மொகலே ஆஜம் – என் விமர்சனம்


Moghul-E-Azamமொகலே ஆஜம் ஹிந்தி சினிமாவை பொறுத்த வரை ஒரு கிளாசிக். திலீப் குமார், மதுபாலா இருவருக்கும் இதுதான் மாஸ்டர்பீஸ் என்று கருதப்படுகிறது. பிரித்விராஜ் கபூருக்கும் அப்படித்தான் என்று நினைக்கிறேன். கே. ஆசிஃபின் புகழே இந்த ஒரு படத்தால்தான்.

ஆனால் ஒரு காலகட்டத்தில் நன்றாக தெரியும் படங்கள் பல காலப்போக்கில் செயற்கையாகத் தெரிகின்றன. சில கிளாசிக்குகள் அவை எடுக்கப்பட்ட காலம், சூழல், மொழி ஆகியவற்றை தாண்டுவதில்லை. இது அந்த ரகம். உதாரணமாக மனோகரா – தமிழ் தெரியாதவர்கள் அதை ரசிக்க முடியாது. இன்றைய தமிழ் யூத்துக்கு அந்த அலங்காரத் தமிழ் படத்தை ரசிக்க தடையாகவே இருக்கலாம். மொகலே ஆஜம் அப்படித்தான். அது சூழலை தாண்டவில்லை. இதை கிளாசிக் என்று கருதுபவர்கள் அனேகமாக ஹிந்திக்காரர்கள்; அதுவும் உருது தெரிந்தவர்கள், நௌஷத் ரசிகர்கள், மதுபாலா பிரியர்கள் போன்ற உட்பிரிவினர் இதை கொண்டாடுகிறார்கள்.

இந்த படத்தின் இசை அமைப்பாளர் நௌஷத். இவர்தான் எம்எஸ்வியின் ஆதர்சம். நௌஷத்தின் இசை ஹிந்துஸ்தானி இசையை ஆதாரமாகக் கொண்டது. (ஜி. ராமநாதன், கே.வி. மகாதேவன் போன்றவர்களுக்கு கர்நாடக இசை ஆதாரமாக இருப்பது போல.) எனக்கு ஹிந்துஸ்தானி இசையை எல்லாம் ரசிக்கத் தெரியாது. அதனால் பல பாட்டுகள் பிடித்திருந்தாலும் அவர் என் மனம் கவர்ந்த இசை அமைப்பாளர் இல்லை.

ஆனால் இந்த படத்தில் பாட்டுகள் மிக நன்றாக இருக்கும். படத்தை பார்ப்பதற்கு முன் பாட்டுகளை நிறைய முறை கேட்டிருந்தேன். ப்யார் கியா தோ டர்னா க்யா என்று கொஞ்சம் மெதுவாக ஆரம்பித்து ப்யார் கியா ஹே சோரி நஹி கீ என்று உறுதியோடு பாடும் விதம் மிகவும் பிடிக்கும். மொஹே கூங்கட்டு மே நந்தலாலு சேடு கயோ ரே என்ற பாட்டு அருமை. மொஹபத் கே ஜூட்டி கஹானி பே ரோயே பாட்டு தமிழில் கனவு கண்ட காதல் கதை சொல்லலாச்சே என்று கேட்டிருக்கலாம். ஓரளவு பிரபலமாக இருந்தது. என் பழைய பட பைத்தியம், அதுவும் பழைய பாட்டு பைத்தியம் தெரிந்த விஷயம்தான். கிளாசிக் படம் என்று கேள்விப்பட்டிருந்தேன். இவ்வளவு போதாதா என் ஆவலைத் தூண்ட? மிகுந்த எதிர்பார்ப்புகளோடு படம் பார்க்க போனேன்.

அனார்கலி கதையை தெரியாதவர்கள் இருக்க முடியாது. பாதுஷா அக்பரின் ஒரே மகனும் பட்டத்து இளவரசனும் ஆன சலீம் (பிற்காலத்திய ஜஹாங்கீர்) நடனப் பெண் அனார்கலி காதலை அக்பர் எதிர்க்கிறார். சலீம் படை திரட்டி அக்பரை எதிர்க்கிறான். அக்பர் போரில் வெல்கிறார்; அனார்கலிக்கு மரண தண்டனை; சலீமும் அக்பரும் இணைகிறார்கள். நம்மூர் அம்பிகாபதி அமராவதி கதை மாதிரி நீண்ட பாரம்பரியம் உள்ள வட நாட்டுக் கதை.

படத்தில் வியாபித்து நிற்பது பிருத்விராஜ் கபூர்தான். என் கண்ணில் அவர்தான் இந்த படத்தின் ஹீரோ, திலிப் குமார் இல்லை. அவர் நல்ல உயரம், பருமன், நல்ல குரல். இதில் முகமது பின் துக்ளக்கில் சோ குதித்து குதித்து நடப்பதைப் போலத்தான் நடப்பார். நாடகத்தனம் நிறைந்த நடிப்புதான், ஓவர்ஆக்டிங்தான். உங்களுக்கு மிகை நடிப்பு பற்றி ஃபோபியா இல்லாவிட்டால் ரசிக்கலாம். திலிப் குமார் looks intense. அவ்வளவுதான் அவர் வேலை. அவருக்கு மிகவும் expressive கண்கள். மதுபாலாவுக்கு படத்தில் ஒரே வேலைதான். அழகாக இருப்பது. Voluptuous என்பார்களே அந்த மாதிரி. மதுபாலாதான் ஹிந்தி சினிமாவின் சிறந்த அழகி என்று கருதுபவர்கள் நிறைய பேர் உண்டு, அதனால் அவருக்கு கொடுக்கப்பட்ட வேலையை ஊதித் தள்ளுகிறார்.

வசனம் படத்தின் பெரிய பலம் என்கிறார்கள். உருதுவே கொஞ்சம் அலங்காரம் நிறைந்த மொழிதான். எனக்கு ஹிந்தியே ததிங்கினத்தோம், high flown உருது எல்லாம் தலைக்கு மேல்தான் போனது. நினைவிருக்கும் வசனம் (ஏறக்குறைய)
சலீமின் அம்மா சொல்வார்: ஹமாரா ஹிந்துஸ்தான் கொயி துமாரே தில் நஹின் ஹை கொயி லவுன்டியா ஜிஸ்பர் ஹூகுமத் கரே
சலீமின் பதில்: தோ மேரே தில் பி ஆப்கா ஹிந்துஸ்தான் நஹின் ஹை ஜோ ஆப் உஸ்பர் ஹூகுமத் கரே
தமிழில்:
எங்கள் ஹிந்துஸ்தான் உன் இதயம் இல்லை, அங்கே கண்டவளும் ஆட்சி செய்ய முடியாது
அப்படி என்றால் என் இதயமும் உங்கள் ஹிந்துஸ்தான் இல்லை, அங்கே நீங்கள் ஆட்சி செய்ய முடியாது.
உருது வசனங்கள் முழுவதும் புரியாவிட்டாலும் கேட்க நன்றாக இருக்கும்.

இது அடிப்படையில் ஒரு மேடை நாடகமே. ஆனால் ஆசிஃப் சினிமாவை ரிச்சாக எடுக்கும் வாய்ப்புகளை அறிந்தவர். அதனால் அருமையான செட்கள் (ப்யார் கியா தோ டர்னா க்யா செட்டை இன்றும் பார்க்கலாம்), ரிச்சான அரண்மனைகள், போர்க்காட்சிகள் என்று பலவற்றை சேர்த்து இதை ஒரு சினிமாவாக்க முயற்சி செய்திருக்கிறார். பணத்தை தண்ணீராக செலவழித்திருக்கிறார் ((யார் பணமோ?). இதை எடுக்க அன்றே ஒன்றரை கோடி செலவாயிற்றாம் (இன்றைய மதிப்பில் கிட்டத்தட்ட நாற்பது கோடியாம். எந்திரன் படத்துக்கு கூட இவ்வளவு செலவாயிருக்குமா என்று தெரியவில்லை.)

ப்யார் கியா தோ டர்னா க்யா பாட்டை பற்றி எதுவும் சொல்லப் போவதில்லை.பல கண்ணாடிகளில் மதுபாலா ஆடுவது தெரியும் காட்சி மிகவும் புகழ் பெற்றது. வீடியோவைப் பாருங்கள்.

மொஹே கூங்கட்டு பே நந்த்லாலு சேடு கயோ ரே இன்னொரு அருமையான பாட்டு. வீடியோ இங்கே.

இதை தவிர நினைவு வரும் இன்னொரு பாட்டு மொஹபத்து கே ஜூட்டி கஹானி. தமிழில் கனவு கண்ட காதல் என்று கேட்டிருக்கலாம்.

பார்க்கலாம், ஆனால் சிறந்த படம் என்றெல்லாம் சொல்வதற்கில்லை. பிருத்விராஜ் கபூரின் நாடகத்தனம் நிறைந்த நடிப்பு ஒரே நேரத்தில் படத்தின் பலம் மற்றும் பலவீனம். பாட்டுகளுக்காக, ரிச்சாக எடுக்கப்பட்டதற்காக, ஒரு நவாபி உலகத்தை காட்டுவதற்காக, அழகான மதுபாலாவுக்காக, பத்துக்கு ஏழு மார்க். B- grade.

தொகுக்கப்பட்ட பக்கம்:படங்களின் பட்டியல்

தொடர்புடைய சுட்டிகள்:
முகலே ஆஜம் விகடன் விமர்சனம்
முகலே ஆஜம் trivia

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

7 Responses to மொகலே ஆஜம் – என் விமர்சனம்

 1. ச.திருமலை says:

  ஆர் வி

  மதுபாலாவை மிஞ்சிய ஒரு அழகி இந்தியப் படங்களில் அவருக்குப் பின்னும் இல்லை முன்னும் இல்லை. உலகத்திலேயே சிறந்த பேரழகி என்று மதுபாலாவைத் தாராளமாகச் சொல்வேன். ஆனால் அப்பேர்ப்பட்ட அழகி சாதாரண டி பி நோய் வந்து கஷ்டப் பட்டு இறந்தார் என்று அசோகமித்ரன் எழுதியதைப் படிக்கும் பொழுது பெரும் வருத்தமாக இருக்கும். இந்தப் படம் பார்த்ததில்லை ஆனால் பாடல்கள் எல்லாம் அற்புதம்

  அன்புடன்
  ராஜன்

 2. srinivas uppili says:

  ஆர். வி,

  இந்தப் படத்தைப் பற்றி நமது யுவகிருஷ்ணா என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்…
  (http://www.luckylookonline.com/2009/08/blog-post_10.html)

  போர் – வாள் – இரத்தம் – வெற்றி! இடையில் இளைப்பாற அரண்மனை – அந்தப்புரம் – மது – மாது – இசை – நடனம்! இது தான் மொகலாயப் பேரரசர்கள்!

  புத்திரப் பாக்கியம் வேண்டி பாலைமணலில், கடும் வெயிலில் வெறும்காலுடன் இந்துஸ்தானை ஆளும் மொகலாயப் பேரரசர் அக்பர் பாதயாத்திரை நடத்தும் காட்சியில் படம் தொடங்குகிறது. தவமாய் தவமிருந்து மாமன்னர் அக்பரின் மனைவி ஜோத்பாய்க்கு ஒரு மகன் பிறக்கிறார். அவர் இளவரசர் சலீம்.

  மொகலாயப் பேரரசின் ஒரே வாரிசாகிய சலீம் அந்தப்புர மகளிரின் மென்மையான கரங்களுக்குள் செல்லமாய் வளர்கிறார். எட்டு வயதிலேயே மது, மாது என கேளிக்கைகளில் கலந்து, தந்தையைக் கலவரப்படுத்துகிறார். மகனின் இந்த மனம் போன போக்கை கண்ட மாமன்னர் அவர் போராடித் திருந்த வேண்டும் என்பதற்காக அந்த வயதிலேயே போர்க்களத்துக்கு அனுப்பி வைக்கிறார். வாளின் இடையறா ‘கிளிங், கிளிங்’ சத்தம், பீரங்கி குண்டுகளின் ‘டமார் டுமீர்’. இதற்கிடையே போர்க்களத்தில் வளர்கிறார் இளவரசர். அசராத வீரம் காட்டி வெற்றி மேல் வெற்றியாக குவித்து தன் தந்தையின் காலடியில் சமர்ப்பிக்கிறார்.

  சுமார் 14 ஆண்டுகள் கழித்து மாமன்னருக்கு புத்திரப் பாசம் பொத்துக் கொண்டு வருகிறது. போர் போதும், அரண்மனைக்கு திரும்பு என ஆணையிடுகிறார். மகனைப் பிரிந்த மகாராணி மகனின் வரவை எண்ணி மகிழ்ச்சியடைகிறார். மாவீரனை வரவேற்க அரண்மனையே விழாக்கோலம் பூணுகிறது. இளவரசரை வரவேற்கும் விதமாக அவரை அசத்தும் வகையில் ஒரு சிலையை செய்யுமாறு அரண்மனைச் சிற்பிக்கு ஆணை போகிறது.

  குறித்த நேரத்துக்குள் சிலையைச் செய்து முடிக்க இயலாத சிற்பி, ஒரு சித்து விளையாட்டைச் செய்கிறார்! சிலைக்கு மாடலாக நின்ற அந்த அழகுப் பெண்ணையே சிலையாக நிறுத்தி முத்துத் தோரணங்களால் மூடி வைக்கிறார். சிலைப்பெண்ணின் அழகு இளவரசரை சொக்க வைக்கிறது. தான் உயிர்ப்பெண் என்பதை அவள் ஒப்புக் கொண்டுவிடுகிறாள். அதன்பின் வேறென்ன நடக்கும் என்று சொல்லவும் வேண்டுமா? காதல் தான்! இளவரசரை சிலிர்க்கவைத்த அந்த சிங்காரச் சிலை தான் அனார்கலி.

  சாதாரணப் பணிப்பெண்ணை மகாராணியாக்க இளவரசர் முடிவெடுக்கிறார். மொகலாயப் பேரரசரும், அவர் மனைவியும் பாரம்பரியத்தை காரணம் காட்டி இளவசரின் காதலை நிராகரிக்கிறார்கள். அரசர் அனார்கலியை சிறை வைக்கிறார். காதல் போதை ஏறிய இளவரசர் தன் கட்டுப்பாட்டில் இருக்கும் படையை கொண்டு மன்னர் மீதே போர் தொடுக்கிறார். இடையில் அனார்கலியை தன் ராஜபுத்திர நண்பனின் துணைகொண்டு சிறையில் இருந்து கடத்துகிறார் சலீம்.

  என்னதான் வீர, தீரம் இளவரசர் சலீமுக்கு இருந்தாலும் அவர் மோதுவது இந்துஸ்தானின் பேரரசரிடம் ஆயிற்றே. பப்பு வேகுமா? மன்னரின் வீரத்துக்கு முன் சலீமின் படை சின்னாபின்னம் ஆகிறது. கலகம் விளைவித்ததாக குற்றம் சாட்டி இளவரசருக்கு மரணதண்டனை விதிக்கிறார் அரசர். மரணதண்டனையை வாபஸ் வாங்குமாறு நாடே கேட்டுக் கொள்கிறது அரசரை. அரசர் வாபஸ் வாங்க ஒரு நிபந்தனை விதிக்கிறார். அதாவது அனார்கலியை திரும்ப ஒப்படைத்தால் இளவரசருக்கு மன்னிப்பு வழங்கப்படும் என்கிறார். மாமன்னர் அக்பரின் மகனாயிற்றே சலீம். ஒத்துக் கொள்வாரா?

  சலீமுக்கு மரணதண்டனை என்பதை கேள்விப்பட்ட அனார்கலி அவராகவே வந்து சரணடைகிறார். மரணதண்டனை மாற்றி அமைக்கப்படுகிறது. சலீமுக்கு பதிலாக அனார்கலிக்கு மரணதண்டனை. உயிருடன் அவருக்கு கல்லறை கட்ட வேண்டுமென்பது மன்னரின் ஆணை. அனார்கலியிடம் கடைசி ஆசை என்ன என்று கேட்கப்படுகிறது. ஒரு நாளாவது மொகலாயப் பேரரசுக்கு மகாராணியாக இருக்க வேண்டுமென்பது அனார்கலியின் ஆசை. மன்னரும் இதற்கு ஒத்துக் கொள்கிறார் வழக்கம்போல ஒரு நிபந்தனையுடன்.

  அதாவது மகாராணியாகும் அனார்கலி முதலிரவுக் கொண்டாட்டம் முடிந்து மறுநாள் விடிவதற்குள் சலீமை மயங்கவைத்து விட்டு (ரோஜாப்பூவில் மயக்க மருந்து) மரணதண்டனைக்கு சம்மதிக்க வேண்டும் என்பதே நிபந்தனை. அவ்வாறே நடக்கிறது. சலீம் மயங்கியவுடன் மாமன்னரின் சிறப்பு மெய்க்காவல் படையினர் அனார்கலியை அழைத்துச் சென்று உயிருடன் கல்லறை கட்டுகின்றனர். கல்லறை 99 சதவிகிதம் முடிந்து விட்டது. அனார்கலியின் கண்கள் மட்டுமே வெளியே தெரிகிறது.

  என்ன ஆச்சு? அனார்கலி மரணமடைந்தாரா? இல்லை மயக்கம் தெளிந்த சலீமால் காப்பாற்றப் பட்டாரா? கருணை நிறைந்தவராக வரலாற்றில் குறிப்பிடப்பட்ட பேரரசர் அக்பரின் கருணை இவ்வளவு தானா? பரபரப்பான கிளைமேக்ஸை நீங்களும் வண்ணத்திரையில் காணுங்களேன். ஏற்கனவே கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட இப்படம் வரும் பதினான்காம் தேதி திரையரங்குகளில் திரையிடப்படுவதாக விளம்பரப் படுத்தப் பட்டிருக்கிறது.

  1960ல் வெளியிடப்பட்ட முகல்-இ-ஆஸம் என்ற இந்தித் திரைப்படம் கருப்பு வெள்ளையில் வெளியானது. மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம். நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் சென்னை மவுண்ட் ரோட்டில் “ப்ளாக்கில்” டிக்கெட் வாங்கி பெருசுகள் படம் பார்த்தார்களாம். இந்த மாபெரும் காவியம் 2004ல் வண்ணமாக்கப்பட்டிருக்கிறது. குறைந்தபட்சம் சுமார் 3 லட்சம் பிரேம்களை வண்ணமாக்கியிருப்பது என்பது மாபெரும் அதிசயம். அசுர உழைப்பு உழைத்திருக்கிறார்கள் கம்ப்யூட்டர் வல்லுனர்கள்.

  சலீம் – அனார்கலி கதை வரலாற்றில் இருக்கிறதா என்றால் நிச்சயமாக இல்லை. இது கட்டுக்கதையே. பீர்பால் மற்றும் தெனாலிராமன் கதைகளில் நம் ஆட்கள் சுவாரஸ்யத்திற்காக எவ்வளவு கற்பனை செய்திருக்கிறார்களோ அதுபோலவே அக்பர் மற்றும் அவரது மகன் வாழ்வையும் சுவாரஸ்யமான காதல் கதை ஆக்கியிருக்கிறார்கள்.

  படம் வரலாறோடு எந்த அளவுக்கு ஒத்துப் போகிறது என்று பார்த்தோமானால் அக்பர் குழந்தை வரம் வேண்டி ஒரு முஸ்லிம் துறவியை சந்திப்பது போல முதல் காட்சி அமைந்திருக்கிறது. அது உண்மையே அக்பர் சந்தித்த முஸ்லிம் துறவியின் பெயர் ஷேக் சலீம் சிஸ்டி. இது அக்பரின் 27ஆவது வயதில் நடந்தது. அக்பரின் சுயசரிதையான “அக்பர் நாமாவை” எழுதிய அப்துல் பஸல் இதை ஒத்துக் கொண்டிருக்கிறார்.

  அக்பரின் மகன் பெயர் சலீம் என்பதும் உண்மையே. பிற்காலத்தில் இவர்தான் “ஜஹாங்கீர்” என்ற பெயரில் மொகலாயப் பேரரசை கட்டிக் காத்தவர். அக்பரின் பட்டத்து மகாராணி ஒரு இந்து என்பதும் உண்மையே. அவர் பெயர் ஜோத்பாய். இவர் ஆம்பர் நாட்டு இராஜபுத்திர மன்னர் பீர்மால்சிங்கின் மகள்.

  சலீம் படத்தில் காட்டியபடி காதலுக்காக உயிர் விடும் அளவுக்கு போனவர் தான். வரலாற்றில் இவருக்கு 20 மனைவிகள் வரை இருந்ததாக குறிப்புகள் இருக்கிறது (இவர் தந்தையின் மனைவிகள் எண்ணிக்கை செஞ்சுரியைத் தாண்டி விட்டிருக்கிறது) சலீமின் முதல் மனைவியும், பட்டத்து மகாராணியும் கூட ஆம்பர் நாட்டு இந்து இளவரசி தான். சலீம் ரொம்பவும் காதல் செய்து மணந்தது நூர்ஜகான் எனும் கைம்பெண் ஒருவரை. இன்றளவில் மிக உயர்ரக வாசனைத் திரவியமான அத்தர் எனும் ரோஜாப்பூவில் தயாரிக்கப்படும் வாசனைத் திரவியத்தை கண்டுபிடித்தது இந்த நூர்ஜகான் தான் என்பது குறிப்பிடத்தக்கது. அனார்கலி என்ற ஒரு கேரக்டரே வரலாற்றில் கிடையாது. அப்துல் பஸல் மட்டுமல்ல மற்ற வரலாற்று ஆராய்ச்சியாளர்களும் கூட அனார்கலி – சலீம் காதலை கட்டுக்கதை தான் என்று உறுதிப்படுத்துகிறார்கள். கற்பனை தான் என்றாலும் கூட சுவாரஸ்யமாக இருப்பதால் இந்தக் கட்டுக்கதை எழுதியவர்களை மன்னித்து விட்டு விடலாம்.

  உண்மை வரலாற்றுக்கும், இந்த திரைப்படத்துக்கும் நிறைய வேறுபாடுகளும், ஒரு சில ஒற்றுமைகளும் மட்டுமே இருக்கிறது. படத்துக்கு செய்யப்பட்ட லைட்டிங் கருப்பு வெள்ளைக்காக செய்யப்பட்டிருப்பதால் இப்போது வண்ணத்தில் பார்க்கும் போது ஒரு சில இடங்களில் கண்ணை உறுத்துகிறது. பாடல்காட்சிகளில் எக்ஸ்ட்ரா கேர் எடுத்து வண்ணம் அமைத்திருக்கிறார்கள். குறிப்பாக கிருஷ்ணஜெயந்தி பாடலும், கிளைமேக்ஸ் பாடலும் கண்ணைக் கொள்ளை கொள்கிறது. பாடல்கள் எல்லாமே “ஆஹா, ஓஹோ” ரகம் தான். மனதை மயக்கும் இசை. பாடல்களில் பெரும்பாலானவை கோட்டைகளிலும், அசரவைக்கும் செட்கள் அமைத்தும் படமாக்கப் பட்டிருக்கின்றன.

  படத்தின் வசனங்கள் முழுக்க முழுக்க கவிதை நடையிலேயே அமைக்கப்பட்டிருப்பது சிறப்பானது. போருக்கு சென்று விழுப்புண்களுடன் திரும்பும் தன் மகனைப் பார்த்து தாய் சொல்கிறார் “நான் பாலூட்டி உனக்கு கொடுத்த இரத்தத்தை எல்லாம் விவசாயிகள் வயலுக்கு நீர் பாய்ச்சுவது போல போர்க்களத்தில் உன் இரத்தத்தை எல்லாம் பாய்ச்சினாயா?”

  ஒருநாள் பட்டத்து ராணியாக அக்பர் கைகளால் கிரீடம் சூட்டிக்கொள்ளும் அனார்கலி திரும்பிப் போகும் போது நின்று அக்பரைப்பார்த்து, “மொகலாயப் பேரரசின் மகாராணியாக இப்போது முடிசூட்டடப் பட்டிருக்கும் அனார்கலி, சக்கரவர்த்தி அக்பர் நாளை காலையில் செய்யப்போகும் குற்றத்தை மன்னித்தருள்கிறாள்” என்று சொல்வது கவிதைச் சவுக்கடி!

  இவ்வாறாக படம் முழுவதும் வசனக் கவிதையாக இருப்பதால் பெரும் இடங்களில் ரசிக்க முடிகிறது. சில நேரம் அதுவே ஓவர்டோஸோ என்று கூட நினைக்க வைக்கிறது. சரித்திரக் கதைகளை இனி டப்பிங் செய்யும்போது “இம்சை அரசன்” படத்தின் வசனநடையில் எழுதினாலேயே போதுமானது. இன்றைய தலைமுறை புரிந்துக் கொள்ள கொஞ்சம் வசதியாக இருக்கும். செந்தமிழை எல்லாம் தியேட்டரில் இளைஞர்கள் எந்த அளவுக்கு ரசிப்பார்கள் என்று தெரியவில்லை. “தம்” அடிக்க வெளியே எழுந்துப் போய்விட வாய்ப்புகள் அதிகம்.

  போர்க்கள காட்சிகளை 45 ஆண்டுகளுக்கு முன்பு இவ்வளவு பிரம்மாண்டமாக எப்படி எடுத்திருப்பார்கள் என்று வியப்பு மேலிடுகிறது. சந்திரலேகா போன்ற பிரம்மாண்ட படங்களை மிஞ்சும் வகையில் ஆயிரக்கணக்கான வீரர்களைப் பயன்படுத்தி நம் கண்களையே நம்ப முடியாத வகையில் படமாக்கியிருக்கிறார்கள்.

  படத்தில் நடித்த எல்லா கதாபாத்திரங்களுமே மிக இயல்பாக (ஓவர் ஆக்டிங் இல்லாமல்) தங்கள் பாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். அக்பராக நடித்திருக்கும் பிருத்விராஜ்கபூர் (ராஜ்கபூரின் நைனாவா?) கம்பீரமாக கலக்கலாக நடித்திருக்கிறார். அக்பர் அறிஞர் அண்ணாவைப் போல ரொம்பவும் குள்ளம் என்று படித்திருக்கிறேன். இவர் கொஞ்சம் உயரமாக இருப்பதுபோல படுகிறது.

  சலீமாக நடித்த திலீப்குமார் போர்க்களத்தில் செங்கிஸ்கான் மாதிரி வீரம் காட்டுகிறார். அவர் பார்வையும், நடையும் அருமை. காதலிக்கும் போது தான் “சொங்கி”ஸ்கான் மாதிரி சோம்பல் காட்டுகிறார். எப்போது பார்த்தாலும் காதல் ததும்பும் கண்களுடனேயே போதையுடன் இவர் இருப்பது கடுப்பாக இருக்கிறது. அனார்கலியாக நடித்த மதுபாலா கொள்ளை அழகு. கண்களாலேயே காதல் சுனாமி ஏற்படுத்துகிறார். பொறாமைக்கார அந்தப்புர பணிப்பெண்ணாக பாகா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பவரும் அழகாக இருக்கிறார். அருமையாக நடிக்கிறார்.

  45 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்திருந்தாலும் இந்தப் படத்தின் முக்கியக் கருவான “காதல்” எல்லா காலக்கட்டத்துக்கும் பொருந்தும் ஒரே டிரெண்ட் என்பதால் எவர்க்ரீன் ஹிட் இந்தப்படம்!

 3. சாரதா says:

  ‘மொகலே ஆஸம்’ திரைப்படம் கருப்பு வெள்ளையாக இருந்தபோதே 1962-ல் “அக்பர்” என்ற பெயரில் அப்படியே தமிழ்ப்படுத்தப்பட்டது (சுத்த தமிழில் சொன்னால் ‘டப்பிங் செய்யப்பட்டது’). அதனால் இந்தியில் இடம்பெற்ற பாடல் மெட்டுக்கள் அதே மெட்டில் தமிழுருவம் பெற்றன. ‘கனவு கண்ட காதல் கதை சொல்லலாச்சே’, ‘ஆற்றின் கரைதனிலே கண்ணன் என்னை கேலி செய்தானே’ போன்ற நாம் கேட்டு ரசித்த பாடல்கள் அப்படிப் பிறந்தவைதான்.

  அருமையான டெக்னிக் கலரில் மாறியபின என்.டி.டிவி.(NDTV)யில் ஒளிபரப்பியபோது பார்க்கும் வாய்ப்புக்கிடைத்தது. கொள்ளை அழகு. என்ன பிரமாண்டம். அதாவது வெட்டி பிரமாண்டம் செய்யாமல் கதைக்குத்தேவையான பிரமாண்டம். குறிப்பாக போர்க்களக்காட்சிகள் வியக்க வைத்தன (வைக்கின்றன, இன்றைக்கும்). ஜென்மம் முடிவதற்குள் 70 எம்.எம்.தியேட்டரில் பார்த்துவிட வேண்டும்.

  ஜூனியர்விகடனில் கார்ட்டூனிஸ்ட் மதன், தொடராக எழுதி, பின் நூலாக வெளிவந்த ‘வந்தார்கள் வென்றார்கள்’ தொடரில், அனார்கலி கதை ஒரு சரடு என்று சொல்லியுள்ளார். அப்படி ஒரு விஷயமே மொகலாயர்களின் உண்மைச் சரித்திரத்தில் இல்லையென்கிறார். ஆனால் ‘அனார்கலி’ என்ற பெயர் பொறிக்கப்பட்ட கல்லறை ஒன்று லாகூரில் இன்றும் காணப்படுகிறது என்றும் கூறுகிறார். உண்மையோ சரடோ எப்படியிருந்தாலும், வண்ணப்படுத்தப்பட்ட’மொகலே ஆஸம்’ பார்க்காத கண்கள் பாவம் செய்தவை என்பது என் எண்ணம். (என் எண்ணத்திலிருந்து ஆர்.வி. நிச்சயம் வேறுபடுவார். காரணம் அவர் கருத்தில் இப்படம் அப்படியொன்றும்…….)

 4. சாரதா says:

  சலீம் (ஜகாங்கீர்) எப்படி நூர்ஜகான் என்ற விதவையை மணந்தார் என்பதும் ஒரு சுவையான (ஆனால் சோகமான) வரலாறு. விதவையை மணந்தார் என்பதை விட விதவையாக்கி மணந்தார் என்பதே வரலாறாம். பொருட்காட்சியின் ஸ்டால் ஒன்றில் மெகருன்னிஸா என்ற பெண்ணைப்பார்த்து அவள் அழகில் மயங்கிய ஜகாங்கீர், அவள் திருமணமானவள் என்பதையறிந்து, அவளுக்குத்தெரியாமல் கணவனைத் தீர்த்துக்கட்டி, அவளுக்கு வாழ்வு கொடுத்து, மெகருன்னிஸாவை ‘நூர்ஜகானா’க்கினார் என்பது வரலாறு. ஆக, சரவணபவன் அண்ணாச்சிகளுக்கு முன்னோடி ‘நம்ம’ சலீம்தான்.

  • RV says:

   ராஜன்/அனானிமஸ், மதுபாலா இருதயத்தில் ஏதோ பிரச்சினை இருந்து அதனால்தான் இறந்தார்.

   சாரதா, சரித்திர தகவல்களுக்கு நன்றி!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: