்கிருந்த தன்னம்பிக்கையையும், டான்ஸ் மூவ்மெண்ட்ஸையும் பார்த்தால் இது தெளிவாகதப் புரியும்.

”Black or White”ல் இன்னோவேட்டீவாக பரதநாட்டியத்துடன் தனது டான்ஸை மெர்ஜ் செய்ய முனைந்திருப்பார்.

இதை இன்னும் கொஞ்சம் எலாபரேட்டாக செய்திருந்தால் இந்தியாவில் மிகப்பெரிய ஹிட்டாக அமைந்திருக்கும். பொதுவாக சில  கிழக்கத்திய வித்வான்கள் மேற்கத்திய வித்வான்களுடன் (கடம் சங்கரும் கிட்டார் மெக்லாலினும் கொடுத்தது போல்) சேர்ந்து இசை விருந்து கொடுப்பார்கள். நாட்டியத்தில் இது புதியது.

ஜேனட் ஜாக்‌ஸனுடன் சேர்ந்து அளித்த ஸ்கிரீம் (Scream) ஒரு பெயிலியர். கிட்டதட்ட 7 மில்லியன் டாலர்களை செலவு செய்திருக்கிறார். ஆனால் தேறவில்லை.

இவர் குழப்பமான மனிதர். இவரது போதை மருந்துகள் உபயோகம், குழந்தைகள் பாலுறவு, குழந்தைகள் வளர்ப்பபதில் கவனக்குறைவு, விவாகரத்து என்று பல பிரச்சனைகளில் சிக்கியவர். தெளிவற்ற பணம் கையாளும் முறை என்றும் கூறுவர். 100 மில்லியன் திரில்லர் ஆல்பம் விற்றப்பிறகும், கடைசியில் பண நெருக்கடியில் கஷ்டப்பட்டதாகக் கூறுவார்கள். மேலும் அழகாக இருந்த தன்னை நிறமாற்றம் கருதி பிளாஸ்டிக் சர்ஜரி செய்து விகாரமாக ஆக்கிக் கொண்டார்.

என் தந்தை எல்விஸ் ப்ரெஸ்லியின் காலத்தில் வளர்ந்து வந்தார், அவருடைய விசிறியாக இருந்தார். அவருடைய ரசிகத்தன்மையெல்லாம் மிகவும் சட்டிலாக(subtle) த்தான் இருக்கும். என்னிடம் எப்பொழுதாவது எல்விஸை பற்றிக் கூறுவார். அவ்வளவுதான். நான் MJ கால்த்தில் வளர்ந்து வந்தவன். ஆனால் என் ரசனை என் தந்தையுடன் ஒப்பிடும்பொழுது கொஞசம் தூக்கல். நான் ஒரு மோனோ டேப் ரிக்கார்டரின் மூலமாக மைக்கேலின் “Don’t stop till you get enough” ஐ டேப் தேயும் வரை கேட்டிருக்கிறேன்.

என் பெண்ணிற்கோ ஜஸ்டின் டிம்பர்லேக் போன்றோர்கள் பாப் கிங்காக தோன்றலாம்.

எனக்கு MJ ஒரு ப்ராடிஜி, ஜீனியஸ், பிரில்லியண்ட்.  அமேரிக்க கலாச்சாரத்தின் ஒரு பகுதி. பாவம் போய்விட்டார்.

வியட்நாம் வீடு – என் விமர்சனம்


படம் வெளிவந்த போது விகடனில் வந்த விமர்சனம் இங்கே.

வியட்நாம் வீடு சிவாஜியின் பெரும் சாதனையாக சிலாகிக்கப்படும் படம். எனக்கு இது சுமாரான படம் என்றுதான் தோன்றுகிறது.

நீங்கள் இன்றைக்கு ஒரு விஜய் படம் பார்த்தால் அது சில ஸ்டாண்டர்ட் சீன்களை ஒட்டியும் வெட்டியும் எடுக்கப்பட்டிருக்கும். ஒரு ஓபனிங் சாங், நாலு பாட்டு, மூன்று சண்டை, ஐந்து பன்ச் டயலாக், விஜய் “அப்டிங்க்னா, இப்டிங்க்னா” என்று யாரையாவது கலாய்ப்பது, வடிவேலு/விவேக் காமெடி, ஒரு அம்மா/அப்பா/தங்கை/அக்கா செண்டிமெண்ட் சீன். சிவாஜியின் படங்களுக்கும் அப்படி ஸ்டாண்டர்ட் சீன்கள் இருந்தன. அவை எல்லாவற்றையும் இந்த படத்தில் காணலாம். அவருக்கு உலகத்தில் இருக்கும் எல்லா கஷ்டமும் வரும். எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு அவர் தன் கண்ணீரை அடக்கிக் கொண்டு வாழ்வார். இதிலும் அப்படி நிறைய சீன்கள் உண்டு – புகழ் பெற்ற “நீ முந்திண்டா நோக்கு, நான் முந்திண்டா நேக்கு”, ரிடயர் ஆன பிறகு அவர் பம்மி பம்மி ஆஃபீசுக்குள் நுழைவது, அவரும் பத்மினியும் ஒருவர் கண்ணீரை ஒருவர் துடைப்பது, பிள்ளைகள்/மருமகள்கள் கொடுமை இந்த மாதிரி நிறைய.

படத்தின் முக்கிய குறையே சிவாஜியை தவிர மிச்ச எல்லாரும் கார்ட்போர்ட் கட்அவுட்களாக இருப்பதுதான். யாருக்கும் ரோல் கிடையாது – நாகேஷ், ஸ்ரீகாந்த் எல்லாரும் வேஸ்ட். யாருக்கும் சோபிக்கும்படி பாத்திரம் அமையவில்லை. பத்மினிக்கு மட்டும் கொஞ்சம் பெரிய ரோல். துணை கதாபாத்திரங்கள் வலிமையாக அமையாவிட்டால் கதை உருப்படுவது கஷ்டம். கதையின் முக்கிய முடிச்சோ மிக செயற்கையானது – ஒரு ஜெனரல் மானேஜருக்கு எப்போது ரிடையர் ஆகிறோம் என்பது கூட தெரியவில்லை. அப்புறம் என்ன திரைக்கதை அமையும்?

சிவாஜியின் நடிப்பை அவர் ஒரு பிராமண குடும்பத் தலைவரை தத்ரூபமாக சித்தரித்தார் – முக்கியமாக பேச்சில் – என்பதற்காக பாராட்டுகிறார்கள். அவர் பேச்சு அந்த காலத்துக்கு தத்ரூபமாக இருந்திருக்கும்தான். அதற்கு அவர் கடினமாக உழைத்திருக்க வேண்டும்தான். அந்த ஒரு பாயின்ட் மட்டுமே ஒரு நல்ல படத்துக்கு போதாது என்பதுதான் பிரச்சினை.

1970-இல் வந்த படம். சிவாஜி, பத்மினி, நாகேஷ், ஸ்ரீகாந்த், ரமாப்ரபா நடித்தது. வியட்நாம் வீடு சுந்தரம் கதை வசனம். பி. மாதவன் இயக்கம். கே.வி. மகாதேவன் இசை. சிவாஜியின் சொந்தப் படம். நாடகமாக வெற்றிகரமாக ஓடியது. பிராமண பின்புலம் கொண்ட நாடகம் அந்த காலத்து சென்னையில் நன்றாகவே ஓடி இருக்கும். நாடகத்திலும் சிவாஜியே நடித்திருக்கிறார். எழுதிய சுந்தரமோ வியட்நாம் வீடு சுந்தரம் என்று அடைமொழி பெற்றுவிட்டார். சமீபத்தில் ஒய்.ஜி. மகேந்திரன் இதை மீண்டும் மேடை ஏற்றி இருக்கிறார்.

தெரிந்த கதைதான். கம்பெனியில் ஜெனரல் மானேஜராக கொடி கட்டி பறக்கும் சிவாஜி ரிடையர் ஆகிறார். வீட்டில் பிள்ளைகளின் கலாசார சீரழிவு – நாகேஷ் யாரையோ காதலிக்கிறார். மை லேடி கட்பாடி என்றெல்லாம் பாட்டு பாடுகிறார். ரிடையர் ஆனதும் சிவாஜிக்கே கொஞ்சம் தாழ்வு மனப்பான்மை. அவரை புரிந்து நடந்துகொள்ளும் ஒரே ஜீவன் அவர் மனைவி பத்மினி. அவருக்கு ஆபரேஷன் வேறு நடக்க வேண்டும். பயம். பேருக்கு பிள்ளை உண்டு, வெறும் பேச்சுக்கு சொந்தம் உண்டு, என் தேவையை யாரறிவார், உன்னைப் போல் தெய்வம் ஒன்றே அறியும் என்று மனைவியை பார்த்து பாட்டு பாடுகிறார். ஆபரேஷன் முடிந்து வீட்டுக்கு வருபவர் தனக்கு ஆஃபீசில் எக்ஸ்டென்ஷன் கிடைக்கும் செய்தி கேட்டு அந்த அதிர்ச்சியில் இறந்துவிடுகிறார்.

சிவாஜி ரசிகர்களுக்காக ஒன்றை தெளிவாக்கிவிடுகிறேன். சிவாஜி திறமை வாய்ந்த நடிகர். இந்த படத்திலும் கொடுத்த ரோலை நன்றாக செய்திருக்கிறார். இந்த பாத்திரத்துக்கு அவரது நாடகத்தனம் நிறைந்த மிகை நடிப்பு பொருந்தி வருகிறது. பாத்திரம் அப்படித்தான். மிகையாகத்தான் பேசுவார். உலகத்தில் எல்லாரும் அசோகமித்திரன் கதாபாத்திரங்கள் மாதிரி குறைவாகவே பேசுவதில்லை.

பத்மினியும் கொடுத்த வேலையை திறமையாக செய்திருக்கிறார்.

குறை கதையில். ரிடையர் ஆனதும் பெரிசுகளுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை வருவது நடப்பதுதான். பெரிசுகளுக்கு தங்கள் பிள்ளைகள் சீரழிகிறார்கள் என்ற எண்ணம் இருப்பது சகஜம்தான். மனைவியைத் தவிர வேறு யாரும் இல்லை என்ற மனநிலை வருவதும் சகஜம்தான். அதை அப்படியே காட்டி இருக்கலாம். ரிடையர்மென்ட் ஒரு அதிர்ச்சி மாதிரி காட்டுவது கதையை பலவீனப்படுத்துகிறது. மற்ற பாத்திரங்கள் எல்லாம் மிக வீக்காக இருப்பது கதையை மிக தட்டையாக மாற்றுகிறது. கழிவிரக்கம் மட்டுமே கதையின் உணர்ச்சியாக இருக்கிறது.

கே.வி. மகாதேவன் இசையில் பாலக்காட்டு பக்கத்திலே, உன் கண்ணில் நீர் வழிந்தால் இரண்டு பாட்டும் நன்றாக இருக்கின்றன. பாட்டுகளை இங்கே கேட்கலாம். மை லேடி கட்பாடி பாட்டும் கொடுமை, வரிகளும் கொடுமை. வீடியோ எதுவும் கிடைக்கவில்லை. ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைப் பூ மாதிரி யாரடி நீ மோகினி படத்தில் தனுஷ், சரண்யா ரீமிக்சை கொடுத்திருக்கிறேன்.

ஒரு கால கட்டத்தின் பிரதிநிதி என்ற வகையில் பார்க்கலாம். தட்டையான கதைதான், ஆனால் எனக்கு போரடிக்கவில்லை. சிவாஜி, பத்மினி இருவரின் உழைப்பும் நடிப்பும், கண்ணதாசன்+கேவிஎம்மின் இரண்டு பாட்டுகளும், அந்த கால பிராமண குடும்ப பின்புலம் தத்ரூபமாக சித்தரிக்கப்பட்டிருப்பதும் படத்தின் ப்ளஸ்கள். பத்துக்கு 6.5 மார்க். C+ grade.

தொகுக்கப்பட்ட பக்கம்: சிவாஜி பக்கம், படங்களின் பட்டியல்

தொடர்புடைய சுட்டிகள்:
சாரதாவின் விமர்சனம்
விகடன் விமர்சனம்

வியட்நாம் வீடு விகடன் விமர்சனம்


வியட்நாம் வீடு

வியட்நாம் வீடு

படம் வந்தபோது விகடனில் வந்த விமர்சனம். நன்றி, விகடன்!

புகழ் பெற்ற நாடகம் ஒன்று திரைப்படமாகும்போதெல்லாம், ஒரு கேள்வி எழுந்துதான் தீரும்: நாடகம் மாதிரி படம் இருக்கிறதா?

வியட்நாம் வீடு திரைப்படம், நாடகம் மாதிரி இல்லை. நாடகத்தில் புலனாகாத சில விஷயங்கள் படத்தில் ஜொலிக்கின்றன. ஒன்றிரண்டு அம்சங்கள் சோபிக்கத் தவறியுமிருக்கின்றன.

நெருக்கக் காட்சிகளில் காணக் கிடைத்த பிரெஸ்டீஜ் கணேசனின் முக பாவங்கள், திரையில் கிடைத்த அபூர்வ விருந்து. ஆடி ஓய்ந்து முதுமை எய்திவிட்ட தம்பதியரின் பிணைப்பையும் இழைவையும் பத்மனாபன் தம்பதியர் (சிவாஜி-பத்மினி) சித்திரித்திருக்கும் நேர்த்தி, திரையுலகிலேயே ஒரு புதிய சாதனை.

”சாமி பேரை ஏம்பா வச்சுக்கிறீங்க! வையக் கூட முடியலை!” என்று வேலைக்காரனிடம் அலுத்துக் கொள்ளும் இடத்திலும் சரி, “வெற்று மிஷினில் டைப் அடிக்கக் கூடாது!” என்று டைப்பிஸ்டை நாசூக்காகக் குத்திக் காட்டும் காட்சியிலும் சரி, “நீ முந்தினால் உனக்கு, நான் முந்தினால் எனக்கு” என்று அத்தையிடம் விடைபெறும் காட்சியிலும் சரி, சிவாஜியின் நடிப்பில் நயம், முதிர்ச்சி, முழுமை அத்தனையும் பொலிகின்றன.

முழுக்க முழுக்க ஒரு வயோதிகரைக் கதாநாயகனாகக் கொண்டே, துளியும் சுவை குன்றாமல் குடும்ப மணம் கமழ ஒரு திரைப்படத்தைத் தயாரித்த சாமர்த்தியத்தை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.

பிரெஸ்டீஜ் தம்பதியருக்கு இரண்டு டூயட்! முதலிரவு காட்சியில் (பிளாஷ்பேக்) பாடலைவிட சிவாஜி-பத்மினி அபிநயம் பிரமாதம்.

உன் கண்ணில் நீர் வழிந்தால் பாடல் இசையமைப்பாலும், படமாக்கியிருக்கும்விதத்தாலும் நன்கு சோபிக்கிறது.

பத்மினியின் தோற்றத்துக்கு முதுமையின் கம்பீரமும், அமைதியும் அவ்வளவாகப் பொருந்தவில்லை. இருந்தாலும் தாம்பத்திய இனிமை இழையோடும் பகுதிகளில் அவர் மின்னுகிறார்.

ஹிப்பியாக அறிமுகமாகும் நாகேஷ், நிறைய எதிர்பார்க்க வைத்து ஏமாற்றிவிடுகிறார். காந்த் அழகாக மனைவிக்குப் பயப்படுகிறார்.

ரமாபிரபாவுக்கு இப்படி மிரட்டி உருட்டவும் தெரியுமா என்று வியக்கிறோம். வில்லி பாத்திரத்தைச் சாமர்த்தியமாகச் செய்கிறார்.

ரிட்டயராகக் கூடிய காலத்தை ஒரு ஜெனரல் மானேஜர் தெரிந்து கொள்ளாமல் இருப்பது ஆச்சர்யம்தான். அதைப் போலவே, வசதியான ஒரு பதவியிலிருந்து ரிட்டயராகும் அதிகாரி, அளவுக்கு அதிகமாக அலட்டிக்கொள்வது அந்தப் பாத்திரத்தின் பிரெஸ்டீஜுக்குப் பொருத்தமாக இல்லை. மூலக் கதையிலுள்ள இந்த பலவீனமான அம்சம் திரையில் பெரிதாகத் தெரிகிறது.

படத்துக்கு பிரெஸ்டீஜ் (கௌரவம்) சிவாஜியின் நடிப்பு; அவருடைய நடிப்பின் பிரெஸ்டீஜ்… அப்பப்பா!

தொகுக்கப்பட்ட பக்கம்: சிவாஜி பக்கம், படங்களின் பட்டியல், விகடன் விமர்சனங்கள்

தொடர்புடைய சுட்டிகள்:
ஆர்வியின் விமர்சனம்
சாரதாவின் விமர்சனம்

அரசியல் பாடப் புத்தகத்தில் இடம் பெறும் திரைப்படங்கள்


மீண்டும் லிஸ்டுக்காக பாஸ்டன் பாலாவுக்கு நன்றி! இந்த படங்கள் பாடப் புத்தகங்களில் பேசப்படுகின்றனவாம். ட்விட்டர் ஸ்டைல் குறிப்புகளுடன் லிஸ்ட் கீழே.

ரோஜா – சின்ன சின்ன ஆசை என்று பாடிக்கொண்டு மதுபாலா வரும்போது தியேட்டரில் விசில் பறந்தது நினைவிருக்கிறது. ஏ.ஆர். ரஹ்மானின் முதல் படம். மதுபாலா கலக்கிவிட்டார். ஆனால் படம், அதுவும் காஷ்மீர் பகுதி சுமார்தான்.

ஹகீகத் (ஹிந்தி, 1964)- பால்ராஜ் ஸாஹ்னி நடித்தது. நல்ல படம் என்று கேள்வி. பார்த்ததில்லை.

ஆக்ரோஷ் (ஹிந்தி, 1980) – கோவிந்த் நிஹ்லானி படம் என்று நினைவு. இதெல்லாம் எங்கே கிடைக்கிறது?

சிம்மாசன் (மராத்தி) – கேள்விப்பட்டிருக்கிறேன், பார்த்ததில்லை.

கரம் ஹவா (ஹிந்தி, 1973) – மிக நல்ல படம். பால்ராஜ் ஸாஹ்னி, ஃபரூக் ஷேய்க், ஏ.கே. ஹங்கல் நடித்தது. எம்.எஸ். சத்யு இயக்கம்.

ஜஞ்ஜீர் (ஹிந்தி, 1973) – அமிதாபுக்கு angry young man இமேஜ் கொடுத்த முதல் படம். அன்று இருந்த சுவாரசியம் இன்று இல்லை, ஆனால் பார்க்கலாம்.

ஹஜாரோன் க்வாயிஷேன் ஐஸி – கேள்விப்பட்டதில்லை.

பதேர் பாஞ்சாலி – மிக நல்ல படம். சத்யஜித் ரே எடுத்த முதல் படம். ஆனால் இதை விட எனக்கு இதன் இரண்டாம் பாகமான அபராஜிதோ மிக பிடிக்கும். மூன்றாவது பாகத்தின்(அபூர் சன்சார்) முதல் பகுதி – ஷர்மிளா தாகூர் கலக்கும் பகுதி – மிக பிடிக்கும்.

நடிகர் சூர்யாவுக்கு பிடித்த படங்கள்


சூர்யா

சூர்யா

லிஸ்டை இங்கே காணலாம். பாஸ்டன் பாலாவுக்கு நன்றி! வசதிக்காக கீழேயும் கொடுத்திருக்கிறேன், ட்விட்டர் ஸ்டைல் குறிப்புகளுடன்.

Crash – நல்ல படம். 2004-இன் சிறந்த படம் என ஆஸ்கார் விருது. நம் அனைவருக்குள்ளும் – வெள்ளையர்கள், கறுப்பர்கள், பழுப்பர்கள் – இருக்கும் நிற prejudices-ஐ நன்றாக கொண்டு வரும் படம்.

Godfather – என்ன ஒரு படம்! அல் பசினோ, மார்லன் பிராண்டோ, ஜேம்ஸ் கான், டாலியா ஷைர், டயேன் கீட்டன், ராபர்ட் டுவால், ஃப்ரான்சிஸ் ஃபோர்ட் கொப்போலா எல்லாருக்கும் ஒரே மைல் கல். மரியோ பூசோவின் சிறந்த நாவலை இன்னும் சிறப்பாக திரையில் கொண்டு வந்திருப்பார்கள்.

I am Sam – நான் பார்த்ததில்லை.

Terminal – பிரமாதமான படம். விமான நிலையத்தை விட்டு வெளியே வராமல் அங்கேயே வாழும் டாம் ஹாந்க்ஸ், ஒரு இந்தியன் வேஷத்தில் வரும் குமார் பல்லானா இருவரும் கலக்குவார்கள்.

நாயகன் – காட்ஃபாதரின் பாதிப்பு நிறைய உள்ள படம். இருந்தால் என்ன? நல்ல படம்.

முள்ளும் மலரும் – அந்த காலத்தில் பார்த்தபோது மிக பிடித்திருந்தது. பாட்டுகளும் அபாரம். ரஜினி எங்களுக்கெல்லாம் ஒரு ஆதர்சம்தான்.

ரோசாப்பூ ரவிக்கைக்காரி – இது அப்பாவுக்காக சூர்யா தேர்ந்தெடுத்த படம் என்று நினைக்கிறேன். படு சுமாரான படம். படம் எந்த கால கட்டத்தில் எடுக்கப்பட்டது என்று டைரக்டர் குழப்புவார். நல்ல பாட்டுகள்.

சேது – எல்லாரும் கொண்டாடுகிறார்கள். எனக்கு ஒன்றும் பிரமாதமாக தெரியவில்லை. விக்ரம், ஸ்ரீமன் நன்றாக நடித்திருந்தார்கள், சரி. பாட்டுகள் நன்றாக இருக்கின்றன, சரி. அது மட்டும் போதுமா?

முதல் மரியாதை – ராதா கலக்குவார். சிவாஜி எவ்வளவோ அடக்கி வாசித்தாலும் அதுவே மிகையாகத்தான் தெரிகிறது. ஆனால் நல்ல பாட்டுகள்.

ஆண் பாவம் – எங்கள் காலேஜ் காலத்தில் இது எங்களுக்கு ஒரு cult படம். பாண்டியராஜன் இந்த மாதிரி படங்கள் எடுக்காமல் வீணாக போய்விட்டார்.

ஆர்வி விமர்சனம் – முகம்மது பின் துக்ளக்


வழக்கம் போலவே விகடன் விமர்சனத்தை போட்டதும் என் விமர்சனம் தொடர்கிறது.

சோவின் நாடக பங்களிப்பு குறைத்து மதிக்கப்படுவது. அவர் பெர்னார்ட் ஷாவோ இப்சனோ இல்லைதான். ஆனால் கிரேக்க காமெடி நாடக ஆசிரியர் என்று கொண்டாடப்படும் அரிஸ்டோஃபநஸ் அளவுக்காவது மதிக்கலாம். அவரது சடையர் மிகவும் topical ஆனது. பத்து வருஷம் போனால் பல நுண்ணிய விஷயங்கள் அந்த கால கட்டத்தில் வாழ்ந்தவர்களுக்கே மட்டுமே புரியும். அவர்களுக்கே மறந்து போய்விடலாம். உதாரணமாக சர்க்கார் புகுந்த வீடு என்ற “நாவலில்” கந்தசாமியும் ராகவையரும் நாராயணசாமி நாயுடுவிடம் தங்களுக்கு இருக்கும் மளிகை பால் கடனை எப்படி அடைப்பது என்று யோசனை கேட்கப் போவார்கள். அவர் “என்னது கொடுத்த கடனை அடைக்கறதா? நீங்கள்ளாம் எம்ஜிஆர் ஆளுங்களா?” என்று பொங்கி எழுவார். அவர் எண்பதுகளின் ஆரம்பத்தில் எம்ஜிஆர் அரசு விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்ட கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று போராடியவர். எம்ஜிஆர் முடியாது என்று ரொம்ப நாள் மறுத்தார். அன்று படித்தவுடன் குபீர் சிரிப்பு கிளம்பியது. இன்று எத்தனை பேருக்கு இது புரியும்?

நல்ல வேளையாக அவர் இந்த நாடகத்தில் இந்திரா காந்தி, ராஜாஜி, கலைஞர், கம்யூனிஸ்டுகள் போன்றவர்களை கிண்டல் செய்கிறார். அதனால் இந்த நாடகத்து ஜோக்குகள் சுலபமாக புரியும். நாடகம் வந்தபோது தி.மு.க., முக்கியமாக கலைஞர் பயங்கர கடுப்பாகிவிட்டார் என்றும், நானே அறிவாளி என்று சோவை கிண்டல் செய்து ஒரு நாடகம் எழுதி அரங்கேற்றினார் என்றும் சொல்வார்கள்.

என்னடா நாடகம் பற்றியே எழுதுகிறானே என்று பார்க்கிறீர்களா? சோவின் சினிமாக்கள் எல்லாமே அவர் நாடகங்களை வீடியோ எடுத்த மாதிரிதான் இருக்கும். படமே பார்க்க வேண்டாம். ஒலிச்சித்திரம் கேட்டால் போதும். படத்தின் உயிரே வசனம்தான். படம் நகர்வதும் வசனங்கள் மூலம்தான். உண்மையை சொல்லப் போனால் நாடகம் இந்த சினிமாவை விட பெட்டர். அதனால்தான் நாடகத்தை பற்றியே இது வரை பேசிக் கொண்டிருக்கிறேன்.

1971-இல் வந்த படம். சோவை தவிர எனக்கு தெரிந்த முகங்கள் கொஞ்சம்தான். மனோரமா, சுகுமாரி, நீலு, வெ.ஆ. மூர்த்தி அவ்வளவுதான். அதுவும் மூர்த்தி ஒரு ஐடம் நம்பருக்கு வந்து பாட்டு பாடிவிட்டு போய்விடுவார். சோவே இயக்கிய படம். டைரக்ஷன் கற்றுக்கொள்ள முயற்சி என்று டைட்டிலில் போட்டிருப்பார். இசை எம்எஸ்வி.

சினிமா வரவிடாமல் கலைஞரும் எம்ஜிஆரும் தடுக்க முயற்சி செய்தார்களாம். எம் எஸ்வி இசை அமைக்கக் கூடாது என்று பிரஷர் கொடுத்தார்களாம். எம்எஸ்வி நீங்கள் சோவை கிண்டல் செய்து படம் எடுங்கள் நான் அதற்கும் இசை அமைத்து தருகிறேன் என்று சொல்லிவிட்டாராம்.

தெரிந்த கதைதான். சரித்திர ஆராய்ச்சியாளர் துக்ளக், இபின் பதூதா ஆகியோரின் உடல்களை கண்டெடுக்கிறார். அவர்கள் இன்னும் இறக்கவில்லை, ஒரு மாதிரி கோமாவில் இருக்கிறார்கள். விழித்து எழுந்த பின் துக்ளக் எம்.பி. எலெக்ஷனில் நின்று ஜெயிக்கிறார். கட்சிக்கு வரும் எல்லா எம்.பி.க்கும் மந்திரி பதவி என்று அறிவிக்கிறார். 400 எம்.பி.க்கு மேல் இவர் கட்சிக்கு தாவுகிறார்கள். அதில் ஒருவரை உதவி பிரதமராக போகிறார் என்று வதந்தி வந்ததும் அந்த ஒருவரைத் தவிர எல்லாரும் கட்சியை விட்டு போய்விடுகிறார்கள். கட்சிக்கு வரும் எல்லா எம்.பி.க்கும் உதவி பிரதமர் பதவி என்று அறிவிக்கிறார். 450-க்கும் மேல் உதவி பிரதமர்கள். நாட்டின் பிரச்சினைகளுக்கு நூதனமான தீர்வுகள் – ஆட்சி மொழி ஹிந்தியா, ஆங்கிலமா? இரண்டுமில்லை, பாரசீகம். லஞ்சத்தை ஒழிக்க லஞ்சத்தை சட்ட ரீதியாக்கி வெளிப்படையாக ரேட் போடுகிறார். கடைசியில் பார்த்தால் துக்ளக், பதூதா இருவரும் நாட்டில் அரசியல் கேலிக்கூத்தாகிவிட்டது என்று காண்பிக்க வேஷம் போட்டிருக்கும் இளைஞர்கள். ஆனால் இப்போது துக்ளக்குக்கு பதவி ஆசை வந்துவிட்டது. பதூதாவை தந்திரமாக கொன்றுவிடுகிறார். பதவியில் நீடிக்கிறார்.

சோ சும்மா புகுந்து விளையாடுகிறார். அவருக்கேற்ற ரோல். ஒரு கிறுக்குத்தனம் தெரியும். அவர் ஒரு மாதிரி குதித்து குதித்து நடப்பது பிரமாதம். கொஞ்சம் நாடகத்தனத்துடன் நீண்ட வசனம் பேசலாம். You can roll the Rs. இந்த ரோலுக்கு எல்லாம் பொருந்தி வரும்.

வசனமோ! மனிதருக்கு கிண்டல் ரத்தத்தில் ஊறி இருக்கிறது. அதுவும் கலைஞர் மாதிரி பேசுபவர் அசத்திவிட்டார். கொஞ்சம் கட்டை குரலில் அருமையாக பேசுவார். ராஜாஜி மாதிரி வருபவர் ஒரு பொதுக் கூட்டத்தில் சொல்வார் – “உங்களுக்கு எது நல்லதுன்னு உங்களுக்கு தெரியாது, எனக்குதான் தெரியும்!” பிரதமர் துக்ளக் அமைச்சரவை கூட்டத்தில் சொல்வார் – “அடுத்த மாதம் நான் அமேரிக்கா போகிறேன்!”, “எதுக்கு?” “நான் அமேரிக்கா பார்க்க வேண்டாமா?” துக்ளக் பதூதாவிடம் அசன் ஷாவை அறிமுகப்படுத்துவார் – “இவன்தான் இந்த நாட்டின் முதல் தர முட்டாள்! மற்றவர்கள் எல்லாம் இரண்டாம் தர முட்டாள்கள், அவர்களை உனக்கு அறிமுகப்பட்டுத்த வேண்டியதில்லை!”

துக்ளக்கும் பதூதாவும் பேசிக் கொள்ளும் ஆரம்பக் காட்சியை இங்கே தவறாமல் பாருங்கள்.

காட்சியின் தொடர்ச்சி இங்கே.

அல்லா அல்லா, பாவலன் பாடிய புதுமைப் பெண்ணை பூமியில் கண்டது இங்கு என்று இரண்டு பாட்டுகள் ஞாபகம் வருகிறது.

தமிழின் மிக அபூர்வமான சடையர் படம். அருமையான வசனங்கள். நல்ல நகைச்சுவை. சோவின், பதூதாவாக வருபவரின், சுகுமாரியின் நல்ல நடிப்பு. பத்துக்கு 7.5 மார்க். கட்டாயமாக பாருங்கள்.

முகமது பின் துக்ளக் விகடன் விமர்சனம்


முகமது பின் துக்ளக்

முகமது பின் துக்ளக்

படம் வந்தபோது விகடனில் வந்த விமர்சனம் (21-3-1971). நன்றி, விகடன்!

எதையும் கேலி செய்வதற்கு விஷயத் தெளிவு வேண்டும்; அதையும் நகைச்சுவையோடு கேலி செய்வதற்கு புத்திசாலித்தனம் வேண்டும்; அதுவும், பிறர் மனம் புண்படாமல் கேலி செய்வதற்குப் பக்குவமான அறிவு வேண்டும்; அத்துடன், சிந்தனையையும் தூண்டுவதற்கு தெளிந்த ஞானம் வேண்டும்.

இவற்றில் நான்காவது வரிசைக்கு வந்து நிற்கிறார் சோ என்பதற்குச் சாட்சி, முகமது பின் துக்ளக்.

அரசியலைக் கேலி செய்யத் துணிந்தவர்களில் பெரும்பாலோருக்கு ஏதாவது ஒரு குறிப்பிட்ட கட்சியைத்தான் கேலி செய்ய வரும். ஆனால், ஒரு சமுதாயத்தின் பலவீனத்தையே, கட்சிப் பாகுபாடின்றி, முதிர்ந்த ஞானத்துடன் கேலி செய்திருக்கும் சாமர்த்தியத்தால் முகமது பின் துக்ளக் தரத்தில் உயர்ந்து நிற்கிறான்.