பட்டணத்தில் பூதம் சாரதா விமர்சனம்

சாரதாவின் ஃபோரம்ஹப்-இல் எழுதும் ஜெய்ஷங்கர் திரி சுவாரசியமான ஒன்று. இன்று அதிலிருந்து ஒரு விமர்சனம். மிக அருமையாக இருக்கிறது.

பட்டணத்தில் பூதம் வைத்தே இரண்டு மூன்று பதிவு ஓட்டிவிடலாம் என்று இருக்கிறேன். நானும் ஒன்று எழுதுவேன்!

மக்கள் கலைஞரின் முதல் வண்ணப்படம்

1964-ல் அறிமுகமான மக்கள் கலைஞர் ஜெய்சங்கருக்கு 1967 வரை சுமார் இருபத்தைந்து கருப்பு வெள்ளைப் படங்களில் நடித்த பின்பே முதல் வண்ணப் படம் வெளியானது. முதல் வண்ணப் படமே யாரும் எதிர்பார்க்காத வித்தியாசமான படமாக அமைந்தது. ‘இருபதாம் நூற்றாண்டில் பூதமாவது பிசாசாவது. இப்படியெல்லாம் கூட நடக்குமா என்ன?’ என்ற பகுத்தறிவு மற்றும் லாஜிக் இவற்றையெல்லாம் மறக்கச் செய்து மக்களைப் பார்த்து மகிழ வைத்த சிறந்த பொழுதுபோக்குப் படமாக வந்தது ‘பட்டணத்தில் பூதம்’. காட்சியமைப்புகளில் பல்வேறு புதுமைகளைப் புகுத்தி, எண்டெர்டெய்ன்மெண்ட் டெம்போ கொஞ்சம்கூட குறையாமல் இறுதி வரை கொண்டு சென்றிருந்தனர்.

‘கொஞ்சும் சலங்கை’ என்ற அருமையான டெக்னிகலர் படத்தை இயக்கிய எம்.வி.ராமன் பட்டணத்தில் பூதம் படத்தை இயக்கியிருந்தார். வசனம் எழுதிய ஜாவர் சீதாராமன் படத்தின் மிக முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். ஆம், ‘ஜீ பூம்பா’ என்ற பூதம் அவர்தான். ஜெய்சங்கருக்கு ஜோடியாக கே.ஆர்.விஜயா நடித்திருக்க, நகைச்சுவையில் நாகேஷ் தூள் கிளப்பியிருந்தார். அவரது ஜோடியாக ரமாபிரபா. வில்லன்களாக மனோகர், பாலாஜி மற்றும் நாம் எதிர்பாராத ஒருவர் பிரதான வில்லனாக உருமாறுவார். வி.கே.ராமசாமி வழக்கம் போல நகைச்சுவை கலந்த அப்பா ரோலில்.

பாஸ்கருக்கும் (ஜெய்) லதாவுக்கும் (கே.ஆர்.வி) ரயில் பயணத்தில் ஏற்படும் சின்ன மோதலோடு படம் துவங்குகிறது. மோதல் சிறிது நேரத்திலேயே ராசியாகி ஒருவருக்கொருவர் நல்ல அறிமுகமாக, ஜெய் கல்லூரியில் ஒரு பாஸ்கட்பால் பிளேயர் என்றும், விஜயா கல்லூரியின் நல்ல பாடகி என்றும் தெரிந்து கொள்கின்றனர். லதாவின் அப்பா தங்கவேலு முதலியார் (வி.கே.ஆர்), சிங்கப்பூரில் ஒரு கலை நய மிக்க புராதன ஜாடி ஒன்றை ஏலத்தில் எடுத்து வருகிறார். அது ராசியில்லாத ஜாடி என்று சிங்கையிலேயே பலர் சொல்லியும் கேளாமல் அவர் எடுத்து வந்து தன் அலுவலகத்தில் வைக்க, அது வந்த கொஞ்ச நேரத்திலேயே அவருக்கு தொழிலில் பெரிய நஷ்டம் என்று தகவல் வருகிறது. சரி அதை வீட்டுக்காவது எடுத்துப்போகலாம் என்று முடிவு செய்யும் போதே வீட்டில் ஏதோ அசம்பாவிதம் நடந்துவிட்டதாக போனில் தகவல் வர, அதிர்ச்சியடைகிறார். அவரது பார்ட்னர் சபாபதியுடன் (வி.எஸ் ராகவன்) , அந்த ஜாடியை எப்படி வெளியேற்றுவது என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே, கல்லூரி கவிதைப் போட்டிக்கு டொனேஷன் கேட்டு வரும் பிரமுகர்களிடம் கவிதைப்போட்டியில் முதலில் வருபவருக்கான பரிசாக தன்னுடைய ஜாடியை வழங்க விரும்புவதாகக் கூறி அவர்கள் தலையில் ஜாடியைக் கட்டிவிடுகிறார். கவிதைப்போட்டியில் தாய்மையைப் பற்றிப் பாடி பாஸ்கர் அந்த ஜாடியை பரிசாகப் பெறுகிறார்.

இதற்குள் பாஸ்கருக்கும் லதாவுக்கும் காதல் ஏற்பட, தன் காதலியின் தந்தை தங்கவேலு முதலியாரின் பிறந்த நாள் விழாவில் அவருக்கு பரிசளிக்க வேறு எதுவும் இல்லாததால், தனக்குப் பரிசாகக் கிடைத்த ஜாடியையே அவருக்குக் கொடுத்து விட முடிவு செய்து (அது முதலியாரிடமிருந்து வந்த ஜாடிதான் என்று தெரியாமல்) பாஸ்கரும், நண்பன் சீஸர் சீனுவும் (நாகேஷ்) எடுத்துப்போக, அதைப் பார்த்த முதலியார் அதிர்ச்சியடைந்து, அதை ஏற்க மறுத்து அவர்களை ஜாடியுடன் விரட்டி விடுகிறார். கோபமடைந்த பாஸ்கரும் சீனுவும் அந்த ஜாடிக்குள் அப்படி என்னதான் இருக்கிறதென்று திறந்து பார்க்க, உள்ளிருந்து ‘ஜீ பூம்பா’ என்று உச்சரித்துக் கொண்டே ஒரு பூதம் வெளிப்படுகிறது. அந்த பூதத்தை இருவரும் விரட்டத்துணிய, அதுவோ, ‘மூவாயிரம் ஆண்டுகள் ஜாடிக்குள் அடைந்து கிடந்த தன்னை விடுவித்த எஜமானர்கள் அவர்கள்’ என்று சொல்லி, அவர்களுக்கு உறுதுணையாக இருந்து அவர்களுக்கு வேண்டியதையெல்லாம் நிறைவேற்றுவதாகச் சொல்லி நிறைவேற்றத் துவங்குகிறது.

அதிலிருந்து படம் முழுக்க பூதத்தின் சித்து வேலைகள்தான், போரடிக்காமல் எடுக்கப்பட்டிருக்கிறது. (படத்தில் அது செய்யும் வித்தைகளையெல்லாம் பார்க்கும்போது, ‘அடடா நமக்கும் இப்படி ஒரு பூதம் கிடைத்தால் எப்படியிருக்கும்?’ என்ற நப்பாசை ஏற்படுகிறது)

பூதத்தின் சித்துவேலைகளில், நம் பகுத்தறிவு சிந்தனைகளையும் மீறி ரசிக்க வைக்கும் இடங்கள்…

திருப்பதி லட்டு பிரசாதம் கேட்டதும் வரவழைப்பது.

பாஸ்கருக்கும், சீனிக்கும் ஒரு பெட்டி நிறைய தங்கக்கட்டிகளைக் கொடுப்பது. பின்னர் போலீஸில் அவர்கள் மாட்டிக் கொண்டதும் அதையே சாக்லேட்டுகளாக மாற்றுவது.

செய்தித் தாள் விளம்பரங்களில் ‘திருவிளையாடல்’, ‘எங்கவீட்டுப்பிள்ளை’ படங்களை ஓடச் செய்வது.

நாகேஷின் உடம்புக்குள் புகுந்து கொண்டு, அவரை மனோகருடன் சண்டையிடச் செய்து, மனோகரையும் ரமாபிரபாவையும் அதிர்ச்சியில் ஆழ்த்துவது.

பாஸ்கட்பால் போட்டியில், சீனுவின் கோரிக்கையைத் தவறாகப் புரிந்துகொண்டு, முதலில் எதிர் அணியில் பந்துகளை விழச் செய்வது, பின்னர் கடைசி நிமிடத்தில் சுதாரித்து பாஸ்கர் அணியை மயிரிழையில் வெற்றி பெற வைப்பது.

பாலாஜி ஓட்டிவரும் ஹெலிகாப்டரை வாயால் ஊதி ஊதி நிலை குலையச் செய்வது.

இப்படி நிறைய விஷயங்களை குழந்தை மனதோடு ரசித்து மகிழலாம். தந்திரக் காட்சிகளை ரவிகாந்த் நிகாய்ச் என்பவர் அமைத்திருந்தார்.

கவியரசர் கண்ணதாசன் பாடல்களுக்கு ஆர்.கோவர்த்தனம் இசையமைத்திருந்தார். அத்தனையும் தேன் சொட்டும் அற்புதமான பாடல்கள். அப்பாவின் பிறந்தநாளில் கே.ஆர்.விஜயா பாடும் “அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி” பாடலின் (கண்ணதாசன் – காமராஜர்) பின்னணி பற்றி ஏற்கெனவே நிறையப் பேருக்கு தெரியும். அதிலும் “மலையின் சந்தனம் மார்பினில் சொந்தம்” வரிகளின் போது டி.எம்.எஸ். குரல் அச்சு அசலாக ஜெய்சங்கர்தான்.

கல்லூரி பாட்டுப் போட்டியில் நாகேஷ், கே.ஆர்.விஜயா, ஜெய்சங்கர் தனித் தனியாகப் பாடும் “உலகத்தில் சிறந்தது எது, ஓர் உருவமில்லாதது எது” பாடல் டி.எம்.எஸ்., சுசீலா, ஏ.எல்.ராகவன் மூவரும் பாடியது. இப்பாடலில் குறிப்பாக நாகேஷின் டான்ஸ் மூவ்மெண்ட்டுகளுக்கு தனியாக கைதட்டல் விழுந்தது.

கே.ஆர்.விஜயா முதலும் கடைசியுமாக நீச்சல் உடையில் நடித்த பாடல்,
“கண்ணே கண்டதெல்லாம் காட்சியா
உன் கண்ணே உண்மை சொல்லும் சாட்சியா”
ஜெய்சங்கர், விஜயா பங்குபெறும் இப்பாடல் நீச்சல் குளத்தில் இரவு நேரத்தில் படமாக்கப்பட்டிருந்தது. விஜயா நீச்சல் உடையில் நடித்தது ‘அப்போது’ பரபரப்பாகப் பேசப்பட்டது.

கோவர்த்தனம், தன் இசைத்திறமையனைத்தையும் பயன்படுத்தியிருந்தது
“நான் யார் யார் யாரென்று சொல்லவில்லை
நீ யார் யார் யாரென்று கேட்கவில்லை”
பாடலில்தான். வரிக்கு வரி வித்தியாசமாக கர்நாடக இசை, வடநாட்டு இந்துஸ்தானி இசை, எகிப்திய அரேபிய இசை என்று பிரமாதப்படுத்தியிருப்பார். ஒவ்வொரு வரிக்கான இடையிசையிலும் புகுந்து விளையாடியிருப்பார்.

தமிழ்ப்படங்களிலேயே முதன்முதலாக ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டது ‘பட்டணத்தில் பூதம்’ படத்தில்தான். (இதையடுத்து இரண்டாவதாக ‘சிவந்த மண்’ படத்தில் இடம்பெற்றது. இப்போது சாதாரணமாக படங்களில் பயன்படுத்தப்படுகிறது). இப்படத்தின் ஒளிப்பதிவாளர் சமீபத்தில் தொலைக்காட்சிப் பேட்டியில், இக்காட்சியில் எப்படி கேமரா பயன்படுத்தப்பட்டது என்பதை விளக்கினார். ‘ஹெலிகாப்டரில் ஒரு கேமரா வைத்து, கீழே ‘போட்’டைப் படம் பிடிக்க வேண்டும். படகில் ஒரு கேமராவைப் பொருத்தி ஹெலிகாப்டரைப் படம் பிடிக்க வேண்டும். இரண்டும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும். பின்னர் அவையிரண்டையும் எடிட்டிங் மேஜையில் போட்டு மாற்றி மாற்றி எடிட் செய்ய வேண்டும்’ என்று விளக்கினார். (படங்களைப் பார்த்துவிட்டு நாம் ரொம்ப லேசா கமெண்ட் அடிச்சிட்டு போயிடுறோம். ஆனால் அந்தந்த தொழில் நுட்ப கலைஞர்கள் அதை விளக்கும் போதுதான் இமாலய பிரமிப்பு ஏற்படுகிறது).

படம் முழுதும் பூதத்தின் உதவியிலேயே போய்க் கொண்டிருந்தால், கதாநாயகனுக்கு முக்கியத்துவம் இல்லாமல் போய்விடும் என்று கருதி, இறுதிக் காட்சிகளில் ஜெய்யும், விஜயாவும் ‘ஜீ பூம்பா’ வை விரட்டி விடுவதாகக் காட்டியிருப்பார்கள். அதனால் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் வழக்கம் போல சூடு பறக்கும். ஜெய், ஹெலிகாப்டரிலிருந்து தவறி விழும் நேரம் விஜயா மீண்டும் பூதத்தை அழைக்க, அப்போதுதான் மீண்டும் ‘ஜீ பூம்பா’ வருவதாகக் காட்டி முடித்திருப்பார்கள்.

பதினெட்டு ரீல் படமாதலால், மூன்று மணி நேரம் மன உளைச்சல்களில் இருந்து விடுபட்டு ஜாலியாக பொழுதுபோக்கும் படமாக அமைந்ததால் ஏ.பி.சி. என்று எல்லா சென்ட்டர்களிலும் அபார வெற்றி பெற்ற படமாக அமைந்தது ‘பட்டணத்தில் பூதம்’.

(சில படங்களுக்கு, படம் வெளியாகும் நேரத்தில் பாட்டுப் புத்தகங்கள் சற்று வித்தியாசமாக வெளியிடுவார்கள். அது போல் இப்படத்தின் பாட்டுப் புத்தகம் ‘ஜாடி’ வடிவத்தில் வெளியிடப்பட்டிருந்தது).

தொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்

தொடர்புடைய பதிவுகள்:
ஃபோரம்ஹப்-இல் ஜெய்ஷங்கர் திரி

Advertisements

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

10 Responses to பட்டணத்தில் பூதம் சாரதா விமர்சனம்

  1. நல்லதந்தி சொல்லுகின்றார்:

    மிக்க நன்றி RV!. சாரதாம்மாவின் ஜெய்சங்கர் த்ரி (இதுக்கு அர்த்தம் என்ன?) தொடுப்பு கொடுத்ததற்கு!. கொஞ்ச நாளைக்கி முன்பு எந்த சைட் மூலமாகவோ (உங்களுதா?) சாரதாம்மாவின் ஸ்ரீகாந்த் திரிக்கு போனேன். அப்பவே நான் நினைச்சேன் என்னடா ஸ்ரீகாந்த்க்கே (தப்பா நினைக்காதீங்க! ஸ்ரீ, ஜெய் ரெண்டு பேரையும் ஒப்பிட்டு பார்த்தேன்) இப்படி எழுதும் போது நம்ம ஜெய்சங்கரை விட்டுட்டாங்களேன்னு வருத்தப் பட்டேன். நல்லகாலம் அதுலே இந்த நல்ல விஷயத்தையும் எழுதி இருகிறதை நீங்க தொடுப்பு கொடுத்ததால பார்த்தேன்.

    நான் சின்ன வயதில் இரஜினி வருவதற்கு முன்பு ஜெய்யோட விசிறி. எனக்கு இன்னும் சேலத்தில ஓரியண்டல் தியேட்டரில் பொன்வண்டு பார்த்ததும், அத்தையா மாமியா? பார்த்ததும், ஜெயா தியேட்டரில் அக்கரை பச்சை, அப்சராவில் கல்யாணமாம் கல்யாணம் பார்த்ததும் பசுமையா நினைவிருக்கு!.

    ஒருமுறை சங்கம் தியேட்டரில் ஜம்பு ரிலீஸ் ஆன முதல் நாள் படம் பார்க்கப் போனபோது (காலைக் காட்சி) (பெண்கள் பக்கம் தரை டிக்கட்) கவுண்டரில் இருந்த ஆள் எங்களுக்கு டிக்கெட் கொடுக்க மறுத்து விட்டார். எங்கள் கும்பலுக்கு (நான், என் சித்தி பையன், எனது தாய் மாமன் பையன்கள் 2) அது A படம் அதனால் கொடுக்க வில்லை என்ற விபரம் தெரியவில்லை. A படம் என்றாலே என்ன என்கிற விபரம் எங்களுக்குத் தெரியாது. அந்த டிக்கெட் கவுண்டர் நீண்ட திறந்த நடையாலானது என்பதால் நாங்கள் வெளியே சென்று அவருக்குத் கண்ணுக்குத் தெரியும் படியாகக் காத்திருந்தோம். கொஞ்ச நேரத்திற்குப் பிறகு பெண்கள் யாரும் வராததால் அவர் மனமிரங்கியோ, எதற்கு வந்த டிக்கெட்டை இழக்க வேண்டும் என்று நினைத்தோ எங்களைக் கூப்பிட்டு டிக்கெட் கொடுத்து உள்ளே அனுப்பினார். ஆண்கள் பக்கம் உள்ளே போகாததற்குக் காரணம் நாங்கள் எங்கள் அம்மாக்களுடன் பிற சினிமாக்களுக்குப் போகும் போது அந்தப் பக்கமே போனோம் என்பதைத் தவிர ஆண்கள் பக்கம் சரியான கூட்டம். உள்ளே போய் படம் பார்க்கும் போதுதான் A படம் என்றால் என்ன என்று தெரிந்தது! :).

    ஜெய்சங்கருக்கு சேலம் என்றால் ரொம்பப் பிரியம் அங்கே அவருக்கு நிறைய நண்பர்கள் கூட்டம் உண்டு. அவர் 70 களில் சிறு தயாரிப்பாளர்களின் படத்தில் நடித்து வெள்ளிக் கிழமை ஹீரோ என்று புகழ் பெற்ற காலத்தில் அவரது பெரும்பான்மையான படங்கள் சேலத்தில் மாடர்ன் தியேட்டர் ஸ்டூடியோவிலேயே தயாரிக்கப்பட்டன.

    ஒருமுறை குமுதம் வார இதழ் மாறு வேடத்தில் நடிகர்கள் இருக்க இரசிகர்கள் அவர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். கண்டு பிடிப்பவர்களுக்கு பரிசு என்று ஒரு போட்டியை நடத்தியது. வாரவாரம் வெவ்வேறு ஊர்களில் பல நடிகர்கள் மாறு வேடமிட்டு தெருக்களில் அலையும் போது பொதுமக்கள் கண்டு பிடிக்க வேண்டும். ஜெய் வழக்கம் போல சேலத்தையே தேர்வு செய்தார். அதில் அவர் போட்டிருந்தது பிச்சைக் காரன் வேசம்!.

    வண்டிக்காரன் மகன் பெருத்த வெற்றியைப் பெற்றவுடன், பிறகு தொடர்ச்சியாக கலைஞர் கைவண்ணத்தில் ஆடு பாம்பே, மாயாண்டி, காலம் வெல்லும் போன்ற படங்களில் தொடர்ச்சியாக நடித்த போது அவருக்கு தி.மு.க. முத்திரைக் குத்தப் பட்டது. கருணாநிதி ராசி அவரையும் தாக்கியது. அந்தக் குறிப்பிட்ட படங்கள் எதுவும் வெற்றியைப் பெறவில்லை. அந்த நேரத்தில் அவர் நடித்து வெளி வந்த, (மேள தாளங்கள் சுமாரான வெற்றி சாந்தியில் வெளிவந்தது) அத்தனைப் படங்களும் காலி. எனவே பிற்காலத்தில் கலைஞர் கதை வசனம் எழுதி அழித்த நடிகர்களின் சகாப்தத்தை தொடங்கி வைத்த முதல் நடிகர் என்ற பெருமை மக்கள் கலைஞரை சென்றடைந்தது.(இதுவும் அந்த நேரத்தில் வழங்கப் பட்ட பட்டம்தான்).

    ஒரு வருடம் சும்மா இருந்த அவரைக் கண்டு வருந்திய திரையுலகம் ( ஜெய் திரைக்கு வந்த நாள் முதல் அவரை விரும்பாதவர்களே திரைஉலகில் இல்லை, என்கின்ற அளவிற்கு அவ்வளவு நல்ல பெயர் எடுத்திருந்தார். பத்திரிக்கைகள் கூட அவருக்கு படம் இல்லாமல் இருந்த காலத்தில் கூட ஆதரவு தந்தன. சினிமா நடிகர்களை புகழ்ந்து எழுதாத கல்கண்டு கூட அவரைப் பாராட்டியே எழுதியது) முரட்டுக்காளையில் வில்லனாக திரும்பவும் கொண்டு வந்து அவர் திரை வாழ்க்கையைப் பரபரப்பாக்கியது. அவரது இரசிகர்களுக்கு அவர் வில்லனாக நடிப்பது பிடிக்கவில்லை.பத்திரிக்கைகளுக்குக் கூட அவர் ஹீரோவாக நடிக்காமல் வில்லனாக நடிப்பது பிடிக்காவிட்டாலும், ஜெயசங்கருக்கு வில்லன் வேடம் பொருந்தவில்லை இருந்தாலும் அவரது நடிப்புத் திறமையால் அதைச் சாமார்த்தியமாக சரி செய்து ஜெயித்துவிட்டார் என்று எழுதின.

    நான் முரட்டுக்காளை வெளிவந்த நேரம் தீவீர இஜினி இரசிகனாக மாறிவிட்டிருந்தேன்.விடியற்காலை ஐந்து மணிக்கு ஓரியண்டல் தியேட்டரில் எங்கள் கும்பல் படம் பார்க்க நின்றது, இரஜினிக்காக மட்டுமல்ல ஜெய்க்காகவும் தான்.

    (இந்தப் படம் வரும்போது எனக்கு பதிமூன்று வயது இருக்கும். எவ்வளவு சுதந்திரமாக நான் இருக்க வீட்டில் விட்டிருக்கிறார்கள்.அப்போது ஊரும் கொஞ்சம் நன்றாக இருந்தது. இப்போது இந்த மாதிரி பையன்கள் இருக்க முடியுமா?)

    பி.கு. இதை அங்கேயே எழுதலாம் என்று நினைத்தேன். ரிஜிஸ்டர் அது இது என்று வந்ததால் இங்கு பதிவு செய்து விட்டேன்.

    மீண்டும் நன்றி! RV

  2. நல்லதந்தி சொல்லுகின்றார்:

    மீண்டும் நன்றி! RV.

  3. RV சொல்லுகின்றார்:

    நல்லதந்தி,

    உங்கள் அபாரமான மறுமொழி! இதையே ஒரு பதிவாகப் போடப் போகிறேன்.

    நானும் தற்செயலாகத்தான் சாரதாவின் இந்தத் திரிகளை பார்த்தேன். ஸ்ரீகாந்த் திரி பார்த்த பிறகும் ஜெய்ஷங்கர் திரி எங்கே என்று தெரியவில்லை. சாரதா அப்புறம் சொன்னார்…

    நீங்க சேலமா? நான் சேலம் கவர்ன்மென்ட் எஞ்சினியரிங் காலேஜில் (பக்ஸ் கூட) படித்தவன்! ஓரியண்டல், அப்சரா என்று நீங்கள் எழுதுவது பழைய நினைவுகளை கிளறுகிறது. டவுனில் முதல் முறை சினிமா பார்க்கப் போகும்போது வரிசையாக தியேட்டர்களைப் பார்த்து அசந்து போனேன். அப்படி நான் மெட்ராசில் கூட பார்த்ததில்லை. ஒரு ஐம்பது அறுபது தியேட்டர் ஒரு ஒரு மைல் ஏரியாவில்!

    ஜங்க்ஷன் உமா இன்னும் இருக்கிறதா? அங்கேதான் நான் படிக்கும்போது ஜம்பு போடுவார்கள். என் காலேஜ் வாழ்க்கையில் பெரிய regret நண்பர்களோடு ஜம்பு பார்க்காமல் விட்டதுதான்!

    • நல்லதந்தி சொல்லுகின்றார்:

      //ஜங்க்ஷன் உமா இன்னும் இருக்கிறதா?//

      இல்லை RV! உமா, பழனியப்பா தியேட்டர்கள் இடிக்கப்பட்டு விட்டன. ஜங்ஷனில் இருந்த ராம் தியேட்டரும் இடிக்கப்பட்டு விட்டது!. சேலத்தில் இடிக்கப் பட்டு, கல்யாண மண்டபமாகவும், கோடவுனாக மாறியுள்ள தியேட்டர்களைப் பற்றி ஒரு பெரிய பதிவே போடலாம்! 🙂

      ஜெய்சங்கரைப் பற்றி இன்னும் சொல்லலாம். ஜெய் சொந்தமாக எடுத்த! “அன்று சிந்திய இரத்தம்” படமும் வழக்கம் போல சேலத்தில் தான் எடுக்கப் பட்டது. அதில் ஒரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால் எங்கள் பள்ளியின் ட்ரில் மாஸ்டர் கங்கையன் அந்தப் படத்தில் பூசாரியாக நடித்தார். திரையில் தோன்றிய அடுத்த நிமிடமே வில்லன்களுடைய துப்பாக்கி குண்டுக்கு சாவார். அந்த நேரத்தில் அந்தப் படத்தைப் பற்றி எங்கள் பள்ளியில் பரபரப்பாக பேசப்பட்டது. அவரும் சிவாஜி ரேஞ்சிற்க்கு பில்டப் கொடுத்துக் கொண்டு இருந்ததை நினைத்தால், இப்பவும் சிரிப்பாக வரும்.
      அதில் நடித்த ஒரு நடிகை நந்தினியோ என்னவோ என்று சாரதாவின் ஜெய்சங்கர் திரியில் யாரோ குழம்பி இருந்தார்கள். அந்த நடிகையின் பெயர் சுனந்தினி!.

      • சாரதா சொல்லுகின்றார்:

        குழம்பியது யாரோ அல்ல… நானேதான்.

        நந்தினியோ, வினோதினியோ என்று குழம்பியிருந்தேன். சுனந்தினி என்று தெளிவுபடுத்தியதற்கு நன்றி.

  4. சாரதா சொல்லுகின்றார்:

    மிகவும் நன்றி திரு நல்லதந்தி, (திரியைப்படித்ததற்கும் பாராட்டியதற்கும்). தவிர அங்கேயே ரவிச்சந்திரனுக்கும் திரி எழுதியுள்ளேன். முடிந்தால் விசிட் அடியுங்கள்.

    RV-க்கும் நன்றி சொல்ல வேண்டும். ‘அங்குள்ள’ என்னுடைய திரிகளுக்கு ‘இங்கு’ அவர் இணைப்பு கொடுத்ததன் மூலம், ‘அங்கும்’ பார்வையாளர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கிறது.

    ‘வில்லன்’ ஜெய் பற்றி பத்திரிக்கைகள் எழுதியது உண்மை. கதாநாயகனாகவும், பிற்காலத்தில் குணச்சித்திர நடிகராகவும் சோபித்த அளவுக்கு வில்லன் வேடத்தில் சோபிக்கவில்லை. காரணம், தவறுகளைக் களைந்து தண்டனை கொடுக்கும் ரோல்களில் அவரைப் பார்த்து விட்டு பின்னர் அவரே தவறுகள் செய்பவராக வந்தபோது மனம் ஒப்பவில்லை.

    கருணாநிதி கதை வசனத்தில் ‘மாயாண்டி’ என்று ஒரு படம் வந்ததா என்று தெரியவில்லை. இன்னொரு படம் ‘காலம் வெல்லும்’ அல்ல (அது கர்ணன் படம்). கருணாநிதி எழுதியது ‘காலம் பதில் சொல்லும்’. தவிர ‘நெஞ்சுக்கு நீதி’, ‘குலக்கொழுந்து’ படங்களிலும் ஜெய்யை நடிக்க வைத்து ஓய்த்துக்கட்டினார்.

  5. நல்லதந்தி சொல்லுகின்றார்:

    //கருணாநிதி எழுதியது ‘காலம் பதில் சொல்லும்’.//

    அது காலம் பதில் சொல்லும் தான் எழுதிய பிறகு தவறாக எழுதியது தெரிந்தது. திருத்த நினைத்து மறந்து விட்டேன். காலம் பதில் சொல்லும் படத்தில் கன்னட மஞ்சுளா நடித்திருப்பார். படம் முழுக்க மைசூரில் உள்ள ஸ்டுடியோவில் எடுக்கப் பட்டது என்று நினைக்கிறேன்.
    நன்றி சாரதா!.

    இரவிச்சந்திரனின் திரியையும் பார்க்கவேண்டும். link தர முடியுமா?.

    RV இதற்கு முன் ஒரு பின்னூட்டம் போட்டேனே வரவில்லையா?. பின்னூட்டம் அனுப்பும் போது போய்விட்டதா என்பதே தெரியவில்லை. முதல் முறை பின்னூட்டம் போகவில்லை என்று நினைத்து இரு முறை அழுத்திவிட்டேன். இரு முறை பின்னூட்டம் வந்திருப்பதால் சென்ற முறை ஒருமுறை மட்டுமே அழுத்தினேன். போகவில்லைப் போலிருக்கிறது.

    உமா தியேட்டர் இப்போது இல்லை. அதை இடித்து 8 ஆண்டுகள் இருக்கும். 😦

  6. நல்லதந்தி சொல்லுகின்றார்:

    //கருணாநிதி கதை வசனத்தில் ‘மாயாண்டி’ என்று ஒரு படம் வந்ததா என்று தெரியவில்லை//

    ஜெய் நடித்து மாயாண்டி என்ற படம் 1979-ல் வெளி வந்தது. கலைஞர் கதை வசனமா என்பது நீங்கள் எழுதிய உடன் குழப்பமாக இருக்கிறது.

  7. RV சொல்லுகின்றார்:

    நல்லதந்தி,

    உமா தியேட்டர் இடித்துவிட்டார்கள் என்பது வருத்தமாக இருக்கிறது.

    உங்கள் வேறு பதில் எதுவும் வரவில்லை. நீங்கள் எழுதி அது இங்கே வராமல் கூட இருக்குமா? சான்ஸே இல்லை.

    சாரதா ஃபோரம்ஹப்பில் கலக்கிக் கொண்டிருக்கிறார். அவ்வப்போது நானும் இங்கே அவரை மீள்பதிவு செய்யலாம் என்று இருக்கிறேன். அவர் எழுத்துக்காவது இந்தப் பக்கம் அடிக்கடி வாங்கள்!

    சாரதா, மீள்பதிவுக்கு அனுமதி தந்ததற்கு நானல்லவா நன்றி சொல்ல வேண்டும்?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: