தாதாசாஹேப் ஃபால்கே விருது


முக்கால்வாசி தமிழர்களுக்கு இப்படி ஒரு விருது இருப்பதே சிவாஜிக்கு இந்த விருது கொடுத்த பிறகுதான் தெரியும். இந்திய அரசு சினிமாத் துறையில் பெரும் சாதனையாளர்கள் என்று கருதப்படுபவர்களுக்கு இந்த விருதைக் கொடுக்கிறது.

V.K. Murthy

2008-ஆம் வருஷத்துக்கு விருதை வென்றவர் வி.கே. மூர்த்தி. மூர்த்தி கன்னடிகர். ராஜ்குமாருக்கு அடுத்தபடி இந்த விருதை வென்ற கன்னடிகர் இவர்தான். காமெராமேன். எனக்கு காமெராவின் நுட்பம் எல்லாம் ரசிக்கத் தெரியாது. ஆனால் குரு தத்தின் முக்கால்வாசி படங்களுக்கு இவர்தான் ஒளிப்பதிவாளர், குரு தத்தின் படங்கள் அனேகமாக கிளாசிக் ஒலிப்பதிவைக் கொண்டவை. கறுப்பு வெள்ளை திரைப்படங்களில் சில சமயம் ஒளிப்பதிவு அற்புதமாகத் தெரிவதுண்டு. மூர்த்தியின் கறுப்பு வெள்ளைப் படங்கள் அப்படித்தான். அந்த மாதிரி ஒளிப்பதிவு என்றால் எனக்கு தமிழ் படத்தில் நினைவு வருவது “அந்த நாள்” திரைப்படம்தான். காகஸ் கே ஃபூல், ப்யாசா, ஆர் பார், சாஹிப் பீபி அவுர் குலாம், Baazi (இதுதான் தங்கைக்காக என்று பிற்காலத்தில் சிவாஜி நடித்து வந்தது), சி.ஐ.டி. போன்ற படங்கள் இவர் ஒளிப்பதிவு செய்தவைதான்.Kagaz Ke Phool என் போன்ற பாமரனுக்கே அற்புதமான ஒளிப்பதிவு என்று தோன்றுகிறது. ஒளிப்பதிவுக்கு என்று ஒரு விருது கொடுத்திருப்பது, அதுவும் இவருக்கு கொடுத்திருப்பது பொருத்தமானதே.

தாதாசாஹேப் ஃபால்கே விருது பெற்றவர்களின் லிஸ்டைப் பார்த்தால் வயிறு எரிகிறது. ஹிந்திப் படங்களுக்கு மட்டுமே recognition இருக்கிறது. தமிழுக்கு சிவாஜி மட்டுமே; கன்னடத்துக்கு ராஜ்குமார் மட்டுமே; கேரளாவுக்கு அடூர் கோபாலகிருஷ்ணன் மட்டுமே; தெலுங்குக்கு நாகேஸ்வர ராவ், எல்.வி. பிரசாத், நாகி ரெட்டி, பி.என். ரெட்டி; பானுமதி, எம்ஜிஆர், ஸ்ரீதர், பாலச்சந்தர், ஜெமினி கணேசன், பத்மினி, சாவித்திரி, நாகேஷ், எம்எஸ்வி, இளையராஜா, டிஎம்எஸ், சுசீலா, எஸ்பிபி, எஸ். ஜானகி போன்றவர்கள் மன்னா டே, தபன் சின்ஹா, யஷ் சோப்ரா, பிரதீப், துர்கா கோட்டே போன்றவர்களுக்கு எந்த விதத்திலும் குறைந்தவர்கள் இல்லை. கே. சுப்பிரமணியம், ஏவிஎம் செட்டியார் போன்ற முன்னோடிக்காவது கொடுத்திருக்கலாம். சிவாஜிக்கே தாமதமாகத்தான் கிடைத்திருக்கிறது. அவருக்கு முன்னால் நாகேஸ்வர ராவுக்கும் ராஜ்குமாருக்கும் கொடுத்ததே தவறு!

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

சுட்டிகள்:
தாதாசாஹேப் ஃபால்கே விருது பெற்றவர்கள் லிஸ்ட்
வி.கே. மூர்த்தி பற்றிய விக்கிபீடியா குறிப்பு
நடிகர் மோகன்ராம் எழுதிய ஒரு குறிப்பு