எம்.ஜி.ஆருக்கு தெரியுமா?


தமிழ்மகன் கூறுகிறார்…..

தமிழ் சினிமாவின் ஆதாரமான செய்திகளைச் சேகரித்து வைத்திருப்பதில் மக்கள் தொடர்பாளர் ஃபிலிம் நியூஸ் ஆனந்தனின் பங்கு மகத்தானது. பாகவதர் காலத்துக்குப் பிந்தைய காலத்தில் இருந்து இவர் தமிழ் சினிமாவில் பத்திரிகைத் தொடர்பாளராகப் பணியாற்றி வருகிறார். சொல்லப் போனால் தமிழ் சினிமாவில் முதல் பத்திரிகைத் தொடர்பாளர் இவர்தான். இதற்கு முன்னர் இப்படி ஒரு பதவியும் கூட தமிழ் சினிமாவில் இல்லை. எல்லா திரைப்படம் பற்றியும் ஆவணப்படுத்தும் எண்ணம் இவருக்கு எப்படி ஏற்பட்டிருக்கும் என்று ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. திரைப்படத்தில் நடித்தவர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள், சென்சார் செய்யப்பட்ட தேதி, திரையிடப்பட்ட செய்தி, ஓடிய நாள்கள், கிடைத்த விருதுகள் என எல்லாவற்றையும் பதிவு செய்திருக்கிறார். ஏதாவது தகவலைக் கேட்டால் அவருடைய ஞாபகத்திலிருந்தே அவரால் பல விஷயங்களைச் சொல்ல முடிவது மிகவும் ஆச்சரியம். குறைந்த பட்சம் ஒவ்வொரு திரைப்படத்துக்கும் ஒரு புகைப்படமாவது இவரிடம் இருக்கும்.

https://i1.wp.com/archives.chennaionline.com/chennaicitizen/images/06mar-ph01.jpg

அவர் என்னிடம் பகிர்ந்து கொண்ட ஒரு அதிர்ச்சியான செய்தி இது.

எம்.ஜி.ஆருக்கு ’ரிக் ஷாக்காரன்‘ படத்துக்கு பாரத் விருது கிடைத்தது பற்றியது. உண்மையைச் சொன்னால் யாராவது அடிப்பார்கள் என்ற தயக்கம் இருப்பதால் அந்த உண்மையை சம்பந்தப்பட்டவர்கள் கூட இப்போது மறுக்கக்கூடும். ஏனென்றால் இதை இவர் வேறு எங்கும் இச்செய்தியைப் பதிவு செய்யவும் இல்லை.

72 ஆண்டில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு திரைக்கலைஞருக்கு பாரத் விருது வழங்க இந்திய அரசு முடிவு செய்திருந்தது. அப்போது இந்திய திரைப்பட விருது கமிட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த செளந்திரா கைலாசம் இடம் பெற்றிருந்தார்.

https://i1.wp.com/www.hindu.com/mp/2005/10/06/images/2005100600670301.jpg

கமிட்டியில் இப்படி ஒரு கருத்துத் தெரிவிக்கப்பட்டதும் பட்டென்று அவர் “தமிழகத்தில் என்றால் எம்.ஜி.ஆரைத் தவிர வேறு யாருக்கு வழங்க முடியும்” என்று உடனடியாகத் தெரிவித்தாராம். தமிழகத்தைச் சேர்ந்த வேறு சிலரும் அங்கே இருந்தார்கள். அவர்களுக்கு ஆச்சரியம். எப்படி எம்.ஜி.ஆருக்குத்தான் என்று இவர் உறுதியாகச் சொல்கிறார் என்று.

வெளியே வந்து இதை அவரிடம் கேட்டனர். அவரும் “அவரைத் தவிர வேறு யாரைச் சொல்ல முடியும்” என்று கேட்டிருக்கிறார் மீண்டும்.

“ஏன் சிவாஜியைச் சொல்லியிருக்கலாமே?” என்றனர் மற்றவர்கள்.

“அடக் கொடுமையே.. நான் அவரைத்தானே சொன்னேன்? சிவாஜி என்று சொல்வதற்குப் பதிலாகத்தான் எம்.ஜி.ஆர்.. எம்.ஜி.ஆர் என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன். இவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டேனே” என்று புலம்பியிருக்கிறார்.

மீண்டும் உள்ளே சென்று “நாங்கள் சொல்ல வந்தது சிவாஜியைத்தான். நா பிரண்டு எம்.ஜி.ஆர் என்று சொல்லிவிட்டோம்.” என்று சொல்வதற்கு அனைவருக்கும் தயக்கம். எம்.ஜி.ஆர் பெயரை பரீசிலித்துவிட்டு பிறகு சிவாஜியின் பெயரை மாற்றிச் சொன்னதாகத் தெரிந்தால் எம்.ஜி.ஆரின் வருத்தத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும். சரி கிடக்கட்டும் விடுங்கள் என்று மனதைத் தேற்றிக் கொண்டனர்.

-இதுதான் அவர் சொன்ன சம்பவம்.

இது உண்மையாக இருந்தால் சிவாஜிக்கு நேர்ந்த எப்பேர்ப்பட்ட கொடுமை இது?

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

19 Responses to எம்.ஜி.ஆருக்கு தெரியுமா?

 1. விஸ்வநாதன் says:

  இதை என் ஞாபகத்திலிருந்துதான் எழுதுகிறேன். சௌந்தரா கைலாசத்தின் முழுமனதான மற்றும் முழுநேர ஆதரவினால்தான் MGR-க்கு இந்தப் பரிசு கிடைத்தது என்பது “MGR பரிசு விவகாரம்” என்ற தலைப்பில் அப்போதே துக்ளக் பத்திரிகையில் வந்த சங்கதி.
  விஸ்வநாதன்

 2. விமல் says:

  இந்த விஷயம் உண்மைதான்.

  இதற்கு முன்பு எங்கோ படித்து இருக்கிறேன்.

  எங்கே என்றுதான் நினைவிற்கு வரவில்லை.

  பாவம் சிவாஜி.

  நம்ம ஊரு கிரிக்கெட் மாதிரி தான்.

  டிராவிட் என்னதான் ஓடி ஓடி ரன் அடிச்சாலும் பெயர் கிடைப்பது என்னவோ சச்சினுக்கு தான் !

 3. சாரதா says:

  நான் கேள்விப்பட்டது வேறு மாதிரி….

  1971-ல் ஒன்றுபட்டிருந்த தி.மு.க.வில் கருணாநிதியும் எம்.ஜி.ஆரும் நகமும் சதையுமாக இருந்து, தங்களின் ஒரே எதிரியான பெருந்தலைவர் காமராஜரை எதிர்த்து தேர்தலில் அபார வெற்றியடைந்திருந்த நேரம் (அப்போது தி.மு.க.வென்றது 234-க்கு 183 இடங்கள்). அப்போது காமராஜர் இந்திராவுக்கும் எதிரி. காஷ்மீரில் ‘ராமன் தேடிய சீதை’ படப்பிடிப்பில் இருந்த எம்.ஜி.ஆர். தேர்தல் வெற்றிச்செய்தியறிந்ததும் கருணாநிதிக்கு போன் செய்து, அமைச்சரவையில் முக்கியமான அமைச்சர் போஸ்ட் ஒன்றை தனக்காக வைத்திருக்குமாறும், வேறு யாருக்கும் கொடுத்துவிட வேண்டாமென்றும் சொல்ல கலைஞருக்கு அதிர்ச்சி. இதை அவர் எதிர் பார்க்கவில்லை. எம்.ஜி.ஆரை அமைச்சரவையில் சேர்ப்பது பிள்ளைப்பூச்சியை மடியில் கட்டுவது போல என்று எண்ணிய கருணாநிதி, அவருக்கு வேறு பதவிகள் தருவதாக வாக்களித்து, எதற்கும் உதவாத ‘சிறு சேமிப்புத்திட்ட துணைத்தலைவர்’ பதவியைக் கொடுத்தார். (கட்சியில் குழப்பம் செய்வோரை சமாதானப்படுத்த உதவும் பதவி போலும் அது. சமீபத்தில் கூட டி.ராஜேந்தருக்கு வழங்கப்பட்டது). அப்படியும் திருப்தியடையாத எம்.ஜி.ஆரை சமாதானப்படுத்த, அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றுத்தருவதாக கலைஞர் வாக்களித்தார். சிவாஜிக்குக்கூட கிடைக்காத விருது தனக்கு கிடைக்க இருப்பதை எண்ணி எம்.ஜி.ஆரும் திருப்தியடைந்தார்.

  பாராளுமன்றத்தில் தி.மு.க.வின் 24 எம்.பி.க்கள் ஆதரவுக்காக எதையும் செய்யத்தயாராக இருந்த இந்திராகாந்தியைப் பிடித்து எம்.ஜி.ஆருக்கு இந்தியாவின் சிறந்த நடிகருக்காக வழங்கப்படும் ‘பாரத்’ தேசிய விருதை கருணாநிதி வாங்கிக்கொடுத்தார் (அதுவும் ‘ரிக்ஷாக்காரன்’ படத்துக்காக. ஒரு ‘நான் ஏன் பிறந்தேன்’ படத்துக்காக அளித்திருந்தாலாவது மனது ஆறிப்போகும்). போட்டிக்காக அனுப்பப்பட்டிருந்த ‘சவாலே சமாளி’ படம், அரசியல் சதுரங்கத்தில் வெட்டப்பட்ட காயாக தோல்வியுடன் திரும்பி வந்தது.

  1972-ல் எம்.ஜி.ஆர். பிரிந்து அ.தி.மு.க.வைத்துவக்கி கலைஞர் மீது தாக்குதல் நடத்தியபோது, வசை பாடும் பழக்கமுள்ள கருணாநிதி, தான்தான் எம்.ஜி.ஆருக்கு ‘பாரத்’ விருது வாங்கிக்கொடுத்தேன் என்ற விஷயத்தைப்போட்டு உடைக்க, உடனே எம்.ஜி.ஆர். அந்த விருதை திருப்பிக் கொடுப்பது போல நாடகம் ஆடினார். (அப்போது இந்திரா, எம்.ஜி.ஆர். பக்கம்).

  எது எப்படியோ, நான் சொல்வது சரியோ அல்லது தமிழ்மகன் சொலவ்து சரியோ…. அந்த விருது திரு எம்.ஜி.ஆரின் ‘அபார நடிப்புத்திறமைக்காக(???)’ வழங்கப்படவில்லை என்பது மட்டும் உண்மை. முதன்முறையாக தேசிய விருது நகைப்புக்கிடமானதும் அப்போதுதான்.

 4. விமல் says:

  எது எப்படியோ, சிவாஜி என்ற மிக சிறந்த ஒரு கலைனனுக்கு கிடைக்க வேண்டிய உயரிய விருது, ஒரு நல்ல பொழுது போக்கு நடிகருக்கு கிடைத்து இருப்பது மிகவும் வருத்தமே.

  சிவாஜியுன் மிக சிறந்த நடிப்பில் வெளி வந்த படங்கள் இன்றும் கூட கண் முன்னே நிற்கின்றது

  தெய்வ மகன்
  ஞான ஒளி
  வீரபாண்டிய கட்டபொம்மன்
  தங்கப்பதக்கம்
  வியட்நாம் வீடு
  மோட்டார் சுந்தரம் பிள்ளை
  நவராத்திரி
  திருவிளையாடல்

  நான் மேலே சொன்னவை குறைந்த அளவு படங்கள் தான். ஆனால் இன்னும் நிறைய படங்கள் உள்ளன.

  எல்லாவற்றிருக்கும் மேலாக முதல் மரியாதை
  படம்.

  என்ன ஒரு எதார்த்தமான நடிப்பு.

  சிவாஜி கூட அப்போது வெளி வந்த விகடன் அல்லது குமுதத்தில் ”
  நான் இந்த படத்தில் ஒன்னும் பெரிசா நடிக்கலை. பாரதி என்னை இப்படி நடங்கள், நடங்கள், இப்படி பேசுங்கள், அப்படி பேசுங்கள், என்று சொல்லி கொடுத்தான். அவளுவுதான். நானா ஒன்னும் பெரிசா நடிக்கவில்லை. ” என்று சொல்லி இருந்தார்.

  ஆனால் அந்த கால கட்டத்தில்
  இந்த படம் என்ன ஒரு மகத்தான வெற்றி பெற்றது.

  இந்த மாதிரி எல்லாம் ஒரு மிக சிறந்த நடிப்பு எதுவுமே இல்லாமல் ஒரு மிக சிறந்த பொழுது போக்கு நடிகர் மட்டுமே MGR.

  RV, நீங்கள் படங்களின் பட்டியலில் இந்த படத்தையும் சேர்க்கலாமே ?

  • BaalHanuman says:

   பாரதிராஜா டைரக்ஷனில் சிவாஜி கணேசன் நடித்த “முதல் மரியாதை” படம் வெள்ளி விழா கொண்டாடியது.

   சிவாஜிகணேசன் 50 வயதைத் தாண்டிய பிறகு, தன் வயதுக்கும், தோற்றத்துக்கும் ஏற்ற வேடங்களில், இளைய தலைமுறையினருடன் இணைந்து நடித்தார். இதனால் கடைசி மூச்சுள்ளவரை அவரையும், நடிப்பையும் பிரிக்க முடியவில்லை. அவர் இப்படி இளைய தலைமுறையினருடன் இணைந்து பணியாற்றிய படங்களில் முக்கியமானது, “முதல் மரியாதை.”

   “16 வயதினிலே” படத்தின் மூலம் தமிழ்த்திரை உலகில் மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்தியவர் பாரதிராஜா. தமிழ் சினிமாவில் மண்வாசனை கமழச் செய்தவர். ஆற்றல் மிக்க இளைஞர்களை டைரக்டர்களாக உருவாக்கி, டைரக்ஷன் துறையில் ஒரு பாரம்பரியத்தை உருவாக்கியவர்.

   அவருடைய “மனோஜ் கிரியேஷன்ஸ்” உருவாக்கிய “முதல் மரியாதை”, தமிழ்ப்பட உலகுக்கு சிறப்பு சேர்த்த அற்புத படைப்பு. இப்படத்திற்கு கதை_ வசனம் எழுதியவர் செல்வராஜ். “முதல் மரியாதை”யின் கதைச் சுருக்கம்:-

   கிராமத்து பெரிய மனிதர் மலைச்சாமி (சிவாஜிகணேசன்). அவர் மனைவி பொன்னாத்தா (வடிவுக்கரசி). அவள் தந்தையின் மானத்தைக் காக்க வேண்டி பொன்னாத்தாவை மலைச்சாமி மணக்க நேரிடுகிறதே தவிர, இருவரும் கணவன் _மனைவியாக வாழவில்லை.

   பொன்னாத்தாவின் சுடுசொற்களால் புழுங்கிக்கொண்டிருக்கும் மலைச்சாமிக்கு, இதமான தென்றலாய் அந்த கிராமத்துக்கு வந்து சேருகிறாள், குயில் (ராதா). பூர்வஜென்ம பந்தம் போல், அன்பும், பாசமும் அவர்களைத் தொடருகின்றன.

   பல எதிர்பாராத திருப்பங்களுடனும், நெஞ்சைத் தொடும் நிகழ்ச்சிகளுடனும் கதை விரைந்தோடுகிறது. கடைசியில், குயில் கொலைக் குற்றம் சாட்டப்பட்டு ஜெயிலில் அடைக்கப்படுகிறாள். ஒரு குடிசையில் வாழும் மலைச்சாமியின் உயிர், அவளைக் கடைசி முறையாகச் சந்திக்கத் துடித்துக் கொண்டிருக்கிறது. அவரைச் சந்திக்க வருகிறாள், குயில். மலைச்சாமியின் கண்கள் திறக்கின்றன. குயிலைப் பார்த்த நிம்மதியுடன் அவர் உயிர் பிரிகிறது.

   சிவாஜி ஒரு குடிசை வீட்டில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் காட்சியுடன் தொடங்குகிறது படம். கதையை `பிளாஷ் பேக்’கில் சொல்கிறார், பாரதிராஜா. திரையில் தெரிவது, நட்சத்திரங்கள் அல்ல. ஒரு உண்மை கிராமத்தில் வாழும் உண்மையான மனிதர்கள்! அந்த அளவுக்கு சலனப்படத்தை உயிரும் உணர்ச்சியும் கொண்ட காவியமாக மாற்றி விட்டார், பாரதிராஜா.

   சிவாஜிகணேசன் ஏற்கனவே பலமுறை நடிப்பின் சிகரங்களை தொட்டவர். 50 வயதைக் கடந்த பின்னரும், அவர் மீண்டும் சிகரத்தைத் தொட்ட படம் “முதல் மரியாதை.”

   “ராதா இப்படிக்கூட நடிப்பாரா?” என்று வியக்கும் அளவுக்கு அருமையாக நடித்தார். வடிவுக்கரசி, ரஞ்சனி, தீபன், ஜனகராஜ் மற்றும் நடிகர்கள் அனைவரும் சிறப்பாக நடித்தனர்.

   “பூங்காற்று திரும்புமா”, “குருவிக்குருவி” முதலான அனைத்துப் பாடல்களையும் கவிஞர் வைரமுத்து எழுதியிருந்தார். இசை: இளையராஜா. “முதல் மரியாதை”யில் நடித்தது பற்றி சிவாஜிகணேசன் கூறியிருப்பதாவது:-

   “பாரதிராஜா சின்னப்பிள்ளையில் இருந்து எனக்குத் தெரிந்தவர். அவர் எடுக்கும் படத்தில் நடிக்க வேண்டும் என்று ஒரு நாள் கேட்டார். எனக்கு அப்போது உடல் நிலை சரியில்லை. இருந்தாலும் சரி என்று ஒத்துக்கொண்டேன். அந்தப் படம்தான் “முதல் மரியாதை.”

   ஷூட்டிங்கிற்காக ஒரு மாதம் மைசூர் சென்றிருந்தேன். சிவசமுத்திரம் நீர் வீழ்ச்சியில், காவிரிக் கரையில், ஒரு மரத்தடியில் உட்கார வைத்திருந்தார். காலுக்கு செருப்புகூட இல்லாமல், ஒரே ஒரு வேட்டி_ சட்டை கொடுத்து, ஒரு மாதம் என்னை அங்கே படுக்க வைத்திருந்தார், பாரதிராஜா. கிராமிய சூழ்நிலையில் எடுக்கப்பட்ட அந்தப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது.

   இதற்குப்பிறகு சில வருடங்கள் கழித்து, மீண்டும் என்னை வைத்து “பசும்பொன்” என்று இன்னொரு படம் எடுத்தார். அதில் நடிகை ராதிகாவும் நடித்தார். அந்தப் படப்பிடிப்பிற்காகவும் மைசூர் பக்கம் சென்றோம். அங்கே இரவும், பகலும் படப்பிடிப்பு நடத்தினோம்.

   படப்பிடிப்பு முடிந்து திரும்பி வந்தேன். திடீரென்று நோய்வாய்ப்பட்டேன். என் நாடித்துடிப்பு குறைந்து விட்டது. உடனே என்னை ஆஸ்பத்திரிக்குத் தூக்கிச் சென்றுவிட்டார்கள். அங்கே எனக்கு அறுவை சிகிச்சை செய்து, என் நெஞ்சில் “பேஸ்மேக்கர்” கருவியை பொருத்திவிட்டார்கள்.”

   இவ்வாறு சிவாஜிகணேசன் குறிப்பிட்டுள்ளார்.

 5. srinivas uppili says:

  விஸ்வநாதன் / சாரதா,
  அருமையான தகவல்களுக்கு மனப்பூர்வமான நன்றி.

  விமல், நீங்கள் கூறுவது போல் சிவாஜி பாவம் தான். நிஜ வாழ்க்கையில் நடிக்கத் தெரியாத மாபெரும் நடிகர்.

  தற்போது நான் படித்துக் கொண்டிருக்கும் இரண்டு புத்தகங்கள் —

  சிவாஜி வென்ற சினிமா ராஜ்ஜியம் — விகடன் பிரசுரம் (ஆரூர்தாஸ் )
  கோட்டையும் கோடம்பாக்கமும் — விகடன் பிரசுரம் (ஆரூர்தாஸ் )

  ஆரூர்தாஸ் பற்றிய அறிமுகம் தேவையில்லை என்று நினைக்கிறேன்.

  சிவாஜி கணேசன் அறிமுகம் கிடைத்து, ‘பாசமலர்’ தொடங்கி ‘தெய்வ மகன்’ வரையில் 28 படங்களுக்கு கதை வசனம் எழுதினார். அதே நேரத்தில், எம்.ஜி.ஆர். நடித்த தேவர் ஃபிலிம்ஸின் ‘தாய் சொல்லைத் தட்டாதே’ முதல் ‘பெற்றால்தான் பிள்ளையா’ வரை பல படங்களுக்குக் கதை வசனம் எழுதினார்.

 6. ramji_yahoo says:

  இந்த செய்தி என் மனதில் எந்த ஒரு தாக்கத்தையும் உணர்வையும் ஏற்படுத்த வில்லை.

  ஏனென்றால் ஒரு விருது வாங்கி னால் தான் சிவாஜி யின் நடிப்பு மக்களுக்கு அறியப் படும் , அல்லது மக்களால் அங்கீகரிக்க படும் என்று இல்லை.

  பராசக்தி ஒரு படத்தின் நடிப்பு போதும், ஆயிரம் பாரத், பத்மஸ்ரீ, ஆஸ்கார் அவார்ட் கொடுக்க தகுதி உள்ள நடிப்பு

 7. Poongulali says:

  அந்த விருது அவரின் நடிப்பு திறமைக்காக வழங்கப்படவில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான் .அதுவும் ரிக்க்ஷாக்காரன் ,மிகவும் சுமாரான படம் .அவரை சமாதனப்படுத்தவோ ,இல்லை அவரால் தன்னால் முடியும் என்று காட்டிக் கொள்ளவோ வாங்கப்பட்ட விருது தான் அது .

 8. மாணிக்கம் says:

  நண்பர்களே இன்றைக்கு புத்தித் திறன் மிக வளர்ந்திருக்கும் நிலையிலும் ஏன் எம்.ஜி.ஆர் என்றால் தைரியமாக எதிர்கொள்ள மறுக்கிறார்கள். சிவாஜி படத்திற்காக ரஜினிக்கு சிறந்த நடிகர் விருதென்றால் மனமுவந்து ஏற்றுக்கொள்பவர்கள் ரிக்சாகாரன் எம்.ஜி.ஆருக்கு விருதென்றால் மட்டும் ஏன் பேதலித்து போகிறார்கள்.குரல் உடைவதற்கு முன் எம். ஜி.ஆரின் படங்கள் சிவாஜியின் படங்களுக்கு எந்த விதத்தில் குறைந்திருந்தது?

  எம்.ஜி.ஆர் சிறந்த நடிகர் என்பதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். ரிக்சாகாரன் ஒரு சிம்பாலிசம் அவ்வளவே . ரஜினிக்கு சிறந்த நடிகர் தேசிய விருது பாபா படத்திற்கு கிடைத்திருந்தாலும் அதை நிறைவோடு ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏன் என்றால் ரஜினி ஒருசிறந்த நடிகன் என்பது உண்மை. பாபா ஒரோ சிம்பாலிசம் அவ்வளவே.

  எனவே இனி மேலாவது எம்.ஜி.ஆரை , பிடிக்குமென்றால் அவன் ஒரு படிக்காத முட்டாள், சிவாஜியை பிடிக்குமென்றால் அவன் ஒரு ரசனையுள்ள அறிவாளி எனும் பாமர சிந்தனையை விட்டு வெளியே வாருங்கள். ப்ளீஸ்.

  • RV says:

   மாணிக்கம், சிறந்த நடிகர் விருது “வாழ்நாள் சாதனையாளர்” விருதல்ல. அந்த வருஷம் வந்த படங்களில் எந்த படத்தில் சிறப்பான நடிப்பு வெளிப்பட்டிருக்கிறதோ அதை கவுரவிக்கும் விருது. என் கண்ணில் எம்ஜிஆர் எந்த படத்திலும் அந்த விருதை பெறும் அளவுக்கு நடிப்பை வெளிப்படுத்தியதில்லை. ரிக்ஷாக்காரன் படத்தில் நிச்சயமாக இல்லை. எம்ஜிஆர் சிறந்த சினிமாக்காரர், பல வேறு சினிமாத்துறைகளில் நிபுணர். தன நிறை குறைகளை சரியாக உணர்ந்து அதை அருமையாக செயல்படுத்தினார். ஆனால் சிறந்த நடிகர் என்று சொல்வதற்கில்லை.

   சிவாஜி மீது மிகை நடிப்பு என்றும் கதைகளை விட காட்சிகளியே கவனம் செலுத்தியவர் என்றும் குற்றம் சொல்பவன் நான். ஆனால் சிவாஜி மீது உள்ள குறையை இமய மலை ஏற வேண்டியவர் பரங்கி மலையோடு நின்று விட்டாரே என்ற வருத்தம் என்றுதான் சொல்லவேண்டும்.

   அப்புறம் நான் எம்ஜிஆர் ரசிகன்; படித்திருக்கிறேன். 🙂

 9. knvijayan says:

  MGR அவர்கள் இயக்குனர் சொல்கிறபடி நடித்த காலம் வரை அவர் பரவாயில்லாமல்தான் நடித்தார்.உதாரணம் மகாதேவி,பெற்றால்தான் பிள்ளையா ஆகியவை.அவருடைய நட்சத்திர் அந்தஸ்த்து அவர் பொழப்பை கெடுத்தது.

  • RV says:

   விஜயன், எனக்குத் தெரிந்து பெ. பிள்ளையா தவிர்த்த எந்த படத்திலும் எம்ஜிஆரின் நடிப்பு எந்த படத்திலும் குறிப்பிடும்படி இருந்ததில்லை. உங்கள் கருத்து உங்களுக்கு.

 10. சிவாஜி என்று சொல்லுவதற்கு பதில் எம்.ஜி.ஆர் என்று சொல்லவைத்தது தெய்வமா!. அவரின் ஆள்மனதில் பகிந்த எம்.ஜி.ஆரின் பெயரா.

  இல்லை ஞாபகமறதாயா.

  எப்படி இருந்தாலும் சிவாஜியின் நடிப்புக்கு விருதே தேவையில்லை. அவர் சிறந்த நடிகர் என்பகை உலகமே சொல்லும்.

 11. நானும் எம்.ஜி.ஆர் ரசிகன்தான். சிவாஜியை ஒப்பிட்டு எம்.ஜி.ஆரின் நடிப்பை உயர்த்தி சொல்ல முடியாது. ஆனாலும் எனக்கு எம்.ஜி.ஆர் தான் பிடிக்கும்.

 12. simulation says:

  எம்.ஜி.ஆர் பாரத் விருது வாங்கிய சமயம், துக்ளக் இதழின் அட்டைப் படத்தில் சிவாஜி மற்றும் சிலர் ஓட்டப் பந்தயத்தில் ஓடுவது போலவும், அந்தப் பந்தயத்தில் சிவாஜி முதலில் வருவது போலவும் காட்டிப் பின்னர் ஜனாதிபதி, ஓட்டப் பந்தயதினை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த எம்.ஜி.ஆரிடம் கோப்பையைக் கொடுப்பது போலவும் அமைந்திருந்தது.

  – சிமுலேஷன்

 13. V.Parthiban says:

  Innthamathiri ellam yochi solla nichayam Tamilargalal muttum than mudiyum.Hopeless distiiled pure imagination.Film news Anandan 100% reel vidurar.

சாரதா க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: