நந்தனார்


Nandanarநான் பார்த்த மிக பழைய தமிழ் படங்களில் நந்தனாரும் ஒன்று. பழைய படங்கள் பிரின்ட் கிடைப்பதே அபூர்வம். இந்த வீடியோ நன்றாகவே இருந்தது. ராண்டார்கை தன் பத்தி ஒன்றில் இது 2008இல் Vintage Heritage அமைப்பு திரையிட்டதாகவும் நல்ல கூட்டம் வந்ததாகவும் வேறு சொல்கிறார். இந்த அமைப்பு பற்றி அதிகம் தெரியவில்லை, ஆனால் அவர்களுக்கு ஒரு ஜே!

இது தண்டபாணி தேசிகர் நடித்த படம். ஜெமினி வெளியீடு. செருகளத்தூர் சாமா, சுந்தரிபாய் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். கோபால கிருஷ்ண பாரதியாரின் நந்தன் சரித்திரத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது. (சேக்கிழாரின் கதையில் ஆண்டையான வேதியர் எல்லாம் கிடையாதாம். அது கோபால கிருஷ்ண பாரதியார் சேர்த்த மசாலாவாம்.) எஸ்.எஸ். வாசன் தயாரிப்பு. இசை எம்.டி. பார்த்தசாரதி மற்றும் எஸ். ராஜேஸ்வர ராவ். படம் வந்தது 1942 என்று ராண்டார்கை சொல்கிறார். 1941ஓ என்றோ எனக்கு கொஞ்சம் சந்தேகம். நான் பார்த்த படங்களில் மிக பழையது இதுவா சபாபதியா என்று எனக்கு தெரியவில்லை. சபாபதி 1941 என்று நிச்சயமாக தெரியும்.

நந்தனார் கதை எல்லாருக்கும் தெரிந்ததுதான். “இழிகுலத்தவரான” நந்தனுக்கு தில்லை சென்று நடராஜனை தரிசிக்க வேண்டும் என்று ஆசை. அவருடைய ஆண்டையான வேதியரிடம் சொல்லவே பயம். இதற்கு நடுவில் திருப்புன்கூரில் கோவிலுக்கு வெளியே நின்றாவது தரிசனம் செய்யலாம் என்றால் நந்தி மறைக்கிறது. கடைசியில் சிவபெருமானே சற்றே விலகி இரும் பிள்ளாய் சந்நிதானம் மறைக்குதாம் என்று நந்தியிடம் சொல்ல வேண்டி இருக்கிறது. ஒரு நாள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு வேதியரிடம் பித்தம் தெளிய மருந்தான அந்த சிதம்பரத்துக்கு போக வேண்டும் சொன்னால் அவர் சிதம்பர தரிசனமோ அது உனக்கு அடுக்குமோ என்று கேட்கிறார். நாளைக்கு போ நாளைக்கு போ என்று தட்டி கழிக்கிறார். கடைசியில் என் நாற்பது வேலி நிலத்திலும் நீ ஒருவனே உழுது பயிர் செய்தால் போகலாம் என்று சொல்கிறார். நந்தன் சோர்ந்து உட்கார்ந்து அரகர ஜகதீசா என்று பாட, ராவோடு ராவாக சிவபெருமான் பூத கணங்களை வைத்து வேலையை செய்துவிடுகிறார். வேதியர் நந்தனின் பெருமையை உணர்ந்து மன்னிப்பு கேட்டு அனுப்பி வைக்கிறார். நந்தன் அங்கே தீயில் குளித்து ஆலய தரிசனம் செய்கிறார்.

தண்டபாணி தேசிகரும் செருகளத்தூர் சாமாவும் கொடுத்த வேலையை நன்றாக செய்திருக்கிறார்கள். அறுவடை செய்யும் ட்ரிக் ஷாட் அந்த காலத்தில் பேசப்பட்ட ஒன்றாம். ஆனால் படம் பார்ப்பதென்றால் பாட்டுகளுக்காகத்தான். பித்தம் தெளிய மருந்தொன்றிருக்குதாம், அய்யே மெத்தக் கடினம், சிதம்பர தரிசனமோ, சிவலோகனாதனைக் கண்டு சேவித்திடுவோம், பிறவா வரம் தாரும், என்னப்பனல்லவா என் தாயுமல்லவா, காமம் அகற்றிய, காண வேண்டாமோ, வருகலாமோ, அரகர ஜகதீசா என்ற பாட்டுகள் மிக அருமையானவை. முக்கால்வாசி கோபால கிருஷ்ண பாரதியார் எழுதியவைதான். மிச்சம் பாபநாசம் சிவன் எழுதியவை. யூட்யூபில் பல வீடியோக்கள் கிடைக்கின்றன.

என்னப்பனல்லவா என் தாயுமல்லவா

காமம் அகற்றிய நேயன் அவன்

காண வேண்டாமோ

அய்யே மெத்தக் கடினம்

வருகலாமோ

அரகர ஜகதீசா

வழி மறைத்திருக்கிது

நான் மிகவும் ஆச்சரியப்பட்ட ஒரு விஷயம் – ஒரு சேரி சீனில் பிற்காலத்தில் “மல்லு வெட்டி மடிச்சுக் கட்டும் மச்சான் ஒரு மயிலக் காளை” என்ற பாட்டின் மெட்டு அப்படியே பின்னணி இசையாக வரும்! அசந்துவிட்டேன்! ஷங்கர் கணேஷ் எங்கிருந்தெல்லாம் பாட்டை எடுக்கிறார்கள்!

பாட்டுகளுக்காக பாருங்கள் என்று சிபாரிசு செய்கிறேன். பத்துக்கு ஆறு மார்க். C grade.

தொகுக்கப்பட்ட பக்கம்: அவார்டா கொடுக்கறாங்க–>படங்களின் பட்டியல்

தொடர்புடைய பதிவுகள்:
ராண்டார்கை நந்தனார் பற்றி எழுதிய பத்தி
ராண்டார்கை தேசிகரைப் பற்றி எழுதிய ஒரு கட்டுரை

Advertisements

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

2 Responses to நந்தனார்

  1. //படம் வந்தது 1942 என்று ராண்டார்கை சொல்கிறார். 1941ஓ என்றோ எனக்கு கொஞ்சம் சந்தேகம்.//

    இந்த விஷயத்தில் திரு இரண்டார்கை சொல்வது உண்மையாகக் இருக்கலாம். எனெனில் அவரது அனுபவத்திற்கு முன்பு நாம் கொசுவினும் குறைவானவர்கள். இன்றைய வார்த்தையில் அதை “ சுள்ளான்கள்” என்று கொள்ளலாம். 70 முடிவில் இரண்டார்கையின் ஆவித்தொடர்களும், வழக்குத் தொடர்களும் ஆ.வி முதல் தினமணி கதிர் வரை பல பத்திரிக்கைகளில் வெளிவந்தன. அப்பேர்பட்டவர், அதுவும், இம்மாதிரி விஷயங்களைப் பற்றி மட்டும் எழுதுபவர் தவறு செய்ய வாய்ப்பு மிகவும் குறைவே என நான் கருதுகிறேன்.

    நந்தனார் விஷயத்தில் திரு. தண்டபாணி தேசிகர் சொல்வதைக் கேட்போபோமா?.

    திரு தண்டபாணி தேசிகரின் பேட்டியை இதுவரை யாரும் படித்தே இருக்கமாட்டார்கள் என்றே நினைக்கிறேன் (குறிப்பாக நம் தலைமுறையில் இருந்தே, ( நான் உங்கள் தலைமுறை இல்லை என்றாலும், ஒரு எழெட்டு வயதால் தலைமுறைகள் ஒன்றும் பாதிக்காது என்பதால் தலைமுறைகளை ஒன்றாகக் கலந்து விட்டேன், என்றாலும் ஜாக்கிரதையாக ”அண்ணா” என்றுக் கூறிக்கொள்ள விரும்புகிறேன்! 🙂 )

    இது அவரது பேட்டி குமுதத்தில் 58- 59 களில் வெளிவந்ததாக இருக்கலாம்!.
    இனி அவரது வார்தைகளில்!.

    “தோன்றிற் புகழோடு தோன்றுக” என்ற தெய்வ வாக்கை மெய்பிக்கும் வகையில் முதற்படத்தின் மூலமே திரையுலகின் குறிச்சொல்லாகிய நட்சத்திர பதவியை எனக்குத் தேடித் தந்தது ‘பட்டினத்தார்’. அதிலிருந்து நான் தொடர்ந்து நடித்த எல்லாப் படங்களிலுமே பக்திப் பாத்திரங்களை ஏற்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது, என் தவப்பயன் என்றே சொல்ல வேண்டும்.

    (எங்களுக்கு மின்சாரம் போகப் போவதால் இன்னும் மூன்று மணி நேரம் கழித்து அல்லது கலிஞ்சர் அரசு விரும்பும் நேரத்தில் எழுதுகிறேன்!. நான் இந்த இடுகையை முன்னமே பார்த்து இருந்து, இந்தப் பின்னூட்டத்தை எழுத விரும்பிய போதிலும் கலைஞரின் கருணையால் , எழுத முடிய வில்லை!. எங்களுக்கு அறிவிக்கப் பட்ட மின் தடை நேரம் மூன்று மணி நேரம்தான் என்றாலும், நடுவில் 15 , 15 நிமிடங்கள் விளையாட்டு போல வெட்டுவதால் ( இங்கே கவனிக்க! எங்களுக்கு மின் தடைதானே தவிர இது மின் வெட்டல்ல! ( சொன்னவர் ஆ.வீ.ஸ்வாமி தமிழக மின்சாரத்துறை அமைச்சர்!) 3 மணிக்கூர் கழிஞ்ச பின் நோக்காம்!

  2. M.M.தண்டபாணி தேசிகரின் பேட்டி… தொடர்ச்சி…

    பட்டணத்தார் படம் வெளியான புதிதிலே திருநெல்வேலியைச் சேர்ந்த திரு.முத்தையா பிள்ளை என்ற இராணுவ அதிகாரி அந்தப் படத்தைப் பார்த்து மனம் மாறிப் பதவி, குடும்பம், சொத்து சுகம் அனைத்தையும் துறந்து துறவு பூண்டார் என்ற செய்தி அப்போதே பலரும் அறிந்தனர். ஆனால் அதே மாதிரி, சென்னை திருவெற்றியூரில் நிறைந்த சொத்து சுகத்துடன் வாழ்ந்து வந்த அன்பர் ஒருவர் தம்முடைய அனைத்தையும் ஏழை எளியவர்களுக்கு ஈந்துவிட்டு கையேந்தி பிச்சை வாங்கி உண்ட வண்ணம் ஆலயத்தில் நாளைக் கடத்திக் கொண்டிருக்கிறார் என்ற விவரம் அண்மையில் எனக்குத் தெரிந்தது.

    பட்டணத்தார் படம் 1937 -இல் வெளி வந்தது. அடுத்தபடி லோடஸ் பிக்ஸர்ஸார் தயாரித்த வள்ளாள மகாராஜன் படத்தில் நான் அரசனாக நடித்தேன்.

    பல காரணங்கள் குறுக்கிட்டு அந்தப் படத்தில் நியாயமாக எற்படவேண்டிய சிறப்பைக் குறைத்து விட்டன. மூன்றாவது முயற்சியாக ஒரே சமயத்தில் உருவானவை மாணிக்க வாசகர், தாயுமானவர்.

    1941- ஆம் வருடத்தில் ஜெமினி அதிபர் திரு எஸ்.எஸ். வாசன் அவர்கள் நந்தனார் படப்பிடிப்பை துவங்கினார்.

    பட்டணத்தாருக்கு அடுத்தபடி உண்மையில் உணர்ச்சியுடன் நடிக்க வேண்டும் என்ற எண்ணம், எனக்கு ஏற்பட்டது நந்தனார் படத்தில் தான். (ஆகையால் நந்தனார் துவங்கியது 1941 ஒரு வேளை வெளி வந்தது 1942 ஆக இருக்கலாம்)

    இதற்கு அடுத்தபடியாக நான் நடித்த ஆறாவது படம் திருமழிசை ஆழ்வார்.

    இதற்குப்பின் எனக்கு இசைக் கச்சேரிகளுக்கு ஏராளமான சந்தர்பங்கள் கிடைக்கத் தொடங்கின. திரையிலகில் இருந்து நான் விடுபட்டேன்.

    அன்று, பத்தாண்டுகளுக்கு முன், வெளிவந்த படங்களுக்கும் இன்று வெளிவந்து கொண்டிருக்கின்ற படங்களுக்கும் எத்தகைய மாறுபாடு!

    ( 1958-59 களிலேயே திரையுலகம் மோசமாக இருக்கிறது என்று சொல்கிறார். அது சரி அந்தகாலத்திலே!… என்று ஆரம்பித்து பழைய காலத்தை சிலாகிப்பது தண்டபாணி தேசிகர் காலத்தில் மட்டுமல்ல, அட!.. நம் காலத்தில் மட்டுமல்ல, மூவாயிரம் ஆண்டுகளாகவே இருக்கிறதே! 🙂 )

    இனி அவர் பேட்டி…

    புராதனம்தான் வேண்டும், சரித்திரம்தான் வேண்டும் என்று கண்ணை மூடிக்கொண்டு நான் சொல்லவில்லை. கதை எக்காலத்ததாயினும் அதில் உயர்ந்த கருத்துக்கள் நிரம்பி இருக்க வேண்டும். படத்தைப் பார்க்கும் இரசிகர்கள் ஒவ்வொரு படத்திலும் எதாவது ஒரு நல்ல நீதியைக் கைகொள்ள வேண்டும். அதற்கு மாறாக மட்டமான நினைவுகளைத் தட்டி எழுப்பும் தன்மை உடைய அம்சம் பொருந்திய படம் ஒன்றுகூட நமக்குத் தேவையில்லை. ( நல்ல காலம் இவர் இன்னும் உயிரோடு இல்லை. இவர் செய்த புண்ணியம்! )

    எந்தப் பொருளும் நன்கு கவனிக்கப் பெறாவிடின் மாசுறும்; தீய வழிகளில் உபயோகப் படுத்தினார் நாசமுறும். நல்ல வழியில் ஆண்டால் நமக்கும் பயன் உண்டு, அதற்கும் மதிப்பு உண்டு.

    கலைகளும் அப்படித்தான், சினிமாக் கலையில் அந்நிலை ஏற்படக் காலம் ஆகும் என்றால் அதுவரைக்கும் கண், காது, கருத்து ஆகிய புலன்களுக்கு ஓய்வு அளிக்கலாமே! நான் அதையே செய்து வருகிறேன்.

    நல்லதந்தி!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: