கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் ‘நினைத்தாலே இனிக்கும்’சுஜாதாவுடைய  படமாக்கப் பட்ட கதைகளில் நினைத்தாலே இனிக்கும் மட்டும் கதை வடிவில் பத்திரிக்கைகளில் வந்ததில்லை. மற்ற கதைகளை எவ்வாறு சிதைத்தார்கள் என்பது வாசகர்களுக்கு தெரியும்.
சுஜாதா பதில்கள்

தேனி ராஜதாசன், தேனி.
முதன் முதலில் எந்தத் திரைப்படத்திற்குக் கதை எழுதினீர்கள் ?
காயத்ரி என்கிற என் தொடர்கதையைப் படமாக எடுத்தார்கள்.
முதல் முதல் எழுதிய கதை வசனம்  “நினைத்தாலே இனிக்கும்”


கணையாழியின் கடைசிப் பக்கங்கள் – சுஜாதா (பிப்ரவரி 1 , 1978)

https://i0.wp.com/eindianmovie.com/wp-content/uploads/2009/05/ninaithale-innikkum.jpghttp://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/18/K_Balachander.jpg/84px-K_Balachander.jpg
டைரக்டர் திரு பாலச்சந்தருக்கு ஒரு திரைக்கதை எழுதிக் கொடுக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்கிறது.  பாலசந்தர் இத்தனை படங்கள் எடுத்தும், தமிழ் சினிமா ரசிகரின் குண விசேஷங்கள் இன்னும் பிடிபடவில்லை என்கிறார்.  தற்போது பிரபலமாயிருக்கும் நடிகர் நடிகையினரின் பெரும்பாலோர் அவரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள்.’Are they grateful ?’ என்று கேட்டேன்.

“முதல் தீபாவளிக்கு வந்து சேவிச்சுட்டுப் போவாங்க. அடுத்த தீபாவளிக்கு டெலிபோன்ல  இருக்காரான்னு கேட்பாங்க.  மூணாவது தீபாவளிக்கு மறந்து போய்டுவாங்க”  என்றார்.

கணையாழியின் கடைசிப் பக்கங்கள் – சுஜாதா (டிசம்பர்,  1978)

http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/18/K_Balachander.jpg/84px-K_Balachander.jpg

பாலச்சந்தருக்கு நான் எழுதிக் கொண்டிருக்கும் திரைக்கதையின் discussion ல் அவர் ‘என் பிரபலமும், உங்கள் பிரபலமும் இந்தப் படத்தில் ஒரு விதமான liability ” என்றது உண்மை என்று பட்டது.  நானும் நவ சினிமாவைப் பற்றி ஓஹோ என்று பேசுகிறேன்.  அவரும் புதிய முறைகளைக் கையாள்கிறார்.  இருவரும் சேரும் படத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும்.  அதைத் தாக்குப் பிடிக்க முடியாது என்றுதான் தோன்றுகிறது.  இந்தக் கதை மலேசியா, கலர், பிரபல நடிகர்கள், புதிய நடிகை, பாட்டு என்ற அம்சங்களுடன் எடுக்கப் படுகிறது.  இவைகளை வைத்துக்கொண்டு Emotion packed என பிழியப் பிழிய அழ வைத்தால் எதற்கு மலேசியா போய் அழ வேண்டும் ?  மெட்ராசிலேயே அழலாம் என்பார்கள்.  Light ஆக எடுத்தால் இதுக்குப் போய் இவ்வளவு செலவழித்து எடுக்கலாமா என்பார்கள்.  Art film மாதிரி எடுத்தால் அதைப் பத்தி புகழ்வார்கள்.  சில்லறை புரளாது.  சிக்கல்.

சந்தோஷம் நிறைந்த படம் எடுப்பது என்று முடிவு செய்தோம்.  எப்படிப்பட்ட படம் என்பதை முன்பே விளம்பரங்களில் சொல்லிவிட்டால் இந்த ‘எதிர்பார்ப்பு’ சமாசாரம் கொஞ்சம் கான்சல் ஆகும் என்று தோன்றியது.  பாக்கியை வெள்ளித் திரையில் காண்க….

https://i0.wp.com/eindianmovie.com/wp-content/uploads/2009/05/ninaithale-innikkum.jpg
நினைத்தாலே இனிக்கும் படத்தை படமாக்கியது குறித்த உங்களது கருத்து என்ன? என்று சுஜாதாவைக் கேட்டதற்கு, ஒரு படம் எவ்வாறு உருவாக்கக் கூடாது என்பதற்கு நினைத்தாலே இனிக்கும் படம் ஒரு உதாரணம் என பதிலளித்தார்.திட்டமிடாமல் படம் பிடிக்க சிங்கப்பூர் சென்று கால விரயமும், நடிகர்களின் கால்க்ஷ£ட் விரயமும் செய்து, பின்பு சென்னை வந்து கதையை மாற்றச் சொன்னதாக குறிப்பிட்டார்.போதாக்குறைக்கு பாலச்சந்தர் அக்காலக் கட்டத்தில் இந்தியா வந்த அபா குழுவினால் கவரப்பட்டு நிறைய பாடல்களை படத்தில் சேர்த்துவிட்டார் என்றும், தாம் எழுதிய ஸ்கிரிப்ட் சிங்கப்பூரில் விறுவிறுப்பான சம்பவங்கள் நடைபெறும் ஸ்கிரிப்ட் என்றும் கூறினார்.

https://i2.wp.com/www.rajinikanth.com/rajini120.jpg

அதை ஒரு கதையாக தற்போது வெளியிடலாமே? என்று கேட்டோம். ஸ்கிரிப்ட் அனந்துவிடம் கொடுத்தது திருப்பி வாங்கவில்லை என்று கூறினார்.
சுஜாதா பதில்கள்

அ.ச. அலெக்ஸ் கமல், தி. அத்திப்பாக்கம்.
கவிஞர் கண்ணதாசனை நீங்கள் சந்தித்ததுண்டா ?
உண்டு.  “நினைத்தாலே இனிக்கும்” கம்போசிங்கின்போது.  சில பொதுக்கூட்ட மேடைகளில்.

எங்கேயும் எப்போதும் சங்கீதம்……   சந்தோஷம்! (கற்றதும் பெற்றதும்….)


1978 -ல், ‘நினைத்தாலே இனிக்கும்’ பாடல்பதிவின் போது  அவரை நேரில் சந்தித்துக் கொஞ்சநேரம் பேசும்  மறக்க முடியாத வாய்ப்பு கிடைத்தது.  அதற்கு முன், ‘இதயம் பேசுகிறது’ பத்திரிகை ஏற்பாடு செய்திருந்த விழா மேடையில், ஆசிரியர் மணியன் என்னைக் கவியரசுக்கு மாலை அணிவிக்கச் சொன்னார்.  அந்த விழாவில், கண்ணதாசனின் தெளிவான பேச்சைக் கேட்டு ரசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.’நினைத்தாலே இனிக்கும்’ படத்துக்கு நான் வசனம் எழுதினேன்.  சங்கீதக் கச்சேரி செய்ய சிங்கப்பூர் செல்லும் இரண்டு இளைஞர்களின் ஆர்க்கெஸ்ட்ரா ட்ரூப்பைப் பற்றிய கதை.  கே.பாலசந்தர்  இயக்கிய அந்தப் படத்தில் ரஜினி, கமல் இருவரும் நடித்தனர்.எம். எஸ்.விஸ்வநாதன் இசைக்கு கண்ணதாசன் பாடல்கள் எழுதினார்.  முதல் பாட்டின் கம்போசிங் சென்னை, ப்ரெசிடென்ட் ஹோட்டல் அறையில் நடைபெற்றது.  “நீங்களும் வாருங்கள்.  கண்ணதாசனும் விஸ்வநாதனும் சேர்ந்து பணிபுரிவதைப் பார்ப்பதே ஒரு சுவாரஸ்யமான அனுபவமாக இருக்கும்” என்றார் பாலசந்தர்.  சென்றேன்.முதலில் ஆர்மோனியப் பெட்டி வந்தது.  பின் எம்.எஸ்.வி வந்தார்.   பட்டனை அழுத்தி, டிபன் வந்தது.  அதன்பின், கசங்கல் இல்லாத தூய வெள்ளை உடையில் வந்தார் கண்ணதாசன்.  அகலமான நெற்றியில் குங்குமப்பொட்டு.  மெலிதான, அழுந்த வாரிய தலைமுடி.  தாராளமான புன்னகை.  ‘பெண்டிக் சொல்யூஷன்’ வைத்து சர்க்கரை இருக்கிறதா என்று பார்த்துவிட்டுத்தான்,  காபிக்கு சர்க்கரை போடச் சொன்னார்.

எம்.எஸ்.வீயும், கவிஞரும் அன்யோன்யமாகப் பழகிக்கொண்டார்கள்.

“விசு,  என்ன ட்யூன் ?”

“அண்ணே!  சங்கீதத்தைப் பற்றிய உற்சாகமான ட்யூன்!”

“வாசி! ”

விஸ்வநாதனின் விரல்கள் ஆர்மோனியத்தில் உலவ, அவருக்கே உரிய வசீகரமான குரலில், “தன் னானே  தன்னானே  தன்னானே  தன்னானே” என்று பாடினார்.  உடனேயே கவிஞர்,  “எங்கேயும்  எப்போதும்  சங்கீதம்,  சந்தோஷம் ” என்றார்.  “பாடிப் பாரு !”

“கச்சிதமாக இருக்கு, கவிஞரே !””அடுத்த அடி. ?””தானனன்னே  தானனன்னே  தானனன்னே  தானனன்னே…!””தன்னானேக்கு பதில் தான னன்னேயா ? சரி கொஞ்சம் தத்துவம் பேசலாமா ?” என்று டைரக்டரைப் பார்த்தார், கவிஞர்.

பாலசந்தர், “தாராளமா!  உங்களுக்குச் சொல்லணுமா கவிஞரே ! ”

“ராத்திரிகள் வந்துவிட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்…!”    “சரியா ?”

“Perfect !”

விஸ்வநாதன் பாடப் பாட,  கண்ணதாசன் அத்தனை சரணங்களையும்  (“காலை ஜப்பானில் காபி….  மாலை நியூயார்க்கில்  காபரே…  அவங்க ஊரூரா போறாங்கல்ல ? “)  உடனுக்குடன் உதிர்த்ததை பஞ்சு அருணாசலம் அழகான கையெழுத்தில் எழுதித்தர,  சில மணி நேரங்களில் முழுப் பாட்டும் எழுதப்பட்டது.

இடையிடையே, கண்ணதாசனுடன் பேச்சுக் கொடுத்தேன்.  “எப்படி இவ்வளவு சரளமா வார்த்தைகள் வருது ? ”

“தமிழ்ல ஆதார சந்தத்தைப் பிடிச்சுட்டாப் போதும்!  பாருங்க,  சீதைக்கு எத்தனை பெயர்கள் ?  சீதா — நேர் நேர்;  ஜானகி — நேர்நிரை;  ஜனகா — நிரைநேர்;  வைதேகி — நேர் நேர் நேர் ….  இப்படி எந்தச் சந்தம் வேணுமோ அந்தச் சந்தத்துக்கு வார்த்தைகள் போட்டுக்கலாம்.  என்ன, எல்லா வார்த்தையும் தெரியணும்… அவ்வளவு தான்.   கம்ப இராமாயணத்தில் ஒவ்வொரு படலத்திலும், பாடலிலும் ஒரு புது வார்த்தை கிடைக்கும் !”

மறுநாள் ரிக்கார்டிங்குங்கு  கண்ணதாசன் வந்து தலையைக் காட்டிவிட்டுப் போனார்.  அவர் வேலை முதல் நாளே முடிந்துவிட்டது .

அதன்பின் கண்ணதாசனை நான் சந்திக்கவில்லை.

அவர் உடல்நலம் குன்றி, சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றதும்,  தாய் நாட்டுக்குத் திரும்பிய நிலையம், இளம் வயதில் மறைந்ததும் என் மனத்தை உருக்கிய நிகழ்ச்சிகள்.  ஏறத்தாழ 30 ஆண்டுகளாகியும் அந்தப் பாடல் இன்றும்கூட எல்லா மெல்லிசை நிகழ்ச்சிகளிலும் கட்டியம் கூறும் பாடலாகப் பாடப்படுகிறது.  கண்ணதாசன் அதைத்தான் செய்தார்…   எங்கேயும் எப்போதும் சங்கீதத்தையும், சந்தோஷத்தையும் பரப்பினார்.  உலகில் தமிழர்கள் வாழும் ஏதாவது ஒரு மூலையில் பயணிக்கும் கார்களிலும்,  இல்லங்களிலும்  அவரது ஏதாவது ஒரு வரி ஒலிக்காத நேரமே இல்லை.

நினைத்தாலே இனிக்கும் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.   சுஜாதா கதை வசனம் எழுதி, கே. பாலசந்தர் இயக்கி கமல்-ரஜினி இருவரும் இணைந்து நடித்து வெளிவந்த நினைத்தாலே இனிக்கும் படத்தின் பாடல்களை மறக்க முடியுமா!

எங்கேயும் எப்போதும்……

சம்போ சிவ சம்போ……..

நம்ம ஊரு சிங்காரி….

ரஜினி காமெடி


[sujatha.jpg]

(கனவுத் தொழிற்சாலை தொடரும்…)

தொடர்புடைய பதிவுகள்:

கனவுத் தொழிற்சாலை- சுஜாதாவின் “விக்ரம்”- 1

கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “24 ரூபாய் தீவு”

கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் ‘ ‘காகிதச் சங்கிலிகள்”

கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் ‘கரையெல்லாம் செண்பகப்பூ’

கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “ஜன்னல் மலர்”

கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “ப்ரியா”

கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “அனிதா இளம் மனைவி”

கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “காயத்ரி”

12 Responses to கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் ‘நினைத்தாலே இனிக்கும்’

 1. Ashok says:

  ஆஹா என்ன அருமையான பாடல்கள். அந்தக் காலத்தில் இந்த பாடல்களை கேட்பதற்க்க்காகவே திருச்சியில் ஒரு டீ கடைக்கு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை போவோம். பழைய நினைவுகளை ஒரு முறை அசை போட வைத்ததற்கு மிக்க நன்றி.

 2. srinivas uppili says:

  சரியாகச் சொன்னீர்கள் Ashok.

  உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டதற்கு மிகவும் நன்றி.

  • Rajagopalan says:

   ……”உலகில் தமிழர்கள் வாழும் ஏதாவது ஒரு மூலையில் பயணிக்கும் கார்களிலும், இல்லங்களிலும் அவரது எதாவது ஒரு வரி ஒலிக்காத நேரமே இல்லை.”

   சத்தியமான வார்த்தைகள்
   ராஜூ-துபாய்

 3. சாரதா says:

  ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்துக்கு பாலச்சந்தர் இட்ட துணைத்தலைப்பு (தமிழில்: சப்-டைட்டில்) ‘இது ஒரு தேனிசை மழை’… மெல்லிசை மன்னரின் இசையில் பாடல்களனைத்தும் தேன் சொட்டின…

  1. ‘எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்’ (இதை ரீமிக்ஸ் செய்தவன் நாசமாய்ப்போக)
  2. ‘ஜெகமே தந்திரம் சுகமே மந்திரம் மனிதன் யந்திரம் சிவசம்போ’
  3. ‘நம்ம ஊரு சிங்கார் சிங்கப்பூரு வந்தாளாம்’
  4. ‘காத்திருந்தேன் காத்திருந்தேன் காதல் மனம் நோகும்வரை’
  5. ‘நிழல் கண்டவன் நானுமிங்கே’
  6. ‘பாரதி கண்ணம்மா.. நீயடி சின்னம்மா’
  7. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர் அன்பே எங்கள் உலக தத்துவம்’
  8. ‘தட்டிக்கேட்க ஆளில்லேன்னா’
  9. ‘சோயோனாரா… வேஷம் கலைந்தது காதல் நாடகம் முடிந்தது’
  10. ‘இனிமை நிறைந்த உலகம் இருக்கு இதுல உனக்கு கவலை எதுக்கு’

  ஆனால் அந்த வருடம் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை தமிழ்நாடு அரசு ‘நிறம் மாறாத பூக்களு’க்காக இளையராஜாவிடம் தூக்கிக்கொடுத்தது. நாலாபக்கமும் கண்டனக்கணைகள் புறப்பட திக்குமுக்காடிப்போனது எம்.ஜி.ஆர்.அரசு.

  • Ashok says:

   11. ஆனந்த தாண்டவமோ…..
   12 . வானிலே மேடை அமைத்தது.
   13 . நினைத்தாலே இனிக்கும்

   விருது பற்றிய செய்தி இப்போது தான் கேள்விப்படுகிறேன்
   தகவலுக்கு நன்றி

 4. இந்தப் படம் வெளிவந்த சமயத்தில் MSVயின் திரை உலகப் பயணம் மெல்ல மெல்ல முடிவுக்கு வந்து கொண்டிருந்தது. இளையராஜா என்ற காட்டாற்று வெள்ளத்தை அவரால் சமாளிக்க முடியாமல் இருந்தது. இசை இரசிகர்களும் பழையவர், புதியவர் என்று இரண்டாகப் பிரிந்து இருந்த சமயம், MSVயின் பழைய பாணியிலான இசை அமைந்த பாடல்கள் பெரிதாக ஹிட் ஆகாததால் நொந்து போய் இருந்த MSVயின் இரசிகர்களுக்கு இந்தப் படம் இது ஒரு தேனிசை மழை என்று அதிரடியான விளம்பரத்துடன் (படத்தின் டைட்டிலில் கூட போட்டனர்)வெளிவந்து விளம்பரத்திற்கு ஒரு இம்மியளவுக்கூட குற்றம் கற்பிக்காமல் பாடல்கள் மெகா ஹிட் ஆனது, மிகப் பெரிய உற்சாகமாக இருந்தது. கொஞ்ச நாட்களுக்கு காலரைத் தூக்கி விட்டுக் கொண்டு சுற்றிக்கொண்டிருந்தனர்.

  இதில் சோகம் என்னவென்றால் பாடல்கள் மிகப் பெரிய வெற்றியடைந்தும், படம் பப்படம் ஆனதுதான்!

 5. srinivas uppili says:

  நன்றி, ராஜு.

  உமா, மொத்தம் பதினான்கு பாடல்கள் என்று நினைவு. அனைத்தும் மிக அருமை. நல்லதந்தி சொன்னது போல், it was a real comeback for MSV .

  நல்லதந்தி, மிகச் சரியாகச் சொன்னீர்கள்.

  சாரதா, விருது பற்றிய தகவல்கள் எனக்கும் புதிது. பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி.

 6. சாரதா says:

  டியர் நல்லதந்தி…
  நினைத்தாலே இனிக்கும் படம் ஓட்டத்தில் (பப்படம் என்று சொல்லுமளவுக்கு) அவ்வளவு ஒன்றும் மோசமில்லை சென்னையிலும் மற்ற பெரு நகரங்களிலும் பெரிய திரையரங்குகளில் தினசரி மூன்று காட்சிகளாக 11 வாரங்கள் வரை ஓடியது

  இந்தப்படத்தோடு மெல்லிசை மன்னரின் கதை முடிந்தது என்பதுபோல நீங்கள் சொல்லியிருப்பது சரியல்ல. இதற்குப்பின்னரும் பல வெற்றிகளைக்கொடுத்தார். உதாரணமாக பில்லா, திரிசூலம், பொல்லாதவன், போக்கிரி ராஜா, தண்ணீர் தண்ணீர், வறுமையின் நிறம் சிவப்பு, அந்த 7 நாட்கள் போன்றவை இதற்குப்பின்னர் MSV இசையில் வந்து வெற்றியடைந்தவை.

 7. சகோதரி சாரதா!. மெல்லிசை மன்னரின் சினிமா பயணம் முடிவுக்கு வந்து கொண்டிருந்தது என்று தான் குறிப்பிட்டேன். முடிந்ததாகச் சொல்லவில்லை. 🙂

  நினைத்தாலே இனிக்கும் மிகச் சுமாராக ஓடியிருக்கலாம். நகரத்துக் நகரம் வித்தியாசப் படும் இல்லையா?.

  இருந்தாலும் இரண்டில் எதுசரி என்று என்னைக் கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு சாரதா சொல்வதுதான் சரி என்று ஒத்துக் கொள்வேன். 🙂

 8. Sundararajan S says:

  i have come across your blog recently. when i see the name of sujatha, it attracts me, since from my earlier days i have been a fan of him. almost all books i have either purchsed or read. some books lent to my frineds never returned.
  with regard to the nineithale innikkum, it was one of my favourite movies and i liked all the songs. still i have the collection of all songs in audio and video. it was released when i have started my carrier. MSV scores full marks for that movie. there is no word to praise him.
  just i like to share my views in this
  regard. sundararajan s

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: