கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “கண்களால் கைது செய்”


சுஜாதா கூறுகிறார்….

Tamil Movie - kangalalkaithu Review -  Tamil Movie Actor, Actressகோடம்பாக்கம் மேம்பாலம் தாண்டும்போது தினம் ஒரு ஸ்வர்ண மாளிகைக்கான வினைல் விளம்பரத்தில் ஓர் அழகான பெண்ணின் முகத்தைப் பார்ப்பேன்.  என்னையே விழுங்குவதுபோலப் பார்வை.  இந்தப் பெண்ணைக் கோடம்பாக்கம் விட்டு வைக்காதே என்று யோசித்தேன்.  கண்களால் கைது செய் படத்தில் பாரதிராஜா அவரை அறிமுகப்படுத்தி  விட்டார்.  பெயர் ப்ரியாமணி.  கண்களால் கைது செய் என்னும் கவிதைத்தனமான தலைப்பு கொடுத்துவிட்டு ஒரு க்ரைம்  கதை பண்ண விரும்பினார் பாரதிராஜா.  அவருடைய உதவியாளராகப் பணிபுரிந்த ப்ரேம்  கொடுத்த ஐடியா.  ஹோப் டைமண்ட்  போன்ற ஒரு மிகப் பெரிய வைரத்தை ஒரு கண் காட்சியில் திருட்டுப் பழக்கம் உள்ள பணக்காரக் கதாநாயகன் திருடிவிடுவதாகவும் கண்காட்சியில் அதற்குப் பொறுப்பேற்றிருந்த விற்பனைப் பெண்ணான கதாநாயகி மேல் பழி விழுவதாகவும் போலீஸ் விசாரணையில் கொக்கின் தலையில் வெண்ணை வைத்துப் பிடிப்பது போலக் கதாநாயகனுடன் சுவிட்சர்லாந்து  சென்று அவன் எங்கே வைரத்தை ஒளித்து வைத்திருக்கிறான் என்று கண்டு பிடிக்க நாய்க்குட்டியின் கழுத்திலும் மீன் தொட்டியிலும் தேடி ….  இப்படிக் காமா சோமா என்று கதை சென்றது.  அதைக் கூடிய வரையில் இஸ்திரி போட்டு நேராக்க முயன்றேன்.

Kangalal Kaithu SeiKangalal Kaithu Sei

ஒரு கட்டத்தில் எல்லாம் செட்டில் பார்த்துக்கொள்ளலாம் என்று ஸ்விஸ் போகவேண்டிய கெடுவில் படப்பிடிப்பைத் துவக்கிவிட்டார்.  சித்ராலட்சுமணன்  கோ-டைரக்டர்.  தோத்தாத்திரி,  தேன்மொழி என்று இரண்டு அசிஸ்டண்டுகள்.  தேன்மொழி புதுக்கவிதை எழுதும் பெண் கவிஞர்.  ஏ.ஆர்.ரெஹ்மான் மெட்டு ஒன்றுக்கு அவர் எழுதிய பாடல் வரிகள் (தீக்குருவி) இன்று வரை யாருக்காவது புரிந்திருக்குமா என்பது சந்தேகம்.

தீக்குருவி…..


ப்ரியாமணி அந்தப் படத்தில் பஸ் ஸ்டாண்டில் காணாமற்போன குழந்தைப் போலத்தான் தெரிந்தார்.  மாடலிங் உலகமும் சினிமா உலகமும் வேறு என்று தெரிந்துகொள்ளவே அவருக்கு நாளாயிற்று.  கதாநாயகனும் புது நடிகர்.  கோயமுத்தூரிலிருந்து வந்த அழகான முஸ்லிம் இளைஞர்.  அவர் பெயரை மாற்றி கொச்சைச் தமிழில் அவரையே பேச வைத்தது படத்துக்குப் பெரிய பின்னடைவாயிற்று.  ப்ரியாமணியின் குரல் சரியில்லை என்று அவருக்குத் தமிழ் சினிமாவின் அனைத்துக் கதாநாயகிகளுக்கும் குரல் தரும் சவீதாவோ ஜெயகீதாவோ டப்பிங் குரல்.  கண்களால் கைது செய் தமிழ் மக்களின் கவனத்தைக் கைது செய்யவில்லை.  மறுபடியும் இது ஒரு த்ரில்லரா,  காதல் கதையா என்கிற குழப்பத்தில் தவித்தது கதை.

ப்ரியாமணியைப் பற்றி ஒரு பின்குறிப்பு:—   அமீர் டைரக்ட்  செய்த பருத்தி வீரன் படத்தில் அவர் ஒரு கிராமத்துப் பெண்ணாகச் சொந்தக் குரலில் பேசி நடித்து சிறந்த நடிகைக்கான FilmFare அவார்ட் வாங்கினார்.

இனி இந்தப் படத்தைப்பற்றிய ஒரு விமர்சனத்தைப் பார்ப்போம்.

சுஜாதா வசனம் எழுதியிருக்கிறார். கதாநாயகனை (வசீகரன் என நினைக்கிறேன்) நிருபர்கள் கேள்வி கேட்கும்போது சொல்லும் பதிலில் மட்டும் சுஜாதாவைப் பார்க்க முடிகிறது. மற்ற இடங்களில் அவரைத் தேட ஒரு லென்ஸ் வேண்டும்.

குணா அபிராமி மாதிரி. சிவப்புரோஜாக்கள், ஆளவந்தான் வாசனை லேசாக வீசுவது போல் தோன்றும் கதை.

ஆளை விடுங்கடா சாமி என்று ஓடாமல் உட்கார வைத்த விஷயங்கள் இரண்டு.

ஒன்று ஏ.ஆர்.ரஹ்மானின் இசை. இன்னொன்று கண்ணனின் ஒளிப்பதிவு.

பாரதிராஜா படம் மாதிரி இல்லை என்று சொல்ல வைத்தது இந்த இரண்டும்தான். கண்ணனின் ஒளிப்பதிவு ஆங்கிலப்படம் பார்ப்பது போன்ற ஒரு பிரமையை உருவாக்கி விடுகிறது. ஒளிப்பதிவின் கோணங்களும் தரமும் அசத்தல்.

கதாநாயகன் தமிழைப் படுத்துகிறார். அவர் நடிக்க முயலும் போதெல்லாம் நமக்கு மூட்-அவுட் ஆகிறது.

இசையும் ஒளிப்பதிவும் கைதுசெய்துவிடுகிறது. என்னுயிர்த்தோழியே பாடலை எழுதியது யார் என்று தெரியவில்லை. அறிவுமதியா? (அறிவுமதியின் சாயல் இருக்கிறது பாட்டில்.)

பி.கு. #1:   அருவிகள் மேலே நோக்கிப் பாய்கிறதே என்ற வரியில் அருவியை மேலே நோக்கிப் பாய வைத்து புளகாங்கிதத்தை ஏற்”படுத்துகிறார்” இயக்குநர்.

பி.கு. #2: ஒரு சில இடங்களில் ஆங்கிலத்தில் வசனம் வந்த அடுத்த விநாடியே தமிழிலும் சொல்லி, நாம் பார்ப்பது தமிழ்ப்படத்தைத்தான் என்று ஊர்ஜிதப்படுத்துகிறார்கள்.

பி.கு. #3: சுஜாதா அதிகம் பில்ட்-அப் கொடுத்துவிட்டார்.

https://i1.wp.com/www.tamilvanan.com/content/wp-content/uploads/2009/11/priyamani.jpg

கண்களால் கைது செய் படம் மூலம் தமிழில் அறிமுகமான பிரியாமணி பருத்தி வீரன் படத்துக்கு பின் பிரபலமானார். இப்படத்தில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார். தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் தற்போது பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

திரையுலக அனுபவங்கள் பற்றி அவர் சொல்கிறார்……

திரையுலகில் வந்த பாதையை திரும்பி பார்க்கும்போது வியப்பாக உள்ளது. பெங்களூரில் மாடலிங் செய்து கொண்டு இருந்தேன். 18 வயதில் மலையாள இயக்குனர் பாசில் அணுகி நடிக்க கேட்டார். அதற்காக மேக்கப் டெஸ்ட் எடுத்தேன். அப்போது இயக்குனர் பாரதி ராஜாவிடம் இருந்து அழைப்பு வந்தது. அவர் டைரக்டு செய்த கண்களால் கைது செய் படத்துக்கு ஒப்பந்தம் ஆனேன்.

பாரதிராஜா தமிழ்ப்பட உலகில் பிரபலமான இயக்குனர் என்பது எனக்கு தெரியும். அவர் மூலம் தமிழில் அறிமுகமானது சந்தோஷமாக இருந்தது.

அந்த படம் ரிலீசான போது சிறப்பு காட்சியை குடும்பத்தினருடன் சென்று பார்த்தேன். என் பெயர் திரையில் வந்தபோது தாய், தந்தை என் சகோதரன் ஆகியோர் வாழ்த்து சொன்னார்கள். திரையில் என்னை பார்க்க சகோதரனுக்கு சந்தோஷமாக இருந்தது. இன்னும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி முன்னேறும்படி உற்சாகப்படுத்தினார். அதன் பிறகு நிறைய படங்கள் வந்தன.

https://i2.wp.com/images.zaramasti.com/priyamani.jpg

“கண்களால் கைது செய்” படத்தின் கதாநாயகி- பிரியாமணி பெங்களூரில் படப்பிடிப்புக்கு இடையே விசேஷ  பேட்டி:-

கண்களால் கைது செய்” படத்துக்கு உங்களை பாரதிராஜா எப்படி தேர்ந்தெடுத்தார் ?

டைரக்டர் பாரதி ராஜாவோட கதை வசன கர்த்தா பிரேம்நாத் சார். என்னோட போட்டோவை மாடலிங் புடவை விளம்பரத்துக்கு தேர்வு செய்து வைத்து இருந்தார். அப்போது அந்த புகைப்படத்தை பார்த்த பாரதிராஜா சார் இந்த பொண்ணு நல்லா இருக்குதே அடுத்த படத்துல பயன்படுத்திக்கலாம்னு சொல்லி இருக்கார்.

அதன்பிறகு போட்டோ செஷன் எடுத்தார்கள். அதில் முழு திருப்தியானதும் படத்துக்கு ஓகே சொல்லிட்டார்.

பாரதிராஜா அறிமுக கதா நாயகிகளுக்கு R – வரிசையில் தொடங்குற பெயரை சூட்டுவார். உங்களுக்கு அந்த மாதிரி பெயர் வைக்கலயா?

சிங்கப்பூர்ல ஷூட்டிங் நடந்தப்போ என்னோட பெயரை மாத்திக்கலா மான்னு பாரதி ராஜா சார் கேட்டார். நானும் என்னோட அம்மாவும் பல பெயரை பார்த்தோம். சென்னை வந்ததும் இங்கே ஒரு ஜோதிடரை போய் பார்த்தோம். அவரும் ப்ரியா மணிங்கற பேரே நல்லா இருக்குது. ஏன் மாத்தறீங்கன்னு சொல்லிட்டாரு.  இதை பாரதிராஜா சார்கிட்டே சொன்னேன். அவரும் ப்ரியாமணிங்கற பேரே இருக்கட்டும்னு சொல்லிட்டாரு.

சினிமாவில் காதல் காட்சிகளில் ஹீரோவோட நெருங்கி நடிக்கிறப்போ உங்களுக்கு எப்படி இருந்தது?

நான் படத்தில நடிக்க போனப்போ பாரதி ராஜா சார் மிகவும் கண்டிப்பானவர்னு பயமுறுத்தினாங்க. நானும் பயந்து பயந்து நடிச்சேன். ஆனா பாரதிராஜா சார் யதார்த்தமா எப்படி நடிக்கணும்னு கத்து கொடுத்தார்.

காதல் காட்சிகளில் நடிச்சப்போ கொஞ்சம் சங்கோஜமாத்தான் இருந்தது. ம்… ம்… இப்ப பழகிட்டேன்…

(சிரிக்கிறார்)

தமிழ்ப்படங்கள்ல ஹீரோ வுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுறது பற்றி?

இது தவறு நான் நடித்த கண்களால் கைது செய் படத்தில் ஹீரோ. ஹீரோயின் இருவருக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்குது.

பாரதி ராஜாவோட படத்தில நடிச்சது மூலமா என்னென்ன கத்துக்கிட்டீங்க?

எனக்கு நடிப்புன்னா ஏ.பி.சி.டி. கூட தெரியாது. பாரதிராஜா சார் எனக்கு நடிப்புன்னா என்னென்னு கத்து கொடுத்தார். எனக்கு மட்டு மல்ல படத்தில நடிச்ச எல்லாருக்கும் நடிக்ககத்து கொடுத்தார்.

கண்களால் கைது செய் படத்தில் நடித்தபோது மறக்க முடியாத காட்சி என்ன?

இந்த படத்தில கண்ணீர் வரவழைக்கிறகாட்சிகள் அனைத்திலும் நான் ரொம்பவே ஈடுபாட்டோட நடிச்சேன்.

கண்களால் கைது செய் படத்தின் Preview பார்த்தப்போ உங்களோட மனநிலை எப்படி இருந்தது?

Preview  பார்த்தபோது ரொம்ப டென்ஷனா இருந்தேன். ஏன்னா அன்னைக்கு எங்க அப்பாவும் கூட வந்து இருந்தாங்க.

கண்களால் கைது செய்” படத்தில் அறிமுகமானாலும் பாரதிராஜாவின் அறிமுகங்களுக்குக் கிடைத்த உயரம் உங்களுக்குக் கிடைக்கவில்லையே ஏன்?”

நான் இன்னைக்கு இந்த அளவுக்கு வளர்ந்து ஒரு முழு நடிகையா உருவாகியிருக்கேன்னா அதுக்கு பாரதிராஜா சார், பாலுமகேந்திரா சார், அமீர் சார் இந்த மூணு பேராலத்தான். ஒவ்வொருத்தருக்கும் என் முன்னேற்றத்துல பங்கு உண்டு. முன்னாடியே சொன்னமாதிரி அததுக்கு ஏத்த மாதிரித்தான் டைம் வரும். ஸ்லோ அண்ட் ஸ்டெடிதான் என்னைக்கும் நல்லது. என் கேரியர் இப்படித்தான் இருக்கும். ஒவ்வொரு ஸ்டெப்ல ஏறி நின்னு நிதானமாத்தான் மேல வந்திருக்கேன்.

பாரதிராஜாவின் “கணகளால் கைது செய்“, பாலுமகேந்திராவின் “அது ஒரு கனாக்காலம்” இரண்டும் வெற்றி பெற்றிருந்தால் உங்கள் நிலை எப்போதோ மாறியிருக்கும் அல்லவா?

இப்பவும் ஒண்ணும் மோசமில்லை. நல்லாத்தான் இருக்கேன். பாரதிராஜா சார், பாலுமகேந்திரா சார் படங்கள் பெரிசா ஹிட் ஆகலைன்னாலும் அவங்க படத்துல நடிச்ச அனுபவம் எனக்கு பெரிய லாபம்தானே… இப்படித்தான் வாழ்க்கையை பாசிடிவா பார்க்கணும்.

உங்களுக்காக கண்களால் கைது செய் படத்தில் இடம் பெற்ற ‘என்னுயிர் தோழியே’  பாடல் வரி வடிவில்…
பெண்ணின் அழகின் கர்வத்தையும் அவளினுள்ளே சரணடையும்
ஆணின் காதலையும் இதில் காணலாம்…

என்னுயிர் தோழியே …என்னுயிர் தோழியே …
நான்கைந்து சூரியன் , ஆறேழு வெண்ணிலா வந்ததென்ன
என் வானம் புதுமை ஆனது என்ன…
விஞ்ஞான மாற்றமா மெய்ஞான மாற்றமா ..
என்னுள்ளே நடந்தது என்ன என்ன …
இனியவளே அமைதி புரட்சி ஒன்று நடந்ததே – உன்
விழிகளிங்கே ஒரு புதிய உலகம் ஒன்றை திறந்ததிங்கே…

ஒற்றை ஜடையில் உன்னை கட்டி எடுத்து வந்து வைப்பேன்…
எனது கள்ள சிரிப்பழகில் காயம் செய்து பார்பேன்..
தீ பிடித்த தங்க மீனை பார்த்ததுண்டா
என்னை நீயும்தான் பார்த்துக்கொள்வாய்…
கத்தி வீசும் வானவில்லை கண்டதுண்டா
என்னை நீயும்தான் கண்டு கொள்வாய் …
ஒரு நஞ்சும் உண்டு அமுதும் உண்டு கண்ணில்
நீ ரெண்டும் உண்று மோட்சம் கொண்டு போ போ
என் ஆசை தீர்ந்தது….

கண்ணில் விழுந்தவளே நெஞ்சை துளைக்குது உன் கர்வம்
எனது சித்தம் உடைத்தவளே சரணடைகிறேன் சர்வம்..
மூச்சு முட்ட கவிதைகள் குடித்துவிட்டு
எந்தன் செவியில் சிணுங்குகிறாய்…
ரெண்டு இதழ் மட்டும் கொண்ட அதிசயப்பூ
நீயல்லவோ சிலுப்புகிறாய்…
ஒரு கப்பல் போலே உன்னை மோதி சென்றேன்
துறைமுகமும் நானே உடனே தானே
தூள் தூள் தூள் ஆனதுண்மை….

என் உயிர்த் தோழியே……

அனார்கலி……

அழகிய  சின்ட்ரெல்லா……

ஆஹா தமிழம்மா….

[sujatha.jpg]

(கனவுத் தொழிற்சாலை தொடரும்…)

தொடர்புடைய பதிவுகள்:

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: