தண்டபாணி தேசிகர் பேட்டி


M.M. Dhandapani Dhesigarநண்பர் நல்லதந்தி எம்.எம். தண்டபாணி தேசிகர் அளித்த ஒரு பேட்டியை அனுப்பி இருக்கிறார். இது குமுதம் பத்திரிகையில் 1958-59 வாக்கில் அளிக்கப்பட்ட பேட்டியாம். நல்லதந்தி சொல்வது போல தேசிகரின் பேட்டியை யாரும் படித்தே இருக்க மாட்டோம். அவருக்கும், குமுதத்துக்கும் நன்றி!

“தோன்றிற் புகழோடு தோன்றுக” என்ற தெய்வ வாக்கை மெய்பிக்கும் வகையில் முதற்படத்தின் மூலமே திரையுலகின் குறிச்சொல்லாகிய நட்சத்திர பதவியை எனக்குத் தேடித் தந்தது பட்டினத்தார். அதிலிருந்து நான் தொடர்ந்து நடித்த எல்லாப் படங்களிலுமே பக்திப் பாத்திரங்களை ஏற்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது, என் தவப்பயன் என்றே சொல்ல வேண்டும்.

பட்டினத்தார் படம் வெளியான புதிதிலே திருநெல்வேலியைச் சேர்ந்த திரு. முத்தையா பிள்ளை என்ற இராணுவ அதிகாரி அந்தப் படத்தைப் பார்த்து மனம் மாறிப் பதவி, குடும்பம், சொத்து சுகம் அனைத்தையும் துறந்து துறவு பூண்டார் என்ற செய்தி அப்போதே பலரும் அறிந்தனர். ஆனால் அதே மாதிரி, சென்னை திருவெற்றியூரில் நிறைந்த சொத்து சுகத்துடன் வாழ்ந்து வந்த அன்பர் ஒருவர் தம்முடைய அனைத்தையும் ஏழை எளியவர்களுக்கு ஈந்துவிட்டு கையேந்தி பிச்சை வாங்கி உண்ட வண்ணம் ஆலயத்தில் நாளைக் கடத்திக் கொண்டிருக்கிறார் என்ற விவரம் அண்மையில் எனக்குத் தெரிந்தது.

பட்டினத்தார் படம் 1937இல் வெளி வந்தது. அடுத்தபடி லோடஸ் பிக்ஸர்ஸார் தயாரித்த வல்லாள மகாராஜன் படத்தில் நான் அரசனாக நடித்தேன்.

பல காரணங்கள் குறுக்கிட்டு அந்தப் படத்தில் நியாயமாக எற்படவேண்டிய சிறப்பைக் குறைத்து விட்டன. மூன்றாவது முயற்சியாக ஒரே சமயத்தில் உருவானவை மாணிக்க வாசகர், தாயுமானவர்.

1941ஆம் வருடத்தில் ஜெமினி அதிபர் திரு எஸ்.எஸ். வாசன் அவர்கள் நந்தனார் படப்பிடிப்பை துவங்கினார்.

பட்டினத்தாருக்கு அடுத்தபடி உண்மையில் உணர்ச்சியுடன் நடிக்க வேண்டும் என்ற எண்ணம், எனக்கு ஏற்பட்டது நந்தனார் படத்தில்தான்.

இதற்கு அடுத்தபடியாக நான் நடித்த ஆறாவது படம் திருமழிசை ஆழ்வார்.

இதற்குப்பின் எனக்கு இசைக் கச்சேரிகளுக்கு ஏராளமான சந்தர்பங்கள் கிடைக்கத் தொடங்கின. திரையுலகில் இருந்து நான் விடுபட்டேன்.

அன்று, பத்தாண்டுகளுக்கு முன், வெளிவந்த படங்களுக்கும் இன்று வெளிவந்து கொண்டிருக்கின்ற படங்களுக்கும் எத்தகைய மாறுபாடு!

புராதனம்தான் வேண்டும், சரித்திரம்தான் வேண்டும் என்று கண்ணை மூடிக்கொண்டு நான் சொல்லவில்லை. கதை எக்காலத்ததாயினும் அதில் உயர்ந்த கருத்துக்கள் நிரம்பி இருக்க வேண்டும். படத்தைப் பார்க்கும் இரசிகர்கள் ஒவ்வொரு படத்திலும் எதாவது ஒரு நல்ல நீதியைக் கைகொள்ள வேண்டும். அதற்கு மாறாக மட்டமான நினைவுகளைத் தட்டி எழுப்பும் தன்மை உடைய அம்சம் பொருந்திய படம் ஒன்றுகூட நமக்குத் தேவையில்லை. ( நல்ல காலம் இவர் இன்னும் உயிரோடு இல்லை. இவர் செய்த புண்ணியம்! )

எந்தப் பொருளும் நன்கு கவனிக்கப் பெறாவிடின் மாசுறும்; தீய வழிகளில் உபயோகப்படுத்தினால் நாசமுறும். நல்ல வழியில் ஆண்டால் நமக்கும் பயன் உண்டு, அதற்கும் மதிப்பு உண்டு.

கலைகளும் அப்படித்தான், சினிமாக் கலையில் அந்நிலை ஏற்படக் காலம் ஆகும் என்றால் அது வரைக்கும் கண், காது, கருத்து ஆகிய புலன்களுக்கு ஓய்வு அளிக்கலாமே! நான் அதையே செய்து வருகிறேன்.

நல்லதந்தியின் கமென்ட்: 1958-59களிலேயே திரையுலகம் மோசமாக இருக்கிறது என்று சொல்கிறார். அது சரி அந்தகாலத்திலே!… என்று ஆரம்பித்து பழைய காலத்தை சிலாகிப்பது தண்டபாணி தேசிகர் காலத்தில் மட்டுமல்ல, அட!.. நம் காலத்தில் மட்டுமல்ல, மூவாயிரம் ஆண்டுகளாகவே இருக்கிறதே!

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

தொடர்புடைய பதிவுகள்:
நந்தனார் திரைப்பட விமர்சனம்
ராண்டார்கையின் ஒரு கட்டுரை

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

7 Responses to தண்டபாணி தேசிகர் பேட்டி

 1. யோகன் says:

  அருமையான பேட்டி!
  பதிவிட்டதற்கு நன்றி

 2. srinivas uppili says:

  எம்.எம். தண்டபாணி தேசிகர்(1908 – 1972)

  பரம்பரை பரம்பரையாக வந்த ஓதுவார்கள் குடும்பத்தில் பிறந்த முருகையா தேசிகர் குமாரர் முத்தையா தேசிகரின் மகன் தண்டபாணி தேசிகர். கும்பகோணம் பிடில் ராஜமாணிக்கம் பிள்ளை அவர்களிடம் 4 ஆண்டுகள் பயின்று இசைஆர்வம் மற்றும் புலமையயை வளர்த்துக் கொண்டவர். ‘பட்டினத்தார்’ தேசிகர் நடித்து 1935-ல் வந்த திரைப்படம். பின் ஜெமினி தயாரித்த ‘நந்தனார்’ படத்திலும் இவர் பாடி நடித்துள்ளார். திருமழிசை ஆழ்வார் (1948), ‘முதல் தேதி’ (1955) படங்களிலும் தேசிகரின் குரல் ஒலித்தது.

  தண்டபாணி தேசிகர் தனது வெண்கலக் குரலில், “ஜகஜனனீ “, “என் அப்பன் அல்லவோ…”, “தில்லை என்றொரு தலமொன்று இருக்குதாம்”, “வழிமறித்து நிற்குதே”, “காண வேண்டாமா” முதலான பாடல்களை பாடி நடித்து ரசிகர்களின் இதயத்தில் நீங்கா இடம் பிடித்தவர்.

  தேஷ் ராகத்திலமைந்த இந்தப் பாடலை (பாரதிதாசன் இயற்றியது) தேசிகரின் இழையும் குரலில் செவி மடுக்கும் எவருடைய உள்ளமும் உருகிடாதோ!:-

  “துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ
  இன்பம் சேர்க்க மாட்டாயா? – எமக்கு
  இன்பம் சேர்க்க மாட்டாயா? – நல்
  அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ
  அல்லல் தீர்க்க மாட்டாயா? – கண்ணே
  அல்லல் நீக்க மாட்டாயா?”

  அண்ணாமலை பல்கலைக் கழக்கத்தின் இசைததுறைத் தலைவராகவும் தேசிகரவர்கள் பணியாற்றியுள்ளார். பல கீர்த்தனைகளையும் அவர் புனைந்துள்ளர்.

  தென்றல் இணைய இதழில் “ஆதி” அவர்கள் எழுதியுள்ள தேசிகரின் வாழ்க்கை வரலாற்றில் கண்டவை:-

  சுருதி சுத்தமான வெண்கல சாரீரம், நெடில் – குறில் போன்ற சொற்களின் தன்மைகளை நன்குணர்ந்து பாடும் இயல்பு, சாகித்தியத்தின் பொருள் உணர்ந்து உணர்ச்சிபூர்வமாகப் பாடும் தன்மை, சாதாரண தமிழ் மக்களும் தமது மொழியில் கேட்டுணர்ந்து அனுபவிக்கும் பாடல்களைப் பாடும் திறன் போன்றவை தேசிகரின் தனித்தன்மைகள். தேசிகரின் இசைக்கு தமிழகமெங்கும் வரவேற்பும் உற்சாகமும் பரவலாகவே இருந்தது.

  ஒரு சிலருடைய ஏகபோக உரிமை அல்ல இசை. மாறாக சாதாரண மக்கள் தமது மொழியில் சிந்தனையில் தமது வாழ்வியல் புலங்களுடன் இரண்டறக் கலந்த இசை கோலமாக அனுபவிக்க இனங்காண ‘இசை விருந்து’ இருக்க வேண்டும். இதற்கான ‘இயக்கம்’ வெகுண்டெழுந்து செயற்படுவதற்குக் கூட தேசிகரின் இசை நிகழ்வுகள் சாதகமாக அமைந்தன. தமிழர்களிடையே தமிழிசையின் பரவலுக்கும் ஊக்கியாக இருந்து செயற் பட்டவர்.

 3. srinivas uppili says:

  சிதம்பரத்தில் நிகழ்ந்த தமிழிசை மகாநாட்டின்போது அண்ணமலை பல்கலைக் கழக பட்டமளிப்பு மண்டபத்தில் நடந்த தண்டபாணி தேசிகரின் கச்சேரியைப் பற்றி பேராசிரியர் கல்கி அவர்கள் எழுதியது [1]:-

  … இரண்டு பெரிய பீரங்கிகளின் கச்சேரி. முதலில் ஸ்ரீ தண்டபாணி தேசிகர்; பிறகு ஸ்ரீ தியாகராஜ பாகவதர்.

  தேசிகரின் தமிழிசையில் எனக்கு எப்போதும் மிகுந்த மதிப்பு உண்டு. அந்த மதிப்பு நேரில் கேட்டதில் பன்மடங்கு பெருகியது. கம்பிரமான சாரீராம்; ஒலிக் கருவி இல்லாமலேயே மண்டபம் முழுதும் சென்று எதிரொலி செய்யும்படியான பெரிய குரல். அவ்வளவு பெரிய குரலில் சுகானுபவம் ததும்பிற்று.

  ஸாகித்யத்தின் சிறப்பைப் பூரணமாக உணர்ந்து, இதய பாவத்துடன் பாடுவதில் தேசிகருக்கு நிகர் தேசிகர்தான் என்று சொல்லவேண்டும். அவர் ஸ்வரம் பாடுவதில்லை; ராக விஸ்தாரங்களில் புகுந்து ஜால வித்தைகள் செய்வதில்லை. நேரே நேடுகப் பாடிக்கொண்டே போகிறார். இன்பம் ததும்பும் செந்தமிழ்ப் பாடல்களையே பொறுக்கி எடுத்துப் பாடுகிறார். தமிழ்ப் பதங்களை சுத்தமாக வாய் நிறைய உச்சரித்துப் பாடுகிறார். ஒரு வார்த்தையாவது நம் காதில் விழாமல் தப்பிச் செல்வது கிடையாது.

  ஒரு கீர்த்தனம், ஒரு விருத்தம் – இப்படியே மாற்றி மாற்றி இரண்டு மணி நேரம் அற்புதமாகப் பாடிவந்தார் தேசிகர். அவர் பாடிய அச்சுததாசர் கீர்த்தனங்கள் சாகித்யத்திலும் இசையிலும் வெகு உயர்தரமாக இருந்தன. கரகரப்ரியாவில் “காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி” என்ற தேவாரத்தைப் பாடியபோது, எல்லோருடைய உள்ளமும் கனிந்து கண்ணீர் பெருகியே விட்டது. கச்சேரியை முடித்தபோது, “ஏன் முடிக்கிறார்?” என்று தோன்றியது.

  [1] “சங்கீத யோகம்” – தமிழ்ப் பாடல் இயக்கம் பற்றி்ய கல்கியின் கட்டுரைத் தொகுப்பு – தமிழ்ப் பண்ணை: 1947; வானதி: 1998.

 4. srinivas uppili says:

  தென்றல் மாத இதழ் – ஜனவரி – 2002
  ————————————-
  பரம்பரை பரம்பரையாக வந்த ஓதுவார் பரம்பரையில் 19ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் முருகய்யா தேசிகர். முருகய்யா தேசிகரின் மகன் முத்தையா தேசிகர். இந்த முத்தையா தேசிகரின் மகன் தண்டபாணி தேசிகர். இவர் 1908இல் பிறந்தார்.

  இசைக்குடும்பப் பின்புலத்தில் பிறந்து வளர்ந்து வந்த அனுபவம், தண்டபாணி தேசிகருக்கு இயல்பிலேயே இசைப்புலமை வாய்க்கப் பெற்றவராக வாழ்வதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. தேவார திருவாசகம் முதலியவை களைப் பாடுவது, இவற்றை சிறுவர்களுக்கு இசையுடன் போதிப்பது, கதாகாலட்சேபம் செய்வது போன்ற தொழிலை அர்ப்பணிப்புடன் இவரது குடும்பம் செய்து வந்தது. இந்தப் பின்புலச் செழுமையில் தோய்ந்து பக்தி இலக்கியம், அதன் ஜீவஊற்றுடன் இசைபிரவாக மாக பீறிட்டு வெளிப்பட்டது.

  தண்டபாணி தேசிகர் ஆரம்பத்தில் தன தந்தையிடம் இசையை முறையாக கற்றார். நாதஸ்வர வித்துவான் சடையப்ப பிள்ளையிடம் சரளி, ஜண்டை, கீதம் மற்றும் வர்ணம் படித்தார். தொடர்ந்து சித்தப்பா மாணிக்க தேசிகர் ஆசிரியராக இருந்த தேவாரப் பாடசாலையில் தேவாரம், திருவாசகம், திருப்புகழ் முதலிய வற்றை பாடும் முறைகளை நுட்பங்களை மூன்று வருடம் கற்றுக் கொண்டார்.

  இசையின் பல்வேறு நுணுக்கங்களை அனு பவங்களை லயிப்புகளை வரன்முறையாக கற்றுத் தேர்ந்து தனியாக கச்சேரி செய்யுமளவிற்கு வளர்ந்தார்.

  திருமுருகர் ஆலயத்தின் பத்துநாள் வைகாசி திருவிழாவில் சங்கீத வித்துவான்களும் நாதசுரக் கலைஞர்களும் கூடியிருந்த சபையில் சிறுவனான தண்டபாணி தனது முதற் கச்சேரியை அரங்கேற்றினார். கூடியிருந்தவர் களின் பாராட்டும் ஐந்து ரூபாய் சன்மானமும் கிடைக்கப்பெற்று மட்டற்ற மகிழ்ச்சியில் மூழ்கினார்.

  குடந்தையில் இருந்த தமக்கையார் வீட்டில் தங்கியிருந்து, வயலின் மேதை ராஜமாணிக்கம் பிள்ளையிடம் நான்கு வருடங்கள் இசை பயின்று மேலும் தனது இசை ஆர்வத்தை புலமையை வளர்த்துக் கொண்டார். கர்நாடக இசையின் தமிழிசையின் நுட்பங்களை ஆய்ந்தறிந்து தன்வயப்படுத்திக் கொண்டார்.

  மதுரை வடக்குச் சித்திரை வீதியில் அம்பாள் உற்சவத்தில் பெரும்பாலும் தமிழ்ப்பாடல்களைப் பாடி ‘தமிழ்பாட்டு இயக்கம்’ வலுப்பெறுவதற்கும் காரணமாக இருந்து செயற்பட்டார். இந்தக் கச்சேரி பலரது பாரட்டுக்கும் இசையார்வத் துக்கும் புதியமடைமாற்றத் திருப்பத்துக்கும் காரணமாயிற்று.

