அபூர்வ ராகங்கள் – என் விமர்சனம்


வேதாளத்தை தன முயற்சியில் சற்றும் தளராமல் மீண்டும் மீண்டும் தூக்கி தூக்கி செல்லும் விக்ரமாதித்தன் கடைசியில் வேதாளம் கேட்கும் ஒரு கேள்விக்கு பதில் தெரியாமல் முழிப்பான் – ஒரு அப்பாவும் பையனும் முறையே மகளையும் அம்மாவையும் கல்யாணம் செய்து கொண்டால் அவர்களின் உறவு முறை என்ன? இதே கதையைத்தான் பாலசந்தர் சினிமாவாக ஆக்கி இருக்கிறார்.

1975இல் வந்த படம். கமல் ஹீரோவாக நடித்த முதல் படம் இதுதான் என்று நினைக்கிறேன். ரஜினிக்கு முதல் படம். நாகேஷுக்கும் பாலச்சந்தருக்கும் ஏதோ தகராறாம். ஒரு நாலைந்து வருஷம் நாகேஷ் பாலச்சந்தரின் எந்த படத்திலும் கிடையாது. இந்தப் படத்தில்தான் திரும்பி வருவார். ஸ்ரீவித்யாவுக்கும் ஹீரோயினாக இதுதான் முதல் படம் என்று நினைக்கிறேன். ஜெயசுதா அறிமுகமோ? நினைவில்லை. இவர்களைத் தவிர மேஜர். இசை எம் எஸ் வி. இயக்கம் பாலச்சந்தர்.

அடிதடி இளைஞன் கமல் அப்பா மேஜரோடு சண்டை போட்டுக்கொண்டு பெங்களூரை விட்டு சென்னைக்கு வருகிறான். யாரோ அடித்துப் போட்டுவிட, ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனையோ ராகம் பாடும் பாடகி பைரவி அவனை காப்பாற்றி வீட்டில் தங்க வைக்கிறாள். பைரவியின் கணவன் ஓடிப் போய்விட்டான். மகளை மகள் என்று சொல்லாமல் – சொன்னால் காரியர் முன்னேறாது என்று – வளர்க்கிறாள். விஷயம் தெரிந்த மகளோ கொஞ்ச நாள் முன்தான் வீட்டை விட்டு போய்விட்டாள். பைரவியின் மாணவிகள் கமலை சைட் அடிக்கிறார்கள். உனக்கு யாரைப் பிடித்திருக்கிறது என்று பைரவி கேட்க, கமல் “ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி மறு புறம் பார்த்தால் காவிரி மாதவி முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி முழுவதும் பார்த்தால் அவள் ஒரு பைரவி” என்று பாடுகிறான். பைரவி கடுப்பாகி தன் கணவன், மகளைப் பற்றி சொல்ல கமல் அதைப் பற்றி எல்லாம் கவலையே படவில்லை. பைரவியும் காதலில் விழுகிறாள். ஓடிப் போன ஜெயசுதா பெங்களூரில் மேஜரை சந்தித்து இரண்டு பெரும் திருமணம் செய்ய தீர்மானிக்கிறார்கள். மேஜர் ஜெயசுதாவின் அம்மாவை சந்திக்க வருகிறார். அவருக்கு விஷயம் தெரிகிறது. “கை கொட்டி சிரிப்பார்கள்” என்று பயப்படுகிறார். ஓடிப் போன கணவன் ரஜினிகாந்த் திரும்பி வருகிறான். கமல் அவனை மறைத்து வைக்க, நாலு பேருக்கும் விஷயம் தெரிய, ஸ்ரீவித்யா கேள்வியின் நாயகனை இந்த கேள்விக்கு பதில் கேட்கிறார். ஜெயசுதாவும் சேர்ந்து கேட்க, ரஜினிகாந்த் அங்கே வந்து இறக்க, அப்பா-மகன், அம்மா-மகள் இணைகிறார்கள். ஆனால் எந்த ஜோடியும் இணையவில்லை.

படத்திற்கு மூன்று பலங்கள். கமல், ஸ்ரீவித்யா, இசை.

கமல் sizzles. ஒரு angry young man ஆக புகுந்து விளையாடுவார். உண்மையிலேயே இளைஞர் வேறு – என்ன ஒரு இருபது வயது இருந்திருக்குமா? தியேட்டரில் ஜன கன மன போடும்போது அசையாமல் நிற்காதவனை அடிப்பதாகட்டும், தன மேல் சேற்றை வாரி இறைத்து போகும் கார்க்காரனைப் பார்த்து தேவடியாப் பையா என்று திட்ட, அந்த கார்க்காரன் திரும்பி வந்து என்ன சொன்னே என்று கேட்க, அவனுக்கு information கொடுப்பது போன்ற பாவனையுடன் மீண்டும் அதையே சொல்வதாகட்டும், திரும்பி வரும் ரஜினியுடம் பேசும் இடங்களாகட்டும், கலக்குகிறார்.

ஸ்ரீவித்யா எப்போதுமே அழகுதான். ஆனால் அது அழகுடன் இளமை சேர்ந்து வந்த காலம். அருமையான நடிப்பு. ஒரே குறைதான், ஜெயசுதாவுக்கு அக்கா மாதிரி இருக்கிறார், அம்மா மாதிரி இல்லை!

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை ராகம்! எத்தனை அருமையான பாட்டு! கண்ணதாசனும் எம்எஸ்வியும் புகுந்து விளையாடுகிறார்கள்.

அதிசய ராகம் இன்னொரு அற்புதமான பாட்டு. ஜேசுதாசின் குரல் தேனில் குழைத்ததுதான்.

கேள்வியின் நாயகனே இன்னொரு அபாரமான பாட்டு. ஆனால் மற்ற இரண்டு போல அவ்வளவு பாப்புலர் ஆகவில்லை.

கைகொட்டி சிரிப்பார்கள் என்ற இன்னொரு பாட்டும் உண்டு. பாடியவர் எ.ஆர். ஷேக் முஹமது என்று சாரதா தகவல் தருகிறார். எனக்கு இந்த பாட்டு தேறவில்லை.

நாகேஷ் ஓவர்ஆக்டிங். மேஜர் ஓகே.

நல்ல ஒளிப்பதிவு.

நல்ல படம். பார்க்கக் கூடிய படம். பத்துக்கு எட்டு மார்க். (ஏழுதான் கொடுத்திருப்பேன், ஆனால் இசைக்காக எட்டாக்கிவிட்டேன்.) B+ grade.

தொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்

தொடர்புடைய பதிவுகள்: அபூர்வ ராகங்கள் விகடன் விமர்சனம்

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

3 Responses to அபூர்வ ராகங்கள் – என் விமர்சனம்

 1. சாரதா says:

  டியர் RV,

  ‘கைகொட்டி சிரிப்பார்கள்’ பாடல் ஒரு சிச்சுவேஷன் ஸாங். தன் மகள் வயதையொத்த ஜெயசுதா, தன்னை திருமணம் செய்துகொண்டால் எப்படியிருக்கும் என்பதை மேஜர் நினைத்துப்பார்க்கும் சீன். (உண்மையில் ஜெயசுதாதான் விரும்புவார்). அப்போது பலரும் தன்னை கேலி செய்வதுபோல, பல கோணல் முகங்கலை பாலச்சந்தர் காட்டியிருப்பார். இந்தப்பாடலை ஏற்கெனவே பழகிய குரலாக இல்லாமல் புதிய பாடகரைப் பாடவைக்கலாம் என்று கே.பி.விரும்பியபோது, எம்.எஸ்.வி., அப்போது தன் இசையில் ‘சிரித்துவாழ வேண்டும்’ படத்தில் வரும் ‘உலகமெனும் நாடக மேடையில் நானொரு நடிகன்’ என்ற பாடலின் நடுவே நாலு வரிகளை (‘மண்ணில் மறைவாக என்ன விதை போட்டாலும்’) உச்ச ஸ்தாயியில் பாடியிருக்கும் காயல்பட்டினம் ஏ.ஆர்.ஷேக் முகம்மது என்பவரைப்பாட வைக்கலாம் என்று சொல்ல, கே.பி.யும் ஒப்புக்கொண்டார்.

  அதுபோல ‘கேள்வியின் நாயகனே’ பாடலில் படத்தின் மொத்தக்கதையையும் கொண்டு வந்திருப்பார் கண்ணதாசன். மகள் ஜெயசுதா, தன்னிடம் வந்து சேர்ந்ததைச் சொல்லும் ஒரு சரணம் (‘பசுவிடம் கன்று வந்து பாலருந்தும்’), கணவன் ரஜினி வந்துவிட்டதை அறிந்து அதற்காக ஒரு சரணம் (‘தலைவன் திருச்சானூர் வந்துவிட்டான்’), கமலை மீண்டும் மேஜரிடம் சேருமாறு சொல்ல ஒரு சரணம் (‘பழனி மலையிலுள்ள வேல் முருகா, சிவன் பல்லாண்டு ஏங்கிவிட்டான் வா முருகா’)…. இப்படி கதை முழுதும் மீண்டும் ஃப்ளாஷ்பேக்கில் சொல்லப்பட்டது போல அமைந்திருக்கும். கே.பி.யின் ரொம்ப வித்தியாசமான முயற்சி இந்தப்படம்.

 2. RV says:

  சாரதா,

  கை கொட்டி சிரிப்பார்கள் பாடியது யார் என்று நினைவு வர மாட்டேன் என்கிறதே என்று யோசித்தேன், நீங்கள் வழக்கம் போல கை கொடுத்துவிட்டீர்கள்! இது ஒரு வித்தியாசமான முறையில் படமாக்கப்பட்டிருக்கும், வேறுபட்ட குரல் என்பதெல்லாம் உண்மைதான். ஆனால் எனக்கு பாட்டு அவ்வளவாக பிடிக்கவில்லை.

  கேள்வியின் நாயகனே பாட்டு மிக அருமையானது. ஆனால் ஏழு ஸ்வரமும் அதிசய ராகமும்தான் படத்தில் பாப்புலர் ஆக இன்றும் நிற்கின்றன.

 3. gandhi says:

  it was very intresting movie to watch in those days.

  You enjoyed every bit .i also enjoyed it on that day.

  Good idea

  gandhi m g

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: