கே.பாலசந்தர்1966-இல் அளித்த பேட்டி


கே.பாலசந்தர்

கே.பாலசந்தர்

விகடனில் ஜூன் 66-இல் வெளியான கட்டுரை. நன்றி, விகடன்!

புதுமை + புரட்சி = கே.பாலசந்தர்

ராகினி ரிக்ரியேஷன்ஸாரின் ‘எதிர் நீச்சல்’ நாடகத்தைப் பார்த்துவிட்டு வருகிறவர்கள் சும்மா இருப்பதில்லை; தங்களுடைய உறவினர்களையும் நண்பர்களையும் அந்த நாடகத்தைப் போய்ப் பார்க்கும்படி சொல்கிறார்கள். இரண்டு மாதங்களுக்கு முன் அரங்கேற்றப்பட்டு, அத்தனை சபாக்களிலும் நடைபெற்று வரும் இந்த நாடகம், சென்னையையே ஒரு கலக்குக் கலக்கிக்கொண்டு இருக்கிறது.

”இந்த நாடகத்தில் நடிக்கும் அத்தனை பேரும் உயிர்த் துடிப்புடன் பேசி நடித்திருக்கிறார்கள். ஆகா..! அந்த நாயரையும், பொருள் செறிந்த அவருடைய மலையாளப் பேச்சையும் மறக்கவே முடியாது” என்று கூறுகிறார்கள். உண்மைதான். ராகினி ரிக்ரியேஷன்ஸ் குழுவினர், நடிப்பில் எப்போது சோடை போனார்கள்?

”நாடகத்தில் கையாளப்பட்டிருக்கும் உத்தி புதுமையிலும் புதுமை! ஒரே செட்டில், ஒரே வீட்டில் நாடகம் முழுவதையுமே நடத்திக் காட்டி விடுகிறார்கள். இது வரையில் ஒருவரும் இம்மாதிரி செய்ததில்லை” என்று எதிர்நீச்சலின் வெற்றிக்கு இப்படியும் ஒரு காரணம் கூறப்படுகிறது.

ஆனால், இவற்றுக்கெல்லாம் மேலாக, மாதுவையும், நாயரையும், சபாபதியையும், கிட்டு மாமாவையும், பட்டு மாமியையும், பேப்பர் பைத்தியத்தையும் மேடையில் உலவ விட்ட நாடகாசிரியரை மறந்துவிட முடியுமா? நடுத்தர வகுப்பைச் சேர்ந்த ஒவ்வொரு குணச்சித்திரத்தையும் அப்பழுக்கின்றிப் படைத்து, அன்றாட வாழ்க்கை என்னும் இலக்கியத்திலிருந்து வார்த்தைகளை எடுத்து வசனங்கள் அமைத்து, வேடிக்கைப் பேச்சுக்களின் மூலம் பல உண்மைகளையும் நீதிகளையும் மனத்தில் பதிய வைத்து நாடகத்தை உருவாக்கித் தந்துள்ள கே.பாலசந்தரின் பேனாவின் சக்திக்கும், டைரக்ஷன் திறமைக்கும் ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகிறது எதிர்நீச்சல்.

தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த நன்னிலத்தில் பிறந்த பாலசந்தருக்கு நாடகம் எழுதுவது மாணவராயிருந்த நாட்களிலேயே ஏற்பட்ட ஒரு பழக்கம். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படிக்கும்போதே அநேக நாடகங்களை மேடை ஏற்றியிருக்கிறார் இவர். பின்னர், சென்னை அக்கவுன்டன்ட் ஜெனரல் ஆபீசில் உத்தியோகத்தில் சேர்ந்தபோது, அங்கும் வருடத்திற்கு ஒரு முறை ஒரு புது நாடகத்தைத் தயாரித்துப் பல பரிசுகளைத் தட்டிக்கொண்டு போயிருக்கிறார். அவருக்குப் புகழைத் தேடித் தந்த ‘மேஜர் சந்திரகாந்த்’ முதன்முதலில் ஏ.ஜி.எஸ். ஆபீசில்தான் அரங்கேறியது.

நேஷனல் ஆர்ட்டிஸ்ட் குழுவில் நாடகாசிரியராகவும் நடிகராகவும் சிறிது காலம் இருந்திருக்கிறார். அங்கிருக்கும்போதுதான் ‘சதுரங்க’த்தையும் ‘கௌரி கல்யாணத்’தையும் தயார் செய்தார்.

ராகினி ரிக்ரியேஷன்ஸில் பங்குபெற்ற பிறகு, பல சிறு நாடகங்களை எழுதி, அவற்றில் நடித்தும் இருக்கிறார் பாலசந்தர். மேஜர் சந்திரகாந்த்துக்குப் பிறகு சர்வர் சுந்தரம், மெழுகுவத்தி, நீர்க்குமிழி, நாணல் போன்ற நாடகங்களை வெற்றிகரமாக நடத்தி நல்ல பெயர் வாங்கியிருக்கிறார். ஒவ்வொரு நாடகத்திலும் ஒரு புதுமையைப் புகுத்தி, முன்னேற்றம் கண்டிருக்கிறார்.

நாடகத்தில் ‘கதை, வசனம், டைரக்ஷன்’ என்ற முத்தொழிலையும் புரிந்துகொண்டிருக்கும் இவர், சினிமாத் துறையிலும் அடியெடுத்து வைக்கக் காரணமாயிருந்தவர் எம்.ஜி.ஆர்.

”எம்.ஜி.ஆரின் பெரும் முயற்சியின் காரணமாகத்தான் ‘தெய்வத்தாய்’ படத்திற்கு வசனம் எழுதினேன்” என்று நன்றி உணர்ச்சியுடன் கூறினார் பாலசந்தர். சர்வர் சுந்தரம், நீர்க்குமிழி, நாணல் மூன்று நாடகங்களும் படங்களாக வெளிவந்துவிட்டன. ‘மேஜர் சந்திரகாந்த்’ இந்தியில் ‘ஊஞ்ச்சே லோக்’ என்ற பெயரில் வெளிவந்து பரிசையும் பெற்றிருக்கிறது. அதில் அசோக் குமார் நடித்துள்ளார். ”இப்போது அதையே தமிழில் ஏவி.எம். எடுக்கிறார்கள். முக்கிய பாத்திரத்தில் மேஜர் சுந்தரராஜனே நடிப்பார். தேவையான சிறு மாறுதல்களுடன் அதை நானே டைரக்ட் செய்யப் போகிறேன்” என்று அடக்கத்துடன் தெரிவித்துக் கொண்டார் பாலசந்தர்.

இந்தப் படத்தைத் தவிர, தற்போது மனோகர் பிக்சர்சுக்காக தாம் எழுதிய ‘பாமா விஜயம்’ என்ற சமூகச் சித்திரத்தை டைரக்ட் செய்துகொண்டிருக்கிறார் பாலசந்தர். புராணத் தலைப்புடன் சமூகக் கதையன்று எழுதுவதே ஒரு புதுமை தானே!

”நீங்கள் எதிர்நீச்சலையும் சினிமா எடுக்கப் போவதாகக் கேள்விப்பட்டேனே! இந்த நாடகத்தைப் படமாக எடுக்க முடியுமா?” என்று கேட்டேன் நான்.

”ஏன் முடியாது? சர்வர் சுந்தரத்தை எடுக்க நினைத்தபோதும் பலர் இப்படித்தான் சந்தேகப்பட்டார்கள். ‘நாடகத்திற்குத் தகுந்த சப்ஜெக்ட் இது. சினிமா எடுத்தால் படுதோல்வி அடையும்’ என்றும் சிலர் சொன்னார்கள். ஆனால், அது வெளியானதும் அதற்கு பிரமாதமான வரவேற்பு இருந்தது. எந்த சப்ஜெக்டையும் எடுக்கிறபடி எடுத்தால் ரசிகர்களின் ஆதரவு நிச்சயம் இருக்கும்” என்று நம்பிக்கையுடன் கூறினார் பாலசந்தர்.

சினிமாத் துறையில் நுழைந்து புதுமைகளைப் புகுத்தி, புரட்சி செய்து, புகழேணியில் ஏறிய இளைஞர்களின் பட்டியலில் சேருவதற்கு பாலசந்தரும் துடித்துக்கொண்டுஇருக்கிறார். ‘அந்த நாள்’ பாலச்சந்தர், ‘கல்யாணப் பரிசு’ ஸ்ரீதர், ‘சாரதா’ கோபாலகிருஷ்ணன்… இவர்களின் வரிசையில் ‘எதிர் நீச்சல்’ பாலசந்தரும் சீக்கிரத்திலேயே சேர்ந்துவிட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

பாலசந்தரை நேரில் சந்தித்துப் பேசும்போது, அவர் உள்ளத்தில் துள்ளும் ஆர்வத்தை ஒருவராலும் எளிதில் கண்டுபிடித்துவிட முடியாது. வார்த்தைகளை அளந்துதான் பேசுகிறார். ‘இதை செய்யப் போகிறேன், அதைச் செய்யப் போகிறேன்’ என்று தமது வருங்கால திட்டங்களை அவர் அடுக்கிக் கொண்டு போவதில்லை. தமது கடந்த கால சாதனைகளைப் பற்றிய முதல் அத்தியாயத்தையும் மிகவும் சுருக்கிக் கொள்கிறார்.

”நாடகங்களில் மாறுதல்களைச் செய்திருக்கும் உங்களுக்கு சினிமாவிலும் புது மாதிரி ஏதாவது செய்யலாம் என்ற நம்பிக்கை இருக்கிறதா?” என்று கேட்டேன்.

”நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, நிறைய ஆசையிருக்கிறது. இப்போதுதானே சினிமா உலகில் நுழைந்திருக்கிறேன். என் நிலையை ஸ்திரப்படுத்திக் கொண்ட பிறகுதான் புதிய முயற்சிகளைப் பற்றித் தைரியமாகக் கூற முடியும்” என்று பதில் அளித்தார் பாலசந்தர்.

நாடக மேடையும், சினிமாத் துறையும் எழுத்தாளர்களை ஒருபோதும் புறக்கணிக்கமுடியாது என்று அபிப்பிராயப்படும் அவர், ”நல்ல படத்திற்குப் பரிசு கொடுக்கும்போது அதன் கதாசிரியருக்கும் தகுந்த சன்மானம் கொடுத்து மரியாதை செய்ய வேண்டும். இந்த வருஷம் மலையாள செம்மீனின் ஆசிரியருக்குப் பரிசு கொடுக்காதது அதிசயத்திலும் அதிசயம்” என்றார்.

பாலசந்தர் விந்தையான மனிதர்! விஞ்ஞானத்தில் பி.எஸ்ஸி பட்டம் பெற்றுவிட்டு, வாழ்க்கையில் ‘கணக்கர்’ உத்தியோகம் பார்க்க ஆரம்பித்தார். அதைப் போலவே கல்லூரியில் சமஸ்கிருதமும் பிரெஞ்ச் மொழியும் படித்து விட்டுத் தமிழில் நாடகங்கள் எழுதுகிறார். ஃபைல்களுடன் பொழுதெல்லாம் கழித்தாலும், வெளி உலகையும், அதில் நடமாடும் பலதரப்பட்ட விசித்திர கேரக்டர்களையும் அலசி வைத்திருக்கிறார்.

தற்போது பாலசந்தர் உத்தியோகத்தில் ஒரு காலும், கலை உலகில் ஒரு காலுமாக தர்மசங்கட நிலையில் இருக்கிறார்.

”கலையுலகில் கொஞ்சம் பணமும் புகழும் வந்துவிட்டால் உத்தியோகத்தை உதறிவிடுகிறார்களே! நீங்கள் அப்படியன்றும் செய்யாமல் இருப்பதற்கு உங்களைப் பாராட்டத்தான் வேண்டும்” என்று நான் கூறினேன்.

”எப்படி விடுவது? அரசனை நம்பிப் புருஷனைக் கைவிட்ட கதையாகிவிட்டால்?” என்று கேட்டுவிட்டு அவர் தமக்குள் சிரித்துக் கொண்டார்.

‘பாலசந்தர் பலே கெட்டிக்காரர். சினிமா உலகின் பளபளப்பையும் மினுமினுப்பையும் சரியானபடி எடை போட்டு வைத்திருக்கிறார்’ என்று நான் வியந்து கொண்டேன். ஆனால், அவருடைய மனப் போராட்டத்திற்கு சீக்கிரமே முடிவு ஏற்பட்டுத்தான் ஆகவேண்டும். அவர் நான்கு ஆண்டுகளுக்கு மேலாக ஆபீசில் சம்பளமில்லாமல் லீவு எடுத்துக் கொண்டிருக்கிறார்! வருகிற ஆகஸ்ட் மாதத்துடன் லீவு முடிவடைகிறது. அதற்குப் பிறகு சூப்பரின்டென்டெண்ட் நாற்காலியில் போய் உட்காரப் போகிறாரா, அல்லது ஸ்டுடியோவில் டைரக்டர் நாற்காலியில் உட்காரப் போகிறாரா என்பது தெரிந்துவிடும். அல்லது, இரண்டு நாற்காலிகளிலும் மாறி மாறி உட்காருவாரோ, என்னவோ! பாலசந்தர் இதிலும் புதுமையைப் புகுத்திப் புரட்சி செய்தாலும் செய்வார். யார் கண்டது?

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

தொடர்புடைய பதிவுகள்:

பாலச்சந்தர் படங்கள்:
அபூர்வ ராகங்கள் (Aboorva Ragangal), விகடன் விமர்சனம்
மேஜர் சந்திரகாந்த் (Major Chandrakanth)
நவக்ரகம் (Navagraham)
புன்னகை (Punnagai)
பூஜைக்கு வந்த மலர் (Poojaikku Vantha Malar)
சொல்லத்தான் நினைக்கிறேன்(Sollatthan Ninaikkiren), சொல்லத்தான் நினைக்கிறேன் விகடன் விமர்சனம்

Advertisements

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

4 Responses to கே.பாலசந்தர்1966-இல் அளித்த பேட்டி

  1. சாரதா சொல்லுகின்றார்:

    இந்தப்பதிவைப்படிக்கும்போது, காலச்சக்கரம் அப்படியே பின்னோக்கிச்சுழன்று அந்தக்காலத்துக்குப் போய்விட்டு, மறுபடியும் அங்கிருந்து மறுபயணம் வரக்கூடாதா என்று மனம் ஏங்குகிறது. ஒருவேளை அப்படிச்சுழன்றால், அப்போதிருந்தவர்கள் எல்லாம் மீண்டும் வந்துவிடுவார்கள்தானே?. (பைத்தியக்காரத் தனமான ஏக்கம்தான். ஆனால் மனக்குதிரைக்கு கடிவாளம் ஏது?).

  2. RV சொல்லுகின்றார்:

    சாரதா, அந்த காலத்தில் சபாக்களில் பாலச்சந்தர் ஒரு கலக்கு கலக்கி இருப்பார் என்று நினைக்கிறேன். நீங்கள் அவரது மேடை நாடகங்கள் எதையாவது பார்த்திருக்கிறீர்களா?

    • சாரதா சொல்லுகின்றார்:

      இல்லை. எனக்கு விவரம் தெரிந்த காலத்தில் அவர் நாடக மேடையை விட்டு முழுமையாக விலகி திரைப்படங்களின் பக்கம் வந்து விட்டார். அவர் நடத்தி வந்த நாடகங்களனைத்தும் அப்போது திரைப்படங்களாகி விட்டன. எனவே அவற்றை திரையில் மட்டுமே பார்க்க முடிந்தது. அவருடைய நாடகமேடை அனுபவங்கள் பற்றி பத்திரிகைகள் வாயிலாகவும், அவருடைய மற்றும் அவருடன் பணியாற்றியவர்களுடைய பேட்டிகள் மூலமாகவும் அறிந்தவைதான்.

      • RV சொல்லுகின்றார்:

        அந்த நாடகங்கள் ரசிக்கத் தக்கவையாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. சினிமாவான நாடகங்களில் இது நாடகத்திலிருந்து வந்தது என்று தெரியும். அது சில சமயங்களில் குறையாகவும் தெரியும். நாடகமாக பார்க்கும்போது அந்த குறையும் இருக்காது அல்லவா?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: