பைரவி (1978)


1978ல் வெளிவந்த திரைப்படம். இதற்கு கொடுமை என்று பெயர் வைத்திருக்கலாம். என்னவோ பழைய படங்கள் நமது நேரத்தை வேஸ்ட் பண்ணாது என்று நினைத்துக் கொண்டு எடுத்து வருவோம். பத்தில் ஏழாவது நல்ல படமாக இருக்கும். மிச்சம் சுமாராக இருக்கும். இது போன்ற கொடுமைகள் சில சமயம் மாட்டத்தான் செய்யும்.

இது தமிழ்நாட்டினில் தயாரிக்கப்பட்ட தமிழ் படமாக இருப்பதால் விமரிசனத்தில் அளவுகோலை கடுமையாக்கி கொடுமை ரகத்தில் சேர்க்கிறேன். சமீபத்தில் மலேசியாவில் தயாரிக்கப்பட்ட தமிழ் திரைப்படம் ஒன்றை பார்க்க தொடங்கினோம். தாங்கமுடியாமல் பத்து நிமிடத்தில் நிறுத்திவிட்டோம். அது போன்ற ”மகா கொடுமை”யை ஒப்பிடும் பொழுது பைரவி ”பிரமாதம்”. அவ்வளவுதான் எனக்கு பைரவியைப் பற்றி ”நல்ல” வார்த்தைகள் சொல்ல தோன்றுகிறது.

நடிகர்கள் – ரஜினி காந்த், ஸ்ரீ காந்த், சுருளி ராஜன், வி.கே. ராமசாமி
நடிகைகள் – ஸ்ரீ ப்ரியா, (பைரவி) கீதா, ஒய் விஜயா, மனோரமா
இசை – இளையராஜா
டைரக்‌ஷன் – M. பாஸ்கர்

ரஜினிகாந்த சிறுவயதில் தன் தங்கையை தவறவிட்டு, பசி கொடுமையால் அவதிப்படும் பொழுது ஸ்ரீ காந்தின் தாய் காப்பாற்றி வளர்க்கிறார். அந்த நன்றி கடனுக்காக வளர்ந்த பிறகும் தன் வயது ஒத்த ஸ்ரீகாந்திற்கு விசுவாசமான வேலைக்காரனாக இருக்கிறார். ஸ்ரீ காந்த் ஊரில் பெரும் புள்ளி. பெரும் பணக்காரர். அவர் செய்யும் அயோக்கியத்தனங்களுக்கு அப்பாவி வேலைகாரன் ரஜினிகாந்த் துணை போகிறார். சில சமயங்களில் பழியை தான் ஏற்றுக் கொள்கிறார். தன் அட்டகாசங்களை பார்த்துவிடும் ஸ்ரீ பிரியாவை தனக்கு சாதகமாகப் பேச வைக்க அவருடைய வீட்டுப் பத்திரத்தை கொடுக்காமல் ரஜினிகாந்தை விட்டு மிரட்டுகிறார். வீடு தந்தை காலத்தில் ஸ்ரீ காந்திடம் அடமானம் வைக்கப்பட்டிருக்கிறது. (வயது எப்படி..? லாஜிக் உதைக்கிறதே என்றெல்லாம் மூளையை கசக்காதீர்கள்.) ஸ்ரீபிரியா அதற்கெல்லாம் கலங்காமல் ரஜினிகாந்தை லவ் பண்ண ஆரம்பித்துவிடுகிறார். அவரை திருத்தி ஸ்ரீ காந்திற்க்கு எதிராக் திருப்ப முனைகிறார். ரஜினிகாந்திற்கு முதலில் விசுவாசமான எஜமானாகவே இருக்கத்தான் முயர்ச்சிக்கிறார் ஸ்ரீ காந்த். ஆனால் அவர் அட்டகாசங்கள் ரஜினிகாந்தின் தங்கையிடமே வந்து முடிவது அவர்களை எதிர்களாக்கிவிடுகிறது.

சில தாங்கமுடியாதவைகள் – ஸ்ரீ பிரியாவிற்கு கண்டிப்பாக ஜாக்கெட் போட்டு விடுவேன் என்று ரஜினிகாந்த் ஒத்தக்காலில் நின்று, அப்படி போட்டும் விடுவதை விரசம் என்ற கணக்கில் சேர்ப்பதா என்பதை உங்கள் யூகத்திற்க்கே விட்டு விடுகிறேன். ரஜினிகாந்திற்கு மூக்கில் பெரிய வலையத்தை மாட்டி வேலைக்கார கெட்டப் கொடுத்திருக்கிறார்கள். பார்க்க சகிக்கவில்லை.

வளர்ப்பு அண்ணன்களாக வந்து போகிறார்கள் சுருளிராஜனும் இன்னொருவரும் (யார் இவர்? ஆர்வி, சாரதா, ஹெல்ப் பண்ணுங்க). விகேஆர், மனோரமா, சுருளி நகைச்சுவை திரைப்படத்தின் மற்ற பல அம்சங்களுடன் சேர்ந்துக் கொண்டு நம்மை என்னடா இது கொடுமை என்று ரொம்ப அழவைக்கிறது.

வசனகர்த்தா சரளம் வராமல் மிகவும் கஷ்டப்பட்டிருக்க வேண்டும் என நினைக்கிறேன். சில வசனங்களின் போக்கு நம்மை சிரிக்க வைக்கின்றன. உதாரணம்: ஸ்ரீகாந்த் ரஜனிகாந்திடம் ஸ்ரீ பிரியாவின் வீட்டுப் பத்திரை ஒப்படத்துவிட்டு சொல்லும் “பத்திரம்…. பத்ரம்” என்பது, ஸ்ரீ காந்த் கீதாவின் இரண்டாவது அண்ணனிடம் டிராக்டர் வாங்கும் பொழுது “டிராகடர் எவ்வளவு?” “ஒரே விலை 25000 ரூபாய்” “எனி பார்கெய்ன்” “நோ பார்கெய்ன்” “நீங்க பெரிய பிஸினஸ் மேன்” என்ற வசனங்களும் சுருளி-விகேஆர்-மனோரமா காமெடியய் காட்டிலும் நம்மை சிரிக்க வைக்கிறது.

கீதா புதுமுகம். இந்த படத்தினால் தான் அவர் ”பைரவி” கீதா என்று அழைக்கப்படுகிறார் என்று நினைக்கிறேன். கருப்பு வெள்ளை படமானாலும் அவர் கலர் பளீரென்று தான் இருக்கிறது. படத்தின் ஒரே ஒர் நாவல்ட்டி இவருடைய மான பங்கத்திற்கு காரணம் இவரின் அண்ணன் தான் என்பது.

பத்துக்கு மூன்று மதிப்பெண். அதிகம் தான். இருந்தாலும் ”பத்திரம் பத்ரம்” க்கு ஒன்று , “எனி பார்கெய்ன் நோ பார்கெய்ன்”னுக்கு ஒரு அரை மதிப்பெண், மிச்சம் கீதா வந்து போவதற்கு, ரஜினிகாந்த்க்கு, ஸ்ரீகாந்துக்கு சமமாக.

யப்பா….சாமி…

பற்றி Bags
Trying out

16 Responses to பைரவி (1978)

 1. rooto says:

  என்ன காந்தி செத்துட்டாரா??? கோட்சே சுட்ட துப்பாக்கி வெறும் ரிவோல்வர்தானா?? இப்ப வந்த புது புது பிஸ்ரலுகள விட்டுடு கொட்சே ஏன் ரெவொல்வரால சுட்டான்??? அது புல்லட் போகிற வேகம் சரியான குறைவு, தவிர தூரத்தில இருந்து சுட்ட குறிதவறீடும்!!!எங்கயிருந்து முளைக்கிரிங்களோ தெரியல!!!

 2. VR says:

  This is the first film for Rajini as ‘full hero’.It did well in box office.Songs were a hit.The producer took a risk as he was cautioned against casting Rajini as hero.Rajini had established himself well in villan roles by then.Was it released in 77 or 78?

 3. RV says:

  பைரவிக்கு பிறகுதான் நான் ரஜினி விசிறியாக மாறினேன். இந்த படத்தின் போஸ்டர்களில் ரஜினிக்கு கருப்பு பான்ட்; கருப்பு கோட், அதில் பட்டன் போட்டிருக்க மாட்டார், உள்ளேயும் சட்டை பனியன் எதுவும் கிடையாது. மேல் உடலில் நாடு பாகம் தெரியும். அவருக்கு எதிர்த்தாற்போல ஒரு பாம்பு படமெடுத்து நிற்கும். ஆஹா என்ன ஸ்டைல் என்ன ஸ்டைல்!

  பைரவி வந்த ஓரிரு மாதங்களில் சதுரங்கம் என்று இன்னொரு படம் வந்தது. அதில் ரஜினிக்கு ஸ்ரீகாந்துக்கும் ரோல்கள் மாறி இருக்கும். ரஜினி அண்ணன், ஸ்ரீகாந்த் தம்பி. ரஜினிக்கு நெகடிவ் ரோல்; ஸ்ரீகாந்த்தான் ஹீரோ. ஒரு நல்ல பாட்டு உண்டு, நினைவு வரவில்லையே! ரோல் மாறி இருக்கிறதே என்று பேசிக் கொண்டிருப்போம்.

 4. //வளர்ப்பு அண்ணன்களாக வந்து போகிறார்கள் சுருளிராஜனும் இன்னொருவரும் (யார் இவர்? ஆர்வி, சாரதா, ஹெல்ப் பண்ணுங்க//

  அவ்ருடைய பெயர் சுதிர் இந்தப் படத்திலதான் அறிமுகமானார். அதற்குப் பின் ஒரிரு படத்தில் நடித்து இருக்கலாம். நல்ல மலையாள முகம், இதற்கு பிறகு தமிழுக்கு புற்றீசலாக வெளிவந்த மலையாளப் படங்களில் பார்த்ததாக ஞாபகம். 🙂

  இந்த படத்தைப் பற்றி ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. இந்தப் படம் வெளிவருவதற்கு ஒரு சில வாரங்களுக்கு முன் விஜயகுமார் ஹீரோவாகவும் இரஜினி வில்லனாகவும் நடித்த மாங்குடி மைனர் படம் சேலம் அலங்காரில் வெளிவந்தது. கிளைமாக்சில் இரஜினி இறந்து விடும் காட்சியை பார்த்து என் சித்தி பையன் ஒரே அழுகை. அவனுக்கு ஆறுதல் சொல்ல இரஜினிக்கு அடுத்தப் படத்தில் (பைரவி) கால்தான் போகும் கவலைப்படாதே! என்றேன்.

  அடுத்த வாரமே சங்கீதில் பைரவி ரிலீஸ். எங்கள் ஜமா தியேட்டர் வாசலில் டிக்கெட்டிற்காக அலைந்தது. வழக்கம் போல பெண்கள் பக்கம் போனோம். (பயப்படாதீர்கள் எனக்கு வயது பத்துதான் :)). வரிசையில் நின்ற எங்களை பெண்கள் கூட்டம் பிழிந்து எடுத்தது. உள்ளே நடுவில் மாட்டிக் கொண்ட எங்களுக்கு உயரம் பத்தாததால் மூச்சுத் திணறி சமாளிக்க முடியாமல் வெளியே வந்து விட்டோம். பெண்கள் கொஞ்சம் கூட இரக்கம் இல்லாதவர்கள். ஆண்கள் பக்கம் நுழைந்து டிக்கெட் வாங்கும் சாகசத்தில் ஈடுபட்டோம். ஆண்கள் எங்களைப் பார்த்து பரிதாபப்பட்டு கொஞ்சம் வழி விடுங்கப்பா சின்னப் பசங்க போகட்டும் என்று சொல்லி வழி விட ஒரு நிமிடத்தில் டிக்கெட் வாங்கிக் கொண்டு உள்ளே வந்து விட்டோம். இயற்கையாகவே இந்த மாதிரி சந்தர்பங்களில் ஆண்கள் கருணை மிக்கவர்கள்.
  இரண்டு படங்களுமே பெரிய வெற்றியைப் பெற்றன. இரஜினியின் எல்லாப் படங்களும் பெரு வெற்றி பெறவே தர்மயுத்தம் படத்தின் போது இரஜினி சூப்பர்ஸ்டாராகி விட்டார்.

 5. //ஒரு நல்ல பாட்டு உண்டு, நினைவு வரவில்லையே! //
  மதனோத்சவம் என்ற பாடல்!

  இங்கே கேளுங்கள்
  http://98.130.188.109/movies/pages/index.php?movie=Sadurangam%28old%29

 6. RV says:

  பைரவியில் ஒரு பாட்டு எங்கள் ஸ்கூல் தமிழ் வாத்தியார் சிதம்பரநாதன் எழுதியது. கட்ட புள்ளே குட்ட புள்ளே கருகமணி போட்ட புள்ளே என்ற பாட்டு. இந்த பாட்டில்தான் வாடிப்பட்டி சந்தையில வாங்கி வந்த ரவிக்கையை ரஜினி ஸ்ரீப்ரியாவுக்கு போட்டுவிடுவார். நாங்கள் யாரும் வெளியில் போய் எங்க வாத்தியார் பாட்டு எழுதி இருக்கிறார் என்று சொல்லவே மாட்டோம். என்ன பாட்டு என்று கேட்டுவிட்டால்? 🙂 ஏரிக்கரை பூங்காத்தே நீ போற வழி தென்கிழக்கோ பாட்டு எழுதிய பிறகுதான் வெளியில் தைரியமாக சொல்ல ஆரம்பித்தோம். 🙂

 7. Rajagopalan says:

  நண்பரே
  உங்கள் விமர்சனத்தில்”இளைய” இளையராஜா பத்தி ஒண்ணுமே சொல்லவில்லையே
  அருமையான பாடல்கள் உண்டே!
  அதுக்கே இரண்டு மார்க் கொடுத்து இருக்கலாம்!
  படம் வந்த புதிதில்”செம படம் மச்சி” என்று நண்பரகளுடன் சண்டை போட்ட ஞாபகம் (மனதுக்குள் “திராபை ” என்று சொல்லிக்கொண்டாலும் )

  ம்ம்ம்ம் பழைய நெனப்புதான் பேராண்டி பழைய நெனப்புதான்
  அன்புடன்
  ராஜூ-துபாய்

 8. Ramesh says:

  First of all
  We can’t see any old movies now. because the current trend, interest, etc. will not match.
  Can we go by bullack Cart or Horse Cart??
  same the way we cant comment old movies now.
  Even you can’t see any Sivaji movies or MGR Movies now

 9. Bags says:

  சரி ராஜு உங்களுக்காகவும் ஆர்வியின் தமிழ் டீச்சருக்காகவும் இளையராஜாவுக்காகவும் போனால் போகிறது என்று இரண்டு மார்க். ஆனால் மற்றவைகளுக்கு கொடுத்த மார்க்குகளை வாபஸ் வாங்குகிறேன். மொத்தத்தில் மூன்றுக்கு மேல் கை வரமாட்டேங்குதே! 🙂

  நல்லதந்தி! நன்றி. பெண்களுக்கு இரக்கமில்லை என்று சொல்லியிருக்கிறீர்கள்! விஷயத்தை அப்படி பார்க்கக்கூடாது என்று நினைக்கிறேன். அவர்களுக்கு ரஜனி தான் கண்ணுக்கு தெரிந்திருக்கிறாரே ஒழிய நீங்கள் இருவரும் தெரியவில்லை. 🙂

  VR, நன்றி. திரைப்படம் வந்தது 1978 என்று தான் நினைக்கிறேன்.

 10. Bags says:

  Ramesh, Thanks for the comments. Yes, you are right. Seldom we see good movies.

 11. Rajagopalan says:

  Bags

  பைரவியை தொடர்கிறேன்…
  பைரவியில் அறிமுகமான கீதாவின் அப்பா (பெயர் சேஷாத்ரி என்று ஞாபகம்) மெட்ராஸ் மவுண்ட் ரோட்டில் speedaway பிரைவேட் லிமிடெட் வேலை செய்து கொண்டு இருந்ததாக நெனப்பு.ஸ்பீட் அவே யில் அப்போ நடிகர் ARR மேனேஜர் ஆக இருந்தார். நான் CA படிக்கும் காலத்தில் (77 -80 ) நண்பன் அங்கே audit பண்ண போவான் (RGN Price & co ) அவன் சொன்ன நியூஸ் இது!

  இப்போவும் சுசீலா அம்மாவின் “உன்னை நம்பி நெத்தியிலே பொட்டு வெச்சேன் ” பாடல் ரீங்காரம் இடுகின்றன

  ராஜு-துபாய்

 12. srinivas uppili says:

  ரஜினியின் கலைப்பயணத்தில் குறிப்பிடத்தக்க படம் “பைரவி”. அதுவரை பல்வேறு முக்கிய கதாபாத்திரங்களில் ரஜினி நடித்திருந்தாலும், தனி ஹீரோவாக நடித்த முதல் படம் “பைரவி”. கலைஞானம் கதை எழுதி, வள்ளிவேலன் மூவிஸ் சார்பில் தயாரித்த படம். வசனத்தை மதுரை திருமாறன் எழுதினார். இளையராஜா இசை அமைக்க, எம்.பாஸ்கர் டைரக்ட் செய்தார். பாடல்களை கண்ணதாசனும், சிதம்பரநாதனும் எழுதினர். ரஜினியுடன் ஸ்ரீபிரியா, ஸ்ரீகாந்த், சுருளிராஜன், மனோரமா, ஒய்.விஜயா நடித்தனர்.

  ரஜினிகாந்துடன் ஏற்பட்ட அனுபவம் பற்றி கலைஞானம் கூறியது:-

  “நான் `ஆறு புஷ்பங்கள்’ படத்துக்கு கதை- வசனம் எழுதிக்கொண்டிருந்தபோது, தயாரிப்பாளரும், டைரக்டர் கே.எம். பாலகிருஷ்ணனும் எனக்கு ஒரு கண்டிஷன் போட்டார்கள். படம் எடுத்து முடியும்வரை கூடவே இருக்கவேண்டும் என்பதே அந்த நிபந்தனை.

  அதற்கு ஒப்புக்கொண்டேன். இதனால் ஷூட்டிங் நடைபெறும்போதெல்லாம் நானும், ரஜினிகாந்த் அவர்களும் நெருக்கமாக பழக நேர்ந்தது. இரண்டாவது ஹீரோவாக ரஜினிகாந்த் நடித்தார். நீண்ட வசனம் பேசும்போதெல்லாம் அவர் சற்று சிரமப்படுவது எனக்கு தெரியவந்தது. வசனத்தை வாங்கி, சற்று குறைக்க முற்படுவேன். அப்போது ரஜினிகாந்த் “கலைஞானம் சார்! எப்படியும் பேசிவிடுவேன். வசனத்தை குறைக்கவேண்டாம்!” என்பார்.

  அதே போல தனியாக அமர்ந்து பலமுறை பேசிப்பேசி பழகி, ஒரே டேக்கில் “ஓகே” செய்து விடுவார். `முடியாது’ என்பதே அவருடைய அகராதியில் இல்லை.

  ரஜினியின் வித்தியாசமான நடிப்பைப் பார்த்து என் மனதுக்குள்ளேயே ஒரு திட்டம் போட்டேன். `ரஜினியை ஹீரோவாக போட்டு நாம் ஏன் ஒரு படம் எடுக்கக் கூடாது?’ என்று எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். அந்த எண்ணம் ஒரு நாள் நிறைவேறியது. அதுதான் அவர் முதல் முறையாக ஹீரோவாக நடித்த “பைரவி.”

  ரஜினிகாந்த் வீட்டிற்கு சென்று, “நான் முதன் முறையாக தயாரிக்க இருக்கும் படத்தில், நீங்கள்தான் ஹீரோவாக நடிக்க வேண்டும்” என்றேன். அவர் மகிழ்ச்சி அடைந்தார். `கதை என்ன?’ என்று கேட்டார். உடனே கதையை சொன்னேன்.

  அவருக்கு ரொம்பவும் பிடித்து விட்டது. “நாளைக்கு வந்து அட்வான்ஸ் கொடுக்கிறேன்” என்று சொல்லிவிட்டு புறப்பட்டேன்.

  மறுநாள் எப்படியோ சமாளித்து ரூ.5 ஆயிரம் அட்வான்ஸ் கொடுத்தேன். அவர் அதைப்பெற்றுக்கொண்டு மகிழ்ச்சிப்பெருக்கோடு, என் கையைப் பிடித்து குலுக்கினார். உடனடியாக அவருடைய நண்பர் நடராஜ் அவர்களை அழைத்து, “கலைஞானம் சார் கேட்கிற தேதிகளை குறித்துக்கொள்ளுங்கள்” என்றார். அதன்படி நடராஜ் கால்ஷீட் தேதிகள் கொடுத்தார்.

  அதன் பிறகு ஸ்ரீபிரியாவிடமும் கால்ஷீட் வாங்கி இருவர் பெயர்களையும் குறிப்பிட்டு, வியாபாரமë செய்து முடித்தேன்.

  இதில் அதிசயம் என்னவென்றால், பூஜைக்கு முன்பே விநியோகஸ்தர்களிடம் கதை சொல்லியே வியாபாரம் செய்து விட்டேன்.
  முதலில் இளையராஜா இசையில் பாடல் பதிவு நடந்தது. முதல் பாடல், `நண்டூறுது, நரிïறுது’ என்ற பாடல். அந்தப் பாடலை டி.எம்.சவுந்தரராஜன் பாடினார்.

  ஏதோ ஒரு படப்பிடிப்பிலிருந்த ரஜினி, இந்தப் பாடலைக் கேட்பதற்காகவே ஏவி.எம்.ஸ்டூடியோவுக்கு வந்தார். டி.எம்.சவுந்தரராஜன் பாடுவதை கேட்டு மெய்மறந்து என் கையை பிடித்துக்கொண்டு, “கலைஞானம் சார்! டி.எம்.எஸ். பாடி, அதை படத்தில் நான் பாடி நடிப்பேன் என்று நினைத்துக்கூட பார்த்ததில்லை!” என்று பெருமகிழ்ச்சியுடன் கூறினார்.

  1978 ஜனவரி 14-ந்தேதி படப்பிடிப்பு ஆரம்பமானது. அவருடைய ஷாட் முடிந்ததும் எங்கேயாவது ஒரு மூலையில் தூசியாக இருந்தாலும், கிழிந்த சோபாவாக இருந்தாலும் போய் படுத்துக்கொள்வார். அவரிடம் பந்தா கிடையாது. தனக்கு இன்ன இன்ன வசதி வேண்டும் என்று கேட்கமாட்டார். சாப்பாடு என்ன கொடுத்தாலும் சந்தோஷமாக சாப்பிடுவார்.

  சதா சிந்தித்துக்கொண்டே இருப்பார். `ஹீரோவாக நடிக்கிறோம். இதில் எப்படியும் வெற்றி பெறவேண்டும்’ என்பதே அந்த சிந்தனை. அனாவசியமாக பேசமாட்டார். பேசினாலும் இரண்டே வார்த்தைகள்தான்.

  1978 ஜுன் 2-ந்தேதி படம் வெளியானது. ராஜகுமாரி தியேட்டரில் மாட்னி ஷோ. பத்திரிகையாளர்களையும் அழைத்துப் பார்க்க வைத்தேன். இடைவேளையில் ரஜினிகாந்த் வந்தார். பத்திரிகையாளர்களும், ரசிகர்களும் அவரை வானளாவப் பாராட்டினார்கள்.

  நானும், டைரக்டர் எம்.பாஸ்கரும் ஒரு ஓரத்தில் நின்று, இதையெல்லாம் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தோம்.

  பட அதிபர் சின்னப்பதேவர் என்னைப் பாராட்டியதோடு, `எப்படியாவது ரஜினிகாந்திடம் சொல்லி என் கம்பெனி படத்தில் நடிக்கச் செய்’ என்றார்.

  `நீங்களே அவருக்குப் போன் செய்யுங்கள்’ என்றேன். அதேபோல், தேவர் கம்பெனி போன் ரஜினிகாந்த் வீட்டில் ஒலித்த ஐந்து நிமிடத்தில் தேவரை வந்து பார்த்து, அவரிடம் ஆசி பெற்றார். தேவர், ரஜினியை மிகவும் பாராட்டி, “இரண்டு படம் எனக்கு செய்து கொடுங்கள்” என்று கூறி அட்வான்ஸ் கொடுத்தார்.

  நாளுக்கு நாள் புகழ், பொருள் அனைத்திலும் பெரும் வளர்ச்சி கண்ட ரஜினி, தர்ம சிந்தனையிலும் வளர்ச்சி பெற்று வருகிறார். `வலது கை கொடுப்பது இடது கைக்குத் தெரியாது’ என்பார்கள். ரஜினிகாந்த் கொடுக்கும் தர்மம், இரண்டு கைகளுக்குமே தெரியாது.

  `உதவி’ என்று யாராவது கேட்டால், கேட்டவர் வீட்டிற்கு உதவி வந்து சேரும்.

  சிறு வயதில், அவர் பட்ட கஷ்டங்கள் கணக்கில் அடங்காது. அதுவே அவரை பக்குவப்படுத்தி, அவரை கருணை உள்ளத்தோடும், மனித நேயத்தோடும் வாழ
  வைத்துக்கொண்டிருக்கின்றன.”

  இவ்வாறு கலைஞானம் கூறினார்.

  • சாரதா says:

   //1978 ஜனவரி 14-ந்தேதி படப்பிடிப்பு ஆரம்பமானது. அவருடைய ஷாட் முடிந்ததும் எங்கேயாவது ஒரு மூலையில் தூசியாக இருந்தாலும், கிழிந்த சோபாவாக இருந்தாலும் போய் படுத்துக்கொள்வார். அவரிடம் பந்தா கிடையாது. தனக்கு இன்ன இன்ன வசதி வேண்டும் என்று கேட்கமாட்டார். //

   படப்பிடிப்பின் இடையே பத்து நிமிடம் ஓய்வு கிடைத்தாலும், ஓய்வெடுக்க ‘இரட்டை ஏசி’ பொருத்திய ‘காரவன் வேன்’ கேட்கும் இன்றைய அரைவேக்காடுகள் கவனத்துக்கு இவ்வரிகள் சமர்ப்பணம்

 13. Rajagopalan says:

  அசோக்
  ஆமாம் .தவறு செய்துவிட்டேன் .மன்னிக்கவும்.

  ராஜு

 14. srinivas uppili says:

  கலைப்புலி எஸ். தாணு கூறுகிறார்….
  ——————————————–
  பைரவி படம் தான் நான் விநியோகஸ்தனாக ரிலீஸ் செய்த முதல் படம். சென்னை நகர உரிமையை வாங்கியிருந்தேன். முதன் முதலாக நாளிதழ் விளம்பரங்களில் ‘சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் பைரவி’ என்று குறிப்பிட்டேன். அன்று மாலையே என்னைத் தேடி கலைஞானம் மற்றும் எம். பாஸ்கர் வந்தார்கள். எம்.ஜி.ஆர்., சிவாஜி உள்ளிட்ட பல சீனியர்கள் இருக்கும்போது, ரஜினியை சூப்பர் ஸ்டார் என்று குறிப்பிடுவது அவ்வளவு நல்லதாக இல்லை. ரஜினியே அப்படிதான் Feel பண்ணுகிறார். எனவே நாளை முதல் அப்படி விளம்பரம் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்கள்” — என்று குறிப்பிடும் தாணு மறுநாள் விளம்பரத்தில் என்ன செய்தார் தெரியுமா ?

  ரஜினிக்கு ‘சூப்பர் ஸ்டார்’ பட்டம் கொடுத்து செய்யப்பட்ட விளம்பரம் பலரின் கவனத்தைக் கவர்ந்தது. கலைஞானம் மற்றும் பாஸ்கர் வந்து, அப்படி விளம்பரம் செய்வதை தவிர்க்கும்படி கேட்டுக் கொண்ட பிறகும், மறுநாள் விளம்பரத்தில் ‘தி கிரேட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்’ என்று குறிப்பிட்டு அதிரடி பண்ணினார் தாணு.

  அப்போதெல்லாம் 2 ஷீட், 4 ஷீட் போஸ்டர் தான் ஒட்டுவார்கள். எல்லா நடிகை, நடிகரின் தலைகளும் அதில் இருக்கும். முதன் முறையாக தாணு 6 ஷீட் போஸ்டர் போட்டார். அதிலும் ரஜினி முகம் மட்டுமே இருந்தது. மவுண்ட் ரோட்டில் ரஜினிக்கு 35 அடி உயரத்துக்கு கட்-அவுட்டும் வைத்தார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: