அந்தக் காலத்து பாட்டு ரெகார்டிங்


கொத்தமங்கலம் சுப்பு அந்தக் காலத்தில் பாட்டுகள் எப்படி ரெகார்ட் செய்யப்பட்டன என்றும் பேபி சரோஜா மோகம் பற்றியும் எழுதி இருக்கிறார். எனக்கு தெரிந்த ஒரு டீச்சருக்கு – இப்போது அறுபது அறுபத்தைந்து வயது இருக்கும் – பேபி சரோஜா என்றுதான் பெயர். ஏ.பி.எஸ். என்று கூப்பிடுவார்கள். விகடன் பொக்கிஷத்தில் பார்த்தது, விகடனுக்கு நன்றி!

அக்காலத்தில் பிளேபாக் முறை கிடையாது. நடிகருக்குப் பக்கத்தில் ஒரு பஜனை கோஷ்டி வந்து கொண்டிருக்கும். இடுப்பிலே ஆர்மோனியத்தைக் கட்டியிருப்பார்கள். பிடில்காரர் கையிலே பிடிலை வைத்துக் கொண்டு வாசித்துக் கொண்டே நடந்து வருவார். மிருதங்கக்காரர், இடுப்பில் மிருதங்கத்தை வைத்துக் கொண்டு தட்டிக் கொண்டு வருவார். நடிகர் காமிரா எதிரில் பாடிக் கொண்டே நடந்து வருவார். பக்க வாத்தியக்காரர்கள் எல்லோரும் சற்று விலகி, காமிராவின் எல்லைக்குள் விழுந்து விடாமல் வந்து கொண்டிருப்பார்கள். நடிகரின் தலைக்கு மேல், ஒரு துரட்டிக் கொம்பில் சொருகிய மைக் பிரயாணம் செய்து கொண்டே வரும். பக்க வாத்தியமும் பாட்டும் ஒன்றாக ரிக்கார்ட் செய்யப்பட்டுவிடும்.

இதிலே ஒரு வேடிக்கை. நடு ஷூட்டிங்கில் காற்று திசை மாறி அடிக்க ஆரம்பிக்கும். நடிகர் பாட்டை மைக் ரிக்கார்டு செய்து விடும். ஆனால், பக்க வாத்தியத்தையெல்லாம் காற்று அடித்துக் கொண்டு போய் விடும். படத்திலே பாட்டைக் கேட்கும்போது, பாதிப் பாட்டில் பக்க வாத்தியம் கேட்கும்; இன்னொரு பாதியில் பக்க வாத்தியங்கள் கேட்காது. இன்று பிளேபாக் வந்துவிட்டது. இறைவனின் ஒரு குரலுக்குக் கட்டுப்பட்டு உலகம் நடப்பதுபோல இன்று தமிழ் சினிமா 4, 5 குரல்களுக்குக் கட்டுப்பட்டே நடந்து வருகிறது.

திடீர் திடீர் என்று, ஒரு வருஷத்தில் கட்டிய கட்டடங்களுக்கு எல்லாம் ‘சரோஜ், சரோஜ்’ என்று பெயர் வைத்தார்கள். அப்பொழுது பிறந்த பெண் குழந்தைகளுக்கு எல்லாம் சரோஜா என்று பெயரிட்டார்கள். காரணம், Baby Sarojaபேபி சரோஜா நடித்த பால யோகினி படம்தான். ஷெர்லி டெம்பிள் நடித்த படங்களையே பார்த்து மகிழ்ந்திருந்த நம் மக்கள், தமிழ்நாட்டில் ஒரு பேபி சரோஜாவைக் கண்டவுடன் சிந்தை மகிழ்ந்தனர். இப்படி ஒரு சின்னக் குழந்தையின் பெயரால் கட்டடங்கள் கிளம்பியதும், குழந்தைகளுக்குப் பெயரிட்டதும் சரித்திரத்திலேயே காண முடியாத விஷயம்.

இம்மாதிரி சினிமாவை நல்ல தொழிலாக்கி, நிறைய மக்கள் இதிலே ஆனந்தம் அடைய வேண்டுமென்று பாடுபட்டவர்கள் தமிழ் நாட்டில் எத்தனையோ பேர்! அவர்கள் எல்லோரும் இன்றைய சினிமா அபிவிருத்தியைப் பார்த்து ஆனந்திப்பார்கள். இன்று சினிமா வீறு கொண்டிருக்கிறது. ஆனால், அதற்குப் போட்டியாக, டெலிவிஷன் வரக் காத்துக் கொண்டு இருக்கிறது.

ஆனால், கலைகளில் எதையும் போட்டி என்று சொல்ல முடியாது. ரோஜா வந்ததற்காக மல்லிகை மறைந்து விடவில்லை; மருக்கொழுந்து வந்ததற்காக தாமரை மணம் வீசாமல் இல்லை. காலப்போக்கிலேயே மலர்வது கலை! என்றென்றைக்கும் அது வளருமே ஒழிய, மறையாது!

தொகுக்கப்பட்ட பக்கம்:

தொடர்புடைய பதிவுகள்: