கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “24 ரூபாய் தீவு”குமுதத்தில் வெளிவந்த மற்றொரு தொடர்கதை ‘24 ரூபாய் தீவு‘ .  ஓர் இளம் பத்திரிகை நிருபரைப் பற்றியது.  அவன் கையில் ஒரு டயரி கிடைக்கிறது.  அதில் ஓர் அரசியல்வாதியைப் பற்றிய அந்தரங்கமான விஷயங்கள் இருக்கின்றன.  அதைப் பற்றி எழுதப் போவதாகச் சொல்லியிருக்கிற வேளையில்,  டயரியைத் தொலைத்துவிடுகிறான்.  அதைத் தேடி மூர்க்கர்கள் அவன் வீட்டுக்கு வந்து வீட்டையும் அவன் வாழ்க்கையையும் கலைத்துப் போடுகிறார்கள்.  அவர்களுடன் அவனும் அந்த டயரியைத் தேடிக் கண்டு பிடிக்க வேண்டியது அவசியமாகிறது.

இந்தக் கதை முதலில் மலையாளத்தில் எனது நண்பர் காலஞ்சென்ற  வேணு கொடுங்காளூர் மொழிபெயர்ப்பில் வந்தது.  அப்போது கன்னடத்திலும் மொழிபெயர்ப்பில் என் கதைகள் ‘கர்மவீரா’ ,  ‘சுதா’ என்ற பத்திரிகைகளில் வந்துகொண்டிருந்தன.  இதைப்பற்றி கேள்விப்பட்ட நாகாபரணா என்கிற பிரபல இயக்குனர்,  அதைத் திரைப்படமாக எடுக்க விரும்பி, என்னை வந்து சந்தித்தார்.

கன்னடத் திரைப்பட உலகம் அப்போது ஆரோக்கியமாக இருந்தது.  ராஜ்குமார், விஷ்ணுவர்தன், அம்பரீஷ், ஸ்ரீநாத் போன்றவர்கள் ஒரு பக்கம் குடும்பப் படங்கள் எடுத்துக் கொண்டிருந்தாலும்,  கிரீஷ் கர்னாட், பி. வி.காரந்த், சந்திரசேகர், கம்பார் போன்றவர்கள் ‘சம்ஸ்காரா’ ,  ‘வம்சவர்ஷா’  போன்ற படங்கள் மூலம் அதை தேசிய அளவுக்கு உயர்த்தியிருந்தார்கள்.  நாகாபரணா அந்தப் புதிய கன்னட சினிமாவின் இயக்குனர்களில் ஒருவர்.  தியேட்டர் பின்னணியிலிருந்து வந்தவர்.  ‘மைசூரு மல்லிகே’,  ‘நாகமண்டலா’ போன்ற நல்ல படங்களை இயக்கியவர்.  அதனால் சந்தோஷத்துடன் ஒப்புக்கொண்டேன்.  தமிழில்தான் என் நாவல்கள் சரியாக வரவில்லை.  கன்னடத்தில் ஜொலிக்கப் போகிறது.  தேசிய அளவில் அடையாளம் பெற்று டில்லியில் அவார்ட் கிடைக்கப் போகிறது.  அதற்கு என்ன சட்டை போட்டுக் கொள்ளலாம் என்றெல்லாம் யோசித்துக்கொண்டிருந்தேன்.  விதி ஒரு ஓரத்திலிருந்து மெல்ல நகைத்துக்கொண்டிருந்தது.

ஒண்டித்வனி‘  (தனிக்குரல்) என்ற பெயர் வைத்து நாகாபரணா படப்பிடிப்பைத் துவங்க பூஜை போட்டார்கள்.

24 ரூபாய் தீவு‘  கதையைப் பற்றி, அப்போது முன்னணியில் இருந்த நடிகர் அம்பரீஷ் கேள்விப்பட்டார்.  ‘ஒள்ளே கதே’ என்று தன்னிச்சையாக அதில் நடிக்கிறேன் என்று முன்வந்தார்.  அதில் நடிக்கவிருந்த சுந்தர்ராஜன் உடனே நீக்கப்பட்டார்.  கதைக்குக் கேடுகாலம் துவங்கியது.  கன்னட நடிகை மஞ்சுளாவும் ‘நானும் உண்டு’  என்று சேர்ந்து கொண்டார்.  தயாரிப்பாளருக்கு இரட்டிப்பு சந்தோஷம்.

ஒண்டித்வனி‘ -யின் நடிகர்கள் பட்டியல் திருத்தப்பட்டது.  அம்பரீஷ் ஒரு வகையில் சூப்பர் ஸ்டார் கேட்டகெரி — 2 அந்தஸ்தில் இருந்தார்.  (ராஜ்குமார் நம்பர் — 1 )  ‘அம்பரீஷுக்கேற்ப சின்ன மாற்றங்களும் சமரசங்களும் செய்ய வேண்டியிருக்கிறது.  ஒரு சின்ன Fight  சீனு,  சிஸ்டர் வச்சு ஒரு சாங் அவ்வளவுதான்’  என்று  தயாரிப்பாளர் சொன்னார்.  ‘படப்பிடிப்பு பெங்களூரிலிருந்த மைசூர் ராஜா பேலஸில் நடந்து கொண்டிருக்கிறது,  வந்து பாருங்கள்’  என்றார்.  போனேன்…..  நாகரா அலற,  மஞ்சுளா நடனமாட சுற்றிலும் திண்டு  போட்டு  சேட்டுகள் வீற்றிருந்து நோட்டுகளை தலையைச் சுற்றி விசிறிக்கொண்டிருந்தார்கள்.  நான் ‘இதெல்லாம் என் கதையில் எங்கே வருகிறது ?’ என்று என்னுடைய பழக்கமாகிவிட்ட கேள்வியைக் கேட்டேன்.  ‘அம்பரீஷ் நடிப்பதால் கொஞ்சம் கமர்ஷியல் விஷயங்கள் சேர்த்துக்கொள்ள  வேண்டியிருக்கிறது.  மற்றபடி நீங்கள் எழுதியபடியே எடுத்திருக்கிறோம்’  என்றார்.

படம் வெளிவந்து கினோ தியேட்டரில் பார்த்தேன்.  உயிரோட்டமுள்ள ஒரு கதையை இயன்ற அளவுக்கு விகாரப்படுத்தி இருந்தார்கள்.  வெளியே வந்த ரசிகர்கள்,  ‘கதே பரிதவனு யாவனப்பா ?’ என்று அதட்டிக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.  நான் மப்ளரால் முகத்தை மறைத்துக்கொண்டு விலகினேன்.  ரசிகர்களாலும் நிராகரிக்கப்பட்டு ஒரு வாரத்தில் தூக்கப்பட்டது.

நாகாபரணா திறமையுள்ள டைரக்டர்தான் .  ஏழோ, எட்டோ தேசிய விருதுகள் வாங்கியவர்.  அப்பேற்பட்ட டைரக்டராலும்  அந்தப் படத்தைக் காப்பாற்ற முடியவில்லை.

நீதி:  ஒரு கதையை சினிமா எடுத்துக் கெடுக்க நிறைய மார்க்கங்கள் உள்ளன.


உங்களுடைய ‘இருபத்தி நான்கு ரூபாய் தீவு’ கன்னட பதிப்பில் நடித்தது  இப்போது காவிரி பிரச்னைக்காக  மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அம்பரீஷா ? ‘ என்று சில சந்தேக வாசகர்கள் ஈ-மெயில் அனுப்பியிருந்தார்கள்.  அவரேதான்.  அன்று படத்தைக் குழப்பினார்.  இன்று காவிரியை.


[sujatha.jpg]

(கனவுத் தொழிற்சாலை தொடரும்…)

தொடர்புடைய பதிவுகள்:

கனவுத் தொழிற்சாலை- சுஜாதாவின் “விக்ரம்”- 1

கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் ‘நினைத்தாலே இனிக்கும்’

கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் ‘ ‘காகிதச் சங்கிலிகள்”

கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் ‘கரையெல்லாம் செண்பகப்பூ’

கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “ஜன்னல் மலர்”

கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “ப்ரியா”

கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “அனிதா இளம் மனைவி”

கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “காயத்ரி”