தெய்வ மகன் – விகடன் விமர்சனம்


படம் வெளியானபோது (1969) விகடனில் வந்த விமர்சனம். விகடனுக்கு நன்றி!

இரண்டு மூன்று வேடங்களில் ஒரே நடிகர் தோன்றினால் நிச்சயமாக ஆள் மாறாட்டம், அடையாளக் குழப்பம் போன்ற சிக்கல்களைப் படத்தில் எதிர்பார்க்கலாம். இவற்றில் எதுவும் தெய்வ மகனில் இல்லாதது தயாரிப்பாளர்களும் டைரக்டரும் செய்திருக்கும் சாதனை.

அப்பா, அண்ணன், தம்பி ஆகிய மூன்று வேடங்களில் சிவாஜி கணேசன் தோன்றுகிறார். இவர்களில் தம்பி சிவாஜிதான் நடிப்பில் மூத்தவர். பணக்காரச் செல்லப் பிள்ளை பாத்திரம் திரைக்குப் புதிதல்ல; ஆனால், அந்தப் பாத்திரத்துக்கு இவ்வளவு மெருகும் அழகும் தந்து நடிப்பது சிவாஜியின் புதிய சாதனை. ஹோட்டல் நடத்த தந்தையிடம் பணம் கேட்கும்போதும், அண்ணனைக் கண்டு ‘தீஃப்… தீஃப்…’ (திருடன்) என்று நாகரிகமாகக் கத்தும்போதும் அவர் நடிப்பில் அப்பப்பா… அழகு கொழிக்கிறது.

அண்ணனின் பாத்திர அமைப்பு சற்று குழப்பமாக இருக்கிறது. ஆசிரமத்தில் பாபாவின் மேற்பார்வையில் வளர்ந்த பையனை – அதுவும் ஓர் இசை மேதையை – அடிக்கடி டார்ஜான் மாதிரி கொந்தளிக்க விட்டிருக்க வேண்டுமா?

தன்னைப் போலவே முக விகாரத்துடன் பிறந்துவிட்ட குழந்தையைத் தந்தை கொன்றுவிடச் சொல்வது கொஞ்சம் கொடூரமான கற்பனைதான். இருந்தாலும், அதில் ஒரு வலுவான கதை பிறக்கிறது. பணத்துக்காக பையனைப் பிடித்து வைத்து மிரட்டுவது போன்ற அடிதடிக் காட்சிகளைத் திணித்திருக்காவிட்டால், இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

இருந்தும், இந்தக் குறையே பல அழுத்தமான சம்பவங்களாக மாறி கதையின் வலுவைக் காப்பாற்றுகின்றன. ஒதுக்கப்பட்ட மகன், பெற்றோரைத் தேடி வந்து, திருட்டுப் பட்டமும், துப்பாக்கிச் சூடும் வாங்கிக் கொண்டு ஓடுவது நெஞ்சைச் சிலிர்க்க வைக்கும் காட்சி.

காதலுக்கு ஜெயலலிதா; கவர்ச்சிக்கு விஜயஸ்ரீ.

காதலனிடம் அழுதுகொண்டே ‘ஐ டூ லவ் யூ’ என்று கூறும்போதும் சரி, காதலனுக்கு சப்போர்ட்டாக அவனுடைய அப்பாவிடம் பேசும் போதும் சரி… ஜெயலலிதாவின் நடிப்பு ரசிக்கும்படி இருக்கிறது.

‘சென்சார் தாராளமாக நடந்து கொள்ளவில்லை’ என்று குறைப்படுபவர்கள் விஜயஸ்ரீயின் நடனத் தோற்றம் ஒன்றைப் பார்த்துவிட்டுப் பேசினால் தேவலை. இன்னும் என்ன தாராளம் வேண்டும்?

பண்டரிபாயை சரிவரப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. எதிரியிடம் மாட்டிக்கொண்ட இளைய மகனை மீட்பதற்காக தகப்பனார் பரிதவிப்புடன் பணத்தை எடுத்துக் கொண்டு புறப்பட்டுக் கொண்டிருக்கும்போது, மகனைப் பிரிந்த தாய் (பண்டரிபாய்) நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருப்பதாகக் காட்டுவது பொருத்தமாக இல்லை.

பெரிய மண்டபத்தைக் கட்ட ஒரே ஒரு தூணின் பலத்தை நாடியிருக்கிறார்கள்! அந்தத் தூணின் பெயர் சிவாஜி கணேசன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்