காங்கிரஸ் பேரியக்கத்தில் ஸ்ரீகாந்த்


“வெண்ணிற ஆடை படத்தின் அரசியல்” பதிவுக்கு சாரதா ஒரு பின்னூட்டம் எழுதி இருக்கிறார். அது காங்கிரஸ் கட்சிக்கும் நடிகர்களுக்கும் குறிப்பாக ஸ்ரீகாந்துக்கும் இருந்த பந்தத்தை அருமையாக விளக்குகிறது. ஸ்ரீகாந்தின் integrity பாராட்டப்பட வேண்டிய ஒன்று. எல்லாரும் வசதியாகப் படிப்பதற்காக அதை இங்கே ஒரு தனிப் பதிவாக போட்டிருக்கிறேன். ஓவர் டு சாரதா!

1969-வாக்கில் காங்கிரஸ் பேரியக்கம் பெருந்தலைவர் காமராஜ் தலைமையில் ஸ்தாபன காங்கிரஸ் என்றும் இந்திரா காந்தி தலைமையில் இந்திரா காங்கிரஸ் என்றும் பிளவுபட்டு நின்றபோது, தமிழகத்தைப் பொறுத்தவரை காங்கிரஸ் என்றால் அது பெருந்தலைவரின் ஸ்தாபன காங்கிரஸ்தான் என்றாகிப் போனது. வடமாநிலங்களில் இந்திரா காங்கிரஸ் வலுவாக இருந்தபோதிலும் தமிழகத்தில் அது ஒரு ‘லெட்டர்பேட்’ கட்சி என்ற அளவில்தான் இருந்தது. இ.காங்கிரஸுக்கு தொண்டர்கள் பலமில்லை.

தமிழகத்தைப் பொறுத்தவரை திரைப்பட கலைஞர்கள் பெரும்பாலும் திராவிட இயக்கங்களில் பங்கெடுத்த அளவுக்கு காங்கிரஸில் பங்கேற்கவில்லை. இன்னும் பலர் எந்த அரசியல் இயக்கத்தின்பக்கமும் சாராமல் தானுண்டு தங்கள் சினிமா உண்டு என்றிருந்தனர். முத்துராமன், சிவகுமார், ஏ.வி.எம்.ராஜன் போன்ற பெரும்பாலோர் இந்த மூன்றாம் வகையைச் சார்ந்தவர்கள். அறுபதுகளில் துவங்கி காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஒரே கலைஞராக நடிகர் திலகம் மட்டுமே விளங்கினார். இந்நிலையில் ஸ்தாபன காங்கிரஸ் என்ற பெயரில் இயக்கம் பிளவுண்டபோது நடிகர் திலகமும் பெருந்தலைவர் பக்கம் துணை நிற்க, அவரோடு தோளோடு தோள் நின்று ஸ்தாபன காங்கிரஸ்காரர்களாக தங்களை வெளிப்படுத்திக் கொண்டவர்கள் மூவர். அவர்கள் சசிகுமார், ஸ்ரீகாந்த், பிரேம் ஆனந்த். இவர்களில் பிரேம் ஆனந்த் கட்சியில் இருக்கிறார் என்பதற்காகவே நடிகர் திலகம் தன் படங்களில் தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தார்.

இவர்களில் சசிகுமார், இந்திய விமானப்படையில் பணியாற்றியவராதலால் கேப்டன் சசிகுமார் என்ற பெயரும் உண்டு. (இதே போல ‘நீலமலைத்திருடன்’ படத்தில் நடித்த ரஞ்சன், விமான பைலட்டாகப் பணியாற்றியதால் அவருக்கும் கேப்டன் ரஞ்சன் என்ற பெயர் உண்டு. இவர்களெல்லாம் ‘ஒரிஜினல் கேப்டன்கள்’). சசிகுமார், இறுதி மூச்சு வரை பெருந்தலைவரின் தொண்டனாகவே இருந்து மறைந்தார். தீ விபத்தில் சிக்கிய தன் மனைவி சசிகலாவைக் காப்பாற்ற போராடியதில் இருவருமே உயிரிழந்தனர். பலத்த தீக்காயங்களுடன் மூன்று நாட்கள் போராடியபோது, வாழை இலையில் கிடத்தப்பட்டு, நடிகை கே.ஆர்.விஜயாவின் செலவில் ஒரே அறையில் ஆறு ஏர்-கண்டிஷன்கள் பொறுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டும் பலனின்றி அடுத்தடுத்து இருவரும் உயிரிழந்தனர். அந்நேரம் சின்னஞ்சிறுவனாக இருந்த அவர்களின் ஒரே மகன் விஜயசாரதி அப்போதைய நடிகர் சங்கத் தலைவராக இருந்த நடிகர் திலகம், செயலாளர் மேஜர், பொருளாளர் வி.கே.ஆர். ஆகியோரின் பராமரிப்பில் வளர்க்கப்பட்டார். (விஜயசாரதி இப்போது தொலைக்காட்சித் துறையில் நடிகர் மற்றும் அறிவிப்பாளராக புகழ்பெற்று விளங்குகிறார்).

இவர்களோடு, ஸ்தாபன காங்கிரஸ் இயக்கத்தில் பெருந்தலைவரின் தொண்டனாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டு, மேடைப்பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்தவர்தான் ஸ்ரீகாந்த். 1973 வாக்கில் தமிழ்நாட்டில் கடும் விலைவாசி உயர்வு ஆட்கொண்டபோது, பெருந்தலைவரின் ஆணைப்படி ஸ்தாபன காங்கிரஸ் தொண்டர்களும் தலைவர்களும் விலைவாசி உயர்வை எதிர்த்து சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தினமும் காலை சென்னை சத்தியமூர்த்தி பவனிலிருந்து போராட்ட ஊர்வலம் கிளம்பி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி கைதாவார்கள். தினமும் ஒவ்வொரு ஸ்தாபன காங்கிரஸ் தலைவர்கள் தலைமையில் ஊர்வலம் புறப்பட, தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு கைதாகினர். அப்படி நான்காம் நாள் தலைவர்களோடு தேசிய நடிகர் ஸ்ரீகாந்த் காங்கிரஸ் கொடி பிடித்து ஊர்வலம் போய் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். ஒவ்வொரு நாளும் ஊர்வலத்தைக் காண வழியெங்கும் மக்கள் பெருந்திரளாக நின்று வாழ்த்தினர். அதிலும் ஸ்ரீகாந்த் கலந்துகொண்ட அன்றைக்கு கடும் கூட்டம்.

ஏழாம் நாள் திங்களன்று பெருந்தலைவர் காமராஜரே ஊர்வலத்தை தலைமையேற்று நடத்தப்போகிறார் என்ற செய்தியை அறிந்த அன்றைய கலைஞர் அரசு, முதல்நாள் மாலையே அதுவரை கைது செய்திருந்த அனைவரையும் விடுதலை செய்தது. இருந்தபோதிலும் பெருந்தலைவர் காமராஜ் திட்டமிட்டபடி மறுநாள் போராட்டத்தில் கலந்துகொண்டார். அன்றைக்கு யாரும் கைது செய்யப்படவில்லை. (கலைஞர்தான் நரியை நனையாமல் குளிப்பாட்டுபவராச்சே. தன் ராஜதந்திரத்தைக் கைக்கொண்டார்). ஆனாலும் பெருந்தலைவர் விடவில்லை. “என் நண்பர் கருணாநிதி என்னை கைது செய்யாமல் விட்டது எனக்கு மகிழ்ச்சியல்ல. விலைவாசியைக் கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை எடுத்தால்தான் மகிழ்ச்சி” என்று அறிக்கை விட்டார்.

பெருந்தலைவரின் மறைவு வரை ஸ்தாபன காங்கிரஸில் இருந்த ஸ்ரீகாந்த், அவரது மறைவுக்குப்பின்னும் அங்கேயே தொடர்ந்தார். நடிகர் திலகம் போன்றோர் இந்திரா காங்கிரஸில் சேர முடிவெடுத்தபோதும் கூட அங்கே செல்லாமல், பா.ராமச்சந்திரன் தலைமையில் ஸ்தாபன காங்கிரஸிலேயே இருந்து வந்தவர், 1977-ல் ஸ்தாபன காங்கிரஸ், ஜனதா கட்சியாக மாறியபோதும் அங்கேயே இருந்து, 1977 பாராளுமன்ற தேர்தலில் மத்திய சென்னையில் பா.ராமச்சந்திரனை ஆதரித்தும், 1977 சட்டமன்ற தேர்தலில் ஜனதா கட்சி வேட்பாளர்களை ஆதரித்தும் பிரச்சாரம் செய்தார்.

இதனிடையே காந்தி மண்டபத்தின் அருகே பெருந்தலைவரின் நினைவிடத்தின் மேலே வைக்கப்படுவதாக இருந்த பெரிய கைராட்டை, எமர்ஜென்ஸி காலத்தின்போது அகற்றப்பட்டது. கட்டிடம் வெறுமனே மொட்டையாகக் காட்சியளித்தது. அப்போது மீண்டும் கைராட்டையை அவரது நினைவிடத்தில் வைக்க வேண்டும் என்று கோரி கவர்னர் மாளிகைக்குச் சென்று மனு கொடுத்த ஸ்தாபன காங்கிரஸ் தலைவர்களோடு ஸ்ரீகாந்தும் சென்றிருந்தார். மத்தியில் ஜனதாகட்சி ஆட்சியமைத்தபின்னர் ‘கைராட்டை’ மீண்டும் பெருந்தலைவர் நினைவிடத்தில் இடம் பெற்றது. பின்னர் ஜனதா கட்சி உடைந்து சிதறுண்டபின், ஸ்ரீகாந்தும் அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொண்டார்.

பெருந்தலைவர் மறைந்த பின் நடிகர்திலகம் எடுத்த அரசியல் முடிவுக்காக அவரை ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சித்ததால், நடிகர்திலகத்தின் படங்களில் இடம் பெறும் வாய்ப்புக்கள் குறையத் தொடங்கின. (அப்போது நடிகர் திலகம் ஸ்தாபன காங்கிரஸிலேயே தொடரவேண்டும் என்பதே ரசிகர்களில் பெரும்பாலோரது எதிர்பார்ப்பாகவும் இருந்தது). ஏற்கெனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட படங்களில் மட்டுமே ஸ்ரீகாந்த் இருந்தார். ஒரு காலத்தில் ஸ்ரீகாந்த் இல்லாத நடிகர் திலகத்தின் படங்களே இல்லை என்றிருந்த நிலை மாறத் தொடங்கியது. இந்நேரத்தில் விஜயகுமார், ஜெய்கணேஷ் போன்றோர் நடிகர் திலகத்தின் படங்களில் துணைப்பாத்திரங்களில் இடம் பெறத் துவங்கவே, சிவாஜி படங்களில் ஸ்ரீகாந்த் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டார். (அதே சமயம் நடிகர் திலகத்தைப் பற்றி ஸ்ரீகாந்தை விட பல மடங்கு கடுமையாக விமர்சனம் செய்திருந்த எம்.ஜி.ஆர். பக்தரான தேங்காய் சீனிவாசன், சிவாஜி படங்களில் தொடர்ந்து வாய்ப்புக்கள் பெறத் தொடங்கினார்).

தொகுக்கப்பட்ட பக்கங்கள்:
ஆளுமைகள்
கூட்டாஞ்சோறு->நண்பர்கள்->சாரதா பக்கம்
கூட்டாஞ்சோறு->அரசியல்

தொடர்புடைய பதிவுகள்: வெண்ணிற ஆடை திரைப்படத்தின் அரசியல்

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

19 Responses to காங்கிரஸ் பேரியக்கத்தில் ஸ்ரீகாந்த்

  1. விமல் says:

    ஸ்ரீகாந்த் பற்றி நிறைய விஷயங்கள் இதன் மூலம் தெரிந்தது.

    இதே போல முத்துராமன், A.V.M.ராஜன், ரவிச்சந்திரன், சிவகுமார், நாகேஷ், வெண்ணிற ஆடை மூர்த்தி பற்றியும் நீங்கள் தனியாக எழுதலாம்.

    மிக்க நன்றி.

  2. விமல் says:

    சாரதா அவர்களே, மிக்க நன்றி.

  3. விமல் says:

    ஆஹா, நீங்கள் குடுத்த
    link-i படிக்க ஆரம்பித்து விட்டேன். மிகவும் அருமையாக எழுதி உள்ளீர்கள். நன்றி.

  4. சாரதா says:

    ‘அவள்’ திரைப்பட ஸ்டில் அனுப்பிய அந்த ‘நண்பருக்கு’ என் நன்றி.

    ‘அவள்’ திரைப்படத்துக்கான எனது விமர்சனக்கட்டுரை இந்த இணைப்பில்…

    http://www.forumhub.mayyam.com/hub/viewtopic.php?t=13689&start=0

  5. ஸ்ரீகாந்த் மிகச்சிறந்த பண்பாளர்..அவரும் என் அப்பா (திரு.ஏ.எஸ்.ராகவன்) அவர்களும்..ஒரு முதிர்ந்த எழுத்தாளர் பயனுற..அவர் கதைளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ..சன்மானத்தை அம்முதிர்ந்த எழுத்தாளர் அவைகளே பெறச்செய்ய..ஒரு விஷயம்.. என் தந்தையும் திரு.ஸ்ரீகாந்த் அவைகளும் இதுவரை சந்தித்துக் கொண்டதே இல்லை..

  6. என் தந்தை திரு.ஏ.எஸ்.ராகவன் அவர்கள்-தற்போது 83 வயது ஆகிறது- 1960 – 70 களில் ஆனந்தவிகடன், கல்கி, கலைமகள்,போன்ற அனைத்துப் பத்திரிகைகளிலும் சிறுகதை, தொடர்கதை, எழுதியவர். ஓர் முதிர்ந்த எழுத்தாளர் வறுமையில் வாடுவது அறிந்து அவர் கதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அதற்கான சன்மானத்தை அம்முதிர்ந்த எழுத்தாளர் முகவரிக்கு அனுப்பி அவரை மகிழச் செய்தவர்…இதே போல திரு.ஸ்ரீகாந்த் அவர்களும் அதே எழுத்தாளருக்கு உதவி செய்தது என் தந்தையே அறியாதது..ஓர் முறை ஜெயா டீவியில் திரு.ஸ்ரீகாந்த் அவரகள் “திரும்பிப் பார்க்கிறேன்” நிகழ்ச்சியில் இச்செய்தியைக் கூற ..அதை நான் என் தந்தையிடம் கூறினேன்..அப்போது அப்பா சொன்னார்..” அப்படியா..ஆமா யாரு ஸ்ரீகாந்த்து..” என்று..

  7. மூன்று சுட்டிகளையும் பார்த்தேன்..குதிரைகள் மனிதர்களை ஒருபோதும் மிதிக்காது என்ற செய்தி இதுவரை அறியாதது..கர்ணன் அவர்களின் துணிச்சலும் அப்போது அவர் தன் காமிராவைக் கையாண்ட தைரியமும் பாராட்டத்தக்கதே.சில பேரைப் பற்றிய சில கருத்துக்கள் மனதில் வேறூன்றி விடுகின்றன. ஒரு முறை இப்படித்தான், எழுத்தாளர் திரு.புஷ்பாதங்கதுறையைப் பற்றி பல வருடங்களுக்கு முன்னால் ஒரு கூட்டத்தில் மிகவும் மோசமாகப் பேசினார்கள்.அக்கூட்டத்தில் அவ்வெழுத்தாளாரும் இருந்தார். நான் அப்போது சொன்னேன் கூட்டத்தைப் பார்த்து.. புஷ்பா தங்கதுரையின் சிறுகதைகளை நீங்கள் யாராவது படித்திருந்தால் இப்படிச் சொல்லமாட்டீர்கள்..உதாரணம் “ஒரு அக்கா அம்மா ஆகிறாள்..” இது தினமனி கதிரில் வந்த கதை..என்னைக்கேட்டால் புஷ்பாவின் மிகச்சிறந்த கதை இதுவே என்பேன்…!

  8. திரு.புஷ்பா தங்கதுரை அவர்களிடமே கேட்டுப் பெறலாம்..மிக நல்ல மனிதர்.பழக இனிமயானவர். தன் வீட்டில் 5, 6 கம்புயூட்டர்களை வைத்துக்கொண்டு வான் ஆராய்ச்சிகளில் ஈடு படுகிறார்.. அவருடைய “வெங்கட்,குங்கட்” படித்திருக்கிறீர்களா? நீண்ட சிறுகதை அது..மனோதத்துவ ரீதியாக எழுதப்பட்ட அருமையான் சிறுகதை..குமுத்தில் வந்தது..என் சகோதரி எழுத்தாளர் ஷைலஜா வுக்கு மிகவும் பிடித்த கதை அது.

  9. ஸாரி மிஸ்டர் ஆர்.வி.

    லாங் லீவில் போய்விட்டேன்..
    விஜாரித்து சொல்கிறேன்

RV -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி