அபூர்வ ராகங்கள், முதல் மரியாதை, ஹே ராம், காஞ்சிவரம் – திருடப்பட்ட மூலக் கதைகள்


சமீபத்தில் கேள்விப்பட்ட செய்தி – என்.ஆர். தாசன் என்ற எழுத்தாளர்தான் அபூர்வ ராகங்கள் படத்தின் கதையை நாடகமாக எழுதினாராம். இது கலைமகளில் வந்ததாம். அதை பாலச்சந்தர் சுட்டு அபூர்வ ராகங்கள் படம் எடுத்தார். விஷயம் கேள்விப்பட்ட என்.ஆர்.தாசன் கேஸ் போட்டார். பாலச்சந்தர் பல வருஷம் வாய்தா வாங்கி இருக்கிறார். படம் வெளி வந்து ஹிட்டும் ஆகிவிட்டது. கடைசியில் வாய்தா ஒரு வழியாக முடிந்து கேசில் என்.ஆர்.தாசனுக்கு சாதகமாக பாலச்சந்தர் கதையை சுட்டிருக்கிறார் என்று தீர்ப்பும் வந்துவிட்டது. நீதிபதி கலைமகள் கொடுத்த சன்மானத்தைப் போல பத்து மடங்கு நஷ்ட ஈடு பாலச்சந்தர் கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பு கொடுத்தாராம். கலைமகள் கொடுத்த சன்மானம் முப்பது ரூபாயாம். பாவம் என்.ஆர். தாசனுக்கு பஸ் சார்ஜ் கூட கிடைத்ததா என்று தெரியவில்லை.

முதல் மரியாதை அனுபவம் பற்றி சுப்ரபாரதிமணியன் இங்கே எழுதி இருக்கிறார். அவர் எழுதிய கவுண்டர் கிளப் என்ற குறுநாவல் முதல் மரியாதையாக மாறிவிட்டதாம். அதன் கதை சுருக்கத்தையும் கொடுத்திருக்கிறார். கொஞ்சம் கி.ரா.வின் கோபல்ல கிராமத்தையும் இணைத்துக் கொண்டார்களாம். நான் படம் பார்த்ததில்லை. கோ. கிராமம் மட்டுமே படித்திருக்கிறேன். படித்தவர்கள், பார்த்தவர்கள் என்ன பகுதி இணைக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லுங்கள்.

சுப்ரபாரதிமணியன் இங்கே தான் என்.ஆர். தாசனிடம் பேசியதையும் குறிப்பிடுகிறார்.

ஹே ராம் ர.சு. நல்லபெருமாள் எழுதிய கல்லுக்குள் ஈரம் என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்டதாம். க. ஈரம் எப்போதோ படித்தது. சரியாக ஞாபகம் இல்லை. ஹே ராம் எனக்கு பிடித்திருந்தது. இரண்டிலும் காந்தியை கொலை செய்ய வரும் ஒருவன் மனம் மாறுவதுதான் கதை. ஆனால் இரண்டிற்குமான சூழ்நிலைகள் மிக வேறுபட்டவை என்று நினைவு. புத்தகம் சரியாக நினைவில்லை, அதனால் உறுதியாக என்னால் எதுவும் சொல்ல முடியாது. ஆனால் கமல் ர.சு. நல்லபெருமாளிடம் சமரசம் செய்துகொண்டார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

காஞ்சிவரம் அனுபவத்தை பற்றி சுப்ரபாரதிமணியன் இங்கே குறிப்பிடுகிறார். அவர் சொல்லும் ஒளிப்பதிவாளர் தங்கர் பச்சான் என்பது வெள்ளிடைமலை. தங்கர் பச்சானிடம் போன திரைக்கதை பலரிடம் போய் காஞ்சிவரமாக மாறி இருக்கிறது என்று தெரிகிறது.

எனக்கு சுப்ரபாரதிமணியனை ஓரளவு தெரியும். மிக நல்ல மனிதர். இப்படிப்பட்ட கசப்பான அனுபவங்கள் அவருக்கு ஏற்பட்டிருப்பது மிக வருத்தமாக இருக்கிறது. பாலச்சந்தர், பாரதிராஜா, கமல், ப்ரியதர்ஷன் போன்ற பெரிய இயக்குனர், நடிகர்களே இவ்வளவு அற்பத்தனமாக நடந்துகொள்கிறார்களே! கதை எழுதுபவனுக்கு எதுவும் பெரிதாக கொடுத்துவிடப்போவதில்லை. ஆனாலும் அந்த என்.ஆர்.தாசனுக்கு அன்றைக்கு ஒரு பத்தாயிரமோ, சுப்ரபாரதிமணியனுக்கு மு. மரியாதைக்கு ஒரு ஐம்ப்தாயிரமோ, காஞ்சிவரத்துக்கு ஒரு இரண்டு மூன்று லட்சமோ, ஹே ராமுக்காக ர.சு. நல்ல பெருமாளுக்கு முதலிலேயே ஒரு இரண்டு லட்சமோ கொடுத்திருந்தால் என்ன குறைந்து போயிருக்கும்? ஒரு எழுத்தாளனுக்கு குறைந்த பட்ச மரியாதை கொடுப்பதில் என்ன பிரச்சினை? கோடிகளில் படம் எடுப்பவர்களுக்கு எழுத்தாளனுக்கு இத்துனூண்டு பணம் கொடுக்க மனம் வரவில்லையே!

தொடர்புடைய பதிவுகள்:
சுப்ரபாரதிமணியனின் முதல் மரியாதை அனுபவம்
சுப்ரபாரதிமணியனின் காஞ்சிவரம் அனுபவம்