வா ராஜா வா விகடன் விமர்சனம்


படம் வந்தபோது விகடனில் வந்த விமர்சனம். நன்றி, விகடன்!

வா ராஜா வா படத்தை ஏ.பி.நாகராஜன் தயாரித்திருக்கிறார் என்றால், சுலபத்தில் நம்ப முடியாது. நட்சத்திர மதிப்புப் பெற்ற நடிகர்களோ, பாடலாசிரியர்களோ, இசையமைப்பாளர்களோ கிடையாது. ஆனால், இந்தக் குறையையெல்லாம் ஈடு கட்டுவதற்காக வரிந்து கட்டிக்கொண்டவர்களைப் போல், படத்தின் ஒவ்வொரு மீட்டரிலும் ஏ.பி.என்னும் மாஸ்டர் பிரபாகரனும் இருக்கிறார்கள். துணைக்கு, கண்ணுக்கு இதமான வண்ணமும் இருக்கிறது.

சின்னஞ் சிறுவனை வைத்து முழுக்க முழுக்க மகாபலிபுரத்துச் சூழ்நிலையில், ஏழு உண்மைகளை விளக்க ஏழு கதைகளைப் புனைந்து, அவற்றை அவருக்கே கை வந்த நவராத்திரி பாணியில் கோவைப்படுத்தியிருக்கிறார்.

சோமசுந்தரம் தம்பதியர் கதையில் உருக்கம் இருக்கிறது; தமிழ் தெரியாத தமிழ்ப் பெண் சைலஸ்ரீ தலைமையில் வரும் யுவதிகள் கதையில் கவர்ச்சி இருக்கிறது; மனோரமா-கன்னையா பகுதியில் கலகலப்பு இருக்கிறது; பையனையும் பாம்பையும் சேர்த்துப் படம் எடுத்திருக்கும் காட்சியில் டைரக்டரின் திறமை இருக்கிறது; மற்ற பகுதிகளில் எல்லாம் வசனகர்த்தாவும் மாஸ்டர் பிரபாகரனும் மட்டுமே இருக்கிறார்கள்.

துடிப்பு மிக்க ராஜா திரைக்கு கவர்ச்சி மிக்க பாத்திரம்தான். ஆனால் அவனை ஸ்டன்ட் வீரனாகவும், ஞான பண்டிதனாகவும், சரித்திர நிபுணனாகவும் மாற்றி பெருஞ்சுமையைச் சுமக்க வைத்திருக்க வேண்டுமா?

மாஸ்டர் பிரபாகரனை சிவாஜி மாதிரி ஓரிடத்தில் நடித்துக் காட்ட வைத்திருக்கிறார்கள். ஆனால் அவனோ, படம் முழுவதுமே சிவாஜி மாதிரி நடிக்கிறானே!

பல இடங்களில் அதிக வசனம் பேசி நடிக்கவேண்டியிருந்தாலும், மாஸ்டர் பிரபாகரனின் நடிப்பாற்றல் ஒவ்வொரு காட்சியிலும் பளிச்சிடுகிறது. அவனுடைய தங்கையாக வரும் பேபி சுமதியின் முகபாவம் அருமை. கிளி கொஞ்சுகிறது என்பார்களே, அப்படி!

வி.எஸ்.ராகவன், எஸ்.என்.லட்சுமி, மனோரமா ஆகியோர் மனத்தில் நிற்கிறார்கள். மனோரமா குடும்பத்தினர் போட்டோ எடுத்துக் கொள்ளும் காட்சி அமர்க்களம்!

புது இசையமைப்பாளர் குன்னக்குடி வைத்தியநாதன் அறிமுகமாகியிருக்கிறார். கல்லெல்லாம் சிலை செஞ்சான் நன்றாக இருக்கிறது. குழந்தைகளுக்கு நல்ல படம். அரசாங்கப் பரிசு கிடைத்தாலும் கிடைக்கலாம்!

ஆர்வி:சாதாரணமாக விகடன் விமர்சனம் ஒன்றை பதிவிட்டால் அடுத்த பதிவு என் விமர்சனமாக இருக்கும். இந்த முறை முடியாது, ஏனென்றால் நான் இந்த படத்தை பார்க்கவில்லை.

குன்னக்குடி வைத்யநாதன் இசை அமைத்த முதல் படம். தூள்.காம் தளத்தில் குன்னக்குடி பற்றிய ஒரு கட்டுரையில் பாட்டுகளின் விவரங்கள் இருக்கிறது. என் ஆப்பிள் கம்ப்யூட்டரில் தூள்.காம் வேலை செய்வதில்லை, அதனால் என்னால் பாட்டுகள் கேட்க முடியவில்லை. எனக்கு நினைவிருக்கும் பாட்டுகள் கல்லெல்லாம் சில செஞ்சான் பல்லவ ராஜா, தாயிற் சிறந்த கோவிலுமில்லை (டி.கே. கலாவுக்கு என்ன ஒரு கணீர் குரல்!) (இந்த பாட்டு அகத்தியர் படத்தில் வருவது, திருத்திய சாரதாவுக்கு நன்றி!), உண்மை எது பொய் எதுன்னு ஒண்ணும் தெரியலே, இறைவன் படைத்த உலகை எல்லாம் மனிதன் ஆளுகிறான் (சீர்காழியின் குரலை பற்றி சொல்லவே வேண்டாம்)

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

12 Responses to வா ராஜா வா விகடன் விமர்சனம்

 1. நானும் இந்த படம் பார்க்கவில்லை. விபரமும் இல்லை.

  சப்பை படம்ன்னு சொல்ல ஒருவர் வருவாரே. அவரை கேட்டு பாருங்கள். சொல்ல முடியாது சாரு போல இதை சூப்பர் படம்ன்னு சொன்னாலும் சொல்லுவார் பெரிய மனுசன்.

  • கிருஷ்ணமூர்த்தி says:

   முட்டாள்களோடு வீணடிப்பதற்கு அவருக்கு நேரமில்லையாம். வழக்கம் போல நீங்களே உங்களுக்குள் ஏதாவது உளறிக் கொண்டிருங்கள்!

 2. சாரதா says:

  ‘வா ராஜா வா’ திரைப்படத்தை நானும் பார்த்திருக்கிறேன். நல்ல அருமையான பொழுதுபோக்குப்படம். 1964 முதல் 1968 வரை நடிகர் திலகம் சிவாஜியை வைத்து நவராத்திரி, திருவிளையாடல், சரஸ்வதி சபதம், கந்தன் கருணை, திருவருட்செல்வர், திருமால் பெருமை, தில்லானா மோகனாம்பாள் என ஆறு வருடங்களில் ஏழு வெற்றிப்படங்களை தயாரித்து இயக்கியபின்னர், ஏ.பி.நாகராஜன் ரொம்ப ரிலாக்ஸ்டாக இயக்கிய படம். ஸ்டுடியோ செட் காட்சிகள் மிக மிகக்குறைவு. முழுக்க முழுக்க மகாபலிபுரம் வெளிப்புறக்காட்சிகளிலேயே படத்தை எடுத்து முடித்திருந்தார். ஒரு கல்லில் எழுதப்பட்டிருக்கும் ஏழு வாக்கியங்கள் ஒரு சிறுவனின் வாழ்க்கையில் தொடர்ந்து பலித்து வருவதுதான் கதை. அதை சின்ன சின்ன நடிகர்களை வைத்து மிகவும் அழகாக, போரடிக்காமல் எடுத்திருந்தார்.

  (ஒரு சின்ன திருத்தம். நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பாடல்களில் ‘தாயிற்சிறந்த கோயிலுமில்லை’ என்ற டி.கே.கலாவின் பாடல் இந்த படத்தில் அல்ல. அது ‘அகத்தியர்’ படத்தில், இன்னொரு சிறுவனான மாஸ்ட்டர் சேகருக்காக பாடியது)

  கல்லில் எழுதப்பட்டிருக்கும் வாக்கியங்கள் ஒவ்வொன்றாக, அதுவும் அதில் எழுதப்பட்டிருக்கும் வரிசைப்படியே பலிக்குமா? என்ற லாஜிக்கெல்லாம் பார்க்காமல் படத்தை பார்க்கலாம். (லாஜிக் பார்ப்பதாயிருந்தால், இன்றைய நாயகர்கள் இரண்டு தெரு பறந்து சென்று அடிப்பதையெல்லாம் சேர்க்க வேண்டியிருக்கும். அதனால் வேண்டாம்). இதற்குமுன்னர் மாஸ்ட்டர் பிரபாகர் பல படங்களில் நடித்திருந்தபோதிலும், அவன் மிகவும் தனித்து தெரிந்தது இதில்தான். (பின்னே, இந்தப்படத்தில் கதாநாயனாச்சே)

  1969-ம் ஆண்டு தீபாவளிக்கு வந்த நம் நாடு, சிவந்த மண் படங்கள் ஓடிக்கொண்டிருக்கும்போது அவ்ற்றுக்கு நடுவே ரிலீஸாகி (டிசம்பர் – 6) நூறு நாட்களைத்தாண்டி ஓடி வெற்றியடைந்த படம். இந்தப்படத்தின் வெற்றிதான் அவரை இதே பாணியில் உடனடியாக ‘திருமலை தென்குமரி’ எடுக்க வைத்தது. மணோரமா, என்னத்தே கன்னையா ஆகியோர் மட்டுமல்லாது, சுருளிராஜனின் நகைச்சுவையும் வயிற்றை புண்ணாக்கும். இனிமையான பாடல்களும், அவற்றை படமாக்கியிருந்த விதமும் எல்லோரையும் கவர்ந்தன. படம் பார்த்த வெளியூர்க்காரர்களுக்கு நிச்சயம் ஒரு ஏக்கம் ஏற்படும், அது ஒருமுறையாவது மகாபலிபுரம் சென்று பார்த்துவிட வேண்டும் என்ற ஏக்கம்தான். அந்த அளவுக்கு அருமையான வண்ண ஒளிப்பதிவு.

  பெரிய நடிகர்கள் நடிக்காத படமாதலால் சி.டி.க்கள் அல்லது டி.வி.டிக்களில் வரும் வாய்ப்பு மிக அரிது. கிடைத்தால் மிஸ் பண்ணாமல் பாருங்க.

 3. RV says:

  சாரதா,

  உங்களை பல நாள் கழித்து இங்கே பார்ப்பதில் ரொம்ப சந்தோசம். நேரம் இருந்தால் 1950-இலிருந்து என்ற பக்கத்தை பாருங்கள். பராசக்தி, திரும்பிப் பார், மனோகரா பற்றி எல்லாம் எழுதி இருக்கிறேன். 🙂 வழக்கம் போலவே கலக்கிவிட்டீர்கள். கிடைத்தால் கட்டாயம் பார்க்கிறேன். சூர்யா, நீங்களும் பாருங்கள்!

 4. அவசியம் பார்க்கிறேன்.

  அழைப்புக்கு நன்றி.

 5. RV says:

  சூர்யா, கிருஷ்ணமூர்த்தி, போதுமே! என்னங்க இது, உங்க ரெண்டு பேர் மறுமொழிகளையும் எதிர்பார்த்து படிக்கிற எனக்காகவது கொஞ்சம் கூல் டௌன்!

 6. krishnamoorthi says:

  ஆர்வி அவர்களே, நான் கூலாகத் தான் இருக்கிறேன். ஏற்கெனெவே இரண்டு, அல்லது மூன்று முறையாவது பின்னூட்டங்களில் சொன்னதையே திரும்பவும் சொல்கிறேன்: விஷயங்களின் தராதரங்களின் அடிப்படையில் மட்டுமே என் கருத்தை முடிவு செய்கிறேன். தனிப்பட்ட அபிமானம், வெறுப்பு எதுவுமில்லை. என் கருத்தை அவரோ, அவர் கருத்தை நானோ ஏற்க வேண்டும் என்று ஒருபோதும் நான் எதிர் பார்க்கவில்லை. அதேநேரம், இணையத்தில் என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என்ற மப்பில், தனிநபர் வெறுப்பைக் கொட்டும் போது, கொஞ்சம் திரும்பித்தான் வரும்!

  ஒவ்வொரு வலைப்பதிவாகச் சென்று எதையோ பின்னூட்டம் என்று எழுதிவிட்டு, அப்படியே என் வலைப்பக்கத்திற்கும் வாருங்களேன் என்று வழிகிற ஒருவருக்கு, இவ்வளவு ஆகாது! கொஞ்ச நாட்களாக,உங்கள் வலைப் பதிவுக்கு வருவதையே இதுநாள் வரை தவிர்த்து வந்தேன், துரதிர்ஷ்டவசமாக, கூகிள் ரீடரில் போட்டு வைத்திருந்ததில், இந்தப் பதிவையும், இப்படி ஒரு அபத்தமான உளறலையும் பார்க்க நேரிட்டதாலேயே, பதில் சொல்ல வேண்டி வந்தது.

  அப்புறம், சாருவை என் இங்கு பொருத்தமில்லாமல் வம்புக்கு இழுக்க வேண்டும்? அவரை விட எப்படி வேண்டுமானாலும் எழுதத் தெரிந்த ‘முட்டாள்தனம்’ ஒசத்தி என்று பீற்றிக் கொள்வதற்கா? இதை மட்டுறுத்த வேண்டிய அவசியமோ, எனக்குப் பதில் சொல்ல வேண்டிய கட்டாயமோ உங்களுக்கு இல்லை. எனக்கு வேறு நல்ல வாசிப்புக்களும்,உருப்படியான வேலைகளும் இருக்கிறது.

 7. RV, I am always Cool.

  அவர் உருப்படியான வேலையை பார்க்கலாம்.

  நன்றி.

 8. Bags says:

  இங்கே கூலாக இருக்கிறதா, ஹாட்டாக இருக்கிறதா என்று என்னால் கண்டு பிடிக்கமுடியவில்லை. 🙂

  ஆரோக்கியமான சிந்தனை மட்டுமே நமக்கு தேவை. ஒரு கை ஓசை எழுப்பாது. விட்டுத்தள்ளுங்கள்!

  வா ராஜா வா நானும் பார்த்திருக்கிறேன். மஹாபலிபுரம் பார்க்க வேண்டும் எனத் தூண்டும்.
  >>>சின்னஞ் சிறுவனை வைத்து முழுக்க முழுக்க மகாபலிபுரத்துச் சூழ்நிலையில், ஏழு உண்மைகளை விளக்க ஏழு கதைகளைப் புனைந்து, அவற்றை அவருக்கே கை வந்த நவராத்திரி பாணியில் கோவைப்படுத்தியிருக்கிறார்.

  பத்து உண்மைகள் என்று நினைவு.

 9. gkrishna says:

  good review. if anyone knows the 7 truth kindly send the same. eagerly waiting to know one i remember – virumbinal kidaikadhu

  • சாரதா says:

   இதோ…
   1) விரும்பிப்போனால் விலகிப்போகும்
   2) விலகிப்போனால் விரும்பி வரும்
   3) காண்பதெல்லாம் உண்மையில்லை
   4) உண்மைக்கு என்றும் அழிவில்லை
   5) அள்வுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு
   6) நினைப்பதைப்போல் நடப்பதில்லை
   7) நேரம் வந்தால் கூடி வரும்

   • RV says:

    சாரதா இருக்க பயமேன்? வா ராஜா வா படத்தின் உண்மைகளை பட்டியலிட்டதற்கு நன்றி, சாரதா!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: