விமர்சனம் என்றால் இப்படி!


எனக்கு எப்போதுமே சுருக்கமாக விமர்சனம் எழுத வரவில்லை என்று ஒரு எண்ணம் உண்டு. படத்தின் பங்களிப்பாளர்கள், கதை, அப்புறம் என் எண்ணங்கள், பாட்டுகள், grade போடுவது என்று எனக்கு ஒரு ஃபார்முலா காலப்போக்கில் உருவாக்கி இருக்கிறது. பதிவு எல்லாம் scroll செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல் ஒரு ஸ்க்ரீன் அளவுக்குத்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். என் ஃபார்முலாவை இந்த லட்சிய நீளத்துக்கு கொண்டு வருவது கொஞ்சம் கஷ்டம்தான். என் போன்றவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க இன்றைக்கு இரண்டு விமரிசனங்கள் – குமுதம் பத்திரிகையில் படங்கள் ரிலீசானபோது வந்தவை என்று கேள்வி. வார்த்தைகள் சரியாக இருக்கின்றனவோ என்னவோ, ஏறக்குறைய இப்படித்தான் எழுதி இருந்தார்களாம்.

முதல் விமர்சனம் எம்ஜிஆர் நடித்த மாடப்புறா படத்துக்கு – நொந்து போயிருக்கிறோம். ஒன்றும் கேட்காதீர்கள்!

இரண்டாவது எஸ் எஸ் ஆர் நடித்த அவன் பித்தனா? படத்துக்கு – ஆம். யார் பித்தன், படம் பார்த்தவரா இல்லை எடுத்தவரா என்று தெரியவில்லை.

இரண்டு படத்தையும் நான் பார்த்ததில்லை. இந்த விமர்சனங்களுக்காகவே பார்க்க வேண்டும் போலிருக்கிறது. அவர்கள் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம்!

உப்பிலி ஸ்ரீனிவாஸ் இன்னும் சில சுருக்கமான விமர்சனங்களை குறிப்பிடுகிறார்.

 • பாய்ஸ் படத்துக்கு ஆனந்த விகடனில்: ச்சீய்!
 • சாவியில் சுப்பிரமணிய ராஜு எழுதிய ஒரு விமர்சனம்: படத்தில் ஒரு பெண் வருகிறாள். அவள் கல்லூரி மாணவியாம். படத்தில் ஒரு நடுவயதுக்காரன் வருகிறான். அவன் மாணவனாம். இருவரும் சந்திக்கிறார்கள். காதலிக்கிறார்கள். பாட்டுப் பாடுகிறார்கள். இடைவேளை. அப்புறம்? எவன் பார்த்தான்? (என்ன படம் தெரியவில்லையே?)
 • குமுதத்தில் அரசு பதில் பகுதியில்:
  கேள்வி: சோமனதுடி பார்த்தீர்களா?
  பதில்: இல்லை. ஆனால் சோமனதுடி பார்த்து துடிதுடி என்று துடித்தவர்களைப் பார்த்தேன்.

  (எஸ்.ஏ.பி.க்கு உண்மையில் சோமனதுடி படம் பிடித்திருந்தது என்றும் ஆனால் அது சராசரி குமுதம் வாசகனுக்கு பிடிக்காது என்பதால் இப்படி கிண்டல் அடித்தார் என்றும் படித்திருக்கிறேன்.)
 • நடிகர் ஜீவா நடித்த கச்சேரி ஆரம்பம் திரைப்படத்துக்கு கல்கி விமர்சனம் – கமர்ஷியல் கேசரி!
 • லிங்குசாமி இயக்கிய பையா படத்துக்கு விகடனின் விமர்சனம் – காதல் கொண்ட பெண் அருகில் இருக்க, மிக நீண்ட பயணம்விகடன் முழு பக்க விமர்சனம் எழுதி இருக்கிறது, நான்தான் தவறாக புரிந்துகொண்டுவிட்டேன்.
 • டோண்டு இன்னும் சில ரத்தினச் சுருக்கமான விமர்சனங்களை இங்கே கொடுத்திருக்கிறார்.

  கொசுறு: உப்பிலி ஸ்ரீனிவாஸ் சரவண கார்த்திகேயன் எழுதிய யாவரும் நலம் விமர்சனத்தை ஒரு சுஜாதா பதிவுக்குள் இழுத்து போட்டிருக்கிறார். படித்துப் பாருங்கள்!

  தொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்

  தொடர்புடைய பதிவுகள்:
  டோண்டுவின் பதிவு – இன்னும் சில ரத்தினச் சுருக்கமான விமர்சனங்கள்
  உப்பிலி ஸ்ரீனிவாசின் உண்மைக்கு மிக அருகில் பதிவு

  பற்றி RV
  Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

  20 Responses to விமர்சனம் என்றால் இப்படி!

  1. தூள் சினிமா விளம்பரங்கள் பற்றி நான் இட்ட பதிவு இதோ: http://dondu.blogspot.com/2006/02/blog-post_02.html

   அதிலிருந்து இரு உதாரணங்கள்:
   படம்: பாதகாணிக்கை (1961)
   விமரிசனம்: விகடனில் முனுசாமி மற்றும் மாணிக்கம்
   முனுசாமி:
   “வீடு வரை உறவு,
   வீதி வரை மனைவி,
   காடு வரை பிள்ளை,
   கடைசி வரை யாரோ?”
   மாணிக்கம்:
   “பாதி வரை பழசு,
   பாதிக்கு மேல் புதுசு,
   கடைசி வரை இருந்து,
   பார்ப்பதுதான் யாரோ?”
   அப்பாடலின் மெட்டிலேயே விமரிசனத்தைப் படிப்பது உத்தமம்.

   படம்: தாயின் கருணை (விமரிசனம் குமுதம்): (1966)
   படத்திலிருந்து இரண்டு ஸ்டில்கள்.
   முதல் ஸ்டில்லில் முத்துராமன் அப்படத்தில் வரும் அம்மா நடிகையிடம் ஏதோ கெஞ்சுவது போன்ற முகபாவத்துடன் இருப்பார். இரண்டாம் ஸ்டில்லில் அப்பா நடிகர் ஒருவர் முத்துராமனின் கழுத்தில் துண்டு போட்டு இறுக்குவார்.

   முதல் ஸ்டில்லின் கீழ் எழுதப்பட்டது: “தாயின் கருணை எப்படியிருந்தது என்று சொல்ல மாட்டாயா?”
   இரண்டாம் படத்தின் கீழ்: “அந்தப் பேச்சை எடுத்தாலே கெட்ட கோபம் வரும் எனக்கு”

   அன்புடன்,
   டோண்டு ராகவன்

  2. Rajagopalan says:

   Rv

   M G R நடித்த ” நீதிக்கு பின் பாசம் ” என்ற படத்துக்கு குமுதம் “பாதிக்கு பின் மோசம் ” என்று எழுதியதாக ஞாபகம்.

   நல்லதந்தி,சாரதா உதவி செயுங்களேன்!

   ராஜூ-துபாய்

  3. srinivas uppili says:

   இதோ சமீபத்திய ஒரு வரி விமர்சனம்……

   ஆனந்த விகடன் ‘Boys ‘ படத்தை ஒரு வார்த்தையில், நாய் கொண்டு போட்ட வஸ்துவைப் போல ஒதுக்கியிருந்தது. (சுஜாதா – கடவுள்களின் பள்ளத்தாக்கு)

   அந்த வார்த்தை உங்களில் யாருக்காவது ஞாபகமிருக்கிறதா ?

  4. RV says:

   ராஜு, டோண்டு கொடுத்த லிங்கைப் பாருங்கள், அங்கே இன்னும் சில ரத்தினச் சுருக்கமான விமர்சனகளை கொடுத்திருக்கிறார்.

  5. சாரதா says:

   ஒற்றை வரியில் விமர்சனம் (என்ற பெயரில் எதையோ) செய்வது. “படத்தில் ஒண்ணுமேயில்லை” என்று எழுதுவதெல்லாம் சற்று அதிமேதாவித்தனமாகவே எனக்குப்படுகிறது. அட்லீஸ்ட் படத்திலுள்ள ஒரு சில (அப்படியா ஒண்ணுமேயில்லாமல் போயிடும்?) நல்லவற்றைப் பற்றி எழுதிவிட்டு, அப்புறம் நெகட்டிவ் பாயிண்ட்டுகளை நீட்டி முழக்கலாம். அப்படி செய்ய மனமில்லாத பத்திரிகைகள் விமர்சனம் எழுதாமலாவது இருக்கலாம். அதே திரைப்படங்களில் ஏதோ ஒரு வசனத்தில் “எக்ஸ் பத்திரிகை மோசம்” என்று வசனம் வைத்தால் இவர்கள் சும்மாயிருப்பார்களா?. அதற்கு என்ன இ.பி.கோ.வில் கேஸ் பாடலாம் என்று தேட மாட்டார்களா?. அப்படியே இந்த பத்திரிகைகள் படுமோசம் என்று எழுதிய படங்கள் நன்றாக ஓடினால் அப்புறம் இவர்களின் விமர்சனத்திறமையை எங்கே கொண்டுபோய் வைத்துக்கொள்வார்கள்?. ஒருமுறை கருடா பிலிம்ஸ் அதிபர் (அத்தையா மாமியா பட தயாரிப்பாளர்) என்,.ஆர்.அமுதாவிடம் பேசியபோது சொன்னார், “இவ்வளவு கஷ்ட்டப்பட்டு படத்தை எடுத்த பின் அதன் ரிஸல்ட்டுக்காக நிற்கும்சமயம் ‘படத்தில் ஒண்ணுமேயில்லை’ என்று சொல்லும்போது மனது எவ்வளவு வலிக்கும் தெரியுமா?. இந்த வார்த்தையைக் கேட்பதற்கா இவ்வளவு நாள் பாடுபட்டோம் என்று தோன்றும்” என்று சொன்னபோது உண்மையிலேயே பரிதாபமாகவே இருந்தது. (இவ்வளவு படுமோசமாக விமர்சிப்பவர்களிடம் படத்தைக்கொடுத்து எடுக்கச்சொன்னால், அதில் வரும் ஒரு சீனைக்கூட இவர்களால் எடுக்க முடியாது என்பது வேறு விஷயம்).

  6. srinivas uppili says:

   Well Said, சாரதா….

   சுஜாதா பதில்கள்
   —————
   ராணி குருநாதன், ஈரோடு.

   சினிமா விமர்சனம் எழுதிகிறவர் சினிமாப் படம் எடுத்தால் நல்லா ஓடுமா ?

   ஓடினதாகச் சரித்திரம் இல்லை.

  7. RV says:

   சாரதா,

   நீங்கள் சொல்வது புரிகிறது, ஆனால் ப்ராக்டிகல் இல்லை. அதுவும் அந்த என்.ஆர். அமுதா சொல்வது உண்மையே. ஆனால் விமர்சிக்கக் கூடாது என்றால் அவர் வீட்டிலேயே போட்டு அவரே பார்த்துக் கொள்ள வேண்டியதுதான். நம் பணம்/நேரம் செல்வழியும்போது, செலவழித்ததற்கு ஏற்ற பயன் கிடைத்ததா என்று பார்க்க வேண்டாமா? கஷ்டப்பட்டு பணம் செலவழித்து குண்டூரிலிருந்து கொண்டு வந்தார் என்று நம் நண்பர்களிடம் அந்த கடையில் இன்று கத்திரிக்காய் ஒரே சொத்தையாக இருக்கிறது என்று சொல்லாமல் விட்டுவிடுவோமா?

   விமர்சகர்களைப் பற்றி சொல்வது முழு உண்மை. நாகேஷின் திருவிளையாடல் வசனத்தை நினைவுபடுத்துகிறேன் – “பாட்டெழுதி புகழ் பெறுபவர்கள் இருக்கிறார்கள். குற்றம் சொல்லியே புகழ் பெறுபவர்கள் இருக்கிறார்கள். இதில் நீங்கள் எந்த ரகம் என்று உங்களுக்கே தெரியும்!” அதுதான் நாம் எல்லோரும். சரி எல்லோரும் என்று உங்களை சேர்க்கக் கூடாது. நீங்கள் கடுமையாக விமர்சித்து இது வரை நான் பார்த்ததில்லை!

   • சாரதா says:

    டியர் R.V….
    தயாரிப்பாளர் அமுதா சொன்னது, தன் படத்தை விமர்சிக்கக்கூடாது என்றல்ல. நல்லது, கெட்டது எதுவானாலும் சொல்லலாம். பணம் கொடுத்து படம் பார்த்தவருக்கு அந்த உரிமை நிச்சயம் உண்டு. அதைவிட்டு ‘படத்தில் ஒண்ணுமேயில்லை’ என்பது விமர்சனம் அல்ல. அப்படீன்னா வெறும் வெள்ளைத்திரையையா பார்த்துவிட்டு வருகிறார்?. (இன்னொரு முக்கிய விஷயம், பொதுமக்கள்தான் பணம் கொடுத்துப் படம் பார்க்கின்றனரே தவிர, பத்திரிகையாளர்கள் ‘ஓசி’ பாஸில் பார்ப்பவர்கள்தான்).

    இன்னொன்று, படம் எப்படியிருந்தபோதிலும், அவற்றில் குறைகளைத்தேடியாவது கண்டுபிடிப்பதும், சுமாராக இருக்கும் படங்களைக்கூட ‘படுமட்டம்’, ‘தேறாது’ என்றெல்லாம் விமர்சிப்பதும் மேதாவித்தனமாகவும், அப்படி செய்பவர்கள் அறிவுஜீவிகள் என்பதாகவும் ‘வலைப்பூ’ சமுதாயத்தில் (இவர்களாகவே) ஒரு சம்பிரதாயத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர்.

    நான் படங்களை கடுமையாக விமர்சிப்பதில்லை என்றீர்கள். நல்லவற்றை மட்டும் நாம் சொல்வோம், குறைகளைச் சொல்லத்தான் நிறையப்பேர் இருக்கிறார்களே என்ற எண்ணம்தான் காரணம்.

  8. Rajagopalan says:

   Sarada

   You have a good “attitude”.

   Vanakkam.

   raju-dubai

  9. srinivas uppili says:

   டியர் ஆர் வி,

   சுஜாதா கூறுகிறார்….
   ——————
   பாய்ஸ் படம் வேறு விதமான மறுப்பை சந்தித்தது.

   ஆனந்த விகடன் பத்திரிகை அதை ‘ சீ ‘ என்று ஒரே எழுத்தில் விமர்சனம் செய்திருந்தது.

   விடலைப் பிள்ளைகள் கதை. விளையாட்டுப் போக்கும், பெண்கள்மேல் ஆர்வமும் கலந்த அவர்கள் கதைக்கு தமிழ் நாட்டில் இருந்த பல மாதர் இயக்கங்கள் தினம் தினம் எதிர்ப்புத் தெரிவித்தன. சில பெண்மணிகள் தியேட்டர் வாசலில் நின்று ‘இந்தப் படத்தைப் பார்க்காதே’ என்று மறியல் செய்தார்கள்.

  10. சாரதா says:

   ‘பாய்ஸ்’ படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததும் தவறில்லை, மறியல் செய்ததும் தவறில்லை, அப்படம் படுதோல்வி அடைந்ததும் தவறில்லை.

   உயிரைவிட உயர்வானது மானம். உயிரே போனாலும் மானத்தை இழக்கக்கூடாது என்பதை போதிப்பதை விடுத்து, ஷங்கர் என்ன செய்தார். காதலி சொன்னாளாம், ‘நீ ஆடையின்றி நடுரோட்டில் நடந்து வந்தால்தான் உன் காதலை ஏற்றுக்கொள்வேன்’ என்று (சரி கதாநாயகியின் தோழி சொன்னதாகவே இருக்கட்டுமே). நாயகிக்கு ‘பளார்’ என்று ஒரு அறைவிட்டு, ‘இப்படி வந்தால்தான் உன் காதல் கிடைக்குமென்றால் தேவையில்லை போடீ’ என்று சொல்வதை விட்டு, இந்த ரெண்டுகால் நாயும் அவள் கேட்ட மாதிரி ரோட்டில் நடந்துபோவானாம்.

   தான் எதை எடுத்தாலும் மக்கள் ரசிப்பார்கள் என்ற ஷங்கரின் திமிருக்கு மக்கள் கொடுத்தார்களே மரண அடி. மறக்கக்கூடியதா?. எவ்வளவு மோசமான படம் தோல்வியடைந்தாலும் வருத்தப்படும் நான், ‘பாய்ஸ்’ படத்தின் தோல்விக்கு பால் பாயாசம் வைத்துக் கொண்டாடினேன்.

   இப்போது தெரியவேண்டியது ஒன்ணுதான். பாய்ஸ் படத்துக்கு சென்ஸார் சர்டிபிகேட் வழங்க சென்ஸார் போர்டிலுள்ளோர் எவ்வளவு லஞ்சம் பெற்றனர் என்பதுதான்.

   • RV says:

    ஸ்ரீனிவாஸ், ஆனந்த விகடனின் ஒரு வார்த்தை விமர்சனத்தை கொடுத்ததற்கு நன்றி! அதையும் இப்போது சுட்டியில் சேர்த்துவிட்டேன்.

    சாரதா, எனக்கு பாய்ஸ் படத்தில் எதுவும் தவறாகத் தெரியவில்லை. நமக்குள் இதில் இசைவு ஏற்படவும் போவதில்லை. 🙂 சில நாட்களாக இங்கே வர முடியாததால் உடனே பதில் எழுத முடியவில்லை.

  11. srinivas uppili says:

   டியர் ஆர்.வி, சாரதா,

   பத்திரிகை விமர்சனங்கள் பற்றி சுஜாதா என்ன கூறுகிறார் என்று பார்ப்போம் (நூற்றாண்டின் இறுதியில் சில சிந்தனைகள்)

   தற்போதைய முதல் தேவை ஆரோக்கியமான விமர்சனப் பின்னணி. தற்போது பத்திரிகை விமர்சனங்கள் மிகவும் மேம்போக்காக இருக்கின்றன. மக்களுக்கு இவையெல்லாம் நல்ல படம், எதனால் நல்ல படம் என்று எடுத்துச் சொல்லும் வகையில் விமர்சனங்கள் தேவை. பெரும்பாலான பத்திரிகை விமர்சகர்கள் தங்கள் புத்திசாலிதனத்தைக் காட்டும் அவசரத்தில் படத்தைப் பொருத்தமின்றி, முழுமையின்றி விமர்சிக்கிறார்கள். விமர்சகர்களின் விருப்பு வெறுப்புகள் வெளிப்படையாகத் தெரிகின்றன. இது மாற வேண்டும்.

   பத்திரிகை விமர்சனங்கள் ஒரு படத்தின் வெற்றியையோ, வீழ்ச்சியையோ பாதிப்பதில்லை.

   காரணம் பத்திரிகை படிப்பவர்கள் மிஞ்சி மிஞ்சி பத்து லட்சம் பேர். தமிழ் நாட்டின் சனத் தொகை ஐந்து கோடி.

  12. srinivas uppili says:

   டியர் ஆர்.வி,

   பிரபஞ்சன் சினிமா விமர்சனம் பற்றி என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்…
   ————————————————————————————————————–
   சுப்ரமண்ய ராஜு, சாவியால் நிறைய பயன்படுத்தப்பட்ட எழுத்தாளர்.

   ராஜு, சாவியில் சினிமா விமர்சனமும் எழுதிக்கொண்டிருந்தார்.

   ஒரு சினிமா விமர்சனம் இப்படி இருந்தது.

   படத்தில் ஒரு பெண் வருகிறாள். அவள் கல்லூரி மாணவியாம். படத்தில் ஒரு நடுவயதுக்காரன் வருகிறான். அவன் மாணவனாம். இருவரும் சந்திக்கிறார்கள். காதலிக்கிறார்கள். பாட்டுப் பாடுகிறார்கள். இடைவேளை. அப்புறம்? எவன் பார்த்தான்?

   குமுதத்தில் அரசு பதில் — (அரசு என்பது ஆசிரியர் மட்டும்தான்.)

   கேள்வி: சோமனதுடி பார்த்தீர்களா?
   பதில்: இல்லை. ஆனால் சோமனதுடி பார்த்து துடிதுடி என்று துடித்தவர்களைப் பார்த்தேன்.

  13. RV says:

   ஸ்ரீனிவாஸ், நீங்கள் சொன்ன விமர்சனங்களையும் இப்போது பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன்.

  14. srinivas uppili says:

   டியர் ஆர்.வி,

   நடிகர் ஜீவா நடித்து சமீபத்தில் வெளியான `கச்சேரி ஆரம்பம்’ படத்துக்கு கல்கி பத்திரிகை `ஒரே வார்த்தை’யில் கமர்ஷியல் கேசரின்னு சர்டிபிகேட் கொடுத்திருக்கிறது.

  15. srinivas uppili says:

   அன்புள்ள ஆர்.வி,

   லிங்குசாமியின் சமீபத்திய ‘பையா’ படத்திற்கு விகடனின் ஒரு வரி கவிதை விமர்சனம் – ‘காதல்கொண்ட பெண் அருகில் இருக்க, மிக நீண்ட பயணம்’

  16. srinivas uppili says:

   சினிமா விமர்சனம் பற்றி கல்கி…….
   ———————————
   “சினிமா விமர்சனம் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா ? நாம் எழுதும் விமர்சனத்தைப் படித்ததும், வாசகர்கள் படத்தைப் பற்றிப் பேசுவதை மறந்து நமது விமர்சனத்தைப் பற்றியே பேச வேண்டும்.”

   நந்தனார் படம் வெளியானதும் கல்கி அதற்கு ஒரு விமர்சனம் எழுதினர். விமர்சனம் வெளியானதும், எல்லாரும் படத்தை மறந்து விட்டு விமர்சனத்தைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார்கள்!

   அதே போல, அவரது ‘தியாக பூமி’ கதை படமாக வெளியான போது, விமர்சகர்களின் பேனா கல்கியைக் கொஞ்சம் கடுமையாகவே விமர்சித்தது. இவரும் விடவில்லை. அவற்றுக்குச் சுடச் சுடப் பதில் தர ஆரம்பித்தார். விமர்சகர்களும், கல்கியும் மாறி மாறிப் போட்ட எழுத்துச் சண்டை அப்போது வாசகர்களிடையே பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

   (சாவியின் ‘பழைய கணக்கு’)

  டோண்டு ராகவன் க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி

  Fill in your details below or click an icon to log in:

  WordPress.com Logo

  You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

  Google photo

  You are commenting using your Google account. Log Out /  மாற்று )

  Twitter picture

  You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

  Facebook photo

  You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

  Connecting to %s

  %d bloggers like this: