விஸ்வநாதன் வேலை வேணும் – பாடல் பிறந்த கதைகள் I


சாரதா எம்எஸ்விடைம்ஸ் என்ற தளத்தில் எழுதி இருப்பதை அவர் அனுமதியோடு இங்கே பதிக்கிறேன். தாமதத்துக்கு சாரதா மன்னிக்க வேண்டும்.

காதலிக்க நேரமில்லை பாடல் கம்போஸிங்குக்காக சித்ராலயா அலுவலகத்தில் எம்.எஸ்.வி. தன்னுடைய ஆர்மோனியத்துடன் அமர்ந்திருந்தார். (அப்போதெல்லாம் புரொடக்ஷன் அலுவலகத்தில் வைத்து ட்யூன் போட்டு, பின்னர் ரிக்கார்டிங் தியேட்டரில் பதிவு செய்வது வழக்கம்.) கவிஞர் கண்ணதாசனும் வந்துவிட்டார்.

எம்.எஸ்.வி.அவர்களுக்கு இசையை விட்டால் வேறு எதுவும் தெரியாது. யார் எந்த நாட்டில் ஜனாதிபதி என்பதெல்லாம் கூட தெரியாது. அப்போது செய்தித்தாளில் ஐசனோவர் பற்றி யாரோ படிக்க இவர் உடனே “ஐசனோவர் யாருண்ணே?” என்று கேட்டார். அப்போது கண்ணதாசன் “அடே மண்டு அவர் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தவர்யா” என்றார்.

அப்போது அங்கு வந்த ஸ்ரீதர், “அடே, ரெண்டு பேரும் வந்துட்டீங்களா? சரி, சிச்சுவேஷன் என்னன்னா தன்னை வேலையிலிருந்து நீக்கிய எஸ்டேட் ஓனரை எதிர்த்து ரவிச்சந்திரன் போராட்டம் நடத்துறார். இந்த சிச்சுவேஷனுக்கு பாட்டுப்போடுங்க” என்று சொல்லி விட்டு உள்ளறயில் சி.வி.ராஜேந்திரனோடும், கோபுவோடும் கதை டிஸ்கஷன்னுக்குப் போய் விட்டார்.

சற்று முன்னர் யாரோ சொன்ன ஐசனோவர் என்ற பெயரை மட்டும் நினைவில் வைத்திருந்த எம்.எஸ்.வி. “ஐசனோவர்…ஆவலோவா…” என்று வாய்க்கு வந்தபடி சத்தம் போட்டுக்கொண்டிருந்தார். உள்ளறையிலிருந்து எட்டிப் பார்த்த ஸ்ரீதர் “அண்ணே இப்போ நீங்க கத்தினீங்களே அதுதான் ட்யூன்” என்றார். இவருக்கோ ஆச்சரியம். இதில் என்ன ட்யூனைக் கண்டுவிட்டார் ஸ்ரீதர் என்று.

கவிஞர் கண்ணதாசன் பாடலை சொல்லாமல், வெட்டிப் பேச்சில் நேரம் கழித்துக்கொண்டிருந்தார். அப்போது எம்.எஸ்.வி. அவர்கள் “அண்ணே சீக்கிரம் பாட்டைச் சொல்லுங்கண்ணே. இதை முடிச்சிட்டு ஆலங்குடி சோமு கூட வேறு இடத்தில் பாடல் பதிவு இருக்கு எனக்கு” என்றார்.

அதற்கு கண்ணதாசன் “இதோ பாருடா விசு. ஒரு வாரமா பெங்களூர்ல தங்கி கையில இருந்த காசையியெல்லாம் செலவழிச்சிட்டேன். இப்போ செலவுக்கே காசில்லை. இன்னைக்கு ஸ்ரீதருக்கு ரெண்டு மூணு பாட்டு எழுதினேன்னா அவர் ஒரு தொகை கொடுப்பாரு. இந்த நேரத்தில என்னை விட்டுட்டு அங்கே இங்கேன்னு போகாதேடா. எனக்கு வேலை கொடுடா விஸ்வநாதா…!” என்றார்.

எலிக்காது படைத்த ஸ்ரீதருக்கு இதுவும் கேட்டுவிட்டது. மீண்டும் தலையை நீட்டி “கவிஞரே, இப்போ கடைசியா சொன்னீங்களே அதுதான் பல்லவி” என்றார். இப்போது இருவருக்கும் அதிர்ச்சி. விஸ்வநாதன் கேட்டார் “ஏண்ணே, இன்னைக்கு ஸ்ரீதருக்கு என்ன ஆச்சு..?. நான் வாய்க்கு வந்தபடி கத்தியதை ‘அதுதான் ட்யூன்’னு சொல்றார். வேலை கொடுடா விஸ்வநாதான்னு நீங்க சொன்னதை ‘அதுதான் பல்லவி’ என்கிறார். என்னண்ணே இதெல்லாம்?” என்று கேட்டதும் கண்ணதாசன் சொன்னார்.

“இதோ பார் விசு, நம்ம ரெண்டு பேருக்கும் ஸ்ரீதர் இன்னைக்கு ஒரு டெஸ்ட் வச்சிருக்கார். அதை சாதிச்சுக் காட்டி பேர் வாங்கணும். நீ கத்தியதுதான் ட்யூன், நான் சொன்னதுதான் பல்லவி. ஆரம்பி” என்றார்.

சரியென்று இறங்கினார்கள். “ஐசனோவர்…ஆவலோவா…” என்று கத்தியதற்கு ஏற்ப “வேலை கொடு விஸ்வநாதா” என்று ஆரம்பித்தார்கள். அப்போது எம்.எஸ்.வி. அவர்கள் “அண்ணே எஸ்டேட் ஓனர் பாலையா வயசானவர், தவிர முதலாளி, ரவிச்சந்திரனோ சின்ன வயசுக்காரர், அவரிடம் வேலை பார்க்கும் குமாஸ்தா, தவிர இப்படத்தில் புதுமுகம். வேலை கொடுன்னு கேட்பது மரியாதைக்குறைவா தெரியுதே” என்று அபிப்பிராயம் சொல்ல, உடனே கண்ணதாசன் “சரி, அப்படீன்னா இப்படி செய்வோம் ‘வேலை கொடு விஸ்வநாதா’ என்பதற்கு பதிலாக “விஸ்வநாதன் வேலை வேணும்” என்று துவங்குவோம் என்று சொல்லி மளமளவென மற்ற வரிகளைச் சொல்ல ஆரம்பித்தார்.

நாற்பத்தி மூன்று ஆண்டுகளை (2007 – 1964) கடந்து இன்றைக்கும் புதுமை மாறாமல், பொலிவு குறையாமல் வலம் வந்து கொண்டிருக்கும் “விஸ்வநாதன் வேலை வேணும்” என்ற ‘காதலிக்க நேரமில்லை’ படப்பாடல் பிறந்தது இப்படித்தான்.

இந்தப் பதிவு என் நண்பன் சிவகுருவுக்காக. சிவகுருவுக்கு இந்த பாடல் என்றால் உயிர்!

தொகுக்கப்பட்ட பக்கம்: ஸ்ரீதர் பக்கம், படங்களின் பட்டியல், சாரதா பக்கங்கள், பாட்டுகள்

தொடர்புடைய சுட்டிகள்:
எம்எஸ்விடைம்ஸ் தளத்தில் சாரதாவின் ஒரிஜினல் பதிவு
எம்எஸ்விடைம்ஸ் தளம்

காதலிக்க நேரமில்லை (Kadhalikka Neramillai) விகடன் விமர்சனம்
காதலிக்க நேரமில்லை பாட்டுகள் தொகுப்பு
காதலிக்க நேரமில்லை எங்கள் விமர்சனம்,
காதலிக்க நேரமில்லை – ஸ்ரீதர் இல்லாமல்!

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

9 Responses to விஸ்வநாதன் வேலை வேணும் – பாடல் பிறந்த கதைகள் I

 1. விமல் says:

  பழைய படங்களில் நடந்த சுவையான சம்பவங்களை படிப்பதில் ஒரு தனி சுகம்
  உள்ளது.
  எழுதிய சாரதாவுக்கும் வெளியுட்ட RV-க்கும் நன்றி.

 2. சிச்சுவேஷனுக்கு தகுந்து பாடல்கள் இயற்றுவது கடினம்தான். இயக்குனர் பாடலாசிரியருக்கு சிச்சுவேஷனைக் கூற கவிஞரும் விறுவிறுவென வரிகளை எழுதித் தர, இது சரியில்லை எனக்கூற உடனேயே வேறு சில வரிகளை எழுதித் தர என தமாஷாக பொழுது போகும். சில சமயங்களில் வரிகள் ரொம்ப யதார்த்தமாக தாங்களே வந்து புகும்.

  உதாரணத்துக்கு சமீபத்தில் 1970-ல் வந்த ஆன் மிலோ சஜ்னா என்னும் படத்தில், மியூசிக் டைரக்டர் கவிஞரிடம் “ஓக்கே, இப்போது செல்கிறேன்” எனக் கூற, அவர் பதிலுக்கு “பிறகு எப்போது சந்திக்கலாம்” என யதார்த்தமாகக் கேட்க அதற்கு பின்னால் வந்த வார்த்தை பரிமாற்றங்களே அந்த சிச்சுவேஷனுக்கு பாடலாக வந்தது என்பதை அக்கால ரேடியோ பேட்டி ஒன்றில் கேட்டிருக்கிறேன். அதுதான் “அச்சா தோ ஹம் சல்தே ஹைன்” என்னும் பாடல். ராஜேஷ் கன்னாவும் ஆஷா பரேக்கும் விடை கூறி பிரியும் காட்சியில் சேர்த்தார்கள். அப்பாடலில் வந்த வரிகள் தானாகவே வந்து விழுந்தனவாம்.

  பார்க்க: http://www.youtube.com/watch?v=JbxfT7nY49g

  அதே சமயம் சில பாடல் சிச்சுவேஷன்கள் பலமடங்குக்கு வேலை வாங்கும். ஜெமினி கதை இலாக்காவில் வாசனுக்கு வலதுகையாக செயல்பட்டவர் கொத்தமங்கலம் சுப்பு அவர்கள். தில்லானா மோகனாம்பாள் கதையை அவர்தான் விகடனில் தொடர் கதையாக எழுதியவர். அவரைப் பற்றி அசோக மித்திரன் அவர்கள் ஒரு இடத்தில் இப்படி வேடிக்கையாகக் குறிப்பிட்டார்.

  வாசன் ஒரு சிச்சுவேஷனை விவரிக்கிறார். அதாகப்பட்டது ஒரு எலி ஒன்று புலியை கொன்று விட்டதாம். ஆகவே புலிக்குட்டிகள் அனாதைகளாகப் போக அந்த எலியே அவற்றை எடுத்து வளர்த்ததாம். இந்த சிச்சுவேஷனை கூறி, அந்த எலி அப்புலிக் குட்டிகளை எவ்வாறு தாலாட்டு பாடி தூங்க வைக்கும் என கேட்க, கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் நான்கு வெர்ஷன்களில் பாடல் தருவாராம்.

  நிஜமாகவே சினிமாவுக்கு பாட்டு எழுதறதுங்கிறது கஷ்டம்தேன்.

  பார்க்க: http://dondu.blogspot.com/2008/09/blog-post_30.html

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

 3. prasanna rajagopalan says:

  நண்பர் RV

  நான் அலுப்பே வராமல் ஜில்லியன் முறை பார்த்த படம் காதலிக்க நேரமில்லை. ‘வாயிருந்தால் அந்த படம் அழும் “என்று பலமுறை என் மனைவி சொல்வாள். பாடல் கிளிப்பிங் கண்ல ஒத்திக்கிற மாதிரி கிளாரிட்டி யோட இருக்கு. இந்த மாதிரி ஒரு DVD கிடைத்தால் சொர்க்கம் தான்.

  ராஜு-துபாய்

  • RV says:

   எட்டு பாட்டும் அற்புதம்! ஆனால் நான் இன்னும் ஜில்லியன் அளவுக்கெல்லாம் போகவில்லை. 🙂

  • விமல் says:

   உண்மை.

   இந்த மாதிரி ஒரு காமெடி
   படத்தை எவ்வளவு முறை பார்த்தாலும் அலுக்காது.

   இரண்டு மூன்று நாள்களுக்கு முன்னால் கூட இங்கு K-டிவியுல் இரவு 8 மணிக்கு போட்டு இருந்தார்கள்.

 4. வலைசரத்தை படித்தப்பின்பு இந்த தளதிற்கு வருகிறேன். அருமையான சுவரஸ்யமான பதிவு. மிகவும் ரசித்தேன். பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: