கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “அனிதா இளம் மனைவி”


அனிதா - இளம் மனைவி  |  

அனிதா இளம் மனைவி பற்றி சுஜாதா கூறுகிறார்….

குமுதம் இதழில் நான் எழுதிய இரண்டாவது தொடர்கதை அனிதா- இளம் மனைவி. 1971ல் எழுதியது என்று ஞாபகம். நான் இதற்கு வைத்த தலைப்பு;அனிதா; மட்டுமே. குமுதம் எடிட்டோரியல் .அதை ‘அனிதா – இளம் மனைவி’ என்று மாற்றினார்கள். இதனால் இக்கதையின் மேல் ஆர்வம் கூடுகிறது என்று எண்ணியிருக்கலாம்.

‘காயத்ரி’ முடிந்த கையோடு பஞ்சு அருணாசலம் குமுதத்தில் வெளிவந்த ‘அனிதா இளம் மனைவி’யையும் படமாக எடுக்க முடிவு செய்திருந்தார். அப்போது ‘16 வயதினிலே’ படம் வெளிவந்து பாரதிராஜா என்னும் புதிய சகாப்தத்தைத் துவக்கியது. அந்தப் படத்தில் ரஜினிகாந்த் ‘இது எப்படி இருக்கு?’ என்று அடிக்கடி சொல்வார். பஞ்சு அருணாசலம் அதையே தன் புதிய படத்துக்கு டைட்டிலாக வைத்தார். ஜெய்சங்கர், ஸ்ரீதேவி, எல்.விஜயா நடித்தனர். பஞ்சு அருணாசலம் நிறைய சென்டிமென்ட் பார்ப்பவர்.’  அனிதாவை திரைப்படமாக்குகையில் அதன் பெயரை ‘இது எப்படி இருக்கு’ என்று மாற்றினார். படம் ஓடவில்லை.  அது எடுக்கப் பட்ட விதத்தில் எந்தப் பெயரிலும் ஓடியிருக்காது.

இதில் நடித்த காலஞ்சென்ற மேஜர் சுந்தர்ராஜனை பல நாள் கழித்து ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தபோது, இதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். ‘நீங்கதான் எழுதினீங்களா? என்ன கதை என்று தெரியாமலேயே நடித்தேன். அதில் நான் யாரு?’ என்று கேட்டார்.

‘உண்மையா சொன்னா நீங்கள் அதில் ஒரு டெட் பாடி’ என்றேன்.

‘அனிதா இளம் மனைவி’ கதை அதுதான். இறந்துபோய்விட்டதாக அடையாளம் காட்டப்பட்டவர் உயிரோடுதான் இருக்கிறார். ‘இது எப்படி இருக்கு?’ ‘16 வயதினிலே’ என்ற புயலில் காணாமற் போயிற்று. பஞ்சு அருணாசலம் கவலைப்படவில்லை. ‘ப்ரியா’வில் எடுத்துரலாம்ங்க’ என்றார்.

பின்னர் பஞ்சு அருணாசலம் என் நாவல்களைப் படமாக எடுப்பதை விட்டுவிட்டார்.
இந்தத் தொடர்கதையை நீண்ட இடைவெளிக்குப் பின் படித்த போது…..
சுஜாதாவின் அதே துள்ளல் நடை.  கணேஷ் முதன் முதலாக அனிதாவைச் சந்திக்கும் கணம். ஒரு விசித்திரமான மௌன இடைவெளியை சொல்லாலேயே உருவாக்கி ‘..இவ்வளவு அழகான பெண்ணா?’ என்ற வரி வழியாகவே வர்ணித்து முடித்திருந்தார். அதில் மோனிகா அறிமுகமாகும் காட்சியில் அவளுடைய குணச்சித்திரம் ஏழெட்டு வரிகளுக்குள்ளாகவே உருவாகி வரும் மாயம்.!


[sujatha.jpg]

(கனவுத் தொழிற்சாலை தொடரும்…)

தொடர்புடைய பதிவுகள்:

கனவுத் தொழிற்சாலை- சுஜாதாவின் “விக்ரம்”- 1

கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “24 ரூபாய் தீவு”

கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் ‘நினைத்தாலே இனிக்கும்’

கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் ‘ ‘காகிதச் சங்கிலிகள்”

கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் ‘கரையெல்லாம் செண்பகப்பூ’

கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “ஜன்னல் மலர்”

கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “ப்ரியா”

கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “காயத்ரி