கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “ப்ரியா”


ப்ரியா பற்றி சுஜாதா கூறுகிறார்…..

1975 –ல் நான் லண்டன், ஜெர்மனி இரண்டு தேசங்களுக்குப் போய் இரண்டு மாதம் கழித்துத் திரும்பி வந்ததும் லண்டனில் நடப்பது போல் ஒரு தொடர்கதை எழுதட்டுமா ? என்று எஸ்.ஏ.பியைக் கேட்டபோது அவர் உடனே சம்மதித்தார்.  அந்தக் கதை ‘ப்ரியா’.

ஒரு சினிமா நடிகை படப்பிடிப்புக்காக லண்டன் போகிறாள்.  அவளுடன் அவள் காதலனும் போகிறான் என்று தெரிந்து கொண்ட, அவளது கண்டிப்பான கார்டியன், லாயர்  கணேஷையும் அவளைக் கண்காணிக்க உடன் அனுப்புகிறார்.

‘குமுதம்’ வார இதழில் வெளியான ஒரு பரபரப்பான தொடர். சுவாரஸ்யமான இந்தக் கதையின் பாதியில் கதாநாயகி இறந்துவிடுகிறாள். சற்று அவசரமாக கொன்றுவிட்டேனோ என்று தோன்றியது.   குமுதம் ஆசிரியர் திரு.எஸ்.ஏ. பி. போன் செய்து அவளுக்கு எப்படியாவது மறுஜன்மம் கொடுத்துவிடுங்கள் என்றும், குமுதம் ஆசிரியர் குழுவுடன் ஆலோசித்து அதற்கு ஒரு வழியும் சொன்னார்.

ப்ரியா புத்தகமாக வந்தபோது முதல் பதிப்பில்,  ‘இந்தக் கதையை ஒரு முக்கியமான கட்டத்தில் திசை திருப்பிய ஆசிரியர் எஸ்.ஏ. பி.  அவர்களுக்கு’ என்று சமர்ப்பணம் செய்தேன்.


‘ப்ரியா’ சினிமாவானது வேறு கூத்து.

Nothing succeeds like success என்பார்கள். ஒரு காலத்தில் மகரிஷி, ஜெயகாந்தன், அனுராதாரமணன், சிவசங்கரி, உமாசந்திரன் போன்றவர்களின் பத்திரிகைக் கதிகள் சினிமாவில் வெற்றி கண்டன.  புவனா ஒரு கேள்விக்குறி, சில நேரங்களில் சில மனிதர்கள், சிறை, 47 நாட்கள், முள்ளும் மலரும் போன்ற உதாரணங்களைச் சொல்லலாம்.  இப்போது இந்த வழக்கம் அறவே ஒழிந்துபோய், கதை என்கிற வஸ்து படம் பிடிக்கும்போது தான் தேவைப்பட்டால் பண்ணப்படுகிறது.

பத்திரிகைகளிலோ நாவலாகவோ வந்ததை அப்படியே எடுக்கிறார்களா என்பது வேறு விஷயம். ஹெமிங்வேயிடம் Farewell to Arms, For Whom the Bell Tolls போன்ற கதைகளின் திரைவடிவத்தைப் பற்றி கேட்டபோது ‘Take the money and run’ என்றாராம். ‘ப்ரியா’ ஓர் உத்தம உதாரணம்.

பஞ்சு அருணாசலம் அது தொடர்கதையாக வந்தபோதே அதற்கு கர்ச்சீப் போட்டு வைத்திருந்தார். கன்னடம், தமிழ் இரண்டு மொழிகளிலும் எடுக்க பூஜை போட்டார்கள். ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, அம்பரிஷ் நடிக்க இளையராஜாவின் இசையில் சில பாடல்கள் இன்றும் ஒலிக்கின்றன.

‘லண்டனில் எல்லாம் போய் எடுக்க முடியாது. மிஞ்சிப்போனால் சிங்கப்பூரில் எடுக்கிறோம். அங்கே நீர்ச்சறுக்கல், டால்ஃபின் மீன்கள் என்று அற்புதமான காட்சிகள் வைக்கலாம்’ என்றார்.


லண்டன், சிங்கப்பூராக மாற்றப்பட்டு வெற்றிப்படமாக ஓடியது.


இதெல்லாம் என் கதையில் எங்கே வருகிறது என்று கேட்பதை முதலிலேயே நிறுத்திவிட்டேன். சினிமா என்பது மற்றொரு பிராணி என்பதை என் குறுகிய கால சினிமா அனுபவமே உணர்த்தியிருந்தது.

கதாநாயகி பாதியில் இறந்துபோகக் கூடாது என்ற அதே விதி இதிலும் காரணம் காட்டப்பட்டது. ரஜினிகாந்த் இதில் கணேஷாக வந்து டூயட் எல்லாம் பாடினார். சிங்கப்பூரில் ராஜகுமாரன் வேஷத்தில் வந்தார். பல மாடிக் கட்டிடங்கள் முன் ‘ஓ ப்ரியா’ என்று பாட்டுப் பாடினார். பாஸ்போர்ட் கிடைக்காததால் வசந்தாக நடித்த நோஞ்சான் நடிகர் உடன் வரவில்லை.


அதன் துவக்க விழாவில், முதல் காட்சி…  சென்டிமெண்டாக ஒரு பூகோள உருண்டையைச் சுழற்றி  ‘உலகத்தை ஜெயிச்சுக் காட்டறேன் பாரு’  என்று திரையில் வராத வசனத்தைத் தனியாக ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தார்.

‘ப்ரியா’ படம் வெற்றிகரமாக 110 நாள் ஓடினதுக்கு எனக்கு ட்ராஃபி தந்தார்கள். இப்போது கூட இதன் பின் கதையைச் சரியாக அறியாதவர்கள், ‘என்னா ஸ்டோரி சார்; என்னா டைலாக் சார்’ என்று சிலாகிக்கும்போது எங்கோ நிறுத்தாமல் உறுத்துகிறது.

‘ப்ரியா’ விகடன் திரை விமர்சனம் (1978) 52/100


ஜாய்ஃபுல் சிங்கப்பூரையும், கலர்ஃபுல் மலேசியாவையும் ப்ரியாவுக்காக சுருட்டிக் கொண்டு வந்திருக்கிறார்கள் எஸ்.பி.டி. பிலிம் சார். கவர்ச்சிகரமான டைட்டில்களுக்காக பிரசாத் புரொடக்ஷனுக்கு முதுகில் ஒரு தட்டு தட்டலாம் !

ஜூலியஸ் சீசர் நாடகத்தில் ரஜினியின் நடை, உடை, பாவனை உறுமல் ஆனாலும் சிவாஜியை நினைவுபடுத்தும் படியாக செய்திருக்க வேண்டாம் !

அடிக்கடி ‘ரைட்’ என்ற மேனரிசம். அதை ரஜினி வெளூத்துக் கட்டுகிறார். ஆனால் தியேட்டரில் ‘ஹோல் டான்’ என்று கத்துமளவுக்கு ஓவர் டோஸ் !

கண்ணுக்கு குளிர்சியான சிங்கப்பூர் காட்சிகள். கிளிகள் சர்க்கஸ் செய்யும் அழகு, துள்ளி விளையாடும் நீர் நாய்கள் வந்து விளையாடுவது, இவை எல்லாமே குழந்தைகளோடு பெரியவர்களூம் கண்களை அகல விரித்துப் பார்க்கும் படியான காட்சிகள். இதற்கே நாம் கொடுக்கும் காசு செரித்துப் போகிறது.

ரீ ரெகார்டிங்கில்  அதிக அக்கறை எடுத்துக் கொண்டிருக்கிறார் இளையராஜா. ஆனால் பாடல்களில் அவருடைய வழக்கமான ‘பெப்’ இல்லையே..! டார்லிங்…டார்லிங் தவிர.

ஆங்கிலப் படங்களுக்கு இணையாக ஒரு கார் சேஸை இணைக்க வேண்டிய (ஒட்டு வேலை பிரமாதம்!) இடத்தில் இணைத்திருக்கிறார்கள். ஹாட் லி சேஸ் நாவல் மாதிரி விறு விறுப்பு!

தே.சீனிவாசனின் தயாரிப்பாளர் – டைரக்டர் காமெடி நயமான ஸடயைர். பக்கோட காதர் கூட ரொம்ப பிஸி என்னும் போது தியேட்டரில் தான் எத்தனை கைதட்டல்! ( கன்னடத்து தங்கவேலு) சிவராமுடன் சேர்ந்து நல்ல கலகலப்பு. அந்த உடம்பு பிடிப்பு காட்சி உச்சம்!

ரஜினியைக் கொலை செய்ய வில்லன் கூட்டம் கொக்கின் தலையில் வெண்ணையைத் தடவுகிறது. ‘சீஸர்’ நாடகத்தில் நிஜக்கத்தியை வைத்து விடுவதன் முலம். ( அந்த காலத்து இல்லற ஜோதியில் ‘சாக்ரடீஸ்’ நாடகத்தில் சிவாஜியைக் கொல்ல உண்மையான விஷத்தை வைத்து விடுவார்கள்.) இதில் ரஜினி தப்பிய மர்மம்? அவர் என்ன வக்கீலா அல்லது மந்திரவாதியா?

இறந்ததாகச் சொல்லி காட்டப் பட்ட ப்ரியா, மெழுகு பொம்மை என்கிறார் இன்ஸ்பெக்டர் கடைசியில் இந்த ‘ப்ரியா’ கொலை மர்மம், மூலக் கதையில் அழகாகப் பின்னப் பட்டிருந்தது. அதைப் படத்தில் கொலை செய்த்து விட்டார்கள்.

சிங்கப்பூர் 97% கதை 3% – கலவை விகிதம் சரியாக இல்லையே!

ஒரு ரகசியம்: குமுதத்தில் சுஜாதா ‘ப்ரியா’ என்ற தலைப்பில் தொடர் கதை ஒன்று எழுதியிருந்தார். அதிலிருந்து ‘நைஸாக’ இரண்டொரு காட்சிகளை இந்தப் படத்தில் ‘காப்பி’ அடித்து விட்டார்களோ என்ற சந்தேகம் லேசாக உண்டாகிறது – நம்கேன் வம்பு!

Tailpiece: இந்த படத்தை அண்ணா தியேட்டரில் பார்த்தோம். படம் முடிந்து வெளியே வர தியேட்டரில் ஒரே வழிதான். அதுவும் எங்கோ பாதாளத்துக்குப் போய், மாடிப் படி ஏறி, எட்டுப் படி இறங்கி…. மவுண்ட் ரோடிலிருந்து மந்தை வெளிப்பாக்கத்துக்குப் போகிறோமோ என்ற பிரமை! ஆபத்து என்றால் தப்பி ஓடக் கூட வழியில்லையே!!

முன்பாதி 28/50 + பின்பாதி 24/50 = மொத்தம் 52/100
-விகடன் விமர்சனக்குழு

ரஜினிகாந்த் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட தகவல், தமிழ்நாடெங்கும் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.  1979 மார்ச் 11-ந்தேதியன்று விஜயா நர்சிங் ஹோமில் ரஜினி சேர்க்கப்பட்டார்.

அப்போது அவரை பரிசோதித்த டாக்டர்கள், “நல்லவேளை, சரியான நேரத்தில் கொண்டு வந்தீர்கள். இன்னும் 10 நாட்கள் இப்படியே விட்டு வைத்திருந்தால், பெரிய அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்குமë” என்று கூறினார்கள்.   ரஜினிகாந்த் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட செய்தி, தமிழ்நாடெங்கும் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. திரை உலகத்தில் அதுபற்றித்தான் பேச்சு.

“சீக்கிரம் சரியாகி விடுவார். முன்போலவே, சுறுசுறுப்பாக நடிப்பார்” என்று பலர் நினைத்தாலும், ஒருசிலர் “அவர் கதை அவ்வளவுதான். இனி அவரால் நடிக்க முடியாது” என்றார்கள்.  ஆனாலும், அவர் விரைவில் குணம் அடையவேண்டும் என்று நல்ல உள்ளங்கள் பிரார்த்தனை செய்தன.  ஓய்வு எடுக்காமல், இரவு – பகலாக உழைத்ததுதான் இந்த பாதிப்புக்குக் காரணம் என்பதை டாக்டர்கள் மட்டுமல்ல, ரஜினியுடன் பழகியவர்களும் கூறினார்கள்.

ரஜினிகாந்த் நடித்த “ப்ரியா” படத்தின் கதாசிரியரான பிரபல எழுத்தாளர் சுஜாதா கூறியதாவது:-


“ப்ரியா” படப்பிடிப்பின்போது ரஜினிகாந்த் எனக்குப் பழக்கமானார். அப்போது அவர் உச்சியை நோக்கி ஓடிக்கொண்டிருந்தார். இருந்தும் என்னை விமானத்திலோ, படப்பிடிப்பிலோ சந்தித்தால் தனியாக மதிப்புக் கொடுத்துப் பேசிக் கொண்டிருப்பார். நான் சொல்வதைக் கவனமாகக் கேட்பார்.

ரஜினிகாந்துக்கு தற்காலிக “நெர்வ்ஸ் பிரேக் டவுன்” (நரம்பு மண்டல பாதிப்பு) ஏற்பட்ட காரணங்களை, அப்போதே என்னால் அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது.

பெங்களூரில் இரவு எட்டரை மணிக்குப் பாலசந்தர் படத்தின் படப்பிடிப்பில் (தப்புத்தாளங்கள் என்று நினைக்கிறேன்) சைக்கிள் செயின் சுழற்றிக் கொண்டிருக்கிறார்.

எட்டு நாற்பத்தைந்துக்கு, ஏணியை விலக்குவதற்கு இரண்டு நிமிஷம் முன்னால் பெங்களூரில் விமானம் ஏறி, சென்னை போய், அங்கேயிருந்து ராத்திரி பன்னிரண்டு மணிக்கு மற்றொரு பிளேன் பிடித்து சிங்கப்பூர் போய், அதிகாலையில் அங்கே `ப்ரியா’ சூட்டிங். மூன்று நாள் கழித்துத் திரும்பிப் பெங்களூர் வந்து சைக்கிள் செயின் சுழற்றி விட்டு மறுபடி சிங்கப்பூர்! இந்த மாதிரி அலைந்தால் ஒரு திபேத்திய லாமாவுக்குக்கூட “நெர்வ்ஸ் ப்ரேக் டவுன்” வந்து விடும்.”

இவ்வாறு சுஜாதா கூறினார்.


‘Akkarai seemai…’ song from ‘Priya’

hey padal ondru video song

Darling Darling Video Song

என் உயிர் நீதானே…..

இசை: இளையராஜா
பாடியவர்கள்: K.J.ஜேசுதாஸ் & ஜென்ஸி
ஹத்தியக்கு சுக்காவா
ஸ்லாலுவக்கு ஜிந்த்தாவா
ஹத்தியக்கு சுக்காவா
ஸ்லாலுவக்கு ஜிந்த்தாவா
சயாபாண்டாங் டெரிமு
சயா பர் ஹரி ஹரி டோக்கா
சயாபாண்டாங் டெரிமு
சயா பர் ஹரி ஹரி டோக்கா
பர்தஸ் ஓராங் ஹத்தி படா மு

என் உயிர் நீதானே
உன் உயிர் நாந்தானே
என் உயிர் நீதானே
உன் உயிர் நாந்தானே
நீ யாரோ இங்கு நான் யாரோ
ஒன்று சேர்ந்தோமே இன்பம் காண்போமே

(என் உயிர் நீதானே…..)

பூங்கொடி தள்ளாட
பூவிழி வந்தாட
காதலை கொண்டாட
ஆசையில் வந்தேனே

அவ சந்திக் மச்சாங்
புங்காராயா
ஜானாலுபா
சாமா சாயா

(பூங்கொடி தள்ளாட…..)

நீ தந்த சொந்தம் மாறாதே
நான் கண்ட இன்பம் தீராதே
உன்னருகில் உன் இதழில்
உன் மடியில் உன் மனதில்
ஆயிரம் காலங்கள் வாழ்ந்திட வந்தேன்

(என் உயிர் நீதானே…..)

பாவையின் பொன்மேனி
ஜாடையில் தானாட
பார்வையில் பூந்தென்றல்
பாடிட வந்தேனே

ஹத்தி ஹித்த டுவா டுவா
ஓராங் சகல டுவா டுவா

நீ கொஞ்சும் உள்ளம் தேனாக
நான் கொள்ளும் இன்பம் நூறாக
என்னருகில் புன்னகையில்
கண்ணுறங்கும் மன்னவனே
காவியம் போலொரு வாழ்வினை கண்டேன்

(என் உயிர் நீதானே…..)


[sujatha.jpg]

(கனவுத் தொழிற்சாலை தொடரும்…)

தொடர்புடைய பதிவுகள்:

கனவுத் தொழிற்சாலை- சுஜாதாவின் “விக்ரம்”- 1

கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “24 ரூபாய் தீவு”

கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் ‘நினைத்தாலே இனிக்கும்’

கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் ‘ ‘காகிதச் சங்கிலிகள்”

கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் ‘கரையெல்லாம் செண்பகப்பூ’

கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “ஜன்னல் மலர்”

கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “அனிதா இளம் மனைவி”

கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “காயத்ரி”

நல்லதந்தியின் ஜெய்ஷங்கர் புராணம்


நல்லதந்தியின் பல மறுமொழிகளை இங்கே படித்திருக்கலாம். அவர் எழுதமாட்டாரா என்று நான் எப்போதும் ஆவலுடன் இருப்பேன். அவர் ஜெய்ஷங்கர் பற்றி எழுதிய ஒரு மறுமொழி மிக சுவாரசியமாக இருக்கிறது, அதையே இங்கே பதிவாக போட்டிருக்கிறேன்.

நல்லதந்தி சேலத்துக்காரர். நானும் பக்சும் சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் படித்தவர்கள். எங்களுக்கு பொழுதுபோக்கு சினிமாதான். டவுனுக்கு போனால் (பழைய) பஸ் ஸ்டாண்டிலிருந்து சங்கீத் தியேட்டர் வரை உள்ள ஒரு மைல் ஏரியாவில் எழுபது என்பது தியேட்டர் இருக்கும். படம் பார்த்துவிட்டு பெங்களூர் பஸ் கண்டக்டர்களிடம் சண்டை போட்டு, அது பலிக்காவிட்டால் கெஞ்சி காலேஜில் இறங்குவோம். அவர் அப்சரா, உமா, பழனியப்பா, ஓரியண்டல் என்று தியேட்டர் பேரை அள்ளிவிடும்போது நாஸ்டால்ஜியா தாக்குகிறது!

நான் சின்ன வயதில் ரஜினி வருவதற்கு முன்பு ஜெய்யோட விசிறி. எனக்கு இன்னும் சேலத்தில ஓரியண்டல் தியேட்டரில் பொன்வண்டு பார்த்ததும், அத்தையா மாமியா? பார்த்ததும், ஜெயா தியேட்டரில் அக்கரை பச்சை, அப்சராவில் கல்யாணமாம் கல்யாணம் பார்த்ததும் பசுமையா நினைவிருக்கு!.

ஒருமுறை சங்கம் தியேட்டரில் ஜம்பு ரிலீஸ் ஆன முதல் நாள் படம் பார்க்கப் போனபோது (காலைக் காட்சி) (பெண்கள் பக்கம் தரை டிக்கட்) கவுண்டரில் இருந்த ஆள் எங்களுக்கு டிக்கெட் கொடுக்க மறுத்து விட்டார். எங்கள் கும்பலுக்கு (நான், என் சித்தி பையன், எனது தாய் மாமன் பையன்கள் 2) அது A படம் அதனால் கொடுக்கவில்லை என்ற விபரம் தெரியவில்லை. A படம் என்றாலே என்ன என்கிற விபரம் எங்களுக்குத் தெரியாது. அந்த டிக்கெட் கவுண்டர் நீண்ட திறந்த நடையாலானது என்பதால் நாங்கள் வெளியே சென்று அவருக்குத் கண்ணுக்குத் தெரியும்படியாகக் காத்திருந்தோம். கொஞ்ச நேரத்திற்குப் பிறகு பெண்கள் யாரும் வராததால் அவர் மனமிரங்கியோ, எதற்கு வந்த டிக்கெட்டை இழக்க வேண்டும் என்று நினைத்தோ எங்களைக் கூப்பிட்டு டிக்கெட் கொடுத்து உள்ளே அனுப்பினார். ஆண்கள் பக்கம் உள்ளே போகாததற்குக் காரணம் நாங்கள் எங்கள் அம்மாக்களுடன் பிற சினிமாக்களுக்குப் போகும் போது அந்தப் பக்கமே போனோம் என்பதைத் தவிர ஆண்கள் பக்கம் சரியான கூட்டம். உள்ளே போய் படம் பார்க்கும் போதுதான் A படம் என்றால் என்ன என்று தெரிந்தது! .

ஜெய்சங்கருக்கு சேலம் என்றால் ரொம்பப் பிரியம் அங்கே அவருக்கு நிறைய நண்பர்கள் கூட்டம் உண்டு. அவர் 70களில் சிறு தயாரிப்பாளர்களின் படத்தில் நடித்து வெள்ளிக் கிழமை ஹீரோ என்று புகழ் பெற்ற காலத்தில் அவரது பெரும்பான்மையான படங்கள் சேலத்தில் மாடர்ன் தியேட்டர் ஸ்டூடியோவிலேயே தயாரிக்கப்பட்டன.

ஒருமுறை குமுதம் வார இதழ் மாறு வேடத்தில் நடிகர்கள் இருக்க இரசிகர்கள் அவர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். கண்டு பிடிப்பவர்களுக்கு பரிசு என்று ஒரு போட்டியை நடத்தியது. வாரவாரம் வெவ்வேறு ஊர்களில் பல நடிகர்கள் மாறு வேடமிட்டு தெருக்களில் அலையும் போது பொதுமக்கள் கண்டு பிடிக்க வேண்டும். ஜெய் வழக்கம் போல சேலத்தையே தேர்வு செய்தார். அதில் அவர் போட்டிருந்தது பிச்சைக்காரன் வேசம்!.

வண்டிக்காரன் மகன் பெருத்த வெற்றியைப் பெற்றவுடன், பிறகு தொடர்ச்சியாக கலைஞர் கைவண்ணத்தில் ஆடு பாம்பே, மாயாண்டி, காலம் வெல்லும் போன்ற படங்களில் தொடர்ச்சியாக நடித்த போது அவருக்கு தி.மு.க. முத்திரை குத்தப்பட்டது. கருணாநிதி ராசி அவரையும் தாக்கியது. அந்தக் குறிப்பிட்ட படங்கள் எதுவும் வெற்றியைப் பெறவில்லை. அந்த நேரத்தில் அவர் நடித்து வெளி வந்த (மேள தாளங்கள் சுமாரான வெற்றி சாந்தியில் வெளிவந்தது) அத்தனைப் படங்களும் காலி. எனவே பிற்காலத்தில் கலைஞர் கதை வசனம் எழுதி அழித்த நடிகர்களின் சகாப்தத்தை தொடங்கி வைத்த முதல் நடிகர் என்ற பெருமை மக்கள் கலைஞரை சென்றடைந்தது.(இதுவும் அந்த நேரத்தில் வழங்கப்பட்ட பட்டம்தான்).

ஒரு வருடம் சும்மா இருந்த அவரைக் கண்டு வருந்திய திரையுலகம் (ஜெய் திரைக்கு வந்த நாள் முதல் அவரை விரும்பாதவர்களே திரைஉலகில் இல்லை, என்கின்ற அளவிற்கு அவ்வளவு நல்ல பெயர் எடுத்திருந்தார். பத்திரிக்கைகள் கூட அவருக்கு படம் இல்லாமல் இருந்த காலத்தில் கூட ஆதரவு தந்தன. சினிமா நடிகர்களை புகழ்ந்து எழுதாத கல்கண்டு கூட அவரைப் பாராட்டியே எழுதியது) முரட்டுக் காளையில் வில்லனாக திரும்பவும் கொண்டு வந்து அவர் திரை வாழ்க்கையைப் பரபரப்பாக்கியது. அவரது இரசிகர்களுக்கு அவர் வில்லனாக நடிப்பது பிடிக்கவில்லை. பத்திரிக்கைகளுக்குக் கூட அவர் ஹீரோவாக நடிக்காமல் வில்லனாக நடிப்பது பிடிக்காவிட்டாலும், ஜெய்சங்கருக்கு வில்லன் வேடம் பொருந்தவில்லை இருந்தாலும் அவரது நடிப்புத் திறமையால் அதைச் சாமர்த்தியமாக சரி செய்து ஜெயித்துவிட்டார் என்று எழுதின.

நான் முரட்டுக்காளை வெளிவந்த நேரம் தீவீர ரஜினி ரசிகனாக மாறிவிட்டிருந்தேன்.விடியற்காலை ஐந்து மணிக்கு ஓரியண்டல் தியேட்டரில் எங்கள் கும்பல் படம் பார்க்க நின்றது, ரஜினிக்காக மட்டுமல்ல ஜெய்க்காகவும்தான்.

(இந்தப் படம் வரும்போது எனக்கு பதிமூன்று வயது இருக்கும். எவ்வளவு சுதந்திரமாக நான் இருக்க வீட்டில் விட்டிருக்கிறார்கள்.அப்போது ஊரும் கொஞ்சம் நன்றாக இருந்தது. இப்போது இந்த மாதிரி பையன்கள் இருக்க முடியுமா?)

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

தொடர்புடைய பதிவுகள்: நல்லதந்தியின் தளம்