  சுருதி சுத்தமான வெண்கல சாரீரம், நெடில் – குறில் போன்ற சொற்களின் தன்மைகளை நன்குணர்ந்து பாடும் இயல்பு, சாகித்தியத்தின் பொருள் உணர்ந்து உணர்ச்சிபூர்வமாகப் பாடும் தன்மை, சாதாரண தமிழ் மக்களும் தமது மொழியில் கேட்டுணர்ந்து அனுபவிக்கும் பாடல்களைப் பாடும் திறன் போன்றவை தேசிகரின் தனித்தன்மைகள். தேசிகரின் இசைக்கு தமிழகமெங்கும் வரவேற்பும் உற்சாகமும் பரவலாகவே இருந்தது.

  ஒரு சிலருடைய ஏகபோக உரிமை அல்ல இசை. சங்கீதம் மாறாக சாதாரண மக்கள் தமது மொழியில் சிந்தனையில் தமது வாழ்வியல் புலங்களுடன் இரண்டறக் கலந்த இசை கோலமாக அனுபவிக்க இனங்காண ‘இசை விருந்து’ இருக்க வேண்டும். இதற்கான ‘இயக்கம்’ வெகுண்டெழுந்து செயற்படுவதற்குக் கூட தேசிகரின் இசை நிகழ்வுகள் சாதகமாக அமைந்தன. தமிழர்களிடையே தமிழிசையின் பரவலுக்கும் ஊக்கியாக இருந்து செயற் பட்டவர்.

  திரைப்படத்திலும் தேசிகர் தன இசைக் கோலங்களை வழங்கிச் சென்றுள்ளார். பட்டினத் தார் (1935) படத்தில் பல்வேறு ராகங்களில் அமைந்த பாடல்களை பாடியுள்ளார். அதைவிட இப்படத்தில் தேசிகரே பட்டினத்தாராக நடித்து நடிகராகவும் புகழ்பெற்றார். ஜெமினி தயாரிப்பில் நந்தனார் படத்தில் சிவனடியாராக தேசிகர் பாடி நடித்தார். தொடர்ந்து பல படங்களில் நடித்து பாடி வலம் வந்தார். தேசிகர் கடைசியாக திருமசை ஆழ்வார் (1948) படத்தில் பாடி நடித்தார். பழம்பெரும் இசையமைப்பாளர் எஸ்.வி. வெங்கட்ராமனின் இன்னிசையில் பல அரிய பாடல்களை பாடினார். பின்னர் பாடி நடிப்பது நின்று போக பின்னணி பாடல் பாடும் நிலையிலும் இருந்தார். முதல்தேதி (1955) என்ற படத்தில் அசரீரியாக தேசிகரின் குரல் ஒலித்தது.

  தேவார திருவாசக திருப்புகழ் விற்பன்னராக ஓதுவார் மரபை போற்றிப் புகழ்ந்து அதன் பரவலாக்கத்துக்கும் காரணமாக இருந்து தொழிற்பட்டார். கர்நாடக சங்கீதத்தின் நுட்பங்களையும் பக்தி இசையுடன் கலந்து புதிய இசை அனுபவப் பகிர்வுக்கு காரணமாக இருந்தார். மேலும் தமிழிசை மரபு மீள் கண்டுபிடிப்புக்கும் தன்னளவில் முன்னோடியாக இருந்து பங்கு கொண்டார். திரைஇசையில் ஓர் தனித்த முரசு கொட்டி வந்தார். ஆக இசையின் பயில்வுக்கும் அதன் வியாபகத்துக்கும் தனது மொழிவழிச் சமூகத்தின் உச்சபட்ச இசையின் பரிமாணத்துக்கு தேசிகர் ஓர் முன்னோடியாக இருந்து பணியாற்றியுள்ளார்.

  இசையால் வாழ்ந்து இசைக்கு புதுக் கோலங்கள் அளித்து இசையின் பல்வேறு பரிமாணத் தேட்டத்துக்கு தேசிகரின் பங்களிப்பு அளப்பரியது. இன்றைய தலைமுறை தேசிகரின் இசைப் பங்களிப்பை தன்வயப்படுத்த வேண்டும். இதனால் இசைக் கோலங்கள் தமிழ் இசையின் புதிய இசை அலைகளாக மேற்கிளம்ப ஒவ்வொருவரும் தம்மளவில் முயற்சி செய்ய வேண்டும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: