கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் ‘ ‘காகிதச் சங்கிலிகள்”


N-KAAGITHA CHANGILIKAL

இந்தக் கதையில் சுஜாதா இதுவரை எழுதாத விதத்தில் மனித உறவுகளை அலசியிருந்தார். அபாரமான கதை.

இந்தக் கதையில் இருந்து சில வரிகள்……

விமலா ஒரு ரூபாய்க்கு நாலணா சில்லரையாக மாற்றி வைத்துக் கொண்டு டாக்டர் ரங்காச்சாரியின் சிலையைக் கடந்தாள். கம்பிகளால் தடுக்கப்பட்ட காரிடாரில் நடந்தாள். அதன் இறுதியில் கதவு சார்த்தி காக்கிச் சட்டைக்காரன் ”போங்கய்யா, போங்கம்மா?” என்று சிலரை அதட்டிக் கொண்டிருந்தான். ”உள்ள உடறதில்லைன்னு சொன்னனில்லை?” விமலா நாலணாவை எடுத்துத் தயாராக நீட்ட அதை அவன் பூச்சி பிடிக்கும் பல்லிபோலக் ‘கபக்’ என்று கவர்ந்து கொண்டு கிராதி கேட்டைத் திறந்து அவளை மட்டும் அனுமதித்து ”அடப்போங்கய்யான்னா!” என்று அதட்டலைத் தொடர்ந்தான்.

‘காகிதச் சங்கிலிகள்‘  பற்றி சுஜாதா…..

‘காகிதச் சங்கிலிகள்’ பெயர் மாறி ‘பொய் முகங்கள்‘ என்ற தலைப்பில் 1986 -ல் சி.வி.ராஜேந்திரன் டைரக் ஷனில்  வெளிவந்தது.  கன்னடத்தில் பிற்பாடு டைரக்டராக பிரபலமான ரவிச்சந்திரன்    (ராகேஷ் என்ற பெயரில்)   சுலக் ஷனாவுடன்  நடித்தார்.  இந்தக் கதை, சிறுநீரகத்தில் கோளாறு ஏற்பட்டு ஓர் இளம் கணவன் மாற்று சிறுநீரகத்துக்குக்  காத்திருக்க, அவன் மனைவி ரத்த சம்பந்தமுள்ள உறவினர்களிடையே கெஞ்சுவது பற்றிய கதை.

சைக்ளோஸ்சோரின் போன்ற இம்யுனோ சப்ரசண்ட்கள் அதிகம் புழங்காத காலம் அது.  இன்று அந்தக் கதை எழுத முடியாது.  ராயபுரம் சுனாமி நகர் சென்று, தரகரைச் சந்தித்தால் போதும்,  பதினைந்து பேர் கிட்னி தானம் கொடுக்க முன்வருவார்கள்.

சுஜாதாவின் ‘காகிதச் சங்கிலிகள்’ – ஒரு சினிமா அனுபவம்

காகிதச் சங்கிலிகள்‘  ஒரு குறுநாவலாக,  நாலைந்து வாரம் “சாவி” இதழில் வெளி வந்தது .  வெளிவந்த உடனே சின்னதாக சினிமா பாட்டு புஸ்தகம் சைஸுக்கு ஒரு நியூஸ் பிரிண்ட் எடிஷனும் சாவி வெளியிட்டார்.  இவ்வடிவத்தில்தான் பஞ்சு அருணாசலம் அந்தக் கதையைப் படித்திருக்கிறார்.  கதை எளியது.  புதுசாக கல்யாணமான கணவன் திடீர் என்று சிறுநீரகம் (கிட்னி) பழுதுபட்டு உயிருக்கு ஊசலாடுகிறான்.  அவன் மனைவி மாற்று சிறுநீரகம் தானம் தரும்படி கணவனின் உறவினர்கள் எல்லோரையும் மன்றாடிக் கெஞ்சுகிறாள்.  அவர்கள் காலந் தாழ்த்துகிறார்கள்.  கணவன் இறந்து விடுகிறான்.  “எல்லாரும் சேர்ந்து அவரைக் கொன்னுட்டா” என்கிறாள்.  அவ்வளவுதான்.

இந்தக் கதை வெளிவந்த புதிதில் பலரை பாதித்தது.  எனக்கு கடிதங்கள்,  போன் கால்கள்,  ‘நான் தானம் தருகிறேன்,  கதையை மாற்றி எழுது’  என்று தந்திகள்  இப்படியெல்லாம் வந்தன.  அந்த நாட்களில் சென்னை சென்றிருந்தபோது,  பஞ்சு அருணாசலம் என்னை வரவழைத்து  “காகிதச் சங்கிலிகள் படிச்சங்க.  நல்ல கதை.  இதை படமா எடுத்துரலாம் உடனே” என்று அட்வான்ஸ் தொகையையும் கொடுத்தார்.  (எத்தனை அட்வான்ஸ் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறவர்கள் என்னை என் மாதாந்திர சுற்றுப்பயணத்தில் பத்தாம் தேதி கடலூர் அஜீஸ் மான்ஷன் போன் நம்பர் 123 -ல் தொடர்பு கொள்ளவும்.’காகிதச் சங்கிலிகள்‘   பூஜை, அதன் டைரக்டர் திரு. எஸ். பி. முத்துராமன் வீட்டின் மாடியில் நடைபெற்றது.  சுமனும், அம்பிகாவும் சாந்தி கல்யாண சீனில் நடிக்க படப்பிடிப்பு துவங்கியது.  நான் வழக்கமான கேள்வி கேட்டேன்.  ‘இதெல்லாம் என் கதையில் வரவில்லையே’ என்று.   அவர்கள் ‘கணவன் மனைவி தானே,  முதல் இரவில் துவங்குகிறோம்’ என்றார்கள்.Producer  ஒரு வெற்றிப் படத்துக்கு அப்புறம் இரண்டு மூன்று அடியைப் பார்த்து நொந்து போயிருந்தார்.  படுக்கை பூரா மல்லிகைப் பூ இறைந்திருக்க,  சிவப்பில் சாரி கட்டிக் கொண்டு அம்பிகா என்னிடம் தானும் கதைகள் எழுதுவேன் என்றும் “நாநா ” ரெட்டியாரை சிலாகித்தும் பேசினார்.  சுமன் உயரமாக மேகங்களுக்கு அருகே தலை இருந்ததால் ஜலதோஷமாக மூக்கு சிந்திக் கொண்டிருந்தார்.  நான் பெங்களூர் திரும்பி வந்துவிட்டேன்.மூன்று மாதம் கழித்து படப்பிடிப்பு மளமளவென்று முன்னேறுவதாக தந்தி பேப்பரில் செய்தி வந்து ஒரு ஸ்டில் போட்டோவும் போட்டிருந்தார்கள்.  அதில் மைதானத்தில் கிடாவெட்டு ஒன்று நடந்து கொண்டிருந்தது.  அடடா, கதையில் இல்லவே இல்லையே, கதை முழுவதும் ஜெனரல் ஆஸ்பத்திரியில் நடக்கிறதே,  அங்கே ஒரு மைதானமோ, ஆட்டுக் கிடாவோ  உள்ளே வர சாத்தியமே இல்லையே என்று அடுத்த முறை சென்னைக்குச் சென்ற போது பஞ்சு அவர்களை விசாரித்தேன்.

“அதுங்களா ?  காமெடி ட்ராக்குங்க .  கதை பூரா செண்டிமெண்டல் மேட்டரா ஆயிடுத்தா ,  கொஞ்சம் Relief -க்கு சோ, மகேந்திரன் இவங்களை வச்சுக்கிட்டு காமெடி – Carry on Doctor  மாதிரி காமெடி பண்ணியிருக்கம்.  அது சம்பந்தமான ஸ்டில்லா இருக்கும்.  கிடா வெட்டுன்னா சொன்னீங்க ?  விசாரிக்கறேங்க. ”

நாட்கள் உருண்டோடின.  மற்றொரு மதராஸ் விஜயத்தில் பஞ்சு அவர்களின் உதவியாளரை ஒரு நட்சத்திரக் கல்யாணத்தில் சந்தித்தேன்.

“காகிதச் சங்கிலிங்களா  ? அது வந்து டிஸ்கஷன் போது ஒரு சிக்கல் வந்துருச்சுங்க.  கிட்னி, கிட்னி, சிறுநீரகம், சிறுநீரகம்னு  அடிக்கடி கதைல வருதுங்க.  தாய்மாருங்களுக்கு  எப்படி இருக்கும் ?  அவங்கவங்க எந்திரிச்சு பாத்ரூம் போயிரமாட்டாங்களா ? ”

“நீங்க சொல்றதிலயும்  பாயிண்ட் இருக்குதுங்க.  எழுதறப்ப யோசிக்கலைங்க. ”

“அதனால் தான் சிறுநீரகத்தை இதயம்னு மாத்தலாம்னு யோசிச்சுக்கிட்டிருங்கங்க.  இதயம்னுட்டா பாருங்க எல்லா சிக்கலும் தீர்ந்துருது.  அதை வச்சிக்கிட்டு எவ்வளவு வசனம்,  பாட்டு அருமையா எழுதலாம் ?  கிட்னிய  வச்சிக்கிட்டு என்ன பண்ண முடியும் சொல்லுங்க சாப்பிடலாம்,  ஒண்ணுக்கு போகலாம், வேற என்னங்க ? ”

அவர் சொல்வதில் உள்ள நியாயத்தை உணர்ந்து நான் உடனே பஞ்சு அருணாசலத்துக்கு போன் செய்தேன்.  அவர் கிடைக்கவில்லை.  ஊருக்கு வந்த கையோடு அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன்.  கதையே, காமெடி ட்ராக், இதயம் என்று கணிசமாக மாற்றி விட்டதால் இனி என்னுடையது என்று மிச்சமிருப்பது  ‘காகிதச் சங்கிலிகள்‘  என்கிற டைட்டில் மட்டுமே.  அதையும் மாற்றி என் பெயரை நீக்கிவிடுங்கள்   என்று எழுதியிருந்தேன்.  பதில் இல்லை.  (சினிமாக்காரர்கள் கடிதம் எழுத மாட்டார்கள் பாக்யராஜ், சிவகுமார் தவிர. )

பஞ்சுவை அடுத்த முறை சில மாதங்கள் கழித்து சந்தித்த போது, “நீங்க சொன்னபடியே செஞ்சுட்டங்க.  பேரையும் மாத்திட்டம்.  அட்வான்ஸ் இருக்கட்டுங்க.  சந்தர்ப்பம் ஏற்படறப்ப ஒரு லோ பட்ஜெட் ஆர்ட் மூவி எடுத்துரலாம் ” என்றார்.  நான் சந்தோஷத்தோடு ஒப்புக்கொண்டேன்.

என்ன பெயர் மாற்றினார்கள் என்று தெரியவில்லை.  படம் முடிந்ததா,  ரிலீஸ் ஆயிற்றா தெரியவில்லை.  உங்களுக்குத் தெரியுமா ?  சுமனும் அம்பிகாவும் சாந்தி கல்யாணம் பண்ணிக் கொள்கிறார்கள்.  கிடா வெட்டு வருகிறது.  காமெடி ட்ராக்,  ஆஸ்பத்திரி நர்ஸ்,  வார்டு பாய் என்றெல்லாம் வரும்.

நீங்கள் யாராவது பார்த்திருந்தால் எனக்கு தகவல் சொல்லுங்கள்.  மாற்று இதய சிகிச்சை கூட வரலாம்.

பின்னர் சுமார் 2 வருஷம்  ‘காகிதச் சங்கிலிகள்‘ தூங்கியது.  அதற்கு மறுபடி ஒரு ராஜகுமார முத்தம் கிடைத்தது.  ஒரு நாள் இரவு டைரக்டர்  சி.வி. ராஜேந்திரன் பெங்களூருக்கு படப்பிடிப்புக்கு வந்திருந்தவர் வீட்டுக்கு வந்தார்.

“என்னா  ஸ்டோரி சார் அது !  அப்படியே என்ன உலுக்கிருச்சு!  காகிதச் சங்கிலிகளை நான் எடுத்தே ஆகணும். ”

“தேங்க்ஸ்.  ஆனா அது பஞ்சு சார் கிட்ட….”

“எல்லாம் தெரியும்.  அவர்கிட்ட பர்மிஷன்  கேட்டுகிட்டுத்தான் எடுக்கப் போறோம்.  அவங்களுக்கு இப்போதைக்கு இதில் இன்ட்ரெஸ்ட் இல்லை.  செகண்ட் Half   பூரா அப்படியே வரிக்கு வரி உங்க ஸ்டோரி தான். ”

“First  Half  ?”

“முதல் பாதியில் அந்தக் குடும்பம் எப்படி ஒத்துமையா வாழ்ந்தாங்க,  எப்படி சந்தோஷமா இருந்தாங்க,  எப்படி கதாநாயகனுக்கு ஒரு சின்ன முள் குத்தினாக் கூட அவங்களுக்கெல்லாம் தாங்கவே தாங்காதுன்னு கட்டினா contrast  கிடைக்கும்.  அதும் ஸ்க்ரீன் ப்ளே உங்ககிட்ட காட்டி, approval வாங்கிட்டுத் தான் எடுக்கப் போறோம்…..”

“எதுக்கும் பஞ்சு கிட்ட நீங்க எடுக்கறதப் பத்தி ஒரு வார்த்தை சொல்லிடுங்க.   என்னா லீகல் ப்ராப்ளம் எதும் வரக் கூடாது பாருங்க….”

:”தாராளமா.   ‘காகிதச் சங்கிலிகள்‘  ங்கற டைட்டில் சேம்பர்ல  ரிஜிஸ்டர் ஆயிருக்கு.  அதனால் ‘பொய் முகங்கள்‘ னு மாத்திரலாம்.  யு லைக் இட் ?”

பஞ்சு, சி.வி. ஆர் தன்னிடம் பேசியதாகவும்,  தாராளமாக அவர்களுக்குக் கொடுக்கலாம் என்று சொன்னார்.

இந்த முறை    ‘காகிதச் சங்கிலிகள்‘  பொய் முகங்களாக பாடல் பதிவுடன் துவங்கியது.  சுலக் ஷணா  ஹீரோயின்.  பெங்களூர் திரு வீராசாமியின் மகன் ராகேஷோ என்னவோ பேர் சொன்னார்கள்.  அவர் தான் ஹீரோ.  Producer இப்போது சின்னப் பையன் போல் இருந்தார்.  பாங்கில் வேலை செய்கிறதாக சொன்னார்.  என் நண்பர் வெங்கட் தான் திரைக்கதை.

“பயப்படாதீங்க.  உங்க தீமை ஸ்பாயில் பண்ணாம உங்க லைன்சையே  உபயோகிச்சு எழுதறேன்.”

பொய் முகங்கள்‘ மளமளவென்று முன்னேறுவதாக தந்தி பேப்பரில் செய்தி வந்திருந்தது.  ஸ்டில் கூட வந்திருந்தது.  குமுதம் இதழில் ஒரு கலர் படம் கூட வந்திருந்தது.  (இரண்டு முகங்கள் கிட்டே கிட்டே)  சென்னைக்கு அடுத்த முறை வந்த போது  படப்பிடிப்புக்கு அத்தாட்சியாக  நிறைய கலர் கலராக ஸ்டில் எல்லாம் காட்டினார்கள்.  வைரமுத்து உருக்கமாக ‘மனிதனுக்கு எத்தனை பொய் முகங்கள்’ என்று விசாரித்து எழுதியிருந்தார்.
ஸ்டில்களில்  அந்தப் பையன் தாடி வைத்துக்கொண்டு சன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டிருந்தான்.  சுலக் ஷணா தழைய வாரிக் கொண்டு பெரிசாக பொட்டு இட்டுக்கொண்டு சன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டிருந்தார்.

“ரொம்ப நல்லா வந்திருக்குங்க.  நிச்சயம் அவார்ட் பிக்சர்ங்க.  நீங்க பார்த்துட்டு அதைப்பத்தி எழுதுங்க.  அடுத்த தடவை வரப்ப போன் பண்ணுங்க.ப்ரொஜெக் ஷனுக்கு  ஏற்பாடு செய்யறேன் ” என்றார் ப்ரோடுசெர்.

“படம் முடிஞ்சுருச்சா ?”

“முடிஞ்சுருச்சு.  இன்னம் கொஞ்சம் பாடச் வொர்க் பாக்கி.  தீபாவளிக்கு ரிலீஸாயிரும்.”

அதன் பின் Producer -ரிடம் டெலிபோனில் பேச ஒரு சந்தர்ப்பம் கிடைத்தபோது, படம் ஒரு புதிய சிக்கலில் மாட்டிக் கொண்டிருப்பது தெரிய வந்தது.

தமிழகத்தின் மாண்புமிகு முதலமைச்சர் எம். ஜி. ஆர். அவருக்கு திடீர் என்று உடல் நலம் குறைந்து சிறுநீரகத்தில் கோளாறு ஏற்பட்டு மயக்க நிலையில் அமெரிக்காவுக்குச் சென்று அங்கே திறமையுள்ள மருத்துவ நிபுணர்கள் அவருக்கு மாற்று சிறுநீரகம் — ‘காகிதச் சங்கிலிகள்’  போலல்லாமல் அவருடைய உறவினர் மனமுவந்து சம்மதிக்க பொருத்தப்பட்டு அவர் நினைவும் செயலும் பெற்று தாயகம் திரும்பியது உங்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.

காகிதச் சங்கிலிகளி‘ ன் தயாரிப்பாளர் இந்த சம்பவம் திரைப்படத்தின் செண்டிமெண்டை ”ஆண்டி சென்டிமென்ட்’ டாக  மாற்றிவிட்டதால் படம் இந்த சமயத்தில் ஓடாது என்று டிஸ்ட்ரிப்யூட்டர்கள் தொட மறுப்பதாகச் சொன்னார்.  “கதாநாயகனுக்கு எல்லோருமே கிட்னி தானம் குடுக்க வாராப்பல மாத்தி சந்தோஷமா முடிச்சுருங்க,  போட்டி எடுக்கறோம் ” என்றார்கள்.

நாட்கள் மறுபடியும் உருண்டோடி இன்றைய தேதி வரை  (12 – 10 – 1985 ) தயாரிப்பாளரிடமிருந்து தகவல் இல்லை.  அவர் என்ன பாங்கில் வேலை செய்கிறார் என்று விசாரிக்கக்கூட மறந்து விட்டேன்.  நீங்கள் எதாவது பாங்கில் — சின்னப் பையன் போல் இருப்பார்.  பனியன் போடாமல் தங்க சங்கிலியும் மல் ஜிப்பாவும் போட்டிருப்பார்.  அவரைப் பார்த்தால் ‘பொய் முகங்கள்’ என்ன ஆச்சு என்று கேட்டுப் பாருங்கள்.  கதாநாயக இளைஞனை என்னவோ பேர் சொன்னார்களே — ஒரு முறை கமல்ஹாசன் வீடு எடிட்டிங் ரூமில் பார்த்தேன்.  ‘காகிதச் சங்கிலிகள்‘ எழுதினது நான்தான் என்று அறிமுகமானதும் ஏதோ சபையில் கேட்ட காரியம் பண்ணினவனைப் போலப் பார்த்தார்.  சி.வி. ராஜேந்திரன் இப்போதெல்லாம் நன்றாக ஓடிச் சளைத்த இந்திப்பட ரீ-மேக்குகளை செய்கிறார்.  வெங்கட் பிராமணர்கள் கோபித்துக் கொள்ளும்படி நாடகங்கள் எழுதுகிறார்.

சமீபத்தில் எனக்கு ஒரு போன் கால் வந்தது.  “சுஜாதா சாருங்களா ?  எம் பேர் ராஜராஜன்ங்க.  ராஜா கிட்ட வொர்க் பண்ணிட்டு இப்ப Friends –ங்கள்ளாம் சேர்ந்து சொந்தப் படம் எடுக்கறோம்.   ‘காகிதச் சங்கிலிகள்‘  ன்னு உங்க சப்ஜெக்ட் ஒண்ணு என்னை அப்படியே உலுக்கிருச்சுங்க.  அதைப் பண்ணனும்னு ரொம்ப நாளா ……”

“ராங் நம்பர் ! ” என்று போனை வைத்து விட்டு அதன் இணைப்பையும் பிடுங்கி விட்டேன்.

சுஜாதா பதில்கள் – பாகம் 1  (உயிர்மை பதிப்பகம்)

வ.செ.வளர்செல்வன்,  நத்தக்காடையூர்.
எழுத்தாளர் சுஜாதாவின் நாவல்களில் சராசரி மனிதர் ரங்கராஜனைப் பாதித்த நாவல்கள் எவை ?
குருபிரசாதின் கடைசி தினம் ,  காகிதச் சங்கிலிகள்.


[sujatha.jpg]

(கனவுத் தொழிற்சாலை தொடரும்…)

தொடர்புடைய பதிவுகள்:

கனவுத் தொழிற்சாலை- சுஜாதாவின் “விக்ரம்”- 1

கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “24 ரூபாய் தீவு”

கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் ‘நினைத்தாலே இனிக்கும்’

கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் ‘கரையெல்லாம் செண்பகப்பூ’

கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “ஜன்னல் மலர்”

கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “ப்ரியா”

கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “அனிதா இளம் மனைவி”

கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “காயத்ரி”