கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் ‘கரையெல்லாம் செண்பகப்பூ’


சுஜாதா கூறுகிறார்….
ஆனந்த விகடனில் ‘கரையெல்லாம் செண்பகப்பூ‘ எழுதினேன்.  நாட்டுப்புறப் பாடல்களின் பின்னணியில் கிராமத்தில் வைத்து ஒரு த்ரில்லர் (இந்த யோசனை இளையராஜா தந்தார்.  வாசர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.  மக்கள் த்ரில்லரை மறந்துவிட்டார்கள்.  நாட்டுப்புறப் பாடல்களை இப்போதும் ஞாபகம் வைத்திருக்கிறார்கள்.

நா.வானமாமலை இலக்கிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் மட்டுமின்றி, நாட்டார் வழக்காற்றியல் பற்றியே பன்னிரண்டு புத்தகங்கள் எழுதியிருக்கிறார். அவர் செய்த பணி சிறப்பானது.

வரலாறு, விஞ்ஞானம், ஆராய்ச்சி, அரசியல், தமிழில் முடியும் போன்ற தலைப்புக்களில் சுமார் நாற்பது புத்தகங்கள் எழுதியுள்ள இந்தப் பேராசிரியரிடம், நான் விகடனில் ‘கரையெல்லாம் செண்பகப்பூ’ தொடங்குவதற்கு முன், அவரது ‘தமிழர் நாட்டுப் பாடல்கள்’ புத்தகத்திலிருந்து (இப்போது அதை என்.சி.பி.ஹெச். ‘தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்’ என்று பதிப்பிக்கிறார்கள்) சில பாடல்களைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதி கேட்டேன். அவர் ‘இந்தப் பாடல்கள் மக்கள் சொத்து. நீங்கள் தாராளமாக அவற்றைப் பயன்படுத்தலாம்’ என்று கார்டு போட்டிருந்தார்.

என் தொடர் கதைகள் ஆரம்பமாகும் போதோ, அல்லது, முடியும் போதோ, சினிமா உலகத்துக்கு ஒரு விதமான ஆவேசம் வரும்.  அந்தக் கதையை சினிமா எடுத்தே ஒழிப்பது  என்று வலுக்கட்டாயமாக ஒரு கோஷ்டி கிளம்பும்.  “கரையெல்லாம் செண்பகப்பூ” ஆரம்பித்த போது, என் தோட்டத்தில் ஒரு கிரிக்கெட் டீம் அளவுக்கு தயாரிப்பாளர்கள் கூடி விட்டார்கள்.

கரையெல்லாம் செண்பகப்பூ தொடர்கதையாகத் துவங்கின உடனேயே, பலர் அதை சினிமா எடுத்தே தீருவேன் என்று பிடிவாதமாக என்னை அணுகினார்கள்.  ஆசிரியர் சாவி, பாலுமகேந்திரா, பிரமிட் நடராஜன், இசைஞானி இளையராஜா, புவியரசு, பஞ்சு அருணாசலம் இவர்களிடையே தீர்மானிக்க முடியாமல் திணறினேன்.  பாலுமகேந்திரா கோகிலா படப்பிடிப்புக்காக பெங்களூர் வந்திருந்தார்.  மறைந்த நடிகை ஷோபா, பிரதாப் போத்தன் இருவரையும் வைத்து அந்தக் கதையை எடுக்கப் போவதாகச் சொன்னார்.  பிரமிட் நடராஜன் தயாரிப்பதாக இருந்தது.  அவர் ‘சரத்பாபுவை வைத்துப் பண்ணுங்கள்’ என்றார்.  பாலுமகேந்திரா விலகிவிட்டார்.

கொஞ்ச நாள் கரையெல்லாம் செண்பகப்பூ யாரெடுப்பார்கள் என்கிற தீர்மானமில்லாமல் கிடப்பில் இருந்தது.  இறுதியில், கதையை எல்லாரும் மறந்து போன பின் ஜி.என்.ரங்கராஜன் அதை எடுத்தார்.  கதாநாயகன் அதே பிரதாப் போத்தன்,  கதாநாயகி ஸ்ரீப்ரியா.  மனோரமா திறமையாக நடித்தார்.

படம் சித்ரா தியேட்டரில் ஒரு வாரம் போல் ஓடியது.  எப்போதாவது டிவியில் அந்தப் பாடத்தைக் காட்டுகிறார்கள்.  அதைப் பார்த்தவர்கள் ‘இப்போது வரும் படங்களுக்கு அது பரவாயில்லை’ என்றுதான் சொல்கிறார்கள்.

கரையெல்லாம் செண்பகப்பூ திரைப்படத்துக்கு எனக்குக் கிடைத்த வருமானம் எவ்வளவு என்பதை அறிந்துகொள்ள வாசகர்கள் ஆவலாக இருக்கலாம்.  அந்தக் காலங்களில்  எல்லாமே வாய் வார்த்தைதான்.  ‘நீங்க போங்க, பின்னாலயே  ஒரு செக் அனுப்புகிறேன்’ என்பார்கள்.  அனுப்பிய செக்கை அடுத்த வெள்ளிக்கிழமை போடுங்கள் என்பார்கள்.  சிலர் டோக்கன் அமௌன்ட் கொடுப்பார்கள்.  குறிப்பாக இந்த நாவலுக்கு ஒரே ஒரு தயாரிப்பாளர் ஐயாயிரம் ரூபாய் தந்தார்.  இதில் செய்தி — படத்தை அவர் எடுக்காததால் போன் பண்ணி கொடுத்த பணத்தைத் திரும்ப வாங்கிக்கொண்டார்.  வங்கியில் அந்த செக் மாறினதுக்கு பத்து ரூபாய் சார்ஜ் செய்தார்கள்.  எனவே கசெபூ படமாக வந்ததற்கு நான் பத்து ரூபாய் செலவு செய்தேன்.  என் மனைவி எனக்கு வராத பணம் அனைத்துக்கும் கணக்கு வைத்திருக்கிறாள்.

ஜி. என்.ரங்கராஜன் கடைசியில் அதை எடுத்து ஒரு வழி பண்ணினார்.  இப்போதுகூட ஒரு டைரக்டர் அந்தக் கதையை ரீ-மேக்காக மறுபடி எடுக்கலாம் என்று என்னை அணுகினார்.  ‘என்னங்க… அவன் நாட்டுப்பாடல் ஆராய்ச்சிக்கு சுவிட்சர்லேன்ட் போறதா வச்சிக்கிட்டு அங்க ஒரு சாங் வெக்கலாங்க’ என்றார்.  நான் ‘எஸ்கேப்’ என்று ஓடிவந்துவிட்டேன்.

இனி கரையெல்லாம் செண்பகப் பூ பற்றி….

சுஜாதாவின் மிகப் பிரபலமான நாவல்களில் ஒன்று ‘கரையெல்லாம் செண்பகப்பூ’. நாட்டுப்புறப் பாடல் ஆராய்ச்சிக்காக திருநீலம் கிராமத்துக்கு வரும் நகர்ப்புற இளைஞன் சந்திக்கும் சம்பவங்களின் மர்மமும், பழிவாங்கலும் நிறைந்த பின்னணியில் தமிழக நாட்டுப்புறப் பாடல்களை ஊடாடவிட்டிருக்கிறார். இந்த நாவலுக்குப் பின்னர் தமிழ்நாட்டில் நாட்டுப்புறப் பாடல்கள் மேல் நிறைய கவனம் திரும்பியது. கிராமப்புர கவிதை வரிகளோடு கதையோட்டம் தெளிந்த நீரோடை போல் செல்லும்.

நாட்டுப்புற பாடல் ஆராய்ச்சிக்கு கிராமம் செல்கிறான் நாயகன் (பிரதாப் போத்தன்). அங்கு அவன் தங்கும் பழைய வீட்டில் ஒரு புதையல். அதை எடுக்கும் திட்டத்துடன் ஒரு இளம்பெண், அவளுக்கு உதவியாளர்கள். அந்த கிராமத்துப்பெண் வெள்ளி (ஸ்ரீபிரியா). அவளை ஒரு தலையாக காதலிக்கும் நாயகன். அவளுக்கோ முறைப்பையன் மேல் ஆசை.

இயல்பான நடையில், திடுக்கிடும் திருப்புமுனைகள் வரும் கட்டங்களிலும்,  ஒரே வரியில் அதன் ஆழத்தை சொல்லும் பாங்கு சுஜாதாவுடையது. உதாரணம் கரையெல்லாம் செண்பகப்பூவில் வரும் அந்த முடிவு
”என்ன சொல்ல நினைத்தாய் வெள்ளி”
சொல்லாமல் போன காதலின் சுமையாய் இந்த ஒரு வரிக்குள் அடக்கிவிடுகிறார்.

‘பழையனூர் நீலி’ கதை, ஜமீந்தாரிணி ரத்னாவதியின் உடைந்த ஆங்கிலக் குறிப்புகள் (‘Rathna not happy…’) – படிக்கும்போதே மனம் கரைந்து போகும். சிநேகலதாவின் கொலை, அப்புறம் கதையின் உச்சமாகப் புதையல் கண்டுபிடிப்பு…chilling.

கரையெல்லாம் செண்பகப் பூ 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. என். ரங்கராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரதாப் போத்தன், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.   கதையாகப் படித்தபோது அடைந்த Feel  படத்தில் கிடைக்காததால் படம் வெற்றி அடையவில்லை.

[sujatha.jpg]

(கனவுத் தொழிற்சாலை தொடரும்…)

தொடர்புடைய பதிவுகள்:

கனவுத் தொழிற்சாலை- சுஜாதாவின் “விக்ரம்”- 1

கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “24 ரூபாய் தீவு”

கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் ‘நினைத்தாலே இனிக்கும்’

கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் ‘ ‘காகிதச் சங்கிலிகள்”

கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “ஜன்னல் மலர்”

கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “ப்ரியா”

கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “அனிதா இளம் மனைவி”

கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “காயத்ரி”