அபூர்வ ராகங்கள், முதல் மரியாதை, ஹே ராம், காஞ்சிவரம் – திருடப்பட்ட மூலக் கதைகள்


சமீபத்தில் கேள்விப்பட்ட செய்தி – என்.ஆர். தாசன் என்ற எழுத்தாளர்தான் அபூர்வ ராகங்கள் படத்தின் கதையை நாடகமாக எழுதினாராம். இது கலைமகளில் வந்ததாம். அதை பாலச்சந்தர் சுட்டு அபூர்வ ராகங்கள் படம் எடுத்தார். விஷயம் கேள்விப்பட்ட என்.ஆர்.தாசன் கேஸ் போட்டார். பாலச்சந்தர் பல வருஷம் வாய்தா வாங்கி இருக்கிறார். படம் வெளி வந்து ஹிட்டும் ஆகிவிட்டது. கடைசியில் வாய்தா ஒரு வழியாக முடிந்து கேசில் என்.ஆர்.தாசனுக்கு சாதகமாக பாலச்சந்தர் கதையை சுட்டிருக்கிறார் என்று தீர்ப்பும் வந்துவிட்டது. நீதிபதி கலைமகள் கொடுத்த சன்மானத்தைப் போல பத்து மடங்கு நஷ்ட ஈடு பாலச்சந்தர் கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பு கொடுத்தாராம். கலைமகள் கொடுத்த சன்மானம் முப்பது ரூபாயாம். பாவம் என்.ஆர். தாசனுக்கு பஸ் சார்ஜ் கூட கிடைத்ததா என்று தெரியவில்லை.

முதல் மரியாதை அனுபவம் பற்றி சுப்ரபாரதிமணியன் இங்கே எழுதி இருக்கிறார். அவர் எழுதிய கவுண்டர் கிளப் என்ற குறுநாவல் முதல் மரியாதையாக மாறிவிட்டதாம். அதன் கதை சுருக்கத்தையும் கொடுத்திருக்கிறார். கொஞ்சம் கி.ரா.வின் கோபல்ல கிராமத்தையும் இணைத்துக் கொண்டார்களாம். நான் படம் பார்த்ததில்லை. கோ. கிராமம் மட்டுமே படித்திருக்கிறேன். படித்தவர்கள், பார்த்தவர்கள் என்ன பகுதி இணைக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லுங்கள்.

சுப்ரபாரதிமணியன் இங்கே தான் என்.ஆர். தாசனிடம் பேசியதையும் குறிப்பிடுகிறார்.

ஹே ராம் ர.சு. நல்லபெருமாள் எழுதிய கல்லுக்குள் ஈரம் என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்டதாம். க. ஈரம் எப்போதோ படித்தது. சரியாக ஞாபகம் இல்லை. ஹே ராம் எனக்கு பிடித்திருந்தது. இரண்டிலும் காந்தியை கொலை செய்ய வரும் ஒருவன் மனம் மாறுவதுதான் கதை. ஆனால் இரண்டிற்குமான சூழ்நிலைகள் மிக வேறுபட்டவை என்று நினைவு. புத்தகம் சரியாக நினைவில்லை, அதனால் உறுதியாக என்னால் எதுவும் சொல்ல முடியாது. ஆனால் கமல் ர.சு. நல்லபெருமாளிடம் சமரசம் செய்துகொண்டார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

காஞ்சிவரம் அனுபவத்தை பற்றி சுப்ரபாரதிமணியன் இங்கே குறிப்பிடுகிறார். அவர் சொல்லும் ஒளிப்பதிவாளர் தங்கர் பச்சான் என்பது வெள்ளிடைமலை. தங்கர் பச்சானிடம் போன திரைக்கதை பலரிடம் போய் காஞ்சிவரமாக மாறி இருக்கிறது என்று தெரிகிறது.

எனக்கு சுப்ரபாரதிமணியனை ஓரளவு தெரியும். மிக நல்ல மனிதர். இப்படிப்பட்ட கசப்பான அனுபவங்கள் அவருக்கு ஏற்பட்டிருப்பது மிக வருத்தமாக இருக்கிறது. பாலச்சந்தர், பாரதிராஜா, கமல், ப்ரியதர்ஷன் போன்ற பெரிய இயக்குனர், நடிகர்களே இவ்வளவு அற்பத்தனமாக நடந்துகொள்கிறார்களே! கதை எழுதுபவனுக்கு எதுவும் பெரிதாக கொடுத்துவிடப்போவதில்லை. ஆனாலும் அந்த என்.ஆர்.தாசனுக்கு அன்றைக்கு ஒரு பத்தாயிரமோ, சுப்ரபாரதிமணியனுக்கு மு. மரியாதைக்கு ஒரு ஐம்ப்தாயிரமோ, காஞ்சிவரத்துக்கு ஒரு இரண்டு மூன்று லட்சமோ, ஹே ராமுக்காக ர.சு. நல்ல பெருமாளுக்கு முதலிலேயே ஒரு இரண்டு லட்சமோ கொடுத்திருந்தால் என்ன குறைந்து போயிருக்கும்? ஒரு எழுத்தாளனுக்கு குறைந்த பட்ச மரியாதை கொடுப்பதில் என்ன பிரச்சினை? கோடிகளில் படம் எடுப்பவர்களுக்கு எழுத்தாளனுக்கு இத்துனூண்டு பணம் கொடுக்க மனம் வரவில்லையே!

தொடர்புடைய பதிவுகள்:
சுப்ரபாரதிமணியனின் முதல் மரியாதை அனுபவம்
சுப்ரபாரதிமணியனின் காஞ்சிவரம் அனுபவம்

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

16 Responses to அபூர்வ ராகங்கள், முதல் மரியாதை, ஹே ராம், காஞ்சிவரம் – திருடப்பட்ட மூலக் கதைகள்

 1. ஞாநி says:

  என்.ஆர்.தாசன் கண்ணதாசன் இலக்கியப்ப் பத்திரிகையில் நிறைய எழுதியிருக்கிறார். பாலசந்தர் தன் கதையை அபூர்வ ராகம் படமாக எடுத்தது பற்றி தாசன் தொடர்ந்த வழக்கில் தாசன் பெரும் தொகை எதையும் நஷ்ட ஈடாகக் கேட்கவில்லை. தன் கதை திருடப்பட்டது என்பதை நிரூபிப்பது மட்டுமே அவர் நோக்கமாக இருந்தது. அவர் கோரியது அடையாள நஷ்ட ஈடாக ஒரே ஒரு ரூபாய்தான் என்று வழக்கு நடந்த சமயத்தில் கேள்விப்பட்டிருக்கிறேன். வழக்கை நடத்தி வெற்றி ஈட்டிய வழக்கறிஞர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தலைவ்ராக இருந்தவரும் சிகரம் இதழை நடத்தியவருமான செந்தில்நாதன்.

  என் கதை கூட திருடப்பட்டிருக்கிறது. யார், எப்படி என்ற விவரங்கள் தெரியும் என்றாலும் சாட்சியங்களோடு நிரூபிக்கும் வாய்ப்பில்லை என்பதால் அதைப் பற்றி நான் பேசுவதில்லை.

  பெரிய இயக்குநர்கள், பெரிய கம்பெனிகள் பெரும்பாலும் அற்பத்தனமாகவே நடந்துகொள்கிறார்கள் என்பது உண்மை. குறிப்பாக சம்பள விஷ்யங்களில் சின்ன அமைப்புகளை விட குறைவாகத் தருவார்கள்.

  ஞாநி

 2. ஞாநி says:

  ர.சு நல்ல பெருமாளின் கதையும் ஹே ராமும் வெவ்வேறானவை. ர.சு. நல்லபெருமாளின் கல்லுக்குள் ஈரம் கதை அதற்கு முன்பு வந்த ஆர்.கே. நாராயணனின் வெயிட்டிங் ஃபார் மகாத்மா நாவலை நிறையவே நினைவுபடுத்தும். பின்னர் மாலன் எழுதிய ஜனகணமன, முன் இரண்டையும் நிறையவே நினைவுபடுத்தும்.

 3. Kanthasamy says:

  இந்த மாதிரி விசயங்கள் 99 சதம் established மனிதர்களின் பாப்புலாரிட்டியைக் குறி வைத்துத்தான் தாக்கப் படுகிறது success has so many fathers அதுவே தோல்வியுற்றால் யாரும் சீந்துவதில்லை. similiarity தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது.. காரணம் சமூக சிந்தனையாளர்கள் ஒரே மாதிரி சிந்திப்பதும் ஒரு காரணம்.. ஏனெனில் மக்கள் in pursuit of happiness நோக்கிச் செல்கிறார்கள்.. ஆனால் துன்ப மிகு உழன்று வருகிறார்கள் என்பதுதான் ஒன் லைன் கதை.. அதுவேதான் சுழன்று வந்து கொண்டிருக்கிறது..

 4. சாரதா says:

  எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படத்தைப்பார்த்த கதாசிரியர் டி.என்.பாலு அதிர்ந்தார். ஏதோ புதுமையான கதை, அது, இது என்று புருடா விட்டு விட்டு, கடைசியில் தன்னுடைய “மூன்றெழுத்து” படத்தின் கதையே அப்பட்டமாக திருடப்பட்டு எடுக்கப்பட்டிருக்கிறது என்பதையறிந்த பாலு, உடனே மூன்றெழுத்து பட இயக்குனர் ராமண்ணாவைத் தொடர்புகொண்டு, எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் மீது வழக்குத்தொடரப்போவதாகச் சொல்லியிருக்கிறார்.

  திரு.ஞாநி அவர்கள் சொன்னது போல, டி.என்.பாலுவும் பணம் எதையும் எதிர்பார்க்கவில்லை. தன் கதையை எம்ஜியார் பிக்சர்ஸ் திருடி எடுத்துள்ளது என்று கோர்ட்டில் நிருபணமானால் போதும் என்பதே அவர் ஒரே நோக்கமாக இருந்தது. ஆனாலும் எம்.ஜி.ஆரைப் பகைத்துக்கொள்ள விரும்பாத ராமண்ணா, டி.என்.பாலுவை அடக்கி வைத்து விட்டார். அப்படியும் பத்திரிகைகளில் விஷயம் கசிந்தது.

  சரி, மூன்றெழுத்து படத்தின் கதையென்ன…?.

  பணப்பெட்டியொன்று (மேஜரால்) ஒரு இடத்தில் புதைக்கப்படுகிறது. அது எங்கே புதைக்கப்பட்டுள்ளது என்ற ஒரு காகிதத்தில் குறிக்கப்பட்டு, அந்த காகிதம் மூன்று பாகங்களாக கிழிக்கப்பட்டு, மூன்று வெவ்வேறு இடங்களில் (ஊட்டி, நாகர்கோயில், ஐதராபாத்) உள்ளவர்களிடம் கொடுத்து வைக்கப்படுகிறது. பின்னர் கதாநாயகன் வெளிநாட்டிலிருந்து வந்து அந்த மூன்று இடங்களுக்கும் குறிப்பைத்தேடிப்போக, அந்தப்பெட்டியை அடையத்துடிக்கும் வில்லன் கூட்டமும் பின் தொடர்கிறது. ஒருவழியாக கதாநாயகன் (ரவிச்சந்திரன்) மூன்று இடங்களிலுமிருந்த குறிப்புகளை ஒன்று சேர்த்து பெட்டி புதைக்கப்பட்ட இடத்தை (கமுதி) கண்டுபிடிக்கிறார்.

  இதில், ‘பணப்பெட்டி’ என்பதற்கு பதிலாக ‘ஆராய்ச்சிக்குறிப்புகள் அடங்கிய பெட்டி’ என்று போட்டால், உலகம் சுற்றும் வாலிபன் கதை வந்துவிடும்.

  இன்னொரு வேடிக்கை மூன்றெழுத்தில் கடைசியில், பிரதான வில்லன் மனோகர் வருவது போலவே உ.சு.வா.வில் கடைசியில் நம்பியார் வருவார்.

 5. velji says:

  ஷிட்னி ஷெல்டனின் ‘டெல் மீ யுவர் ட்ரீம்ஸ்’ கதையின் அப்பட்டமான தழுவல் பலகோடிகளை புரட்டிய ஷங்கரின் அன்னியன்.’சிமிலாரிட்டி’ இல்லை.அப்படியே சுட்டது!ஷெல்டன் கோர்ட்டுக்கா வரப்போறார்?!

 6. சின்னக்குட்டி says:

  ஆபூர்வ ராகங்கள் கதை இங்கிருந்து திருடபட்டது என்று ஒரு பேச்சுக்கு சொல்லலாம்

  விக்கிரமாதித்தன் கதையில் ஒன்று ..தகப்பனும் மகனும் காட்டு வழியாக நடந்து போனார்களாம் இரண்டு காலடியை கண்டார்களாம் அது பெண்ணின் காலடி என முடிவெடுத்து பெரிய காலடி உள்ள பெண் தகப்பனுக்கு என்றும் சிறிய காலடி உள்ள பெண் மகனுக்கு என்று முடிவெடுத்தார்களாம் ..நேரில் பார்க்கும் போது மாறி இருந்ததாம் இப்படி கதை போகிறது

  அது போக போர்ட்டி கரட்ஸ் என்ற ஆங்கில படத்தின் கதை இப்படி இருப்பதாகவும் கூறுவர்

 7. bmurali80 says:

  RV,

  தமிழர்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என குமுதத்தில் கர்ஜிக்கிறாரே தங்கர் பஜ்சன். ஒரு வேளை இதைத் தான் சொல்கிறாரொ என நினைத்தேன். இல்லை அவருடைய படம் நீக்கப் பட்டதுக்கு ‘தமிழர்களை’ வக்காளத்துக்குக் கூப்பிடுகிறார்…

 8. ரதி says:

  RV,

  மிக நீண்ட நாட்களுக்குப்பிறகு ஈழம் தவிர்ந்த ஓர் பதிவை படித்திருக்கிறேன். நீங்கள் சொல்லும் ஹேராம் திரைப்படம் ர.சு. நல்லபெருமாள் எழுதிய “கல்லுக்குள் ஈரம்” கதையை தழுவி எடுக்கப்பட்டதாக நானும் ஆனந்த விகடனில் ர.சு நல்லபெருமாளின் மகன், அமெரிக்காவில் இருக்கிறார் என்று நினைக்கிறேன், சொன்னதாக படித்த ஞாபகம். கல்லுக்குள் ஈரம் புத்தகம் என்னிடம் உள்ளது. என்னக்கென்னவோ அந்த கதையில் வரும் சில காதாபாத்திரங்கள் அவர்களின் குணாதிசயங்கள் “ஹேராம்” காதாபாத்திரத்தோடு ஒத்துப்போவதாகவே தெரிகிறது.

  கமலஹாசனுக்கு நான் ரசிகை இல்லை. ஆனாலும், அவரின் படங்களில் வரும் சில கருத்துக்கள் சிந்திக்கவைக்கக்கூடியவை. ஏனோ, அவரின் படத்திற்கான கதைகள், கருக்கள் வேறெங்காவது இருந்து திருடப்படுவதாக அவர் மீது எப்போதுமே ஓர் குற்றச்சாட்டு இருந்துகொண்டேதானே இருக்கிறது.

 9. Pingback: சினிமாவாக வந்த தமிழ் நாவல்கள், சிறுகதைகள் « சிலிகான் ஷெல்ஃப்

 10. ஏ.ஜே. கிரானின் Beyond this place” ஹிந்தியில் திருடப்பட்டு காலா பானி என்ற பெயரில் வந்தது. அதையே தமிழில் நல்ல தீர்ப்பு என்ற தலைப்பில் சுட்டார்கள் (ஜெமினி கணேசன்).

  பி.ஜி. வோட்ஹவுஸின் If I were you திருடப்பட்டு ஹலோ மிஸ்டர் ஜமீந்தாராக வந்தது. அதிலும் கதாநாயகன் ஜெமினி கணேசன்.

  ஜெர்மானிய நாவல் Das doppelte Löttchen by Erich Kaestner திருடப்பட்டு Parent Trap ஆக ஆங்கிலத்தில் வர, தமிழில் அது குழந்தையும் தெய்வமும் என்று வர, ஹிந்தியில் அதுவே தோ கலியான் என வந்தது. ஜெர்மானிய நாவலின் இரட்டை சகோதரிகளின் பாத்திரங்கள் உண்மையான இரட்டை சகோதரிகளை வைத்து எடுக்கப்பட்டது. ஜெர்மானிய ஜனாதிபதி விருது கிடைத்தது. தமிழ்படத்துக்கும் இந்திய ஜனாதிபதியின் விருது கிடைத்தது.

  சிட்னீ ஷெல்டனின் Rage of Angels தமிழில் ரா.கி. ரங்கராஜனால் ஜெனிஃபராக மொழிபெயர்க்கப்பட்டு குமுதத்தில் வெளியானது. அதையே தமிழில் மக்கள் என் பக்கம் என்னும் தலைப்பில் எடுத்தார்கள், சத்தியராஜ், அம்பிகா, ராஜேஷ் ஆகியோர் நடித்தது. மூலக்கதையில் ராஜேஷ் பாத்திரம் ஜா.எஃப். கென்னடிதான் என பலர் கற்பூரம் அடித்து சத்தியம் செய்துள்ளனர்.

  எல்லாவற்றையும் விட பெரிய கொடுமையாக இதையே வாராந்தரி ராணி பத்திரிகையில் இந்துமதி “நல்லதோர் வீணை செய்து” என்னும் தலைப்பில் தொடர் கதையாக எழுத ஆரம்பிக்க, நான் உடனேயே பத்திரிகைக்கு எழுதி, ஃபோன் வேறு செய்ய, அத்தொடர்கதை இரண்டே வாரத்தில் காமாசோமா என முடிக்கப்பட்டது.

  சமீபத்தில் 1970-களின் துவக்கத்தில் வெளி வந்த சபதம் என்னும் படத்தை தேவிபாலா சுட்டு குங்குமத்தில் சக்தி என்னும் தலைப்பில் தொடர்கதையாக எழுத ஆரம்பிக்க, அங்கும் நான் ஆஜர். கதையின் போக்கை அங்குமிங்குமாக மாற்றி தேவிபாலா கதையை முடித்து வைத்தார்.

  ஏ.ஜே. கிரானினின் இன்னொரு நாவல் சிட்டாடல் ஹிந்தியில் தேரே மேரே சப்னே ஏனும் தலைப்பில் வந்து சக்கைப்போடு போட்டது. அவரது இந்த நாவலில் மேலே சொன்ன நாவலையும் திருடியது தேவ் ஆனந்தேதான். தமிழில் சினிமா வராவிட்டால் என்ன, சாண்டில்யன் சிட்டாடலையும், இன்னொரு ஏ.ஜே.கிரானின் நாவலான ஷேனன்ஸ் வேயையும் சேர்த்து சுட்டு, அரும்பு அம்புகள் என்னும் தலைப்பில் விகடனில் தொடர்கதையாக எழுதினார்.

  மிககச்சிதமான திரைக்கதை கோபுரங்கள் சாய்வதில்லை இப்போது சொதப்பலாக இழுக்கப்பட்டு கஸ்தூரி என்னும் பெயரில் மெகா சீரியலாக வந்து படுத்துகிறது.

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

 11. Usha says:

  கமலின் முக்கால்வாசி படங்கள் காப்பி தான் என்று நிரூபிக்கப் பட்டவை:
  சாம்பிளுக்கு: ஆங்கிலத்தில் வந்த ‘ப்ளேன்ஸ், டிரைன்ஸ் அண்ட் ஆட்டோமொபில்ஸ்’ கொஞ்சம் மாத்தி ‘அன்பே சிவம்’ ஆனது.
  ‘வாட் அபௌட் பாப்’ என்ற படம் அப்படியே ஈ-அடிச்சான் காப்பியாக ‘தெனாலி’ ஆனது.
  ‘மிசஸ் டவுட்பயர்’ தான் ‘அவ்வை ஷண்முகி’
  ‘9 டு 5’ படம் தான் ‘மகளிர் மட்டும்’…..

  இவர்கள் காப்பி அடிப்பார்கள் – ஆனால் திருட்டு விசிடி பற்றி கொதித்து எழுவார்கள்!!

 12. Usha says:

  More copies from Kamal:
  Planes, Trains and Automobiles – Anbe Sivam
  Mrs. Doubtfire – Avvai Shanmugi
  What about Bob? – Thenali
  The list goes on and on….

  They have no right to talk about video piracy. They need to stop stealing stories first.

 13. ஆர்.வி.சார்,
  கே. பாலசந்தரின் பிரபலமானஅவள் ஒரு தொடர்கதை , ரித்விக் கடக்கின் வங்காளத் திரைப்படமான’ மேகெ தாக தாரா’வின் அப்பட்டமான தழுவல்தான்..
  உரிமை பெற்றிருப்பார் என்று நினைக்கிறேன்.விஷயம் தெரியாதவர்களுக்கு
  அவர் ஒரு பெரிய ஜீனியஸ் என்று தோன்றும்.

 14. Pingback: சினிமாவாக வந்த தமிழ் நாவல்கள், சிறுகதைகள் | சிலிகான் ஷெல்ஃப்

 15. R. Mahendra Raj says:

  Actually there was a Malay comedy film released in the year 1967 in Malaysia entitled ‘Keluarga 69′ which means ’69 Family’. The figures ’69’ denotes an upside down affair. The film was starred by the then leading Malay movie top actors like the late P. Ramlee, A.R. Tompel etc. When we saw ‘Aboorva Raagangal’ in 1975 we were surprised by the similarities although the subject was seriously dealt with whereas ‘Keluarga 69’ was a comedic movie. We were wondering as to how KBalachander could have plagiarized this story since Malay films are usually meant for screenings in this region only. At that time we were consoled by the Director Sreedhar’s case where someone sued him for copying the ‘Nenjam Marapithillai’ storyline. The judgment given was that no one individual could claim to originality as the thinking process could happen to more than one person. It was sheer coincidence that both the stories had the same storyline ruled the judge.

  By the way, the late P. Ramlee was the local artiste in attendance for MGR’s visitation to Malaysia in October 1970 when shooting ‘Ulagam Sutrum Vaaliban’.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: