கனவுத் தொழிற்சாலை- சுஜாதாவின் “விக்ரம்”- 1சுஜாதா கூறுகிறார்……
திரைப்படமாக வந்த மற்றொரு தொடர்கதை ‘விக்ரம்’.  நண்பர் கமல்ஹாசனுடன் ஒரு தமிழ் James Bond  படம் பண்ண ஆசைப்பட்டோம்.  கமல் பெங்களூர் வந்தார்.  அவருடைய நண்பர் ஊருக்கு வெளியே தன் பண்ணை வீட்டிற்கு அழைத்திருந்தார்.  அங்கே உட்கார்ந்து கதை பண்ணினோம்.  அதை விட அதிகமாகப் பேசினோம்.  அப்போது முன்னணியில் இருந்த டைரக்டர்  ராஜசேகர் தொடர்ந்து வெற்றிப் படங்கள் தந்து கொண்டிருந்தார்.  அவரை டைரக்டராக  வைத்து படப்பிடிப்பு முதலில் கர்நாடகாவில் குதுரேமுக்கில் தொடங்கியது.  நண்பர் சத்யராஜ் அதில் வில்லன்.  பெங்களூரிலிருந்து காரில் பயணம் செய்து குதுரேமுக் சென்றிருந்தேன்.  சும்மா வேடிக்கை பார்க்கத்தான்.  இரவு நேரங்களில் கமல், சத்யராஜ், ராஜசேகர் போன்றவர்களுடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தது நினைவிருக்கிறது.  வருஷம் 1985 .

சத்யராஜ் ‘பிச்சைக்காரன்’ என்ற கற்பனைப் படத்துக்கு நம்பியார், எம்.ஜி.ஆர் போலப் பேசிக் காட்டியது மறக்க முடியாத நகைச்சுவை.  மேலும் நடிகைகளைக் கிட்டத்தில் பார்ப்பதில் உள்ள சங்கடங்களையும் சிரிக்கச் சிரிக்க சொல்வார்.  அவற்றை விவரிக்க முடியாது.

விக்ரம் படப்பிடிப்பு துவங்கிவிட்டதால்,  அசிரியர் எஸ்.ஏ.பி. அந்தப் படத்தின் ஸ்டில்களை வைத்துக்கொண்டே அதன் கதையை குமுதத்தில் தொடர்கதையாக எழுதலாமே என்று யோசனை சொன்னார்.  இதைத் தயாரிப்பாளரான கமலிடம் சொனனபோது, அவர் இந்த உத்தி படத்துக்கு உதவும் என்று சம்மதித்தார்.

விக்ரம் படத்தின் ஸ்டில்களுடன் தொடர்கதை அமர்க்களமாகத் துவங்கியது.  திரைப்படம் உருவாகும்போதே, அது வார இதழ்களில் தொடர்கதையாக வருவதற்கு முன்னோடி, கல்கியின் ‘தியாக பூமி’.  ஆனந்த விகடனில் முப்பதுகளிலேயே இந்தப் புதுமை செய்திருக்கிறார்கள்.

தனிப்பட்ட நீல கலர் பேப்பரில் பாபநாசம் சிவன், எஸ்.டி.சுப்புலட்சுமி  போன்றோர் தோன்றும் புகைப்படங்களுடன் வெளிவந்தது.  அதன்பின் குமுதத்தில் பாக்யராஜின் ‘மௌன கீதம்’ தான் என் நினைவின்படி சினிமா காட்சிகளுடன் தொடர்கதையாக வந்தது.  இம்மாதிரி கதையும், படமும் இணைந்து வருவதில் ஒரு பெரிய சிக்கல் உண்டு என்பதைக் கொஞ்சம் லேட்டாகத்தான் அறிந்து கொண்டேன்.

விக்ரம் விக்ரம் …..

[sujatha.jpg]

(கனவுத் தொழிற்சாலை தொடரும்…)

தொடர்புடைய பதிவுகள்:

கனவுத் தொழிற்சாலை- சுஜாதாவின் “விக்ரம்”- 2