ஸ்ரீதரின் “தேனிலவு” நினைவுகள்


சாரதா இதை தேனிலவு பதிவுக்கு ஒரு மறுமொழியாக எழுதி இருந்தார். சுவாரசியமான நினைவுகள், அதையே ஒரு பதிவாக போட்டிருக்கிறேன்.

அன்றைக்கு டெக்னிக்கல் வசதிகள் இல்லாத காலத்தில் தேனிலவு படத்தை எடுக்க புதுமை இயக்குனர் ஸ்ரீதர் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டார் என்பதை ஸ்ரீதர் வாயிலாகவே கேட்போம். (பழைய சினிமா இதழ் ஒன்றில் நான் படித்தது). ஸ்ரீதர் சொல்கிறார்:

தேன் நிலவு படத்தை காஷ்மீரில் ஐம்பத்திரண்டு நாடகள் ஷூட் பண்ணினோம். எடுத்த காட்சிகளை உடனே போட்டுப் பார்க்கும் வசதி எல்லாம் அப்போது கிடையாது. அதிலும் நாங்கள் இருந்த இடம் ஸ்ரீநகரில் இருந்து வெகு தொலைவில் ஒரு கிராமத்துக்கு அருகில் இருந்தது. அந்த கிராமத்தில் ஒரேயொரு சினிமா தியேட்டர்தான் உண்டு. காஷ்மீரில் கஷ்டப்பட்டு எடுத்த காட்சிகளை சென்னைக்குப் போய் போட்டுப் பார்த்து சரியாக வரவில்லை என்றால் மீண்டும் ஷூட் பண்ணுவது எல்லாம் முடியாத காரியம். அதனால் நாங்கள் காஷ்மீரில் இருக்கும்போதே, எடுத்தவற்றை எல்லாம் அவ்வப்போது போட்டுப் பார்க்க விரும்பினோம். சரியாக வரவில்லையென்றால் மீண்டும் எடுத்துக் கொள்ளலாமே என்பதனால்.

காஷ்மீரில் அதற்கான வசதிகள் அப்போது இல்லாததால், ஷூட்டிங் எடுத்தவற்றை போட்டுப் பார்க்க ஃபிலிம் ரோலகளை சென்னை அனுப்பித்தான் கழுவி பிரிண்ட் போட்டு வரவேண்டும்.

அப்போதெல்லாம் ஸ்ரீநகரில் இருந்து வாரம் இரண்டு முறை மட்டும் ‘டகோட்டா’ விமானம் டெல்லிக்குப் போகும். அதில் எங்கள் சித்ராலயா நிர்வாகி ராமகிருஷ்ணன் மற்றும் ஒருவரை, நாங்கள் எடுத்த நெகட்டிவ் படச் சுருள்களோடு அனுப்பி வைப்போம். அவர்கள் டெல்லி சென்று, அங்கிருந்து சென்னை செல்லும் விமானத்தை பிடித்து சென்னை சென்று, அங்கு விஜயா லேபரட்டரியில் அவற்றை பிரிண்ட் போட்டு மீண்டும் டெல்லி வழியாக ஸ்ரீநகர் வருவார்கள்.

அந்த படப் பிரதிகளை எடுத்துக்கொண்டு நள்ளிரவில் நாங்கள் இருந்த இடத்துக்கு அருகிலுள்ள கிராமத்தின் தியேட்டருக்குப் போய் அவர்களிடம் அனுமதி பெற்று, அங்கு வழக்கமான இரவுக் காட்சி முடிந்த பிறகு, இரவு ஒரு மணிக்கு மேல் அங்குள்ள புரொஜக்டரில் திரையிட்டு நான், கோபு, ஜெமினி, வைஜயந்தி(மாலா), நம்பியார், வின்சென்ட், பி.என். சுந்தரம் மற்றும் எங்கள் படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் பார்ப்போம். மனதுக்கு திருப்தியாக இருக்கும். திருப்தி இல்லாத சில காட்சிகளை மீண்டும் எடுத்திருக்கிறோம். இரவு சுமார் மூன்று மணிக்கு மேல் அங்கிருந்து திரும்பி வந்து, படுத்து விட்டு காலை ஆறு மணிக்கெல்லாம் மீண்டும் உற்சாகமாக படப்பிடிப்பில் கலந்து கொள்வோம். உண்மையில் ‘தேன் நிலவு’ படம் முதலில் ரிலீஸான தியேட்டர், காஷ்மீர் கிராமத்திலுள்ள அந்த தியேட்டர் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த இடத்துக்கு முழுவதும் காரில் போக முடியாது. சிறிது தூரம் நடந்தும் போக வேண்டும். அப்படிப் போகும்போது, தான் ஒரு பெரிய வில்லன் என்ற பந்தா கொஞ்சமும் இல்லாமல் படச்சுருள் பெட்டிகளை நம்பியார் தன்னுடைய தலையிலும், தோளிலும் சுமந்து வந்ததை நான் இப்போதும் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன். நாங்கள் பட்ட கஷ்ட்டத்துக்கு பலன் கிடைத்தது. படம் வெற்றிகரமாக ஓடியது.

இவ்வாறு ஸ்ரீதர் சொல்லியிருந்தார்.

எந்த வித வசதியும் இல்லாத அந்த நாட்களில் நல்ல படங்களை நமக்கு தர வேண்டும் என்று அவர்கள் பட்ட கஷ்ட்டங்களைப் பார்த்தீர்களா?. ஆனால் இன்றைக்கு இத்தனை டெக்னிக்கல் முன்னேற்றங்களை கையில் வைத்துக்கொண்டு…, (வேண்டாம், எதுக்கு வம்பு. யாராவது அடிக்க வருவாங்க. அடி வாங்குவதற்கெல்லாம் நமக்கு தெம்பு இல்லை).

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்->ஸ்ரீதர் பக்கம், கூட்டாஞ்சோறு->நண்பர்கள்->சாரதா பக்கம், படங்களின் பட்டியல்

தொடர்புடைய பதிவுகள்:
தேனிலவு – ஆர்வியின் விமர்சனம்

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

5 Responses to ஸ்ரீதரின் “தேனிலவு” நினைவுகள்

 1. ராஜன் says:

  சாரதா

  தேனிலவு ஸ்ரீதரின் படங்களில் அவ்வளவு பிரமாதமான ப்டம் அல்ல. வலிந்து திணிக்கப் பட்ட காமெடிகள் நிறைந்த படம். இருந்தாலும் நம்பியார், ஜெமினி, வைஜயந்திமாலாவுக்காகவும் ஏ எம் ராஜாவின் அற்புதமான பாடல்களுக்காகவும் பார்க்கலாம். தங்கவேலு காமெடி செய்கிறேன் என்று நம்மை தொல்லை செய்வார். அவ்வளவு கஷ்டப் பட்டு காஷ்மீரில் படம் எடுத்த பின்னர் சில காட்சிகளை செட் போட்டு செட்டுக்குள் ஐஸ் கட்டிகளைக் கொட்டி காஷ்மீர் காட்சிகளை எடுத்திருப்பார்கள். காஷ்மீரில் எடுக்க மறந்து போன அல்லது பின்னால் சேர்க்கப் பட்ட காட்சிகளாக இருக்க வேண்டும் அவை. இப்பொழுதெல்லாம் காஷ்மீருக்குப் போய் யாரும் சினிமா எடுக்கத் துணிவதில்லை. அதிக பட்சம் சிம்லாவில் ஸ்நோ பெய்யும் போது எடுத்துக் கொள்கிறார்கள். இருந்தாலும் இந்தியாவுக்குள் வெளிப்புறக் காட்சி வைத்துக் கொள்வது இப்பொழுது ஃபேஷனே இல்லை. இந்தியில் முழுப் படத்தையுமே வெளிநாட்டில்தான் வைத்துக் கொள்கிறார்கள் தமிழில் பாடல்கள் எல்லாம் வெளிநாட்டில் முடிந்தால் பாதி படமும் கூட வெளி நாட்டில்தான்.

  ராஜன்

 2. சாரதா says:

  ராஜன்

  இயக்குனர் Shreedhar சொல்லியிருப்பது 1962-ல் இருந்த நிலை. அப்போதைய தமிழ்ப்படங்கள் மைசூர் பிருந்தாவனம் தாண்டிப்போனதில்லை. அப்போது அவுட்டோர் என்றாலே ஊட்டி கொடைக்கானல், சாத்தனூர் அணைக்கட்டு, மகாபலிபுரம் கடற்கரை… அவ்வளவுதான். அன்றைய சூழலில் காஷ்மீர் வரை சென்றது சாதனையே.

  இப்போது 48 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் (கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு), இன்றைய மாற்றங்கள் அவ்வளவு விரைவானவை என்று சொல்லிக்கொள்ள முடியாது.

  ட்ராலி ஷாட்கள் இல்லாத கால கட்டத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் படமொன்றில் பணியாற்றியதைப்பற்றி ஒளிப்பதிவாளர் (பின்னாளில் இயக்குனர்) எம்.கர்ணன் சொல்லியிருந்தார்.

  “காரின் ‘பேனட்’டில் நான் கேமராவோடு உட்கார்ந்துகொள்வேன். நடிகர்கள் வசனம் பேசிக்கொண்டிருக்கும்போது இயக்குனர் டி.ஆர்.சுந்தரம் ட்ரைவர் சீட்டில் அமர்ந்து காரை முன்னால் உருட்டுவதும், ரிவர்ஸில் எடுப்பதுமாக ஓட்டிக்கொண்டிருப்பார்”.

  வசதிகள் இல்லாத கால கட்டத்தில் நடந்த விஷயங்கள் சுவையானவையாகவே இருக்கின்றன.

 3. கர்ணன் காமிரா உலகமே அறிந்தது…அவர் கேமிரா எப்போது உயரத்தில் இருந்தது..?..!..சே.. மகா மட்டமான.. ரசனை உடையவர்.. கர்ண்ன் என்ற பேரை வைத்துக்கொண்டு அவர் துர்திராஷ்டிரன் போல்லவா இருந்தார்..?

 4. BaalHanuman says:

  டைரக்டர் ஸ்ரீதர் பற்றி எம்.என்.நம்பியார் (நான் வில்லன் அல்ல – கல்கி கட்டுரையில் 16 -11 -1997 )

  டைரக்டர் ஸ்ரீதர் அவரு காலகட்டத்தில் டைரக்டர்கள்ல ஒரு ஹீரோ போல வாழ்ந்தார். அதற்க்கான எல்லாத் தகுதியும் அவருக்கு இருந்தது. அவரு கொடுத்த எல்லாக் கதைகளையுமே ஜனங்க ஏத்துக்கிட்டாங்க. அவரோட படைப்புகள் அமோகமா ஓடி ரொம்பப் பெரிய ஆளாயிட்டாரு. அவரோட பல ஆசைகளும் நிறைவேறிச்சு. தேன்நிலவு படத்துக்காக அவரு எங்களையெல்லாம் கூட்டிக்கிட்டு காஷ்மீர் போனாரு. ஒரு பெரிய கும்பல். குடும்பத்தோட. நான் என் மனைவியுடன் போயிருந்தேன். மொத்த பெரும் ஒரே குடும்பமா பழகினோம். ஷூட்டிங் இல்லாத சமயங்கள்ல ஸ்ரீதர் சும்மா இருக்க மாட்டார். ‘வாங்க’ன்னு எல்லாரையும் அழைச்சிக்கிட்டு இயற்கைக் காட்சிகளைக் காட்ட போயிடுவார். பணச் செலவைப் பத்திக் கவலையே படாம, யூனிட்ல எல்லாம் சந்தோஷமா இருக்கணும்னு அவரு எங்களை ட்ரீட் பண்ண முறை இருக்கே, என் ஜன்மத்துக்கும் மறக்காது.

  காஷ்மீர் குளிர்லேயும் என் வழக்கப்படி நான் அதிகாலையில எழுந்திடுவேன். எல்லாம் தூங்கிகிட்டிருப்பாங்க. யாரையும் எழுப்ப முடியாது. எழுப்பினா நான்தான் வாங்கிக் கட்டிக்கணும். சித்ராலயா கோபு, ‘அண்ணே, கண்ணைத் திறந்திட்டேண்ணே. ஆனா எழுந்திருக்கத்தான் முடியல்ல’ன்னு பரிதாபமா கெஞ்சுவார்.

  டணால் தங்கவேலு கதையே தனி. பத்து மணிக்கு மேல தேவதைகள்ளாம் புடைசூழ அவர் ரொம்ப நேரம் ‘சைனீஸ் செக்கர்’ விளையாடுவார். இவர் ஆட்டமெல்லாம் முடிய காலையில மூணு நாலு மணி ஆயிடும்னு வச்சுக்கிங்களேன். அப்பவாவது தூங்கப் போவார்னு நினைக்கிறீங்க ? அந்த நேரத்தில கம்பெனி சமையல்காரனை எழுப்பி உப்புமா கிண்டித் தரச் சொல்லி சாப்பிட்டுட்டு காலை ஆறு மணிக்குத் தான் தூங்கப் போவார். அப்புறம் எங்க எழுந்திக்கறது ? எல்லாரும் தூங்குவாங்க. ஸ்ரீதர், வாங்கண்ணே எதையாவது எடுக்கலாம்னு காமிரா மேனை அழைச்சுக்கிட்டு பக்கத்தில் எங்கேயாவது நல்ல லொகேஷனுக்குப் போயி படத்துக்குத் தேவையிருக்கோ – இல்லையோ – என்னை அப்படியும் இப்படியுமா நாலு க்ளோஸ்-அப் ஷாட்ஸ் எடுத்து அனுப்புவார். மத்தவங்க எழுந்தப்புறம் படத்தோட வேலைகள் தொடங்கும். ரெண்டு மாசம் இப்படி எங்களையெல்லாம் எந்தப் பிரச்னையும் இல்லாம காஷ்மீரத்து அழகை அனுபவிக்க வச்சார். நான் ரொம்ப நேசிக்கிற ஒரு டைரக்டர் ஸ்ரீதர். அவர் வாழ்க !!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: