தங்கப் பதக்கம் – ஆர்வியின் விமர்சனம்


Thangap Pathakkamதங்கப் பதக்கம் ஒரு quintessential சிவாஜி படம். சிவாஜி படங்களின் எல்லா பலங்களும் பலவீனங்களும் நிறைந்த படம்.

சிவாஜி படங்களில், குறிப்பாக 1965-80 காலப் படங்களில் சிவாஜி மட்டும்தான் இருப்பார். படம் பூராவும் வியாபித்திருப்பார். படத்தின் காட்சிகள் எல்லாம் சிவாஜியின் நடிப்புத் திறமையை காட்டவே அமைக்கப்பட்டிருக்கும். சிவாஜி உணர்ச்சி பொங்க நடிப்பதற்கு வசதியாக கதை மிகைப்படுத்தப்படும். இப்படி மிகைப்படுத்தப்ப்படும்போது கதையில் ஓட்டைகள் விழும், காட்சிகள் coherent ஆக இருக்காது. ஆனால் அந்தக் காலத்தில் எல்லாரும் சிவாஜியையே பார்த்துக் கொண்டிருப்பார்கள், கதையின் பலவீனங்கள் தெரியாது.

தங்கப் பதக்கம் எவ்வளவோ பரவாயில்லை. ஸ்ரீகாந்துக்கு நல்ல ரோல். சிவாஜியையே தூக்கி சாப்பிட்டுவிட்டார் என்று சொன்ன அந்த கால இளைஞர்களை நான் பார்த்திருக்கிறேன். கே.ஆர். விஜயாவுக்கு ஓரளவு ஸ்கோப் உள்ள ரோல். கதையின் ஓட்டைகளை ஸ்ரீகாந்த், சிவாஜியின் நடிப்பு இன்றும் ஓரளவு மறக்கடிக்கிறது.

தெரிந்த கதைதான். ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் கடமை தவறாத போலீஸ் அதிகாரி தன் அயோக்கியனான மகனை எதிர்கொள்கிறார்.

நினைவு வரும் ஓட்டைகள்:

 • தமிழ் நாட்டில் யார் சௌத்ரி என்று பேர் வைத்துக் கொள்கிறார்கள்? தமிழ் நாட்டில் வாழும் வடநாட்டு குடும்பம் என்று வைத்துக் கொண்டாலும் பையனுக்கும் சௌத்ரி என்றுதான் பேர் வரும். என்னவோ அப்படி பேர் வைத்தால் புதுமையாக இருக்கும், லாஜிக் பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டாம் என்று நினைத்திருக்கிறார்கள்.
 • பையனை சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பும் கண்டிப்பான அப்பா. சரி. அவனை ஒரு தரம் கூட போய் பார்க்காதது ஏன்? ஏதாவது வேண்டுதலா? மனைவியிடம் பொய் எதற்கு? ஒரே காரணம்தான். பொய் சொல்லி மாட்டிக் கொள்வது போல ஒரு சீன் வைத்து அதில் சிவாஜி “நடிக்க வேண்டுமே!”
 • திரும்பி வரும் பையன் தவறான வழியில் போவது அப்பாவுக்கு தெரிகிறது. என்ன ஒரு வார்த்தை கூட இப்படி செய்யாதே, இது தொடர்ந்தால் நானே அரெஸ்ட் செய்ய வேண்டி வரும் என்று சொல்லமாட்டாரா? சிவாஜி அப்பாவாக இருந்தால் சொல்லமாட்டார். சொல்லி, ஸ்ரீகாந்த் திருந்திவிட்டால் அரெஸ்ட் செய்யும் சீன் எப்படி வைப்பது, படம் பார்ப்பவர்களை எப்படி “அதிர்ச்சி” அடையச் செய்வது, சிவாஜி எப்படி முகத்தை முறுக்கிக் கொண்டு நடிப்பது?
 • சிவாஜி பிரமாதமாகத்தான் நடித்திருக்கிறார். அவரிடம் எதிர்ப்பார்க்கப்பட்டதை கொடுத்திருக்கிறார். ஆனால் படத்தின் revelation ஸ்ரீகாந்த்தான். அவருடைய காரக்டரில் நம்பகத்தன்மை அதிகம். சின்ன வயதில் இருந்தே அப்பா மீது காண்டு, நடுவில் கொஞ்சம் சமாதானமாகப் போக முயற்சி செய்தாலும், மீண்டும் கடுப்பாகி அப்பாவை வீழ்த்த முயற்சி செய்யும் ரோல். அலட்டிக் கொள்ளாமல், பொங்கி எழாமல், அதே நேரத்தில் இறுகிப் போன மனது என்பதை நன்றாக காட்டுகிறார். நான் சிறுவனாக இருந்த காலத்தில் என் காலேஜ் படிக்கும் உறவினர்கள் சிவாஜி இதற்கப்புறம் ஸ்ரீகாந்திடம் கொஞ்சம் பயந்தார், அவருடன் சேர்ந்து நடிக்கும்போதெல்லாம் ஸ்ரீகாந்துக்கு ஸ்கோப் கம்மியாக இருக்கும்படி பார்த்துக் கொண்டார் என்று சொல்வார்கள். அவர்களுக்கெல்லாம் ஆதர்சம் ஸ்ரீகாந்த்தான். ஸ்ரீகாந்த் மாதிரியே முடி, மீசை என்று அலைந்தார்கள். அவர்கள் சொன்னதில் உண்மை இருக்கிறதா இல்லையா என்று சாரதா போன்றவர்கள்தான் சொல்லவேண்டும்.

  கே.ஆர். விஜயா வழக்கம் போலத்தான். ஆனால் அவருக்கு இந்த படத்தில் கிடைத்த ரோல் கொஞ்சம் வலுவானது. கணவனுக்கும் பிள்ளைக்கும் நடுவில் மாட்டிக் கொண்டு தவிக்கும் ரோல். சொதப்பாமல் செய்திருக்கிறார்.

  இந்தப் படத்தில்தான் சோ அப்பாயிசம் என்று எம்ஜிஆரின் அண்ணாயிசத்தை கிண்டல் செய்வார் என்று நினைக்கிறேன்.

  சோதனை மேல் சோதனை பாட்டு மிகவும் பிரபலமானது. சிவாஜியை கிண்டல் செய்யவும் பயன்பட்டது. அதுவும் அதில் பிரமீளா “மாமா… அந்த தெய்வத்துக்கு யாரால ஆறுதல் சொல்ல முடியும்?” என்று உருகுவது நான் சிவாஜி பக்தனாக இருந்த காலத்திலேயே மிகவும் கிண்டல் செய்யப்பட ஒன்று. இதைத் தவிர தத்தி தத்தி பிள்ளை, சுமைதாங்கி சாய்ந்தால் ஆகிய பாட்டுகளும் நினைவு வருகின்றன.

  1974-இல் வந்த படம். சிவாஜி, கே.ஆர். விஜயா, ஸ்ரீகாந்த், பிரமீளா, வி.கே. ராமசாமி, சோ ராமசாமி, ஆர்.எஸ். மனோகர், மேஜர் சுந்தரராஜன், மனோரமா நடித்திருக்கிறார்கள். இசை எம்எஸ்வி. பிற்காலத்தில் முள்ளும் மலரும், உதிரிப் பூக்கள் மாதிரி படங்களை இயக்கிய மகேந்திரன் கதை வசனம். மகேந்திரனுக்கு பேர் வாங்கிக் கொடுத்த படம். இயக்கம் பி. மாதவன். பெரிய வெற்றிப் படம். சிவாஜியின் படங்களின் இன்றும் பேசப்படுவது.

  மகேந்திரன் இந்த படத்தை நினைவில் வைத்துக் கொண்டுதான் பேசினாரா என்று தெரியாது. ஆனால் அவர் எங்கோ தான் கல்லூரி காலத்தில் எம்ஜிஆர் முன்னிலையில் தமிழ் சினிமா எப்படி யதார்த்தமற்ற வாழக்கையை மட்டுமே காட்டுகிறது என்று ஆவேசமாக பேசியதாகவும், பிற்காலத்தில் தான் வசனகர்த்தாவாக வெற்றி பெற்றபோது அப்படிப்பட்ட யதார்த்தமற்ற கதைகளையே உருவாக்கியதாகவும் வருத்தப்பட்டிருக்கிறார்.

  இன்று கொஞ்சம் மெலோடிராமடிக் ஆகத் தெரிந்தாலும், சிவாஜியின் சிறந்த படங்களில் ஒன்று. ஸ்ரீகாந்தின் மிகச் சிறந்த படங்களில் ஒன்று. பத்துக்கு ஏழு மார்க். B- grade.

  தொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்

  தொடர்புடைய பதிவுகள்: தங்கப் பதக்கம் விகடன் விமர்சனம்

  சாரதா, ஃபோரம்ஹப்பில் உங்கள் விமர்சனம் ஏதாவது இருக்கிறதா?

  பற்றி RV
  Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

  10 Responses to தங்கப் பதக்கம் – ஆர்வியின் விமர்சனம்

  1. srinivas uppili says:

   “தங்கப் பதக்கம்’ நாடகம் முதலில் நாடகமாக நடிக்கப்பட்டு பின்னர் திரைப்படமாக உருவாக்கப்பட்டது. முதலில் “தங்கப் பதக்கம்’ நாடகத்தில் கதாநாயகனாக நடித்தவர் செந்தாமரை.

   அப்போது அந்த நாடகத்தின் பெயர் “தங்கப் பதக்கம்’ அல்ல; “இரண்டில் ஒன்று’. செந்தாமரையின் 42-வது நாடக நிகழ்ச்சியின்போது நாடகம் பார்க்க நடிகர் திலகம் வந்தார். நாடகத்தைப் பாராட்டி ரசிகர்கள் கைதட்டி உற்சாகப்படுத்துவதை உன்னிப்பாக பார்த்தார்.

   நாடகம் முடிந்ததும் மேடைக்கு வந்த சிவாஜி அந்நாடகத்தின் இயக்குனரான எஸ்.ஏ.கண்ணனையும், செந்தாமரையையும் அழைத்து, “”நாளைக்கு எங்கே நாடகம்?” என்று கேட்டார். அவர்கள் கூறினார்கள். நாடகத்தை நாளையோட நிறுத்திக்கங்க. இந்த நாடகத்தை நம்ம சிவாஜி நாடக மன்றம் போடட்டும். எஸ்.பி.செüத்ரியாக நானே நடிக்கிறேன்” என்றார். எஸ்.ஏ.கண்ணன், செந்தாமரை ஆகிய இருவருமே சிவாஜி நடத்தி வந்த சிவாஜி நாடக மன்றத்தில் பணியாற்றியவர்கள்.

   அந்த நாடக மன்றம் கலைக்கப்பட்டதால்தான் தனியாக நாடகக் குழு ஆரம்பிக்கும் எண்ணமே அவர்களுக்கு ஏற்பட்டது. ஆகவே சிவாஜியே தனது நாடகக் குழுவின் சார்பில் அந்த நாடகத்தை நடத்துவதாகச் சொன்னதும் இருவருமே மகிழ்ச்சியோடு ஒப்புக் கொண்டனர். “இரண்டில் ஒன்று’ “தங்கப் பதக்கம்’ என்று பெயர் மாறியது.

   அடுத்து மூன்று நாட்கள் படப்பிடிப்பு முடிந்து வந்த பிறகு நாடக வசனங்களை படிக்கச் சொல்லி கண்மூடி கேட்டார் சிவாஜி. நான்காம் நாள் மேடையில் பிரதான ஒத்திகை. ஐந்தாம் நாள் “தங்கப் பதக்கம்’ நாடகம் தலைவர் காமராஜர் தலைமையில் மியூசிக் அகாடமியில் அரங்கேற்றம் கண்டது.

   அந்த தினத்தை “சினிமாவும் நானும்’ என்ற தனது நூலில் கதாசிரியர் மகேந்திரன் மிகவும் ரசனையோடு வர்ணித்துள்ளார்.

   மகேந்திரன் கூறுகிறார்……
   ————————–

   “அரங்கேற்ற தினத்தன்று ஒப்பனை அறையில் சிவாஜியை எட்டிப் பார்த்தேன். ஒப்பனை நடந்து கொண்டிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அவரது உடம்பு “எஃகு’ போல் நிமிருகிறது. மூன்று நாள்தானே வசனம் படிக்கச் சொல்லி கேட்டார். எதையும் மறக்காமல் எப்படி வசனம் பேசுவார்? என்ற மாதிரியான கேள்விகள் எனக்குள் இருந்தது. மணி அடித்துவிட்டது. நாடகம் தொடங்கியது. நான் எழுதிய ஒரு வசனத்தைக் கூட அவர் மறக்கவில்லை. எனக்குள் பிரமிப்பு! எப்படி இது சாத்தியம்? நாடகம் முடியும்வரை கைத்தட்டல் ஓயவில்லை.

   நாடகம் முடிந்து ஒப்பனை அறைக்குள் போனேன். ஒப்பனை கலைத்து விட்டு களைப்போடு உட்கார்ந்திருந்தார் நடிகர் திலகம். நாடகம் முழுக்க அவர் காட்டிய கம்பீரத்திற்கும், ஓப்பற்ற நடிப்பிற்கும் அவர் தனது உடல் சக்தி அத்தனையையும் தந்து விட்டு இப்போது ஒப்பனை கலைந்ததும் செüத்ரியாக வாழ்ந்து நடித்தவர் தனது இயல்பு நிலைக்குத் திரும்பி அவர் அவராகி விட்டார் என்று தெரிந்தது. என்னைப் பார்த்ததும், “”என்னப்பா உன் டயலாக்கை எல்லாம் ஒழுங்காக பேசினேனா?” என்று ஒரு மாணவனைப் போல கேட்டார் அந்த மாபெரும் நடிகர். என் கண்கள் கலங்கின.

   தமிழ் சினிமா உலக அளவில் தன் நெஞ்சை நிமிர்த்திக் கொள்ள அவதரித்த அற்புதக் கலைஞனே நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.

   வாழ்வில் எனக்குக் கிடைத்த வரப்பிரசாதம் ஒன்று இருக்குமென்றால் அது தனது கதையின் கதாபாத்திரமேற்று நான் எழுதிய வசனத்தை அந்த மகா கலைஞன் பேசியதுதான். அதுவே எனக்குக் கிட்டிய மிகப் பெரும் பாக்கியம் என்று சொல்வேன்.

  2. சாரதா says:

   டியர் ஆர்.வி.

   உங்கள் நண்பர்கள்/உறவினர்கள் கூற்று முழுக்க முழுக்க கற்பனையே தவிர உண்மையில்லை. இதை ஸ்ரீகாந்தே ஒப்புக்கொள்ள மாட்டார். வியட்நாம் வீடு படத்திலேயே ஸ்ரீகாந்தின் நடிப்பைப் பார்த்த நடிகர்திலகம், ‘இவனை நம்ம படத்துல தொடர்ந்து போடுங்கப்பா’ என்று தன் இயக்குனர்களிடம் சொன்னார். அதிலும் தங்கப்பதகக்கத்துக்குப் பிறகுதான் அதிகமாக ஸ்ரீகாந்த், நடிகர்திலகத்தின் படங்களில் தொடர்ந்து இடம் பெற்றார்.

   பீம்சிங் படங்களில், ஒரே படத்தில் ரங்காராவ், சுப்பையா, பாலையா, எம்.ஆர்.ராதா, ஜெமினி ஆகியோருடன் நடித்து கரை கண்டவரான நடிகர்திலகம், ஸ்ரீகாந்தைப்பார்த்து பயந்தார் என்று சொல்வது மிகப்பெரிய ஜோக். தன்னுடன் நடிப்பவர்கள், தனக்கு இணையாக சிறப்பாகச்செய்ய வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு நடிக்கச்சொல்லிக்கொடுப்பவர் நடிகர்திலகம். இதை திரைப்பிரபலங்கள் பலமுறை பல இடங்களில் சொல்லியிருக்கிறார்கள். ‘உயர்ந்த மனிதன்’ படத்தில், (தனக்கு அவ்வளாவாகப்பிடிக்காத) அசோகனுக்கு அவர் ‘அட்டாக்’ வந்து சாகும் தறுவாயில் எப்படி நடிக்க வேண்டும் என்று சொல்லிக்கொடுத்தாராம் நடிகர்திலகம். ஆனால் அதில் பத்தில் ஒரு பங்கு கூட அசோகன் நடிக்கவில்லையாம் (ஆதாரம்: நேற்று (22.04.2010) ஜெயா தொலைக்காட்சியின் ‘திரும்பிப்பார்க்கிறேன்’ நிகழ்ச்சியில் திரு ஏ.வி.எம்.சரவணன் சொன்ன தகவல்).

   சிலருக்கு சிவாஜியைக் கிண்டல் செய்வது அல்வா சாப்பிடுவது போல. அவர்கள் எப்போதும் அதை விடப்போவதில்லை, (உங்கள் நண்பர்கள் உட்பட).

   திரையுலகில் பழம் தின்று கொட்டை போட்ட ஏ.வி.எம்.சரவணன், இயக்குனர் மகேந்திரன் போன்றோருக்கு நடிகர்திலகம் சிவாஜியின் அருமை தெரிந்திருக்கிறது. அது போதும்.

   ஆர்வி… உங்களுக்கு சுமாரான பாடல்கள் எல்லாம் நினைவுக்கு வந்துள்ளன. ஆனால் படத்தின் சூப்பர் பாடலான ‘நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்’ என்ற பாடல் நினைவு வராமல் போனது ஆச்சரியம்.

   ‘தங்கப்பதக்கம்’ திரைப்படம் 14 இடங்களில் 100 நாட்களைக்கடந்தும், 5 இடங்களில் ‘வெள்ளிவிழா’வைக்கடந்தும் ஓடியது. (தமிழ்நாட்டில் 4, இலங்கையில் 1)

  3. சாரதா says:

   பதித்த பிறகுதான் ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது…

   ஸ்ரீகாந்தை தன் படத்தில் போட வைத்து, அவருக்கு போதுமான ஸ்கோப் இல்லாமல் பார்த்துக்கொள்ளும் வேண்டாத வேலையெல்லாம் செய்வதை விட, ‘இனி ஸ்ரீகாந்தை என் படங்களில் போடாதீங்கப்பா’ என்று ஒரே வரியில் சொல்லிவிட்டுப் போயிருப்பாரே. அவர் என்ன சொன்னாலும் கேட்பதற்கு இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் தயாராக இருந்தார்களே. அப்படியிருந்தும் நடிகர்திலகம் படங்களில் ஸ்ரீகாந்த் தொடர்ந்து இடம் பெற்றார் என்பதிலிருந்தே, உங்கள் நண்பர்களின் புளுகு மூட்டை அம்பலாகிறதே.

  4. raj says:

   /* தமிழ் நாட்டில் யார் சௌத்ரி என்று பேர் வைத்துக் கொள்கிறார்கள்? தமிழ் நாட்டில் வாழும் வடநாட்டு குடும்பம் என்று வைத்துக் கொண்டாலும் பையனுக்கும் சௌத்ரி என்றுதான் பேர் வரும். என்னவோ அப்படி பேர் வைத்தால் புதுமையாக இருக்கும், லாஜிக் பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டாம் என்று நினைத்திருக்கிறார்கள். */

   R.B.சௌத்ரி சென்னையில் தானே இருக்கிறார்? அவரது மகன்களின் பெயர் ஜீவா – ரமேஷ் … இதில் எங்கே சௌத்ரி இருக்கிறது?

   • RV says:

    ராஜ், ரமேஷ்/ஜீவா எல்லாம் சினிமாவுக்கான பெயர்கள். அதில் எல்லாம் முழு பெயரையும் எதிர்பார்க்காதீர்கள்!

    சாரதா, நீங்கள் சொன்னால் சரி. ஸ்ரீகாந்த்துக்கு த. பதக்கத்துக்கு பிறகு சிவாஜி படங்களில் சொல்லிக்கொள்ளும்படி ரோல் வரவில்லை என்று நினைவு. அதைத்தான் ஸ்ரீகாந்தின் அந்த தீவிர ரசிகர்கள் அப்படி உணர்ந்தார்களோ என்னவோ. சிவாஜி யாரையும் பார்த்து பயப்பட வேண்டியதில்லை என்று நீங்கள் சொல்வது 100 % உண்மை. ஆனால் சிவாஜிக்கும் ஸ்ரீகாந்துக்கும் ஒரு rivalry இருந்ததா என்று தெரிந்துகொள்ளத்தான் கேட்டேன்.
    அசோகன் உ. மனிதனில் சிவாஜி சொல்லிக் கொடுத்ததில் 10% கூட செய்யவில்லை என்று எழுதி இருந்தீர்கள். நல்ல வேளை! அசோகன் அதில் ஏற்கனவே உணர்ச்சிப் பிழம்பு!

    விவரங்களுக்கு நன்றி, ஸ்ரீனிவாஸ்!

  5. vimal says:

   சிறிய தகவல்

   ஜீவாவின் ஒரிஜினல் பெயர் அமர்.B.சௌதரி

   ஜித்தன் ரமேஷின் ஒரிஜினல் பெயர் ரமேஷ்.B. சௌதரி

  6. raju says:

   RV

   உயர்ந்த உள்ளம் மனிதன் படத்தில் அசோகன் நடிப்பு பதிய உங்கள் கருத்து மிகவும் சரியே. ரெண்டு மூணு சீன் லே சிவாஜியை அப்பிடியே “சாப்பிட்டு விடுவார்”. அருமையான, ஆனால் வீனாடிக்கப்பட்ட நடிகர் .திருச்சி St. Joseph student. உ.வே. சுவாமிநாதன் தமிழ் scholar. அந்த படத்தில் சௌகார் மிகவும் class concious ஆக இருப்பார். சௌகாரை நக்கல் அடித்து சிவாஜி சொல்வார்… “there is a needle for the rich and a needle for the poor’ …இல்லையா டாக்டர் என்று.நிஜமாவே “அந்தநாள் ஞாபம் ” ரொம்பவே வந்து விட்டது உங்கள் பதிவு படிச்சு .

   அன்புடன்.

   ராஜு-துபாய்

  7. ஜோ says:

   // சிவாஜி இதற்கப்புறம் ஸ்ரீகாந்திடம் கொஞ்சம் பயந்தார், அவருடன் சேர்ந்து நடிக்கும்போதெல்லாம் ஸ்ரீகாந்துக்கு ஸ்கோப் கம்மியாக இருக்கும்படி பார்த்துக் கொண்டார்//

   :))))))))))))))))))))))))))))))))))))))

   அது எப்படிங்க இப்படி சீரியஸா காமெடி பண்ணுறீங்க …ஸ்ப்பா ..முடியல்ல .

   • RV says:

    ஜோ, எனக்கு நினைவு சரியாக இருந்தால் நீங்கள் பெரிய சிவாஜி பக்தர். அதுக்காக என்ன எழுதி இருக்குன்னு படிக்காமலே பதில் எழுதணுமா? அது எப்படிங்க “என்று சொல்வார்கள்” என்ற அடுத்த இரண்டு வார்த்தையை கரெக்டா விட்டுட்டீங்க?

  மறுமொழியொன்றை இடுங்கள்

  Fill in your details below or click an icon to log in:

  WordPress.com Logo

  You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

  Google photo

  You are commenting using your Google account. Log Out /  மாற்று )

  Twitter picture

  You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

  Facebook photo

  You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

  Connecting to %s

  %d bloggers like this: