நினைத்ததை முடிப்பவன்


விகடனில் படம் வெளியானபோது வந்த விமர்சனம். (ஜனவரி 6, 1975) நன்றி, விகடன்!

உருவத்தில் தன்னைப் போல் இருக்கும் நாட்டுப்புற பாண்ட் மாஸ்டரை எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொள்ள முடியுமோ அதற்கேற்றபடி ஆட்டி வைக்கும் வைரக் கொள்ளைக்காரன், அவன் சுய உருவத்தைப் புரிந்து கொள்ளாமல் சொன்னதை அநாயாசமாகச் செய்து முடிக்கும் அசட்டு பாண்ட் மாஸ்டர் என முரணான இரண்டு பாத்திரங்கள். இரண்டு பேருக்கும் இரண்டு கதாநாயகிகள், ஒரு தங்கை, போலீஸ் அதிகாரிகள். இத்தனை பேர் போதாதா, நினைத்ததை முடிப்பதற்கு?

வித்தியாசமான இரண்டு கதாபாத்திரங்களையும் ஏற்று, இயற்கையாக நடித்திருக்கிறார் எம்.ஜி.ஆர். அசட்டுத்தனம், ஆவேசம், காதல், பாசம் அத்தனை உணர்ச்சிகளையும் கொட்டி நடிப்பதற்கு வைரக் கொள்ளைக்காரன் ரஞ்சித்தை விட பாண்ட் மாஸ்டர் சுந்தரத்துக்கு வாய்ப்புகள் அதிகம். இரண்டு பேரும் கடைசியில் மோதிக் கொள்ளும்போது பொறி பறக்கும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால், அலட்சியமாக அவர்கள் மோதிக் கொள்வது கூட கவர்ச்சியாகத்தான் இருக்கிறது. கொள்ளைக்காரன் யார் என்பதை நிரூபிக்கும் நீதிமன்ற கிளைமாக்ஸ் காட்சி, வேடிக்கையும் விறுவிறுப்பும் நிறைந்த நல்ல திருப்பம்.

லதாவுக்கும் மஞ்சுளாவுக்கும் மிதமான பாத்திரங்கள். நெருக்கமான காட்சிகளில் இருவருமே பின்வாங்கவில்லை. சி.ஐ.டி. அதிகாரியான மஞ்சுளாவின் மாத்திரை சமாசாரம் மணியான நகைச்சுவைக் கட்டம். சாரதாவிடம் பாசத்தைப் பிழிந்தெடுத்துத் தரும் துடிப்பான நடிப்பு! ‘ஊர்வசி’ நடிகையை இன்னும் கொஞ்சம் உபயோகித்துக் கொண்டிருக்கக் கூடாதா? நம்பியாருக்கும் அசோகனுக்கும் போலீஸ் அதிகாரிகளாகப் பொறுப்பு அளிக்கப்பட்டிருப்பது புதுமையாகத்தான் இருக்கிறது.

பாடல்களில் இனிமை ‘பூ மழை தூவு’கிறது. வெளிப்புறக் காட்சிகளைப் படமாக்குவதில் கேமரா வெகு கவர்ச்சியாக இயங்கியிருக்கிறது. டைரக்டர் நீலகண்டன் அவர்களின் சாமர்த்தியம் பல இடங்களில் பளிச்சிடுகிறது. சபாஷ்!

நிறைவான பொழுதுபோக்கு.