ரவிச்சந்திரனை சந்தித்த சாரதா


ரவிச்சந்திரனை சந்தித்த அனுபவத்தை சாரதா இங்கே எழுதி இருக்கிறார். ஓவர் டு சாரதா!

நான் ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது, ஒரு கல்ச்சுரல் விழாவுக்காக தோழிகள் சிலர் நாட்டிய நாடகம் ஒன்றை நடத்த ஏற்பாடு செய்திருந்தனர். (அந்த நாட்டிய நாடகத்தில் நான் இல்லை, காரணம் நாட்டியம் பார்க்க மட்டுமே தெரிந்தவள் நான்). அதற்கு இசையமைக்க நல்ல இசையமைப்பாளர் ஒருவரை ஏற்பாடு செய்யலாம் என்று யோசித்து, கடைசியில் ‘முத்து’ என்பவரை போடலாம் என்று முடிவெடுத்தனர். திரு முத்து, அப்போது இசை ஞானி இளையராஜா ட்ரூப்பில் இசை உதவியாளர்களில் ஒருவராக இருந்தார். அவரைச் சந்திக்க சென்ற சின்ன குழுவில் என்னையும் சேர்த்துக்கொண்டனர். (இம்மாதிரி திரையுலக சம்பந்தப்பட்டவர்களைச் சந்திக்க செல்லும் குரூப்பில் நானாக ஒட்டிக்கொள்வது வழக்கம். காரணம் நான் ஒரு சினிமா பைத்தியம் என்பது தெரிந்த விஷயம்).

மாலை சுமார் ஆறு மணியிருக்கும். மயிலாப்பூர் சித்திர குளத்துக்கு சற்று தொலைவில் ஒரு தெருவில்தான் முத்து குடியிருந்தார். விசாரித்துக் கொண்டே அவருடைய வீட்டை அடைந்தோம். அவரது வீட்டுக்கு எதிரே சின்னதாக ஒரு அழகிய பங்களா தென்பட்டது. வாசலில் போர்டு எதுவும் இல்லை. பார்த்தால் யாரோ பெரிய புள்ளியின் வீடுஆக இருக்கும் என்பது மட்டும் தெரிந்தது. யாராவது பெரிய பிஸினஸ்மேன், அல்லது அதிகாரி வீடாக இருக்கும் என்று எங்களுக்குள் பேசிக்கொண்டே முத்துவின் வீட்டுக்குள் சென்று அவரிடம் கல்லூரி நாட்டிய நாடகத்துக்கு இசையமைக்கக் கேட்டோம். அவர் டைரியைப் புரட்டிப் பார்த்துவிட்டு நாங்கள் கேட்ட அந்த தேதியில் அவர் முக்கியமான ரிக்கார்டிங்கில் வாசிக்க இருப்பதாகச் சொல்லி, எங்கள் கோரிக்கையை மறுத்துவிட்டார். இதனிடையே அவருக்கு ஏதோ முக்கியமான போன் வரவே, ‘ஸாரி, வருத்தப்பட்டுக்காதீங்க. அவசரமா போக வேண்டியிருக்கு. என் மனைவியிடம் பேசிவிட்டு எல்லோரும் டீ சாப்பிட்டு விட்டுப் போங்க’ என்று எங்களிடம் சொல்லி விட்டு, வாசலில் நின்ற பைக்கில் ஏறிப் பறந்தார். முத்துவின் மனைவி எங்களிடம் அன்போடு உரையாடினார். அப்போது எதார்த்தமாக, எதிரில் இருக்கும் பங்களா வீட்டில் இருப்பது யார் என்று கேட்டோம். ‘உங்களுக்குத் தெரியாதா?. நடிகர் ரவிச்சந்திரன் சாரும், அவர் மனைவி ஷீலாவும் அந்த வீட்டில் இருக்காங்க’ என்று சொல்லி, இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

இப்போது எங்களுக்குள், ‘ஏய் எப்படியாவது அவங்களை சந்திச்சிட்டுப் போகலாம்டி. இந்த மாதிரி சந்தர்ப்பம் இனிமே கிடைக்காது’ என்று சொல்ல, எங்களில் ஒருத்தி, ‘நாம நினைச்சவுடன் அவங்களை சந்திக்க முடியுமா?. திடீர்னு வாசலில் போய் நின்னா உள்ளே விடுவாங்களா?’ என்று சந்தேகம் கிளப்ப, இன்னொருத்தி, ‘ஒரு ஐடியா, இவங்க (முத்துவின் மனைவி) மூலமாகவே பெர்மிஷன் கேட்போமே’ என்று சொல்லி அவங்களிடம் சொல்ல (இதனிடையே டீ வந்தது, குடித்தோம்). நாங்க சொன்னதைக் கேட்டு சிறிது தயங்கிய அவர், பின்னர் போன் செய்தார். ரிஸீவரை கையில் பொத்திக்கொண்டு, எங்களிடம் ரகசிய குரலில் ‘சார்தான் பேசுறார்’ என்றவர் போனில், ‘சார், நான் எதிர் வீட்டிலிருந்து முத்துவின் மனைவி பேசுறேன். இங்கே வந்த சில கேர்ள் ஸ்டூடண்ட்ஸ் அவரைப் பார்க்க வந்தவங்க உங்களைப் பார்க்க பெர்மிஷன் கேட்கிறாங்க…(gap)… அப்படியா?..(gap).. ரொம்ப தேங்க்ஸ் சார்’ என்று ரிஸீவரை வைத்தவர், ‘சார் வரச் சொல்றார்’ என்றதும், எங்கள் மனதுக்குள் சந்தோஷம். முத்துவின் மனைவிக்கு நன்றி சொல்லிவிட்டு, எதிர் வீட்டுக்குப் போனோம். வாசலில் நின்றவரிடம் விஷயத்தைச் சொல்ல, உள்ளே போய் கேட்டு வந்தவர், ‘உள்ளே போங்க’ என்றார்.

கூடத்தில் சோபாவில் பூப்போட்ட லுங்கி, ரோஸ் கலர் காட்டன் ஜிப்பா அணிந்து, ரிலாக்ஸ்டாக நியூஸ் பேப்பர் படித்துக் கொண்டிருந்த ரவிச்சந்திரன், எங்களைப் பார்த்ததும் பேப்பரை மடித்துக் கொண்டே, ‘வாங்க வாங்க, உட்காருங்க. நீங்கள்ளாம் யாருன்னு தெரிஞ்சிக்கலாமா?’ என்றவாறு பேச்சைத் துவக்கினார். சோபாவில் உட்கார்ந்ததும் எங்களை அறிமுகப்படுத்திக் கொண்டோம். ‘ரொம்ப சந்தோஷம், நான் நடிச்ச படங்கள்ளாம் பார்த்திருக்கீங்களா?’ என்று அவர் கேட்டதும், தோழிகள் மெல்ல என்னை உசுப்பினார்கள் (காரணம், அந்தக் கூட்டத்தில் நான்தான் அதிகமாக சினிமா பார்ப்பவள், நினைவிலும் வைத்திருப்பவள்). காதலிக்க நேரமில்லையில் ஆரம்பித்து வரிசையாக அவர் படங்களைப் பற்றியும் அவர் நடிப்பையும் சொல்லத் துவங்கியதும், பாதியிலேயே சற்று சத்தமாக சிரித்தவர், ‘ஏது, காலேஜ்ல போயி பாடம் படிச்ச மாதிரி தெரியலையே. பாதி நாள் தியேட்டரிலேதான் குடியிருந்திருப்பீர்கள் போலிருக்கு’ என்று மீண்டும் சிரித்தார். திடீர்னு போறோமே எப்படி பேசுவாரோ என்று நினைத்துப் போன எங்களுக்கு, அவர் பேசிய விதம் ரொம்ப ரிலீஃப் ஆக இருந்தது. ரொம்ப சகஜமாக பேசினார்.

‘ஷீலா மேடம் இருக்காங்களா?’ என்றதும், ‘ஷீலா ஒரு மலையாளப் பட ஷூட்டிங் போயிருக்காங்க. இங்கே மெட்ராஸ்லதான். வர நைட் பதினோரு மணியாகும்னு இப்போதான் போன் பண்ணினாங்க’ என்றார். ‘அப்போ உங்களுக்கு இன்னைக்கு ரெஸ்ட் டேயா சார்?’ என்று கேட்டோம். ‘இல்லேம்மா, காலைல ஃபர்ஸ்ட் ஷெட்யூல் முடிச்சிட்டு இப்போதான் நாலு மணிக்கு வந்தேன். இங்கேதான் ஓஷியானிக் ஓட்டல்ல சீன் எடுத்தாங்க. நாளைக்கும் கண்டினியூட்டி இருக்கு’ என்றார். அவரது சகஜமான பேச்சு கொஞ்சம் தெம்பைத் தந்ததால் நான் தைரியமாகக் கேட்டேன், ‘ஏன் சார் ஃபைட் சீன்ல டூப் போடுறாங்க?. டூப் இல்லாமல் எடுத்தால் என்ன?’ என்று கேட்டதும், தோழிகள் என்னை இடித்து ‘ஏய் என்னடி இதெல்லாம்’ என்று சொன்னதைப் பார்த்துவிட்ட ரவி சார், ‘தடுக்காதீங்க, அவங்க கேட்கட்டும்’ என்றவர், சோபாவின் கைப்பிடியில் கையை ஊன்றி தீர்க்கமாக என் கண்ணைப் பார்த்தபடியே பெரிய லெக்சர் கொடுக்க ஆரம்பிச்சார்…..

‘அதாவதும்மா, இந்த மாதிரி டூப் போடறதுல பல விஷயங்கள் அடங்கி இருக்கு. அதாவது கதாநாயகர்கள் ஆன நாங்க ப்ரொபெஷனல் ஃபைட்டர்ஸ் கிடையாது, ஸ்டண்ட் மாஸ்டர் சொல்லிக் கொடுக்கிறதை வச்சு செய்றோம். சில சமயம் நம்மை மீறி மிஸ் ஆச்சுன்னா, கீழே விழுந்து பலமா அடிபட்டா ஒண்ணு உயிருக்கு ஆபத்து, அல்லது உடல் உறுப்புகளுக்கு ஆபத்து, அடுத்து அடிபட்டு படுத்துட்டோம்னா மொத்த படப் பிடிப்பும் நின்னு போயிடும். ப்ரொட்யூசருக்கு பெரிய அளவுல லாஸ் வரும்.

ரெண்டாவது, டூப் ஃபைட்டர்ஸுக்குத்தான் அந்த டைமிங் கரெக்டா தெரியும். அதாவது ஒரு மாடியிலிருந்து, கீழே ஓடும் ஒரு ட்ரக்கில் குதிக்கணும்னா, எப்போ குதிச்சா, ட்ரக் அந்த இடத்துக்கு வரும்போது கரெக்டா அதன்மீது விழுவோம்னு அவங்களுக்குத்தான் தெரியும். அதுமாதிரி கரெக்டா குதிச்சிடுவாங்க. நாங்க குதிச்சா, கொஞ்சம் மிஸ் ஆனாலும் அவ்வளவுதான்.

அடுத்து ஸ்டண்ட் யூனியனில் இருப்பவங்களுக்கு இம்மாதிரி ஃபைட் படங்கள்ளதான் வாய்ப்பு கிடைக்கும். வருமானமும் கிடைக்கும். அதை நாம ஏன் தட்டிப் பறிக்கணும்?. அவங்களுக்கு பாலச்சந்தர் சார் படத்திலோ, கே.எஸ்.ஜி.சார் படத்திலோ வாய்ப்புக்கிடைக்காது. எம்.ஜி.ஆர்.சார் படம், என் படம், ஜெய்சங்கர் படம், இப்போ ஒரு பத்து வருஷமா சிவாஜி சார் படங்கள்ளேயும் பைட் சீன் வைக்க ஆரம்பிச்சுட்டாங்க. ஸோ, இந்த மாதிரி சந்தர்ப்பங்கள்ளேதான் அவங்களுக்கும் சான்ஸ் கிடைக்கும். இதை நீங்க ஸ்டூடண்ட்ஸ்ங்கிறதாலே சொல்றேன். நீங்களே பிரஸ் ரிப்போர்ட்டரா வந்திருந்தா சொல்லியிருக்க மாட்டேன். பிரச்சினையாயிடும் (சிரித்தார்).

இன்னொரு முக்கியமான விஷயம் கால்ஷீட் பிரச்சினை. நாங்க ஹீரோக்கள் ஒரே சமயத்துல நாலைந்து படங்கள்ளதான் நடிப்போம், ஆனா எங்களோடு காம்பினேஷன் சீன்ல நடிக்கிற கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் பல படங்கள்ள நடிச்சிக்கிட்டிருப்பாங்க. வி.எஸ்.ராகவன் சார், வி.கே.ஆர்.சார், மேஜர் சார், மனோரமா மேடம் இவங்கள்ளாம் ஒரே நேரத்துல முப்பது, நாற்பது படங்கள்ள நடிச்சிக்கிட்டு இருக்குறவங்க. எவ்வளவு கஷ்ட்டப்பட்டு இவங்க கிட்டே கால்ஷீட் வாங்கியிருப்பாங்கன்னு நமக்குத் தெரியும். நாம பெரிய பந்தாவா டூப் போடாம செய்றேன்னு செஞ்சு அடிபட்டு ஒரு பதினைந்து நாள் படுத்துட்டோம்னா போச்சு. எல்லோர்கிட்டே வாங்கின கால்ஷீட்டுமே வேஸ்ட் ஆயிடும். அப்புறம் அவங்களையெல்லாம் ஒண்ணு சேர்த்து கால்ஷீட் வாங்குவது லேசான விஷயமா? அதே தேதியிலே ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு படத்துக்கும் கொடுத்திருப்பாங்க. அதனால் தயாரிப்பாளர் மாசக்கணக்கா வெயிட் பண்ண வேண்டி வரும். ஷெட்யூல்படி படத்தை முடிக்கலைன்னா எவ்வளவு பெரிய லாஸ்ல கொண்டுபோய் விடும் தெரியுமா?’ என்று முடித்தார். என் சிறுமதியை நான் நொந்துகொண்டேன். அதே சமயம் பரவாயில்லை, கேட்டதால்தானே இவ்வளவு விவரமும் சொன்னார் என்று சமாதானம் அடைந்தேன். (அடேயப்பா டூப் போடுறதுல இவ்வளவு அட்வான்டேஜ் இருக்கா!)

மேலும் சிறிது நேரம் சில விஷயங்களைப் பற்றிப் பேசினோம். எங்கள் ஒவ்வொருவருடைய படிப்பைப் பற்றியும் கேட்டறிந்தார். இதனிடையே பணியாளர் டீயும் பிஸ்கட்டும் கொண்டு வந்து வைத்தார். ‘சார் நாங்க முத்து சார் வீட்டுல இப்போதான் டீ சாப்பிட்டோம்’ என்று சொன்னதும், ‘அது அவர் வீட்டுக்கு போனதுக்கு. இப்போ என் வீட்டுக்கு வந்ததுக்கு சும்மா அனுப்ப முடியுமா?. டீதானே. எத்தனையும் சாப்பிடலாம். எடுத்துக்குங்க’ என்றார்.

‘சார், உங்களை சந்திப்போம்னு ஒரு மணி நேரத்துக்கு முன் வரை நினைக்கவேயில்லை. பெர்மிஷன் கொடுத்ததுக்கும், ஒரு விருந்தினரைப் போல கவனிச்சதுக்கும் ரொம்ப தேங்க்ஸ் சார்’ என்றோம் கோரஸாக. ‘என்ன பெரிசா செஞ்சுட்டேன்னு தேங்க்ஸ் எல்லாம் சொல்றீங்க. நாம இன்னைக்கு சந்திக்கணும்னு ஆண்டவன் எழுதி வசிருக்கான். அதான் உங்களைக் கொண்டு வந்து சேர்த்துட்டான். நான்தான் உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லணூம். ரொம்ப லோன்லியா ஃபீல் பண்ணிக்கிட்டிருந்தேன். ஒரு மணி நேரம் நல்லா ரிலாக்ஸ்டா போச்சு. ஷீலாவைப்பார்க்கணும்னா இன்னொரு நாளைக்கு போன் பண்ணி கேட்டுகிட்டு வாங்க’ என்று வாசல் வரை வந்து அன்புடன் வழியனுப்பி வைத்தார்.

முத்து எங்களுக்கு இசையமைக்க முடியவில்லையே என்ற வருத்தம் எல்லாம் போச்சு. மாறாக, ரவிச்சந்திரன் அவர்களின் சந்திப்பும் உரையாடலும் மனம் முழுக்க நிறைந்தது. எதிர் வீட்டிலிருந்த முத்துவின் மனைவியைச் சந்தித்து மீண்டும் நன்றி தெரிவித்து விட்டு வந்தோம். ஆட்டோ பிடிக்கணும் என்ற எண்ணம்கூட இல்லை. சளசளவென்று பேசிக்கொண்டே ‘லஸ் கார்னர்’ வரை நடந்தே வந்தோம்.

இந்தச் சந்திப்புக்குப்பின் ரவிச்சந்திரன் என மனதில் பல படிகள் உயர்ந்துவிட்டார். இந்த திரி துவங்கியதற்கு அவருடன் எதிர்பாராமல் நேர்ந்த அந்த சந்திப்பும் ஒரு காரணம் எனலாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள், கூட்டாஞ்சோறு->நண்பர்கள்->சாரதா பக்கம்

தொடர்புடைய பதிவுகள்:
ஃபோரம்ஹப்பில் ரவிச்சந்திரன் திரி
ரவிச்சந்திரன் – அன்றும் இன்றும்

பின்குறிப்பு: ஒத்மான் தமீன் பொறுக்க முடியாமல் இள வயது ரவிச்சந்திரனின் ஒரு புகைப்படத்தை அனுப்பி இருக்கிறார், அவருக்கு நன்றி!

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

7 Responses to ரவிச்சந்திரனை சந்தித்த சாரதா

 1. RV says:

  ஒத்மான் தமீன் பொறுக்க முடியாமல் இள வயது ரவிச்சந்திரனின் ஒரு புகைப்படத்தை அனுப்பி இருக்கிறார், அவருக்கு நன்றி!

 2. சாரதா says:

  டியர் ஆர்.வி.,

  ரவிச்சந்திரனுடனான எனது சந்திப்பை, மக்கள் பார்வைக்கு பதிப்பித்தமைக்கு மிக்க நன்றி. அதுபோல ரவி அவர்களின் வாலிப வயது புகைப்படத்தை அனுப்பி வைத்த அந்த நண்பருக்கும் நன்றி.

  இரண்டு படங்களையும் பார்க்கும்போது, நீங்கள் இன்னொரு பதிவில் ‘காஞ்சனா அன்றும் – இன்றும்’ என்று தலைப்பிட்டிருப்பதைப்போல ‘ரவிச்சந்திரன் அன்றும் – இன்றும்’ என்று சொல்வது போலத் தோன்றுகிறது. (இவர்கள் இருவருமே ‘அதே கண்கள், உத்தரவின்றி உள்ளே வா’ போன்ற பல படங்களின் வெற்றி ஜோடி).

  இருவரின் புகைப்படங்களையும் காணும்போது, கேள்வி ஒன்றுக்கு கவிஞர் கண்ணதாசன் அளித்த பதில் நினைவு வருகிறது.

  கேள்வி: ‘நாட்டு மக்களிடையே எந்த ஒரு விஷயத்திலாவது சீரான முன்னேற்றம் காணப்படுகிறதா?’
  கண்ணதாசன் பதில்: ‘எப்படியும் முதுமை அடைந்தே தீருவது என்பதில் மட்டும் எல்லோரிடமும் ஒரே சீரான முன்னேற்றம் தெரிகிறது’.

  • RV says:

   சாரதா, நன்றி நான்தான் சொல்ல வேண்டும்.

   “ரவிச்சந்திரன் அன்றும் இன்றும்” என்றும் ஒன்று போட்டுவிட்டால் போச்சு!

   கண்ணதாசன் கலக்கிவிட்டார்!

 3. ராஜன் says:

  சாரதா

  சுவாரசியமான அனுபவம்தான். இவர் மலேஷியாவில் இருந்து வந்தவர் என்பார்கள். சில வருடங்களுக்கு முன்பு தன் மகனையும் மம்முட்டியையும் மலேஷியாவில் வைத்து ஒரு பாடாவதி படமும் கூட எடுத்திருந்தார். இவர் மனைவியாக இருந்த ஷீலா மலையாளத்தில் பிரபலம் தமிழிலும் கூட ரஜினிகாந்தை வைத்து ஒரு பேய் (பேய் ரஜினி அல்ல) படம் எடுத்திருந்தார்.

  சினிமா நட்சத்திரங்கள் பார்ப்பது குறித்து நண்பர் சுகா (இவர் ஒரு தமிழ் பட இயக்குனர், பாலுமகேந்திராவின் உதவி இயக்குனர், இவரது படித்துறை என்ற சினிமா விரைவில் வெளிவர இருக்கிறது) தனக்கேயுரிய நெல்லை குசும்புடன் அருமையான நகைச்சுவைக் கட்டுரை ஒன்றை சொல்வனத்தில் எழுதியுள்ளார் அவசியம் படியுங்கள் http://solvanam.com/?p=8737

  அன்புடன்
  ராஜன்

 4. ரவிச்சந்திரன் காலமானார்.

  தமிழ்த்திரையுலகில் ஒரு காலத்தில் ஆணழகன் என்றும், கலர்க்கதாநாயகன் என்றும், வெள்ளிவிழா நாயகன் என்றும் ரசிகர்களால் அன்போடு ரசித்துப்போற்றப்பட்ட திரு ரவிச்சந்திரன் அவர்கள் நேற்று மாலை காலமானார் என்ற செய்தி அதிர்ச்சியைத் தந்தது.

  என்னுடைய கல்லூரிப்பருவத்தில் அவருடன் சந்தித்துப்பேசிய பசுமையான நினைவுகள் நினைவுக்கு வந்து நெஞ்சை அழுத்துகின்றன. அதுவரை துடிப்பான கதாநாயகன் என்று மட்டுமே அறிந்திருந்த எனக்கு, அவர் ஒரு பண்பான மனிதரும் கூட என்பதை உணர்த்திய சந்திப்பு அது. (இத்திரியின் முதல் பக்கத்தில் வெளியாகியிருக்கிறது).

  அவரது மனைவி திருமதி விமலா ரவிச்சந்திரன் ஒரு பொறுமைக்கடல் என்று சொல்லலாம். ரவியைவிட எட்டு வயது இளையவர். கதாநாயகன் வாய்ப்புக்குறைந்து, ரவி வில்லன் வேடத்துக்கு மாறுவதற்கு இடைப்பட்ட காலத்தில் பணக்கஷ்ட்டத்தில் தவித்தபோது (பனக்கஷ்ட்டத்துக்குக் காரணம் ரவி இரண்டு சொந்தப்படங்கள் எடுத்தது) குடும்பத்தைக்கரை சேர்க்க விமலாதான் திருச்சியில் தையற்கலைஞராக வேலை செய்து பிள்ளைகளைப்படிக்க வைத்தார்.

  சில ஆண்டுகளுக்கு முன் ஜெயா டிவியின் ‘திரும்பிப்பார்க்கிறேன்’ நிகழ்ச்சியின்போது ரவி, தன் குடும்பத்தினரை அறிமுகப்படுத்தினார். மகன்கள், மகள்கள் யாவரும் திருமணம் ஆகி நல்ல நிலைமையில் உள்ளனர். மகன் நடிகர் அம்சவிருத்தன் மட்டும் திரையுலகில் போதிய வாய்ப்பின்றி வேறு தொழிலில் இறங்கி விட்டார்.

  ரவிச்சந்திரன் தமிழக அரசு வழங்கும் ‘கலைமாமணி’ விருதும், தமிழக அரசு வழங்கும் ‘நடிகர்திலகம் சிவாஜி விருதும்’ பெற்றுள்ளார்.

  கடந்த சில நாட்களாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த ரவிச்சந்திரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிறுநீரகம் செயலிழந்ததால் மாற்று சிறுநீரகம் பொருத்தும் நிலையையும் கடந்து விட்டதால், சுய நினைவின்றி இருந்தவர் நேற்று மாலை காலமானார்.

  எஞ்சியிருந்த பழைய கலைஞர்களில் ஒருவர் மறைந்துவிட்டார். முன்பு வில்லன் நடிகர் திரு ஆர்.எஸ்.மனோகர் மறைந்தபோது இறுதி அஞ்சலி செலுத்த வந்த ரவிச்சந்திரன், ‘என் நண்பர்கள் ஒவ்வொருத்தராக போய்க்கிட்டிருக்காங்க. நான் இன்னும் எவ்வளவு நாள் இருக்கப்போகிறேன்?’ என்று கண் கலங்கினார். இப்போது அவரும் தன் நண்பர்களைத்தேடி இறுதிப்பயணம் மேற்கொண்டு விட்டார்.

  அவரது மறைவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலைக் காணிக்கையாக்குகிறோம்.

 5. இந்தக் கட்டுரையாளர் சாரதா இப்போது எங்கே இருக்கிறார்? கடந்த 5 ஆண்டுகளாக இவரின் பதிவுகள் எதையும் காண முடியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லலாம் . நன்றி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: