பாரதிராஜா பற்றி சுஜாதா


பாரதிராஜா பற்றி சுஜாதா கூறுகிறார்….
http://img.freebase.com/api/trans/image_thumb/guid/9202a8c04000641f8000000009995689?pad=1&maxheight=100&mode=fillcropmid&maxwidth=100
பாரதிராஜா அவர்களுடன் என் நட்பு சினிமாவின் நிலயாமைகளுக்கு அப்பாற்பட்டது.  அவருடைய ஒரு படத்திற்கு வசனம் எழுதும் வாய்ப்பு கிடைத்தபோது மைசூரில் அவருடன் பேசிக்கொண்டிருந்த நீண்ட இரவுகளின் ஞாபகங்கள் என்னிடம் பத்திரமாக இருக்கின்றன.  அப்போது பாரதிராஜா தன் பால்ய காலங்களைப் பற்றிப் பேசினார்.  கிராமத்துப் பின்னணியில் வசதி சலுகைகள் எதுவும் இல்லாமல் எப்போதாவது கிடைக்கும் நெல்லுச் சோறுக்கு ஏங்கிக்கொண்டிருந்த குடும்பச் சூழ்நிலையில் வளர்ந்தவர்.  அத்தனை வாய்ப்பின்மைகளையும் தன்னம்பிக்கை, விடாமுயற்சி என்னும் இரு ஆயுதங்களால் வெற்றி கொண்டு இன்று தேசிய அளவில் பேசப்படும் இயக்குனராக வந்திருக்கும் இந்த மனிதரின் சொந்தக் கதையில் மூன்று நாவல்களுக்கு உரிய விஷயங்கள் இருக்கின்றன.  ஆனால் இவைகளை எங்கள் நட்புக்கு மரியாதையாக நான் பயன்படுத்த மாட்டேன்.  வெற்றி-தோல்வி என்பது ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்பதே சினிமாத் தொழில் தரும் பெரிய அனுபவப் பாடம்.  பாரதிராஜாவின் படங்கள் அனைத்தும் சினிமாக் கலையைப் பொறுத்தவரை வெற்றிகளே.  அவைகள் வியாபார வெற்றியும் பெறும்போது பயன்களை அனுபவிப்பவர்களில் நண்பர்களும் தயாரிப்பாளர்களுமே  அதிகம்.  பாரதிராஜாவுக்கு பளபளப்பான கோப்பைகளும் கேடயங்களும் தலை முடி மேல் ரோஜா இதழ்களும் சட்டம் போட்டு மாட்ட சான்றிதழ்களும் இயக்குனர் இமயம் போன்ற பட்டங்களும் பொன்னாடை என்ற பெயரில் உலவும் பட்டும் சரிகையும் பவானி பெட்ஷீட்டுக்களும் துண்டுகளும்தான் அதிகம் வாய்த்திருக்கின்றன.
http://img.freebase.com/api/trans/image_thumb/guid/9202a8c04000641f8000000009995689?pad=1&maxheight=100&mode=fillcropmid&maxwidth=100

எடுத்த படங்கள் எதற்கும் இவர்,  ‘அடடா இப்படிப்போய் எடுத்துவிட்டோமே’  என்று வெட்கப்படவேண்டியதில்லை.  இதுவே இவருடைய தலையாய சாதனை.  விதவிதமான கருத்துக்களை கலை நுணுக்கங்களை காட்சிகளை டெக்னிக்குகளை  அவர் முயற்சி செய்திருப்பதை அவர் படங்களை முழுமையாக மறுபரிசீலிக்கும்போது தெரியும்.  மதங்களைக் கடந்த காதல் கதையோ,  அரசியல்வாதியிடம் கண்மூடித்தனமான பக்தி கொண்டு கயவனுக்கு ரத்தம் சிந்தும் அடிமட்டத் தொண்டன் கதையோ,  சரியாக வளர்க்கப்படாமல் மனம் முறிந்து தொடர்கொலைகள் செய்யும் நகர்ப்புறத்து நாகரீக இளைஞர் கதையோ யோசித்துப் பார்த்தால் அவர் எல்லா கதை வகைகளையும் முயன்றிருக்கிறார்.  எதற்கும் பயப்படவில்லை.  அவர் இதுவரை முயற்சி செய்யாதது ஒன்றுதான்.  ஒரு நல்ல தமிழ் நாவலைத் திரைப்படமாக்குவது.

வாழ்வில் தக்க சமயத்தில் துணிச்சலான தீர்மானங்கள் எடுத்து இறுதியில் மிகப் பெரிய வெற்றியைக் கண்டவர் பாரதிராஜா. இன்றும் கோடம்பாக்கதிற்குத் தினம் தென் மாநிலங்களிலிருந்து பேருந்துகளிலும், பாண்டியன் எக்ஸ்பிரஸ்சிலும்  வந்து இறங்கி மான்ஷன்களை  நாடிச் செல்லும் இளைஞர்களுக்கு மிகப் பெரிய முன்னோடி.  அவர்களுக்குத் தெரியாத விஷயம் பாரதிராஜா போன்ற வெற்றிக்கதை பன்னிரண்டு ஆண்டுக்கு ஒருமுறைதான் நிகழ்கிறது என்பதே.  இன்றைய பாரதிராஜாவால் கூடத் தன் கடந்த கால வெற்றிப்பயணத்தை மீண்டும் தொடர முடியவில்லை.  காரணம் கோடம்பாக்கம் மாறிவிட்டது.  புது ஒப்பனைகள் அணிந்துகொண்டு தொலைக் காட்சியின் போட்டிக்கும், ரசிகர்களின் ஆதரவுத் தட்டுப்பாட்டிற்கும் ஈடுகொடுக்கப் புதிய தந்திரங்கள் கற்றுக்கொண்டிருக்கிறது.  அதில் பாரதிராஜா, பாலுமகேந்திரா, மகேந்திரன் போன்ற இயக்குனர்கள் ஓரங்கட்டப்பட்டது சோகமே.

http://img.freebase.com/api/trans/image_thumb/guid/9202a8c04000641f8000000009995689?pad=1&maxheight=100&mode=fillcropmid&maxwidth=100

நான் பாரதிராஜாவுடன் இணைந்து செய்த படங்கள் மூன்று  — நாடோடித் தென்றல் (1992),   கண்களால் கைது செய் (2004), பொம்மலாட்டம் (2008)

சாதாரணமாக உங்கள் கதாநாயகிகளின் பெயர்கள் ராதிகா, ராதா, ரேவதி என்று ‘ஆர்’ எழுத்தில்தான் துவங்கும். ஆனால், சமீபத்திய படத்தில் ‘எஸ்’ (சுகன்யா) ஆக மாறியதன் மர்மம் என்ன?

என்னவோ நான்தான் அவங் களுக்கெல்லாம் பெயர் வெச்ச மாதிரி கேக்கறீங்க! முதல் பட ஹீரோ-யின் ஒருத்தருக்கு ‘ஆர்’ ராசி-யினாலதான் மார்க்கெட் தூக்கிடுச்சுன்னு ஒரு நம்பிக்கை… அடுத்து வந்தவங்களும் ‘ஆர்’லேயே வர்ற-மாதிரி பார்த்துக்கிட்டாங்க! ஆனா, சுகன்யா மட்டும் ‘என் பேரே இருக்கட்டும்’னாங்க. அவ்வளவுதான்! மத்தபடி இதுல மர்மமெல்லாம் ஒண்ணும் கிடை யாது!

ஹாலிவுட் ஸ்டைலைப் பின்பற்றி வரும் பி.சி.ஸ்ரீராமின் லைட்டிங் ட்ரெண்ட், தங்கள் படங்களிலும் இனி வருமா?!

என் படங்களில் பெரும்பாலும் க்ளோஸ்-அப் -காட்சிகள்தான் அதிகம் இருக்கும். அதாவது, உணர்ச்சிகளை முக-பாவங்களி லேயே காட்டி-விடுவது. அப்படிப் பட்ட காட்சிகளில் அம்மாதிரி யான லைட்டிங்கை உபயோகித் தால் உங்களுக்கும் புரியாது; அவ் வளவு கஷ்டப்பட்டு முகபாவனை காட்டும் நடிகருக்கும் பெயரில்லா மல் போய்விடும். ஆனால், இந்த மாதிரி லைட்டிங் தேவைப்படுகிற சப்ஜெக்டாக இருந்தால் நிச்சயம் ஸ்ரீராமைப் பயன்படுத்துவேன்!

உங்கள் படத்தில் மட்டும் காட்சியமைப்பும் இசையும் அட்டகாசமாய் இணைந்து போவது எதனால்? உங்கள் படமென்றால் இளையராஜா ஏதேனும் சிறப்பாக இசை அமைப்பதுண்டா?

நாங்கள் இருவரும் ஒரே மண். எனக்கு ஏற்படுகிற சிந்தனைதான் ராஜாவுக்குள்ளும் ஓடும்! ஒரே மாதிரி, இணையான சிந்தனைகள் இருப்பதால் அந்தளவு ஒத்திசைவு ஏற்படுகிறது. மற்றபடி விசேஷமான இசையெல்லாம் எதுவும் கிடை-யாது.

‘காதல்’ என்பது என்ன?

காதல் என்பது உன்னையறியாமல், உன்னை நேசிப்பவளை அறியாமல் உண்டா கும் ஓர் உணர்வு! உடலில்லாமல் உணர் வில்லை; உணர்வில்லாமல் உடலில்லை. அந்த இரண்டு துருவங்களின் சந்திப்பையும் உணர்ந்தவன்தான் காதலிக்க முடியும்!

முழுக்க முழுக்க மாணவர்களுக்கு என்று ஏதாவது படம் எடுக்கும் திட்டம் உள்-ளதா?

மாணவர்களுக்குன்னா எப்படி? போதிக்கிற மாதிரியா? ‘வீட்டுல-தான் அப்பா போதிக்கிறாரு. வகுப்புல வாத்தியாரு போதிக்கிறாரு. நிம்மதியா இருக் கலாம்னு தியேட்ட ருக்கு வந்தா, இந்த ஆளும் அதையே செய் யறாரே’னு யாரும் வரமாட்டாங்க! அப்படிப் போதிக்கிற மாதிரி ஒரு படம் எடுத்து நான் கையைச் சுட்டுக்கொண்டது போதாதா? ‘என்னு யிர்த் தோழனை’த் தான் சொல்றேன்!

இப்ப நீங்க எடுத் துக்கிட்டு வர்ற ‘நாடோடித் தென்றல்’ சர்வதேச விருது பெறுமா?

பெறாது! அது ஒரு கால கட்டத்தில் நடந்த சாதாரண காதல் கதை. அவ்வளவு-தான்! ஆனால், இனி-மேல் என் படங்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் கொண்டு மிகச் சிறப்பான படங்களையே உருவாக்குவது என்று முடிவெடுத்துள்ளேன். ஒன்று மட்டும் நிச்சயம்… உலக அளவில் ஒரு பரிசையாவது பெறாமல் ஓய மாட்டான் இந்த பாரதிராஜா!

http://img.freebase.com/api/trans/image_thumb/guid/9202a8c04000641f8000000009995689?pad=1&maxheight=100&mode=fillcropmid&maxwidth=100

01-03-1992  –   நேருக்கு நேர் பாரதிராஜா நன்றி – விகடன் பொக்கிஷம்

Advertisements

12 Responses to பாரதிராஜா பற்றி சுஜாதா

 1. RV says:

  Congrats!

  Your story titled ‘பாரதிராஜா பற்றி எழுத்தாளர் சுஜாதா’ made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 1st April 2010 02:14:01 PM GMT

  Here is the link to the story: http://www.tamilish.com/story/216056

  Thank you for using Tamilish.com

  Regards,
  -Tamilish Team

 2. ர‌கு says:

  பொம்ம‌லாட்ட‌ம் ஹிட்டாகியிருக்க‌ வேண்டிய‌ ப‌ட‌ம். ச‌ரியாக‌ ப்ரொமோட் செய்யாத‌தாலேயே ஆவ‌ரேஜாக‌ முடங்கிக்கொண்ட‌து

 3. srinivas uppili says:

  சரியாகச் சொன்னீர்கள் ரகு.
  பொம்மலாட்டம் பற்றிய ஒரு தனிப் பதிவு விரைவில் வெளிவரும்……

 4. Jawahar says:

  இளையராஜா இல்லாமல் போன போது பாரதிராஜாவுக்கு ஒரு தொய்வு ஏற்பட்டது. ரஹமான் வந்த பிறகுதான் அது சரியாயிற்று. இதில் என்ன தெரிகிறது? காட்சிகளை கன்சீவ் செய்கிற போதே இசையோடுதான் கன்சீவ் செய்கிறார் பாரதிராஜா என்று தெரிகிறது. அதாவது இசையும் பாதி நடிக்கிற மாதிரியான காட்சி அமைப்பு. இப்படிப்பட்ட காட்சி அமைப்புகள் அவரது பலமாக இருந்தது. முதல் மரியாதை படத்தில் ரஞ்சனி இறந்து போகிற காட்சியை இசை இல்லாமல் பாரதிராஜாவே போட்டுக் காட்டி (புல்லாங்குழல் ஸ்லோ மோஷனில் தண்ணீரில் விழும் காட்சி) காட்சியில் உயிரே இல்லை என்று நிரூபித்துக் காட்டினார்.

  இசையை ரொம்ப டிபெண்ட் செய்தது ஒரு நிலையில் அவரது பலஹீனமாக ஆகி விட்டது.

  நல்ல இசையமைப்பாளர் கிடைக்கிற வரை காட்சிகளில் உயிரில்லாமல் பொய் விட்டது.

  http://kgjawarlal.wordpress.com

 5. srinivas uppili says:

  ஜவஹர்,

  இளையராஜா – பாரதிராஜா பிரிவைப் பற்றி நமது கிரி என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்
  (http://www.giriblog.com)

  இளையராஜா – பாரதிராஜா
  ————————-
  கிராமத்து படம் என்றால் அனைவருக்கும் நினைவு வருவது இவர்கள் இருவரும் தான் என்றால் அது மிகையல்ல. உணர்வு பூர்வமான கிராமத்து இசையை இது வரை இளையராஜாவை தவிர தற்போதைய இசையமைப்பாளர்கள் எவராலும் கொடுக்க முடியவில்லை. இவர்கள் கூட்டணியில் வந்த 16 வயதினிலே, முதல் மரியாதை, அலைகள் ஓய்வதில்லை போன்ற படங்களை எவராலும் மறக்க முடியுமா! இசை நன்றாக இருந்ததா! இல்லை அதற்க்கு வடிவமைக்கப்பட்ட காட்சி அமைப்பு சிறப்பாக இருந்ததா என்று கூறமுடியாத அளவிற்கு இரண்டும் அப்போதைய டிரன்ட்டிற்கு போட்டி போட்டு இருந்தன. பல பாடல்கள் என்ன தான் சிறப்பாக இருந்தாலும் காட்சி அமைப்பு சரி இல்லை என்றால் பாடலும் சேர்ந்து சொதப்பி விடும் அல்லது பிரபலமாகமலே போய் விடும். ஆனால் இவர்கள் கூட்டணியில் ஒவ்வொரு பாடலும் அதற்க்கு பின்னணி இசையும், அதன் காட்சி அமைப்பும் அருமையாக இருந்தது.

  திறமையான இசையமைப்பாளராக இருந்தாலும் திறமையில்லாத இயக்குனரிடம் ஜோடி சேர்ந்தால் ஜொலிக்காமல் போய்விட வாய்ப்புண்டு, இதற்க்கு பல உதாரணங்களை கூறலாம். ஆனால் இவர்கள் இருவருமே தங்கள் துறையில் மிக திறமையானவர்களாக இருந்ததால் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக இருந்தது. ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் இருவராலும் தொடர முடியவில்லை, ஈகோ மற்றும் கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்து விட்டார்கள். பாரதிராஜாவும் அதன் பிறகு A.R.ரகுமானை வைத்து பல படங்களை இயக்கி இருந்தாலும், சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து இருந்தாலும் உயிரோட்டமுள்ள கிராமத்து இசை என்ற இடம் வெற்றிடமாகவே இருக்கிறது. இளையராஜாவிற்கும் கிராமத்து இசையில் தன் முழு திறனை காட்ட சரியான வாய்ப்பு கிடைக்காமலே இருக்கிறது. இன்றும் நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள் ஆனால் தொழிலில் ஒன்றாக இணையமாட்டேன் என்கிறார்கள், யாராவது ஒருவர் மனம் விட்டு பேசி அல்லது விட்டு கொடுத்தால் கூட அவர்களது ரசிகர்கள் மனம் மகிழ்வார்கள், இவர்கள் ஒன்றாக விரைவில் இணைவார்களா மீண்டும் நல்ல இசையை தருவார்களா! என்பதை காலம் தான் கூற வேண்டும்.

  • சாரதா says:

   கிரி சொல்வதை எந்த அளவுக்கு எடுத்துக்கொள்வதென்று தெரியவில்லை. ‘அலைகள் ஓய்வதில்லை’ முடிந்து ‘காதல் ஓவியம்’ துவங்கியபோதே விரிசல் விழத்துவங்கிவிட்டது. ‘இவர் பாட்டுக்கு ‘வாலிபமே வா வா’ போன்ற படங்களை எடுத்தால் அதற்கு நான் என்ன இசையைத்தரமுடியும்?’ என்று வெளிப்படையாகவே பத்திரிகைகளில் சொன்னவர் இளையவர். அப்படியும் ‘மண் வாசனை’, புதுமைப்பெண், ‘முதல்மரியாதை’ ‘கடலோரக்கவிதைகள்’ என்று கட்டியிழுத்தார். முடியாமற்போனபோது வேதம் புதிதுக்கு தேவேந்திரனிடமும், ‘கொடி பறக்குது’ படத்துக்கு அம்சலேகாவிடமும் போனார் பாரதி. தேறவில்லை.

   சரி மீண்டும் ‘என்னுயிர்த்தோழனிடமே’ போகின்றேன் என்று இளையவரிடம்வந்தார். ஊகூம். ‘புதுநெல்லு புதுநாத்து’ என்றார். தேறவில்லை. ‘நாடோடித்தென்றலும்’ கைவிட்டது. ‘பாரதிக்கு இளையவர் – இளையவருக்கு பாரதி’ என்ற வாசகமெல்லாம் இப்படங்களின் மூலம் பொய்த்துப்போனது. மனம் ஒத்துப்போய் பயனில்லை. கல்லாப்பெட்டியிலும் கொஞ்சம் சில்லறை சத்தம் கேட்கவேண்டும். வங்கியில் லோன் வாங்கி ரீல் பெட்டிகளுக்குள் முடக்கிப்பயனில்லை என்ற உண்மை உறைக்கவே, ‘கிழக்கு சீமையிலே’ இருந்த ஆஸ்கார் நாயகனிடம் வந்தார். வெற்றி தெம்பைத்தந்தது. ‘கருத்தம்மா’வும் அவ்வளவு மோசமாகக் கைவிடவில்லை. ஆனாலும் நீடிக்கவில்லை. ‘தாஜ்மகாலும்’, ‘கண்களால் கைது செய்’ காவியமும்(?) முற்றிலும் கைவிட, இனிமேல் விழாக்களூக்கு தலைமையேற்று மைக்கில் முழங்குங்கள் போதும் என்று மக்கள் கட்டளை பிறப்பித்து விட்டனரோ என்ற ஏமாற்றமும், ஆதங்கமும் குடிகொண்டபின் இனிமேல் யார் இணைத்து வைத்து என்ன பெரிய மாற்றம் வந்துவிடப்போகிறது கிரி சார்?.

 6. சாரதா says:

  ராதிகா
  ர(த்)தி
  ராதா
  ரேவதி
  ரஞ்சனி
  ரேகா
  ரமா
  ரஞ்சிதா
  …..இப்படி இவரது அறிமுகங்களுக்கெல்லாம் ‘ஆர்’ பெயர்சூட்டப்பட்டது தற்செயலானதுதான். திட்டமிட்டதல்ல என்று பாரதி சொன்னதை நானும் நம்பிட்டேன்(??). இவர் படத்தில் அறிமுகமாகாவிட்டாலும் (விஜயலட்சுமியாக இருந்தவருக்கு) ரம்பா என்ற பெயர் சூட்டியவரும் பாரதிதான். (சுகன்யாவுக்கும் இவர் ஒரு ‘ஆர்’ பெயர் செலக்ட் பண்ணியதாகவும் ஆனால் சுகன்யா பெயரை மாற்றிக்கொள்ள மறுத்து விட்டதாகவும் அப்போதைய வார இதழில் படித்துள்ளேன்). தன் பட கதாநாயகனுக்கு மூக்கு குத்தும் வேலையைக் கொடுத்துவிட்டு, இவர் ‘காதுகுத்தும்’ வேலையை எடுத்துக்கொண்டது ஏன்..?.

 7. இளை-பாரதி காம்பினேஷன் சூப்பர்தா.ஆனால் சினிமாவிலும் எல்லோருக்கும் menopause உண்டு.எல்லீஸ் ஆர் டங்கண் போய் பல வருடம் கழித்து பல பேர் போய் பாரதி வந்து அவரும் போய்விட்டார்.
  யாராக இருந்தாலும் “பழசு” ஆகிவிடுவார்கள்..
  ஏன் என்றால் தலைமுறை மாறுகிறது.மாற்றங்களும் நிகழ்கிறது.

  ”இவர்கள் மீண்டும் இணைந்தால்”
  என கருத்தின் சாரம் என்ன என்றால் அவர்கள் காலம் முடிந்துவிட்டது என்பதுதான்.

 8. srinivas uppili says:

  பாரதிராஜா, 4 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இளையராஜாவுடன் கைகோர்த்து கொண்டு தந்த அற்புதமான படம் தான் என்னுயிர் தோழன்.

  இந்த படத்தின் டைட்டில் வரும்போது கூட பாரதிராஜாவின் என்று ஒரு slide வரும் பின்னர் என்னுயிர் தோழன் என்று அடுத்த slide வரும். பின்னர் இளையராஜா என்று அடுத்த slide வரும். அதாவது சேர்ந்து வாசித்தால் பாரதிராஜாவின் என்னுயிர் தோழன், இளையராஜா என்று அர்த்தம் வரும்.

  ஆனால் இளையராஜாவுடன் இணைந்ததால் 1980ம் ஆண்டு வைரமுத்துவை அறிமுகம் செய்த பின்னர் இந்த படத்தில் தான் (10 ஆண்டுகளின் பின்னர்) முதன் முதலாக வைரமுத்து பாடலெழுதாமல் ஒரு பாரதிராஜா திரைப்படம் வெளியானது.

 9. mathistha says:

  தகவலுக்கு மிக்க நன்றி

 10. பாரதி ராஜாவின் “முதைல் மரியாதை“ மாதிரி படம் எடுக்க இனி யாராலும் முடியாது.. இத்தனைக்கும் சிவாஜி அதில் நல்ல குண்டு கட்டையாக இருப்பார்…அடடா.. என்ன படம்.. என்ன படம்…! கவிதை மாதிரி.. சில இடம் இருக்கும்.. காட்டாற்று வெள்ளம் சில இடம்..வடிவுக்கரசியின் கண்ணும்..உதட்டை சுழிக்கிற சுழிப்பும்.. ராதாவின் கச்சிதமான நடிப்பும்..என்னதான் அவசர வேலை இருந்தாலும் எதாவது சேனலில் முதல் மரியாதை படம் போட்டால்..வேலை எல்லாம் அப்புறம் தான்.. ஆமாம்.. எத்தனை முறை இப்படத்தைப் பார்த்தேன்..? கணக்கில்லை….!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: