கனவுத் தொழிற்சாலை- சுஜாதாவின் “விக்ரம்”- 2சுஜாதா கூறுகிறார்……

தொடர் கதையை வாராவாரம் கட்டாயமாக எழுத வேண்டும்.  அதற்குப் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறவேண்டும்.  மேலும் கதை செல்லும் அடுத்தடுத்த போக்கிலேயே படமும் பிடிக்க வேண்டும்.  இது இரண்டுமே நடைமுறையில் சாத்தியமில்லை.  கால்ஷீட்டைப் பொறுத்து, முன்னே பின்னே எடுப்பார்கள்.  ராப்பகலாக ஒரு வாரம் எடுப்பார்கள்.  அதன்பின் வீட்டுக்குப் போய் பணம் சேர்க்க ஒரு மாதம் கேப் கொடுப்பார்கள்.  விக்ரம் கதை முதல் பாதி சரியாகவே வந்தது.  இரண்டாவது பாதி கட்டவிழ்ந்து போய்விட்டது.  டைரக்டர்  ஒரே சமயத்தில் ரஜினி படத்தையும் ஒப்புக் கொண்டு பிசியாகிவிட்டார்.  அவர் வரவே இல்லை.  கமல் காத்திருந்து பார்த்து சந்தன பாரதியை வைத்து மிச்சமுள்ள பகுதிகளை எடுத்தார்.  அம்ஜத் கான், டிம்பிள் கபாடியா போன்ற வடநாட்டு நடிகர்களின் கால்ஷீட்  பிரச்னைகள் இருந்தன.  விக்ரம் முற்றுப்பெறாத நிலையில்,  கதை எப்படிப் போகப் போகிறது என்று தெரியாத நிலையில், கதையைத் தொடர்ந்து வாராவாரம் எழுத வேண்டியிருந்த சங்கடமான நிலை ஏற்பட்டது எனக்கு.  ஒரு கட்டத்துக்குப்பின் இஷ்டப்படி அதை விதிவசம் ஒப்படைத்து இழுத்துச் சென்றேன்.  அதற்கேற்ப படங்கள் கிடைக்காமல் கமலையும் லிஸ்ஸி என்ற மலையாள நடிகையின் படத்தையுமே போட வேண்டியதாயிற்று.  அவைதான் கைவசம் இருந்தன.

https://i2.wp.com/www.hummaa.com/static_content/images/meta/img/tamil/movies/vikram.gif

விக்ரம்‘ படம் ஒருவழியாக 1986 -ல் வெளிவந்தது.  இன்றும் அவ்வப்போது தொலைக்காட்சியில் காட்டுகிறார்கள்.  பார்த்திருப்பீர்கள்.  தடபுடலாகத் துவங்கி எங்கோ பரதேசம் போய்,  முடித்தால் போதும் என்றாகிவிட்ட ஆயாசம் படத்தில் தெரியும்.  அதன் டைலமாவின்  பொழிப்புரை படத்தின் இறுதிக் காட்சி.  வில்லனை வென்றுவிட்டு ,  ஏரோப்ளேனிலிருந்து குதித்து இறங்கியபின், இரண்டு கதாநாயகிகளுக்கிடையே  கதாநாயகன் மாட்டிக்கொண்டு சட்டென்று தீர்மானிப்பார் ஓடிப்போக!

விக்ரம்
படப்பிடிப்பு அனுபவங்கள் பற்றி அதன்பின் கட்டுரையாக எழுதச் சொன்னார்கள்.இதில் நீதி, படம் முடிந்து ரிலீசாவதற்குமுன் இருக்கும் குறுகிய ஜன்னலில்தான்  இந்த முறையில் தொடர்கதையாக வெளியிட வேண்டும்.  பாக்யராஜ் அப்படிதான் செய்தார் என்று நினைக்கிறேன்.டைரக்டர் ராஜசேகர் அதன்பின் இளம் வயதில் இறந்து விட்டார்.  கண்டிப்பாக விக்ரம் படத்தை இயக்கிய காரணத்துக்காக அல்ல.


விக்ரம்
படத்தில் கதாநாயகி கதைப்படி ஒரு கம்ப்யூட்டர் எஞ்சினியர்.  அதற்காக கமல் மலையாளப் படங்களில் பிரபலமாகிவரும் சில நடிகைகளைப் பார்த்தார்.  ஒரு படத்தில் தோன்றிய இரண்டு பெண்களில் ஒரு முகம் பொருத்தமாக இருந்தது.  அந்த நடிகையின் பெயர் லிஸ்ஸி.  போன் போட்டதும் கொல்லத்திலிருந்தோ கொச்சினிலிருந்தோ ராத்திரி ரயிலைப் பிடித்துக்கொண்டு வந்துவிட்டார்.
Lissy

லிஸ்ஸி என்ற பெயர் தமிழுக்கு ஒத்து வராது என்று ப்ரீத்தி என்று பெயரிடப்பட்டது.  இப்படி ஒரு மிகப் பெரிய அறிமுகம் கிடைத்தும் லிஸ்ஸி என்னும் ப்ரீத்திக்கு அதன்பின் தமிழில் வாய்ப்பு வரவில்லை.  லிஸ்ஸியைத்  தேர்ந்தெடுப்பதற்காக நாங்கள் பார்த்த மலையாளப் படத்தில் அவரருகே நின்று கொண்டிருந்த மற்றொரு நடிகையின் பெயர் நதியா மொய்து.  விக்ரம் படத்தில் வாய்ப்புக் கிடைக்காத நதியா தமிழில் அதன்பின் நிறையப் படங்களில் நடித்தார்.  பூவே பூச்சூடவா இன்னும் பலருக்கு ஞாபகம் இருக்கிறது.

கோடம்பாக்கத்தில் நடிக்க வாய்ப்பு கிடைப்பதும் அதன்பின் நிலைப்பதும் மிகவும் தற்செயலான விஷயங்கள்.

வனிதாமணி  வனமோகினி வந்தாடு……..

என் ஜோடி மஞ்சக் குருவி…..

மீண்டும் மீண்டும் வா……

[sujatha.jpg]

(கனவுத் தொழிற்சாலை தொடரும்…)

தொடர்புடைய பதிவுகள்:

கனவுத் தொழிற்சாலை- சுஜாதாவின் “விக்ரம்”- 1

கனவுத் தொழிற்சாலை- சுஜாதாவின் “விக்ரம்”- 1சுஜாதா கூறுகிறார்……
திரைப்படமாக வந்த மற்றொரு தொடர்கதை ‘விக்ரம்’.  நண்பர் கமல்ஹாசனுடன் ஒரு தமிழ் James Bond  படம் பண்ண ஆசைப்பட்டோம்.  கமல் பெங்களூர் வந்தார்.  அவருடைய நண்பர் ஊருக்கு வெளியே தன் பண்ணை வீட்டிற்கு அழைத்திருந்தார்.  அங்கே உட்கார்ந்து கதை பண்ணினோம்.  அதை விட அதிகமாகப் பேசினோம்.  அப்போது முன்னணியில் இருந்த டைரக்டர்  ராஜசேகர் தொடர்ந்து வெற்றிப் படங்கள் தந்து கொண்டிருந்தார்.  அவரை டைரக்டராக  வைத்து படப்பிடிப்பு முதலில் கர்நாடகாவில் குதுரேமுக்கில் தொடங்கியது.  நண்பர் சத்யராஜ் அதில் வில்லன்.  பெங்களூரிலிருந்து காரில் பயணம் செய்து குதுரேமுக் சென்றிருந்தேன்.  சும்மா வேடிக்கை பார்க்கத்தான்.  இரவு நேரங்களில் கமல், சத்யராஜ், ராஜசேகர் போன்றவர்களுடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தது நினைவிருக்கிறது.  வருஷம் 1985 .

சத்யராஜ் ‘பிச்சைக்காரன்’ என்ற கற்பனைப் படத்துக்கு நம்பியார், எம்.ஜி.ஆர் போலப் பேசிக் காட்டியது மறக்க முடியாத நகைச்சுவை.  மேலும் நடிகைகளைக் கிட்டத்தில் பார்ப்பதில் உள்ள சங்கடங்களையும் சிரிக்கச் சிரிக்க சொல்வார்.  அவற்றை விவரிக்க முடியாது.

விக்ரம் படப்பிடிப்பு துவங்கிவிட்டதால்,  அசிரியர் எஸ்.ஏ.பி. அந்தப் படத்தின் ஸ்டில்களை வைத்துக்கொண்டே அதன் கதையை குமுதத்தில் தொடர்கதையாக எழுதலாமே என்று யோசனை சொன்னார்.  இதைத் தயாரிப்பாளரான கமலிடம் சொனனபோது, அவர் இந்த உத்தி படத்துக்கு உதவும் என்று சம்மதித்தார்.

விக்ரம் படத்தின் ஸ்டில்களுடன் தொடர்கதை அமர்க்களமாகத் துவங்கியது.  திரைப்படம் உருவாகும்போதே, அது வார இதழ்களில் தொடர்கதையாக வருவதற்கு முன்னோடி, கல்கியின் ‘தியாக பூமி’.  ஆனந்த விகடனில் முப்பதுகளிலேயே இந்தப் புதுமை செய்திருக்கிறார்கள்.

தனிப்பட்ட நீல கலர் பேப்பரில் பாபநாசம் சிவன், எஸ்.டி.சுப்புலட்சுமி  போன்றோர் தோன்றும் புகைப்படங்களுடன் வெளிவந்தது.  அதன்பின் குமுதத்தில் பாக்யராஜின் ‘மௌன கீதம்’ தான் என் நினைவின்படி சினிமா காட்சிகளுடன் தொடர்கதையாக வந்தது.  இம்மாதிரி கதையும், படமும் இணைந்து வருவதில் ஒரு பெரிய சிக்கல் உண்டு என்பதைக் கொஞ்சம் லேட்டாகத்தான் அறிந்து கொண்டேன்.

விக்ரம் விக்ரம் …..

[sujatha.jpg]

(கனவுத் தொழிற்சாலை தொடரும்…)

தொடர்புடைய பதிவுகள்:

கனவுத் தொழிற்சாலை- சுஜாதாவின் “விக்ரம்”- 2

அங்காடித் தெரு – மினி விமர்சனம்


அங்காடித் தெருவின் பலமும் பலவீனமும் ஒன்றேதான் – அதன் கதைக் களம். இயக்குனருக்கு ரங்கநாதன் தெரு எப்படி இயங்குகிறது, சரவணா ஸ்டோர்ஸ் மாதிரி ஒரு அங்காடியில் வேலை செய்யும் கீழ் மட்ட ஊழியர்கள் எப்படி எல்லாம் சக்கையாக பிழியப்படுகிறார்கள், அவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று நமக்கு சொல்ல விருப்பம். அதே நேரத்தில் ஒரு கீழ் மட்ட ஊழியனின் கதையை சொல்லவும் விருப்பம். காட்டின் கதையை ஒரு மரத்தின் கதையை வைத்து சொல்ல நினைத்திருக்கிறார். இது ரொம்ப கஷ்டமான வேலை. அவருக்கு அதில் தோல்விதான். ஆனால் இப்படி ஒரு களம் தமிழ் படங்களில் வந்ததே இல்லை. படத்தில் வரும் அநேக காரக்டர்கள் உண்மையான மனிதர்களாகத் தெரிகிறார்கள். அவர்களில் நிறம், உருவம் எல்லாம் பார்த்து பார்த்து காஸ்டிங் செய்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அந்த விதத்தில் நல்ல முயற்சிதான்.

இது மினி விமர்சனம். நீளமான விமர்சனம் எழுதுவதாக நண்பர் ஒருவர் சொல்லி இருக்கிறார். அதனால் நான் கதைச்சுருக்கம் எல்லாம் எழுதப்போவதில்லை. அப்புறம் புதுப் படத்துக்கு விவரமாக கதை எழுதி spoiler உருவாக்கும் உத்தேசம் இல்லை. ஹீரோ ஹீரோயின் கதை மோதல், பிறகு காதல் கதைதான் – ஆனால் சுவாரசியமாகப் போகிறது. ரங்கநாதன் தெருவை பற்றி நமக்கு சொல்ல சேர்க்கப்பட்டிருக்கும் உப கதைகள் அனேகமாக மெயின் கதையுடன் ஒட்டவில்லை. ஆனால் அவையும் சுவாரசியமாகத்தான் இருக்கின்றன. இரண்டு இடங்கள் எனக்கு பிடித்திருந்தன. ஒன்று மகா மோசமாக நாறும் கழிவறையில் வாழும் வழியைக் காண்பவன் பற்றிய உபகதை; இன்னொன்று காதலர்கள் பிரியப் போகிறார்கள் என்ற மாதிரி திரைக்கதையை அமைத்துவிட்டு ஹீரோ “நான் நல்லா யோசிச்சுட்டேன், நாம உடனடியா கல்யாணம் பண்ணிக்கணும்” என்று சொல்லும் இடம் – அப்படி சொல்வது ப்ராக்டிகல் இல்லைதான், முக்கால்வாசி பேர் பிரியத்தான் செய்வார்கள், ஆனால் இப்படி சொல்வதுதான் படம் முழுவதும் ஊடுருவி இருக்கும் சோகத்துக்கு நல்ல மாற்றாக அமைகிறது.

எனக்கு வசனம் எல்லாம் ரசிக்கத் தெரியாது. நான் கடைசியாக ரசித்த வசனம் மனோகரா, பராசக்தி படங்களில்தான். ஆனால் சில இடங்களில் வசனம் நன்றாக அமைந்திருக்கிறது என்று எனக்கே தெரிகிறது. “வானாகி மண்ணாகி” கடவுள் வாழ்த்து பயன்படுத்தப்பட்டிருக்கும் விதம், ஃபெயிலான நண்பனை அவன் அப்பா ராகு காலத்தில பொறந்தவனே என்று திட்டும்போது அதற்கு அவன் கொடுக்கும் கவுண்டர், பட்டணத்து பொண்ணு-ஹீரோ காதலில் வெளிப்படும் ஜெயமோகனின் “குசு”ம்பு என்று ஒரு லிஸ்ட் வருகிறது.

கீழ்மட்ட ஊழியர்கள் வாழும் விதம் மிக நன்றாக வந்திருக்கிறது – உண்மையை அடிப்படையாக கொண்டதால்தான் இப்படி வந்திருக்கிறது. சின்ன சின்ன காரக்டர்கள் – ஹீரோயினின் தங்கையின் எஜமானி அம்மா, மாட்டிக் கொள்ளும் இன்னொரு காதலன்-காதலி, நண்பன் காதலிக்கும் பெண், விளம்பரத்தில் நடிக்கும் ஸ்னேஹா, கடை முதலாளி மாதிரி பலர் – நன்றாக வந்திருக்கிறது. நல்ல நடிப்பு. அதுவும் கதாநாயகி அஞ்சலி கலக்குகிறார். கூட வரும் நண்பனுக்கு நல்ல ரோல். அந்த அடி போடும் அண்ணாச்சி கலக்குகிறார். ஹீரோ நன்றாக நடித்திருக்கிறார்.

முதலில் வரும் கிராமத்து சீன்களும் – அது இன்று ஒரு cliche மட்டுமே, ஜெயமோகனால் கூட அதில் ஒன்றும் புதுமையாக எழுத முடியவில்லை – இரண்டாம் பாதியில் வரும் ஒரு பாட்டும் படத்தின் டென்ஷனை குறைக்கின்றன. ஃப்ளாஷ்பாக்காக இல்லாமல் நேரடியாகவே கதையை சொல்லி இருக்கலாம்.

அவள் அப்படி ஒன்று அழகில்லை பாட்டு எனக்கு பிடித்திருந்தது.

மற்ற பாட்டு எதுவும் நினைவு வரவில்லை.

இந்த மாதிரி படங்கள் வெற்றி பெற வேண்டும். இல்லை என்றால் போக்கிரி, வில்லு, ஆதவன் மாதிரி படங்கள்தான் நம் தலைவிதி என்று ஆகிவிடும். நண்பர் ராஜன் கூட்டம் சேர்த்து ஐந்து பேரைத் தேற்றி முதல் நாள் முதல் ஷோ கூட்டிக் கொண்டு போனார். அவர் இல்லாவிட்டால் அந்த ஷோவை மூன்று நான்கு பேர்தான் பார்த்திருப்பார்கள். எத்தனையோ பணம் செலவழிக்கிறீர்கள், போய்ப் பாருங்கள்! சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடா பகுதியில் செர்ரா அரங்கில் ஓடுகிறது. லோக்கல் ஆட்கள் போய்த்தான் பாருங்களேன்!

பத்துக்கு ஏழு மார்க். B grade.

தொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்

தொடர்புடைய பதிவுகள்:
ஜெயமோகனுக்கு வந்த கடிதங்கள் பகுதி 1, பகுதி 2
ஜெயமோகனின் விளக்கம்
எழுத்தாளர் அ. முத்துலிங்கம், எழுத்தாளர் பாவண்ணன், எழுத்தாளர் பா. ராகவன், நண்பர் திருமலைராஜன் எழுதிய விமர்சனங்கள்
உப்பிலி ஸ்ரீனிவாசுக்காக இந்த சுட்டி – சரவண கார்த்திகேயனின் விமர்சனம்

செர்ரா தியேட்டர் தளம்

இளமை ஊஞ்சலாடுகிறது


இளமை ஊஞ்சலாடுகிறது 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
ஸ்ரீதர் டைரக்ஷனில் ரஜினிகாந்தும், கமலஹாசனும் இணைந்து நடித்த “இளமை ஊஞ்சலாடுகிறது” வெள்ளி விழா படமாக அமைந்தது. ஒவ்வொரு படத்திலும், வித்தியாசமாகவும், ஸ்டைலாகவும் நடித்து வந்த ரஜினிகாந்தையும், நடிப்பில் நாளுக்கு நாள் முன்னேறிக் கொண்டிருந்த கமலஹாசனையும் வைத்து ஒரு படத்தை உருவாக்க ஸ்ரீதர் முடிவு செய்தார். அவர்கள் இருவருக்கும் சமமான வாய்ப்பு தர விரும்பி, அதற்கேற்றபடி கதையை அமைத்தார். அதுதான் “இளமை ஊஞ்சலாடுகிறது.”

விறுவிறுப்பான கதை
எதிர்பாராத திருப்பங்களும், உணர்ச்சிமயமான சம்பவங்களும் நிறைந்த கதை. ரஜினிகாந்த் பெரிய தொழில் அதிபர். அனாதையான கமலஹாசனை தன் உடன்பிறவா சகோதரனாக கருதுகிறார். தன் தொழிற்சாலையின் ஜெனரல் மானேஜராக நியமிக்கிறார்.
ஆபீசுக்குள்தான் அவர்களுக்குள் முதலாளி -மானேஜர் உறவு. வெளியே, “போடா, வாடா” என்று பேசிக்கொள்ளும் அளவுக்குநட்பு.
கமலஹாசனின் காதலி ஸ்ரீபிரியா. இருவரும் உயிருக்கு உயிராக நேசிக்கிறார்கள்.
ஸ்ரீபிரியாவின் தோழி ஜெயசித்ரா விதவை. அவர் கமலஹாசன் அலுவலகத்தில் வேலை பார்க்கிறார். மனதுக்குள் கமலை எண்ணி ஏங்குகிறார். ஸ்ரீபிரியாவும், ஜெயசித்ராவும் கிராமத்துக்கு செல்கிறார்கள். ஒரு நாள் திருவிழா பார்க்க அடுத்த கிராமத்துக்கு ஸ்ரீபிரியா செல்கிறார். வீட்டில் ஜெயசித்ரா மட்டும் தனியாக இருக்கிறார்.
ஸ்ரீபிரியாவை பார்க்க வரும் கமல், அன்றிரவு ஜெயசித்ராவுடன் தங்க நேரிடுகிறது. தனிமை இருவரையும் சலனப்படுத்துகிறது. ஜெயசித்ராவின் இளமை, கமலின் மனதை ஊஞ்சலாடச் செய்கிறது. இருவரும் தங்களை மறந்து ஐக்கியமாகிறார்கள்.
பொழுது விடியும் வேளையில், கமலஹாசனை மனச்சாட்சி உறுத்துகிறது. “என்னை மன்னித்து விடு” என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு வெளியேறுகிறார். வெளிïர் சென்றிருந்த ஸ்ரீபிரியா, திரும்பி வருகிறார். ஜெயசித்ரா தூங்கிக் கொண்டிருப்பதையும், அவர் அருகே ஒரு கடிதம் இருப்பதையும் பார்க்கிறார்.
கடிதத்தைப் படிக்கும் அவர் மனம் எரிமலையாகிறது. கமல் தனக்கு துரோகம் செய்து விட்டதை எண்ணிக் குமுறுகிறார். ரஜினியை மணக்க சம்மதிக்கிறார். நிச்சயதார்த்தமும் நடைபெறுகிறது.
இந்த சமயத்தில், ஜெயசித்ராவிடம் இருந்து ஸ்ரீபிரியாவுக்கு ஒரு கடிதம் வருகிறது. தான் கர்ப்பமாக இருப்பதாக அதில் குறிப்பிட்டிருக்கிறார்.
கமலை ஸ்ரீபிரியா சந்தித்து, ஜெயசித்ராவை மணந்து கொண்டு அவருக்கு வாழ்வு அளிக்கும்படியும், செய்த பாவத்துக்கு அதுதான் பிராயச்சித்தம் என்றும் கூறுகிறார்.
அதன்படி கமல் பெங்களூருக்கு சென்று, ஒரு விபத்தில் சிக்கி மரணப்படுக்கையில் இருக்கும் ஜெயசித்ராவை சந்திக்கிறார். தாலி கட்டி மனைவியாக ஏற்கிறார். சுமங்கலியாகி விட்ட மகிழ்ச்சியுடன், ஜெயசித்ரா உயிர் துறக்கிறார்.
எதிர்பாராத `கிளைமாக்ஸ்’
இதன் பிறகு கமலும், ஸ்ரீபிரியாவும் சந்தித்துப் பேசிக்கொண்டிருக்கும்போது, ரஜினி அங்கு வருகிறார். கமல் மீது சந்தேகப்பட்டு, ஆவேசத்துடன் தாக்குகிறார். நடந்த உண்மைகளை ஸ்ரீபிரியா வெளிப்படுத்துகிறார். கமலும், ஸ்ரீபிரியாவும் முன்னாள் காதலர்கள் என்பதை அறியும் ரஜினி, அவர்கள் இருவரையும் இணைத்து வைக்கிறார்.
வெள்ளி விழா
9-6-1978-ல் வெளியான இந்தப்படம், 25 வாரங்கள் ஓடி வெள்ளி விழா கொண்டாடியது.
பாரதிராஜாவின் “16 வயதினிலே” படத்துக்கு ஒளிப்பதிவு செய்த நிவாஸ், இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார்.
இளையராஜா இசை அமைப்பில் பாடல்கள் எல்லாம் `ஹிட்’ ஆயின.
கமல், ரஜினி இருவரும் பொருத்தமான வேடங்களில், போட்டி போட்டு நடித்தனர்.
ஸ்ரீதர் தன் முத்திரையை முழுமையாகப் பதித்திருந்தார்.
ரஜினியும், கமலும் இணைந்து நடித்த படங்களில் மறக்க முடியாத படம் “இளமை ஊஞ்சலாடுகிறது.”

விகடன் விமர்சனம் – நன்றி விகடன் பொக்கிஷம் 25-06-1978
உணர்ச்சி, உள்ளக் கிளர்ச்சி, காதல், ஊடல், சபலம், சந்தேகம் இவற்றை வைத்துக்கொண்டு, திரைக்கதையை நாசூக்காக, நளினமாக, அழகாக அமைத்து, அதற்கு அளவோடு வசனம் எழுதியிருக்கிறார் ஸ்ரீதர். தனி வில்லன், காமெடி டிராக் இவை இல்லாமல் தமிழ்ப் படங்கள் எடுக்கமுடியும் என்று அடித்துக் கூறியிருக்கிறார்.
கமலஹாசனும் ரஜினிகாந்த்தும் உடன் பிறப்புகள் மாதிரி இணைந்து நடித்திருக்கிறார்கள். இருவருக்கும் சம சந்தர்ப்பம் தரப்பட்டிருக்கிறது. நடிப்பைப் பொறுத்தவரை யார் யாரை மிஞ்சுகிறார் என்று தரம் பார்க்க முடியாதவாறு, இருவருமே போட்டி போட்டுக் கொண்டு நடிக்கிறார்கள் – டெட் ஹீட்!
கமலஹாசன், ஸ்ரீப்ரியா இருவரும் ஓட்டலில் சாப்பிடும்போது, பர்ஸ் தொலைந்துவிட்டதாக எண்ணி, அதன் விளைவுகளைக் கமலஹாசன் கற்பனை பண்ணிப் பார்ப்பது நல்ல தமாஷ்! ஸ்ரீதர்-நிவாஸ் காம் பினேஷன் படத்துக்கு இளமையையும் கிளுகிளுப்பையும் தரும் ஒரு நல்ல சேர்க்கை. ‘கல்யாணப் பரிசு’, ‘நெஞ்சில் ஒரு ஆலயம்’ ஸ்ரீதரை இன்றைய இளம் தலைமுறையினர் அறிய இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.
பத்மா சினிமாவுக் குக் கிளம்பும்போது ஜெயந்தி, ”எந்த டேமே ஜும் இல்லாம உருப்ப டியா வந்து சேரு” என்பது ரசிக்கத்தக்க கிண்டல்!டெக்னிகல் குறை கள் அதிகம் இல்லாமல் சிறந்த முறையில் தயாரிக் கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் ஓரிரு இடங் களில் மேலும் சற்று அக்கறை காட்டியிருக்க லாம். உதாரணமாக, ஸ்ரீப்ரியா பாடும் ‘நீ கேட்டால்’ பாடல் ஆரம் பத்தில் ரிஃப்ளெக்டர் அடிக்கடி ஆடுவதால் ஒளியசைவு ஏற்படுகிறது. அதே போல, டீ எஸ்டேட் டில் கமலஹாசன் நடந்து வரும்போது அவரை ஃபாலோ செய்யும் ரிஃப்ளெக்டர் காமிராவுக்கு அருகில் முன்னே இருக்கும் மின்சார போஸ்டின் மீது விழுந்து கண்ணை உறுத்துகிறது. Back Projection விஷயத்திலும் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம்.முரளி – ஜெயந்தி காரில் போகும் ஸீனில் ஒரே ஷாட் திரும்பத் திரும்ப வந்துகொண்டிருக்கிறது. இந்தப் படம் சிறந்த முறையில் தயாரிக்கப்பட்டிருப் பதாலேயே, இவையும் தவிர்க்கப்பட் டிருக்கலாம் என்பது எங்கள் எண்ணம்.சமீப காலத்தில் வெளிவந்த எல்லா வண்ணப் படங்களையும்விட வண்ணக் கலவை பளிச்சென்று அழகாக இருக்கும் இந்தப் படத்தில், அந்த நீச்சல் குள ஸீனில் லாபரேட்டரி இன்னும் சற்று அக்கறை காட்டியிருக்க வேண்டும். நீலம் அதிகமாக இருக்கிறதே, ஏன்?
”உங்களுக்கு லிவர் பாதிக்கப்பட் டிருக்கிறது. ஓய்வெடுக்க வேண்டும். தாம்பத்ய உறவு கூடாது” என்று டாக்டர் கூறுவது நகைப்புக்கு இடம் தருகிறது. இதற்குப் பதிலாக, முரளியே தன் உடல்நலம் பூரணமாகக் குணமாகும் வரை, தான் காதலிக்கும் பெண்ணின் கழுத்தில் தாலியைக் கட்ட மாட்டேன் என்று சொல்லியிருந்தால், கேரக்டரையே உயர்த்தியிருக்குமே!

‘வார்த்தை தவறிவிட்டாய்’ பாட்டு மனத்திலே நிற்கிறதென்றால், அதற்கு இளையராஜாவின் இசையமைப்பும், நிவாஸின் அற்புதமான படப்பிடிப்பும், எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் இனிமையான குரலும் டைரக்டருக்குப் பூரண ஒத்துழைப்பு தந்திருக்கின்றன. நெஞ்சை விட்டு அகலாத காட்சி.

உமர்கய்யாம் நாட்டி யம் நன்றாகப் படமாக்கப் பட்டிருக்கிறது. ஆனால், திரைக்கதையைப் பொறுத்த வரையில் அங்கு சற்று தொய்வு ஏற்படத்தான் செய் கிறது.

ஜெயந்தியும் முரளி யும் காரில் வரும்போது உணர்ச்சி வசப்படுவதும், பிறகு இருவருமே அது ‘தவறு’ என்பதை உணர்வ தும் தரமான கட்டம்.

ஸ்ரீதரின் கற்பனையில் 59-ல், ‘அம்மா போயிட்டு வரேன்!’ என்பது காதலர் களுக்கிடையே சிக்னலாக இருந்தால், அது வளர்ந்து 78-ல், மூன்று முறை ‘இச்’சோ? இளமை ஊஞ்சல் ஆடத்தான் செய்கிறது.

– விகடன் விமர்சனக் குழு

ஒரே நாள் உனை நான்…..

நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா…..

கிண்ணத்தில் தேன் வடித்து கைகளில்…..

வார்த்தை தவறி விட்டாய்…….


கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “24 ரூபாய் தீவு”குமுதத்தில் வெளிவந்த மற்றொரு தொடர்கதை ‘24 ரூபாய் தீவு‘ .  ஓர் இளம் பத்திரிகை நிருபரைப் பற்றியது.  அவன் கையில் ஒரு டயரி கிடைக்கிறது.  அதில் ஓர் அரசியல்வாதியைப் பற்றிய அந்தரங்கமான விஷயங்கள் இருக்கின்றன.  அதைப் பற்றி எழுதப் போவதாகச் சொல்லியிருக்கிற வேளையில்,  டயரியைத் தொலைத்துவிடுகிறான்.  அதைத் தேடி மூர்க்கர்கள் அவன் வீட்டுக்கு வந்து வீட்டையும் அவன் வாழ்க்கையையும் கலைத்துப் போடுகிறார்கள்.  அவர்களுடன் அவனும் அந்த டயரியைத் தேடிக் கண்டு பிடிக்க வேண்டியது அவசியமாகிறது.

இந்தக் கதை முதலில் மலையாளத்தில் எனது நண்பர் காலஞ்சென்ற  வேணு கொடுங்காளூர் மொழிபெயர்ப்பில் வந்தது.  அப்போது கன்னடத்திலும் மொழிபெயர்ப்பில் என் கதைகள் ‘கர்மவீரா’ ,  ‘சுதா’ என்ற பத்திரிகைகளில் வந்துகொண்டிருந்தன.  இதைப்பற்றி கேள்விப்பட்ட நாகாபரணா என்கிற பிரபல இயக்குனர்,  அதைத் திரைப்படமாக எடுக்க விரும்பி, என்னை வந்து சந்தித்தார்.

கன்னடத் திரைப்பட உலகம் அப்போது ஆரோக்கியமாக இருந்தது.  ராஜ்குமார், விஷ்ணுவர்தன், அம்பரீஷ், ஸ்ரீநாத் போன்றவர்கள் ஒரு பக்கம் குடும்பப் படங்கள் எடுத்துக் கொண்டிருந்தாலும்,  கிரீஷ் கர்னாட், பி. வி.காரந்த், சந்திரசேகர், கம்பார் போன்றவர்கள் ‘சம்ஸ்காரா’ ,  ‘வம்சவர்ஷா’  போன்ற படங்கள் மூலம் அதை தேசிய அளவுக்கு உயர்த்தியிருந்தார்கள்.  நாகாபரணா அந்தப் புதிய கன்னட சினிமாவின் இயக்குனர்களில் ஒருவர்.  தியேட்டர் பின்னணியிலிருந்து வந்தவர்.  ‘மைசூரு மல்லிகே’,  ‘நாகமண்டலா’ போன்ற நல்ல படங்களை இயக்கியவர்.  அதனால் சந்தோஷத்துடன் ஒப்புக்கொண்டேன்.  தமிழில்தான் என் நாவல்கள் சரியாக வரவில்லை.  கன்னடத்தில் ஜொலிக்கப் போகிறது.  தேசிய அளவில் அடையாளம் பெற்று டில்லியில் அவார்ட் கிடைக்கப் போகிறது.  அதற்கு என்ன சட்டை போட்டுக் கொள்ளலாம் என்றெல்லாம் யோசித்துக்கொண்டிருந்தேன்.  விதி ஒரு ஓரத்திலிருந்து மெல்ல நகைத்துக்கொண்டிருந்தது.

ஒண்டித்வனி‘  (தனிக்குரல்) என்ற பெயர் வைத்து நாகாபரணா படப்பிடிப்பைத் துவங்க பூஜை போட்டார்கள்.

24 ரூபாய் தீவு‘  கதையைப் பற்றி, அப்போது முன்னணியில் இருந்த நடிகர் அம்பரீஷ் கேள்விப்பட்டார்.  ‘ஒள்ளே கதே’ என்று தன்னிச்சையாக அதில் நடிக்கிறேன் என்று முன்வந்தார்.  அதில் நடிக்கவிருந்த சுந்தர்ராஜன் உடனே நீக்கப்பட்டார்.  கதைக்குக் கேடுகாலம் துவங்கியது.  கன்னட நடிகை மஞ்சுளாவும் ‘நானும் உண்டு’  என்று சேர்ந்து கொண்டார்.  தயாரிப்பாளருக்கு இரட்டிப்பு சந்தோஷம்.

ஒண்டித்வனி‘ -யின் நடிகர்கள் பட்டியல் திருத்தப்பட்டது.  அம்பரீஷ் ஒரு வகையில் சூப்பர் ஸ்டார் கேட்டகெரி — 2 அந்தஸ்தில் இருந்தார்.  (ராஜ்குமார் நம்பர் — 1 )  ‘அம்பரீஷுக்கேற்ப சின்ன மாற்றங்களும் சமரசங்களும் செய்ய வேண்டியிருக்கிறது.  ஒரு சின்ன Fight  சீனு,  சிஸ்டர் வச்சு ஒரு சாங் அவ்வளவுதான்’  என்று  தயாரிப்பாளர் சொன்னார்.  ‘படப்பிடிப்பு பெங்களூரிலிருந்த மைசூர் ராஜா பேலஸில் நடந்து கொண்டிருக்கிறது,  வந்து பாருங்கள்’  என்றார்.  போனேன்…..  நாகரா அலற,  மஞ்சுளா நடனமாட சுற்றிலும் திண்டு  போட்டு  சேட்டுகள் வீற்றிருந்து நோட்டுகளை தலையைச் சுற்றி விசிறிக்கொண்டிருந்தார்கள்.  நான் ‘இதெல்லாம் என் கதையில் எங்கே வருகிறது ?’ என்று என்னுடைய பழக்கமாகிவிட்ட கேள்வியைக் கேட்டேன்.  ‘அம்பரீஷ் நடிப்பதால் கொஞ்சம் கமர்ஷியல் விஷயங்கள் சேர்த்துக்கொள்ள  வேண்டியிருக்கிறது.  மற்றபடி நீங்கள் எழுதியபடியே எடுத்திருக்கிறோம்’  என்றார்.

படம் வெளிவந்து கினோ தியேட்டரில் பார்த்தேன்.  உயிரோட்டமுள்ள ஒரு கதையை இயன்ற அளவுக்கு விகாரப்படுத்தி இருந்தார்கள்.  வெளியே வந்த ரசிகர்கள்,  ‘கதே பரிதவனு யாவனப்பா ?’ என்று அதட்டிக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.  நான் மப்ளரால் முகத்தை மறைத்துக்கொண்டு விலகினேன்.  ரசிகர்களாலும் நிராகரிக்கப்பட்டு ஒரு வாரத்தில் தூக்கப்பட்டது.

நாகாபரணா திறமையுள்ள டைரக்டர்தான் .  ஏழோ, எட்டோ தேசிய விருதுகள் வாங்கியவர்.  அப்பேற்பட்ட டைரக்டராலும்  அந்தப் படத்தைக் காப்பாற்ற முடியவில்லை.

நீதி:  ஒரு கதையை சினிமா எடுத்துக் கெடுக்க நிறைய மார்க்கங்கள் உள்ளன.


உங்களுடைய ‘இருபத்தி நான்கு ரூபாய் தீவு’ கன்னட பதிப்பில் நடித்தது  இப்போது காவிரி பிரச்னைக்காக  மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அம்பரீஷா ? ‘ என்று சில சந்தேக வாசகர்கள் ஈ-மெயில் அனுப்பியிருந்தார்கள்.  அவரேதான்.  அன்று படத்தைக் குழப்பினார்.  இன்று காவிரியை.


[sujatha.jpg]

(கனவுத் தொழிற்சாலை தொடரும்…)

தொடர்புடைய பதிவுகள்:

கனவுத் தொழிற்சாலை- சுஜாதாவின் “விக்ரம்”- 1

கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் ‘நினைத்தாலே இனிக்கும்’

கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் ‘ ‘காகிதச் சங்கிலிகள்”

கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் ‘கரையெல்லாம் செண்பகப்பூ’

கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “ஜன்னல் மலர்”

கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “ப்ரியா”

கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “அனிதா இளம் மனைவி”

கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “காயத்ரி”

கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் ‘நினைத்தாலே இனிக்கும்’சுஜாதாவுடைய  படமாக்கப் பட்ட கதைகளில் நினைத்தாலே இனிக்கும் மட்டும் கதை வடிவில் பத்திரிக்கைகளில் வந்ததில்லை. மற்ற கதைகளை எவ்வாறு சிதைத்தார்கள் என்பது வாசகர்களுக்கு தெரியும்.
சுஜாதா பதில்கள்

தேனி ராஜதாசன், தேனி.
முதன் முதலில் எந்தத் திரைப்படத்திற்குக் கதை எழுதினீர்கள் ?
காயத்ரி என்கிற என் தொடர்கதையைப் படமாக எடுத்தார்கள்.
முதல் முதல் எழுதிய கதை வசனம்  “நினைத்தாலே இனிக்கும்”


கணையாழியின் கடைசிப் பக்கங்கள் – சுஜாதா (பிப்ரவரி 1 , 1978)

https://i0.wp.com/eindianmovie.com/wp-content/uploads/2009/05/ninaithale-innikkum.jpghttp://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/18/K_Balachander.jpg/84px-K_Balachander.jpg
டைரக்டர் திரு பாலச்சந்தருக்கு ஒரு திரைக்கதை எழுதிக் கொடுக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்கிறது.  பாலசந்தர் இத்தனை படங்கள் எடுத்தும், தமிழ் சினிமா ரசிகரின் குண விசேஷங்கள் இன்னும் பிடிபடவில்லை என்கிறார்.  தற்போது பிரபலமாயிருக்கும் நடிகர் நடிகையினரின் பெரும்பாலோர் அவரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள்.’Are they grateful ?’ என்று கேட்டேன்.

“முதல் தீபாவளிக்கு வந்து சேவிச்சுட்டுப் போவாங்க. அடுத்த தீபாவளிக்கு டெலிபோன்ல  இருக்காரான்னு கேட்பாங்க.  மூணாவது தீபாவளிக்கு மறந்து போய்டுவாங்க”  என்றார்.

கணையாழியின் கடைசிப் பக்கங்கள் – சுஜாதா (டிசம்பர்,  1978)

http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/18/K_Balachander.jpg/84px-K_Balachander.jpg

பாலச்சந்தருக்கு நான் எழுதிக் கொண்டிருக்கும் திரைக்கதையின் discussion ல் அவர் ‘என் பிரபலமும், உங்கள் பிரபலமும் இந்தப் படத்தில் ஒரு விதமான liability ” என்றது உண்மை என்று பட்டது.  நானும் நவ சினிமாவைப் பற்றி ஓஹோ என்று பேசுகிறேன்.  அவரும் புதிய முறைகளைக் கையாள்கிறார்.  இருவரும் சேரும் படத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும்.  அதைத் தாக்குப் பிடிக்க முடியாது என்றுதான் தோன்றுகிறது.  இந்தக் கதை மலேசியா, கலர், பிரபல நடிகர்கள், புதிய நடிகை, பாட்டு என்ற அம்சங்களுடன் எடுக்கப் படுகிறது.  இவைகளை வைத்துக்கொண்டு Emotion packed என பிழியப் பிழிய அழ வைத்தால் எதற்கு மலேசியா போய் அழ வேண்டும் ?  மெட்ராசிலேயே அழலாம் என்பார்கள்.  Light ஆக எடுத்தால் இதுக்குப் போய் இவ்வளவு செலவழித்து எடுக்கலாமா என்பார்கள்.  Art film மாதிரி எடுத்தால் அதைப் பத்தி புகழ்வார்கள்.  சில்லறை புரளாது.  சிக்கல்.

சந்தோஷம் நிறைந்த படம் எடுப்பது என்று முடிவு செய்தோம்.  எப்படிப்பட்ட படம் என்பதை முன்பே விளம்பரங்களில் சொல்லிவிட்டால் இந்த ‘எதிர்பார்ப்பு’ சமாசாரம் கொஞ்சம் கான்சல் ஆகும் என்று தோன்றியது.  பாக்கியை வெள்ளித் திரையில் காண்க….

https://i0.wp.com/eindianmovie.com/wp-content/uploads/2009/05/ninaithale-innikkum.jpg
நினைத்தாலே இனிக்கும் படத்தை படமாக்கியது குறித்த உங்களது கருத்து என்ன? என்று சுஜாதாவைக் கேட்டதற்கு, ஒரு படம் எவ்வாறு உருவாக்கக் கூடாது என்பதற்கு நினைத்தாலே இனிக்கும் படம் ஒரு உதாரணம் என பதிலளித்தார்.திட்டமிடாமல் படம் பிடிக்க சிங்கப்பூர் சென்று கால விரயமும், நடிகர்களின் கால்க்ஷ£ட் விரயமும் செய்து, பின்பு சென்னை வந்து கதையை மாற்றச் சொன்னதாக குறிப்பிட்டார்.போதாக்குறைக்கு பாலச்சந்தர் அக்காலக் கட்டத்தில் இந்தியா வந்த அபா குழுவினால் கவரப்பட்டு நிறைய பாடல்களை படத்தில் சேர்த்துவிட்டார் என்றும், தாம் எழுதிய ஸ்கிரிப்ட் சிங்கப்பூரில் விறுவிறுப்பான சம்பவங்கள் நடைபெறும் ஸ்கிரிப்ட் என்றும் கூறினார்.

https://i2.wp.com/www.rajinikanth.com/rajini120.jpg

அதை ஒரு கதையாக தற்போது வெளியிடலாமே? என்று கேட்டோம். ஸ்கிரிப்ட் அனந்துவிடம் கொடுத்தது திருப்பி வாங்கவில்லை என்று கூறினார்.
சுஜாதா பதில்கள்

அ.ச. அலெக்ஸ் கமல், தி. அத்திப்பாக்கம்.
கவிஞர் கண்ணதாசனை நீங்கள் சந்தித்ததுண்டா ?
உண்டு.  “நினைத்தாலே இனிக்கும்” கம்போசிங்கின்போது.  சில பொதுக்கூட்ட மேடைகளில்.

எங்கேயும் எப்போதும் சங்கீதம்……   சந்தோஷம்! (கற்றதும் பெற்றதும்….)


1978 -ல், ‘நினைத்தாலே இனிக்கும்’ பாடல்பதிவின் போது  அவரை நேரில் சந்தித்துக் கொஞ்சநேரம் பேசும்  மறக்க முடியாத வாய்ப்பு கிடைத்தது.  அதற்கு முன், ‘இதயம் பேசுகிறது’ பத்திரிகை ஏற்பாடு செய்திருந்த விழா மேடையில், ஆசிரியர் மணியன் என்னைக் கவியரசுக்கு மாலை அணிவிக்கச் சொன்னார்.  அந்த விழாவில், கண்ணதாசனின் தெளிவான பேச்சைக் கேட்டு ரசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.’நினைத்தாலே இனிக்கும்’ படத்துக்கு நான் வசனம் எழுதினேன்.  சங்கீதக் கச்சேரி செய்ய சிங்கப்பூர் செல்லும் இரண்டு இளைஞர்களின் ஆர்க்கெஸ்ட்ரா ட்ரூப்பைப் பற்றிய கதை.  கே.பாலசந்தர்  இயக்கிய அந்தப் படத்தில் ரஜினி, கமல் இருவரும் நடித்தனர்.எம். எஸ்.விஸ்வநாதன் இசைக்கு கண்ணதாசன் பாடல்கள் எழுதினார்.  முதல் பாட்டின் கம்போசிங் சென்னை, ப்ரெசிடென்ட் ஹோட்டல் அறையில் நடைபெற்றது.  “நீங்களும் வாருங்கள்.  கண்ணதாசனும் விஸ்வநாதனும் சேர்ந்து பணிபுரிவதைப் பார்ப்பதே ஒரு சுவாரஸ்யமான அனுபவமாக இருக்கும்” என்றார் பாலசந்தர்.  சென்றேன்.முதலில் ஆர்மோனியப் பெட்டி வந்தது.  பின் எம்.எஸ்.வி வந்தார்.   பட்டனை அழுத்தி, டிபன் வந்தது.  அதன்பின், கசங்கல் இல்லாத தூய வெள்ளை உடையில் வந்தார் கண்ணதாசன்.  அகலமான நெற்றியில் குங்குமப்பொட்டு.  மெலிதான, அழுந்த வாரிய தலைமுடி.  தாராளமான புன்னகை.  ‘பெண்டிக் சொல்யூஷன்’ வைத்து சர்க்கரை இருக்கிறதா என்று பார்த்துவிட்டுத்தான்,  காபிக்கு சர்க்கரை போடச் சொன்னார்.

எம்.எஸ்.வீயும், கவிஞரும் அன்யோன்யமாகப் பழகிக்கொண்டார்கள்.

“விசு,  என்ன ட்யூன் ?”

“அண்ணே!  சங்கீதத்தைப் பற்றிய உற்சாகமான ட்யூன்!”

“வாசி! ”

விஸ்வநாதனின் விரல்கள் ஆர்மோனியத்தில் உலவ, அவருக்கே உரிய வசீகரமான குரலில், “தன் னானே  தன்னானே  தன்னானே  தன்னானே” என்று பாடினார்.  உடனேயே கவிஞர்,  “எங்கேயும்  எப்போதும்  சங்கீதம்,  சந்தோஷம் ” என்றார்.  “பாடிப் பாரு !”

“கச்சிதமாக இருக்கு, கவிஞரே !””அடுத்த அடி. ?””தானனன்னே  தானனன்னே  தானனன்னே  தானனன்னே…!””தன்னானேக்கு பதில் தான னன்னேயா ? சரி கொஞ்சம் தத்துவம் பேசலாமா ?” என்று டைரக்டரைப் பார்த்தார், கவிஞர்.

பாலசந்தர், “தாராளமா!  உங்களுக்குச் சொல்லணுமா கவிஞரே ! ”

“ராத்திரிகள் வந்துவிட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்…!”    “சரியா ?”

“Perfect !”

விஸ்வநாதன் பாடப் பாட,  கண்ணதாசன் அத்தனை சரணங்களையும்  (“காலை ஜப்பானில் காபி….  மாலை நியூயார்க்கில்  காபரே…  அவங்க ஊரூரா போறாங்கல்ல ? “)  உடனுக்குடன் உதிர்த்ததை பஞ்சு அருணாசலம் அழகான கையெழுத்தில் எழுதித்தர,  சில மணி நேரங்களில் முழுப் பாட்டும் எழுதப்பட்டது.

இடையிடையே, கண்ணதாசனுடன் பேச்சுக் கொடுத்தேன்.  “எப்படி இவ்வளவு சரளமா வார்த்தைகள் வருது ? ”

“தமிழ்ல ஆதார சந்தத்தைப் பிடிச்சுட்டாப் போதும்!  பாருங்க,  சீதைக்கு எத்தனை பெயர்கள் ?  சீதா — நேர் நேர்;  ஜானகி — நேர்நிரை;  ஜனகா — நிரைநேர்;  வைதேகி — நேர் நேர் நேர் ….  இப்படி எந்தச் சந்தம் வேணுமோ அந்தச் சந்தத்துக்கு வார்த்தைகள் போட்டுக்கலாம்.  என்ன, எல்லா வார்த்தையும் தெரியணும்… அவ்வளவு தான்.   கம்ப இராமாயணத்தில் ஒவ்வொரு படலத்திலும், பாடலிலும் ஒரு புது வார்த்தை கிடைக்கும் !”

மறுநாள் ரிக்கார்டிங்குங்கு  கண்ணதாசன் வந்து தலையைக் காட்டிவிட்டுப் போனார்.  அவர் வேலை முதல் நாளே முடிந்துவிட்டது .

அதன்பின் கண்ணதாசனை நான் சந்திக்கவில்லை.

அவர் உடல்நலம் குன்றி, சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றதும்,  தாய் நாட்டுக்குத் திரும்பிய நிலையம், இளம் வயதில் மறைந்ததும் என் மனத்தை உருக்கிய நிகழ்ச்சிகள்.  ஏறத்தாழ 30 ஆண்டுகளாகியும் அந்தப் பாடல் இன்றும்கூட எல்லா மெல்லிசை நிகழ்ச்சிகளிலும் கட்டியம் கூறும் பாடலாகப் பாடப்படுகிறது.  கண்ணதாசன் அதைத்தான் செய்தார்…   எங்கேயும் எப்போதும் சங்கீதத்தையும், சந்தோஷத்தையும் பரப்பினார்.  உலகில் தமிழர்கள் வாழும் ஏதாவது ஒரு மூலையில் பயணிக்கும் கார்களிலும்,  இல்லங்களிலும்  அவரது ஏதாவது ஒரு வரி ஒலிக்காத நேரமே இல்லை.

நினைத்தாலே இனிக்கும் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.   சுஜாதா கதை வசனம் எழுதி, கே. பாலசந்தர் இயக்கி கமல்-ரஜினி இருவரும் இணைந்து நடித்து வெளிவந்த நினைத்தாலே இனிக்கும் படத்தின் பாடல்களை மறக்க முடியுமா!

எங்கேயும் எப்போதும்……

சம்போ சிவ சம்போ……..

நம்ம ஊரு சிங்காரி….

ரஜினி காமெடி


[sujatha.jpg]

(கனவுத் தொழிற்சாலை தொடரும்…)

தொடர்புடைய பதிவுகள்:

கனவுத் தொழிற்சாலை- சுஜாதாவின் “விக்ரம்”- 1

கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “24 ரூபாய் தீவு”

கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் ‘ ‘காகிதச் சங்கிலிகள்”

கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் ‘கரையெல்லாம் செண்பகப்பூ’

கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “ஜன்னல் மலர்”

கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “ப்ரியா”

கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “அனிதா இளம் மனைவி”

கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “காயத்ரி”

கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் ‘ ‘காகிதச் சங்கிலிகள்”


N-KAAGITHA CHANGILIKAL

இந்தக் கதையில் சுஜாதா இதுவரை எழுதாத விதத்தில் மனித உறவுகளை அலசியிருந்தார். அபாரமான கதை.

இந்தக் கதையில் இருந்து சில வரிகள்……

விமலா ஒரு ரூபாய்க்கு நாலணா சில்லரையாக மாற்றி வைத்துக் கொண்டு டாக்டர் ரங்காச்சாரியின் சிலையைக் கடந்தாள். கம்பிகளால் தடுக்கப்பட்ட காரிடாரில் நடந்தாள். அதன் இறுதியில் கதவு சார்த்தி காக்கிச் சட்டைக்காரன் ”போங்கய்யா, போங்கம்மா?” என்று சிலரை அதட்டிக் கொண்டிருந்தான். ”உள்ள உடறதில்லைன்னு சொன்னனில்லை?” விமலா நாலணாவை எடுத்துத் தயாராக நீட்ட அதை அவன் பூச்சி பிடிக்கும் பல்லிபோலக் ‘கபக்’ என்று கவர்ந்து கொண்டு கிராதி கேட்டைத் திறந்து அவளை மட்டும் அனுமதித்து ”அடப்போங்கய்யான்னா!” என்று அதட்டலைத் தொடர்ந்தான்.

‘காகிதச் சங்கிலிகள்‘  பற்றி சுஜாதா…..

‘காகிதச் சங்கிலிகள்’ பெயர் மாறி ‘பொய் முகங்கள்‘ என்ற தலைப்பில் 1986 -ல் சி.வி.ராஜேந்திரன் டைரக் ஷனில்  வெளிவந்தது.  கன்னடத்தில் பிற்பாடு டைரக்டராக பிரபலமான ரவிச்சந்திரன்    (ராகேஷ் என்ற பெயரில்)   சுலக் ஷனாவுடன்  நடித்தார்.  இந்தக் கதை, சிறுநீரகத்தில் கோளாறு ஏற்பட்டு ஓர் இளம் கணவன் மாற்று சிறுநீரகத்துக்குக்  காத்திருக்க, அவன் மனைவி ரத்த சம்பந்தமுள்ள உறவினர்களிடையே கெஞ்சுவது பற்றிய கதை.

சைக்ளோஸ்சோரின் போன்ற இம்யுனோ சப்ரசண்ட்கள் அதிகம் புழங்காத காலம் அது.  இன்று அந்தக் கதை எழுத முடியாது.  ராயபுரம் சுனாமி நகர் சென்று, தரகரைச் சந்தித்தால் போதும்,  பதினைந்து பேர் கிட்னி தானம் கொடுக்க முன்வருவார்கள்.

சுஜாதாவின் ‘காகிதச் சங்கிலிகள்’ – ஒரு சினிமா அனுபவம்

காகிதச் சங்கிலிகள்‘  ஒரு குறுநாவலாக,  நாலைந்து வாரம் “சாவி” இதழில் வெளி வந்தது .  வெளிவந்த உடனே சின்னதாக சினிமா பாட்டு புஸ்தகம் சைஸுக்கு ஒரு நியூஸ் பிரிண்ட் எடிஷனும் சாவி வெளியிட்டார்.  இவ்வடிவத்தில்தான் பஞ்சு அருணாசலம் அந்தக் கதையைப் படித்திருக்கிறார்.  கதை எளியது.  புதுசாக கல்யாணமான கணவன் திடீர் என்று சிறுநீரகம் (கிட்னி) பழுதுபட்டு உயிருக்கு ஊசலாடுகிறான்.  அவன் மனைவி மாற்று சிறுநீரகம் தானம் தரும்படி கணவனின் உறவினர்கள் எல்லோரையும் மன்றாடிக் கெஞ்சுகிறாள்.  அவர்கள் காலந் தாழ்த்துகிறார்கள்.  கணவன் இறந்து விடுகிறான்.  “எல்லாரும் சேர்ந்து அவரைக் கொன்னுட்டா” என்கிறாள்.  அவ்வளவுதான்.

இந்தக் கதை வெளிவந்த புதிதில் பலரை பாதித்தது.  எனக்கு கடிதங்கள்,  போன் கால்கள்,  ‘நான் தானம் தருகிறேன்,  கதையை மாற்றி எழுது’  என்று தந்திகள்  இப்படியெல்லாம் வந்தன.  அந்த நாட்களில் சென்னை சென்றிருந்தபோது,  பஞ்சு அருணாசலம் என்னை வரவழைத்து  “காகிதச் சங்கிலிகள் படிச்சங்க.  நல்ல கதை.  இதை படமா எடுத்துரலாம் உடனே” என்று அட்வான்ஸ் தொகையையும் கொடுத்தார்.  (எத்தனை அட்வான்ஸ் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறவர்கள் என்னை என் மாதாந்திர சுற்றுப்பயணத்தில் பத்தாம் தேதி கடலூர் அஜீஸ் மான்ஷன் போன் நம்பர் 123 -ல் தொடர்பு கொள்ளவும்.’காகிதச் சங்கிலிகள்‘   பூஜை, அதன் டைரக்டர் திரு. எஸ். பி. முத்துராமன் வீட்டின் மாடியில் நடைபெற்றது.  சுமனும், அம்பிகாவும் சாந்தி கல்யாண சீனில் நடிக்க படப்பிடிப்பு துவங்கியது.  நான் வழக்கமான கேள்வி கேட்டேன்.  ‘இதெல்லாம் என் கதையில் வரவில்லையே’ என்று.   அவர்கள் ‘கணவன் மனைவி தானே,  முதல் இரவில் துவங்குகிறோம்’ என்றார்கள்.Producer  ஒரு வெற்றிப் படத்துக்கு அப்புறம் இரண்டு மூன்று அடியைப் பார்த்து நொந்து போயிருந்தார்.  படுக்கை பூரா மல்லிகைப் பூ இறைந்திருக்க,  சிவப்பில் சாரி கட்டிக் கொண்டு அம்பிகா என்னிடம் தானும் கதைகள் எழுதுவேன் என்றும் “நாநா ” ரெட்டியாரை சிலாகித்தும் பேசினார்.  சுமன் உயரமாக மேகங்களுக்கு அருகே தலை இருந்ததால் ஜலதோஷமாக மூக்கு சிந்திக் கொண்டிருந்தார்.  நான் பெங்களூர் திரும்பி வந்துவிட்டேன்.மூன்று மாதம் கழித்து படப்பிடிப்பு மளமளவென்று முன்னேறுவதாக தந்தி பேப்பரில் செய்தி வந்து ஒரு ஸ்டில் போட்டோவும் போட்டிருந்தார்கள்.  அதில் மைதானத்தில் கிடாவெட்டு ஒன்று நடந்து கொண்டிருந்தது.  அடடா, கதையில் இல்லவே இல்லையே, கதை முழுவதும் ஜெனரல் ஆஸ்பத்திரியில் நடக்கிறதே,  அங்கே ஒரு மைதானமோ, ஆட்டுக் கிடாவோ  உள்ளே வர சாத்தியமே இல்லையே என்று அடுத்த முறை சென்னைக்குச் சென்ற போது பஞ்சு அவர்களை விசாரித்தேன்.

“அதுங்களா ?  காமெடி ட்ராக்குங்க .  கதை பூரா செண்டிமெண்டல் மேட்டரா ஆயிடுத்தா ,  கொஞ்சம் Relief -க்கு சோ, மகேந்திரன் இவங்களை வச்சுக்கிட்டு காமெடி – Carry on Doctor  மாதிரி காமெடி பண்ணியிருக்கம்.  அது சம்பந்தமான ஸ்டில்லா இருக்கும்.  கிடா வெட்டுன்னா சொன்னீங்க ?  விசாரிக்கறேங்க. ”

நாட்கள் உருண்டோடின.  மற்றொரு மதராஸ் விஜயத்தில் பஞ்சு அவர்களின் உதவியாளரை ஒரு நட்சத்திரக் கல்யாணத்தில் சந்தித்தேன்.

“காகிதச் சங்கிலிங்களா  ? அது வந்து டிஸ்கஷன் போது ஒரு சிக்கல் வந்துருச்சுங்க.  கிட்னி, கிட்னி, சிறுநீரகம், சிறுநீரகம்னு  அடிக்கடி கதைல வருதுங்க.  தாய்மாருங்களுக்கு  எப்படி இருக்கும் ?  அவங்கவங்க எந்திரிச்சு பாத்ரூம் போயிரமாட்டாங்களா ? ”

“நீங்க சொல்றதிலயும்  பாயிண்ட் இருக்குதுங்க.  எழுதறப்ப யோசிக்கலைங்க. ”

“அதனால் தான் சிறுநீரகத்தை இதயம்னு மாத்தலாம்னு யோசிச்சுக்கிட்டிருங்கங்க.  இதயம்னுட்டா பாருங்க எல்லா சிக்கலும் தீர்ந்துருது.  அதை வச்சிக்கிட்டு எவ்வளவு வசனம்,  பாட்டு அருமையா எழுதலாம் ?  கிட்னிய  வச்சிக்கிட்டு என்ன பண்ண முடியும் சொல்லுங்க சாப்பிடலாம்,  ஒண்ணுக்கு போகலாம், வேற என்னங்க ? ”

அவர் சொல்வதில் உள்ள நியாயத்தை உணர்ந்து நான் உடனே பஞ்சு அருணாசலத்துக்கு போன் செய்தேன்.  அவர் கிடைக்கவில்லை.  ஊருக்கு வந்த கையோடு அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன்.  கதையே, காமெடி ட்ராக், இதயம் என்று கணிசமாக மாற்றி விட்டதால் இனி என்னுடையது என்று மிச்சமிருப்பது  ‘காகிதச் சங்கிலிகள்‘  என்கிற டைட்டில் மட்டுமே.  அதையும் மாற்றி என் பெயரை நீக்கிவிடுங்கள்   என்று எழுதியிருந்தேன்.  பதில் இல்லை.  (சினிமாக்காரர்கள் கடிதம் எழுத மாட்டார்கள் பாக்யராஜ், சிவகுமார் தவிர. )

பஞ்சுவை அடுத்த முறை சில மாதங்கள் கழித்து சந்தித்த போது, “நீங்க சொன்னபடியே செஞ்சுட்டங்க.  பேரையும் மாத்திட்டம்.  அட்வான்ஸ் இருக்கட்டுங்க.  சந்தர்ப்பம் ஏற்படறப்ப ஒரு லோ பட்ஜெட் ஆர்ட் மூவி எடுத்துரலாம் ” என்றார்.  நான் சந்தோஷத்தோடு ஒப்புக்கொண்டேன்.

என்ன பெயர் மாற்றினார்கள் என்று தெரியவில்லை.  படம் முடிந்ததா,  ரிலீஸ் ஆயிற்றா தெரியவில்லை.  உங்களுக்குத் தெரியுமா ?  சுமனும் அம்பிகாவும் சாந்தி கல்யாணம் பண்ணிக் கொள்கிறார்கள்.  கிடா வெட்டு வருகிறது.  காமெடி ட்ராக்,  ஆஸ்பத்திரி நர்ஸ்,  வார்டு பாய் என்றெல்லாம் வரும்.

நீங்கள் யாராவது பார்த்திருந்தால் எனக்கு தகவல் சொல்லுங்கள்.  மாற்று இதய சிகிச்சை கூட வரலாம்.

பின்னர் சுமார் 2 வருஷம்  ‘காகிதச் சங்கிலிகள்‘ தூங்கியது.  அதற்கு மறுபடி ஒரு ராஜகுமார முத்தம் கிடைத்தது.  ஒரு நாள் இரவு டைரக்டர்  சி.வி. ராஜேந்திரன் பெங்களூருக்கு படப்பிடிப்புக்கு வந்திருந்தவர் வீட்டுக்கு வந்தார்.

“என்னா  ஸ்டோரி சார் அது !  அப்படியே என்ன உலுக்கிருச்சு!  காகிதச் சங்கிலிகளை நான் எடுத்தே ஆகணும். ”

“தேங்க்ஸ்.  ஆனா அது பஞ்சு சார் கிட்ட….”

“எல்லாம் தெரியும்.  அவர்கிட்ட பர்மிஷன்  கேட்டுகிட்டுத்தான் எடுக்கப் போறோம்.  அவங்களுக்கு இப்போதைக்கு இதில் இன்ட்ரெஸ்ட் இல்லை.  செகண்ட் Half   பூரா அப்படியே வரிக்கு வரி உங்க ஸ்டோரி தான். ”

“First  Half  ?”

“முதல் பாதியில் அந்தக் குடும்பம் எப்படி ஒத்துமையா வாழ்ந்தாங்க,  எப்படி சந்தோஷமா இருந்தாங்க,  எப்படி கதாநாயகனுக்கு ஒரு சின்ன முள் குத்தினாக் கூட அவங்களுக்கெல்லாம் தாங்கவே தாங்காதுன்னு கட்டினா contrast  கிடைக்கும்.  அதும் ஸ்க்ரீன் ப்ளே உங்ககிட்ட காட்டி, approval வாங்கிட்டுத் தான் எடுக்கப் போறோம்…..”

“எதுக்கும் பஞ்சு கிட்ட நீங்க எடுக்கறதப் பத்தி ஒரு வார்த்தை சொல்லிடுங்க.   என்னா லீகல் ப்ராப்ளம் எதும் வரக் கூடாது பாருங்க….”

:”தாராளமா.   ‘காகிதச் சங்கிலிகள்‘  ங்கற டைட்டில் சேம்பர்ல  ரிஜிஸ்டர் ஆயிருக்கு.  அதனால் ‘பொய் முகங்கள்‘ னு மாத்திரலாம்.  யு லைக் இட் ?”

பஞ்சு, சி.வி. ஆர் தன்னிடம் பேசியதாகவும்,  தாராளமாக அவர்களுக்குக் கொடுக்கலாம் என்று சொன்னார்.

இந்த முறை    ‘காகிதச் சங்கிலிகள்‘  பொய் முகங்களாக பாடல் பதிவுடன் துவங்கியது.  சுலக் ஷணா  ஹீரோயின்.  பெங்களூர் திரு வீராசாமியின் மகன் ராகேஷோ என்னவோ பேர் சொன்னார்கள்.  அவர் தான் ஹீரோ.  Producer இப்போது சின்னப் பையன் போல் இருந்தார்.  பாங்கில் வேலை செய்கிறதாக சொன்னார்.  என் நண்பர் வெங்கட் தான் திரைக்கதை.

“பயப்படாதீங்க.  உங்க தீமை ஸ்பாயில் பண்ணாம உங்க லைன்சையே  உபயோகிச்சு எழுதறேன்.”

பொய் முகங்கள்‘ மளமளவென்று முன்னேறுவதாக தந்தி பேப்பரில் செய்தி வந்திருந்தது.  ஸ்டில் கூட வந்திருந்தது.  குமுதம் இதழில் ஒரு கலர் படம் கூட வந்திருந்தது.  (இரண்டு முகங்கள் கிட்டே கிட்டே)  சென்னைக்கு அடுத்த முறை வந்த போது  படப்பிடிப்புக்கு அத்தாட்சியாக  நிறைய கலர் கலராக ஸ்டில் எல்லாம் காட்டினார்கள்.  வைரமுத்து உருக்கமாக ‘மனிதனுக்கு எத்தனை பொய் முகங்கள்’ என்று விசாரித்து எழுதியிருந்தார்.
ஸ்டில்களில்  அந்தப் பையன் தாடி வைத்துக்கொண்டு சன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டிருந்தான்.  சுலக் ஷணா தழைய வாரிக் கொண்டு பெரிசாக பொட்டு இட்டுக்கொண்டு சன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டிருந்தார்.

“ரொம்ப நல்லா வந்திருக்குங்க.  நிச்சயம் அவார்ட் பிக்சர்ங்க.  நீங்க பார்த்துட்டு அதைப்பத்தி எழுதுங்க.  அடுத்த தடவை வரப்ப போன் பண்ணுங்க.ப்ரொஜெக் ஷனுக்கு  ஏற்பாடு செய்யறேன் ” என்றார் ப்ரோடுசெர்.

“படம் முடிஞ்சுருச்சா ?”

“முடிஞ்சுருச்சு.  இன்னம் கொஞ்சம் பாடச் வொர்க் பாக்கி.  தீபாவளிக்கு ரிலீஸாயிரும்.”

அதன் பின் Producer -ரிடம் டெலிபோனில் பேச ஒரு சந்தர்ப்பம் கிடைத்தபோது, படம் ஒரு புதிய சிக்கலில் மாட்டிக் கொண்டிருப்பது தெரிய வந்தது.

தமிழகத்தின் மாண்புமிகு முதலமைச்சர் எம். ஜி. ஆர். அவருக்கு திடீர் என்று உடல் நலம் குறைந்து சிறுநீரகத்தில் கோளாறு ஏற்பட்டு மயக்க நிலையில் அமெரிக்காவுக்குச் சென்று அங்கே திறமையுள்ள மருத்துவ நிபுணர்கள் அவருக்கு மாற்று சிறுநீரகம் — ‘காகிதச் சங்கிலிகள்’  போலல்லாமல் அவருடைய உறவினர் மனமுவந்து சம்மதிக்க பொருத்தப்பட்டு அவர் நினைவும் செயலும் பெற்று தாயகம் திரும்பியது உங்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.

காகிதச் சங்கிலிகளி‘ ன் தயாரிப்பாளர் இந்த சம்பவம் திரைப்படத்தின் செண்டிமெண்டை ”ஆண்டி சென்டிமென்ட்’ டாக  மாற்றிவிட்டதால் படம் இந்த சமயத்தில் ஓடாது என்று டிஸ்ட்ரிப்யூட்டர்கள் தொட மறுப்பதாகச் சொன்னார்.  “கதாநாயகனுக்கு எல்லோருமே கிட்னி தானம் குடுக்க வாராப்பல மாத்தி சந்தோஷமா முடிச்சுருங்க,  போட்டி எடுக்கறோம் ” என்றார்கள்.

நாட்கள் மறுபடியும் உருண்டோடி இன்றைய தேதி வரை  (12 – 10 – 1985 ) தயாரிப்பாளரிடமிருந்து தகவல் இல்லை.  அவர் என்ன பாங்கில் வேலை செய்கிறார் என்று விசாரிக்கக்கூட மறந்து விட்டேன்.  நீங்கள் எதாவது பாங்கில் — சின்னப் பையன் போல் இருப்பார்.  பனியன் போடாமல் தங்க சங்கிலியும் மல் ஜிப்பாவும் போட்டிருப்பார்.  அவரைப் பார்த்தால் ‘பொய் முகங்கள்’ என்ன ஆச்சு என்று கேட்டுப் பாருங்கள்.  கதாநாயக இளைஞனை என்னவோ பேர் சொன்னார்களே — ஒரு முறை கமல்ஹாசன் வீடு எடிட்டிங் ரூமில் பார்த்தேன்.  ‘காகிதச் சங்கிலிகள்‘ எழுதினது நான்தான் என்று அறிமுகமானதும் ஏதோ சபையில் கேட்ட காரியம் பண்ணினவனைப் போலப் பார்த்தார்.  சி.வி. ராஜேந்திரன் இப்போதெல்லாம் நன்றாக ஓடிச் சளைத்த இந்திப்பட ரீ-மேக்குகளை செய்கிறார்.  வெங்கட் பிராமணர்கள் கோபித்துக் கொள்ளும்படி நாடகங்கள் எழுதுகிறார்.

சமீபத்தில் எனக்கு ஒரு போன் கால் வந்தது.  “சுஜாதா சாருங்களா ?  எம் பேர் ராஜராஜன்ங்க.  ராஜா கிட்ட வொர்க் பண்ணிட்டு இப்ப Friends –ங்கள்ளாம் சேர்ந்து சொந்தப் படம் எடுக்கறோம்.   ‘காகிதச் சங்கிலிகள்‘  ன்னு உங்க சப்ஜெக்ட் ஒண்ணு என்னை அப்படியே உலுக்கிருச்சுங்க.  அதைப் பண்ணனும்னு ரொம்ப நாளா ……”

“ராங் நம்பர் ! ” என்று போனை வைத்து விட்டு அதன் இணைப்பையும் பிடுங்கி விட்டேன்.

சுஜாதா பதில்கள் – பாகம் 1  (உயிர்மை பதிப்பகம்)

வ.செ.வளர்செல்வன்,  நத்தக்காடையூர்.
எழுத்தாளர் சுஜாதாவின் நாவல்களில் சராசரி மனிதர் ரங்கராஜனைப் பாதித்த நாவல்கள் எவை ?
குருபிரசாதின் கடைசி தினம் ,  காகிதச் சங்கிலிகள்.


[sujatha.jpg]

(கனவுத் தொழிற்சாலை தொடரும்…)

தொடர்புடைய பதிவுகள்:

கனவுத் தொழிற்சாலை- சுஜாதாவின் “விக்ரம்”- 1

கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “24 ரூபாய் தீவு”

கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் ‘நினைத்தாலே இனிக்கும்’

கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் ‘கரையெல்லாம் செண்பகப்பூ’

கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “ஜன்னல் மலர்”

கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “ப்ரியா”

கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “அனிதா இளம் மனைவி”

கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “காயத்ரி”

கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் ‘கரையெல்லாம் செண்பகப்பூ’


சுஜாதா கூறுகிறார்….
ஆனந்த விகடனில் ‘கரையெல்லாம் செண்பகப்பூ‘ எழுதினேன்.  நாட்டுப்புறப் பாடல்களின் பின்னணியில் கிராமத்தில் வைத்து ஒரு த்ரில்லர் (இந்த யோசனை இளையராஜா தந்தார்.  வாசர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.  மக்கள் த்ரில்லரை மறந்துவிட்டார்கள்.  நாட்டுப்புறப் பாடல்களை இப்போதும் ஞாபகம் வைத்திருக்கிறார்கள்.

நா.வானமாமலை இலக்கிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் மட்டுமின்றி, நாட்டார் வழக்காற்றியல் பற்றியே பன்னிரண்டு புத்தகங்கள் எழுதியிருக்கிறார். அவர் செய்த பணி சிறப்பானது.

வரலாறு, விஞ்ஞானம், ஆராய்ச்சி, அரசியல், தமிழில் முடியும் போன்ற தலைப்புக்களில் சுமார் நாற்பது புத்தகங்கள் எழுதியுள்ள இந்தப் பேராசிரியரிடம், நான் விகடனில் ‘கரையெல்லாம் செண்பகப்பூ’ தொடங்குவதற்கு முன், அவரது ‘தமிழர் நாட்டுப் பாடல்கள்’ புத்தகத்திலிருந்து (இப்போது அதை என்.சி.பி.ஹெச். ‘தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்’ என்று பதிப்பிக்கிறார்கள்) சில பாடல்களைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதி கேட்டேன். அவர் ‘இந்தப் பாடல்கள் மக்கள் சொத்து. நீங்கள் தாராளமாக அவற்றைப் பயன்படுத்தலாம்’ என்று கார்டு போட்டிருந்தார்.

என் தொடர் கதைகள் ஆரம்பமாகும் போதோ, அல்லது, முடியும் போதோ, சினிமா உலகத்துக்கு ஒரு விதமான ஆவேசம் வரும்.  அந்தக் கதையை சினிமா எடுத்தே ஒழிப்பது  என்று வலுக்கட்டாயமாக ஒரு கோஷ்டி கிளம்பும்.  “கரையெல்லாம் செண்பகப்பூ” ஆரம்பித்த போது, என் தோட்டத்தில் ஒரு கிரிக்கெட் டீம் அளவுக்கு தயாரிப்பாளர்கள் கூடி விட்டார்கள்.

கரையெல்லாம் செண்பகப்பூ தொடர்கதையாகத் துவங்கின உடனேயே, பலர் அதை சினிமா எடுத்தே தீருவேன் என்று பிடிவாதமாக என்னை அணுகினார்கள்.  ஆசிரியர் சாவி, பாலுமகேந்திரா, பிரமிட் நடராஜன், இசைஞானி இளையராஜா, புவியரசு, பஞ்சு அருணாசலம் இவர்களிடையே தீர்மானிக்க முடியாமல் திணறினேன்.  பாலுமகேந்திரா கோகிலா படப்பிடிப்புக்காக பெங்களூர் வந்திருந்தார்.  மறைந்த நடிகை ஷோபா, பிரதாப் போத்தன் இருவரையும் வைத்து அந்தக் கதையை எடுக்கப் போவதாகச் சொன்னார்.  பிரமிட் நடராஜன் தயாரிப்பதாக இருந்தது.  அவர் ‘சரத்பாபுவை வைத்துப் பண்ணுங்கள்’ என்றார்.  பாலுமகேந்திரா விலகிவிட்டார்.

கொஞ்ச நாள் கரையெல்லாம் செண்பகப்பூ யாரெடுப்பார்கள் என்கிற தீர்மானமில்லாமல் கிடப்பில் இருந்தது.  இறுதியில், கதையை எல்லாரும் மறந்து போன பின் ஜி.என்.ரங்கராஜன் அதை எடுத்தார்.  கதாநாயகன் அதே பிரதாப் போத்தன்,  கதாநாயகி ஸ்ரீப்ரியா.  மனோரமா திறமையாக நடித்தார்.

படம் சித்ரா தியேட்டரில் ஒரு வாரம் போல் ஓடியது.  எப்போதாவது டிவியில் அந்தப் பாடத்தைக் காட்டுகிறார்கள்.  அதைப் பார்த்தவர்கள் ‘இப்போது வரும் படங்களுக்கு அது பரவாயில்லை’ என்றுதான் சொல்கிறார்கள்.

கரையெல்லாம் செண்பகப்பூ திரைப்படத்துக்கு எனக்குக் கிடைத்த வருமானம் எவ்வளவு என்பதை அறிந்துகொள்ள வாசகர்கள் ஆவலாக இருக்கலாம்.  அந்தக் காலங்களில்  எல்லாமே வாய் வார்த்தைதான்.  ‘நீங்க போங்க, பின்னாலயே  ஒரு செக் அனுப்புகிறேன்’ என்பார்கள்.  அனுப்பிய செக்கை அடுத்த வெள்ளிக்கிழமை போடுங்கள் என்பார்கள்.  சிலர் டோக்கன் அமௌன்ட் கொடுப்பார்கள்.  குறிப்பாக இந்த நாவலுக்கு ஒரே ஒரு தயாரிப்பாளர் ஐயாயிரம் ரூபாய் தந்தார்.  இதில் செய்தி — படத்தை அவர் எடுக்காததால் போன் பண்ணி கொடுத்த பணத்தைத் திரும்ப வாங்கிக்கொண்டார்.  வங்கியில் அந்த செக் மாறினதுக்கு பத்து ரூபாய் சார்ஜ் செய்தார்கள்.  எனவே கசெபூ படமாக வந்ததற்கு நான் பத்து ரூபாய் செலவு செய்தேன்.  என் மனைவி எனக்கு வராத பணம் அனைத்துக்கும் கணக்கு வைத்திருக்கிறாள்.

ஜி. என்.ரங்கராஜன் கடைசியில் அதை எடுத்து ஒரு வழி பண்ணினார்.  இப்போதுகூட ஒரு டைரக்டர் அந்தக் கதையை ரீ-மேக்காக மறுபடி எடுக்கலாம் என்று என்னை அணுகினார்.  ‘என்னங்க… அவன் நாட்டுப்பாடல் ஆராய்ச்சிக்கு சுவிட்சர்லேன்ட் போறதா வச்சிக்கிட்டு அங்க ஒரு சாங் வெக்கலாங்க’ என்றார்.  நான் ‘எஸ்கேப்’ என்று ஓடிவந்துவிட்டேன்.

இனி கரையெல்லாம் செண்பகப் பூ பற்றி….

சுஜாதாவின் மிகப் பிரபலமான நாவல்களில் ஒன்று ‘கரையெல்லாம் செண்பகப்பூ’. நாட்டுப்புறப் பாடல் ஆராய்ச்சிக்காக திருநீலம் கிராமத்துக்கு வரும் நகர்ப்புற இளைஞன் சந்திக்கும் சம்பவங்களின் மர்மமும், பழிவாங்கலும் நிறைந்த பின்னணியில் தமிழக நாட்டுப்புறப் பாடல்களை ஊடாடவிட்டிருக்கிறார். இந்த நாவலுக்குப் பின்னர் தமிழ்நாட்டில் நாட்டுப்புறப் பாடல்கள் மேல் நிறைய கவனம் திரும்பியது. கிராமப்புர கவிதை வரிகளோடு கதையோட்டம் தெளிந்த நீரோடை போல் செல்லும்.

நாட்டுப்புற பாடல் ஆராய்ச்சிக்கு கிராமம் செல்கிறான் நாயகன் (பிரதாப் போத்தன்). அங்கு அவன் தங்கும் பழைய வீட்டில் ஒரு புதையல். அதை எடுக்கும் திட்டத்துடன் ஒரு இளம்பெண், அவளுக்கு உதவியாளர்கள். அந்த கிராமத்துப்பெண் வெள்ளி (ஸ்ரீபிரியா). அவளை ஒரு தலையாக காதலிக்கும் நாயகன். அவளுக்கோ முறைப்பையன் மேல் ஆசை.

இயல்பான நடையில், திடுக்கிடும் திருப்புமுனைகள் வரும் கட்டங்களிலும்,  ஒரே வரியில் அதன் ஆழத்தை சொல்லும் பாங்கு சுஜாதாவுடையது. உதாரணம் கரையெல்லாம் செண்பகப்பூவில் வரும் அந்த முடிவு
”என்ன சொல்ல நினைத்தாய் வெள்ளி”
சொல்லாமல் போன காதலின் சுமையாய் இந்த ஒரு வரிக்குள் அடக்கிவிடுகிறார்.

‘பழையனூர் நீலி’ கதை, ஜமீந்தாரிணி ரத்னாவதியின் உடைந்த ஆங்கிலக் குறிப்புகள் (‘Rathna not happy…’) – படிக்கும்போதே மனம் கரைந்து போகும். சிநேகலதாவின் கொலை, அப்புறம் கதையின் உச்சமாகப் புதையல் கண்டுபிடிப்பு…chilling.

கரையெல்லாம் செண்பகப் பூ 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. என். ரங்கராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரதாப் போத்தன், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.   கதையாகப் படித்தபோது அடைந்த Feel  படத்தில் கிடைக்காததால் படம் வெற்றி அடையவில்லை.

[sujatha.jpg]

(கனவுத் தொழிற்சாலை தொடரும்…)

தொடர்புடைய பதிவுகள்:

கனவுத் தொழிற்சாலை- சுஜாதாவின் “விக்ரம்”- 1

கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “24 ரூபாய் தீவு”

கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் ‘நினைத்தாலே இனிக்கும்’

கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் ‘ ‘காகிதச் சங்கிலிகள்”

கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “ஜன்னல் மலர்”

கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “ப்ரியா”

கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “அனிதா இளம் மனைவி”

கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “காயத்ரி”

மொகலே ஆஸம்


விகடனில் ஒரு ஹிந்தி படத்துக்கு விமர்சனம் வந்திருக்கிறது! புகழ் பெற்ற மொகலே ஆஜம் (செப்டம்பர் 1960) வெளியானபோது விகடனில் வந்த விமர்சனம். நன்றி, விகடன்!

சேகர் – சந்தர்

சந்தர்: சேகர், மொகலே ஆஸம் பார்த்துட்டியா?

சேகர்: பார்க்காமல் இருப்பேனா? தயாரிப்பாளர் ஆஸிப்பின் சாதனை அபாரம்தான்!

சந்தர்: அனார்கலி கதைதானே!

சேகர்: ஆமாம், ஆனால் முடிவை புது மாதிரியாகச் செய்திருக்காங்க. அதாவது, அக்பருடைய பெருமையை நிலைநாட்ட, அனார்கலியை கடைசியிலே சமாதியிலிருந்து அக்பரே தப்பிக்க வைக்கறதா காட்டறாங்க.

சந்தர்: ஓகோ! அனார்கலி கதைன்னா டிராஜிடியாகத்தான் இருக்கணும் என்கிற அபிப்பிராயத்தை மாற்றிப் புதுமையைப் புகுத்தியிருக்காங்களா?

சேகர்: ஆமாம், அதோடு இன்னும் பல புதுமைகள், அதிசயங் கள் இருக்கு. இந்தப் படத்தில் வர யுத்தக் காட்சியைப் போல இது வரை எந்த இந்தியப் படத்திலே யும் நான் பார்த்ததில்லே. அதே மாதிரி கண்ணாடி மாளிகை செட் ஒண்ணு போட்டிருக்காங்க. கண்கொள்ளா சீன்தான் அது!

சந்தர்: கலர் படமா?

சேகர்: முழுப் படமும் கலர் இல்லே. சில காட்சிகளைத்தான் கலரிலே எடுத்திருக்காங்க. அதுவும் ஷீஷ் மகால்லே நடக்கிற நடனத்தை, மாளிகையில் பதித்திருக்கிற அத்தனை கண்ணாடிகளிலும் பார்க்கிற போது, ‘ஆகா’ என்று நம்மை அறியாமலே சொல்லிவிடுகிறோம்.

சந்தர்: நடிப்பெல்லாம் எப்படி சேகர்?

சேகர்: பிருத்விராஜ் அக்பரா நடித்திருக்கிறார்; இல்லை, அக்பராகவே ஆகிவிடுகிறார். அவர் அதிகமாகப் பேசவில்லை. அவர் கண்கள்தான் பேசுகின்றன. அந்த நடையும், பார்வையும், பேச்சும்… அற்புதம் சந்தர்! அனார்கலியாக மதுபாலா வருகிறார். காதல் காட்சிகளில் மிக அழகாக விளங்குகிறார். நடிப்பும் நன்றாகத்தான் இருந்தது. சலீமாக திலீப் குமார் தோன்றுகிறார். இந்தப் படத்தில் அவருக்கு அதிக வேலையே இல்லை. கொடுத்த பாகத்தை நன்றாகவே செய்திருக்கிறார்.

சந்தர்: ஹிந்துஸ்தானி சாஸ்திரீய சங்கீதமோ?

சேகர்: இதென்ன கேள்வி? நௌஷத் சங்கீதமாயிற்றே! எல்லாம் ரியலிஸ்டிக்கா இருக்க வேண்டும் என்பதற்காக ஆஸிப் ரொம்பப் பாடுபட்டிருக்கிறார். கடைசியிலே அனார்கலியைத் தப்ப வைப்பதற்காக எடுக்கப்பட்ட காட்சி சரியாக இல்லை. ஆனால் பல லட்சம் செலவழித்து, பல வருஷம் சிரமப்பட்டு எடுக்கப்பட்டிருக்கிற இந்தப் படத்திலே இது போன்ற சிறிய குறைகளைச் சொல்லத் தோன்றவில்லை.

சந்தர்: அப்போ, பார்க்கவேண்டிய படம்தான் என்று சொல்லு!

சேகர்: அதில் என்ன சந்தேகம், பிரம்மாண்டமான இந்தப் படத்தைத் தயாரித்த ஆஸிப், இந்தியத் திரைப்பட உலகிற்கே ஒரு மாபெரும் சேவை செய்திருக்கிறார். ஒவ்வொரு இந்தியனும் கட்டாயம் பார்த்துப் பெருமைப்பட வேண்டிய படம் இது.

சிறந்த இந்திய படங்கள் என்று யாராவது லிஸ்ட் போடும்போது அதில் சாதாரணமாக மொகலே ஆஜம் இடம் பெறுவதைப் பார்க்கலாம். பிரிட்டிஷ் ஃபில்ம் இன்ஸ்டிட்யூட் தேர்வு, T20 of Indian Cinema தேர்வு இரண்டிலும் இது சேர்க்கப்பட்டிருக்கிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்

தொடர்புடைய பதிவுகள்:

இந்திய சினிமா T20 – 20 சிறந்த இந்தியப் படங்கள்
பிரிட்டிஷ் ஃபில்ம் இன்ஸ்டிட்யூட் தேர்வுகள் – சிறந்த இந்திய சினிமா

விமர்சனம் என்றால் இப்படி!


எனக்கு எப்போதுமே சுருக்கமாக விமர்சனம் எழுத வரவில்லை என்று ஒரு எண்ணம் உண்டு. படத்தின் பங்களிப்பாளர்கள், கதை, அப்புறம் என் எண்ணங்கள், பாட்டுகள், grade போடுவது என்று எனக்கு ஒரு ஃபார்முலா காலப்போக்கில் உருவாக்கி இருக்கிறது. பதிவு எல்லாம் scroll செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல் ஒரு ஸ்க்ரீன் அளவுக்குத்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். என் ஃபார்முலாவை இந்த லட்சிய நீளத்துக்கு கொண்டு வருவது கொஞ்சம் கஷ்டம்தான். என் போன்றவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க இன்றைக்கு இரண்டு விமரிசனங்கள் – குமுதம் பத்திரிகையில் படங்கள் ரிலீசானபோது வந்தவை என்று கேள்வி. வார்த்தைகள் சரியாக இருக்கின்றனவோ என்னவோ, ஏறக்குறைய இப்படித்தான் எழுதி இருந்தார்களாம்.

முதல் விமர்சனம் எம்ஜிஆர் நடித்த மாடப்புறா படத்துக்கு – நொந்து போயிருக்கிறோம். ஒன்றும் கேட்காதீர்கள்!

இரண்டாவது எஸ் எஸ் ஆர் நடித்த அவன் பித்தனா? படத்துக்கு – ஆம். யார் பித்தன், படம் பார்த்தவரா இல்லை எடுத்தவரா என்று தெரியவில்லை.

இரண்டு படத்தையும் நான் பார்த்ததில்லை. இந்த விமர்சனங்களுக்காகவே பார்க்க வேண்டும் போலிருக்கிறது. அவர்கள் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம்!

உப்பிலி ஸ்ரீனிவாஸ் இன்னும் சில சுருக்கமான விமர்சனங்களை குறிப்பிடுகிறார்.

 • பாய்ஸ் படத்துக்கு ஆனந்த விகடனில்: ச்சீய்!
 • சாவியில் சுப்பிரமணிய ராஜு எழுதிய ஒரு விமர்சனம்: படத்தில் ஒரு பெண் வருகிறாள். அவள் கல்லூரி மாணவியாம். படத்தில் ஒரு நடுவயதுக்காரன் வருகிறான். அவன் மாணவனாம். இருவரும் சந்திக்கிறார்கள். காதலிக்கிறார்கள். பாட்டுப் பாடுகிறார்கள். இடைவேளை. அப்புறம்? எவன் பார்த்தான்? (என்ன படம் தெரியவில்லையே?)
 • குமுதத்தில் அரசு பதில் பகுதியில்:
  கேள்வி: சோமனதுடி பார்த்தீர்களா?
  பதில்: இல்லை. ஆனால் சோமனதுடி பார்த்து துடிதுடி என்று துடித்தவர்களைப் பார்த்தேன்.

  (எஸ்.ஏ.பி.க்கு உண்மையில் சோமனதுடி படம் பிடித்திருந்தது என்றும் ஆனால் அது சராசரி குமுதம் வாசகனுக்கு பிடிக்காது என்பதால் இப்படி கிண்டல் அடித்தார் என்றும் படித்திருக்கிறேன்.)
 • நடிகர் ஜீவா நடித்த கச்சேரி ஆரம்பம் திரைப்படத்துக்கு கல்கி விமர்சனம் – கமர்ஷியல் கேசரி!
 • லிங்குசாமி இயக்கிய பையா படத்துக்கு விகடனின் விமர்சனம் – காதல் கொண்ட பெண் அருகில் இருக்க, மிக நீண்ட பயணம்விகடன் முழு பக்க விமர்சனம் எழுதி இருக்கிறது, நான்தான் தவறாக புரிந்துகொண்டுவிட்டேன்.
 • டோண்டு இன்னும் சில ரத்தினச் சுருக்கமான விமர்சனங்களை இங்கே கொடுத்திருக்கிறார்.

  கொசுறு: உப்பிலி ஸ்ரீனிவாஸ் சரவண கார்த்திகேயன் எழுதிய யாவரும் நலம் விமர்சனத்தை ஒரு சுஜாதா பதிவுக்குள் இழுத்து போட்டிருக்கிறார். படித்துப் பாருங்கள்!

  தொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்

  தொடர்புடைய பதிவுகள்:
  டோண்டுவின் பதிவு – இன்னும் சில ரத்தினச் சுருக்கமான விமர்சனங்கள்
  உப்பிலி ஸ்ரீனிவாசின் உண்மைக்கு மிக அருகில் பதிவு