ஓம்காரா


ஒதெல்லோ நாடகத்தைப் பற்றி எல்லாருக்கும் தெரியும். நான் பார்த்ததில்லை, ஆனால் படித்திருக்கிறேன். பிடிக்கவே இல்லை. ஒதெல்லோ ஒரு cliche ஆகிவிட்டது. தன்னை முழுதும் நம்பும் நண்பன் மனதை கலைக்கும் இயகோ, ஒதெல்லோவைத் தவிர வேறு யாரையும் நினைக்கக்கூட முடியாத டெஸ்டமோனா, எடுப்பார் கைப்பிள்ளை ஒதெல்லோ என்பதெல்லாம் மீண்டும் மீண்டும் வரும் stock characters ஆக மாறிவிட்டன. அதுவும் மேடை நாடகம். ஒதெல்லோ பேசுவார் பேசுவார் பேசிக்கொண்டே இருப்பார். நான் அங்கே போய் இவனை வென்றேன், இங்கே போய் இவனைக் கொன்றேன் என்று. இதை எல்லாம் எப்படி படிப்பது? நாடகத்தில் பேசிக் கொண்டே போனால் யார் கேட்பது? ராமன் எத்தனை ராமனடி நாடகத்தில் சிவாஜி ஒவ்வொரு பொம்மை கோட்டையாக காட்டி அதோ ராய்கர் கோட்டை, அதை பிடிக்கப் போய் என் நண்பனை இழந்தேன் என்று முழ நீளம் வசனம் பேசுவார். சிவாஜி மாதிரி ஒரு நடிகர் வசனம் பேசி நடிக்கும்போது கொஞ்சம் powerful ஆக இருந்தது – அதுவே பத்து நிமிஷம் ஆன பிறகு எப்போது முடியும் என்று தோன்ற ஆரம்பித்தது. ஒதெல்லோ நாடகத்தை படிக்கும்போது சரிதான், மிகச் சிறந்த நடிகர்களால் இந்த வார்த்தைகளுக்கு உயிர் கொடுக்க முடியுமோ என்னவோ, நாடகத்தில் இதை எல்லாம் பேசத்தான் முடியும், இது என்ன சினிமாவா என்று சமாதானப்படுத்திக் கொண்டேன். ஆனால் எந்த நாளும் மாக்பெத், ஜூலியஸ் சீசர் மாதிரி வராது என்று தோன்றியது.

ஓம்காரா பார்த்துத்தான் நான் ஒதெல்லோவை புரிந்துகொண்டேன். ஒதேல்லோவின் சந்தேகங்கள், டெஸ்டமோனாவின் innocence, இயகோவின் சூழ்ச்சி எல்லாம் இன்று cliche ஆக இருக்கலாம். ஆனால் அவை எல்லாம் என்றும் எங்கும் இருப்பவை. அவற்றை முதன் முதலாக ஷேக்ஸ்பியர் மேடையில் கொண்டு வந்தபோது அது மிகவும் சக்தி நிறைந்த ஒரு நாடகமாக, மனதை தொட்ட ஒரு நாடகமாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

ஓம்காரா ஒதெல்லோவை இந்தியாவின் cow-belt மாகாணங்களுக்கு கொண்டு வருகிறது. எனக்கு ஹிந்தியின் accent எல்லாம் பார்த்து எந்த இடம் என்று கண்டுபிடிக்கும் அளவுக்கு ஹிந்தி தெரியாது. ஆனால் அனேகமாக மேற்கு உத்தரப் பிரதேசம் ஆக இருக்கும் என்று நினைக்கிறேன். ஓம்காரா சுக்லா – ஓமி – (ஒதெல்லோ) ஒரு லோக்கல் எம்.எல்.ஏ.வின் (பூரா படத்திலும் அவர் பேர் சொல்வதில்லை, பாய்சாப் அவ்வளவுதான்) தலைமை அடியாள் – பஹூபலி. எம்.எல்.ஏ. ஜெயிலில் சர்வ சுகங்களுடனும் இருக்கிறார். அவர் மேல் ஒரு கேஸ் நடக்கிறது. அவருடைய வக்கீலின் பெண் டாலி (டெஸ்டமோனா) கல்யாண மேடையிலிருந்து ஓமியுடன் ஓடிவிடுகிறாள். ஜெயிலிலேயே விசாரிக்கும் எம்.எல்.ஏ. பாய்சாப் பெண் அவள் விருப்பப்படிதான் போயிருக்கிறாள் என்று ஓமிக்கு ஆதரவாக தீர்ப்பு சொல்லிவிடுகிறார். அப்பா வக்கீல் தலை குனிவோடு திரும்பும்போது கடுப்போடு ஓமியிடம் சொல்கிறார் – பெத்த அப்பனையே ஏமாற்றும் பெண் உன்னையும் ஏமாற்றிவிடுவாள் என்று. ஓமியின் சேவையால் சாட்சிகள் உடைந்து, செத்துப்போய், பாய்சாப் ரிலீஸ் ஆகிவிடுகிறார். கல்யாணம் சுப முகூர்த்தத்துக்காக கொஞ்சம் தள்ளிப் போகிறது. டாலி ஓமி வீட்டில்தான் தங்கி இருக்கிறாள். ரிலீஸ் ஆன பாய்சாப் இப்போது எம்.பி. தேர்தலில் நிற்கப் போகிறார். ஓமிக்கு எம்.எல்.ஏ. சீட் கொடுக்கிறார். ஓமி பஹூபலி பதவிக்கு தனக்கு உண்மையாக உழைத்த, தன் கூட்டத்தின் அறிவிக்கப்படாத உபதலைவன் லங்டாவை (இயகோ) விட்டுவிட்டு காலேஜ் கூட்டத்தில் பிரபலமாக இருக்கும் கேசு ஃபிரங்கியை பஹூபலி ஆக்குகிறான். லங்டா தன் தம்பி மாதிரி, தன் செய்கையை புரிந்து கொள்வான் என்று எதிர்பார்க்கிறான். வெறுத்துப் போகும் லங்டாவோ கேசுவுக்கும் டாலிக்கும் உறவு என்று நம்ப வைக்கிறான். ஓமிக்கு நம்பவும் முடியவில்லை, ஆனால் லங்டா செய்யும் சதிகளை தாண்டவும் முடியவில்லை. கல்யாண ராத்திரி அன்று டாலியை கொல்கிறான். லங்டா, லங்கடாவின் மனைவி, ஓமி எல்லாரும் இறக்கிறார்கள்.

படத்தின் பெரிய வலிமை ஒரு cow-belt சின்ன ஊரை, அரசியல் நிலையை தத்ரூபமாக கொண்டு வருவதுதான். அடியாள் அரசியல். கெட்ட வார்த்தை சாதாரணமாக புழங்குகிறது. சூத்தியா என்று சொல்லாத இடமே இல்லை.

சின்ன சின்ன விஷயங்களை செதுக்கி இருக்கிறார்கள். கேசுவை மாட்டிவிட லங்டா அவனை குடிக்க வைப்பான். சண்டை வரும் என்று தெரியும்போது வெளியே போய்விடுவான். சண்டையை தடுக்க ஓமி ஓடி வந்த பிறகுதான் லங்க்டாவும் வருவான் – லங்டா காதில் பூணூல் சுற்றி இருக்கும். (பிராமணர்கள் சிறுநீர் அல்லது நம்பர் டூ போகும்போது பூணூலை காதில் சுற்றிக் கொள்ள வேண்டும் என்பது ஐதீகம் – அனேகமாக நனையாமல் இருப்பதற்காக வந்திருக்கும் என்று நினைக்கிறேன். 🙂 ) ஜெயிலில் போலீஸ்காரர்கள் லவுட்ஸ்பீக்கரில் செல் ஃபோன், துப்பாக்கி, அது இது உள்ளே கொண்டு வரக்கூடாது என்று கத்திக் கொண்டிருப்பார்கள். பாய்சாபை பார்க்க வந்திருக்கும் லங்டா இதெல்லாம் என்கிட்டே இருக்கு, என்ன பண்ணப் போறே என்று கேட்பான். ரயிலில் போய்க்கொண்டிருக்கும் பாய்சாப், சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்த சொல்வார். வரும் கார்டிடம் வண்டியை ரிவர்சில் எடு, இவர்களை போன ஸ்டேஷனில் இறக்க வேண்டும் என்பார். அதிகாரத்தை எவ்வளவு சர்வசாதாரணமாக துஷ்பிரயோகம் செய்ய முடியும் என்று இதை விட நன்றாக காட்ட முடியாது. ஓமிக்கு படத்தில் ஆதா என்று ஒரு நிக்நேம். ஆதா என்றால் பாதி என்று அர்த்தம். ஓமியின் அப்பா பிராமணர், அம்மா “கீழ் ஜாதி”. அரை பிராமணனாம். ஓமிக்கு டாலிக்கு தன் மேல் காதல் என்று தெரியாது. டாலி எழுதும் முதல் காதல் கடிதத்தில் நீ என்னைக் ஏற்றுக் கொள்ளாவிட்டால், நீ கொன்றவர்கள் லிஸ்டில் என்னையும் சேர்த்துக் கொள் (அதாவது நான் தற்கொலை செய்து கொள்வேன்) என்று எழுதுவாள். கேசு டாலிக்கு I just want to say I love you என்ற பாட்டை கிடாரில் வாசித்துக் கொண்டே பாட சொல்லிக் கொடுப்பான். அப்போது botttom என்ற வார்த்தையை baa(d)am என்று சொல்ல வேண்டும் என்று சொல்லி சொல்லிப் பார்ப்பான். டாலிக்கு baatttam என்றுதான் வரும்! கிராமம், சிறு நகரக்காரர்களின் ஆங்கில உச்சரிப்பை நன்றாக காட்டி இருப்பார்கள். லங்டாவிடம் கேசுவுக்கும் டாலிக்கும் உறவு இருக்கிறதா இல்லையா? ஹான் யா நா என்று ஓமி கேட்டுக் கொண்டிருப்பான். அதற்குள் அவர்கள் கொல்ல வந்திருக்கும் ஆள் அருகே வந்துவிடுவான். அவனைக் கொன்றுவிட்டு ஒன்றுமே நடக்காதது மாதிரி விட்ட இடத்தில் ஓமி லங்டாவிடம் தன் கேள்வியை தொடருவான்.

செய்ஃப் அலி கான் (லங்டா) sizzles. எனக்கு தெரிந்து அவர் இரண்டு படங்களில்தான் பிரமாதமாக நடித்திருக்கிறார். தில் சாத்தா ஹை, மற்றும் ஓம்காரா. அவருடைய கட்டுமஸ்தான உடலும், கொஞ்சம் நொண்டி நடக்கும் நடையும் (லங்டா என்றால் நொண்டி), கலக்குகிறார். எல்லாருமே கலக்குகிறார்கள், ஆனால் இவர் எல்லாரையும் தூக்கி சாப்பிட்டுவிட்டார். அவரும் ரஜ்ஜுவும் ஒரு பெரிய கிணறு பக்கத்தில் உட்கார்ந்து தண்ணி அடிக்கும் சீன் அபாரம். ரஜ்ஜு தண்ணீரில் குதித்ததும் அவர் உருண்டு புரண்டு சிரிப்பது அற்புதமான சீன். கீழே க்ளிப்.

இன்னொரு க்ளிப் – செய்ஃப் தன் நண்பனிடம் அவன் திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண்ணை ஓமி தூக்கிக் கொண்டு போகப் போகிறான் என்பதை சொல்கிறான்.

அஜய் தேவ்கன் அபாரம்.

கரீனா கபூருக்கு நடிக்கவும் வரும் என்று நான் நினைத்ததே இல்லை. மிஞ்சி மிஞ்சிப் போனால் ஜப் வி மெட் மாதிரி நடிக்கலாம் என்று நினைத்திருந்தேன். இதில் அருமையாக நடித்திருக்கிறார். ஆனால் கலக்குவது கொங்கோனா சென் ஷர்மாதான். லங்டாவின் மனைவி, ஓமியின் உடன் பிறவாத சகோதரி. டாலியை தன் வீட்டுப் பெண்ணாக வரிக்கிறார். அவருடைய வீட்டுக்குத்தான் கல்யாண பாராத் (ஊர்வலம்) வரவேண்டும். ஒரு நல்ல டயலாக் – டாலி சொல்வாள் – ” என் பாட்டி சொன்னாங்க – ஒரு ஆம்பளயின் மனசுக்கு வழி அவன் வயித்திலேருந்துதான் தொடங்குதுன்னு” – இவள் அதற்கு பதில் – “அப்படியா? என் பாட்டி சொன்னாங்க வயித்துக்கு கொஞ்சம் கீழே இருந்து தொடங்குதுன்னு!”

நசீருதின் ஷா பாய்சாப். புதிதாக என்ன சொல்வதற்கு இருக்கிறது?

பிபாஷா பாசு (கேசுவின் காதலி) இரண்டு ஐட்டம் பாட்டுக்கு ஆடுகிறார். எனக்கு பிடித்த இடம். கேசு சொல்வான் “ஜபான் காட்லூங்கா!”. இவள் பத்தி சொல்வாள் – “காட்னே கா சாட்னே பி நஹி தேங்கே!” இதை மொழிபெயர்த்தால் மஜாவே இருக்காது, அதனால் ஹிந்தி புரிபவர்கள் மட்டும் சிரித்துக் கொள்ளுங்கள்!

இரண்டு ஐட்டம் பாட்டில் பீடி பாட்டு பெரிய ஹிட். நமக் இஸ்க்குகா பாட்டும் ஹிட். இரண்டு பாட்டையும் கீழே பார்க்கலாம்.

ஆனால் எனக்கு பிடித்த பாட்டு ஜக் ஜாரே குடியா – இங்கே பார்க்கலாம்.

ஒரு கிளாசிக் நாடகத்தை என் போன்ற philistines புரிந்து கொள்ளும்படி எடுத்த விஷால் பரத்வாஜுக்கு ஒரு சபாஷ்!

இந்த படத்தை தமிழில் எடுத்தால்: ஓமி ரோலுக்கு ரகுவரன் (சரி சூர்யா); லங்டாவாக பிரகாஷ் ராஜ் (மாதவன்); கரீனாவாக ஜோதிகா(நயனதாரா). நசீராக கமல்.

2006-இல் வந்த படம். விஷால் பரத்வாஜ் இயக்கம். அஜய் தேவ்கன், செய்ஃப் அலி கான், கரீனா கபூர், விவேக் ஓபராய், கொங்கோனா சென் ஷர்மா, பிபாஷா பாசு, நசீருதின் ஷா நடித்திருக்கிறார்கள். பத்துக்கு ஒன்பது மார்க். A grade.

தொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்

தொடர்புடைய பதிவுகள்: எதுவுமில்லை.

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

6 Responses to ஓம்காரா

 1. கொற்கை says:

  செகப்பிரியரின் ஒத்தெல்லோ நாடகத்தை மூலக்கதையாகக் கொண்டு, தமிழில் ‘நிச்சயதாம்பூலம்’ என்ற திரைப்படம் வந்தது. சிவாஜிகணேசன், ஜமுனா நடித்த மகத்தான வெற்றிப்படமது.

  ‘அன்னையின் ஆணை’ படத்தில் சிவாஜி ஒத்தெல்லோவாக, சாவித்திரி டெஸ்டிமோனாவாக அவர்கள் படிக்கும் கல்லூரி ஆண்டுவிழாவில் ஓரங்கநாடகமாக நடித்துக்காட்டுவார்கள். இறுதியில் டெஸ்டிமோனாவை ஒத்தெல்லோ தலையணையை வைத்து மூச்சை நிறுத்திக் கொல்வார்.

  ’ஓம்காரா’ எப்படியோ? நான் பார்க்கவில்லை. உங்கள் விமர்சனம் விளக்குகிறது.

  செகப்பிரியர் காலத்தில் ஒத்தெல்லோ புகழ்பெறக்காரணங்களுள் ஒன்று: அஃது ஒரு கறுப்பரான அடிமை (East African moor – slave initially but rose to become an army general) ஒரு பணக்கார மேட்டுக்குடி வெள்ளைப்பெண்மணிக்கும் நடக்கும் காதல்.

  செகப்பிரியர் காலத்தில் கறுப்பர்கள் பிடிக்கப்பட்டு அடிமைகளாக இங்கிலாந்து கொண்டுவரப்பட்டு வாழ்ந்தனர். அவர்களோடு வெள்ளைக்காரப் பெண்கள் உறவு வைத்தால் இப்படித்தான் நேரும் எனச்சொல்வதாக இன்னாடகம் சொல்கிறது என நம்ப்பபட்டு பார்க்கப்பட்டது. செகப்பிரியர் ஒரு racist and anti-semitist also. This is a conclusion from his plays.

  செகப்பிரியரின் நாடகங்கள் வெறும் கதைக்காக மட்டும் பார்க்கப்படுவதல்ல. அவர் எழுதிய ஒவ்வொரு வரிகளும் அலசப்படுகிறது. அவர் நாடகத்தின் கருத்து மேலோட்டமாக ஒன்றும், உள்ளே மற்றொன்றும் இருப்பதாகவும், அதை அவர் சொல்லும் விதம் அவர் நாடகங்களை உலகத்தரத்திற்கு மட்டுமல்ல, ஆங்கிலம் இருக்கும் வரை இருந்து உயர்த்தி, இலக்கிய இன்பம் தரவல்லவை என்பது முடிந்த முடிபாகும்.

  ஆங்கிலத்தை ஆழ்ந்து அனுபவிக்கத் தெரியாதவர்கள் செகப்பிரியரைப் படிக்கமுடியாது. குருடன் தாஜ்மகாலை இரசிக்க முடியுமா?

  ’ஒத்தெல்லோ’ ஒரு மகத்தான நாடகம் செகப்பிரியரின் ஓலையலிருந்து…!

  • Bags says:

   >>>செகப்பிரியர் ஒரு racist and anti-semitist also. This is a conclusion from his plays.

   அதென்னங்க கொற்கை இப்படி சொல்லிட்டீங்க! யூதர்களை செகப்பிரியர் எங்கே தாக்குகிறார்? என் நண்பர் ஒருவர் சொன்னார்: அவர் காலத்தில் எழுதிய கதைகள் எல்லாம் அடிமைகளை வைத்து எழுதியது – பெயர் மட்டும் அவர் போட்டுக் கொண்டார் என்று. இது அவர் கற்பனையா, அல்லது உலவும் வதந்தியா என்று எனக்குத் தெரியாது – anti-semitic என்பதும் இந்த மாதிரி ஒரு வதந்தி தானா? (For records, I have visited the house he lived in England, now a museum. From the outlook of that small town (Avon) in the 17th century, you can’t even imagine Jews would have lived there to annoy him to develop an anti-semitic sentiment)

 2. மிக அற்புதமான திரைப்படம். மொழி அமைப்பும் காட்சி அமைப்பும் திரைப்படத்தின் பலம். சிக்கலான மொழி அமைப்பு புரியாமல் போவது பலவீனமும் கூட. இரண்டு முறை போர் அடிக்காமல் பார்க்க வைத்த திரைப்படம். நீங்கள் எழுதியுள்ள விதம் திரைப்படம் பற்றிய ஒரு நிறைவை தருகிறது.

 3. RV says:

  கொற்கை,

  நான் நிச்சய தாம்பூலம் பார்த்ததில்லை. அன்னையின் ஆணை படம் பார்த்தேன், ஆனால் இந்த ஒதெல்லோ நாடகம் ஞாபகம் இல்லை. விவரங்களுக்கு நன்றி!

  கட்டாயமாக ஓம்காரா பாருங்கள். உங்களுக்கு பிடிக்கும் என்று நினைக்கிறேன்.

  எனக்கு நினைவிருக்கும் வரை மூர்கள் ஸ்பெய்னில் அன்று இருந்த க்ரானடா என்ற பகுதியை ஆண்டவர்கள். கடலை தாண்டினால் கிழக்கு ஆஃபிரிக்கா. அதனால் மூர்கள் இன்றைய மொரோக்கோ மாதிரி இடங்களிலும் இருந்திருக்கலாம். இங்கிலாந்தில் அடிமைகள் இருந்தததில்லை என்று நினைக்கிறேன். ஷைலக், ஒதெல்லோவை வைத்து ஷேக்ஸ்பியர் ஒரு ரேசிஸ்ட் என்று சொல்கிறீர்கள் போல. அப்படி சொல்வதற்கு அடிப்படை இருப்பதாக எனக்கு தோன்றவில்லை.

  அப்புறம் ஏன் ஷேக்ஸ்பியர் என்ற பெயரை செகப்பிரியர் ஆக்குகிறீர்கள்? என் பேரை அமெரிக்கர்கள் சிதைக்கும்போது எனக்கு வரும் கடுப்பு போல அவரும் கடுப்பாகி விடப்போகிறார்!

  முத்துக்குமார், படம் உங்களையும் கவர்ந்தது மகிழ்ச்சி. நமக்கு பிடித்த படம் அடுத்தவருக்கும் பிடிக்கும்போது நிறைவாக இருக்கிறது. என் விமர்சனமும் உங்களையும் கவர்ந்தது இரட்டிப்பு மகிழ்ச்சி!

 4. Rajan says:

  I am back to both of your blogs after a gap and reading your old posts. You must also see Kaliyaattam Directed by Jayaraj and performed by Suresh Gopi, Lal and Manju Variyar.This is Malayalam adoptation of Othello. A brilliant movie from Jayaraj. You know where to get the dvd 🙂

  Thanks
  Rajan

 5. Pingback: ஷேக்ஸ்பியர் நாடகம் – ரோமியோ ஜூலியட் | சிலிகான் ஷெல்ஃப்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: