கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் ‘நினைத்தாலே இனிக்கும்’சுஜாதாவுடைய  படமாக்கப் பட்ட கதைகளில் நினைத்தாலே இனிக்கும் மட்டும் கதை வடிவில் பத்திரிக்கைகளில் வந்ததில்லை. மற்ற கதைகளை எவ்வாறு சிதைத்தார்கள் என்பது வாசகர்களுக்கு தெரியும்.
சுஜாதா பதில்கள்

தேனி ராஜதாசன், தேனி.
முதன் முதலில் எந்தத் திரைப்படத்திற்குக் கதை எழுதினீர்கள் ?
காயத்ரி என்கிற என் தொடர்கதையைப் படமாக எடுத்தார்கள்.
முதல் முதல் எழுதிய கதை வசனம்  “நினைத்தாலே இனிக்கும்”


கணையாழியின் கடைசிப் பக்கங்கள் – சுஜாதா (பிப்ரவரி 1 , 1978)

https://i0.wp.com/eindianmovie.com/wp-content/uploads/2009/05/ninaithale-innikkum.jpghttps://i1.wp.com/upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/18/K_Balachander.jpg/84px-K_Balachander.jpg
டைரக்டர் திரு பாலச்சந்தருக்கு ஒரு திரைக்கதை எழுதிக் கொடுக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்கிறது.  பாலசந்தர் இத்தனை படங்கள் எடுத்தும், தமிழ் சினிமா ரசிகரின் குண விசேஷங்கள் இன்னும் பிடிபடவில்லை என்கிறார்.  தற்போது பிரபலமாயிருக்கும் நடிகர் நடிகையினரின் பெரும்பாலோர் அவரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள்.’Are they grateful ?’ என்று கேட்டேன்.

“முதல் தீபாவளிக்கு வந்து சேவிச்சுட்டுப் போவாங்க. அடுத்த தீபாவளிக்கு டெலிபோன்ல  இருக்காரான்னு கேட்பாங்க.  மூணாவது தீபாவளிக்கு மறந்து போய்டுவாங்க”  என்றார்.

கணையாழியின் கடைசிப் பக்கங்கள் – சுஜாதா (டிசம்பர்,  1978)

https://i1.wp.com/upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/18/K_Balachander.jpg/84px-K_Balachander.jpg

பாலச்சந்தருக்கு நான் எழுதிக் கொண்டிருக்கும் திரைக்கதையின் discussion ல் அவர் ‘என் பிரபலமும், உங்கள் பிரபலமும் இந்தப் படத்தில் ஒரு விதமான liability ” என்றது உண்மை என்று பட்டது.  நானும் நவ சினிமாவைப் பற்றி ஓஹோ என்று பேசுகிறேன்.  அவரும் புதிய முறைகளைக் கையாள்கிறார்.  இருவரும் சேரும் படத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும்.  அதைத் தாக்குப் பிடிக்க முடியாது என்றுதான் தோன்றுகிறது.  இந்தக் கதை மலேசியா, கலர், பிரபல நடிகர்கள், புதிய நடிகை, பாட்டு என்ற அம்சங்களுடன் எடுக்கப் படுகிறது.  இவைகளை வைத்துக்கொண்டு Emotion packed என பிழியப் பிழிய அழ வைத்தால் எதற்கு மலேசியா போய் அழ வேண்டும் ?  மெட்ராசிலேயே அழலாம் என்பார்கள்.  Light ஆக எடுத்தால் இதுக்குப் போய் இவ்வளவு செலவழித்து எடுக்கலாமா என்பார்கள்.  Art film மாதிரி எடுத்தால் அதைப் பத்தி புகழ்வார்கள்.  சில்லறை புரளாது.  சிக்கல்.

சந்தோஷம் நிறைந்த படம் எடுப்பது என்று முடிவு செய்தோம்.  எப்படிப்பட்ட படம் என்பதை முன்பே விளம்பரங்களில் சொல்லிவிட்டால் இந்த ‘எதிர்பார்ப்பு’ சமாசாரம் கொஞ்சம் கான்சல் ஆகும் என்று தோன்றியது.  பாக்கியை வெள்ளித் திரையில் காண்க….

https://i0.wp.com/eindianmovie.com/wp-content/uploads/2009/05/ninaithale-innikkum.jpg
நினைத்தாலே இனிக்கும் படத்தை படமாக்கியது குறித்த உங்களது கருத்து என்ன? என்று சுஜாதாவைக் கேட்டதற்கு, ஒரு படம் எவ்வாறு உருவாக்கக் கூடாது என்பதற்கு நினைத்தாலே இனிக்கும் படம் ஒரு உதாரணம் என பதிலளித்தார்.திட்டமிடாமல் படம் பிடிக்க சிங்கப்பூர் சென்று கால விரயமும், நடிகர்களின் கால்க்ஷ£ட் விரயமும் செய்து, பின்பு சென்னை வந்து கதையை மாற்றச் சொன்னதாக குறிப்பிட்டார்.போதாக்குறைக்கு பாலச்சந்தர் அக்காலக் கட்டத்தில் இந்தியா வந்த அபா குழுவினால் கவரப்பட்டு நிறைய பாடல்களை படத்தில் சேர்த்துவிட்டார் என்றும், தாம் எழுதிய ஸ்கிரிப்ட் சிங்கப்பூரில் விறுவிறுப்பான சம்பவங்கள் நடைபெறும் ஸ்கிரிப்ட் என்றும் கூறினார்.

https://i2.wp.com/www.rajinikanth.com/rajini120.jpg

அதை ஒரு கதையாக தற்போது வெளியிடலாமே? என்று கேட்டோம். ஸ்கிரிப்ட் அனந்துவிடம் கொடுத்தது திருப்பி வாங்கவில்லை என்று கூறினார்.
சுஜாதா பதில்கள்

அ.ச. அலெக்ஸ் கமல், தி. அத்திப்பாக்கம்.
கவிஞர் கண்ணதாசனை நீங்கள் சந்தித்ததுண்டா ?
உண்டு.  “நினைத்தாலே இனிக்கும்” கம்போசிங்கின்போது.  சில பொதுக்கூட்ட மேடைகளில்.

எங்கேயும் எப்போதும் சங்கீதம்……   சந்தோஷம்! (கற்றதும் பெற்றதும்….)


1978 -ல், ‘நினைத்தாலே இனிக்கும்’ பாடல்பதிவின் போது  அவரை நேரில் சந்தித்துக் கொஞ்சநேரம் பேசும்  மறக்க முடியாத வாய்ப்பு கிடைத்தது.  அதற்கு முன், ‘இதயம் பேசுகிறது’ பத்திரிகை ஏற்பாடு செய்திருந்த விழா மேடையில், ஆசிரியர் மணியன் என்னைக் கவியரசுக்கு மாலை அணிவிக்கச் சொன்னார்.  அந்த விழாவில், கண்ணதாசனின் தெளிவான பேச்சைக் கேட்டு ரசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.’நினைத்தாலே இனிக்கும்’ படத்துக்கு நான் வசனம் எழுதினேன்.  சங்கீதக் கச்சேரி செய்ய சிங்கப்பூர் செல்லும் இரண்டு இளைஞர்களின் ஆர்க்கெஸ்ட்ரா ட்ரூப்பைப் பற்றிய கதை.  கே.பாலசந்தர்  இயக்கிய அந்தப் படத்தில் ரஜினி, கமல் இருவரும் நடித்தனர்.எம். எஸ்.விஸ்வநாதன் இசைக்கு கண்ணதாசன் பாடல்கள் எழுதினார்.  முதல் பாட்டின் கம்போசிங் சென்னை, ப்ரெசிடென்ட் ஹோட்டல் அறையில் நடைபெற்றது.  “நீங்களும் வாருங்கள்.  கண்ணதாசனும் விஸ்வநாதனும் சேர்ந்து பணிபுரிவதைப் பார்ப்பதே ஒரு சுவாரஸ்யமான அனுபவமாக இருக்கும்” என்றார் பாலசந்தர்.  சென்றேன்.முதலில் ஆர்மோனியப் பெட்டி வந்தது.  பின் எம்.எஸ்.வி வந்தார்.   பட்டனை அழுத்தி, டிபன் வந்தது.  அதன்பின், கசங்கல் இல்லாத தூய வெள்ளை உடையில் வந்தார் கண்ணதாசன்.  அகலமான நெற்றியில் குங்குமப்பொட்டு.  மெலிதான, அழுந்த வாரிய தலைமுடி.  தாராளமான புன்னகை.  ‘பெண்டிக் சொல்யூஷன்’ வைத்து சர்க்கரை இருக்கிறதா என்று பார்த்துவிட்டுத்தான்,  காபிக்கு சர்க்கரை போடச் சொன்னார்.

எம்.எஸ்.வீயும், கவிஞரும் அன்யோன்யமாகப் பழகிக்கொண்டார்கள்.

“விசு,  என்ன ட்யூன் ?”

“அண்ணே!  சங்கீதத்தைப் பற்றிய உற்சாகமான ட்யூன்!”

“வாசி! ”

விஸ்வநாதனின் விரல்கள் ஆர்மோனியத்தில் உலவ, அவருக்கே உரிய வசீகரமான குரலில், “தன் னானே  தன்னானே  தன்னானே  தன்னானே” என்று பாடினார்.  உடனேயே கவிஞர்,  “எங்கேயும்  எப்போதும்  சங்கீதம்,  சந்தோஷம் ” என்றார்.  “பாடிப் பாரு !”

“கச்சிதமாக இருக்கு, கவிஞரே !””அடுத்த அடி. ?””தானனன்னே  தானனன்னே  தானனன்னே  தானனன்னே…!””தன்னானேக்கு பதில் தான னன்னேயா ? சரி கொஞ்சம் தத்துவம் பேசலாமா ?” என்று டைரக்டரைப் பார்த்தார், கவிஞர்.

பாலசந்தர், “தாராளமா!  உங்களுக்குச் சொல்லணுமா கவிஞரே ! ”

“ராத்திரிகள் வந்துவிட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்…!”    “சரியா ?”

“Perfect !”

விஸ்வநாதன் பாடப் பாட,  கண்ணதாசன் அத்தனை சரணங்களையும்  (“காலை ஜப்பானில் காபி….  மாலை நியூயார்க்கில்  காபரே…  அவங்க ஊரூரா போறாங்கல்ல ? “)  உடனுக்குடன் உதிர்த்ததை பஞ்சு அருணாசலம் அழகான கையெழுத்தில் எழுதித்தர,  சில மணி நேரங்களில் முழுப் பாட்டும் எழுதப்பட்டது.

இடையிடையே, கண்ணதாசனுடன் பேச்சுக் கொடுத்தேன்.  “எப்படி இவ்வளவு சரளமா வார்த்தைகள் வருது ? ”

“தமிழ்ல ஆதார சந்தத்தைப் பிடிச்சுட்டாப் போதும்!  பாருங்க,  சீதைக்கு எத்தனை பெயர்கள் ?  சீதா — நேர் நேர்;  ஜானகி — நேர்நிரை;  ஜனகா — நிரைநேர்;  வைதேகி — நேர் நேர் நேர் ….  இப்படி எந்தச் சந்தம் வேணுமோ அந்தச் சந்தத்துக்கு வார்த்தைகள் போட்டுக்கலாம்.  என்ன, எல்லா வார்த்தையும் தெரியணும்… அவ்வளவு தான்.   கம்ப இராமாயணத்தில் ஒவ்வொரு படலத்திலும், பாடலிலும் ஒரு புது வார்த்தை கிடைக்கும் !”

மறுநாள் ரிக்கார்டிங்குங்கு  கண்ணதாசன் வந்து தலையைக் காட்டிவிட்டுப் போனார்.  அவர் வேலை முதல் நாளே முடிந்துவிட்டது .

அதன்பின் கண்ணதாசனை நான் சந்திக்கவில்லை.

அவர் உடல்நலம் குன்றி, சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றதும்,  தாய் நாட்டுக்குத் திரும்பிய நிலையம், இளம் வயதில் மறைந்ததும் என் மனத்தை உருக்கிய நிகழ்ச்சிகள்.  ஏறத்தாழ 30 ஆண்டுகளாகியும் அந்தப் பாடல் இன்றும்கூட எல்லா மெல்லிசை நிகழ்ச்சிகளிலும் கட்டியம் கூறும் பாடலாகப் பாடப்படுகிறது.  கண்ணதாசன் அதைத்தான் செய்தார்…   எங்கேயும் எப்போதும் சங்கீதத்தையும், சந்தோஷத்தையும் பரப்பினார்.  உலகில் தமிழர்கள் வாழும் ஏதாவது ஒரு மூலையில் பயணிக்கும் கார்களிலும்,  இல்லங்களிலும்  அவரது ஏதாவது ஒரு வரி ஒலிக்காத நேரமே இல்லை.

நினைத்தாலே இனிக்கும் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.   சுஜாதா கதை வசனம் எழுதி, கே. பாலசந்தர் இயக்கி கமல்-ரஜினி இருவரும் இணைந்து நடித்து வெளிவந்த நினைத்தாலே இனிக்கும் படத்தின் பாடல்களை மறக்க முடியுமா!

எங்கேயும் எப்போதும்……

சம்போ சிவ சம்போ……..

நம்ம ஊரு சிங்காரி….

ரஜினி காமெடி


[sujatha.jpg]

(கனவுத் தொழிற்சாலை தொடரும்…)

தொடர்புடைய பதிவுகள்:

கனவுத் தொழிற்சாலை- சுஜாதாவின் “விக்ரம்”- 1

கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “24 ரூபாய் தீவு”

கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் ‘ ‘காகிதச் சங்கிலிகள்”

கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் ‘கரையெல்லாம் செண்பகப்பூ’

கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “ஜன்னல் மலர்”

கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “ப்ரியா”

கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “அனிதா இளம் மனைவி”

கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “காயத்ரி”