கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “காயத்ரி”


Gayathri

சுஜாதாவின் திரையுலக வாழ்க்கை ரஜினிகாந்த், ஜெய்சங்கர் இணைந்து நடித்த காயத்ரி படத்திலிருந்து தொடங்கியது. அவரது நாவலான காயத்ரியை அடிப்படையாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டது.

“சுஜாதாவின் நாவல்களில் முதலில் படமாகியது காயத்ரி. பஞ்சுஅருணாசலம்தான் அந்தப் படத்தைத் தயாரித்தார்.

“தினமணி கதிரில் `காயத்ரி’ தொடராய் வரும்போதே அதை திரைப்படமா எடுக்கணும்னு நினைச்சேன். தொடர் முடிஞ்சதும் சுஜாதாவை பாம்குரோவ் ஓட்டல் ரூம்ல சந்திச்சேன். ரொம்ப எளிமையா பழகுனார். பெரிய எழுத்தாளர்களுக்கு இருக்கும் பந்தா எதுவும் இல்ல. எல்லாத்தையும் ரொம்ப ஆர்வமா கேட்டுட்டார். அப்போ அவருக்கு சினிமா ரொம்பப் புதுசு. அவரோட ஆர்வம் என்னை ரொம்ப கவர்ந்தது” என்று, தான் முதலில் சுஜாதாவைச் சந்தித்தது பற்றிச் சொல்கிறார் பஞ்சு அருணாசலம்.

“படம் வெளில வந்தபிறகு அந்தப் படத்தில் அவருக்கு அத்தனை திருப்தியில்லை. சினிமா திரைக்கதைக்காக சிலவற்றை மாற்றியிருந்தோம். அதைச் சொன்னதும் புரிஞ்சுக்கிட்டார். கதையாய் எழுதுவது வேறு. அதை சினிமாவுக்காக மாற்றுவது வேறு என்பதை உணர்ந்துகொண்டார்” என்கிறார் பஞ்சு அருணாசலம்.


பஞ்சு அருணாசலம் கூறுகிறார்….
எழுத்தாளர் சுஜாதா தினமணி கதிரில் எழுதிய சிறுகதை ‘காயத்ரி‘.   அதை நான் வாங்கி படமாக எடுக்க முற்பட்டேன்.  பலருக்கும் ஆச்சரியம்!  வீடியோ, ‘சைபர் க்ரைம்’  எல்லாம் தெரியாத காலம் அது.  அந்தக் கதையை எடுத்தால் அது  ‘ப்ளூ பிலிம்’ மாகத்தான் இருக்கும் என்று கூடச் சிலர் கிண்டல் செய்தனர்.  பலரின் ஐயத்துக்கும், கிண்டலுக்கும் ஆளானாலும் அதையே சவாலாக எடுத்துக்கொண்டு  ‘காயத்ரி’ க்கு திரைக்கதை எழுதத் துவங்கினேன்.

“ஆபாசத்திற்கு ஏராளமான வாய்ப்புகள் இருந்த அந்தக் கதையை, எந்த ஆபாசமுமின்றி, பார்ப்பவர்கள் அனுதாபம் கொண்டு மனங்கலங்கும்  வகையில் திரைக்கதை வசனம் அமைத்து,  பாடல்களையும் நானே எழுதினேன்.  அந்த ‘காயத்ரி’ படம் பெரிய வெற்றியைப் பெற்றது”  என்றார் பஞ்சு அருணாசலம்.

சுஜாதாவும் `காயத்ரி’ கதைக்கு சினிமாவில் நடந்த சேதாரங்களைப் பற்றி பல இடங்களில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் அந்த முதல் பட அனுபவத்திலேயே சினிமாவின் சூட்சுமங்கள் அவருக்கு பிடிபட்டுவிட்டது.

“எழுதப்பட்ட கதை சினிமாவாக மாறும்போது எப்படியெல்லாம் வேஷம் மாறும் என்பதை எனக்கு முதலில் உணர்த்திய அனுபவம் அது. ஒரு வகையில் `ப்ரியா’ போன்ற பெரிய அதிர்ச்சிகளுக்கு என்னை தயார்படுத்தியது” என்று குமுதத்தில் எழுதிய கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகிறார் சுஜாதா.

படம் பிடிப்பவர்கள் கதையை மாற்ற விரும்பும் ஆசையை நானும் சமீபத்தில் உணர்ந்தேன்.  காயத்ரி என்ற என் கதையைப் படம் எடுக்கிறார்கள்.  எனக்கு ட்ரீட்மென்ட் எழுத திறமை இருக்கிறதோ இல்லையோ சமயம் இல்லை.  படம் எடுப்பவர்கள் களங்கப்பட்டுவிட்ட   கதாநாயகி கடைசியில் இறந்தே தீரவேண்டும்  என்று உடைந்த கண்ணாடித்துண்டை வைத்துக் கொண்டு காத்திருக்கிறார்கள்.

நான் ஒரு நாள் மாலை முழுவதும் காயத்ரிக்காக வாதாடிப் பார்த்தேன்.  பாக்கியை வெள்ளித்திரையில் காண்க…   (கணையாழி கடைசிப் பக்கங்கள் – மே  1989 )

….சினிமாவாக மாறிய என் முதல் கதை ‘காயத்ரி’ 1977_ல் வெளிவந்தது. தினமணி கதிரில் வந்த கதையை பஞ்சு அருணாசலம் திரைப்படமாக எடுக்க விரும்பினார். பஞ்சு ஒரு நல்ல வாசகர். ரஜினிகாந்த் என்ற புதிய நடிகரும் ஸ்ரீதேவியும் நடிப்பதாகச் சொன்னார். படம் முடிந்து முதல் பிரதியை தனியாக ரஜினிகாந்துடன் உட்கார்ந்துகொண்டு ப்ரொஜெக்ஷன் பார்த்தது ஞாபகம் இருக்கிறது. எழுதப்பட்ட கதை சினிமாவாக மாறும்போது, எப்படியெல்லாம் வேஷம் மாறும் என்பதை எனக்கு முதலில் உணர்த்திய அனுபவம்/ அது, ஒரு வகையில் ‘ப்ரியா’ போன்ற பெரிய அதிர்ச்சிகளுக்கு என்னைத் தயார்படுத்தியது. இளம் ரஜினிகாந்த் அடர்த்தியான தலைமுடியுடன் வசீகரமான தோற்றத்துடன் வீற்றிருக்க, இரண்டு பேரும் சிகரெட் பிடித்துக் கொண்டு தனியாகப் பார்த்தோம். ரஜினிகாந்த் அதில் வில்லன். கதாநாயகன் ஜெய்சங்கர் வந்து காப்பாற்றுவதற்குள் ஸ்ரீதேவி படத்தில் இறந்துவிடுவார்.

சுஜாதா பதில்கள்

தேனி ராஜதாசன், தேனி.
முதன் முதலில் எந்தத் திரைப்படத்திற்குக் கதை எழுதினீர்கள் ?
காயத்ரி என்கிற என் தொடர்கதையைப் படமாக எடுத்தார்கள்.
முதல் முதல் எழுதிய கதை வசனம்  “நினைத்தாலே இனிக்கும்”
நமது RV கூறுகிறார்….

வசந்தின் முதல் தோற்றம் காயத்ரியில் என்று நினைக்கிறேன். சாவி ஆசிரியராக இருந்த பத்திரிகை, எது என்று சரியாக நினவு இல்லை. தினமணி கதிரோ? ஜெயராஜின் ஒரு படம் பார்த்து மனம் கிளர்ந்தது ஞாபகம் இருக்கிறது. அன்றைய சூழ்நிலையில் அது ஒரு அடல்ட்ஸ் ஒன்லி கதைதான்…..

RV மேலும் கூறுகிறார்….

நினைவிலிருந்து எழுதுகிறேன். இதை படித்து, யாராவது மேலும் விவரங்கள் கொடுத்தாலோ, இல்லை எழுதினாலோ ரொம்ப சந்தோஷப்படுவேன்.

காயத்ரி பற்றி எனக்கு இருக்கும் அழியாத ஞாபகம் ஜெயராஜின் படம்தான். எனக்கு அப்போது பத்து வயது இருக்கலாம். சாதாரணமாக நாங்கள் வாங்காத பத்திரிகை எதிலோ தொடர்கதையாக வந்துகொண்டிருந்தது. தினமணி கதிர் என்றுன் நினைக்கிறேன். யார் வீட்டிலோ பார்த்தேன். வில்லனின் “அக்கா” மிகவும் ரிலாக்ஸ்ட் ஆக பாவாடை பிராவுடன் உட்கார்ந்து கொண்டு இருக்கும் படம். அப்படியே ஷாக் ஆகி ஸ்தம்பித்து நின்றுவிட்டேன்! பிறகு யாரும் பார்க்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு வேக வேகமாக படித்தேன். அதுவோ தொடர்கதையின் நடுவில் வரும் ஒரு சாப்டர். தலையும் காலும் புரியாவிட்டாலும், “அக்கா” காயத்ரியை மரியாதையாக சொன்னதை கேட்டு நடக்க சொல்லு என்று சொல்வாள். அப்புறம் அந்த பத்திரிகை கிடைக்குமா என்று அலைந்து திரிந்து பார்த்தேன், கிடைக்கவில்லை. கடைசி சாப்டர் மட்டும்தான் படிக்க முடிந்தது. அதில் வசந்த் “நாங்கள் அந்த படத்தை பார்த்துவிட்டோம், அதில் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்” என்று காயத்ரியிடம் சொல்வது நினைவிருக்கிறது.

நாலைந்து வருஷம் கழித்து புஸ்தகம் கிடைத்தது. யாராவது பார்ப்பார்களோ என்ற பயம் அப்போது போய்விட்டது. ஆனால் என் துரதிர்ஷ்டம், அது கிழித்து பைண்ட் செய்யப்பட்டது அல்ல.

விறுவிறுப்பான கதை – காயத்ரியின் டைரியை ஒரு பழைய பேப்பர் கடையில் வசந்த் பார்ப்பார். காயத்ரியின் புகுந்த வீடு ஒரு மர்ம தேசம். விதவையான “அக்கா”, சமையல்காரன், வேலைக்காரி, கணவன், பைத்தியமான மறைத்து வைக்கப்பட்டிருக்கும் முதல் மனைவி, எல்லாரும் ஏதோ ரகசியத்தை மறைக்கிறார்கள். காயத்ரி ஏறக்குறைய ஒரு ஜெயிலில் இருப்பார். அவரால் வெளியே போகவோ, கடிதம் எழுதவோ முடியாது. கணேஷும் வசந்தும் காயத்ரி எங்கே என்று கண்டுபிடிப்பார்கள். காயத்ரியை வைத்து ப்ளூ ஃபில்ம் எடுக்கிறார்கள் என்று கண்டுபிடித்து அவரை விடுவிப்பார்கள்.

ப்ளூ ஃபிலிம்  என்றால் என்னவென்று தெரியாத வயது. எப்படி விறுவிறுப்பாக இருந்திருக்கும் என்று நீங்களே யூகித்து கொள்ளுங்கள்.

திரைப்படமாக வந்தது. ரஜினிகாந்த் ஆண்டி-ஹீரோ. ராஜசுலோச்சனா “அக்கா” அசோகன் அவரது ட்ரேட் மார்க் ஸ்டைலில் நடிப்பார். ஸ்ரீதேவிதான் காயத்ரி. ஜெய்ஷங்கர் கணேஷ், வெண்ணிற ஆடை மூர்த்தி வசந்த்!

இந்தப் படத்தைப் பற்றி சாரதா பிரகாஷ்  என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்….

காயத்ரி
மக்கள் கலைஞர் ஜெய் கதாநாயகனாகவும், சூப்பர் ஸ்டார் ரஜினி வில்லன் மற்றும் ஆன்ட்டி ஹீரோ ஆகவும் நடித்துக்கொண்டிருந்த காலத்தில் வந்த படம். சுஜாதாவின் ‘கணேஷ் வசந்த் சீரியல்’ கதைகளில் ஒன்று. பெண்களை மோசமான கோலத்தில் படமெடுத்து சமுதாயத்தில் வக்கிர எண்ணம் கொண்டவர்கள் மத்தியில் அவற்றை உலவவிடும் ராஜரத்னம் (ரஜினி) தான் திருமணம் செய்துகொண்டு அழைத்து வந்த ஸ்ரீதேவியைக்கூட விட்டுவைக்கவில்லை.

‘காயத்ரி’ நாவல், அப்போது பிரபலமாக இருந்த தினமணிகதிர் என்ற வார இதழில்தான் வெளியானது. வெளியானபோது நான் படிக்கவில்லை, அப்போது பிறந்திருந்திருப்பேனா என்பதும் தெரியாது. ஆனால் அந்நாளில் வெளியான நாவல்களை நான் படிக்க உதவியாக இருந்தது, சென்னை மயிலாப்பூரில் இயங்கிய ஒரு லெண்டிங் லைப்ரரி (காசு கொடுத்துப்படிக்க வேண்டும்… ஒரு புத்தகத்தை இத்தனை நாளைக்குள் திருப்பித் தரவேண்டும்… அதற்குள் படித்துவிட்டுக் கொடுக்காவிட்டால் மறுகட்டணம் என்ற ஏகப்பட்ட நிபந்தனைகள் உண்டு). அந்நிபந்தனைகளுக்குட்பட்டு அங்கே வாங்கிப்படிப்பதில் ஒரு மகிழ்ச்சி. மகிழ்ச்சிக்கு முக்கிய காரணம், நாவல்கள் அனைத்தும் பதிப்பகங்களில் வெளியான புத்தகங்கள் அல்ல. குமுதம், விகடன், கதிர், கல்கி போன்ற வார இதழ்களில் கிழித்து பைண்ட் செய்யப்பட்டவை. கதையோட்டத்துடன் அமைந்த கண்ணைக்கவரும் அழகான படங்களுடன், அடிஷனல் போனஸாக அப்பக்கங்களில் வெளியாகியிருக்கும் துணுக்குகள், ஜோக்குகள் இவைகளுடன். கிழித்து பைண்ட் செய்யப்பட்ட நாவல்களில் இரட்டிப்பு சந்தோஷம் என்னவென்றால்… ஒன்று, வார இதழ்களில் படிக்கும்போது கிடைக்கும் ஆனந்தம். இன்னொன்று, கதையை எங்காவது ரொம்ப சுவாரஸ்யமான இடத்தில் நிறுத்தி “தொடரும்” என்று போட்டுவிடுவார்களோ என்ற பயமின்றி படிக்கலாம்.

இவ்வகையில், பைண்ட் செய்யப்பட’காயத்ரி’ நாவலைப் படித்துவிட்டு, அதே ஆவலுடன் ‘காயத்ரி’ திரைப்படம் பார்க்கச்சென்றபோது படம் ‘சப்’பென்று இருந்தது. கதையில் கணேஷ்-வசந்த் இருவரும் காயத்ரியைக் காப்பாற்றி அழைத்து வருவதாக இருந்த முடிவை மாற்றி, படத்தில் காயத்ரி இறந்துபோய் விடுவதுபோல முடித்திருப்பார்கள். ஆக, படம் முழுக்க பட்ட கஷ்ட்டம் எல்லாம் வீண் என்பதுபோல தெரியும்.

காயத்ரி திரைப்படத்தில் கணேஷ் ரோலில் மக்கள் கலைஞர் ஜெய்சங்கரும், வசந்த் ரோலில் வெண்ணிற ஆடை மூர்த்தியும் நடித்திருந்தனர். சுஜாதாவின் எல்லாக் கதைகளிலும் கணேஷ் ரோல் கொஞ்சம் சீரியஸானது என்பதும் வசந்த் ரோல் கொஞ்சம் கோமாளித்தனமானது என்பதும் நமக்குத்தெரிந்ததுதானே. ஆனால் காயத்ரி நாவலில் முழுவீச்சில் வந்த கணேஷ் ரோலை (வசந்த் ரோலையும்தான்) வெட்டிக்குறைத்து, ஒரு கெஸ்ட் ரோலுக்கும் கொஞ்சம் அதிகமாக சுருக்கி விட்டனர்.

படத்தில் முதலில் அந்த “அக்கா” ரோலுக்கு பிரமீளாவைத்தான் புக் செய்திருந்தார்களாம். இடையில் எப்படி ராஜசுலோச்சனா மாற்றப்பட்டார் என்பது தெரியவில்லை. நல்லதுதான். பிரமீளாவிடம் ராஜசுலோச்சனா வின் அடாவடித்தனத்தை பார்த்திருக்க முடியாது.

படம் பார்த்த நமக்கே இவ்வளவு ஏமாற்றம் எனும்போது, கதையைக் கருவுற்ற சுஜாதாவின் ஏமாற்றம் எப்படியிருக்கும் என்று உணரலாம். ‘காயத்ரி’ ரிலீஸானபோது ‘ப்ரியா’ தயாரிப்பில் இருந்தது. காயத்ரியைப்பார்த்து அதிர்ந்த எழுத்தாளர் சுஜாதா, குமுதம் பேட்டியில், “பஞ்சு (அருணாச்சலம்)கதையைக்கேட்டாரே என்பதற்காகக் கொடுத்தேன். பஞ்சு பஞ்சாக்கிவிட்டார். ப்ரியா என்ன கதியாகப்போகிறாளோ” என்று சொல்லியிருந்தார். அவர் பயந்ததுபோலவே நடந்தது. ஆனால் எஸ்.பி.தமிழரசிக்கு ‘கல்லாப்பெட்டி’ நிறைந்தது (உபயம் ரஜினி + இளையராஜா + சிங்கப்பூர்).

(காயத்ரி நாவலின் கடைசி வரி இன்னும் நினைவிருக்கிறது…..

காயத்ரியை ஏற்றிக்கொண்டு வந்த கார், ஒரு ஃபைவ் ஸ்டார் ஓட்டலைநோக்கி விரைந்தது. காயத்ரி “ஏன் ஓட்டலுக்குப் போறீங்க?. உங்க வீட்டிலேயே தங்கிக்கிறேனே. உங்க மேல எனக்கு நம்பிக்கையிருக்கு”. அதற்கு வசந்த், “உங்களுக்கு நம்பிக்கையிருக்கு. ஆனா எங்க மேல எங்களுக்கு நம்பிக்கையில்லே”. கார், ஓட்டல் காம்பவுண்டுக்குள் நுழைந்தது).

Song: Kaalai Paniyil Movie: Gayathri

[sujatha.jpg]

(கனவுத் தொழிற்சாலை தொடரும்…)

தொடர்புடைய பதிவுகள்:

கனவுத் தொழிற்சாலை- சுஜாதாவின் “விக்ரம்”- 1

கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “24 ரூபாய் தீவு”

கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் ‘நினைத்தாலே இனிக்கும்’

கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் ‘ ‘காகிதச் சங்கிலிகள்”

கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் ‘கரையெல்லாம் செண்பகப்பூ’

கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “ஜன்னல் மலர்”

கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “ப்ரியா”

கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “அனிதா இளம் மனைவி”

Advertisements

2 Responses to கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “காயத்ரி”

  1. Pingback: சினிமாவாக வந்த தமிழ் நாவல்கள், சிறுகதைகள் « சிலிகான் ஷெல்ஃப்

  2. Pingback: சினிமாவாக வந்த தமிழ் நாவல்கள், சிறுகதைகள் | சிலிகான் ஷெல்ஃப்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: