“அங்காடித் தெருவின்” ஜாதி பற்றி ஜெயமோகன்


அங்காடித் தெரு நல்ல படம். தமிழுக்கு சிறந்த படம். பார்த்த யாரும் இது வரை படம் நன்றாக இல்லை என்று சொல்லவில்லை.

ஆனால் அந்தப் படத்தில் ஜாதி, மதக் கண்ணோட்டத்தில் குறை கண்டவர்கள் உண்டு. கடை முதலாளி பூஜை செய்யும் ஹிந்துவாக காட்டப்படுகிறாரே, அவரை நமாஸ் செய்யும் முஸ்லிமாக காட்ட முடியுமா, தைரியம் உண்டா என்ற கேட்டவர்களைத் தெரியும். பெரியவளாகி நிற்கும் பெண்ணை வீட்டுக்கு வெளியே அடைத்து வைப்பது ஒரு பிராமணப் பெண்ணாகத்தான் காட்டுவார்கள், வேறு எந்த ஜாதிப் பெண்ணாகவும் காட்டமாட்டார்கள், பிராமணக் குடும்பங்களில் இன்று யாரும் அப்படி தீட்டு பார்ப்பதில்லை என்றும் அப்படி அடைத்து வைக்கும் மனநிலை உள்ள பிராமணக் குடும்பத்தில் வேலைக்காரி இல்லை, வீட்டுப் பெண்ணுக்கும் அதே நிலைதான், அதை காட்டாமல் வேண்டுமென்றே ஒருதலைப் பட்சமாக காட்சி அமைத்திருக்கிறார்கள் என்றும் கேட்பவர்கள் உண்டு.

கடை முதலாளி ஹிந்து என்றால் மொத்த ஹிந்துக்களையும் இழிவுபடுத்துவது என்று பொருள் கொள்வது தவறு. தீட்டு பார்க்கும் பிராமணக் குடும்பம் என்று காட்டினால் எல்லா பிராமணர்களையும் இழிவுபடுத்துவது அல்ல. அப்படி நீங்கள் யோசித்தால் உங்கள் லாஜிக்படி தீட்டு காட்சியில் அதை அங்கீகரித்து பூஜைக்குரிய விஷயமாக காட்டி இருப்பது ஹிந்து மதத்தை பெருமைபடுத்துவது போல இல்லையா என்று நான் நண்பர்களிடம் (மட்டும்) வாதிட்டிருக்கிறேன். ஜெயமோகன் என்னை விட நன்றாக பேச எழுதத் தெரிந்தவர். அவரிடம் இதைப் பற்றி யாரோ கேட்க, அவர் பிளந்து கட்டி இருக்கிறார். படித்துப் பாருங்கள்!

ஜெயமோகன் எழுதி இருப்பதில் எனக்கு ஒன்று மட்டும்தான் உதைக்கிறது –

’அந்தச் சாதியைச் சொல்வாயா? இந்த மதத்தைச் சொல்வாயா?’ என்ற பாமரத்தனமான கேள்வி எழுந்து வருவதை கண்டிருக்கிறென். ஆம், நேரடியான விமரிசனங்களை எதிர்கொள்ளும் மனப்பயிற்சி இல்லாத மூர்க்கமான இனக்குழுக்கள் பல உள்ளன. அவற்றுடன் போய் மோதுவது பலசமயம் பொருளற்றதுதான். ஆனால் நான் பிராமணர்களை அப்படிப்பட்டவர்களாக நினைக்கவில்லை. உங்களைப்போன்ற சிலர் இருந்தாலும் பிராமணர்கள் பொதுவாக இன்னமும் அறிவுத்தளச் சமநிலை கொண்ட மென்மையான மனிதர்கள்தான்.

– இங்கே அவர் பார்த்த பழகிய 4, 40, 400, 4000 பிராமணர்களை வைத்து எல்லா பிராமணர்களையும் பற்றி ஒரு முடிவுக்கு வருகிறார்! 🙂

“மூர்க்கமான இனக்குழுக்கள்” என்று அவர் எழுதி இருப்பதில் (நியாயமான) பயம் தெரிகிறது. இந்த பயம் இல்லாமல் என்று எழுத முடிகிறதோ, அன்றுதான் இந்தியா ஒரு ஜனநாயக, கருத்து சுதந்திரம் உள்ள நாடு என்று சொல்லமுடியும். அந்த நிலை இன்று உலகில் எங்கும் இல்லை. மேலை நாடுகளில் கூட. கருத்து சுதந்திரம் முதல் சட்ட திருத்தத்தால் (First Amendment) பாதுக்காகப்பட்டிருக்கும் அமெரிக்காவில் கூட இன்று அது 100% இல்லை. அந்த பயமே இந்த கேள்வியை ஜெயமோகனிடம் கேட்டவரின், இப்படி யோசிப்பவர்களின் உண்மையான பிரச்சினை. ஜெயமோகன் சொல்லி இருப்பது போல அது பாமரத்தனமான கேள்வி என்று நான் நினைக்கவில்லை. எல்லா குழுக்களையும் ஒரே மாதிரி நடத்த முடியவில்லை. அதற்கு ஆயிரம் வரலாற்று காரணங்கள் இருந்தாலும் அதில் ஒரு unfairness இருக்கத்தானே செய்கிறது? ராமர் எந்த காலேஜில் படித்தார் என்று கேட்கும் கலைஞர் ரம்ஜான் கஞ்சி குடித்தால் எரிச்சல் வரத்தானே செய்யும்? அந்த unfairness-ஐ acknowledge செய்ய வேண்டும், வரலாற்று காரணங்களை பற்றி மேலும் மேலும் பேச வேண்டும், பக்கத்து வீட்டுக்காரன் தடுப்பூசி போட்டுக்கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அவன் மனதை மாற்ற வேண்டும், நாமும் இதுதான் சாக்கு என்று தடுப்பூசி போட்டுக்கொள்வதை நிறுத்தக் கூடாது என்று விளக்க வேண்டும் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: அவார்டா கொடுக்கறாங்க–>படங்களின் பட்டியல், கூட்டாஞ்சோறு–>ஜாதி

தொடர்புடைய பக்கங்கள்:
ஜெயமோகனின் விளக்கம்
அங்காடித் தெரு – விமர்சனம்
எழுத்தாளர் அ. முத்துலிங்கம், எழுத்தாளர் பாவண்ணன், எழுத்தாளர் பா. ராகவன், நண்பர் திருமலைராஜன் எழுதிய விமர்சனங்கள்