மைக்கேல் ஜாக்‌ஸன் (1958-2009)


mj

60, 70களில் ராக், பாப் உலகத்தின் மன்னனாக ஜொலித்த எல்விஸ் ப்ரெஸ்லி மறைவின் பிறகு வெறுமையை உணர்ந்தது ரசிகர் கூட்டம். அப்பொழுது அவர்களுக்குத் தெரிந்தது எல்லாம் ”இனி பாப் உலகத்திற்கு மன்னர் கிடையாது” என்பதுதான். ”இனி இது போன்று ஒருவர் பிறக்கமாட்டார்” என்று பல விசிறிகள் சோகமானார்கள். அவர்களுக்குத் தெரியாதது பாப் உலக்த்திற்கு அடுத்த மன்னர் ஏற்கனவே அவதரித்துவிட்டார் என்பதுதான். அந்த மன்னர் MJ எனப்படும் மைக்கேல் ஜாக்‌ஸன்.

எனக்கு மைக்கேல் பற்றி முதன் முதலாகத் தெரியவந்தது அவருடைய ”திரில்லர்” (Thriller) ஆல்பம் வெளிவந்த புதிதில் தான்.

அந்தச் சம்பவம் நேற்று நடந்த மாதிரி எனக்குத் தெளிவாக நினைவிருக்கிறது. சேலம் அரசுப் பொறியியல் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த கால்ம். (பழைய) பஸ் ஸ்டாண்டில் வருடத்திற்கு ஒரு முறை எக்ஸிபிஷன் போட்டுவிடுவார்கள். நாங்களும் போவோம். அப்படித்தான் 1983ல் நான் நண்பர்களுடன் போனேன். ஒரு இடத்தில் ஒரு டிவியில் மைக்கேல் வித்தியாசமாகவும், விசித்திரமாகவும் “It’s close to midnight and something evil lurking in the dark” என்று கதறிக்கொண்டே ஆடிக்கொண்டிருந்தார். அப்படியே அசந்து போய்ப் பார்த்துக்கொண்டிருந்தேன். அன்றிலிருந்து மைக்கேலுக்கு மேலும் ஒரு ரசிகர் கிடைத்தார்.

மைக்கேலின் தனித் தன்மை அவருடைய சிக்கலான டான்ஸ் மூவ்மண்ட்ஸ். அதனால் தான் அவர் மிக மிகப் பிரபலமானார். பில்லி ஜீன் என்ற பாடலில் அவருடைய அனைத்து டான்ஸ் திறமைகளும் வெளிப்படும். அது நமது கண்களுக்கு பெரிய விருந்து.

Billy Jean – Another version (கட்டாயம் பாருங்கள்)

ஸ்பெய்ன் நாட்டைச் சேர்ந்த பில் பெய்லியின் பேக் ஸ்லைடை மைக்கேல் பிரபலம் அடையச் செய்தார். மூன்வாக்கர் என்று பெயர் பெற்ற இந்த நடன அமைப்பு மைக்கேல் ஆடும் பொழுது மயங்காதவர் மிகக் குறைவே. இந்தப் பாடலில் டர்ன் வாக், 4 கார்னர் வாக், ஃப்லோட் வாக், ரோபோ வாக் அனைத்தும் ஆடி பிரமிக்க வைப்பார். மனிதர்களை திகைக்கவைக்கும் ஃபுட்வொர்க்கை கொண்டிருக்கிறார்.

இவரது பாடல்களில் இன்னொரு சிறபபு அமசம் அனேகப் பாடல்களில் ஒரு தீம் வைத்து விடுவார். மிக பாப்புலரான் “Beat It” (என் மனைவியின் ஃபேவரைட்) எனப்படும் பாடலில் காங்க்ஸ்டர்களை வைத்து ஒரு கதை சொல்லியிருப்பார்.

திரில்லர் பாடலில் ”Night of the Living Dead” திரைப்படம் போன்று ஒரு காட்சியமைப்பு. எனக்குப் பிடித்த இன்னொரு மெலடியான பாடல் “Say, Say, Say” என்ற பால் மெக்கார்ட்னியுடன் அமைந்தப் பாடல். பிதாமகன் படத்தில் நடிகர் சூர்யா மருந்து விற்று எமாற்றுவது போல் பாலும், மைக்கேலும் ஊர் ஊராக சென்று எமாற்றுவார்கள். இனிமையான பாடல்.

டிரம்ஸ் இசையில் வித்தியாசமான அவுட் டோர் செட்டிங்கில்  “They don’t care about us”  கேட்க், பார்க்கவேண்டிய ஒன்று.

மைக்கேல் ப்ராடிஜி என்று சொல்வது எள்ளளவும் மிகையாகாது. மோ டவுன் ரிக்கார்ட்ஸுடன் சேர்ந்து “ஜேக்ஸ்ன் 5” ட்ரூப் மூலமாக வழங்கிய “I will be there” (Acapella தான் கிடைத்தது – accompanimentடுடன் கிடைத்தால் update  செய்கிறேன் ) என்ற பாடலில் அந்த வயதிலேயே அவருக்கிருந்த தன்னம்பிக்கையையும், டான்ஸ் மூவ்மெண்ட்ஸையும் பார்த்தால் இது தெளிவாகதப் புரியும்.

”Black or White”ல் இன்னோவேட்டீவாக பரதநாட்டியத்துடன் தனது டான்ஸை மெர்ஜ் செய்ய முனைந்திருப்பார்.

இதை இன்னும் கொஞ்சம் எலாபரேட்டாக செய்திருந்தால் இந்தியாவில் மிகப்பெரிய ஹிட்டாக அமைந்திருக்கும். பொதுவாக சில  கிழக்கத்திய வித்வான்கள் மேற்கத்திய வித்வான்களுடன் (கடம் சங்கரும் கிட்டார் மெக்லாலினும் கொடுத்தது போல்) சேர்ந்து இசை விருந்து கொடுப்பார்கள். நாட்டியத்தில் இது புதியது.

ஜேனட் ஜாக்‌ஸனுடன் சேர்ந்து அளித்த ஸ்கிரீம் (Scream) ஒரு பெயிலியர். கிட்டதட்ட 7 மில்லியன் டாலர்களை செலவு செய்திருக்கிறார். ஆனால் தேறவில்லை.

இவர் குழப்பமான மனிதர். இவரது போதை மருந்துகள் உபயோகம், குழந்தைகள் பாலுறவு, குழந்தைகள் வளர்ப்பபதில் கவனக்குறைவு, விவாகரத்து என்று பல பிரச்சனைகளில் சிக்கியவர். தெளிவற்ற பணம் கையாளும் முறை என்றும் கூறுவர். 100 மில்லியன் திரில்லர் ஆல்பம் விற்றப்பிறகும், கடைசியில் பண நெருக்கடியில் கஷ்டப்பட்டதாகக் கூறுவார்கள். மேலும் அழகாக இருந்த தன்னை நிறமாற்றம் கருதி பிளாஸ்டிக் சர்ஜரி செய்து விகாரமாக ஆக்கிக் கொண்டார்.

என் தந்தை எல்விஸ் ப்ரெஸ்லியின் காலத்தில் வளர்ந்து வந்தார், அவருடைய விசிறியாக இருந்தார். அவருடைய ரசிகத்தன்மையெல்லாம் மிகவும் சட்டிலாக(subtle) த்தான் இருக்கும். என்னிடம் எப்பொழுதாவது எல்விஸை பற்றிக் கூறுவார். அவ்வளவுதான். நான் MJ கால்த்தில் வளர்ந்து வந்தவன். ஆனால் என் ரசனை என் தந்தையுடன் ஒப்பிடும்பொழுது கொஞசம் தூக்கல். நான் ஒரு மோனோ டேப் ரிக்கார்டரின் மூலமாக மைக்கேலின் “Don’t stop till you get enough” ஐ டேப் தேயும் வரை கேட்டிருக்கிறேன்.

என் பெண்ணிற்கோ ஜஸ்டின் டிம்பர்லேக் போன்றோர்கள் பாப் கிங்காக தோன்றலாம்.

எனக்கு MJ ஒரு ப்ராடிஜி, ஜீனியஸ், பிரில்லியண்ட்.  அமேரிக்க கலாச்சாரத்தின் ஒரு பகுதி. பாவம் போய்விட்டார்.