தயாரிப்பாளர், நடிகர் பாலாஜி – 1964இல் விகடனில் வந்த கட்டுரை


நன்றி விகடன்!

‘ஔவையார்’ முருகன்!

திவான்பகதூர் ரங்காச்சாரி அவர்களின் பேரன். இவர் சென்னை, புரசைவாக்கத்தில் இருக்கும் எம்.ஸி.டி. உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது, மாடப்புறா டைரக்டர் எஸ்.ஏ. சுப்பராமன் அப்பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிந்து வந்தார். பள்ளி நாடகங்களை அவர்தான் டைரக்ட் செய்வார்.

எதிரொலி என்ற நாடகத்தின் போது, தலைமை ஆசிரியராக இருந்த கோபாலகிருஷ்ணய்யர் மேக்கப் அறைக்கு வந்தார். அங்கே எழிலே உருவாய்ப் பூத்து குலுங்கிய மங்கை ஒருத்தி, தலைமை ஆசிரியருக்குக் கை கூப்பி வணக்கம் செய்தாள்!  ஆண்கள் பள்ளியில், மாணவர்கள் நடிக்கும் நாடகத்தில் ஒரு பெண்ணா என எண்ணிய அவர், ”மிஸ்டர் சுப்பராமன்” என்று கூப் பிட்டு, சுப்பராமனை கோபத்தோடு அழைத்துக்கொண்டு வெளியே போனார்.

”என்ன இது! உங்கள் நாடகத் தில் பெண்கள் நடிக்கப் போவதாக என்னிடம் சொல்லவே இல்லையே? இது மகா தவறு!” என்றார்.

சுப்பராமன் சிரித்தபடி, ”சார், மன்னிக்கணும். அது பெண் அல்ல! நம்ம பள்ளி மாணவன்தான் சார்!” என்றார். தலைமை ஆசிரியருக்கு ஆச்சர்யம் தாள முடியவில்லை.

அத்தனைப் பொருத்தமாகப் பெண் வேடம் அமைந்த அந்த நடிகர், படித்துக்கொண்டிருந்த போதே ஜெமினியின் ஒளவையார் படத்தில் முருகனாகத் தோன்றி னார்.

பின்னர், தன் தந்தை பணியாற் றிய போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் ஆபீசிலேயே ஒரு குமாஸ்தாவாகச் சேர்ந்தார். சில மாதங்களில் அதை ராஜிநாமா செய்துவிட்டு, நரசு ஸ்டூடியோவில் புரொடக்ஷன் மானேஜராகப் பணியாற்றினார். பின்பு அதையும் விட்டுவிட்டுத் திரையுலகில் நுழைந்து, நடிப்பில் தீவிரமாகக் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

சில வருடங்களுக்கு முன் சோழவரத்தில் நடைபெற்ற நட்சத்திரங்கள் பங்கெடுத்துக் கொண்ட கார் பந்தயத்தில் முதலாவதாக வந்தார். கார் என்றால் இவருக்கு அலாதி ஆசை! இவரிடம் இதுவரை மொத்தம் பத்தொன்பது கார்கள் கை மாறியிருக்கின்றன.

இவருடைய பிள்ளை சுட்டிப் பயல் சுரேஷ், நடிப்பில் தந்தையை மிஞ்சி விடுகிறானாம். இந்த நடிகரின் பெயர் – பாலாஜி.