கனவுத் தொழிற்சாலை- சுஜாதாவின் “விக்ரம்”- 2சுஜாதா கூறுகிறார்……

தொடர் கதையை வாராவாரம் கட்டாயமாக எழுத வேண்டும்.  அதற்குப் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறவேண்டும்.  மேலும் கதை செல்லும் அடுத்தடுத்த போக்கிலேயே படமும் பிடிக்க வேண்டும்.  இது இரண்டுமே நடைமுறையில் சாத்தியமில்லை.  கால்ஷீட்டைப் பொறுத்து, முன்னே பின்னே எடுப்பார்கள்.  ராப்பகலாக ஒரு வாரம் எடுப்பார்கள்.  அதன்பின் வீட்டுக்குப் போய் பணம் சேர்க்க ஒரு மாதம் கேப் கொடுப்பார்கள்.  விக்ரம் கதை முதல் பாதி சரியாகவே வந்தது.  இரண்டாவது பாதி கட்டவிழ்ந்து போய்விட்டது.  டைரக்டர்  ஒரே சமயத்தில் ரஜினி படத்தையும் ஒப்புக் கொண்டு பிசியாகிவிட்டார்.  அவர் வரவே இல்லை.  கமல் காத்திருந்து பார்த்து சந்தன பாரதியை வைத்து மிச்சமுள்ள பகுதிகளை எடுத்தார்.  அம்ஜத் கான், டிம்பிள் கபாடியா போன்ற வடநாட்டு நடிகர்களின் கால்ஷீட்  பிரச்னைகள் இருந்தன.  விக்ரம் முற்றுப்பெறாத நிலையில்,  கதை எப்படிப் போகப் போகிறது என்று தெரியாத நிலையில், கதையைத் தொடர்ந்து வாராவாரம் எழுத வேண்டியிருந்த சங்கடமான நிலை ஏற்பட்டது எனக்கு.  ஒரு கட்டத்துக்குப்பின் இஷ்டப்படி அதை விதிவசம் ஒப்படைத்து இழுத்துச் சென்றேன்.  அதற்கேற்ப படங்கள் கிடைக்காமல் கமலையும் லிஸ்ஸி என்ற மலையாள நடிகையின் படத்தையுமே போட வேண்டியதாயிற்று.  அவைதான் கைவசம் இருந்தன.

https://i2.wp.com/www.hummaa.com/static_content/images/meta/img/tamil/movies/vikram.gif

விக்ரம்‘ படம் ஒருவழியாக 1986 -ல் வெளிவந்தது.  இன்றும் அவ்வப்போது தொலைக்காட்சியில் காட்டுகிறார்கள்.  பார்த்திருப்பீர்கள்.  தடபுடலாகத் துவங்கி எங்கோ பரதேசம் போய்,  முடித்தால் போதும் என்றாகிவிட்ட ஆயாசம் படத்தில் தெரியும்.  அதன் டைலமாவின்  பொழிப்புரை படத்தின் இறுதிக் காட்சி.  வில்லனை வென்றுவிட்டு ,  ஏரோப்ளேனிலிருந்து குதித்து இறங்கியபின், இரண்டு கதாநாயகிகளுக்கிடையே  கதாநாயகன் மாட்டிக்கொண்டு சட்டென்று தீர்மானிப்பார் ஓடிப்போக!

விக்ரம்
படப்பிடிப்பு அனுபவங்கள் பற்றி அதன்பின் கட்டுரையாக எழுதச் சொன்னார்கள்.இதில் நீதி, படம் முடிந்து ரிலீசாவதற்குமுன் இருக்கும் குறுகிய ஜன்னலில்தான்  இந்த முறையில் தொடர்கதையாக வெளியிட வேண்டும்.  பாக்யராஜ் அப்படிதான் செய்தார் என்று நினைக்கிறேன்.டைரக்டர் ராஜசேகர் அதன்பின் இளம் வயதில் இறந்து விட்டார்.  கண்டிப்பாக விக்ரம் படத்தை இயக்கிய காரணத்துக்காக அல்ல.


விக்ரம்
படத்தில் கதாநாயகி கதைப்படி ஒரு கம்ப்யூட்டர் எஞ்சினியர்.  அதற்காக கமல் மலையாளப் படங்களில் பிரபலமாகிவரும் சில நடிகைகளைப் பார்த்தார்.  ஒரு படத்தில் தோன்றிய இரண்டு பெண்களில் ஒரு முகம் பொருத்தமாக இருந்தது.  அந்த நடிகையின் பெயர் லிஸ்ஸி.  போன் போட்டதும் கொல்லத்திலிருந்தோ கொச்சினிலிருந்தோ ராத்திரி ரயிலைப் பிடித்துக்கொண்டு வந்துவிட்டார்.
Lissy

லிஸ்ஸி என்ற பெயர் தமிழுக்கு ஒத்து வராது என்று ப்ரீத்தி என்று பெயரிடப்பட்டது.  இப்படி ஒரு மிகப் பெரிய அறிமுகம் கிடைத்தும் லிஸ்ஸி என்னும் ப்ரீத்திக்கு அதன்பின் தமிழில் வாய்ப்பு வரவில்லை.  லிஸ்ஸியைத்  தேர்ந்தெடுப்பதற்காக நாங்கள் பார்த்த மலையாளப் படத்தில் அவரருகே நின்று கொண்டிருந்த மற்றொரு நடிகையின் பெயர் நதியா மொய்து.  விக்ரம் படத்தில் வாய்ப்புக் கிடைக்காத நதியா தமிழில் அதன்பின் நிறையப் படங்களில் நடித்தார்.  பூவே பூச்சூடவா இன்னும் பலருக்கு ஞாபகம் இருக்கிறது.

கோடம்பாக்கத்தில் நடிக்க வாய்ப்பு கிடைப்பதும் அதன்பின் நிலைப்பதும் மிகவும் தற்செயலான விஷயங்கள்.

வனிதாமணி  வனமோகினி வந்தாடு……..

என் ஜோடி மஞ்சக் குருவி…..

மீண்டும் மீண்டும் வா……

[sujatha.jpg]

(கனவுத் தொழிற்சாலை தொடரும்…)

தொடர்புடைய பதிவுகள்:

கனவுத் தொழிற்சாலை- சுஜாதாவின் “விக்ரம்”- 1