ஸ்ரீதரின் “வெண்ணிற ஆடை” பற்றி நண்பர் ராஜன்


தமிழ் படம் பார்த்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டதே என்று நினைத்து பெட்டியில் கிடந்த டிவிடிக்களில் இருந்து இது வரைப் பார்த்திராத ஒரு தமிழ் டிவிடியை எடுத்துப் பார்த்தேன், அது வெண்ணிற ஆடை.

தமிழ் நாட்டின் இளமை இயக்குனர் என்று பாராட்டப் படும் ஸ்ரீதரால் 1965இல் எடுக்கப்பட்ட சினிமா அது. ஸ்ரீதருக்குப் பிடித்த ஒரே ஃபார்முலா முக்கோணக் காதல். தமிழ் நாட்டின் தலையாயப் பிரச்சினை முக்கோணக் காதல் மட்டுமே என்பது அவரது தீர்மானமான ஒரு முடிவு என்பது அவரது பல படங்களையும் பார்த்ததில் புரிய வருகிறது. எப்பொழுதாவது அவருக்கே போரடித்தால் நாற்கோணக் காதல், ஐங்கோணக் காதல் படம் எல்லாம் எடுப்பார். ஆனால் காதல் மட்டுமே சினிமாவாக எடுக்கத் தகுந்த ஒரே பிரச்சினை என்பதில் மட்டும் அவருக்கு உறுதியான கருத்து. ஒரே கதையை வைத்து அதிக படங்களை எடுத்தவர் என்று அவருக்கு ஆஸ்காரில் சொல்லி யாராவது போஸ்துமஸ் அவார்ட் ஒன்று வாங்கித் தரலாம். முக்கோணக் காதலை வெவ்வேறு விதமான பெர்முட்டேஷன் காம்பினேஷன்களில் சளைக்காமல் எடுத்துத் தள்ளி தமிழ்நாட்டின் புதுமை இயக்குனர், இளமை இயக்குனர் என்ற பெயரை எப்பொழுதும் தக்க வைத்துக் கொண்டவர் ஸ்ரீதர் ஒருவரே. ஒரே கதையை வைத்துக் கொண்டு அதிக திரைப்படங்கள் எடுத்த இயக்குனர் இவராகத்தான் இருப்பார் என்றும் நினைக்கிறேன்.  இந்த சினிமாவுக்கு முன்னதாக நெஞ்சில் ஓர் ஆலயம், கல்யாணப் பரிசு போன்ற படங்களில் முக்கோணக் காதலின் பல பரிமாணங்களைத் தமிழக ரசிகர்களுக்கு அறிமுகப் படுத்தி விட்ட ஸ்ரீதர் 1965ல் மீண்டும் ஒரு முக்கோணக் காதலைக் குலுக்கிப் போட்டு ஒரு சினிமா எடுத்துத் தள்ளி விடுகிறார் அது என்னவோ தமிழ் நாட்டின் தலையெழுத்தையே பிற்காலத்தில் புரட்டிப் போட்டு விட்டது. (பின்னாளில் ஸ்ரீதர் நடக்க முடியாமல் படுக்கையாகக் கிடந்த பொழுது தான் அறிமுகப் படுத்தி முதல்வராகிய ஜயலலிதா தன்னை வந்து பார்க்கவில்லையே என்ற கவலையுடனேயே அவர் உயிரை விட்டு விட்டார்.)

ஸ்ரீதர் திரைக்கதைக் குழுவான அவரது தம்பி ராஜேந்திரன், கோபு, வின்செண்ட் எல்லாம் கூடி ஸ்டோரி டிஸ்கஷன் செய்து எடுத்திருப்பார்கள் போலிருக்கிறது. கதையைப் பற்றி அவர்களுக்கு எப்பொழுதும் சந்தேகமே இருப்பதில்லை. அதில் தெளிவாக இருந்திருக்கிறார்கள்.  முக்கோணக் காதல் கதை மட்டுமே அவர்களுக்குத் தெரிந்த ஒரே கதை. அதை எப்படி புதுமையாகக் காட்ட வேண்டும் என்பதை மட்டும் அவர்கள் திட்டமிட்டுவிட்டால் போதுமானது. புதுமையானது கதையில் இருக்க வேண்டியதில்லை என்பது அவர்களின் ஏகமனதான தீர்மானம். நெஞ்சில் ஓர் ஆலயத்தில் ஹீரோ நிறைவேறாத காதலுக்காக இறக்கிறார் ஆகவே இதில் ஹீரோயினை சாகடித்து விடலாம் என்று ஒரு புதுமை, நெஞ்சில் ஓர் ஆலயம் ப்ளாக் அண்ட் வொயிட் ஆகவே இது அடிக்க வரும் வர்ணத்தில் இருக்கட்டும் என்றொரு புதுமை, அப்புறம் இது வரை அறிமுகமாயிராத புது நடிகர்கள் இன்னொரு புதுமை, ஏற்கனவே ஹிட்டான காதலிக்க நேரமில்லை நாகேஷ் ஃபார்முலாவை அப்படியே புதுமுக நடிகர்களை வைத்துப் போட்டு விடலாம் என்று இன்னொரு புதுமை என்று பழைய ஸ்ரீதர் படங்களைக் குலுக்கிப் போட்டு இன்னொரு புதுமையான சினிமாவை எடுத்து விட்டிருக்கிறார்கள் அதுதான் இந்த வெண்ணிற ஆடை.

அந்தக் காலத்து நாடக பாணியில் இருந்து சற்று வெளியே வந்து பத்து பக்கம் வசனம் பேசிய நடிகர்களை 2 பக்கம் சுருக்கமாகப் பேச வைத்து நடிப்பிலும், காமிரா கோணங்களிலும் நாடகத்தன்மையைக் குறைத்து அடக்கமாக நடிக்க வைத்ததும் நல்ல இசையுடன் கூடிய பொழுதுபோக்கு சினிமாக்களை அளித்ததும்  ஸ்ரீதர் செய்த புதுமை. சிவாஜியின், கண்ணம்பாவின் உணர்ச்சி மிக்க வசனங்களுக்கும் நடிப்பிற்கும் பழகிப் போயிருந்த தமிழ் ரசிகர்களுக்கு ஒரு வித மென்மையான உணர்வையும், மிகையில்லா நடிப்பையும் அளித்தவை ஸ்ரீதரின் படங்கள் என்பதால்யே அவர் ஒரு வித்தியாசமான டைரக்டராகப் பார்க்கப்பட்டிருக்கிறார். அந்த வகையில் அவர் தமிழ் சினிமாவில் மாற்றத்தைக் கொண்டு வந்த ஒரு இயக்குனரே.

படம் ஒரு வண்ணப் படம். அதில் யாருக்கும் சந்தேகம் வந்து விடக் கூடாது என்பதற்காக வண்ணத்தைப் பிழிந்திருக்கிறார்கள். படத்தில் காணப் படும் வண்ணங்கள் சமீப காலத்தில் தமிழ் நாட்டுக் கோவில் கோபுரங்களுக்கு அளிக்கப் படும் அக்ரிலிக் பெயிண்டுகளை விட, டிஸ்னி கார்ட்டூன்களில் காணப் படுவதை விட பல மடங்கு மேலான பளீர் நிறங்கள். படத்தில் நிறங்கள் எல்லாம் பளிச்சென்று அடிக்க வரும் அடர்த்தியுடன் இருக்கின்றன. அந்தக் காலத்தில் கலர் சினிமா ஒரு புதுமை என்பதினால் வண்ணப் படம் என்றே விளம்பரம் செய்யப் படும். வண்ணப் படம் என்று சொல்லி விட்டு விதம் விதமான கலர்களை அழுத்தமாகக் காண்பிக்காமல் போனால் எப்படி? ஆகவே படத்தில் வரும் நடிக நடிகைகளின் உடைகள், வீடுகள், வீட்டுக்குள் இருக்கும் சாமான்கள், வெளிப்புறத்தில் வண்ணம் சிறப்பாகத் தெரியும் ஊட்டி கொடைக்கானல் போன்ற இடங்களில் கதையை நிகழ்த்துவது என்று கதையை விட வண்ணத்துக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப் பட்டிருக்கிறது. நிச்சயம் வண்ணமயமான ஒரு சினிமா இதில் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. இரண்டு கதாநாயகி நடிகைகள், மூன்று துணை நடிகைகள் என்பதினால் அனைவருக்கும் ஒவ்வொருக்கும் ஒவ்வொரு ஃப்ரேமுக்கும் விதம் விதமான அடர்த்தியான வண்ண ஆடைகளை அணியச் செய்து கண்ணைக் கவருகிறார்கள். ஆரம்பம் முதலேயே நடிகைகளின் நடிப்பை விட அவர்களது வண்ண வண்ண ஆடைகளே நம் கண்ணைக் கவர்கின்றன. அடிக்க வரும் சிவப்பு, பச்சை, கிளிப்பச்சை, வயலட், மஞ்சள், நீலம் என்று அனைத்து ஆடைகளுமே பளீரென்ற நிறத்தில் சிவப்பு, பச்சை, நீலம், மஞ்சள், ஆகிய நிறங்களின் பல்வேறு அடர்ந்த பரிமாணங்களில் தோன்றுகின்றன. தலைக்கு அணியும் ரிப்பன்களில் கூட இரண்டு வகை நிறங்கள் குடுத்து அசத்தி விடுகிறார்கள். நான் இது போன்ற ஒரு “வண்ணப்” படத்தைக் கண்டதேயில்லை 🙂 ஜயலலிதாவும், நிர்மலாவும், ருக்மணியும் (நடிகை லட்சுமியின் அம்மா), ஆஷா என்னும் துணை நடிகையும் ஏன் இரு காட்சிகளில் வரும் துணை நடிகை ஒருவர் உட்பட அட்டகாசமான நிறங்களில் ஆடைகள் அணிந்து வந்து கண்ணைக் கவருகிறார்கள். இவர்களது ஆடைகளை விடத் தூக்கிச் சாப்பிடும் நிறங்களில் வீடுகளுக்குள்ளே இருக்கும் சோபாக்கள், நாற்காலிகள், திரைச்சீலைகள், மரங்கள், தரை விரிப்புக்கள் என்று அனைத்துப் பொருட்களுமே கண்ணைப் பறிக்கும் வண்ணங்களில் மிளிர்கின்றன. இந்தப் படத்தின் சிறப்பே அதன் கலர்கள் மட்டுமே. வண்ணக் கலவைகளில் மனதைப் பறிகொடுக்கும் எவருக்கும் இந்தப் படம் அளிக்கும் வண்ணங்கள் நிச்சயம் கவரும். இவை போக வானத்தின் நீலம், மலைகளின் பசுமை, மேகங்களின் வெண்மை, நதிகளின் கருமை என்று கொடைக்கானல் ஊட்டிகளின் வண்ணங்கள் வேறு சேர்ந்து கொள்கின்றன. ஆனால் பெண்கள் அளவுக்கு ஆண்களுக்கு வண்ணங்கள் காண்பிக்க அதிக சந்தர்ப்பங்கள் வாய்ப்பதில்லை அவர்களுக்கும் முடிந்த அளவுக்கு மூக்குப் பொடி, மஞ்சள், பழுப்பு நிறங்களில் ஆடைகளைக் கொடுத்து முடிந்த அளவுக்கு வண்ண மயமாகாக் காண்பிக்க முயல்கிறார் ஸ்ரீதர். ஸ்ரீதர் தமிழின் இளமை இயக்குனரோ இல்லையோ நிச்சயமாகத் தமிழ் நாட்டின் ஆகச் சிறந்த கலர்ஃபுல்லான இயக்குனர் இவர் ஒருவரே. இந்தப் படத்தில் வந்த ஆடைகளின் வண்ணங்கள் அனைத்துமே 1965ம் வருடத்தில் பெண்களை வெகுவாகக் கவர்ந்து ஜவுளிக் கடைகளில் அலை மோத வைத்திருந்திருக்கும். தெரிந்தோ தெரியாமலோ நல்லி சில்க்சை ப்ராடக்ட் ப்ளேஸ்மெண்ட் செய்திருக்கிறார்கள். அபாரமான அளவில் கண்களைப் பறிக்கும், ஆளை அடிக்கும் ஆடை மற்றும் வண்ணத் தேர்வுகள். வெண்ணிற ஆடை என்று பெயர் வைத்ததற்குப் பதிலாக வண்ண வண்ண ஆடைகள் என்று பெயர் வைத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். நிச்சயம் இந்த ஆடைகளின் வண்ணத் தேர்வுகளில் இயக்குனர் அதிக கவனம் செலுத்தியிருப்பார் என்று தெரிகிறது. நல்ல கலரில் புடவைகளைத் தேர்ந்தெடுக்க விரும்பும் பெண்கள் அவசியம் பார்க்க வேண்டிய படமிது.

அப்புறம் தமிழ் படங்களில் எனக்கு இன்னுமொரு தீராத கேள்வி உள்ளது. நடிகர் ஸ்ரீகாந்த் ஒரு மனோதத்துவ டாக்டராக வருகிறார். ஆதலினால் அவர் எப்பொழுதுமே அப்பொழுதுதான் புதிதாகத் தைத்த கோட்டு சூட்டுகளில் வலம் வருகிறார். எல்லா சந்தர்ப்பங்களிலும் அவர் சூட்டுக் கோட்டு டையைக் கழற்றுவதேயில்லை. ஒன்றுக்கு இரண்டு காதலிகளின் பின்னால் போய் அவர்களுடன் ஆடுவதோ அல்லது அவர்கள் பாடுவதைக் கேட்கும் பொழுதுகளில் கூட இன்னும் தேர்ந்த ரசனையுடன் தைக்கப் பட்ட கோட்டு சூட்டு டையுடனே அவர் இருக்கிறார். மலைகளிலும், நதிகளிலும் காதலிகளின் பின்னால் கடமையுடன் அவர் அலையும் பொழுதும் கூட ஆக்ச்சன்சர் கன்சல்ட்டிங் கம்பெனி மேனஜர்கள் போலவே உன்னத ஆடைகளில் உலா வருகிறார். அவர் மருத்துவம் பார்க்கப் போவதோ கொடைக்கானலில் ஒரு பெரிய பணக்காரரின் ஒரே மகளுக்கு அவர்களது பங்களாவில் வைத்து என்றாலும் கூட அவர் எந்த தருணத்திலும் தன் கோட்டு சூட்டு டையில் சமரசம் செய்து கொள்வதேயில்லை என்பது படத்தில் காணப்படும் ஒரு கன்சிஸ்டென்சி. ஜயலலிதாவின் அப்பாவாக வரும் மேஜர் சுந்தர்ராஜனோ பெரிய பணக்காரர். பெரிய கோடீஸ்வரர் என்னும் பொழுது அவர் மட்டும் சாதாரண ஆடையிலா இருப்பார்? அவருக்கு வேலை எல்லாம் கிடையாது. தினமும் காலையில் எழுந்து கோட்டு சூட்டு டை அணிந்த பின்னால்தான் பச்சைத் தண்ணீர் கூட அருந்துகிறார். எப்பொழுதும் ஜி8 உச்ச மாநாட்டில் கலந்து கொள்ளும் உலகத் தலைவர்களின் தோரணையிலேயே எப்பொழுதும் முழு சூட்டில் வலம் வருகிறார். சரி அவராவது பணக்காரர், ஸ்ரீகாந்தாவது ஒரு டாக்டர் கோட்டு சூட்டில் இருப்பதில் ஏதோ ஒரு நியாயம் இருக்கலாம் ஆனால் பாருங்கள் காமெடிக்காக மாலி என்றொரு நடிகரும் அவரது மகனாக மூர்த்தியும் வருகிறார்கள். அவர்கள் சாதாரணமானவர்கள். மாலி மரக்கடைதான் வைத்திருக்கிறார். இருந்தாலும் அவர்களும் கூட சர்வ சதா காலமும் முழுக் கோட்டுச் சூட்டு மற்றும் பல்வேறு விதமான டைகளில்தான் காட்சி தருகிறார்கள். படத்தில் வரும் நடிகர்கள் அனைவரும் உலகத்தின் நேர்த்தியான ஆடை அணிபவர்களைத் தேர்வு செய்யும் எஸ்கொயர் மாகசீனின் தேர்வுக்குத் தயார் நிலையில் இருப்பவர்கள் போல படம் முழுவதும் காட்சி அளிக்கிறார்கள். ஆனால் டையின் அளவு மட்டும் நீளமாகவும், பௌ டையாகவும் (Bow Tie) அவ்வப்பொழுது மாறுவது ஒரு ஆறுதல். நல்ல வேளையாக ஸ்ரீகாந்த் மனோதத்துவ நிபுணர் என்பதைக் காண்பிக்க அவருக்கு ஃப்ரெஞ்சு தாடி வைத்து விடவில்லை மாறாக அவரது சீனியருக்கு தாடி வைத்து தமிழ்ப் பட இலக்கணத்தைக் காப்பாற்றி விட்டார்கள்.

நடிகர்ளின் உடைகளின் இருக்கும் யதார்த்தம் இப்படி என்றால் நடிகைகள் காலை, மாலை, இரவு என்று இருபத்திநாலு மணி நேரமும் அடர்த்தியான மேக்கப்ப்புகளிலும், தலை நிறைய அடிக்க வரும் நிறத்திலான பூக்களுடனும், விதம் விதமான நகைகளுடனும் எப்பொழுதும் சர்வ அலங்கார பூஷிதையாகவே வலம் வருகிறார்கள். அதிலும் ஜயலலிதாவின் அம்மா ஒரு பெரும் பணக்காரிதான் சரி, அதற்காக நள்ளிரவிலும் அவர் கிலோக்கணக்கில் நகைகளும், தலையில் பத்து கிலோவுக்கு வயலட் கலரில் வாடமல்லிப் பூவுடனுமே வந்து அழுது அழுது வண்ண மயமாகச் சோகத்தைப் பிழிகிறார்.

வித்யாசமான இயக்குனர் என்று அழைக்கப்பட்ட ஸ்ரீதருக்குக் கூட  ஏனோ தமிழ் படங்களில் ஆடைகளில் கூட ஒரு வித யதார்த்தத்தைக் கொண்டு வர வேண்டும் என்பது தோன்றாமல் போய் விட்டது. தமிழ் நாட்டு வெப்பத்திற்கு யார் அப்படி கோட்டு சூட்டுகளோடு திரிகிறார்கள் என்பதை இந்தத் தமிழ்ப் பட இயக்குனர்கள் யோசிப்பதேயில்லை. ஐ டி கம்பெனிகளில் கூட இப்பொழுது டை கட்ட வேண்டிய நிர்ப்பந்தம் இல்லை. கொடைக்கானல், ஊட்டி என்றால் அதிக பட்சம் குளிர்காலத்தில் ஒரு ஸ்வெட்டர் அணிவார்கள் அஷ்டே. ஹாலிவுட் படங்களைப் பார்த்து அதில் வரும் நடிகர்களின் உடைகளை அப்படியே இமிடேட் செய்ததின் விளைவுகள் இந்த கோட்டு சூட்டு அபத்தங்கள்.

படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயங்களில் முதன்மையானது படத்தின் அற்புதமான பாடல்களும், அடர் வண்ணங்களும், ஆடைகளும் அதன் பின்னர்தான் நடிப்பு எல்லாம். ஸ்ரீதர் படங்களில் அவ்வளவாக மிகை நடிப்பிற்கு இடம் கிடையாது என்பதில் மிகவும் கறாராக இருந்திருக்கிறார். மனோதத்துவ டாக்டராக வரும் நடிகர் ஸ்ரீகாந்துக்கோ ஒரு சிக்கலான பேஷண்ட் அந்த பேஷண்ட் ஏற்படுத்தும் சிக்கலில் அவரும் குழம்பிப் போய் மிகவும் குழப்பமான ஒரு மனிதராக ஆகி விடுகிறார். இதே ரோலை ஏற்கனவே நெஞ்சில் ஓர் ஆலயத்தில் கல்யாண்குமார் செய்து விடுவதால் ஸ்ரீகாந்தின் முதல் திரைப்பட நடிப்பே எளிதாகி விடுகிறது. அப்படியே கல்யாண்குமாரின் நடிப்பை கொண்டு வந்து விட்டால் போதுமானது. அவரைப் போலவே அழும் பொழுது கூட முஷ்டியை மடக்கி நெற்றியில் வைத்துக் கொண்டு அழுது விடுகிறார். மற்றபடி ஸ்ரீகாந்தின் நடிப்பு முதல் படத்தில் அளந்து நடிக்கும் கச்சிதமான ஒரு நடிப்பு. ஒரு நல்ல நடிகர் பின்னாளில் நீட்டி முழக்கிப் பேசி நாடகபாணி நடிகராக வீணடிக்கப்பட்டுவிட்டிருக்கிறார். பல உணர்ச்சிகரமான இடங்களில் ஸ்ரீகாந்தின் அளவான நடிப்பு படத்திற்கு ஒரு வித்யாசமான கோணத்தை அளிக்கிறது. ஜயலலிதா ”கண்ணன் என்னும் மன்னன் பெயரைச் சொல்லச் சொல்ல” என்று துள்ளிக் குதித்து ஆடிப் பாடிக் கொண்டு காட்டிலும், மலையிலும், ஆடிக் கொண்டே சென்று கொண்டிருக்கிறார். அப்பொழுது அவர் பின்னால் செல்லும் ஸ்ரீகாந்த் கவலையும் குழப்பமும் தோய்ந்த முகத்துடனும், நேர்த்தியான கோட்டு சூட்டு டையுடனும் அமைதியாக அவர் பின்னாலேயே காடு மலை மேடு எல்லாம் நட்ந்து சென்று கொண்டேயிருப்பார். நாயகி அதீத உற்சாகத்துடனும் காதலுடனும் ஆடிப் பாடி ஓடிக் கொண்டிருக்கும் பொழுது கதாநாயகன் மிகவும் சீரியசாக அவள் பின்னால் போய்க் கொண்டேயிருப்பது வித்யாசமான ஒரு காட்சியே.  அதி உணர்ச்சிகள் எதையும் முகத்தில் காட்டாமல் தசைகளுக்கு அநாவசியமான வேலைகள் கொடுக்காமல் மிக அழுத்தமான ஒரு டாக்டராக நடித்திருக்கிறார். பின்னாளில் அவர் ஒரு வில்லனாக, நாடக பாணி வசனம் பேசும் நடிகராக மாறிப் போனது ஒரு இழப்புத்தான். அவர் ஒரு நல்ல காமெடியனும் கூட.

ஜயலலிதாவுக்கு இது முதல் தமிழ் படம் என்று சொல்லவே முடிவதில்லை. மிகத் துடிப்பாகவும் பின்னர் முதிர்ச்சியான அமைதியான பெண்ணாகவும் வந்து அவரும் அழுத்தமான நடிப்பை அளிக்கிறார். புத்தி பேதலித்திருக்கும் அவருக்கு மருத்துவம் பார்க்க வரும் பைத்தியக்கார வைத்தியரைப் பார்த்து உதட்டைச் சுழித்து கண்ணை உருட்டி ”யூ கெட் அவுட்” என்று நடிக்கும் காட்சியில் தனக்குக் கிடைத்த பயிற்சியை ஜயலலிதா  பின்னாளில் தமிழ் நாட்டு அரசியல் வாழ்வில் பலரிடமும் மீண்டும் மீண்டும் செய்து காண்பித்து  கொண்டேயிருந்தார் என்பது இந்த படத்துக்கு ஒரு கூடுதல் சிறப்பை அளிக்கிறது.

அடிக்கடி மூடு மாறும் மனநோயாளியாக நடித்த ஜயலலிதா பின்னாளில் அரசியலிலும் கூட அதே வேடத்தைத் தொடர்ந்ததும் ஒரு வினோதமான ஒற்றுமையே. பரதம், டிவிஸ்டு, கதக், ஒடிசி எல்லாம் கலந்து ஆடும் சினிமா நடனத்தை ஆடுவதானாலும் சரி, முகபாவங்களை மாற்றி சிறப்பாக நடிப்பதானாலும் சரி, முதிர்ச்சியான அளவான நடிப்பை வெளிப்படுத்துவதானாலும் சரி ஜயலலிதா இந்த படத்தில் சிறப்பாகவே செய்திருக்கிறார். உணர்ச்சிக் கொந்தளிப்பான இடங்களிலும் கூட மிகையின்றி நடித்திருக்கிறார். ”நீ என்பது என்ன”  என்ற பாடலிலும், “கண்ணன் என்னும் மன்னன் பெயரில்” பாடலிலும் அவரது ஆட்டமும் மிக வேகமானது. பாடல்களின் பொழுது அவர் நடனங்களில் காட்டும் வேகமும் துடிப்பும் பின்னாளில் அவர் அரசியலில் காட்டிய வேகங்களுக்கு சற்றும் குறைவில்லாதவை.  இந்தப் படத்தில் அவர் தனக்கு மருத்துவம் பார்க்க வரும் டாக்டரின் கையை ரத்தம் வரக் கடித்து வைத்து விடுகிறார். பின்னாளில் அரசியல் வாழ்விலினிலும் அவருக்கு உதவி செய்ய வந்த பலரையும் இதே போல மனதில் ரத்தம் வர அவமானப் படுத்தியதைக்  காணும் பொழுது இந்தப் படத்தை ஜெயலலிதாவின் அரசியலின் ஒரு முன்னோட்டமாகவே கருத வேண்டும் :)) அதைப் போலவே க்ளைமாக்ஸில் அவர் எடுக்கும் கேனத்தனமான திடுக்கிடும் முடிவைப் போலவே அவர் அரசியல் வாழ்விலும் முன்யோசனையின்றி பல திடுக்கிடும் அரசியல் முடிவுகளை எடுத்து அதிர வைத்தவர் என்பது இன்னொரு ஒற்றுமை. இந்தப் படத்தில் எப்பொழுது என்ன செய்வார் எப்படி நடந்து கொள்வார் என்று தீர்மானிக்க முடியாத ஒரு பாத்திரமாக வரும் ஜயலலிதா தன் நிஜ வாழ்விலும் அப்படியே நடந்து கொண்டது ஒரு வினோதமான ஒற்றுமையே. ஆக பல விதங்களிலும் தமிழ் நாட்டு அரசியலுக்கு ஒரு முன்னோட்டமாக இந்தப் படம் விளங்குவது பிற தமிழ் படங்களை விட இந்தப் படத்துக்கு ஒரு தனிச் சிறப்பை அளிக்கின்றது.

இந்தப் படத்தில் அறிமுகமாகி பின்னாளில் தொடர்ந்து நடித்து இந்தப் படத்தின் பெயரையே தன் முதல் பெயராக வைத்துக் கொண்ட வெண்ணிற ஆடை நிர்மலா இந்தப் படத்தில் ஒரு அழகிய சிறு பெண்ணாக அறிமுகமாகி தன் அழகிய விழிகளை உருட்டி உருட்டி அடிக்கடிச் சிரிப்பதும், தன் ஆப்பிள் கன்னங்கள் சிவக்க அடிக்கடி நாணுவதுமாம், புதர்களையும் மரங்களையும் சுற்றி ஓடி ஓடி ஆடிப் பாடுவதுமாகிய தமிழ் சினிமாவின் கதாநாயகிகள் செய்யும் வேலைகளை திருப்தியாகச் செய்கிறார்.  இவர் அணிந்து வரும் வண்ணமயமான உடைகளும் அவர் தலைக்கு விதம் விதமான பளிச் கலர்களில் வைத்துக் கொண்டு வரும் ரிப்பன்களும் கலர்ஃபுல்லான அவரது கன்னங்களும் பெரிய விழிகளும் அவர் நடிப்பை விட அதிகமாக கண்களைக் கவர்கின்றன.

காதலிக்க நேரமில்லையில் நாகேஷ் ஜோக் பிரபலமாகி விட்டபடியால் அதையே மீண்டும் புது நடிகரைப் போட்டு மீண்டும் எடுத்திருக்கிறார்கள். பாலையாவுக்குப் பதிலாக ஒரு மாலி, நாகேஷுக்குப் பதிலாக ஒரு வெண்ணிற ஆடை மூர்த்தி, சச்சுவுக்குப் பதிலாக ஒரு ஆஷா, சினிமா எடுப்பதற்குப் பதிலாக முந்திரிக் கொட்டையில் இருந்து பஞ்சு எடுத்தல். நாகேஷ் போலவே மூர்த்தி உடம்பை வளைத்து ஆடுவதும், ஊ ஊ ஊ என்று ஊளையிட்டுக் கொண்டு பாடுவதுமாக அறிமுகமாகிறார். அன்று தோன்றி இன்று வரை தமிழில் நிரந்தரமாக நடித்து வருகிறார். இவர் பேசுவதை விட குதிரை போல புர்ரென்று கனைப்பதையே அதிகம் செய்து அதற்கும் தமிழ் நாட்டு ரசிகர்களைச் சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். சினிமாவில் குதிரை போல புர்ரென்று சிரிப்பதைத் தவிர கை ரேகை பார்த்தல், கதாகாலேட்சேபம் செய்தல், ஜோக் புஸ்தகம் எழுதுதல் என்று பன்முக ஆளுமையுள்ள கலைஞராக இன்று வரை தொடர்ந்து மூர்த்தி நடித்து வருகிறார். சமீபத்தில் இவரை நாடார் சங்கத்துக்காரர்கள் அடிக்கத் தேடிக் கொண்டிருந்தார்கள். இவர் அதிகப் பிரசங்கித்தனம் இல்லாமல் அடக்கமாக நடித்தது இந்த ஒரு படத்தில் மட்டுமேயிருக்கும். பொதுவாக தமிழ் படங்களின் கதைகளைப் பிற படங்களில் இருந்து காப்பி அடிப்பார்கள் தனது முந்தைய ஹிட் படத்தில் இருந்து கதையையும் காட்சியையும் அப்படியே காப்பி அடித்து சினிமா எடுத்த திறமை ஸ்ரீதர் ஒருவருக்கு மட்டுமே சாரும் 🙂

இதில் ஜயலலிதாவின் அப்பாவாக வந்து சோகத்தைப் பிழியும் மேஜர் சுந்தரராஜன் கூட சிவாஜி கணேசனின் கட்சியில் சேர்ந்து காணமால் போனவர்தான். வார்த்தைக்கு வார்த்தை டாக்டர், டாக்டர் என்று அழைத்துப் பேசுகிறார். எந்தவொரு வாக்கியத்தையுமே டாக்டரில் தொடங்கி டாக்டரில் முடித்து இடையில் நாலு டாக்டர்களைத் தூவி பேசும் மேஜர் சுந்தர்ராஜனும் கூட இந்தப் படத்தில் சற்று அடக்கியே வாசித்திருக்கிறார்.

அடித்துத் துவைக்கப் பட்ட கதையானாலும் கூட பல இடங்களில் வித்தியாசமான அனுபவத்தைத் தரும் ஒரு சினிமா வெண்ணிற ஆடை. அநாவசியமான மசாலாக்கள் இல்லாத ஒரு சீரியஸ் சினிமா. இந்தப் படத்தின் ஆகச் சிறப்பு இதன் பாடல்களே. அற்புதமான நினைவில் நிற்கும் பாடல்களால் நிறைந்திருக்கிறது வெண்ணிற ஆடை. கண்ணன் என்னும் மன்னன் பெயரைச் சொல்லச் சொல்ல, ஒருவன் காதலன், நீராடும், அம்மம்மா காற்று வந்து, என்ன என்ன வார்த்தைகளோ, நான் என்பதென்ன போன்ற அருமையான மறக்க முடியாத அழியாத பாடல்கள். படத்தில் பாடல்களைக் காணும் பொழுது இன்னும் இனிமையாக இருந்தன. பி.சுசீலா, எம்எஸ்வியின் மிகச் சிறந்த பாடல்களில் சில இந்தப் படத்தில் இடம் பெற்றவையே.

ஏதாவது ஒரு பொழுது போகாத நடு இரவில் வரலாற்றில் இடம் பெற்ற அந்தஸ்தைப் பெற்று விட்ட இந்த சினிமாவை இதன் பாடல்களுக்காகவும், வண்ண வண்ண உடைகளுக்காகவும் தாராளமாகப் பார்க்கலாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்->ஸ்ரீதர் பக்கம், கூட்டாஞ்சோறு->நண்பர்கள்-> ராஜன் பக்கம், படங்களின் பட்டியல்

தொடர்புடைய பதிவுகள்:
வெண்ணிற ஆடை – விகடன் விமர்சனம்
வெண்ணிற ஆடை திரைப்படத்தின் அரசியல்

Advertisements

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

13 Responses to ஸ்ரீதரின் “வெண்ணிற ஆடை” பற்றி நண்பர் ராஜன்

 1. anbuaran says:

  அப்படி இருந்த ஸ்ரீகாந்தை பின்னாளில் வில்லனாக்கி விட்டார்கள் தூர்தர்ஷன் பேட்டி ஒன்றில் அவர் நகைச்சுவையாக இப்படி குறிப்பிட்டார் அதாவது எல்லா பெண்களும் நான் செட்டுக்குள் வந்தாலே மிரண்டு ஓடும் அளவுக்கு கட்டாயம் எனக்கு ஒரு கற்பழிப்பு காட்சி அனேகமாக எல்லா படத்திலும் உண்டு நான் செட்டுக்குள் வந்ததுமே இன்று யார் சேலையை இழுக்கவேண்டும் என்று சிரித்துகொண்டே கேட்பேன் என்று குறிப்பிட்டார் .இன்று நினைத்தாலும் அவர் நகைச்சுவையாக கூறியது எனக்குள் சிரிப்பை ஏற்படுத்தும்.

 2. ragavang says:

  // வெண்ணிற ஆடை என்று பெயர் வைத்ததற்குப் பதிலாக வண்ண வண்ண ஆடைகள் என்று பெயர் வைத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். //

  // ஜி8 உச்ச மாநாட்டில் கலந்து கொள்ளும் உலகத் தலைவர்களின் தோரணையிலேயே எப்பொழுதும் முழு சூட்டில் வலம் வருகிறார் //

  // எந்தவொரு வாக்கியத்தையுமே டாக்டரில் தொடங்கி டாக்டரில் முடித்து இடையில் நாலு டாக்டர்களைத் தூவி பேசும் மேஜர் சுந்தர்ராஜனும் கூட இந்தப் படத்தில் சற்று அடக்கியே வாசித்திருக்கிறார் //

  :)Really enjoyed

 3. raju says:

  நண்பர் ராஜன்
  வணக்கம. அருமையான பதிவு. மாஞ்சு மாஞ்சு எழுதி உள்ளீர் .அதீதமான வண்ணக் கலவை பத்தி சரியாக சொல்லி இருக்கீங்க.

  “சித்திரமே சொல்லடி” ,மற்றும் “ஒருவன் காதலன்” பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்தவை.,

  ராஜு-துபாய்

 4. கோபால் says:

  அற்புதமாக உள்ளது. மிகவும் ஆழமாக அலசி எழுதப்பட்டது. வண்ணங்களை பிரித்து மேய்ந்ததும், மேஜர் சுந்தரராஜனைப் பற்றிய கருத்தும் மிகவும் ரசிக்கத்தக்கவையாக உள்ளன. அவரின் டாக்டர் வசனத்தை ரசிக்க தெய்வமகன் பார்க்கலாம். சிவாஜியும் அவரும் மாரி மாரி டாக்டர் போடுவார்கள். மலையாளப்படங்கள் போல் அல்லாமல், பொதுவாகவே தமிழ்ப்படங்களில் எதார்த்தம் குறைவு – உடையை பொறுத்தவரை.அப்போது ஆங்கில மோகம் நம்முரில் அதிகம் இருந்ததால் இதன் பாதிப்பு இருந்திருக்கலாம்.

 5. sureshkannan says:

  தூள்! ரொம்ப ரசித்து சிரித்துப் படித்தேன். ராஜனுக்கு நன்றி.

 6. KVR says:

  அருமை. சுட்டி அனுப்பிய சுரேஷுக்கு நன்றி

 7. ஆசிப் மீரான் says:

  சூனாகானா புண்ணியத்தில் நானும் ரசித்துப் படித்தேன்

 8. Rajan says:

  அன்புஅரன், ராகவா,கோபால்,ராஜு,சுரேஷ்,ஆசீஃப், ராஜா அனைவருக்கும் நன்றி. இந்தப் படத்தைப் பற்றி முக்கியமாகச் சொல்ல நினைத்ததே அதில் அறிமுகமானவர்களின் அரசியல் பங்களிப்பினால்தான். அதை நீளம் கருதி ஆர் வி சுருக்கி விட்டார் போலும். இங்கு வெட்டப் பட்ட பகுதியைக் கீழே இடுகிறேன்.
  ராஜன்

  தமிழ் நாட்டில் 5 முதல்வர்களை தமிழ் சினிமாதான் அளித்திருக்கிறது. அந்த வகையில் ஒரு கிங் இல்லை க்யூன் மேக்கர் என்ற சிறப்பைப் பெறுகிறது வெண்ணிற ஆடை.

  ஜயலலிதாவுக்குப் போட்டியாக அதே டாக்டரைக் காதலிக்கும் நிர்மலாவுக்கும் தமிழக அரசியலில் ஒரு முக்கிய பங்கு இருக்கிறது. எம் ஜி ஆருக்கு நெருங்கிய தோழியான ஜயலலிதாவுக்கு அடுத்த இடத்தை இந்த நிர்மலாவும் பெற்று இருக்கிறார். அந்த நட்புக்காக அவருக்கு எம் ஜி ஆர் மேல்சபையில் ஒரு எம் எல் சி இடத்தை வழங்கப் போக, நிர்மலா ஏற்கனவே மஞ்சள் நோட்டீஸ் கொடுத்திருப்பதை மறைத்து அவர் எம் எல் சியாக வந்ததை எதிர்த்து நடந்த வழக்கினால் அவர் பதவி பறி போய் விடுகிறது. தன் தோழிக்கு இடம் இல்லாத ஒரு சபையும் ஒரு சபையா தன் நண்பிக்கு இல்லாத சபை இருக்கவும்தான் வேண்டுமா என்று பொங்கி எழுந்த எம் ஜி ஆர் தமிழ் நாட்டில் இருந்த மேல்சபையையே கலைத்தும் விடுகிறார். வெட்டியாக வேண்டுபவர்களுக்குப் பதவி கொடுக்க வசதியாக இருந்த ஒரு சபையை, மக்களின் வரிப்பணத்தில் செயல்பட்டு வந்த ஒரு தண்டச் செலவை ஒழிக்க வெண்ணிற ஆடை நிர்மலா தெரிந்தோ தெரியாமலோ ஒரு கருவியாக அமைந்து விட்டார். ஆக இந்தப் படத்தில் அறிமுகமான இரு நடிகைகளில் ஒருவர் சகல வல்லமை படைத்த தமிழ் நாட்டின் முதல்வராகவும், டெல்லி ஆட்சியையே கவிழ்க்கும் சக்தியுள்ளவராகவும், இன்னொரு நடிகை தமிழ் நாட்டு மேல்சபையையே கலைக்கும் அளவுக்கு முக்கியமானவராக வளர்ந்ததும் இந்தப் படத்தின் அபூர்வமான ஒற்றுமைகள்.

  இந்தப் படத்தில் ஒரு கதாநாயகனுக்கு இவர்கள் இருவரும் போட்டி போட்டது போலவே தமிழ் நாட்டு அரசியலிலும் இவர்களுக்குள்ளான போட்டி தொடர்ந்தது மற்றுமொரு ஒற்றுமை. சொளராஷ்டிர இனத்தில் இருந்து வந்து புகழ் பெற்ற ஒரு சிலரில் இவரும் ஒருவர். ஜயலலிதாவை எதிர்த்து நிர்மலா ஜானகி கட்சியின் சார்பாக போட்டியிட்டுத் தோற்றார். அதற்குப் பின்னால் நடந்த தேர்தல்களிலும் ஜெயலிதாவைத் தொடர்ந்து எதிர்த்துப் பிரச்சாரம் செய்தவர் இந்த நிர்மலா. அவர் மீது போடப் பட்ட தொடர் வழக்குகளில் இருந்து தப்ப நிர்மலா பா ஜ க , தி மு க என்று கட்சி மாறி மாறி அரசியலிலும் தொடர்ந்தவர். பா ஜ க வின் சார்பில் எம் பி எலக்‌ஷனில் கூட நின்றார் என்று நினைக்கிறேன். முதல்வராக முடியாவிட்டாலும் கூட மேல்சபைக் கலைப்பு முடிவில் முக்கிய காரணகர்த்தாவாக இருந்தார் என்பதினால் தமிழகத்தின் சினிமா சார்ந்த அரசியல் வரலாற்றில் இவருக்கு ஒரு இடம் ஏற்பட்டு விடுகிறது.

  அரசியலில் ஜெயலிதா, நிர்மலா போல பிரபலமாக இல்லாமல் போனாலும் கூட அதே சினிமாவில் அறிமுகமான ஸ்ரீகாந்தும் கூட தமிழக அரசியலில் ஒரு மரியாதைக்குரிய இடத்தைப் பெற்றிருக்கிறார். ஸ்ரீகாந்த் காமராஜரின் தொண்டராக தன்னை வெளிப்படுத்திக் கொண்டு பழைய காங்கிரசில் ஒரு முக்கியமான ஆக்டிவான தொண்டராக விளங்கியவர். இந்திராவின் எமர்ஜென்சியை எதிர்த்து தன் கடுமையான கண்டனங்களை அஞ்சாமல் பதிவு செய்தவர். போராட்டங்களிலும் நேரடியாகக் கலந்து கொண்டவர். அமெரிக்க கன்சலேட்டில் வேலை பார்த்து வந்த வெங்கட்ராமன் இந்தப் படம் மூலம் ஸ்ரீகாந்தாக அறிமுகமாகி பின்னர் அரசியலில் நேர்மை, எளிமை போன்ற கொள்கைகளுக்காகக் குரல் கொடுத்த அரசியல் இயக்கங்களின் பின்னால் நின்றவர். அந்த வகையில் இதில் அறிமுகமாகி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகைகளை விட நன் மதிப்பைப் பெருபவரே. ஸ்ரீகாந்த் ஜெயகாந்தனின் நண்பர், அதனாலேயே ஜெயகாந்தனின் படங்களிலும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார். பழைய காங்கிரசிலும் பின்னர் மொரார்ஜியின் ஜனதா பார்ட்டியிலும் தீவிரமாகப் பங்கு கொண்டவர். கடைசி வரை இந்திராகாங்கிரசுக்கு விலை போகாத ஒரு காமராஜ் தொண்டர். பழைய காங்கிரசின் மேல் இருந்த கொள்கைப் பிடிப்பின் காரணமாக தன் நடிப்பு வாய்ப்புகள் பறி போனாலும் கூட தன் கொள்கைகளையும் நேர்மை நியாயம் போன்றவற்றின் மீதான பிடிப்பையும் விட்டுக் கொடுக்காதவர். காமராஜர் மறைவுக்குப் பின்னாலும் கூட ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு அரசியலில் பங்கேற்ற ஸ்ரீகாந்த் ஜனதா கட்சியின் மறைவுக்குப் பின்னர் அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொண்டவர். இந்திரா காங்கிரசை எதிர்த்ததினாலேயே இவருக்கு சிவாஜி படங்களில் இருந்த நிரந்தரமான நடிப்பு வாய்ப்புகளை இழந்தவர் என்பார்கள்.

 9. vijayan says:

  கொள்கை பிடிப்பும்,நேர்மையும் உள்ளவர்களை நன்றியுடன் நினைக்க இன்னும் மனிதர்கள் உள்ளார்கள் என்பது மனசுக்கு சந்தோசமாக உள்ளது.

 10. சாரதா says:

  ராஜன்….

  ‘வண்ண ஆடைகள்'(!!!!!) படம் பற்றிய அலசல் மிக அருமை. புதிய கோணத்தில் அலசப்பட்டுள்ளது சுவாரஸ்யத்தைத் தருகிறது.

  ‘வெண்ணிற ஆடை’ படம் பற்றிய எனது ஆய்வுக்கட்டுரை இங்கே….

  http://www.forumhub.mayyam.com/hub/viewtopic.php?t=13689&sid=15d4fa068d86729811eaef341e87da8f

 11. RV says:

  ராஜன், எல்லாருக்கும் பதில் எழுதி இருப்பது மிக்க சந்தோசம்.

  சாரதா, உங்கள் கட்டுரையும் ஒரு பதிவாக போட்டுவிடுகிறேன்!

 12. Simulation says:

  விமர்சனம் அருமை. ஆனால் கொஞ்சம் பீட்டிங் அரௌண்ட் த புஷ்.

  – சிமுலேஷன்

 13. ராஜன் says:

  சிமுலேஷன்

  எப்படி இருக்கிறீர்கள்? நன்றி. ஆம் கொஞ்சம் சொன்னதையே சொல்லல் அதிகமாகி விட்டது. இது விமர்சனம் எல்லாம் இல்லை. சும்மா ஒரு படம் பார்த்தவுடன் மனதில் தோன்றிய சில எண்ணங்களை அப்படியே தட்டி நண்பர் ஆர் வி , பக்ஸ், ஸ்ரீநிவாஸ் ஆகியோருடன் உடன் பகிர்ந்து கொண்டதே. அடித்ததைத் திரும்பிப் படித்துத் திருத்தி எடிட் செய்யும் வழக்கம் எல்லாம் இல்லாதபடியால் சொன்னதையே திரும்பச் சொல்வது சில இடங்களில் நிகழ்ந்து விடுகிறது.

  அன்புடன்
  ராஜன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: